இதனிடையே மொழிவாரி மாநிலக் கோரிக்கையில் ஒரு முக்கியமான நிகழ்வை இங்கே பகிர்வோம். சுதந்திரம் பெற்றதும் இந்தியாவெங்கும் மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு என்ற பெயர் பெறுவதற்காகப் பலரும் போராடினர். அதில் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர் தியாகி சங்கரலிங்கனார். அவர் அந்தக் கோரிக்கையை முன்வைத்து விருதுநகரில் 1956ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதியன்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். பொறுக்க முடியாத காங்கிரஸ் கட்சி குண்டர்கள் அவரை உண்ணாவிரதப் பந்தலுக்குள் சென்று தாக்கினர்.
அவரைக் காத்து நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள். அவரது உயிரைக் காக்குமாறு அவர்கள் காமராஜரிடம் கேட்டுக் கொண்டதை அவர் நிராகரித்துவிட்டார். இறுதியில் 77 உண்ணாவிரதத்துக்குப் பிறகு அக்டோபர் 13ஆம் தேதியன்று உயிர் நீத்தார். இறப்பதற்கு முன் தமது சடலத்தைக் கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டுமென உயில் எழுதினார். அதன்படி அவரது உடலைப் பெற்று எரியூட்டியவர்கள் கே.டி.கே.வும், கே.பி.ஜானகியம்மாவும் ஆவர்.
1960ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் சங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் மதுரை தாலுகாவில் பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றன. துவரிமான் என்ற கிராமத்தில் குத்தகை விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தும், விவசாயிகள்மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை எதிர்த்தும் களம் கண்டது இயக்கம். இதே போன்று பல விவசாய இயக்கங்கள் நடந்தன. அவற்றிலெல்லாம் ஜானகியம்மாவின் பங்கு மிகப்பெரியது. இந்தப் போராட்டங்கள் விவசாயிகளுக்குத் தெம்பூட்டின. பல நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் இந்தப் போராட்டங்களால் பலனடைந்தன.
அவனியாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஜானகியம்மா நேரடியாகக் களமிறங்கினார். அந்தப் போராட்டத்தின் வெற்றியால் ஜானகியம்மா அவனியாபுரம், வலையங்குளம் பகுதிகளில் பிரபலமான தலைவரானார். கம்யூனிஸ்ட் கட்சியை அந்தப் பகுதிகளில் ‘அம்மா கட்சி’ என்றே அழைக்கத் தொடங்கினர்.
இத்துடன் நில்லாமல் நீர்ப்பாசனம் பெறுவதற்காகவும் விவசாய சங்கம் போராடியது. நீர்ப்பாசன மாநாடு ஒன்றை திருப்பரங்குன்றத்தில் நடத்த ஜானகியம்மா பெரிதும் பாடுபட்டார்.
1962ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைத் தகறாறு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தை மூலமாகவே பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென்று கூறிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தேசத் துரோகிகளாகப் பார்க்கப்பட்டனர். இந்தியாவெங்கும் அவர்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையில் ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரையில் ஜானகியம்மா கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் பாப்பா உமாநாத்தும் இருந்தார். இருவரும் 1963இல்தான் விடுதலை செய்யப்பட்டனர்.
அந்த ஆண்டு அவருக்குத் துயர் மிகுந்த ஆண்டு. அந்த ஆண்டில்தான் அவரது அன்புக்குரிய கணவரும் சக தோழருமான குருசாமி அண்ணா மறைந்தார். எதுவும் அறியாமல் நாடகம் மட்டுமே வாழ்க்கையாக இருந்த ஜானகியம்மாவுக்கு அரசியல் உணர்வூட்டி அவரை அரசியலில் ஈடுபடுத்தியவர், மேலும் தலைவராக வளர வழிகாட்டித் துணை நின்றவர், மார்க்சிய வழியில் அவரைக் கொண்டு வந்தவர் என குருசாமி அண்ணாவின் பங்கு ஜானகியம்மாவின் வாழ்வில் முக்கியப் பங்கை ஆற்றியவர் குருசாமி. வேதனையில் மூழ்கிய ஜானகியம்மாவை கட்சித் தோழர்களும், விவசாய சங்கத் தோழர்களும் மெதுவாகத் தேற்றி மீண்டும் இயக்கப் பணியில் ஈடுபட வைத்தனர்.
