ஏதும் அறியாத சிறுமி. தன்னை அலங்காரம் செய்து கொள்ள விரும்பும் வயது. அம்மா அவளுக்கு ஆசையாக ஒரு நெக்லசைப் போட்டு விடுகிறாள். அந்த மகிழ்ச்சியைத் தனது அப்பாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக அந்தச் சிறுமி குதித்தோடி அப்பாவிடம் வருகிறாள். அவள் மாலையைக் காட்டியதும் அப்பாவின் முகம் கோபத்தில் கொதிக்கிறது. ஆவேசமாக அவர் சிறுமியை அடித்துவிட்டு அப்படியே உட்கார்ந்து விடுகிறார். அழுது கொண்டே சிறுமி அம்மாவிடம் ஓடுகிறாள்.
சிறிது நேரத்துக்குப் பின் சாந்தமடைந்த அப்பா அம்மாவையும், குழந்தையையும் அழைத்து சமாதானம் செய்து சொல்கிறார்: ‘நாம் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள். இப்படிப்பட்ட ஆசைகள் மகளுக்கு உண்டாகிவிடக் கூடாது. இன்று இதைப் பார்த்தவள் பின்னால் வேறு ஒன்றுக்கு ஆசைப்படுவாள். இனி இது போல் செய்யாதே’ என்று மனைவியிடம் கூறுகிறார். அந்த அரசியல் தலைவர், ஏ.கே.ஜி. என்று அனைவரும் அன்புடன் அழைத்த ஏ.கே.கோபாலன்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள்மீது அமலாக்கத்துறை ரெய்டு மேல் ரெய்டாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில் இவர்களைப் போன்றவர்கள் அருங்காட்சியகப் பொருட்கள்தானே! அவருக்கு முன்னால் இது போன்று தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் அறநெறியைக் கடைப்பிடித்ததாக வரலாறு நமக்குக் கூறும் இன்னொரு அரசியல் தலைவர், மகாத்மா காந்தி!
‘நான் என்றும் மக்கள் ஊழியனே’ என்ற உயர்ந்த அறநெறியைக் கடைப்பிடித்த ஏ.கே.ஜி. வடக்கு மலபார் பகுதியில் சிறக்கல் துணை மாவட்டத்தில் மாவேலிப் பகுதியில் மாக்கேரி என்ற கிராமத்தில் 1904 அக்டோபர் 1 அன்று பிறந்தார். அவரது குடும்பம் எவ்வளவு பெரியதென்றால் சில சமயம் அவர்களே ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதுண்டு! அவரது தந்தை சீர்திருத்தவாதி. ஏ.கே.ஜி பொதுவாழ்க்கையில் ஈடுபட அவரது தாக்கம் ஒரு பங்கு வகித்தது.
வடக்கு மலபாரில் அவரது தந்தை ஓர் ஆங்கில இடைநிலைப் பள்ளியைத் தொடங்கினார். அது அப்போது ஒரு புரட்சிகரமான செயல். அவரது சகோதரிகளும் பள்ளிக்குச் சென்றதை பழமைவாதிகள் பார்த்துக் கோபமடைந்தனர். கடும் எதிர்ப்பால் இப்பள்ளி ஆரம்பப் படிப்புடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.
ஏ.கே.ஜியின் தந்தை வடக்கு மலபார் நாயர் சொசைட்டியைத் தொடங்கியது முதல் அதன் செயலாளராக இருந்தார். அது தாலி கட்டுவது போன்ற வழக்கங்களை ஒழித்துக் கட்டியதில் முக்கியப் பங்கு வகித்தது. ஏ.கே.ஜியும் அவருடன் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பங்கேற்றார். அவரது தந்தையின் வேடிக்கைப் பேச்சு அவரிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவரது தந்தை நடத்திய தொழில் நண்பன் என்ற பத்திரிகையில் ஓய்வு கிடைக்கும்போது வேலை செய்யலானார் ஏ.கே.ஜி. அவர் சித்தப்பா, அப்பா ஆகியோர் நடத்திய நாடகக் குழுவிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அவரது அப்பா சிறக்கல் துணை ஜில்லா முதல் சபையில் போட்டியிட்ட போது அவருக்குப் பிரசாரம் செய்தார் ஏ.கே.ஜி. அவரது தந்தை மக்களின் அடிப்படைத் தேவைகளில் மிகுந்த கவனம் செலுத்தினார். அது அவருக்கு அரசியலின் ஆரம்பப் பாடத்தைப் புகட்டியது.
ஏ.கே.ஜிக்கு படிப்பில் பெரிய ஆர்வம் எதுவும் இல்லை. பொதுப்பணியே அவரைக் கவர்ந்தது. மாணவர்களில் போக்கிரிப் பிள்ளையாக இருந்தார் ஏ.கே.ஜி. மாணவர்களிடையே கட்டப்பஞ்சாயத்துவரை செய்தார். அதற்கு ‘டீ’ வாங்கித் தரவேண்டும். அப்போதே அரசியலும் தொடங்கிவிட்டது. அவரது ஊருக்கு அரசியல் தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது மாணவர்களைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு சென்று தலைவர்களை ரதத்தில் அமரச் செய்து இழுத்து வந்தார் கோபாலன். அதன் பிறகு நடந்த பொதுக்கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்றனர். அடுத்த நாள் பள்ளியில் தண்டனையும் கிடைத்தது. அம்மா அவரது அரசியல் வாழ்க்கைக்குப் பெரும் துணை. அப்பாவிடம் அடி வாங்காமல் காப்பாற்றுவது அவளது பொறுப்பு!
ஏ.கே.ஜி. பொதுவாழ்க்கையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், அவரது தந்தையின் நிர்ப்பந்தத்தால் முதலில் ஆசிரியரானார். ஏழு வருடங்கள் பணி செய்த அவர் அதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஒரு நல்ல ஆசிரியன் ஒரு நல்ல மக்கள் தலைவனாக முடியும் என்பது அவரது கருத்து.
தேசப்பற்றுடைய ஒரு ஆசிரியர் எப்படி மக்கள் தலைவனாக வர முடியும் என்பதை பெரளச்சேரி போர்டு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த அவரது அண்ணன் ஏ.கே.சங்கரனிடமிருந்து கற்றார் ஏ.கே.ஜி. ஹோம் ரூல் இயக்கத்தில் பங்கேற்ற அவரது அண்ணன் கிழிந்த கதர் சட்டையை அணிந்து பள்ளிக்கு வருவதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார் ஏ.கே.ஜி. கடுமையான பிரிட்டிஷ் எதிர்ப்பாளரான அவரது அண்ணனைக் கண்டு பெருமிதம் கொண்டார் அவர். ஆனால் பின்னால் கோபாலன் சோஷலிஸ்டாகவும், கம்யூனிஸ்டாகவும் மாறியதும் அவரே எதிர்ப்பாளராக ஆனார் என்பது வேறு விஷயம்.
தேசியப் பாடல்களை மனப்பாடம் செய்து கோபாலன் முன்னால் பாடினால், மதிப்பெண்களை அள்ளிக் கொடுப்பார் கோபாலன். இந்தத் தந்திரத்தைப் பல மாணவர்கள் பயன்படுத்தி அதிக மதிப்பெண் பெற்றனர். ஆனால் அவர்கள் பலரும் தேசபக்தர்களாக மாறினர் என்பது மகிழ்ச்சிதானே!
1921ஆம் வருடம் நடந்த கிலாபத் இயக்கமும் மலபார் கலகமும் அவருக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தன. கைராட்டை, பிரசாரம், சுதேசிப் பொருட்களை விற்பனை செய்வது போன்றவற்றில் அவர் ஈடுபட்டார். அக்காலத்தில் ஆசிரியர் தொழில் தமது லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லத் தடையாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றத் தொடங்கியது. அப்போது அவர் இரவுப்பள்ளி உட்படக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். இரவு வெகுநேரம் சென்று வீடு திரும்பியவரை வீட்டில் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கி விட்டனர்.
அவரை முடக்க குடும்பப் பொறுப்பை அவரிடம் கொடுத்துவிட்டனர். இரட்டை இஞ்சின் வேலையை அவர் செய்ய வேண்டியதாகி விட்டது. ஆனால் அனைவரின் மதிப்பையும் அவர் பெற்று விட்டார். அவரது மனமோ போர்க்களமாக இருந்தது. சிறு வீட்டில் மட்டும் முடங்கிவிடுவதா அல்லது 35 கோடி இந்திய மக்களுக்காகப் பணியாற்றுவதா என்ற கேள்வி அவரைக் குடைந்தெடுத்தது. போராட்டத்தில் குதிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டார் ஏ.கே.ஜி.
1929இல் காங்கிரஸ் சுதந்திரத் தீர்மானத்தை நிறைவேற்றிப் போராட்டத்தில் குதித்தது. சோவியத் புரட்சியால் ஆகர்ஷிக்கப்பட்ட நடுத்தர மக்கள் சோஷலிசத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தனர். மகாத்மா உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார். அதையொட்டி கேரளத்தில் கேளப்பன் தலைமையில் கோழிக்கோட்டிலிருந்து பையனூருக்கு யாத்திரை தொடங்கியது. அதற்கு சொவ்வ என்ற இடத்தில் வரவேற்பளிக்க கோபாலன் தலைமையில் ஒரு குழு இறங்கியது. அப்போது நடந்த கூட்டத்தில் அவரும் யாத்திரையில் சேர விரும்பினாலும், குழுவின் தலைவர் நேராகப் பையனூர் வருமாறு கூறிவிட்டார்.
இப்போதுதான் சமயம் என்று கோபாலன் முடிவெடுத்து விட்டார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு இயக்கத்தில் சேரத் தீர்மானித்துவிட்டார். அப்பாவும், அம்மாவும் பின்னுக்கு இழுத்தனர். அப்பா பேசுவதையே நிறுத்திவிட்டார். பள்ளியின் தலைமை ஆசிரியரான தாய்மாமனும் தடுத்தார். முடிவு மாறவில்லை. கண்ணூரிலிருந்து கோழிக்கோட்டுக்குச் சென்று சத்தியாகிரகம் செய்து கைதானார் ஏ.கே.ஜி. முதல் சிறைவாழ்வு! அதற்கு முன் இரு மாதங்களுக்கு இளைஞர்களை சட்டமறுப்புக்குத் தயார் செய்து அனுப்பிக் கொண்டிருந்தார் அவர். சிறையில் அவரகளை ஏ, பி வகுப்பு எனப் பிரித்து வைத்தனர். வெளியே அவரது கைதை அறிந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதில் கலந்து கொண்ட குமாரன் என்ற மாணவனை அவனது தந்தை அடிக்க, அவன் தற்கொலை செய்து கொண்டு விட்டான். அது ஒரு நீங்காத வடு.
இதற்கிடையில் சிலரது முயற்சியால் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட, போராட்டம் நின்றது. அந்தக் காலத்தில் காங்கிரசில் பொருளாதார வசதி கூடக் கிடையாது. பட்டினியுடன் பயணம் செய்து ஏ.கே.ஜி. பணியாற்றினார். அந்த அனுபவங்களை ஆனந்தம் என்றார் ஏ.கே.ஜி. அடி, உதை, ஏளனம் என்ற பல எதிர்ப்புகளுக்கிடையில் சோர்வின்றிப் பணியாற்றி காங்கிரசை வளர்த்தார்கள் ஏ.கே.ஜி உள்ளிட்டோர். மறியல்களை அவர் தலைமை தாங்கி நடத்த வேண்டுமெனவும், கூட்டங்களில் பேச வேண்டுமெனவும் ஏராளமான வேண்டுகோள்கள் அவருக்கு வந்த வண்ணமிருந்தன. ஒரு புறம் கள்ளுக்கடை மறியலில் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டதை அவர் கண்டார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியது. தாழ்த்தப்பட்டோரை சாதி இந்துக்கள் மதிக்கவேயில்லை. இன்னொரு புறம் இந்து-முஸ்லிம் மோதலைத் தூண்டிவிட்டது பிரிட்டிஷ் அரசு. இந்நிலையில் தீண்டாமைக்கு எதிராகச் சமர் புரிவது என்றும் ஆலயப் பிரவேசம் செய்வது என்றும் குருவாயூரில் நடந்த கூட்டத்தில் கேளப்பன் தீர்மானம் முன்மொழிந்தார். மேல் சாதியினர் இதனால் கோபமடைவார்கள் என்றாலும் இதில் பெருமகிழ்ச்சியடைந்தார் ஏ.கே.ஜி. அந்த ஆலயப் பிரவேசத்துக்கான சத்தியாகிரகக்குழுத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது ஓர் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காத ஒரு தெருவில் நுழைந்து செல்வது என்று முடிவெடுத்து அவரும் கேரளீயனும் மக்களுடன் நுழைந்தனர். அப்போது மேல்சாதியினர் உலக்கை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து தாக்கத் தொடங்கினர். பெண்களைப் போகச் சொன்ன ஏ.கே.ஜியும் கேரளீயனும் நின்று அடிகளை வாங்கிக் கொண்டனர். அரசியலில் அவர் வாங்கிய முதல் அடி அதுதான். அதைத் தொடர்ந்து அந்த வழி அனைவருக்கும் திறந்து விடப்பட்டது.
குருவாயூர் சத்தியாகிரகத்துக்கு தயாரிப்பு தொடங்கப்பட்டது. வைதீகர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பல கதர்சட்டைக்காரர்களின் சாயம் இதில் வெளுத்தது. விடுதலைப் போராட்டத்தையும், காங்கிரசையும் எதிர்க்கத் தொடங்கினர். ஆனால் தம் முன்னோர் பயிரிட்டு வளர்த்த மூடப் பழக்கங்களை எதிர்த்த நம்பூதிரி இளைஞர்களோ ஆனந்தக் கூத்தாடினர். நடுங்கிப் போனது பிரிட்டிஷ்.
நவம்பர் 1 சத்தியாகிரகம் தொடங்கிய நாள். பிராமணர்கள் உட்படப் பலர் இதனை வரவேற்று தீண்டாமை இருளை அகற்ற விளக்கேற்றினர். அங்கு பாரதீயனின் பாகவத பாராயணம், வைசிரவணத்து நம்பூதிரி உள்ளிட்டோரின் நகைச்சுவை ததும்பும் பேச்சுகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடத் தொடங்கினர். நல்ல மனம் படைத்தோர் சத்தியாகிரகிகளின் துயர் கண்டு தாமும் துயருற்றனர். கேரளத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து சேரத் தொடங்கினர். இயக்கம் நாடெங்கும் எதிரொலித்தது. கோவில் சொந்தக்காரரான சாமூதிரி ராஜா அசையவேயில்லை.
இதற்கிடையில் தேசிய இயக்கத்தை நசுக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கிய பிரிட்டிஷ் அரசு 1932, ஜனவரி நான்காம் நாள் அன்று அனைத்து மக்கள் உரிமைகளையும் பறித்தது. யாரையும் சிறையில் அடைக்கலாம், சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம்.
அன்றிரவு 12 மணிக்கு ஏ.கே.ஜி கைது செய்யப்பட்டார். எனினும் ஆலயப் பிரவேசப் போராட்டம் தடை செய்யப்படவில்லை. ஏ.கே.ஜிக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு கண்ணூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த முறை அவருடன் சிறையில் இருந்தவர்கள் புரட்சிக்காரர்கள். அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவது அவர்களது முறை. எந்தத் தியாகத்துக்கும் தயார். ஏ.கே.ஜிதான் தலைவன் என்று நினைத்த அதிகாரிகள் அவரைக் குறி வைத்துத் தாக்கினர். ஏ.கே.ஜியை சித்ரவதை செய்ய முடிவெடுத்த அதிகாரிகள் தினமும் கைதிகள் 50 தேங்காய்களை மட்டை உரித்து கயிறு தயாரிக்க வேண்டுமென்று சட்டம் போட்டனர். மிகவும் கஷ்டப்பட்டு அதைச் செய்தனர் கைதிகள். சிறிது சிறிதாக கைதிகளின் எண்ணிக்கை பெருகவும், எதிர்ப்பைத் தொடங்கினார்கள். வேலை செய்ய மறுத்தனர். எதிர்த்துப் போராடி சில வெற்றிகளையும் பெற்றனர். எனினும் சிறை வாச காலத்தை வீணாக்குவதில்லை என்று முடிவெடுத்தவர்கள் அதை செயல்படுத்தத் தொடங்கினர்.
(தொடரும்)