Skip to content
Home » தோழர்கள் #50 – காந்தியிலிருந்து கம்யூனிசத்துக்கு

தோழர்கள் #50 – காந்தியிலிருந்து கம்யூனிசத்துக்கு

B. T. Ranadive

பி.டி.ரணதிவே ஒரு மகத்தான சிந்தனையாளர், மார்க்சியத் தத்துவவாதி, அறிவுஜீவி, பேச்சாளர், எழுத்தாளர். அனைத்துக்கும் மேல் ஒரு போராளி. அறுபது ஆண்டுகளுக்கு மேல் இந்திய கம்யூனிச வரலாற்றில் ஒரு முக்கியமான தலைவராகத் திகழ்ந்தவர்.

மகாராஷ்டிராவில் துருவாடி என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் மிகவும் முற்போக்கானது. எந்த வகையிலும் சாதி, மத வேற்றுமைகளைக் கொண்டாடியவர்களல்ல. தீண்டாமையைக் கைவிட்ட அவர்கள் அனைவருடனும் சரிசமமாகப் பழகக் கூடியவர்கள். பள்ளியில் அவர் தீண்டத்தகாதவர்கள் எனக் கூறப்படும் மாணவர்களுக்கு ஆதரவாக நின்றதால் வன்முறையைக் கூடச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பூனாவில் படித்த பிடிஆர் முதன்மையான மாணவராகத் திகழ்ந்து ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார். அவரது தந்தை அவரைத் தேசிய இயக்கத்தில் ஈடுபடுத்த விரும்பியதால் அது தொடர்பான புத்தகங்களை வாங்கிக் கொடுத்துப் படிக்க வைத்தார். பூனாவில் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்ட காங்கிரசில் ஈடுபாடு கொண்டார். மிதவாதியான தந்தையின் கருத்துக்கு எதிராகத் தீவீரவாதியாக இருந்தார். பின்னர் காந்தியவாதியானார்.

1922இல் ரணதிவே வில்சன் கல்லூரியில் இண்டர்மீடியட் சேர்ந்தார். அங்கு அவர் தனது முற்போக்கு முகத்தைத் தெளிவாக வெளிப்படுத்தினார். ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொண்டபோது அங்கு இருந்த பழமைவாதிகள் இந்துமதம், மனுதர்மத்தின் வழிநின்று கணவனை இழந்த பெண்களின் மறுமணத்தை எதிர்த்தனர். கொதித்தெழுந்த ரணதிவே அவர்கள்மீது கேள்விக் கணைகளைத் தொடுத்துப் பின்வாங்கச் செய்துவிட்டார்.

காந்தி தனது ஒத்துழையாமை இயக்கத்தை சௌரி சௌரா சம்பவத்தைக் காரணம் காட்டி நிறுத்தியது இந்தியாவில் இருந்த லட்சக்கணக்கான இளைஞர்களைச் சோர்வடையச் செய்தது போல் ரணதிவேயையும் சோர்வடையச் செய்தது. அதன் பிறகு நாடெங்கும் பல இடங்களில் இந்து முஸ்லிம் கலவரங்கள் வெடித்தன. ரணதிவே தவித்துப் போனார். இந்த வித்தியாசங்கள் மறைந்தால்தான் சுதந்திரம் பெற முடியும் என்று நினைத்தார் அவர்.

இயக்கம் பலவீனமடைந்ததால் காந்தி கைது செய்யப்பட்டார். சிலகாலத்தில் அவருக்குக் குடல் அழற்சி நோய் ஏற்பட்டு பம்பாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனைவரையும் போல் ரணதிவேயும் அவர் விரைவில் குணமடைந்து தேசிய இயக்கத்துக்குத் தலைமை தாங்க வேண்டுமென்று விரும்பினார். அவரது சோர்விலிருந்து மீண்டார்.

அடுத்து பிஏ, எம்ஏ முடித்தார். சட்டம் படிப்பதற்கான வகுப்புகளிலும் கலந்து கொண்டார். எம்ஏ முடித்தபோது தங்க மெடல் பெற்றது அவரைப் புகழடையச் செய்தது. அவருக்கு ஆய்வு செய்ய உதவிப் பணம் தர பெரோஸ் ஷா மேத்தா அறக்கட்டளை முன்வந்தது. ஆனால் தீவீர அரசியலில் ஈடுபட வேண்டுமென்ற மனநிலையில் இருந்த ரணதிவே தட்டிக் கழித்துவிட்டார். அவருக்கு வருமானம் எதுவுமில்லை. அவரது தந்தை அவரது நண்பர்கள் மூலமாகப் பணம் கொடுத்து மறைமுகமாக உதவிக் கொண்டிருந்தார். அவரது மனம் ஒரு நல்ல தத்துவத்தைத் தேடிக் கொண்டிருந்தது.

1920களில் காந்தி விடுத்த ஓர் அறிக்கையில், தான் வர்ணாசிரம தர்மத்தை நம்புபவன் என்று கூறியிருந்தார். முற்போக்கு எண்ணம் கொண்ட ரணதிவே வெறுத்துப் போனார். அவருக்கு ஆத்திரம் வந்தது. எனவே அவரும் அவரது உறவினரான ஜே.எம்.அதிகாரியும் காந்தியின் பழமைவாதப் போக்குக்கு எதிராகப் போராடுவது என்று தீர்மானித்தனர்.

இக்காலகட்டத்தில் ரணதிவே மகாராஷ்டிர வாலிபர் சங்க மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு அதை ஏற்பாடு செய்திருந்த லால்ஜி பெண்ட்சே என்பவருடன் விவாதித்தார். அதன் விளைவாக இந்த சமூக அமைப்பு முழுவதையும் மாற்றி அமைக்க வேண்டுமென்ற முடிவுக்கு அவர் வந்தார்.

சில காலத்துக்குப் பிறகு ரணதிவேயும் அதிகாரியும் பம்பாயில் சி.ஜி. ஷா என்பவருடன் நட்புக் கொண்டனர். அவரது நூலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு இங்கிலாந்திலிருந்து வந்தது. ரணதிவே அதைப் படித்து நன்கு தெளிவு பெறலானார். அவருக்கு வர்க்கப் போராட்டம் குறித்துத் தெளிவின்மை இருந்தது. ஷா அவருக்கு மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் ஒழிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். கம்யூனிஸ்டுகள் ஒரு பொது வேலைநிறுத்தம் மூலம் எழுச்சியை உருவாக்குவதும், மக்களிடையே பாகுபாடு ஒழிக்கப்படுவதும் சுதந்திரத்தைப் பெறும் வழி என்ற எண்ணம் ரணதிவேக்கு ஏற்பட்டது. காந்திஜியின் அகிம்சை முட்டாள்தனமானது என்றும் நினைத்தார்.

ரஜினி பாமிதத் எழுதிய ‘நவீன இந்தியா’வை அவர் படித்து மிகவும் ஈர்க்கப்பட்டார். பம்பாய்க்குக் கடத்தி வரப்பட்ட மார்க்சிய நூல்களை அவர் படித்தார். மார்க்சின் மூலதனத்தை அவர் படிக்க விரும்பினாலும் அது அப்போது கிடைக்கவில்லை.

ரணதிவேயின் நண்பர் ஜே.எம். அதிகாரியின் மூத்த சகோதரர் பெர்லின் சென்று அங்கு கம்யூனிஸ்டாகி இருந்தார். அவர் அதிகாரிக்கு பம்பாயில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சென்று சந்திக்குமாறு கடிதம் எழுதியிருந்தார். அதை எடுத்துக் கொண்டு அதிகாரியும் ரணதிவேயும் பம்பாயில் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த ஆர்.எஸ்.நிம்ப்கர், எஸ்.எஸ்.மிராஜ்கர் ஆகியோரைச் சந்தித்தனர். அவர்களும் இவர்களுடன் விவாதித்து ஆலோசனை கூறினர். அதன்படி இருவரும் மில் தொழிலாளர்களிடையே வேலை செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி அத்தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை ரணதிவே ஆராயத் தொடங்கினார். அவர்களிடையே இருந்த மதம் தாண்டிய ஒற்றுமை அவருக்குப் பிடித்துப் போனது. வர்க்கப் போராட்டம் சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையைக் கொண்டு வரும் என்பதே விடை என்று அவர் முடிவுக்கு வந்தார்.

இதுவரை அவர் படித்த நூல்கள், விவாதித்த விஷயங்கள் அனைத்தும் சேர்ந்து அவருக்குப் புரட்சிகரமான ஒரு உலகக் கண்ணோட்டத்தைக் கொடுத்தன. எனவே அவர் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டார். அதுவரை மனதளவில் கம்யூனிஸ்டாக இருந்த அவர், 1928இல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்க இங்கிலாந்து கம்யூனிஸ்ட் தலைவர்களான பிலிப் ஸ்ப்ராட், பென் பிராட்லி போன்றோர் வந்தனர். இங்கிலாந்து அரசு ஆபத்தை உணர்ந்தது. 1929ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்களைக் கைது செய்து மீரட் அழைத்துச் சென்று மீரட் சதி வழக்கைப் புனைந்தது. பம்பாயில் பெரும் தலைவர்கள் கைதானதால் ரணதிவே மீதும் எஸ்.வி.தேஷ்பாண்டே மீதும் பெரும்சுமை விழுந்தது.

கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானதால் மில் முதலாளிகள் உற்சாகமடைந்து தாக்குதல் தொடுத்தனர். ரணதிவேயும், தேஷ்பாண்டேவும் தொழிலாளர்களைத் திரட்டிக் கூட்டம் நடத்த போலீஸ் கைது செய்ய வந்தது. தொழிலாளர்கள் தடுத்ததால் திரும்பிச் சென்று பெரும் படையுடன் வந்து அவர்களைக் கைது செய்தது போலீஸ். அவர்களுக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மில் தொழிலாளர் பிரச்சனையில் அவர்களை அழைத்து வந்து சாட்சியம் கொடுக்க வைத்தனர். எனினும் அவர்களது வேலைநிறுத்தம் வெற்றி பெறவில்லை.

விடுதலை பெற்றுத் திரும்பிய ரணதிவே பஞ்சாலை சங்கத்திலும் ரயில்வே சங்கத்திலும் பணிபுரியத் தொடங்கினார். அவர் தீபகற்ப ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செப்டெம்பர் மாதத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதி ஒருவர் பம்பாய் வந்து சுஹாசினி நம்பியார், ரணதிவே, தேஷ்பாண்டே அகியோருடன் விவாதித்துக் கட்சியை அமைக்குமாறு வழிகாட்டினார். அதனை அவர்கள் ஏற்றனர். அதன்படி ரணதிவே கல்கத்தா, பஞ்சாப் சென்று கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுத்தார்.

ஆங்கிலேய அரசு இந்து–முஸ்லிம் கலவரங்களைத் தூண்டிவிடுவதாக ரணதிவே அக்டோபர் மாதத்தில் ஒரு கட்டுரை எழுதினார். இதனை தேசத்துரோகம் என்று கூறிக் கைது செய்த அரசு அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை அளித்தது. அதனால் அவரால் லாகூர் காங்கிரசில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

ஒரு வருடத்துக்குப் பின் பம்பாய் திரும்பிய ரணதிவே அங்கு ஒரு கூட்டத்தில் காந்தி பேசப்போவதை அறிந்தார். அதில் கலந்து கொண்டு நேரடியாகச் சில கேள்விகளை எழுப்புவது என்று தீர்மானித்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் திடீரென மேடையில் ஏறிய ரணதிவே இரண்டு கேள்விகளை மின்னலென எழுப்பிவிட்டுக் கீழே இறங்கி விட்டார். ‘நீங்கள் பகத்சிங்கைத் தூக்கில் போடுவதற்கு ஆதரவாக இருந்தீர்கள். இரண்டாவது எங்கள் தோழர்களை மீரட் சதிவழக்கில் கைது செய்து சிறைவைக்க ஆதரவாக இருந்தீர்கள். நீங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்’. காந்தி பதில் பேசவேயில்லை. நேரடியாக இப்படி காந்தியை விமர்சிக்க அக்காலத்தில் யாரும் துணிய மாட்டார்கள்.

மீரட் சதிவழக்கிலிருந்து விடுதலையாகத் தொடங்கிய கம்யூனிஸ்டுகள் மீண்டும் விடுதலையாகி தொழிற்சங்கங்களையும் கட்சியையும் புனரமைக்கத் தொடங்கினர். ஒரு மிகப்பெரிய வேலைநிறுத்தத்தையும் நடத்தினர்.

அப்போது அவரது தந்தை இறந்து போனார். பேச்சுவார்த்தையில் இருந்த ரணதிவே தந்தையின் சடலத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை. அவர் பூனா சென்று சேர்ந்தபோது ஏற்கனவே தகனம் முடிந்திருந்தது.

1934இல் பஞ்சாலைத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது. அரசு அதைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டது. ஏமாற்றமடைந்த அரசு கட்சியையும் தொழிற்சங்கங்களையும் தடை செய்து ரணதிவே உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்து சிறையில் வைத்தது. ஒரு கட்டத்தில் அவர்மீது தேசத்துரோக வழக்கும் போடப்பட்டது. முதலில் ஆர்தர் ரோடு சிறையிலும் பின்னர் ஹைதராபாத் சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார்.

சிறையில் சி வகுப்பில் அவர் கடுமையான சூழல்களை எதிர்கொண்டார். மோசமான உணவு, இருட்டு எனப் பல இன்னல்களைத் தாங்கினார் ரணதிவே. சிறையில் தன் நாளின் பெரும்பகுதியைப் படிப்பதிலேயே செலவிட்டார். பல மார்க்சிய நூல்களையும் அவர் அங்கு படித்தார். சிறை அதிகாரிகளுக்கு அது தெரியவில்லை. மூலதனத்தின் மூன்று பகுதிகளையும் அங்கு படித்துவிட்டார் ரணதிவே.

இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்து வெளியே வந்த ரணதிவே மீண்டும் தொழிற்சங்கப் பணியைத் தொடங்கினார். பம்பாயில் தொழிலாளர்கள் சார்பாக நிறுத்தப்பட்ட ஜோக்லேகர் ரணதிவே, டாங்கே ஆகியோரின் கடும் உழைப்பையும் தாண்டித் தோற்றுவிட்டார். எனினும் பம்பாய் சட்டமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது.

அந்த ஆட்சி தொழிலாளர்களின் உரிமைகளையும், கம்யூனிஸ்டுகளையும் நசுக்கும் வகையில் வேலைநிறுத்த உரிமையைப் பறித்து ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. டாக்டர் அம்பேத்கர், ஜமுனாதாஸ் மேத்தா ஆகியோர் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர். முதன்முறையாக அம்பேத்கருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இப்பிரச்சனையில் ஒற்றுமை ஏற்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிராக இருவரும் இணைந்து களம் கண்டனர். அவர்கள் விடுத்த முழு அடைப்பு பெரும் வெற்றி பெற்றது. செங்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அம்பேத்கரும் ஜம்னாதாஸ் மேத்தாவும் தொழிலாளர் பகுதியில் வலம் வந்தனர்.

(தொடரும்)

பகிர:
கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *