சிறைவாசத்தை வீணாக்கக்கூடாது என்று முடிவெடுத்த ஏ.கே.ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்தி வகுப்பு, அரசியல் விவாதம், ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட மாறுதல்கள் எனப் பலவற்றையும் விவாதிக்கலானார்கள். இலக்கியத் துறையிலும் ஆர்வம் செலுத்திப் படிக்கத் தொடங்கினார்கள். வங்கத்தைச் சேர்ந்த சில புரட்சியாளர்களும் பகத்சிங்கின் தோழர் திவாரியும் அச்சிறையில் இருந்தனர். அவர்களையும் தொடர்பு கொண்டனர். அதனால் ஏ.கே.ஜிக்கு பயங்கரவாத இயக்கத்தில் ஒரு பற்று ஏற்படத் தொடங்கியது.
பிற்காலத்தில் ஏ.கே.ஜியை கம்யூனிஸ்டாக்கியவர்களில் இரண்டாமவரான (முதல் இடம் இஎம்எஸ்சுக்கு) தோழர் கிருஷ்ணபிள்ளை அங்கிருந்தார். சிறைக் கைதிகளிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட அதிகாரிகள் இனிப் பொறுக்க முடியாது என்று முடிவெடுத்து ஒருநாள் அனைவரையும் சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கினர். கடுமையான தாக்குதலை ஏ.கே.ஜி சந்தித்தார். அறைக்குள் போட்டுப் பூட்டிய ஏ.கே.ஜி. ஆத்திரம் தாங்காமல் திட்ட, மீண்டும் அறைக்குள் வந்து கடுமையாகத் தாக்கினர். அவர்கள் மிகவும் கிண்டல் செய்த ‘வண்டி வார்டர்’ என்று அழைக்கப்பட்ட்வர் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு ஓடி வந்து, தனது ஆத்திரத்தையும் தீர்த்துக் கொண்டார்.
தலைவர்கள் உணர்வற்றுக் கிடக்க, வெளியே இதைக் கேள்விப்பட்ட மக்கள் குவிந்துவிட்டனர். அதிகாரிகள் மிரண்டு உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்த தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். சில சலுகைகளும் வாக்குறுதிகளும் கொடுத்து சமரசம் செய்தார்.
ஏ.கே.ஜிதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம் என்று நினைத்த அரசு அவரைக் கடலூர் சிறைக்கு மாற்றி உத்தரவிட்டது. அங்கு மனநோயாளிகள் இருந்த கொட்டடிக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு சாப்பிடவும் முடியாமல் தூங்கவும் முடியாமல் மிகுந்த மனவேதனை அடைந்தார் ஏ.கே.ஜி. ஆறு நாள் உண்ணாவிரதத்துக்குப் பின் அவருக்குத் தனியறை கொடுக்கப்பட்டது. என்றாலும், அந்த வேதனையை அவர் பார்த்துக் கொண்டே மூன்று மாதம் இருந்ததால் அங்கிருந்து வெளியே வரும்போது முப்பது பவுண்டை இழந்திருந்தார்.
வெளியே வந்தபோது உடலெங்கும் காயங்கள். மனவேதனையுடன் இருந்தவருக்கு ஓய்வு தேவை எனப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஏற்கவில்லை ஏ.கே.ஜி. கண்ணூருக்கு அருகில் வருணச்சேரி என்ற ஊரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற இருந்தது. போலீஸ் சுற்றி வளைத்து ஒருவரையும் அனுமதிக்க மறுத்தது. மாநாட்டின் தலைவர் இன்ஸ்பெக்டர் வேடம் அணிந்து பதறாமல் உள்ளே வந்துவிட்டார். பிறகு அதைக் கழற்றி எறிந்துவிட்டு கதர் அணிந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். அதேபோல் வளபட்டினம் என்ற ஊரில் மீனவராக வேடம் பூண்டு ஏ.கே.ஜி உள்ளிட்டோர் உள்ளே நுழைந்துவிட்டனர். இதைத் தெரிந்து கொண்ட போலீஸ் அனைவரையும் கைது செய்து லாக்கப்பில் கடுமையாகத் தாக்கி அனுப்பியது.
பெரளச்சேரியில் ஒரு மாநாட்டை நடத்த முயன்றபோது சொந்த ஊருக்குள் நுழையக்கூடாது என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. அவர் அருகிலிருந்து ஊரில் இருந்து பணியாற்ற வேண்டி வந்தது. வீரமிக்க ஒரு முதிய பெண்மணி தலைமையில் நடந்த மாநாட்டில் தாக்குதல் தொடுத்தது போலீஸ். ஆவேசமான ஏ.கே.ஜி. ஊருக்குள் சென்று இளைஞர்களைத் திரட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டார். மிரண்டு போன போலீஸ் பின்வாங்கியது. மாநாடு வெற்றிகரமாக நடந்தது.
மீண்டும் குருவாயூர் சென்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் ஏ.கே.ஜி. எனினும் எந்த மாற்றமும் இல்லாததால் இயக்கம் சோர்வடைந்தது. இதை உடைக்க ஒருநாள் கிருஷ்ணபிள்ளை கோவிலுக்குள் புகுந்து பிராமணர்கள் மட்டுமே அடிக்க அனுமதிக்கப்பட்ட ஒரு மணியை அடித்தார். அவரைத் தாக்கினர் காவலர்கள். இது சிறிது உற்சாகம் கொடுத்தது. இதைத் தொடர்ந்து ஏ.கே.ஜி யோசனைப்படி தினமும் பஜனையாகச் சென்று கோவில் வாசலை அடைந்தனர் மக்கள். ஒருநாள் ஏ.கே.ஜி உள்ளே நுழைய முயல, காவலர்கள் அவரைக் கடுமையாக அடித்துவிட்டனர். உணவருந்தக்கூட முடியாத அளவு அவருக்குக் காயமேற்பட்டுவிட்டது. அப்போது அந்த ஊரில் இருந்த அவரது சகோதரர் பத்மனாபன் நம்பியார் ஆவேசமடைந்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்து தாக்கியவர்களைத் தாக்கத் தொடங்கினார். அவர்கள் பயந்து ஓடி கோவிலுக்குள் சென்று பூட்டிக் கொண்டு விட்டனர். கோவில் கதவை உடைக்க ஓடிய மக்களைச் சத்தியாகிரகத் தலைவர்கள் மிகவும் வேண்டித் தடுத்து நிறுத்தினர்.
ஏ.கே.ஜி.க்கு ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது கேளப்பன் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஆனால் காந்தி தலையிட்டு அதை நிறுத்திவிட்டார். பிறகு ஏ.கே.ஜி உள்ளிட்டோர் பாதயாத்திரை மேற்கொண்டு திருவாங்கூர் சுற்றுப்பிரயாணம் செய்து பல கூட்டங்கள் நடத்தினர். கண்ணூரில் மறியலை ஏ.கே.ஜி தீவீரப்படுத்த முனைந்தபோது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாள் கண்ணூர் சிறையிலும் பின்னர் பெல்லாரி சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு செக்கிழுக்கும் வேலையை அவருக்குக் கொடுத்தனர். அவரால் செய்ய முடியாததால் காலில் கோல் விலங்கைப் பூட்டி தண்டித்தனர். இரண்டு இரும்பு வளைகள். ஒவ்வொரு வளையுடனும் இணைக்கப்பட்ட பத்து பவுண்டு எடை கொண்ட இரும்புத் தடிகள். இவை இன்னொரு இரும்பு வளையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். எப்படிப்பட்ட சித்ரவதை! முதலில் கஷ்டப்பட்டாலும் அதையும் தமாஷாக எடுத்துக் கொண்டார் ஏ.கே.ஜி. பிறகு அவரைத் தனிமைச் சிறையில் வைத்தனர்.
உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஏ.கே.ஜி. அவரது உண்ணாவிரதத்தைக் குலைக்க சித்ரவதை செய்தனர். பத்தாவது நாள் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மயக்கமானார் ஏ.கே.ஜி. இவ்வாறு 12 நாள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு வேலூர் சிறைக்கு பி கைதியாக அனுப்பினர்.
இரண்டு மாதம் சிறையில் இருந்த ஏ.கே.ஜிக்குச் சத்தியாகிரகத்தில் நம்பிக்கை குறையத் தொடங்கியது. பொருளாதார முன்னேற்றமில்லாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைக்கு சாத்தியமில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. சட்ட மறுப்பு இயக்கமும் நிறுத்தப்பட்டுவிட்டது. தொழிலாளர் நிலையும், விவசாயிகள் நிலையும் ஏ.கே.ஜியைச் சிந்திக்க வைத்தன. சோஷலிசக் கருத்துகளுடன் அவருக்கு உணர்வுபூர்வமான ஒப்புதல் ஏற்பட்டுவிட்டது. மார்க்சியமே தேவை என்ற உணர்வு, நம்பிக்கை அவருக்கும் இளைஞர்களுக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டது. ரஷ்யாவில் ஏற்பட்ட முன்னேற்றம் அவர்களுக்கு உற்சாகமளித்து முதலாளித்துவத்தை நடுங்கச் செய்தது. 1934இல் காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உருவானது. தொழிலாளர், விவசாயிகள் நிலையை நெருங்கிக் கவனித்த ஏ.கே.ஜி. இதில் சேர்ந்து விட்டார். வர்க்கப் போராட்டம் அவரைக் கவர்ந்திழுத்தது.
1934 இறுதியில் கேரள காங்கிரசை மீண்டும் தொடங்கக் கூட்டப்பட்ட கூட்டத்தில் தற்காலிகக் கமிட்டி தலைவராக ஏ.கே.ஜி தேர்வு செய்யப்பட்டார். கையில் எந்தக் காசும் கிடையாது. நிறைய சுற்றுப்பயணம் செய்து உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தார் ஏ.கே.ஜி. காரணம் அவர்கள் தொழிலாளர், விவசாயிகளிடையே இயக்கத்தைக் கொண்டு சேர்த்ததே என்பதை அறிந்து கொண்டனர்.
சோஷலிஸ்டு கட்சி வேலையைத் தொடங்கி தொழிற்சங்கங்களை அமைக்கத் தொடங்கியது. தொழிலாளர்களிடையே வேலை செய்யத் தொடங்கிய ஏ.கே.ஜிக்கு அவர்கள் மார்க்சிய நடைமுறையைக் கற்றுக் கொடுத்தனர். பிறகு நடந்த விவசாய, தொழிலாளர் போராட்டங்கள் அவரை மார்க்சியவாதியாக்கின. பல படிப்பினைகளை அவர் பெற்றார். எனினும் கதர்ச்சட்டையைத் தொழிலாளர்கள் வெறுத்ததை அவரால் காண முடிந்தது. தொழிலாளர்களைத் திரட்டவும் வேலைநிறுத்தங்கள் செய்யவும் கடும் உழைப்பில் இறங்கினார் ஏ.கே.ஜி. இரண்டு மணி நேரம்தான் ஓய்வு அவருக்குக் கிடைத்தது. அவர்களுடன் ஒருவராகத் தங்கி, உண்டு அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் ஏ.கே.ஜி. கிழிந்த பாயும் கைத்தலையணையும் அவருக்கு விருப்பமானதாயின. அதைக் கண்ட தொழிலாளர்கள் அவர்மீது மிகுந்த அன்பு செலுத்தலாயினர். பல வேலைநிறுத்தங்களுக்கும் போராட்டங்களுக்கும் ஏ.கே.ஜி தலைமையேற்று நடத்தினார்.
காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி பலமடைவதைக் கண்ட கேரள காங்கிரஸ்காரர்களுக்குப் பயம் ஏற்பட்டது. சோஷலிஸ்டுகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்யத் தொடங்கினர் அவர்கள். எனினும் சோஷலிஸ்ட் கட்சியின் வேலைகளால் மக்கள் உற்சாகமடைந்து காங்கிரஸ் பக்கம் வரத் தொடங்கினர். அரசியல் சுதந்திரம் பெற வேண்டுமென்ற சிந்தனை மக்களுக்கு ஏற்படத் தொடங்கியது. அமைப்பு ரீதியாக மக்கள் திரளத் தொடங்கினர். கட்சி அமைப்பு பற்றி மக்களிடம் சென்று அவர்களிடம் கற்று அவர்களைத் திரட்ட வேண்டுமென்று ஸ்டாலின் கூறியது உண்மை என்பது ஏ.கே.ஜிக்குப் புரிந்தது.
நிலப்பிரபுத்துவம் ஒழிக, முதலாளித்துவம் ஒழிக என்ற கோஷங்கள் எங்கும் எழத் தொடங்கியது முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மட்டுமல்ல, காங்கிரசாரையும் சங்கடப்படுத்தியது. ரஷ்யாவில் பெண்களையும் பொதுச்சொத்தாக்கி வைத்திருப்பதாகக் கூசாமல் பொய்ப்பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
வேலையில்லாப் பட்டாளம் மிகுந்த துன்பத்தில் இருந்தது. அவர்களைத் திரட்டி சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டது. வேலை கேட்டுப் பாதயாத்திரைகள் நடத்தப்பட்டன. ஏ.கே.ஜி தலைமையில் ஒரு பட்டினி ஊர்வலம் சென்னைக்குக் கால்நடையாகக் கிளம்பியது. வேறு வகையில் இது சோஷலிசத்துக்கான பிரசாரம் என்பதை அரசு புரிந்து கொண்டது. வழியெங்கும் மக்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். போலீஸ் ஊர்வலத்தின் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. நடுவில் விளையாட நினைத்த ஊர்வலத்தினர் திடீரென ஒரு காட்டுக்குள் சிதறி ஓடி விட்டனர். போலீஸ் பீதியுற்றது. அவர்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர். எல்லோரும் திரும்பி விட, போலீஸ் ஏமாற்றமடைந்தது. போலீசும் காங்கிரசும் பல இடங்களில் எதிர்ப் பிரசாரமும் செய்தனர்.
சென்னையை அடைந்த ஊர்வலத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 250 மைல் கால்நடைப் பயணம். 500 பொதுக்கூட்டங்கள், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சந்திப்பு, 500 ரூபாய் சாதாரண மக்களிடமிருந்து நன்கொடை என இந்த ஊர்வலம் சாதித்தது ஏராளம்.
அடுத்தடுத்து பட்டினி ஊர்வலங்கள் நடத்த, விழித்துக்கொண்ட அரசு கே.பி.ஆர்.கோபாலன், கேரளீயன், ஏ.கே.ஜி. ஆகியோரைக் கைது செய்து ஒன்பது மாதம் தண்டனை விதித்து சிறையில் அடைத்தது. சிறு அறையில் அடைக்கப்பட்டார் ஏ.கே.ஜி. கடும் சூழலிலும் நிறையப் படித்துக் குறிப்புகள் எடுத்தார். சோஷலிஸ்டு கட்சியின் போதாமையை உணர்ந்து மார்க்சிய வழியில் செல்லும் உறுதி அப்போது அவருக்கு உண்டானது. இதற்கிடையில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றியடைந்ததும், தண்டனைக் காலம் முடியும் முன்பே அவர் விடுதலையானார். முன்பு காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த ஏ.கே.ஜி மீண்டும் அதில் சேர்ந்து வேலை செய்ய முடிவு செய்தார்.
இந்தச் சூழலால் உத்வேகம் பெற்றுப் பல தொழிலாளர், விவசாய சங்கங்கள் உருவாயின. முதலாளிகளின் அடக்குமுறைகளை எதிர்த்துப் பல வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. பலவற்றில் ஏ.கே.ஜி. பங்கேற்றார். நிதி வசூல், தொண்டர்களைத் தயார் செய்வது, வேலை நிர்ணயம் எனப் பல வேலைகளை முன்னெடுத்துச் செய்வார். பல சமயங்களில் சாப்பிடக்கூட நேரமிருக்காது. தூக்கம் இருக்காது. இப்போராட்டங்கள் வலுப்பெற்றபோது காங்கிரசின் சாயம் வெளுக்கத் தொடங்கியது. அவர்கள் தொழிலாளர்கள்மீது துப்பாக்கிச் சூடு உட்பட தாக்குதல்களை நடத்தினர். எனவே தொழிலாளர் அரசின் கீழ்தான் தொழிலாளர் நலன் காக்கப்படும் என்ற விழிப்புணர்வு அவர்களிடையே ஏற்படத் தொடங்கியது. முதலாளிகளும், நிலப்பிரபுக்களும், போலீசும் அவர்களை அசைக்க முடியவில்லை.
1938, டிசம்பர் 18 ஆம் தேதி ஏ.கே.ஜி. தலைமையில் கிளம்பிய செஞ்சட்டைப் பேரணியும் அதன்பிறகு நடந்த சம்மேளனமும் தொழிலாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தின. இப்போது அவர்களை ஒடுக்கும் முயற்சிகளை எடுத்த அரசு அவர்கள்மீது ஏராளமான பொய்க் குற்றச்சாட்டுகளைப் புனைந்து சிறையில் அடைக்கவும் தாக்கவும் தொடங்கியது. மக்களும் தொழிலாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு உதவினர். ஏ.கே.ஜி ஆங்காங்கு சென்று மக்களுக்கு உற்சாகமூட்டினார். அவர்மீதும் பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டது. இரண்டு மாத தண்டனையும் விதிக்கப்பட்டது.
மக்களிடமிருந்து கற்ற ஏ.கே.ஜி இரவுப் பள்ளிகளை அமைத்து, நூல் நிலையங்கள் அமைத்து கற்பிக்கத் தொடங்கினார். கலைப் பிரசாரம்மூலம் பலரது குடிப்பழக்கத்தை ஒழித்தார். தொழிற்சங்கம் விவசாயிகளுக்காகப் பல இலக்கியங்களை உருவாக்கியது.
(தொடரும்)