அந்தக் காலகட்டம்தான் கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் வெடித்த காலகட்டம். அகில இந்திய அளவிலும், தமிழகத்திலும் கருத்து மோதல் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தியா சீனப் போரில் எடுத்த நிலைபாடுகளிலும் இது வெளிப்பட்டது. உதாரணமாகச் சென்னையில் மிகச்சிறந்த தொழிற்சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்ட போது, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு விசித்திரமாக அவருக்கு எதிராக காங்கிரசால் நிறுத்தப்பட்ட வைர வியாபாரி சிவசங்கர் மேத்தாவை ஆதரித்தது. அதனால் அவர் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அதன் பிறகு நடந்த நிர்வாகக் கூட்டத்தில் வரவிருந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் காங்கிரசை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டது. அதனை பி.ராமமூர்த்தி உள்ளிட்ட 30 தோழர்கள் எதிர்த்தனர். மத்திய நிர்வாகக் குழு அதனை பரிசீலிக்குமாறு கூறியும் இவர்கள் மறுத்தனர். அதனால் கட்சி தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
1964இல் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் 32 பேர் பல முயற்சிகள் எடுத்தும் கட்சி தனது தவறான கோட்பாட்டு நிலையைக் கைவிடாததால் அதிலிருந்து வெளியேறினர்.
தமிழகத்தில் இவர்கள் விடுத்த அறிக்கையை அங்கீகரிப்பதற்காக மதுரையில் பிரதிநிதிகள் மாநாடு ஒன்று கூடி பிளவுக்கான காரணத்தை விளக்கியது. அந்த மாநாட்டில் புதிய கட்சியைத் தோற்றுவிக்கக் கையெழுத்திட்டவர்களில் மதுரையிலிருந்த கே.பி.ஜானகியம்மாவும் ஒருவர்.
புதிதாகத் தோன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துக் கட்ட மத்திய காங்கிரஸ் அரசு கச்சை கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியது. அதன்படி 1964, டிசம்பர் 30ஆம் தேதியன்று இந்தியா முழுவதிலும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படிக் கைது செய்து சிறையில் அடைத்தது.
ஜானகியம்மா ஐந்தாவது முறையாகச் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதும் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 16 மாதங்கள் இம்முறை சிறைவாசம் அனுபவித்து விடுதலையானார்.
1967ஆம் ஆண்டு நடந்த மாநில சட்டசபைத் தேர்தலில் ஜானகியம்மா மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த முறையில் அவர் மக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து தீர்வு காண்பதில் பெரிதும் பாடுபட்டார். நான்காண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தார் அவர்.
அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே நடந்த ஒரு மோதலில் ஓர் ஓட்டுனர் கொல்லப்பட்டார். கொந்தளித்துப் போனார்கள் ஊழியர்கள். தலைமைச் செயலகம் முன்பு அடுத்த நாள் கூடிய ஊழியர்கள் ஆவேசமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. முதல்வர் அண்ணா அவர்களிடம் பேச அமைச்சர் கருணாநிதியை அனுப்புவது ஆபத்து என்று நினைத்தவர், ஜானகியம்மாவை அழைத்து அவருடன் அனுப்பி வைத்தார். தொழிலாளர்களிடம் பேசிய ஜானகியம்மா அவர்களைச் சாந்தப்படுத்திய பிறகு கருணாநிதியும் அவர்களிடம் பேசினார். பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். அந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்தார் ஜானகியம்மா.
அம்மாவின் மற்றொரு சிறப்பு பெண்களை அரசியல் இயக்கத்துக்கும், விவசாய இயக்கத்துக்கும், தொழிற்சங்க இயக்கத்துக்கும் அணி திரட்டியதாகும். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தப் பணியைச் செய்து வந்தார். 1940களில் மதுரையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட போது பெண்களைத் திரட்டி மண்ணெண்ணை, விறகு போன்றவற்றை குறித்த விலையில் கிடைக்கச் செய்வதற்கும், உணவு பொருட்கள் ரேஷன் பொருட்களைக் கிடைக்கச் செய்வதற்கும் அவரது தலைமையில் கட்சி பெரும் போராட்டங்களை நடத்தியது. மில் தொழிலாளர் பிரச்சனையில் தொழிலாளர்களின் குடும்பத்துப் பெண்களை அவர் அணி திரட்டினார்.
