ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் முன்னால் எளிமையாகத் திருமணம் நடந்தது. இறுதியில் உமாநாத் நன்றி தெரிவித்துப் பேசினார்: ‘பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதைச் சொல்வதற்காகத் தாலி அணியப்படுகிறது என்றால் ஆணுக்கு மட்டும் அது ஏன் அணியப்படுவதில்லை? அப்படிப்பட்ட அடையாளத்தை நான் அணிவிக்கவும் விரும்பவில்லை. எனவேதான் இத்திருமணத்தில் தாலிகட்டும் சடங்கு நடைபெறவில்லை’ என்றார்.
குடும்பமென்றால் பாப்பாவுக்கு ரயில்வே தொழிலாளர்கள்தான். அவர்கள் அளித்த பரிசுப் பொருள்களைக் கொண்டு குடும்பத்தைத் தொடங்கினார்கள் பாப்பாவும் உமாநாத்தும். இருவருமே பொதுத் தொண்டர்கள் என்பதால் உமாநாத் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் இருந்தபோது அவரும் வேலைகளில் பங்கெடுத்து சமத்துவத்தை நிலைநாட்டினார். எப்போதும் இருவரும் ஒருமித்த கருத்துக் கொண்டவர்களாகவே விளங்கினர்.
அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். முதலில் லட்சுமி நேத்ராவதி, இரண்டாவது வாசுகி. மூன்றாவது நிம்மி என்ற நிர்மலா. குழந்தைகள் பராமரிப்பிலும், இயக்க வேலைகளிலும் இருவருமே பங்கெடுத்தனர். ‘பெண்ணுரிமையை மதிப்பது, அதற்காகக் குரல் கொடுப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட சிறப்பம்சம் மட்டுமல்ல; நான் சார்ந்திருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியின் மிகச்சிறந்த கொள்கைகளில் ஒன்று’ என்று தோழர் உமாநாத் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
பாப்பா பெரியாரிடமே அவரது முதிய வயதுத் திருமணம் குறித்துக் கேள்வி எழுப்பியவர். எனினும் அவர் தனது நிலைபாட்டை விளக்கியதும் சமாதானமடைந்தார். பாப்பா கோபப்பட்ட காரணம் முதியவர்கள் இளம் பெண்களைத் திருமணம் செய்வதைக் கண்டித்தவர் பெரியார். அவரே இப்படிச் செய்துவிட்டாரே என்ற ஆதங்கம்தான். யாரும் பெரியாரிடம் கேள்வி கேட்க அஞ்சிய காலத்தில் பாப்பா இதனைக் கேட்டார், அவரும் விளக்கம் தந்தார் என்பதை வியந்து பாராட்டினார் தி.க. தலைவர் டி.பி.வேதாசலம். அந்த அளவுக்குப் பாப்பாவை மதித்தார் பெரியார்.
அதேபோல் வறட்டு நாத்திகத்தை தி.க. பின்பற்றுவதாகவும், அதை விட்டு மார்க்சிய வழியில் அதை அணுக வேண்டுமென பெரியாரிடம் வாதிட்டார் பாப்பா. பெரியாரோ, ‘உங்கள் கட்சியில் பிராமணர் ஆதிக்கம் நிறைந்துள்ளதால் நீங்கள் வாய் திறப்பதில்லை’ என்றார். பாப்பா வெகுண்டு, ‘மன்னியுங்கள். ஒரு சாதியை வைத்து நாங்கள் எந்தக் கொள்கையையும் நிர்ணயிப்பதில்லை. விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கும் பொருள்முதல்வாதிகள் நாங்கள்’ என்று அழுத்தமாகப் பதிலளித்தார். இருவரும் இப்படிப் பல விஷயங்களில் முரண்பட்டாலும், ஒருவருக்கொருவர் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தனர், உயர்ந்த அரசியல் நாகரிகத்தையும் கடைப்பிடித்தனர்.
பாவேந்தர் பாரதிதாசன் பாண்டிச்சேரியில் தேர்தலில் நின்றபோது அவருக்குப் பிரசாரம் செய்யத் தன் குழந்தை கண்ணம்மாவையும் (நேத்ராவதி) அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் பாப்பா. கார் நின்றுவிட ஒரு ரிக்ஷாவில் வீடு திரும்பினர் இருவரும். பாரதிதாசன் தன் மனைவி பெயர் சொல்லி அழைத்தால்தான் சாப்பிட வருவேன் என்று அடம்பிடிக்க, அப்படியே செய்தார் அவர் மனைவி. இருவரும் பெண்ணுரிமை பற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது குறித்து மகிழ்ந்தார் பாப்பா.
அதேபோல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும். இருவரும் ஏறத்தாழ சமவயதுடையவர்கள். அவரைக் கண்டு பெருமிதம் கொண்டார் பாப்பா. விவசாய சங்கத்தின் கூட்டங்களில் கலந்துகொண்ட பின் இருவரும் கிராமங்களில் விவசாயிகள் வீட்டில் சாப்பிட்டு விட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். பட்டுக்கோட்டை 50க்கும் மேற்பட்ட செங்கொடிப் பாடல்களைப் பாடிக் கட்சிக்கு உதவியுள்ளார்.
ஆனால் 1956இல் குலதெய்வம் என்ற படத்தில் அவர் பாடிய ஒரு பாடல் பெண்களை அவமதிப்பதாக இருந்தது. இதைச் சாடி பாப்பா அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். பதில் எழுதிய கவிஞர் பாப்பாவுக்குத் தன் வருத்தத்தைப் பதிவு செய்தார். பாப்பாவின் கடிதம் வைத்த சூடு இனி என்றும் நினைவிருக்கும் எனவும், இனி ஒருபோதும் அப்படி எழுத மாட்டேன், அடிப்படை லட்சியங்களை மறவேன் என்றும் பதிலளித்தார். இவ்வாறு தன் கொள்கைகளுக்காக யாரிடமும் சமரசமின்றிப் போராடியவர் பாப்பா.
இதேபோல் எம்.ஆர்.ராதாவையும் பாப்பா விடவில்லை. அவர் ஒரு தேர்தலில் நின்றபோது அவருடனும், அவரது இரு மனைவியருடனும் காரில் ஈரோடு சென்றார் பாப்பா. அப்போது அவர்களையும் வைத்துக் கொண்டே இரு மனைவியரை வைத்துள்ளதைக் கேள்வி கேட்டு அவர் மீது வழக்குப் போடுவேன் என்று மிரட்டினார் பாப்பா. கடுமையாக அவரைச் சாடினார்.
இளையராஜாவின் மூத்த தமையனார் பாவலர் வரதராஜன் கம்யூனிஸ்ட் கட்சிக்காகத் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கச்சேரி நடத்தியவர். திருச்சிக்கு வரும்போது அவரும் அவரது சகோதரர்களும் பாப்பா வீட்டில்தான் தங்குவார்கள். அப்போது வீடே கலகலப்பாக இருக்கும். பின்னர் பாவலருக்குக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் பிரிந்தார். மிகவும் வேதனைப்பட்டார் பாப்பா.
1962இல் அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தால் மீண்டும் பாப்பா சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளான 8 வயது கண்ணம்மாவும், 4 வயது வாசுகியும் மிகவும் சிரமப்பட்டனர். சிறையில் உடனிருந்த ஜானகியம்மாவுக்கு ரிங்பால் மிகவும் பிடிக்கும் என்பதால் இருவரும் விளையாடுவார்கள். ஜானகியம்மாவின் வேகத்துக்குப் பாப்பாவால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றாலும் ஜானகியம்மா விடமாட்டார். சிறையில் மைபூசி அழிக்கப்பட்ட செய்தித்தாள் தமக்குக் கொடுக்கப்படுவதை எதிர்த்து இருவரும் வழக்குத் தொடுத்து வென்றார்கள்.
வேலூர் சிறையில் அவர்கள் இருந்தபோது ஒரு பெண் வார்டர் மற்ற பெண் கைதிகளைக் கடுமையாக சித்ரவதை செய்தார். இருவரும் அதை எதிர்த்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். எனினும் கட்சி அதை விலக்கிக் கொள்ளுமாறு கூறியதால் கைவிட்டனர். எனினும் இருவரும் ஒரு திட்டம் தீட்டி, பல அதிகாரிகள் இருக்கும்போது இந்த வார்டர் பயந்த கரப்பான் பூச்சியை அவர் மீது விட்டுவிட்டனர். அவர் பயந்து சாமியாட்டம் ஆட, சிறைக்கண்காணிப்பாளர் அவரை சஸ்பெண்ட் செய்து விட்டார். தமக்கு அந்த வார்டரிடமிருந்து விடுதலை கிடைத்ததை மற்ற பெண் கைதிகள் காட்டுப்பூக்களை வைத்து மாலை தொடுத்து இருவருக்கும் அணிவித்துக் கொண்டாடினர்.
அதேபோல் ஒரு டாக்டர் அவர்களை மீண்டும் மீண்டும் சீண்ட, அவரை வேண்டமென்றே இரவில் அழைத்துச் சித்ரவதை செய்யத் தொடங்கினர் இருவரும். புரிந்து கொண்ட அவரும் கீழிறங்கி வந்து சமாதானம் செய்து கொண்டார்.
வாசுகி அந்த சமயத்தில் வார்டரைப் பார்த்துக் கேட்பாராம், ‘நீங்க திரும்பத் திரும்ப எங்கம்மாவை சிறைல வச்சுட்றீங்க. யாரு என்னை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்புறது?’ அம்மா சிறையில் இருந்ததால் அதிகம் ஏங்கிப் போனது வாசுகிதான். கண்ணம்மா சமாளித்துக் கொண்டார்.
1964இல் விடுதலையானபோது, கட்சி இரண்டாகப் பிரிந்து சிபிஐ(எம்.) உருவானது. பாப்பாவும் உமாநாத்தும் புதிய கட்சியில் இணைந்தனர். அதனால் அவர் கட்சிக்குச் சொந்தமான இடத்திலிருந்து வெளியேற்றப்பட, வேறு இடத்தில் குடியேறினார். இந்தியா சீனா பிரச்சனை கிளம்ப, பாப்பாவும், உமாநாத்தும் பாதுகாப்புக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
மீண்டும் அதே வேலூரில் ஜானகியம்மாவுடன் சிறை. பாட்டி ஜானகியம்மாவிடம் மிகவும் பாசம் கொண்டிருந்தனர் குழந்தைகளான கண்ணம்மாவும் வாசுகியும். அடிக்கடி கடிதம் எழுதி அவர் உடல்நலத்தி விசாரித்தனர். மிகவும் புளகாங்கிதம் அடைவார் ஜானகியம்மா. குழந்தைகளின் சிரமம் அறிந்து இருவரும் மிகவும் கவலைப்பட்டனர். ஒரு வழியாக தம் அத்தையுடன் இருவரும் வர, வழியில் அவர்களது பெட்டி திருடு போய்விட்டதால், மாற்றுத் துணிகூட இல்லாமல் வந்திறங்கினர். அவர்களைப் பார்த்து மனம் கலங்கிப் போனார் பாப்பா. இருவரும் மூச்சு விடாமல் பேச, அவர்கள் பேச்சில் அம்மாவும் பாட்டியும் சொக்கிப் போயினர். பின்னர் குழந்தைகள் இருவரும் உமாநாத்தைப் பார்க்கக் கிளம்பினர்.
இடையில் கண்ணம்மாவுக்கு டான்சில் ஆபரேசன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு மறுக்க, முதலமைச்சர் பக்தவத்சலம் கலந்து கொண்ட கூட்டத்திலேயே கண்ணம்மா மேடையேறி, தன் அம்மாவுக்கு பரோல் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். சில நாட்கள் பாப்பாவுக்குப் பரோல் கிடைத்தது.
சிறையில் பாப்பாவும், ஜானகியம்மாவும் மே தினத்தைக் கூடக் கொண்டாடினர். சிவப்பு, வெள்ளைத் துணி வாங்கிக் கொடியைத் தயார் செய்தார்கள். முதல்நாளே மாக்கோலம் போட்டார் அம்மா. மற்ற கைதிகளுடன் மதில் சுவருக்கு மேல் இருக்கும் கம்பியில் கொடியேற்றி முழங்கினார்கள். ‘செங்கொடிக்கு ஜே! மே தினம் வாழ்க! உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ மேலும் சிறைக்காலத்தை மார்க்சிய நூல்களைப் படிக்கவும் இருவரும் செலவிட்டனர்.
வெளியே வந்தபின் வறுமையில் இருந்தது குடும்பம். புதிய சீருடை வாங்கக் கூடப் பணம் கிடையாது. பல தோழர்களும் அவர்களுக்குப் பண உதவி செய்தனர். அனைத்துக் கட்சித் தலைவர்கள் தோழர்களும் அவர்களுக்கு உறவினர்கள். உறவு சொல்லித்தான் அவர்களை அழைப்பார்கள் குழந்தைகள். கண்ணம்மா சில வருடங்கள் முன்பு புற்றுநோயால் மறைந்தார். வாசுகி முதலில் வங்கியில் பணிபுரிந்து இப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக உள்ளார். நிர்மலாராணி திருச்சியில் வழக்கறிஞராகவும், மாதர்சங்கத்திலும், கட்சியிலும் செயல்படுகிறார்.
கட்சியின் பல வேலைகளில் தம்மை தீவீரமாக ஈடுபடுத்திக் கொண்ட பாப்பாவுக்கு, அவரிடமும், ஜானகியம்மாவிடமும் வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் கேட்ட ஒரு கேள்வி முள்ளாக உறுத்தியது. ‘உங்கள் கட்சியில் வேறு பெண்களே கிடையாதா?’ என்பதே அந்தக் கேள்வி. இதனைப் பற்றி இருவரும் மார்க்சிய வழியில் சிறையில் விவாதித்தனர். பெண்களை அமைப்பு ரீதியாகத் திரட்டுவது என்று முடிவெடுத்து வெளியே வந்ததும் பணியில் இறங்கினார்கள். இந்த முயற்சியால் தமிழக ஜனநாயக மாதர் சங்கம் 1973 டிசம்பர் 9ஆம் தேதி உருவானது.
அது அரசியல் கட்சியின் மாதர் பிரிவோ அல்லது மகளிர் அணியோ அல்ல. சாதி, மத, இன, மொழி, கட்சி வேறுபாடுகளைக் கடந்து பெண் உரிமைக்காகப் போராடும் சங்கம் என்ற வரையறை வகுக்கப்பட்டது. மைதிலி சிவராமனின் உரையும், பின்னர் அவரது இறப்புவரை அவரது செயல்பாடுகளும் இன்றும் மறக்க முடியாதவை. பல போராட்டங்களில் ஈடுபட்ட மாதர்சங்கம் தன் முத்திரையை இங்கு பதித்துள்ளது. பின்னர் 1981இல் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தோன்றியபோது தமிழக சங்கம் அதில் இணைந்தது.
சோவியத் யூனியன் – உஸ்பெகிஸ்தான் தலைநகரான தாஷ்கண்டில் உலக சமாதான மாநாட்டில் பாப்பாவும் மைதிலி சிவராமனும் கலந்து கொண்டனர். அங்கு ஹிட்லரை எதிர்த்து சமர் புரிந்து தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாஸ்கோ மண்ணில் பாதம் பதித்து நெகிழ்ந்தனர். பாப்பாவின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான். அங்கு லெனினின் உடலைப் பார்த்து முஷ்டி உயர்த்தி செவ்வணக்கம் செய்து உணர்ச்சிவசப்பட்டனர்.
1989இல் தமிழகச் சட்டமன்றத்துக்கு திருவெறும்பூர் தொகுதியிலிருந்து பாப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் ஆணாதிக்கக் குரல்களுக்கு எதிராகக் கேலியுடன் அவர் குரல் ஓங்கி ஒலித்தது. ஒருமுறை பெண்களைக் கேலி செய்யும் பழமொழியான ‘பொம்பள சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு’ என்ற பழமொழியை ஓர் உறுப்பினர் பேச, பாயிண்ட் ஆஃப் ஆர்டர் கேட்ட பாப்பா கோபத்துடன் அதை நீக்க வேண்டுமென்ற பேசினார். முதல்வர் கலைஞர் உடனே தலையிட்டு அதை நீக்க வைத்தார்.
பெண்களின் பல கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைத்தார் பாப்பா. விதவைப் பெண்களுக்கான உதவித்தொகைக்கு 40 வயதை வரம்பாக வைத்தபோது அதை எதிர்த்து அவர் பேச, அந்த வரம்பை நீக்கினார் அமைச்சர் சுப்புலட்சுமி ஜகதீசன். அதேபோல் முதியோர் பென்சனில் ஆண்வாரிசு இருக்கக் கூடாது என்ற அம்சத்தையும் நீக்க எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சிதம்பரத்தில் பத்மினி ஐந்து காவலர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு அவரது கணவர் அடித்துக் கொல்லப்பட்டபோது மாதர் சங்கம் கிளர்ந்து எழுந்தது. பாப்பாவும், மாதர் சங்கமும் இடைவிடாது போராட கடைசியில் காவலர்களுக்கு தண்டனையும், பத்மினிக்கு அரசு வேலையும், நிவாரணமும் கிடைத்தது. பத்மினிக்கு வேறு திருமணமும் நடத்தி வைத்தது மாதர் சங்கம். பாப்பாவை பத்மினி உணர்வுபூர்வமாக அம்மா என்றே அழைப்பார்.
பின்னர் போலிச்சாமியார் பிரேமானந்தா வழக்கிலும் அவரை அம்பலப்படுத்தி சிறைக்கு அனுப்பியது மாதர் சங்கம். வாச்சாத்தியில் பெண்கள் பாலியல் பலாத்காரம், சின்னாம்பதி பாப்பாத்தி, மையிலாள் எனப் பல பெண்களின் பாதிப்புக்காகவும் பாப்பாவின் தலைமையில் மாதர்சங்கம் போராடி நியாயம் பெற்றது.
மாதர் சங்கத்தின் விதையைப் போட்டது சிறைக்கண்காணிப்பாளர் கேட்ட கேள்வியும், அதற்கு பாப்பாவும், ஜானகியம்மாவும் எடுத்த முடிவும்தான் என்பது வரலாறு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலக்குழுவிலும், பின்னர் மத்தியக்குழுவிலும் பணியாற்றினார் பாப்பா. வயது முதிர்ந்தபொழுது தோழர் உமாநாத்தும், பாப்பாவும் திருச்சிக்கு சென்று அங்கு வாழ்ந்தனர். அங்கேயே தனது 80ஆவது வயதில் 2010 டிசம்பர் 17 அன்று மறைந்தார் பாப்பா.
(தொடரும்)