மாநிலங்களவையில் பசவபுன்னையா மக்கள் பிரச்சனைகள்மீது முக்கியமான உரைகளை ஆற்றினார். நாடு சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துக் கட்சியின் நிலைபாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
1957ஆம் ஆண்டில் பசவபுன்னையா மீண்டும் சோவியத் நாட்டுக்குச் சென்றார். அங்கு நடைபெற்ற நவம்பர் புரட்சியின் 40வது ஆண்டு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூதுக்குழுவில் ஒருவராக அவர் கலந்து கொண்டார். அந்த விழா முடிந்தபின் உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு நடைபெற்றது. அதிலும் பசவபுன்னையா கலந்து கொண்டார். அந்த மாநாடானது ஏற்கனவே அங்கு நடைபெற்ற 12 கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரகடனத்தை ஏற்றுக் கொள்வதற்காகக் கூட்டப்பட்டது. அங்கே பசவபுன்னையாவும் பூபேஷ் குப்தாவும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவும் விவாதங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள விரும்புவதாக மாவோவிடம் தெரிவித்தனர். இந்த மாநாடு முடிந்ததும் சீனா வருமாறு அவர்களுக்கு மாவோ அழைப்பு விடுத்தார். அங்கு லியூ சோஷியுடன் விவாதிக்குமாறு கூறினார். அதன்படி பசவபுன்னையா சில காலம் கழித்து சீனா சென்று பல தலைவர்களுடன் விவாதித்தார்.
1953இல் மதுரையில் கூடிய மாநாட்டில் உட்கட்சி முரண்பாடு பெரிதாக வெடித்தது. வர்க்க சமரசக் கொள்கை முறியடிக்கப்பட்டாலும் மீண்டும், மீண்டும் தலைதூக்கியது. 1961இல் கூடிய விஜயவாடா மாநாட்டிலும் இது வெடித்தாலும் பிளவு தவிர்க்கப்பட்டது. பசவபுன்னையா வர்க்கப் போராட்டம் என்ற நிலையில் உறுதியாக நின்றார்.
1962 சீன இந்தியப் போரின்போது பிளவு பெரிதானது. வர்க்க சமரசத்தை எதிர்த்த தலைவர்களை அரசு சிறையிலடைத்தது. 1964 ஏப்ரல் மாதத்தில் தில்லியில் நடைபெற்ற கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் சுந்தரய்யா, பசவபுன்னையா உள்ளிட்ட 32 தலைவர்கள் வெளிநடப்பு செய்து புதிய கட்சி தொடங்கும் முடிவை எடுத்தனர். அதன்படி புதிய கட்சித் திட்டத்திற்கான நகல் தீர்மானத்தை முன்மொழிந்து விளக்கம் பொறுப்பு பசவபுன்னையாவுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைச் சிறப்பாகச் செய்தார்.
கட்சியின் 7வது மாநாடு (சிபிஐ(எம்) இன் முதல் மாநாடு) அக்டோபர் 31ஆம் தேதி கல்கத்தாவில் தொடங்கி நவம்பர் 7 அன்று முடிவடைந்தது. பசவபுன்னையா அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய கட்சியை ஒழித்துவிட காங்கிரஸ் ஆட்சி கச்சை கட்டிக் கொண்டு களத்தில் இறங்கித் தலைவர்களைக் கைது செய்தது. பசவபுன்னையாவும் கைது செய்யப்பட்டு 1966 ஏப்ரல் மாதம் வரை சிறையில் இருந்தார்.
1967 தேர்தலில் காங்கிரஸ் பல மாநிலங்களில் தோல்வியடைந்தது. மேற்கு வங்கம், கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி வென்றது. பசவபுன்னையா ‘புதிய நிலைமையும் கட்சியின் கடமையும்’ என்ற தலைப்பில் ஓர் ஆவணத்தை உருவாக்கினார். அது கட்சி முழுவதற்கும் வழிகாட்டியாக விளங்கியது.
1967இல் மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அது கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாடு குறித்து ஒரு நகல் தீர்மானத்தை இறுதி செய்தது. அதில் பசவபுன்னையா முக்கியப் பங்காற்றினார். அந்தத் தீர்மானம் 1968இல் பர்துவானில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
1968 பர்துவான் மாநாட்டிலேயே ஒரு தீவீரவாதப் போக்கு தலைதூக்கியது. அதை பி.டி.ஆர்., பசவபுன்னையா ஆகியோர் எதிர்த்து முக்கியப் பங்காற்றினர். எனினும் இந்த அதிதீவீரவாதப் போக்கை ஆதரித்தவர்கள் 1969இல் வெளியேறி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியை உருவாக்கினர். இன்றுவரை அவர்களால் ஒரு முடிவுக்கு வர இயலாமல் பல பிரிவுகளாகப் பிரிந்து நிற்கின்றனர். பசவபுன்னையா அதற்கெதிராக ஒரு விரிவான தத்துவார்த்தப் போராட்டத்தை நிகழ்த்தி, பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பல கட்டுரைகள் எழுதினார்.
1975ஆம் ஆண்டில் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்ததும் நாடு முழுவதும் ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பசவபுன்னையாவும் அவர்களில் ஒருவர். பல மாதங்கள் அவர் அப்போது சிறையில் இருந்தார்.
பசவபுன்னையா இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவார்த்த ஆசிரியர்களில் ஒருவர். தத்துவார்த்த விஷயங்களில் மார்க்சிய ஒளியில் பல கட்டுரைகளை எழுதியவர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஆங்கிலத் தத்துவார்த்த ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் 15 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். தொடக்கத்தில் வாரா வாரம் ஒரு கட்டுரையை அதில் எழுதிவிடுவார்.
அது மட்டுமன்றி, அதே தத்துவார்த்த சிந்தனை அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று கருதினார். அது குறித்து விவாதிப்பதை விரும்புவார். எதிரில் இருப்பவர் முதியவரா, இளையவரா, அனுபவசாலியா என்றெல்லாம் பார்க்க மாட்டார். அனைவருடனும் சமமாக விவாதிப்பார். எதிர்கருத்து வந்தால் அது சரியாகவும் இருந்தால் அதை ஏற்றுக் கொள்வார்.
கட்டுரையை எழுதிவிட்டு, வாசகர்கள் அதற்கு எதிர்வினை புரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்படி வராவிட்டால் ஏமாற்றமடைவார். மாவோயிச சிந்தனைக்கு எதிராக அவர் எழுதியிருந்த கட்டுரைக்கு எந்த எதிர்வினையும் இல்லாதது அவரை மிகவும் ஏமாற்றமடையச் செய்தது. அதைப் பலமுறை பலரிடம் வெளிப்படுத்தவும் செய்தார்.
தமது வாழ்நாளில் பல நாடுகளுக்குச் சென்று, கட்சி மாநாடுகளில் கலந்து கொண்டு பல தலைவர்களுடன் விவாதம் நடத்தியுள்ளார் பசவபுன்னையா. 1960ஆம் ஆண்டில் ருமேனியா கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பசவபுன்னையா அங்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பெங்சென்னுடன் விவாதித்தார். சீன நாட்டுக்குப் பல சந்தர்ப்பங்களில் சென்றுள்ளார்.
பசவபுன்னையா கலந்து கொண்ட கடைசி கட்சி மாநாடு 14ஆவது மாநாடாகும். இது 1992இல் சென்னையில் நடைபெற்ற மாநாடு. இந்த மாநாட்டின் தொடக்கத்தில் செங்கொடியை ஏற்றி வைத்து பசவபுன்னையா உரையாற்றினார். அதுதான் அவர் ஆற்றிய முக்கியமான கடைசி உரையாகும்.
சென்னையில் நடைபெற்ற அம்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக்குழு 1964ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்சித் திட்டத்தை மேம்படுத்துவது என்று முடிவு செய்தது. அதற்கு பசவபுன்னையாவை அமைப்பாளராகக் கொண்டு ஒரு குழு உருவாக்கப்பட்டது.
பசவபுன்னையாவுக்கு ஏற்கெனவே 1971ஆம் ஆண்டில் மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார். எனினும் அடிக்கடி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
1992ஆம் வருடம் ஏப்ரல் 12ஆம் தேதி வழக்கம் போல் அலுவலகம் வந்த பசவபுன்னையா சீதாராம் யெச்சூரியின் அறைக்குச் சென்று அவருடன் அடுத்த வார பீப்பிள்ஸ் டெமாக்ரசி குறித்துப் பேசிவிட்டு அறைக்குத் திரும்பினார். ஆனால் சில மணி நேரத்தில் அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் உடனடியாக வந்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவு உட்படப் பலரும் கட்சி அலுவலகத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அடுத்த நாள் ஏராளமான தலைவர்கள் தொண்டர்கள் கலந்து கொள்ள, விஜயவாடாவில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
பசவபுன்னையா ஆற்றிய கடைசி உரையின் சில பகுதிகளைப் பார்ப்போம்:
‘நமது கட்சி காங்கிரஸ் நடக்கும் நேரத்தில் செங்கொடியை நான் ஏற்ற வேண்டும் என்று நமது மத்தியக்குழு என்னைக் கேட்டுக் கொண்டது. இந்தச் செங்கொடி சோவியத் நாட்டில் கீழிறக்கப்பட்டிருக்கிறது. அது 70-80 ஆண்டுகளாகக் கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது.
‘இதர இடங்களில் என்னதான் நடைபெற்றாலும் இந்தியாவில் நாங்கள் இந்தக் கொடியை மிகவும் மரியாதையுடன் உயர்த்திப் பிடிக்கிறோம். இது தொழிலாளிகள், விவசாயிகளின் கொடி. இது மனித குலத்தை, அதன் ஒவ்வொரு ஒடுக்குமுறையிலிருந்தும் விடுவிக்கும் கொடி. உலக சோசலிசப் புரட்சிக்குக் கட்டியங்கூறும் கொடி என்று அதை மரியாதையுடன் உயர்த்திப் பிடிக்கிறோம்.
‘நாம் செங்கொடிக்கு வணக்கம் செலுத்துவோம். அநதச் செங்கொடியானது கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளின் தியாகத்தால், சிந்தப்பட்ட ரத்தத்தில் நனைத்து எடுக்கப்பட்டது.
‘1953ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற கட்சிக் காங்கிரசிலிருந்து இப்போது 40 ஆண்டுகள் கழிந்து விட்டன. உலகம் முழுவதிலும் பல வரலாற்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாம் இப்போது 20ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்து ஆண்டுகளில் இருக்கிறோம். நாம் இந்தப் பத்தாண்டில் உலக வரலாற்றில் ஒரு சிக்கலான நேரத்தில் நுழைந்துள்ளோம். கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களும் எதிர்ப்புரட்சியாளர்களின் அனைத்துத் தரப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சி செத்து விட்டது, அது ஆழமாகப் புதைக்கப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள். முதலாளித்துவக் கூலிப்பத்திரிகையாளர்கள் கம்யூனிசம் மறைந்துவிட்டது என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதுகிறார்கள். அவர்களுடைய கனவுகள் ஒருபோது நிறைவேறாது. இந்த உலகில் புதிய சக்திகள் தோன்றி விட்டன. அவை ஒரு புதிய சகாப்தத்தை – எந்த ஒரு வல்லரசும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்த முடியாத, செலுத்த அனுமதிக்காத ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்கியே தீரும்.
‘முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி தொடர்கிறது. தற்போதுள்ள தேக்க நிலைமை ஏகாதிபத்திய நாடுகளில் நீடிக்கிறது. அது ஒன்றும் பழைய வகைப்பட்ட பொருளாதார மந்தமல்ல. அது மிகவும் ஆழமாகியுள்ள பொருளாதாரப் பொது நெருக்கடியின் ஒரு கட்டமாகும். (இப்போது அடிக்கடி நெருக்கடி ஆழமாகத் தோன்றுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்)
‘முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் கம்யூனிசம் செத்துவிட்டது என்று கூத்தாடுகிறார்கள். அவர்கள் முதலாளித்துவச் சரிவையும் அதன் அழிவையும் சந்திக்கும் நாள் வந்தே தீரும்.
‘புதிதாக விடுதலை அடைந்த நமது நாட்டில் இந்தப் பொருளாதார நெருக்கடியும் இதர நெருக்கடிகளும் இதே போன்று மற்றும் இதர நாடுகளில் உள்ள பொருளாதார நெருக்கடிகளும் சரிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடியின் பிரதிபலிப்பாகும். உலக முதலாளித்துவத்தைக் காத்து அதை நெருக்கடியிலிருந்து விடுபட்ட ஒன்றாகப் புனரமைப்பதற்கு ஏகாதிபத்தியவாதிகள் என்னதான் செய்த போதிலும் முதலாளித்துவப் பொது நெருக்கடியிலிருந்து மீள நம்பிக்கையோ, வாய்ப்போ கிடையாது.
‘மார்க்சியத் தத்துவத்திலும், கம்யூனிச லட்சியத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி கொண்டுள்ள உறுதிப்பாடு, சர்வதேச ஐரோப்பிய நிகழ்வுப் போக்குகளாலும், அது போன்றே பழைய சோவியத் நாட்டில் ஏற்பட்டுள்ள நிகழ்வுப் போக்குகளாலும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உலக வர்க்க சக்திகளின் பலாபலம் குறித்துக் கொண்டிருந்த உறுதியான கருத்து இன்றும் பொருத்தமானது என்பதையே கடந்த 40-45 ஆண்டுகளின் அனுபவங்கள் காட்டுகின்றன.
‘உலக அரங்கில் நான்கு பிரதான சமூக முரண்பாடுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு இன்றும் பொருந்தும். அதை மாற்றுவதற்கு எவ்விதத் தேவையும் கிடையாது.
‘இறுதியாக மார்க்சிஸ்ட் கட்சி கொண்டுள்ள உறுதியான மார்க்சியக் கருத்து உலகிலுள்ள நான்கு பிரதான சமூக முரண்பாடுகளில் முதன்மையான முரண்பாடாக விளங்கி வருவது சமாதானம், ஜனநாயகம், தேசிய விடுதலை மற்றும் சோஷலிசம் ஆகிய சக்திகளுக்கும் எதிர்ப்புரட்சி சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடுதான் என்பதாகும். இதுதான் உலகின் சமூக மற்றும் வர்க்க முரண்பாடுகளில் மைய முரண்பாடாக உள்ளது என்று இன்றும் தொடர்ந்து உறுதியான கருத்துக் கொண்டுள்ளது.’
பசவபுன்னையா சுட்டிக் காட்டுவது போல் நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் முதலாளிகளுக்கிடையேயான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதையும், அதற்காக நாளுக்கு நாள் அவர்கள் மனிதர்களை வேட்டையாடும் கொடும் போர்களை நிகழ்த்தி வருவதையும் ரத்தக் கண்ணீர் வடிய நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்று சமாதானம், ஜனநாயகம், தேச விடுதலை மற்றும் வர்க்க விடுதலை தொழிலாளர்களுக்கு வாய்க்கிறதோ அதுவரை போராட்டம் தொடரவே செய்யும்.
(தொடரும்)