மதுரையில் அரசியல் கூட்டங்கள் நடக்கும்போது, பெண்களுக்குச் சரி பாதியாக இடத்தைக் கயிறு கட்டி ஒதுக்கும் அளவுக்குப் பெண்களை அணி திரட்டியதில் ஜானகியம்மாவின் பங்கு அளப்பரியது. மதுரையில் நெசவளர் சங்கத்தை உருவாக்குவதிலும் அவருக்குப் பங்கு அதிகம். அதனால் அந்தக் குடும்பத்துப் பெண்களையும் அவர் அரசியலுக்குள் ஈர்த்தார்.
1968 சால்கியா சிறப்பு அமர்வின் முடிவின்படி வெகுஜன ஸ்தாபனங்களைக் கட்டியெழுப்ப கட்சி முடிவெடுத்தது. அதன்படி பெண்களைத் திரட்டுவதற்கென்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் அமைக்கப்பட்டது. 1970களில் மாதர் சங்கத்தை அமைக்கும் பணியில் அம்மா முழுமையாக ஈடுபட்டார். அதன் பலனாக தமிழக ஜனநாயக மாதர் சங்கம் உருவானது. 1974இல் மதுரையில் நடைபெற்ற தமிழக முதல் மாநாட்டில் ஜானகியம்மா தலைவராகவும், பாப்பா உமாநாத் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல முறை அந்தப் பொறுப்புக்கு இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.
இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் அவர் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர் என்ற முறையில் தாமிரப்பட்டயமும், தியாகிகள் ஓய்வூதியமும் அளிக்க முன் வந்தபோது, கம்யூனிஸ்டுகளுக்கே உரிய முறையில் கட்சியின் முடிவுப்படி அவற்றை அவர் நிராகரித்துவிட்டார்.
தமது கணவர் குருசாமி இறந்த பிறகு தமது வீட்டையும் துறந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்க்குழு இருந்த மண்டையன் ஆசாரி சந்தில் ஒரு சிறு அறையில் தமது வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்.
அவரது கடினமான வாழ்க்கை நிலை, இடைவிடாத உழைப்பு ஆகியவை அவரது உடல்நிலையை பாதிக்கத் தொடங்கின. மறதி நோயும் ஏற்படத் தொடங்கியது. அடிக்கடி நோய்வாய்ப்படலானார். பொதுவான உடல்நிலையும் குன்றத் தொடங்கியது.
சிறு வயதிலிருந்தே அவரை அறிந்த பாப்பா உமாநாத் கடைசியாக அவரைப் பார்க்கச் சென்றபோது அவருக்குப் பிரியமான எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு சிப்சுடன் சென்றார். அப்போதும் அவற்றை நன்றாகவே உண்டார் அம்மா. அப்போது தாம் விரைவில் இறக்க விரும்புவதாக அம்மா கூற, உடைந்து போனார் பாப்பா. “உண்மையைச் சொன்னால் ஏன் வருத்தமடைகிறாய்?” என்று தாமும் உணர்ச்சி வசப்பட்டார் அம்மா.
பிப்ரவரி கடைசியில் அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. குருசாமியின் சகோதரியும், மாதர் சங்கத் தோழர்களும் அவர் அருகிலிருந்து கவனித்துக் கொண்டனர். அவர்களது கண்ணீருக்கிடையில் மார்ச் 1ஆம் தேதி அவரது உயிர் பிரிந்தது.
வாழ்ந்திருந்த நாளில்லாம் தாழ்ந்திருந்த மக்களுக்காய்
வாழ்ந்தவரே வணங்குகிறோம் உன் பாதை தொடர்ந்திடுவோம்
உடலுருவம் மறைந்தாலும் – நின் புகழுருவம் மறையாது
செங்கொடியின் தவப்புதல்வி சிரந்தாழ்த்தி வணங்குகிறோம்.
செங்கொடியின் தவப்புதல்வி செவ்வணக்கம் செய்கின்றோம்
செவ்வணக்கம் செய்கின்றோம் (என்.நன்மாறன்)
0