Skip to content
Home » தோழர்கள் #47 – தொடரும் போராட்டங்கள்

தோழர்கள் #47 – தொடரும் போராட்டங்கள்

AK Gopalan

இந்தக் காலகட்டத்தில் கட்சி தடை செய்யப்பட்டு தலைவர்கள்மீதும், ஊழியர்கள்மீதும் கடுமையான அடக்குமுறை ஏவப்பட்டிருந்தது.  ஏராளமானோர் சிறைப்பட்டிருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் எவ்வாறு அசைக்கமுடியாத சக்தியாக இருக்கிறது என்பதற்கு ஏ.கே.ஜி. தனது சுயவரலாற்றில் ஒரு புள்ளி விவரத்தை அளிக்கிறார்:

‘இக்காலகட்டத்தில் (1931-51) மொத்தம் 1982 துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றன.  அவற்றில் 3784 பேர் உயிரிழந்தனர்.  10,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.  50,000 பேர்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர்.  82 தோழர்கள் சிறையிலேயே உயிர் நீத்தனர்.’

1951இல் ஏ.கே.ஜி வெளியே வந்தபோது காங்கிரஸ்மீது நம்பிக்கை மிகவும் குறைந்திருந்தது.  கம்யூனிஸ்ட் கட்சியில் ஆழமான குழப்பம் நீடித்தது.  ஏ.கே.ஜி தான் வெளிப்படையாக செயல்படுவது என்று முடிவெடுத்தார்.  ஏ.கே.ஜியின் முயற்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.  திரும்பவும் கட்சியைச் சுற்றி மக்கள் திரளத் தொடங்கினர்.  தேர்தலை ஒட்டி சுற்றுப் பிரயாணத்தில் இருந்த ஏ.கே.ஜியை போலீஸ் வட்டமிடத் தொடங்கியது.  அவரைக் கைது செய்துவிட முயன்றது.  எனினும் அவர் தப்பினார்.

அச்சயமயம் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் அவர் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.    1951 தேர்தலில் மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஏ.கே.ஜி. சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கம்யூனிஸ்ட் கட்சி நாட்டிலேயே இரண்டாவது கட்சியாக மலர்ந்தது.  1952இல் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஏ.கே.ஜி.  அங்கு கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயல்பட்டார்.  காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிமீது தொடர்ந்து புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருந்தது.  ஆனால் எதையும் நிரூபிக்க முடியாமல் அவமானப்பட்டது.

பாராளுமன்றம் தொடங்கி ஒன்றரை வருடத்துக்குள் சீனா, ரஷ்யா முதலிய நாடுகளுக்குச் சுற்றுப் பிரயாணம் மேற்கொண்டார் ஏ.கே.ஜி.  1952, செப்டம்பர் 10 அன்று தான் காதலித்த சுசீலாவை மணந்து கொண்டார்.  சுசீலாவின் அருகாமை அவருக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது.  சுசீலாவுக்கு அரசியல் பயிற்சி அளித்தார் ஏ.கே.ஜி.  சுசீலா இளம் மாணவி என்பதால் முதலில் மிகுந்த தயக்கம் கொண்டிருந்தார் ஏ.கே.ஜி.  எனினும் இருவரின் காதலும் வென்றது.  ஒன்பது ஆண்டுக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது.

மகிழ்வுடன் சீனா சென்ற ஏ.கே.ஜிக்கு அருமையான வரவேற்பு கிடைத்தது.  மாவோவுடன் விருந்தும் ஏற்பாடாகியிருந்தது.  அங்கு சமாதான மாநாட்டில் பங்கேற்றார் ஏகே.ஜி.  சீனாவையும் சுற்றிப் பார்த்தார்.

பின்னர் சோவியத் பயணம் மேற்கொண்டார்.  சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்றார்.  விருந்தில்  ஸ்டாலினுக்கு அடுத்த நான்காவது நாற்காலி அவருக்குக் கொடுக்கப்பட்டது.  ஸ்டாலின் ஏ.கே.ஜியை மீண்டும் சந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.  ஆனால் அவர் கிளம்புமுன்பே ஸ்டாலின் மரணமுற்றார்.  இதற்கிடையில் சோவியத் மருத்துவர்கள் ஏ.கே.ஜியைப் பரிசோதித்தனர்.  அவருக்கு அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டு சானடோரியத்தில் ஓய்வு பெறச் செய்தனர்.  அச்சமயம் நடைபெற்ற அக்டோபர் புரட்சி தினத்திலும் ஸ்டாலினுடன் பங்கேற்றார் ஏ.கே.ஜி.  சானடோரியம் திரும்பிய அவரை நிமோனியா நோய் தாக்கியது.  பல்லாண்டுகளாக உள்ளேயிருந்த நோய்கள் அவரைத் தாக்கத் தொடங்கின.  உயிர் ஊசலாடியது.  ஆனால் மிகுந்த சிரமம் எடுத்து சோவியத் மருத்துவர்கள் அவரைக் காப்பாற்றினர்.

அவர் அங்கிருக்கும்போதே உயிர் நீத்தார் ஸ்டாலின்.  மூன்று மருத்துவர்களுடன் அவரது இறுதி யாத்திரைக்குக் கலந்து கொள்ள ஏ.கே.ஜி பயணமானார்.  உடலின் அருகிலேயே அவர் அமர வைக்கப்பட்டார்.  சோவியத்தைப் பிரிய முடியாமல் பிரிவுத் துயருடன் எட்டு மாதம் கழித்து நாடு திரும்பினார் ஏ.கே.ஜி.

இந்தியாவில் மொழிவழி மாநிலங்களுக்கான போராட்டம் வலுத்திருந்தது.  அப்போது சுற்றுப் பிரயாணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் கலந்து கொண்டார் ஏ.கே.ஜி.  பொட்டி ஸ்ரீராமுலு தனி ஆந்திரக் கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.  வேறு வழியின்றி ஆந்திரம் பிரிக்கப்பட்டது.  ஐக்கிய கேரளத்துக்கான போராட்டம் வலுப்பெற்றது.  ஏ.கே.ஜி அனைத்து மாநிலங்களிலும் இருந்த மலையாளிகளுடன் தொடர்பில் இருந்தார்.  பாராளுமன்றம் அமைத்திருந்த மாநிலப் புனரமைப்புக் குழு தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது.  அதில் தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகியவை ஏற்கப்பட்டிருந்தன.  குஜராத், மகாராஷ்டிரா ஏற்கப்படவில்லை.  களநிலையை நேரடியாகப் பார்வையிட கட்சி ஏ.கே.ஜி.யைப் பணித்தது.  எங்கும் கலவரமும் துப்பாக்கிச் சூடும் உயிரிழப்புமாக இருந்தது.  ஊரடங்கை மீறி மக்கள் தலைவர்களை வரவேற்றனர்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும், மீண்டும் கைது செய்யப்பட்டு சபர்மதி சிறைக்கு அனுப்பப்பட்டார் ஏ.கே.ஜி.  அங்கு தூக்குத் தண்டனைக் கைதிகளுடன் வைக்கப்பட்டார்.  காங்கிரஸ் சார்பாக குஜராத் வந்த மொரார்ஜி தேசாய் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார்.  போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை வேண்டும் என்று உண்ணாவிரதம் தொடங்கினார் ஏ.கே.ஜி.  ஆறு நாட்களுக்குப் பிறகு அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது.  நீதிமன்றத்தில் ஏ.கே.ஜியை விடுவிக்கக் கோரி மக்கள் அலைகடலெனத் திரண்டனர்.  போலீஸ் திணறியது.  பின்னர் நடந்த விசாரணையில் ஏ.கே.ஜி விடுவிக்கப்பட்டார்.

மீண்டும் தேர்தல் வந்தபோது காசர்கோட்டில் போட்டியிட்ட ஏ.கே.ஜி.யை மிகவும் கீழ்த்தரமான முறையில் தோற்கடிக்க முயன்றது காங்கிரஸ்.  ஆனால் அவர்களது மனக்கோட்டையைத் தவிடுபொடியாக்கி அவர் வென்றார்.  கேரளம் உலக நாடுகளின் கவனத்தைப் பெறலாயிற்று.

மீண்டும் ஒரு நீண்ட அயல்நாட்டுப் பயணம் மேற்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று திரும்பினார் ஏ.கே.ஜி.  அப்போது உடல் நலிவுற்ற ஏ.கே.ஜியை கட்சி சிகிச்சைக்காக சோவியத் அனுப்பியது.  முதல்முறையாகத் திருமணத்துக்குப் பிறகு சில நாட்கள் மனைவி, மகளுடன் சேர்ந்திருக்கும் வாய்ப்பு ஏ.கே.ஜிக்குக் கிடைத்தது.

நாடு திரும்பிய ஏ.கே.ஜி பஞ்சாபில் நடைபெற்ற அபிவிருத்தி வரிக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள அங்கேயே சென்றார்.  கடும் அடக்குமுறையை எதிர்கொண்டிருந்த விவசாயிகள் அவரும் தலைவர்களும் அங்கேயே தங்கி தலைமை தாங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்க, அங்கேயே தங்கினார்.  அப்போராட்டம் வென்றது.

அக்காலத்தில் கேரளத்தில் இஎம்எஸ் தலைமையில் ஏற்பட்டிருந்த கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக முதல் நாளிலிருந்தே கடும் தாக்குதலைத் தொடுத்தது காங்கிரஸ்.  ‘விமோசன சமரம்’ என்ற பெயரில் போராட்டத்தில் இறங்கியது.  கல்வி நிலையங்களுக்குத் தீ வைத்து எரிப்பது, குழந்தைகள்மீது கல் வீசுவது என அவர்களது பைத்தியக்காரப் போராட்டம் 58 நாட்கள் தொடர்ந்தது.  காங்கிரசின் ஜனநாயக முகமூடி கிழிந்தது.  26 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டாலும், இக்காலத்தில் நிலச்சீர்திருத்தம் உட்படப் பல முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்தது கம்யூனிஸ்ட் ஆட்சி.

அச்சமயம் அமராவதியில் நடைபெற்ற ஏ.கே.ஜி.யின் உண்ணாவிரதப் போராட்டம் அவரது அரசியல் வாழ்வில் முக்கியமான ஒன்று.  ஐயப்பன் கோவிலுக்கருகே விவசாயம் செய்த 7000 விவசாயிகளை ஆயுதமேந்திய போலீசைக் கொண்டு வெளியேற்றியது.  குடிசைகளைத் தீக்கரையாக்கியது காங்கிரஸ் ஆட்சி.   அங்கிருந்து அமராவதி வனத்துக்கு அவர்கள் கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களுக்காகப் போராடுவோம் என்று நிதி வசூலித்த விமோசன சமரத் தலைவர்கள் தலைமறைவாகி விட்டனர்.  இதை அறிந்த ஏ.கே.ஜி. தாமே நேரடியாக அமராவதி சென்றார்.  அங்கு அவர்கள் நிலை கண்டு மனம் நொந்தார்.  அவர்களது பிரச்சனையைத் தீர்க்க அமராவதியில் உண்ணாவிரதம் மேற்கொள்ளத் தீர்மானித்தார் ஏ.கே.ஜி.

இ.எம்.எஸ்சுடன் கொட்டும் மழையில் அமராவதி சென்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.  கடும் மழை, குளிர்காற்று வாட்டும் நிலையில் உண்ணாவிரதம்.  சாதி, மதம், இனம் என அனைத்தும் மக்களிடமிருந்து அங்கு காணாமல் போய்விட்டது.  மக்கள் தம் தலைவனிடம் குவியத் தொடங்கினர்.  கைது செய்ய வந்த போலீசை விரட்டினர் மக்கள்.  ஆனால் காலையில் தற்கொலை முயற்சி எனக் கைது செய்துவிட்டனர்.  ஒன்பதாவது நாளில் மருத்துவமனையில் ஊசி போட்டு அவரைக் காப்பாற்றினர். பதினோராவது நாள் அவர் மீண்டும் நினைவிழந்தார்.  மீண்டும் காப்பாற்றப்பட்டார்.  எனினும் அந்த விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராமல் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இல்லை.  நாடெங்கும் கிளர்ச்சி நடைபெற்று வந்தது.  ஜூன் 17ஆம் தேதிதான் ஒப்பந்தம் ஏற்பட்டு அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

அடுத்து கேரள கம்யூனிஸ்ட் சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு அவரது தலைமையில் ஒரு பாதயாத்திரை நடைபெற்றது.  ஊர்வலத்துக்குப் பெரும் வரவேற்புக் கிடைத்தது.  மாநிலம் முழுவதும் நிலச்சீர்திருத்தத்தைக் கோரி விவசாயிகள் போராடத் தொடங்கினர்.  அடுத்து கீரித்தோடு-சுருளி விவசாயிகளின் பயிர்கள் அழிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து அவரது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  எனினும் அது வெற்றி பெறவில்லை.  இன்றளவும் விவசாயிகள் இந்த நிலையைத் தொடர்ந்து சந்திப்பதைக் காண்கிறோம்.

1962இலிருந்து உட்கட்சிப் போராட்டம் தீவீரமடைந்தது.  1964இல் ஏ.கே.ஜி உள்ளிட்ட 32 தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி சிபிஐ(எம்.) கட்சியைத் தோற்றுவித்தனர்.  ஜோதிபாசு தவிர அனைத்துத் தலைவர்களும் 14 மாதங்கள் சிறைப்பட்டனர்.

1967இல் நடைபெற்ற நான்காவது பொதுத்தேர்தலில் ஏ.கே.ஜி. காசர்கோட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1971இல் பாலக்காட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1974 ரயில்வே வேலைநிறுத்தத்தில் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்த ஏ.கே.ஜி. வெளியே வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். 1977 மார்ச் 24 அன்று உயிர்நீத்தார்.

அவரை உதாரணமாகக் கொண்டு பல கோடி மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *