Skip to content
Home » தோழர்கள் #46 – சிறை, தண்டனை, ஒடுக்குமுறை

தோழர்கள் #46 – சிறை, தண்டனை, ஒடுக்குமுறை

ஏ.கே.கோபாலன்

1936-37இல் சமஸ்தானங்களில் இருந்த மக்கள் அரசியலில் குதித்தனர். கேரளாவில் திருவாங்கூர் சமஸ்தானப் போராட்டத்தில் கலந்துகொள்ள ஏ.கே.ஜியை அனுப்ப காங்கிரஸ் முடிவெடுத்தது. திருவாங்கூரில் கொடும் அடக்குமுறை மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இது ஏ.கே.ஜியைக் கடுங்கோபமடையச் செய்திருந்தது. கோழிக்கோட்டில் அவர் செல்லும் பாதயாத்திரைக்கு வழியனுப்பப் பெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று அவரது குழு கிளம்பியது. வழியெங்கும் வரவேற்புகள். ஏராளமான மக்கள் கூடி வரவேற்பளித்தனர். ஆலவாயில் கடும் தாக்குதலை எதிர்பார்த்து உடனிருந்தவர்களையும் மக்களையும் எச்சரித்தார் ஏ.கே.ஜி. மக்களின் எழுச்சி அவரை உற்சாகமடையச் செய்தது.

திருவாங்கூரில் அக்குழுவுக்கு எதிராக போலீஸ் தயாராக நின்றது. ஒட்டுமொத்தமாக நுழைய முடியாததால் தனித்தனியாக நுழையக் கட்டளையிட்டார் ஏ.கே.ஜி. அவர்கள்மீது தாக்குதல் தொடுப்பது தற்கொலைக்குச் சமம் என்பதை அறிந்திருந்த திவான் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். உள்ளே நுழைந்துவிட்ட ஏ.கே.ஜியும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மக்கள் சட்ட மீறலில் ஈடுபடத்தொடங்கினர். ஏ.கே.ஜிக்கு எட்டு மாதம் சிறைத்தண்டனை.

கோட்டயத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட ஏ.கே.ஜி அசுத்தமான நிலையை எதிர்த்தார், தாக்கப்பட்டார். மக்கள் எதிர்த்து அவரை வைக்கத்துக்குக் கொண்டு சென்றனர். உண்ணாவிரதம் தொடங்கினார் ஏ.கே.ஜி. அவர் இறந்ததாகச் செய்தி பரவியதும், மக்கள் கூடிவிட்டனர். ஏ.எஸ்.பி. அவரிடம் வந்து வெளியே கூடியிருக்கும் மக்களை அமைதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அவர் ஏற்கவில்லை. ஆனால் கே.ஆர். நாராயணன் போன்ற தலைவர்கள் கேட்டுக் கொண்டதும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் ஏ.கே.ஜி.

சமஸ்தான ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்சம் பேர் ஊர்வலம் செல்ல முடிவெடுத்ததும், நடுங்கிப் போன அரசு தலைவர்களை விடுவித்தது. ஏ.கே.ஜி உடல்நலம் குன்றியிருந்தார். சில நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பிரசாரம் சென்றார். மாணவர் போராட்டமும் தொழிலாளர் போராட்டமும் பல இடங்களில் வெடித்தன. போலீஸ் சவக்கோட்டை பாலத்துக்கருகில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்தனர். கடைசியில் உடன்பாடு ஏற்பட்டு வேலைநிறுத்தங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. கேரளா முழுதும் அறிமுகம் செய்து கொண்டார் ஏ.கே.ஜி. தமிழகத்தின் தொழிலாளர் தலைவர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. அது பிற்காலத்தில் தமிழ்நாட்டில் செயல்பட அவருக்கு உதவியது.

பிரபாதம் என்ற கட்சிப் பத்திரிகை தொடங்கப்பட்டு அதன் மேலாளராகப் பொறுப்பேற்ற ஏ.கே.ஜி நிதி திரட்டப் பெரும் சிரமப்பட்டார். இந்தியா மட்டுமின்றி இலங்கை சென்றும் நிதி திரட்டினார். அப்போதே இந்தியர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே கலவர நிலை இருப்பதை ஏ.கே.ஜி உணர்ந்தார். பின்னால் அது பெரும் ஆபத்தாக இருக்கும், அதை வளர விடக்கூடாது என்று பத்திரிகைகளில் எழுதினார். அப்போது போலீஸ் கமிஷனர் ஏ.கே.ஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நிலைமை தாற்காலிகமாகக் கட்டுக்குள் வந்தது. பின்னார் இப்போது வரை நிகழ்ந்தது வரலாறு.

மக்கள் பிரச்னையைத் தீர்க்க ஒருவருக்கொருவர் தூண்டிவிட்டு மோதவிடக் கூடாது, இணைந்து போராட வேண்டுமென்று வலியுறுத்தினார் ஏ.கே.ஜி. அதற்கு காங்கிரஸ் ஆதரவையும் தெரிவித்தார். அவரது வலியுறுத்தலால் இலங்கை இந்திய காங்கிரஸ் உருவானது. சிங்களத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரும் ஒற்றுமை தேவை என்பதைப் புரிந்துகொண்டனர். முழுதும் நிதி திரட்ட முடியாவிட்டாலும் ஓர் அடித்தளத்தைப் போட்டார் ஏ.கே.ஜி.

அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கு மலையாளிகளிடையே நிதியும் சந்தாவும் திரட்டினார். போலீஸ் அவரைத் தொடர்ந்து மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது. மெதுவாக அர்சியல் பிரசாரத்திலும் ஈடுபடத் தொடங்கினார் ஏ.கே.ஜி. தொழிலாளர்களோ தாமே நிதி திரட்டி அவரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது அன்பைச் சொரிந்தனர். அவர்களது வர்க்க உணர்வைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தார் ஏ.கே.ஜி. ஒரு இடத்தில் பாகவதர் வேடம் பூண்டு தொழிலாளர்களைச் சந்தித்தும் நிதி பெற்றார்.

அப்போது சீனர் இந்தியர் சேர்ந்த யூத் லீகின் ஆண்டு மாநாட்டில் தலைமை தாங்க அழைக்கப்பட்டு அங்கு சென்ற ஏ.கே.ஜி, போலீஸ், ராணுவத்தினர் உட்பட அங்கு பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடிக்கு தாழ்ந்து வணக்கம் செலுத்துவதைக் கண்டு புல்லரித்துப் போனார். பாசிசத்தைக் கண்டித்து சிறப்பான உரையொன்றை அங்கு ஆற்றினார்.

உலக யுத்தம் வெடித்ததும், அவரை வெளியேறுமாறு உத்தரவிட்டது மலேயா. வேறு வழியின்றி ரங்கூன் வழியாக இந்தியா திரும்ப முடிவெடுத்தார். அங்கும் பல கூட்டங்களில் கலந்து கொண்டார். அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் இருந்த ‘தக்கின்ஸ் பார்ட்டி’ என்ற புரட்சிக் கட்சியுடன் அறிமுகமானார். 8 மாத காலப் பயணத்துக்குப் பின் இந்தியா திரும்பினார் ஏ.கே.ஜி.

யுத்த எதிர்ப்பைக் கையிலெடுத்தனர் கம்யூனிஸ்டுகள். இரண்டும் கெட்டான் சோஷலிஸ்டுகளோ கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான நிலையெடுத்தனர். ஏ.கே.ஜி போன்றவர்கள் கம்யூனிசத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். கேரளாவில் பினராயியில் நடைபெற்ற கட்சி ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்ட இ.எம்.எஸ்., கிருஷ்ணபிள்ளை, ஏ.கே.ஜி போன்றோர் கேரள சோஷலிஸ்ட் கிளையை கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையாக மாற்றுவதென்று முடிவெடுத்தனர். சிலர் தலைமறைவாகச் செயல்பட வேண்டுமென்று கட்சி முடிவெடுத்தது. ஏ.கே.ஜி மேல் வழக்குகள் இருந்ததால் அவரைத் தமிழ்நாட்டுக்குச் சென்று கட்சிப் பணியாற்றுமாறு பணித்தது கட்சி.

புகழ்பெற்ற பொன்மலைத் தொழிலாளர் சங்கத்தில் முதலில் பணியாற்றிய ஏ.கே.ஜி பிறருடன் சேர்ந்து அதனைப் புடம் போட்டார். அந்தத் தொழிற்சங்கத்தையே ஒரு புரட்சி ஸ்தாபனமாக உருவாக்கினார்கள் அவர்கள். திருச்சியில் பல அரசியல் வகுப்புகளை நடத்தினார் ஏ.கே.ஜி. மதுரையில் திருப்பரங்குன்றத்தில் வகுப்பு நடந்தபோது, போலீஸ் சுற்றி வளைக்க, அங்கிருந்து தப்பி தலைமறைவானார் ஏ.கே.ஜி. அவருக்கு அதில் பழக்கமில்லை. கடுமையான தாக்குதல்களால் ஏற்கெனவே உடல்நலம் சீர்கெட்டிருந்தது. தலைமறைவு வாழ்க்கையில் எப்படிச் செயல்படுவது என்பதைக் கற்க அவருக்கு இரண்டு வருடங்களானது. அனுபவங்களும் தவறுகளும் அவருக்குக் கற்றுக் கொடுத்தன. எனினும் 1941 மார்ச் மாதம் 24ஆம் தேதி அவர் கைதானார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார் ஏ.கே.ஜி.

வேலூர் சிறையில் சில நாட்கள் இருந்தார். அங்கு கைதிகளைப் பிரித்து வைக்க அரசு உத்தரவு வந்தவுடன் அதை எதிர்த்து அவர்கள் உண்ணாவிரதத்தில் குதித்தனர். மக்கள் வெளியில் ஆதரவு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். 15ஆம் நாள் மயக்கமடைந்த ஏ.கே.ஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 18 நாள் கழித்து உண்ணாவிரதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அச்சமயம் அவர்மீது இருந்த வழக்கில் அவருக்கு இரண்டு மாதம் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.

இதற்கிடையில் சோவியத்மீது நாஜி படையெடுப்பு, கய்யூர் சம்பவம் ஆகியவை ஏ.கே.ஜியை தப்பிச் செல்லத் தூண்டின. இரவு மழை கொட்டும் நேரத்தில் ஏ.கே.ஜி மற்ற கைதிகள் உதவியுடன் சுவர் ஏறிக் குதித்துத் தப்பிவிட்டார். முன்பு உடன் கைதியாக இருந்தவர் வீட்டுக்குச் சென்றனர் ஏ.கே.ஜியும், தப்பிய மற்றவர்களும். அவர் மகிழ்ச்சியுடன் உதவினார். எப்படியோ கேரளா வந்து சேர்ந்தார் ஏ.கே.ஜி. சில மாதங்கள் குஜராத்தில் ஆலையிலும் வேலை செய்தார்.

தேர்தல் வந்தபோது எப்படியோ உள்ளே நுழைந்த ஏ.கே.ஜியை ஈ.பி.கோபாலன் பல்லாண்டுகளாகத் தலைமறைவாக இருக்கும் ஏ.கே.ஜி. பேசுவார் என்று அறிவிக்க திடீரென்று தோன்றினார் அவர். அவர் பேசியவுடன் கைது செய்யப்பட்டாலும், இரு நாட்களில் விடுவிக்கப்பட்டார். கோழிக்கோட்டில் அமைந்திருந்த கட்சி அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்தார். அந்தக் கட்சி அலுவலகத்தைக் கட்ட இ.எம்.எஸ். தன் சொத்துக்களை விற்று 75000 பணம் கொடுத்திருந்தார். அது 1945ஆம் ஆண்டு. கூட்டங்களில் கலந்து கொண்ட ஏ.கே.ஜியை காங்கிரஸ் குண்டர்கள் கொலை செய்யக்கூட முயன்று தோற்றனர்.

1946 பிப்ரவரியில் பம்பாயில் நடைபெற்ற கப்பற்படை எழுச்சி இனி இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்காமல் இருக்க முடியாது என்ற நிர்ப்பந்தத்தை பிரிட்டிஷுக்கு ஏற்படுத்தியது. 1946இல் நாடெங்கும் நடந்த தொழிலாளர் போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கி நடத்தினர். பலர் கைதாயினர். பல தலைவர்கள் தலைமறைவாகினர். ஈ.எம்.எஸ், ஏ.கே.ஜி இருவரும் கைதானாலும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

1947இல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. கூடவே விடுதலையும் கிடைத்தது. பாலியம் என்னும் ஊரில் தீண்டாமையை எதிர்த்து சத்தியாகிரகம் நடந்து வந்தது. நம்பூதிரி பிராமணப் பெண்கள், மாணவிகள் அதில் குதித்தனர். ஏ.கே.ஜி கைதிலிருந்து தப்பிவிட்டார். அடுத்தநாள் தடையை மீறிய நம்பூதிரி பெண்கள்மீது கடும் தாக்குதலைத் தொடுத்தது போலீஸ். இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர். தோழர் வேலாயுதன் உயிரிழக்க, பின்னர் பாதை திறந்து விடப்பட்டது. இதற்குக் கட்சி பெரிய விலையைக் கொடுத்தது.

1947 விடுதலை நாளன்று ஏ.கே.ஜி சிறையில்தான் இருந்தார். நாடெங்கும் நடந்த கொண்டாட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. எனினும் அவர் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார். காலையில் அவர் மறைத்து வைத்திருந்த ஒரு தேசியக் கொடியுடன் வெளியே கிளம்பி அதை ஏற்றினார். கைதிகளிடையே பேசினார். ’சுதந்திர அரசு’ அவர்மீது ராஜதுரோக வழக்கைத் தொடுத்து நீதிபதி முன் நிறுத்தியது! என்ன ஒரு கேலிக்கூத்து!

மக்கள் இதை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கினர். உண்ணாவிரதம் இருந்த மூன்றாவது நாள் ஏ.கே.ஜிக்குக் காய்ச்சல் கண்டது. இறுதியில் அக்டோபர் 12ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார் ஏ.கே.ஜி. உடல்நலம் நலிவடைந்திருந்த ஏ.கே.ஜியைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார் தோழர் கிருஷ்ணபிள்ளை. சில நாட்களில் உடல்நலம் மீண்டு பணியில் இறங்கினார்.

டிசம்பர் 17 அன்று நடந்த கேலிக்கூத்து என்னவென்றால் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். காரணம் 1937லிலும் 1942இலும் சிறைவாசம் புரிந்திருந்தார். பிரிட்டிஷ் அரசை எதிர்த்துக் கலகம் செய்தார் என்று சுதந்திர அரசு குற்றம் சாட்டியது! கடுமையான சிறைச் சூழலில் 20 நாள் உண்ணாவிரதம். பின்னர் அவரைக் கோவை சிறைக்கு மாற்றியது அரசு. சில சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு 27ஆம் நாள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். எனினும் அவை மீறப்பட்டதால் 10 நாளில் மீண்டும் உண்ணாவிரதம். பத்து நாட்கள் நீடித்த அந்த உண்ணாவிரதத்துக்குப் பிறகு மீண்டும் பல சலுகைகளைப் பெற்றனர். தோழர் எம்.ஆர்.வி அங்கு அவருடன் இருந்தார்.

கடலூர் சிறைக்கு மீண்டும் மாற்றப்பட்டார் ஏ.கே.ஜி. அங்கு தாமஸ் என்பவரின் கொடுமையால் பலர் இறந்திருந்தனர். அவர் ஏ.கே.ஜி உள்ளிட்ட தோழர்கள்மீது தாக்குதல் தொடுத்தார். கைதிகள் கற்களைக் கொண்டு எதிர்த்தனர். துப்பாக்கிச் சூடு நடந்ததில் ஒரு தோழர் இறந்தார். பலர் காயமடைந்தனர். மீண்டும் உண்ணாவிரதம். இந்த முஐற 5 நாள். மீண்டும் தாக்குதல், துப்பாக்கிச்சூடு. எண்ணற்ற கம்யூனிஸ்ட் தோழர்கள் இந்தத் தாக்குதல்களில் உயிர்த்தியாகம் செய்தனர்.

விசாரணைக்கு தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஏ.கே.ஜி. ராவ் அண்ட் ரெட்டி வக்கீல் நிறுவனம் அவருக்காக வாதாடியது. இது சட்டவிரோதம் என்பது எடுத்துரைக்கப்பட்டது. தடுப்புக்காவல் சட்டம் 14 சட்டவிரோதம் என்று அறிவித்தது நீதிமன்றம்.

மீண்டும் கடலூர் சிறைக்கு வந்தார் ஏ.கே.ஜி. தம் உயிரைக் கொடுத்து அவரைக் காப்பாற்றிய ஆந்திரத் தோழர்களிடம் தெலுங்கு கற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்து விடுதலை பெற்றார். உயர்நீதிமன்றம் அவரைத் தொடக்கூடாது என்று கடுமையாக போலீசை எச்சரித்ததால் அவரை அவர்கள் இம்முறை தொடவில்லை.

1947 டிசம்பரிலிருந்து 1951 வரை சிறைப்பட்டு மீண்டார் ஏ.கே.ஜி. அவர் பெற்ற தீர்ப்பால் நாடு முழுதும் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *