Skip to content
Home » தோழர்கள் #35 – வறுமை, பஞ்சம், போராட்டம்

தோழர்கள் #35 – வறுமை, பஞ்சம், போராட்டம்

கே.பி.ஜானகியம்மா

வசதியான குடும்பத்தில் பிறந்து, பிரபல வழக்கறிஞராகத் திகழ்ந்து, பின்பு அனைத்தையும் விட்டுவிட்டுப் பொதுத்தொண்டில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட எம்.ஆர். வெங்கட்ராமன்மீது ஜானகி மிகவும் மதிப்புக் கொண்டிருந்தார். எம்.ஆர்.வி. அவரது வீட்டுக்கு வரும்போதெல்லாம் சிறந்த புத்தகங்களைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து படிக்குமாறு கொடுப்பார். அவற்றைப் படிக்கும்போது என்ன துன்பம் வந்தாலும் இந்தக் கொள்கையை விடுவதில்லை என்ற தெம்பும் உறுதியும் ஜானகிக்கு ஏற்பட்டதாக அவரே கூறியுள்ளார்.

அதேபோல் மதுரைக்கு ஜீவா வந்தால் ஜானகி வீட்டில்தான் தங்குவார். ஜீவா எழுதும் பாடல்களை அவரிடம் பாடிக் காட்டுவார். ஜீவா அவற்றில் அழகு மட்டுமல்ல, உணர்ச்சியும் ததும்ப வேண்டுமென்று சொல்லி, தானே பாடிக் காட்டுவார்.

ஜீவாவுக்கு ஜானகியை எப்படியாவது மேடைப் பேச்சாளராக்கிவிட வேண்டுமென்று ஆசை. ஆனால் ஜானகி அச்சப்பட்டார். ஜீவாவோ, அவரே ஒரு சுற்றுப்பிரயாணம் ஏற்பாடு செய்து ஜானகியின் பெயரை அதில் சேர்த்துவிட்டார். அவர் அதைக் கூறி எழுதிய கடிதத்தை ஜானகியால் மறுக்க முடியவில்லை. குருசாமியும் அதை வற்புறுத்த, களத்தில் இறங்கினார் ஜானகி. அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு பேசினார். 15 நாட்கள் பயணத்தில் சுமார் 300 பொதுக்கூட்டங்களில் பேசிய ஜீவாவுடன் ஜானகியும் பேசினார். ஜீவா அவருக்குக் குறிப்புகள் கொடுத்து உதவினார்.

பிறகு ராஜபாளையும், மதுரை, திண்டுக்கல்லில் நடந்த காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மாநாடுகளில் ஜீவா எழுதிய பாடல்களைப் பாடினார் ஜானகி. அவர் பாடும்போது அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறிவிடுவர். பலர் தேம்பித் தேம்பி அழவும் செய்வார்கள்.

காங்கிரஸ் கட்சியில் ஒரு கட்டத்தில் காந்தியின் கிராமப்புறப் புனரமைப்பு என்ற கொள்கை எதிர்ப்புக்குள்ளானது. நேதாஜி இடதுசாரிகளுக்கு நெருக்கமாக இருந்தார். காந்தி தலைவர் பதவிக்கு நிறுத்திய பட்டாபி சீதாராமய்யாவைத் தோற்கடித்து நேதாஜி தலைவரானார். அதிகாரபூர்வ காங்கிரசார் அவரை ஆதரிக்க மறுத்தனர். நேதாஜி பல இடங்களுக்குச் சென்றபோது அவரை அவர்கள் புறக்கணித்தனர். மதுரைக்கு அவர் வந்தபோது, குருசாமியும் ஜானகியும் முன்னின்று அவரை வரவேற்றுப் பேரணி நடத்தியதுடன், மிகப்பெரும் பொதுக்கூட்டத்தையும் நடத்திக் காட்டினர்.

விரைவில் அமீர் ஹைதர்கான், பி.சுந்தரய்யா, எஸ்.வி.காட்டே போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்கும் முயற்சி எடுத்ததன் விளைவாக, பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் உள்ளிட்டோர் கட்சியில் சேர்ந்தனர். 1940இல் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை உருவானபோது அதில் குருசாமியும் ஜானகியும் உறுப்பினராக இணைந்தனர். கட்சி அடக்குமுறைக்கு உள்ளாகி இருந்ததால் ஜானகிக்குப் பாட்டு என்றும் குருசாமிக்கு தூத்துக்குடி என்றும் புனைப்பெயர்கள் சூட்டப்பட்டன.

இரண்டாம் உலகப்போரை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. அதை எதிர்த்துப் பிரசாரம் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடெங்கும் வேட்டையாடப்பட்டனர். மதுரையில் ஜானகி, குருசாமி வீட்டில் யுத்தம் தொடங்கி சில நாட்களில் கட்சிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது வந்த போலீஸ் காட்டேவைக் கைது செய்தது. அதிர்ந்து போன ஜானகியிடம் ஜீவா கூறினார், ‘அரசியல் என்பது பேச்சும், பாட்டும் அல்ல அம்மா. தியாகமும் செய்ய வேண்டும். இன்று பிரசங்க மேடை, நாளை தூக்கு மேடை, இன்று கழுத்தில் பூமாலை, நாளை நெஞ்சில் சுருக்குக் கயிறு. இவ்வாறு எதையும் தாங்கும் இதயம் அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு வேண்டும்.’ அவர் சொற்களை ஏற்று, எது வந்த போதும் கொள்கைக்காக நிற்பேன் என்று உறுதி பூண்டார் ஜானகி.

ஜானகி ஊர் கடத்தப்பட்டு பொன்மலைக்கு அனுப்பப்பட்டார். அங்கும் பாலர் சங்கம் அமைத்துக் குழந்தைகளுக்கு தேசபக்திப் பாடல்கள் சொல்லிக் கொடுத்தார். அவரிடம் பாட்டிக் கற்றவர்களில் தோழர் பாப்பா உமாநாத்தும் ஒருவர். அப்போது அவர் சிறுமி. பின்னர் ஒரு கூட்டத்தில் பேசியதற்காக ஜானகியும் குருசாமியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவரை போலீஸ் அழைத்துச் சென்றபோது குழந்தைகள் அழுது கொண்டே வேன் பின்னால் ஓடி வழியனுப்பி வைத்தனர். யுத்த எதிர்ப்புக்காகத் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு தண்டனைக்குள்ளான முதல் பெண் அரசியல்வாதி ஜானகியம்மாதான்.

பின்னர் பிரபல பெண் காங்கிரஸ் ஊழியரான என்.எஸ். ருக்மணி கைதாகி வந்ததால் அவருக்கு ஒரு துணை கிடைத்தது. சிறையில் கடும் சிரமத்தில் ஆழ்ந்த ஜானகியை ஆஸ்துமா நோய் தாக்கியது. இறுதிவரை அதிலிருந்து அவர் விடுபடவில்லை. விடுதலை பெற்றபோது எலும்பும் தோலுமாகத் திரும்பினார் ஜானகி. சிறையில் அவரை ஊக்குவித்தது குருசாமி அவ்வப்போது எழுதிய கடிதங்கள்தான். பாட்டை விட்டுவிடாமல் சாதகம் செய்யுமாறு உற்சாகமூட்டினார் குருசாமி.

வெளியே வந்த குருசாமியும் ஜானகியும் மீண்டும் மக்கள் தொண்டில் இறங்கினர். எனினும் அவர்கள் நீண்ட காலமாகத் தொழிலில் ஈடுபடாததால் குடும்பம் வறுமையில் ஆழ்ந்தது. ஜானகி வைத்திருந்த வீடுகளை ஒவ்வொன்றாக விற்க வேண்டி வந்தது. சொந்த வீட்டைக் காலி செய்துவிட்டு மண்டையனாசாரி சந்தில் 1ஆம் இலக்க வாடகை வீட்டில் குடும்பம் குடியேறியது. நகைகளையும் புடைவைகளையும் ஒவ்வொன்றாக விற்க வேண்டி வந்தது.

1940இல் திருப்பரங்குன்றத்தில் அரசியல் மாநாடு, தொண்டர் பயிற்சி பல நாட்கள் நடைபெற்றது. தமது நகைகளை விற்று ஜானகி இதை நடத்தினார். ஏ.கே. கோபாலனும் சுப்ரமணிய சர்மாவும் அங்கிருப்பதை மோப்பம் பிடித்த போலீஸ் அங்கு விரைந்தது. ஆனால் முன்கூட்டியே செய்தி தெரிந்ததால் அவர்கள் இருவரும் தப்பிவிட்டனர். இங்கு ஜானகிக்குப் புதிய அரசியல் வெளிச்சம் கிடைத்தது.

1941இல் மீண்டும் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்த ஜானகி அதே வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் பல பெண்களும் அங்கு சிறையிடப்பட்டனர். 9 மாத காலம் சிறையில் இருந்தார் ஜானகி. அதன் பிறகு வெளியே வந்த பிறகு யுத்தத்தால் பதுக்கல் ஏற்பட்டு பஞ்சம் வந்திருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி பதுக்கலை வெளியே கொண்டு வந்து பஞ்சத்தைப் போக்க முயன்றது. ஜானகி முதல் வரிசையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

1943இல் இந்தியாவையே உலுக்கிய வங்கப்பஞ்சம் ஏற்பட்டது. இது பிரிட்டிஷ் அரசால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சம். நாடு முழுதும் முழுவேகத்தில் கம்யூனிஸ்டுகள் மக்களிடமிருந்து நிவாரண நிதி வசூலித்து வங்கத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. ஜானகி இரவு பகல் பாராமல் செயல்பட்டார். அவரும், தியாகி மணவாளனும் சேர்ந்து ‘வங்கம் பாரடி’ என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி நிவாரண நிதி வசூலித்தனர். மதுரை மக்களிடத்தில் இது மிகுந்த மதிப்பை அவருக்கும் கட்சிக்கும் ஏற்படுத்தியது.

1944இல் மதுரை ஹார்வி மில்லில் போனஸ் கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடந்தது. அதில் பெண்களுக்கென்றே கூட்டம் நடத்தியதில் ஜானகி பெரும்பங்கு வகித்து மீண்டும் கைதானார். ஒரு மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார். மதுரையில் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்த மாநாடு அடுத்து நடைபெற்றது. அதை நடத்த ஜானகி அரும்பாடு பட்டார்.

கட்சி முடிவுப்படி 1944இல் மதுரையில் விவசாயிகள் சங்கம் அமைக்கும் பணியில் ஜானகி ஈடுபட்டார். விரைவிலேயே ஜானகியம்மா என்று அனைவரும் அன்புடன் அழைக்கும் அளவுக்குப் பிரபலமானார். நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் அவர்மீது மிகுந்த அச்சமும், கோபமும் கொண்டனர்.

குத்தகைதாரர் பதிவுச்சட்டம் இயற்றப்பட்டிருந்தும் அதை விளக்கப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. கிராமங்களில் இருந்த காங்கிரஸ்காரர்கள், நிலப்பிரபுக்கள், நாட்டாண்மைகள் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். விவசாயிகள் அச்சத்தில் ஊசலாடினர். எனவே இதைத் தடுத்து நிறுத்தவும், போராட்டத்தை பலப்படுத்தவும் மீண்டும் மீண்டும் ஜானகியம்மா பயணம் செல்ல வேண்டியிருந்தது.

1947இல் சுதந்திரம் பெற்றதும் மதுரை மாநகராட்சித் தேர்தலில் ஜானகியம்மா பிரபல காங்கிரஸ் தலைவர் சீனிவாசவரத ஐய்யங்காரை எதிர்த்துப் போட்டியிட்டு 900 வாக்குகள் பெற்றுப் பெரும் வெற்றி பெற்றார். மற்றவர்கள் தலா 300 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. அவ்வளவு செல்வாக்கு ஜானகியம்மாவுக்கு.

காங்கிரஸ் அரசு இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் வளர்ச்சியைக் கண்டு அச்சமடைந்து கட்சியைத் தடை செய்து தலைவர்களைக் கைது செய்து, அடக்குமுறையை ஏவியது. ஜானகி மீண்டும் கைதாகி வேலூருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது கம்யூனிஸ்டுகள் நாடெங்கும் வேட்டையாடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1951இல் ஜானகி விடுதலையானார். குருசாமியும் இதர தோழர்களும் விடுதலையானார்கள். அப்போது ஜானகியம்மா தன் கணவரின் ஊரான பரிவில்லிக் கோட்டைக்குச் சென்று சிலகாலம் தங்கினார். அங்கு அவர்களுடன் சேர்ந்து அவர்கள் தடுத்தும் கூலி வேலையில் ஈடுபட்டார். பின்னர் சில காலம் கழித்து மதுரை திரும்பினார். ஆனால் சிறைவாசம் அம்மாவின் உடல்நிலையை சீர்கேடடைய வைத்திருந்ததைக் கண்டு மக்கள் கண் கலங்கினர்.

1954இல் நடைபெற்ற ஜில்லா போர்டு தேர்தலில் ஜானகியம்மா சமயநல்லூர் தொகுதியில் பெரும் வெற்றி பெற்றார். ஜானகியம்மா கட்சியிலும், விவசாய சங்கத்திலும் அடுத்தடுத்து மேல்மட்டங்களுக்குத் தேர்வானார். கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் தமிழ்மாநில கவுன்சில் உருவானபோது அதன் உறுப்பினராகக்வும் ஆனார். 1957இல் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்கு அதில் நீடித்தார்.

1957இல் மதுரை துவரிமான் கிராமத்தில் மிராசுதார்கள் தமது குத்தகைதாரர்களை வெளியேற்றினர். அதனை எதிர்த்துக் களம் கண்டது விவசாய சங்கம். ஜானகி அம்மா தலைமையில் பெண்கள் அணி களத்தில் இறங்கியது. போலீஸ் உடனே அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. முதலில் இதைக் கண்டு ஜானகிமீது கோபம் கொண்ட பெண்கள் பின்னர் அவர் நல்லதுதான் செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு அவரை மதிக்கத் தொடங்கினர். தமது பிரச்சனைகளைத் தீர்க்க அவரை நாடி வரத் தொடங்கினர்.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *