இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், இந்தியக் கம்யூனிச இயக்க வரலாற்றிலும் தடம் பதித்த இன்னொரு தோழர் அகில்யா ரங்னேகர். அவரது நூற்றாண்டு 23 ஜூலை 2023 அன்று நிறைவடைகிறது.
அகில்யா மகாராஷ்டிர மாநிலத்தின் பூனே நகரத்தில் பிறந்தார். அவரது தந்தை திரிம்பக் ரணதிவே ஒரு முற்போக்காளர். மகாராஷ்டிராவின் இணையற்ற சமூகப் போராளி மகாத்மா பூலே தலைமையிலான சமூகச் சீர்திருத்த இயக்கத்தையும் மற்ற தலைவர்களின் முற்போக்கு இயக்கங்களையும் ஆதரித்தவர். எந்த வகையிலும் பாகுபாடு காட்டுவதை ஆதரிக்காதவர்.
அகில்யாவின் இன்னொரு முன்னோடி அவரது மூத்த சகோதரர் பி.டி.ரணதிவே. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் ரணதிவே. அவரது தாக்கம் அகில்யாவிடம் மிகுதியாக இருந்தது ஆச்சரியமல்ல. அகில்யா தனது பள்ளிப்படிப்பை பூனேவிலும் தானேவிலும் முடித்தார். பிறகு பூனேவின் புகழ்பெற்ற கல்லூரியான பெர்குசன் கல்லூரியில் அவர் தனது இளங்கலை அறிவியல் பட்டம் பெறுவதற்காகச் சேர்ந்தார்.
அந்தக் காலத்தில்தான் விடுதலைப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்தைக் கொடுத்தார். பொங்கி எழுந்த பிரிட்டிஷ் அரசு தலைவர்களை வேட்டையாடத் தொடங்கியது. இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைப் பார்த்த மக்கள் களத்தில் இறங்கினர். அகில்யா தனது சக மாணவிகள் பலரை அழைத்துக் கொண்டு பூனேவில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் பேரணி நடத்தினார். அரசு வேடிக்கை பார்க்கவில்லை. அகில்யா உள்ளிட்ட மாணவிகள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தது.
மாணவ மாணவிகளின் துணிச்சல் எப்போதுமே தனித்தன்மை கொண்டது. அந்த உணர்வை இந்த மாணவிகள் சிறையிலும் வெளிப்படுத்தினர். சிறையில் இந்தப் பெண்கள் வெள்ளை, ஆரஞ்சு, பச்சை நிறச்சேலைகளைக் கிழித்துத் தைத்து நடுவில் கரித்துண்டால் அசோகச் சக்கரத்தையும் வரைந்து பெண்கள் சிறையின் சுவருக்கருகில் ஒரு மனித கோபுரத்தை அமைத்து தேசியக் கொடியை ஏற்றினர். திகைத்துப் போன அரசு, அவர்களது சிறைத் தண்டனைக் காலத்தை நீட்டித்தது. அவர் வெளியே வந்ததும், பெர்குசன் கல்லூரி அவரை நீக்கி விட்டது.
அகில்யா மும்பையில் ரூபா கல்லூரியில் சேர்ந்து தமது பட்டப்படிப்பை முடித்தார். அவர் ஒரு சிறந்த மாணவியாக மட்டுமல்ல, ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும், ஒரு சிறந்த நடிகையாகவும், பாடகியாகவும் திகழ்ந்தார், பல பதக்கங்களையும், விருதுகளையும் வென்றார்.
இயல்பாகவே ஒரு போராளியான அகில்யா 1943இல் இந்தியாவில் விரைவாக வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். மேலும் மேலும் விடுதலைப் போராட்டத்திலும், உழைக்கும் பெண்கள் போராட்டங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் அகில்யா. மும்பையில் தொழிலாளர் பகுதியான பரேலில் பரேல் மகிளா சங்கத்தைத் தோற்றுவித்தார் அகில்யா. அச்சங்கம் பல பெண் ஜவுளித் தொழிலாளர் சங்கப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியது. பின்னர் அச்சங்கம் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்துடன் இணைந்தது.
அந்தக் காலகட்டத்தில் ஒரு சக தோழராக, ஒரு கம்யூனிஸ்ட் போராளியாக இருந்தவர் பி.பி.ரங்நேகர். 1945இல் அகில்யா அவரை மணந்து கொண்டார்.
1946இல் மும்பை நகரத்தில் ஒரு மிகப்பெரும் கப்பற்படை எழுச்சி ஏற்பட்டது. நான் அறிந்த வரையில், இந்த எழுச்சியைப் பற்றி 90% பேருக்குத் தெரியவில்லை என்றே கூறுவேன். முதல் சுதந்திரப் போராட்டம் அல்லது சிப்பாய் புரட்சி என்றால் பலரும் சொல்லி விடுவார்கள். ஆனால் கப்பல்படை எழுச்சி என்றால் விழிப்பார்கள்.
மிகவும் மோசமான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் மாலுமிகள். 500 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 1500 பேர். மிக மோசமான சாப்பாடு, மோசமான மருத்துவம் என அனைத்து வகையிலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் அவர்களை சித்ரவதை செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக மாலுமிகளிடம் கோபம் ஏறத் தொடங்கியது. அதன் உச்சம்தான் மும்பையில் நங்கூரமிட்டிருந்த பிரிட்டிஷ் இந்திய ராயல் நேவியைச் சேர்ந்த தல்வார் என்ற கப்பலில் வெடித்த மாலுமிகளின் எழுச்சி.
வேலைநிறுத்தம் செய்த கப்பலை முற்றுகையிட்டது பிரிட்டிஷ். கப்பலுக்கு உணவும் தண்ணீரும் தடுக்கப்பட்டன. காங்கிரசும் முஸ்லிம் லீகும் இந்த எழுச்சியை ஆதரிக்க மறுத்து சரணடையுமாறு வலியுறுத்தின. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் பொதுமக்களின் ஆதரவையும் பெற்றிருந்தனர் மாலுமிகள். இந்தியாவெங்கும் மக்கள் தன்னெழுச்சியாக அவர்களை ஆதரித்துப் போராட்டங்களில் இறங்கினர். மும்பைக்கு அருகே இருந்த தானேவிலிருந்து தரைப்படை கடலை நோக்கி வந்தது. மக்கள் சாலைகளில் தடுப்புக்களை அமைத்து ஆயுதமேந்திய பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்துப் போராடினர்.
ரொட்டிகளைத் தமது வீட்டில் சுட்டு எடுத்துக் கொண்டு வந்து, குண்டுகளுக்கு நடுவில் கப்பலுக்கு எடுத்துச் சென்றனர் மக்கள். அந்த உணவு வழங்கலில் அகில்யா மிகவும் முக்கியமான பங்கையாற்றினார். 1946 பிப்ரவரி 22 அன்று பிரிட்டிஷ் ராணுவம் போராடும் மக்களுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. நேரடியாக அந்தக் குண்டுகளைச் சந்தித்த மக்களில் அகில்யாவும் ஒருவர். அவருக்கு அருகில் நின்று போராடிக் கொண்டிருந்த அவரது உற்ற தோழியர் கமல் டோண்டே அந்த இடத்திலேயே குண்டுகளுக்கு பலியானார். அகில்யா மயிரிழையில் தப்பினார். அங்கு அகில்யாவுடன் இருந்த சகோதரி குசும் ரணதிவேக்கு காலில் குண்டடிப்பட்டது. அப்பேர்ப்பட்ட போராளி அகில்யா.
இந்திய விடுதலைக்கு மிகவும் முக்கியமான பங்கையாற்றியது 1946 கப்பல்படை எழுச்சி என்றால், பின்னர் மொழிவழி மாநிலத்துக்கான போராட்டங்கள் இந்தியாவில் பெரிதாக வெடித்தன. அந்தப் போராட்டத்திலும், மகாராஷ்டிராவில் சம்யுக்த மகாராஷ்டிரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்றது. அப்போதைய காங்கிரஸ் அரசு அப்போராட்டத்தை துப்பாக்கிக் குண்டுகளால் எதிர்கொண்டதில் 106 பேர் உயிர்த்தியாகம் செய்தனர். அந்தப் போராட்டத்துக்கு ஏராளமான பெண்களை அணிதிரட்டுவதில் அகில்யா முன் நின்றார். அப்போது மிகவும் புகழ்பெற்ற மராத்தியப் பத்திரிகையாளரும், போராட்டத்தின் தலைவருமாக இருந்த பிரகலாத் கேஷவ் ஆத்ரே அகில்யாவை ‘ரணராகினி’ என்று வர்ணித்து ஒரு தினசரியில் கவிதை எழுதினார். அதன் பொருள் போர்க்களத்தின் அரசி என்பதாகும்.
எந்த ஒரு கம்யூனிஸ்டையும்போல் அகில்யா பின்னர் சேரிப் பகுதி மக்களிடம் தமது கவனத்தைச் செலுத்தி அவர்களை அணிதிரட்டவும், உதவவும் அர்ப்பணித்துக் கொண்டார். 1961இல் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் கார்ப்பரேட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்குச் சேவை செய்தார் அகில்யா. மாநகராட்சியில் சேரி மக்களின் குரலை ஓங்கி ஒலித்து அவர்களிடையில் மிகுந்த மதிப்பைப் பெற்றார். சேரி மக்களுக்காகப் பல போராட்டங்களுக்குத் தலைமையேற்று பேரணிகளை நடத்தினார். தொழிற்சங்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.
1962இல் இந்திய சீனா போர் வெடித்த போது கம்யூனிஸ்டுகளில் பெரும்பிரிவினர் பேச்சுவார்த்தை மூலமே இதனைத் தீர்க்க வேண்டுமென்றும், போர் கூடாது என்றும் பேசியதால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அகில்யாவும் ஒருவர். 1962 முதல் 1966 வரை மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார் அகில்யா.
இந்தப் பிரச்சனை உட்கட்சிப் போராட்டத்தின் ஒரு முக்கியமான பிளைவை ஏற்படுத்தி சிபிஐ(எம்) உருவாகக் காரணமானது. 1964 அக்டோபர் நவம்பரில் கல்கத்தாவில் புதிய கட்சி உதயமானபோது அகில்யா அதில் இணைந்தார். 1969இல் மீண்டும் இடதுசாரித் திரிபுவாதம் தோன்றியது. அதனை எதிர்த்த போராட்டத்திலும் அகில்யா முக்கியப் பங்கை வகித்தார்.
1970களின் முற்பகுதியில் மகாராஷ்டிராவிலும் மும்பையிலும் அத்தியாவசியப் பண்டங்களின் விலையேற்றத்துக்கு எதிராக பெரும் கூட்டுப் பெண்கள் போராட்டங்கள் நடைபெற்றன. ‘அங்கப் பிரதட்சண’ (உருண்டு போவது) என்ற வடிவத்திலும் போராட்டம் வளர்ந்தது. அதற்கு அகில்யா ரங்நேகர், மிருணாள் கோரே, தாரா ரெட்டி மற்றும் பிற பெண் தலைவர்கள் தலைமை தாங்கினர். இது பெரிய அளவில் அரசியல் தாக்கத்தை உருவாக்கியது.
1970இல் கொல்கொத்தாவில் சிஐடியூ உருவானபோது, மகாராஷ்டிராவில் சிஐடியூவை அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் அகில்யா. மகாராஷ்டிர சிஐடியூவின் மாநிலத் துணைத்தலைவர்களில் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975இலும், பின்னர் 1987இலும் சிஐடியூவின் அகில இந்திய மாநாடு மும்பையில் கூடியபோது அகில்யா வரவேற்புக் குழுவின் சார்பில் தயாரிப்பில் முக்கியப் பங்கையாற்றினார். 1975இல் அவர் சிஐடியூவின் பொதுக்குழுவுக்குத் தேர்வானார்.
1975ல் இந்திரா காந்திக்கு பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்பட் போது அவர் அதிலிருந்து தப்பிக்க நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அவரை எதிர்த்த அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அகில்யாவும் 1976 – 77இல் 19 மாதங்கள் சிறைப்பட்டார்.
மக்கள் போராட்டங்களில் மாபெரும் பங்கெடுத்த அவரை அங்கீகரிக்கும் வகையில் சிபிஐ(எம்) நாடாளுமன்றத் தேர்தலில் 1977இல் நிறுத்தியது. காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அவர் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
1978இல் ஜலந்தரில் நடைபெற்ற சிபிஐ(எம்)மின் பத்தாவது மாநாட்டில் அகில்யா மத்தியக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் இரண்டு பெண் தோழர்களை மத்தியக்குழுவுக்கு அனுப்பிய பெருமை மகாராஷ்டிரக் கட்சிக்குக் கிடைத்தது. ஒருவர் அகில்யா, இன்னொருவர் கோதாவரி பருலேகர். 2005 வரை அவர் அப்பொறுப்பில் நீடித்துப் பின்னர் உடல்நிலை காரணமாக விலகினார்.
அது மட்டுமல்ல, 1983 முதல் 1986 வரை மகாராஷ்டிர சிபிஐ(எம்)மின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச்செயலாளராகப் பணியாற்றினார். இந்தியாவிலேயே இந்தக் கௌரவம் அவருக்கு மட்டுமே உள்ளது.
சிஐடியூவில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு உருவாக அவர் விமலா ரணதிவே, சுசீலா கோபாலனுடன் சேர்ந்து உழைத்தார். 1981இல் சென்னையில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உருவானது. அதன் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் அகில்யா. பின்னர் அவர் அதன் துணைத்தலைவராகவும், பின்னர் தேசியத் தலைவராகவும், புரவலராகவும் தொடர்ந்து பணியாற்றினார்.
எண்பது வயதான பிறகும் இந்திய அரசு திணித்த புதிய தாராளமய, உலகமய, தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டங்களில் உற்சாகமாகப் பங்கேற்றார். அது இளைய தலைமுறைக்கு உத்வேகத்தை அளித்தது. அகில்யாவின் கணவரும் சக தோழருமான பி.பி.ரங்நேகர் 95 வயதில் 2008 பிப்ரவரி 8 அன்று மறைந்தார். ஓராண்டுக்குப் பிறகு 2009 ஏப்ரல் 19 அன்று அகில்யா மறைந்தார்.
‘அகில்யா ரங்நேகர் குறிப்பிடத்தக்க மானுடர். தன்னால் முடிந்ததையும் தாண்டிச் சென்று மக்களுக்கு வேலையை முடித்துக் கொடுப்பது அவரது குணாம்சங்களில் ஒன்று. அதற்காக அவர் மும்பையில் மந்திராலயத்துக்கு (மாநில செயலகம்) அடிக்கடிச் செல்வார். அவர் உள்ளே நுழையும்போது அது முதல்வரோ அல்லது எந்த அமைச்சர் ஆனாலும் சரி, மரியாதையுடன் எழுந்து நிற்பது வழக்கம். அவர் யாரிடமும் நேரம் கேட்டு வாங்கியதில்லை. அவர் மக்களின் பிரச்சனையுடன் தான் அவர்களை அணுகினார் என்பதால் அவர் வருவதை அவர்களால் மறுக்க முடியவில்லை. இதுதான் அவரது தன்னிகரற்ற அறநெறித் தகுதி. நானே இதனை பலமுறை பார்த்திருக்கிறேன்’ என்கிறார் விவசாய சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே.
அவரைத் தமது தாயாகவே வரித்து அகில்யாதாய் என்றே அழைத்துப் பழகியவர்கள் அசோக் தாவ்லே உள்ளிட்ட முன்னாள் மாணவர் சங்கத் தோழர்கள்.
எளிமையான வாழ்க்கை முறை மக்களையும் தோழர்களையும் அவரிடம் ஈர்த்தது. அனைத்துக் கட்சியினரும் அவர்மீது மரியாதை வைத்திருந்தனர். இறுதிவரை உறுதியான மார்க்சிஸ்டாகத் திகழ்ந்தார் அகில்யா. கடைசி வரை கட்சியிலும், வெகுஜன ஸ்தாபனங்களிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள மாநிலச் செயலாளராக இருந்த தோழர் அசோக் தாவ்லேயைத் தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொண்டிருந்தார் அகில்யா. அவரது அர்ப்பணிப்பு உணர்வு அசோக் தாவ்லேயின் கண்களில் நீரை வரவழைத்தது.
(தொடரும்)