Skip to content
Home » தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

Umanath

தன் அன்னையின் மறைவாலும் அவரது உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் கலங்கிப் போனார் பாப்பா. உடலைப் பார்க்க வேண்டுமானால் கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுக்க வேண்டும் என்ற கேவலமான நிபந்தனைக்கு உட்பட மறுத்துவிட்டார். ரத்தத்தால் கிடைத்த துணியில் ஆறுதல் கூறிக் கடிதம் எழுதினார் உமாநாத். ‘மிஸ்டர் ஹட்சின், ஒரு சவக்குழி போதாது. ஐந்து வெட்டி வை’ என்று உமாநாத் சிறை அதிகாரியைப் பார்த்துக் கத்தியது சென்னை மத்திய சிறை முழுவதும் எதிரொலித்தது.

ஒரு வழியாக 26 நாள் சட்டப் போராட்டத்தால் 24 மணி நேர சிறைக் கொட்டடி என்ற அரசின் முடிவை விலக்க ஒப்புக் கொண்டுவிட்டது. எனவே கட்சி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரியது. உமாநாத் பாப்பாவையும் அங்கு அழைத்து வருமாறு பிடிவாதம் பிடிக்க, வராண்டாவுக்கு அவரும் தூக்கிக் கொண்டு வரப்பட்டார். வழக்கறிஞர் வி.ஜி.ராவ் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

1952, ஆகஸ்ட் 15 வரை சிறையிலிருந்தனர் அனைவரும். பாப்பா-உமாநாத் காதலோ வளர்ந்து வந்தது. பிறகு விடுதலை செய்யப்பட்டனர். 1952 அக்டோபர் 9 அன்று பாப்பா-உமாநாத் திருமணம் பொன்மலையில் நடைபெற்றது. முதலில் தயங்கித் தடுத்த பெரியார் பாப்பாவின் விளக்கத்துக்குப் பிறகு கலந்து கொண்டு வாழ்த்தினார்.

மிகவும் வறுமையான சூழல். அவரும், தோழர் பி. ராமச்சந்திரனும் பெரும்பாலும் அரைப்பட்டினி, கால் பட்டினியாகவே வாழ்ந்தனர். பாப்பா தொழிலரசு பத்திரிகையில் பெற்ற ரூ.40 மட்டுமே நிரந்தர வருமானம். உமாநாத்தின் அண்ணனும் மருமகனும் அவ்வப்போது உதவினர். குடும்ப வாழ்க்கையில் போராடிக் கொண்டே, தொழிலாளர் போராட்டத்தில் அவர் தீவிரமானார். புதுக்கோட்டை காவிரி மில் போராட்டம், பீடித் தொழிலாளர் போராட்டம் என சுற்றிச் சுழன்றார் உமாநாத். இடையில் கண்ணம்மா, வாசுகி என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். கட்சியும் உட்கட்சிப் போராட்டத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

காவிரி மில்லில் ஆட்குறைப்பை எதிர்த்து உமாநாத் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். பாப்பா, இரண்டு குழந்தைகளுடன் அங்கேயே வந்து தங்கிவிட்டார். பத்தாம் நாள் உமாநாத் மயக்கமானார். அரசாங்கம் கலங்கிப் போனது. தொழிலாளர் நீதிமன்றத்துக்குப் பிரச்சனையைக் கொண்டு செல்ல ஒப்புக் கொண்டது. எனவே பதினோராம் நாள் உண்ணாவிரதம் முடிந்தது. உமாநாத்தின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது.

1962இல் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் உமாநாத்தைக் கட்சி நிற்க வைத்தது. உமாநாத்தை மலையாளி என்று எதிர்த்து நின்ற நாகப்பச் செட்டியார் பிரச்சனையைக் கிளப்ப அவரை 10,000 வாக்கில் தோற்கடித்து பதிலளித்தனர் மக்கள்.

1964இல் உட்கட்சிப் போராட்டம் முற்றி இரண்டாக உடைந்து சிபிஐ(எம்) உதயமானது. அப்போது உமாநாத் நாடாளுமன்ற உறுப்பினர். பாப்பாவும் உமாநாத்தும் இது குறித்துத் தொடர்ந்து விவாதித்து வந்தனர். மீரட் சதி வழக்கில் எஸ்.ஏ. டாங்கே விடுதலை செய்யப்பட்டால் பிரிட்டிஷ் உளவாளியாக இருப்பதாகக் கடிதம் கொடுத்தார் என்ற செய்தியைப் பத்திரிகையில் படித்து அதிர்ந்த உமாநாத் நேராக ஆவணக் காப்பகம் சென்றார். அங்கு கடிதத்தைப் பார்த்து உண்மையென்று புரிந்து கொண்டார். உடன் எம்.பிக்களாக இருந்த ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி ஆகியோருடன் உமாநாத்தும் தன் வழியைத் தேர்வு செய்து கொண்டார்.

கட்சியில் ஏற்பட்ட பிளவில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். 1962இல் சீன இந்தியப் போர் வெடித்ததும், தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கைதான தலைவர்களுடன் பாப்பாவும் உமாநாத்தும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 1964இல் விடுதலை. மீண்டும் 1965ல் கைது, 1966ல்தான் விடுதலை.

கட்சி பிளவுண்டபோது திருச்சியில் பி.ராமச்சந்திரன், டி.கே.ரங்கராஜன், கே.வரதராசன் ஆகியோருடன் உமாநாத் இணைந்து கட்சியைச் சரியான பாதையில் செலுத்தினார். அங்கு தொழிற்சங்கங்களும் தவறான பாதையில் செல்ல, அதுவும் உடைந்து புதிதாக சிஐடியு உதயமாகும் சூழல் ஏற்பட்டது. தொழிற்சங்கத்தில் அவர் ஆற்றிய பணிகளைப் பற்றித் தனிப் புத்தகமே எழுதலாம்.

நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சலுகைகள் அதிகம். அதை அனுபவித்துவிட்டுப் புரட்சிக்காரனாக இருப்பது கடினம். அதைச் செய்து காட்டியவர் ஏ.கே.கோபாலன். அவரைப் பின்பற்றினார் உமாநாத். அவரது முதல் பேச்சு மரண தண்டனைக்கு எதிரான தனி நபர் மசோதா. அதை ஆதரித்து அடுக்கடுக்கான சட்ட விவரங்களுடன் அவர் பேச நாடாளுமன்றமே ஊன்றிக் கவனித்தது. அவர் வழக்கறிஞர் என்று நினைத்து வடநாட்டு எம்.பி. கைகுலுக்கினார். அதே போல் ஜீரோ ஹவரையும் சரியாகப் பயன்படுத்தினார் உமாநாத். அப்போது ஒருமுறை சிஐஏ குறித்துப் பேச உமாநாத் அரை மணி நேர விவாதத்துக்கு அனுமதி கோரினார். அதை சபாநாயகர் அனுமதிக்க, அந்த விவாதம் பெரிதாகி இரவு 3 வரை நீடித்தது. உமாநாத் இதனால் நாடறிந்தவராகிவிட்டார்.

அதேபோல் கம்யூனிஸ்டுகள் தமது தாய்மொழியில்தான் பேசுவோம் என்று முடிவெடுத்துப் போர்க்கொடி உயர்த்தினர். காங்கிரஸ் இதைத் தடுக்க முனைந்தது. ஆனால் வேறு வழியின்றி தமிழ், வங்காளம் இரண்டுக்கும் மொழிபெயர்ப்பு செய்ய சபாநாயகர் அனுமதி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் போலவே உமாநாத்தும் எந்தச் சலுகையையும் பெறவில்லை. ஒருமுறை ஒரு மத்திய அரசு ஊழியர் பணி நிரந்தரம் செய்யப்பட்டபோது தட்டு நிறைய பழங்கள், சாக்லெட்டுகள், இனிப்புகள் கொண்டு வந்தபோது வானத்துக்கும் பூமிக்கும் குதித்து அவரை விரட்டி விட்டார் உமாநாத். குழந்தைகள் கதவிடுக்கில் பார்த்து ஏக்கமடைந்ததோடு சரி.

சிஐடியூ உருவானதும் அதன் மாநிலப் பொதுச்செயலாளராக, கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டார் உமாநாத். இப்போது மூன்று குழந்தைகள். வீட்டில் அப்பா, அம்மா சண்டை என்ற பேச்சே கிடையாது. அவர்கள் குழந்தைகள்மீதும், ஒருவருக்கொருவர்மீதும் பொழிந்த அன்பும் பாசமும் அளவற்றது. தனது தாய் தயாரித்த கொங்கணி உணவு உமாநாத்துக்கு மிகவும் பிடிக்கும். வாசுகி அதைக் கற்றுக்கொண்டு அப்பா குழம்பு என்று பெயரும் வைத்து சமைத்துக் கொடுப்பார்.

உமாநாத் இரண்டு முறை புதுக்கோட்டையிலிருந்தும், இரண்டு முறை நாகையிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.

மூத்த பெண் கண்ணம்மா மருத்துவராக வேண்டுமென ஆசைப்பட்டார். அவரது கனவை நிறைவேற்றுவது எப்படி என்று திகைத்தனர் தம்பதிகள். பி.ஆரிடம் வழக்கம் போல் பிரச்சனை சென்றது. அவர் தாமே மணிப்பாலில் இலவச சீட்டையும் வங்கிக் கடனையும் ஏற்பாடு செய்தார்.

நாகையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கடும் புயல் வீசி ஊரையே சாய்த்தது. ஒரு தோழரை அழைத்துக் கொண்டு கடுமையான சூழலில் தம் உயிரைப் பணயம் வைத்து பைக்கில் சென்றார் உமாநாத். அங்கு மாவட்ட கலெக்டர் நிவாரணப் பொருட்களை ஒரு லாரியில் ஏற்றிவிட்டுத் தாம் அம்பாசடர் காரில் உட்கார்ந்திருந்தார். எம்.எல்.ஏ தானும் வருவதாகக் கூற, அவரோ வேண்டா வெறுப்பாக உமாநாத்தை லாரியில் வருமாறு சொன்னார். என்ன அவமதிப்பு பாருங்கள்! ஆனால் உமாநாத் லாரியில் சென்று ஊர் ஊராக விநியோகத்தில் பங்கேற்க, மக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றார்.

தமது வாழ்வில் அவர் ஒரு விஷயத்தைக் கறாராகக் கடைப்பிடித்தார். சீர்திருத்தத் திருமணத்தை மட்டுமே நடத்தி வைக்க ஒப்புக் கொள்வார். தமது பெண்கள் கண்ணம்மா, வாசுகி இருவருக்குமே அப்படித்தான் நடத்தினார்.

பின்னர் உமாநாத் மத்தியக்குழு உறுப்பினராகி தில்லி சிஐடியூ தலைமையகத்துக்குச் சென்றார். அப்போது அவர் உடல் நலிவடைந்து சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்த உமாநாத் கண்மூடியபடியே அரை மணி நேரம் ஆங்கிலத்தில் உழைக்கும் பெண்கள் பிரச்சனை குறித்து சரளமாக உரையாற்றினார். அருகில் இருந்த வாசுகியும் நிர்மலாவும் திகைத்துப் போனார்கள். விஷயம் என்னவென்றால் அவர் மயக்கமானபோது அந்த உரையைத்தான் தயாரித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

உமாநாத் பேசுகிறார் என்றால் அதில் ஒரு குட்டிக் கதை இருக்கும். இரண்டு மூன்று மேற்கோள்கள் இருக்கும். தர்க்கம் இருக்கும். நுட்பமாக வார்த்தைகளைச் சுழற்றுவார். குறிப்பில்லாமல் பேச மாட்டார். முழுத் தயாரிப்பு இருக்கும். பலமணி நேரம் ஒதுக்கித் தமது உரையைத் தயாரிப்பார். அவர் நாள்கணக்காகப் படித்துக் குறிப்பெடுப்பதை குழந்தைகள் அவருக்குத் தேர்வு என்று நினைத்துக் குழம்பியதும் உண்டு.

அவர் நாடாளுமன்றத்தில் போராடி புதுக்கோட்டையைத் தனி மாவட்டமாக்கிக் கொடுத்தார் என்பது வரலாறு. இந்திரா பிரதமராக இருந்த போது தபால் தந்தி ஊழியர் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோரை இந்திரா அரசு பழிவாங்கியது. இந்திரா எதையோ பேச வந்தபோது குறுக்கிட்ட உமாநாத் பழிவாங்கலை எதிர்த்துக் கோஷம் போட, அவருடன் 19 சிபிஎம் எம்.பிக்களும் கோஷம் போட நாடாளுமன்றம் கலங்கியது. இந்திராவோ தான் பணிய மாட்டேன் என்று பேச, மறுபடி பெரும் அமளி துமளி ஏற்பட்டது. இந்தப் போராட்டம் ஊழியர்களுக்குப் பெரும் உத்வேகம் கொடுத்தது.

அதேபோல் போலீஸ்காரர்கள் சங்கம் வைப்பதற்கும் சிபிஐஎம் போராடியது. அதை சட்டசபையில் பேசித் துவைத்தெடுத்தவர் உமாநாத். ஆனால் இன்றுவரை அது நிறைவேறவில்லை.

ஒருமுறை தமிழக முதல்வர் பக்தவத்சலத்தை அவரது கடிதத்தை வைத்தே கலக்கிவிட்டார் உமாநாத். உமாநாத் பரோலில் இருந்தபோது நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்தார். இதை அறிந்த பக்தவத்சலம் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்துக் கடிதம் கொடுக்க, இதை உரிமை மீறல் பிரச்சனையாக்கி, நாடாளுமன்றத்தை பக்தவத்சலம் அவமதித்துவிட்டதாகக் கூறி உமாநாத் பெரும் புயலையே கிளப்பிவிட்டார். வேறு வழியின்றி பக்தவத்சலம் மன்னிப்புக் கேட்க வேண்டியதாகி விட்டது. இது ‘உமாநாத் அஃபேர்’ என்று கிண்டலாகப் பேசப்பட்டது.

‘கட்சி உறுப்பினர்’ என்கிற பெருமையைவிட வேறு எதுவும் பெருமை கிடையாது என்று உமாநாத் கூறுவார். போர்க்குணம் கொண்ட கட்சி உறுப்பினராகக் கடைசி வரை வாழ்வது என்பது கம்யூனிஸ்டுகளின் பெருமை. உமாநாத் அப்படியே வாழ்ந்தார்.

தமது வாழ்க்கையில் 9 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறை, 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. இதைவிட அவரைப் பற்றிப் பெரிதாக என்ன சொல்லி விட முடியும்?

ஒரு கம்யூனிஸ்டாகவே இருந்து 21 மே 2014 அன்று தாமும் பாப்பாவும் திருமணம் செய்துகொண்ட அதே திருச்சியில் தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டார் உமாநாத்.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *