இந்தக் காலகட்டத்தில்தான் ரணதிவேவுக்கு விமலாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. முதலில் இரண்டு திரைப்படங்களில் நடித்த விமலா, பின்னர் தமது வாழ்க்கையைத் தொழிலாளர்களுக்கே அர்ப்பணிக்க வேண்டுமென்று முடிவு செய்தார். அவரது தமையனார் மார்க்சியப் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்க வைத்தார். அவற்றால் அவர் ஈர்க்கப்பட்டார். ரணதிவே விமலாவைத் தினமும் தொழிலாளர் குடும்பங்களுடன் பழகி அவர்களைப் பற்றிக் குறிப்பெடுக்குமாறு கூறினார். அதன்படி அவர் செயல்பட்டார். இருவரும் திருமணத்துக்காகச் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்ற தோழர்கள் விடுதலையாகத் தொடங்கியதும், அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் 1933ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கல்கத்தாவில் ஓர்அகில இந்திய மாநாடு கூடியது. ஜி. அதிகாரியை பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்த மாநாடு ரணதிவேயை மத்தியக்குழு உறுப்பினராக்கியது.
கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது மாநாடு இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரசுடன் கம்யூனிஸ்ட்டுகள் இணைந்து பயணிக்க வேண்டுமென வழிகாட்டியது. அதன்படி கம்யூனிஸ்டுகள் காங்கிரசில் இணைந்தனர். ரணதிவே ஒரு சாதாரண உறுப்பினராக காங்கிரசில் இணைந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி 1934இலிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் பெயரில் அவர்கள் இயங்கினர். ரணதிவே ‘பம்பாய் தொழிலாளி’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தினார்.
கம்யூனிஸ்ட் கட்சி தேசிய முன்னணி என்ற பத்திரிகையை பம்பாயிலிருந்து வெளியிடத் தொடங்கியது. அதில் ரணதிவேயும் ஆசிரியராக இருந்தார். பல முக்கியமான கட்டுரைகளை எழுதினார். ஆங்கிலேய அரசை மட்டுமின்றி நடுநிலை வகித்த காங்கிரஸ் அரசையும் விமர்சித்தார்.
1939இல் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இதனை கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்தியப் போர் என்று வரையறை செய்தது. எனவே அதனை எதிர்த்து களம் கண்டது கம்யூனிஸ்ட் கட்சி. கடும் ஒடுக்குமுறையை ஏவியது ஆங்கிலேய அரசு. நேஷனல் பிரண்ட், கிராந்தி பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன. நியூ ஏஜ் பத்திரிகைக்கு ஜாமீன் கேட்டது அரசு.
தோழர்கள் தலைமறைவாகச் செல்வதென்று முடிவெடுத்தனர். அன்று காலை விமலாவையும் சில தோழர்களையும் அழைத்துக் கொண்டு பதிவாளர் அலுவலகம் சென்ற ரணதிவே அங்கு விமலாவைத் திருமணம் செய்து கொண்டார். அன்றே தலைமறைவான ரணதிவே சில மாதங்களில் பிடிபட்டு தியோலி பாதுகாப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர். ரணதிவேயும் மேலும் மூவரும் தனியாக அடைக்கப்பட்டனர். ரணதிவேயுடன் ஹர்கிஷன்சிங் சுர்ஜீத், எஸ்.வி.காட்டே, ராகுல் சாங்கிருத்தியாயன், ஏ.எஸ்.கே அய்யங்கார், தன்வந்தரி மற்றும் பலர் இருந்தனர்.
சிறையில் நிலவிய மனிதாபிமானமற்ற நிலையை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்தன. டாங்கேயும் ரணதிவேயும் உள்ளே போராட்டங்கள் நடத்தியதால் அஜ்மீர் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு கைரேகை பதிய மறுத்ததால் இருவரும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சில காலத்துக்குப் பின் மீண்டும் தியோலி சிறைக்கு மாற்றப்பட்டனர்.
ஹிட்லர் சோவியத்மீது தாக்குதல் தொடுத்ததும், இது பாசிசத்துக்கு எதிரான மக்கள் போராகிவிட்டதாகக் கம்யூனிஸ்டுகள் வரையறை செய்து, அதற்கு ஆதரவளித்தனர். இந்த மாற்றத்தை பி.சி. ஜோஷி உள்ளிட்ட பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த மாற்றங்களைச் சுட்டிக்காட்டி இங்கிலாந்து கட்சி இந்தியக் கட்சிக்குக் கடிதம் எழுதியது. இங்கு கட்சி தலைமறைவாகச் செயல்பட்டு வந்தது. சிறையில் இருந்த ரணதிவே இது குறித்து 50 பக்க ஆவணம் ஒன்றைத் தயாரித்தார். இப்போரை ஆதரிக்க வேண்டுமென்றும், இப்போர் முடியும்போது, சோவியத் வெற்றி பெறும்போது, காலனி நாடுகளின் விடுதலையைத் தடுக்க முடியாது என்றும் அதில் அவர் கூறினார்.
இதனை விவாதித்து ஏற்றுக்கொண்டது கட்சி. இதையடுத்து கட்சி மீதான தடையை அரசு எட்டு ஆண்டுகளுக்குப் பின் விலக்கிக்கொண்டது. மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெகுஜனப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. எனினும் அரசின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்டுகளைத் தேசத்துரோகிகள் என்ற அவதூறைக் கட்டவிழ்த்து விட்டிருந்ததால் அதையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்தப் பின்னணியில் கட்சியின் முதலாவது மாநாடு பம்பாயில் கூடியது. அரசியல் நிலை குறித்து ஜோஷி அறிக்கை வைத்தார். ரணதிவே இரண்டு முக்கியத் தீர்மானங்களை முன்மொழிந்தார். அகிலம் கலைக்கப்பட்டதை ஆதரித்து, விளக்கினார். அதை மாநாடு ஏற்றது. அம்மாநாட்டில் அரசியல் தலைமைக்குழுவுக்கு ரணதிவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1943 முதல் 1947 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மகத்தான காலகட்டம். வீரஞ்செறிந்த பல போராட்டங்களை அது நடத்தியது. இந்தியக் கப்பற்படைப் புரட்சிக்கு ஆதரவாகக் களமிறங்கியது. எனவே மக்களிடையே ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி. ஸ்தாபனம் விரிவடைந்தது. எஸ்.ஏ. டாங்கேயும் பி.டி.ரணதிவேயும் பிரபல தொழிற்சங்கத் தலைவர்களாக விளங்கினர். ஜோஷி, ரணதிவே, அதிகாரி ஆகியோரின் உழைப்பால் கட்சி பெருமளவுக்கு உயர்ந்தது.
1946 பிப்ரவரியில் கப்பல்படைப் புரட்சி பம்பாயில் வெடித்தது. காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆதரவளிக்காத நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆதரித்தது. ரணதிவே அந்தப் போராட்டத்துக்கு வழிகாட்டினார். போராளிகளுக்கு உணவு வழங்க அவர் ஏற்பாடுகள் செய்தார். மக்கள் நேரடியாக அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராகக் களம் கண்டனர். அதில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதில் கம்யூனிஸ்ட் கமல் டோண்டே தன் கணவரின் கரங்களிலேயே மரித்தார். ரணதிவேயின் இளைய சகோதரி குசும் டோண்டே மயிரிழையில் உயிர் தப்பினார். காங்கிரஸ் லீகின் ஆதரவு இல்லாததால் போராட்டம் தோல்வியடைந்தாலும், இந்தப் போராட்டம் ஒரு வகையில் இந்திய சுதந்திரத்தை வேகப்படுத்தியது என்பதுதான் வரலாறு.
நாடு முழுவதும் மக்கள் விவகாரங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கிப் போராடியது. மக்கள் அவர்கள்மீது நம்பிக்கை வைத்தனர். ஆனால் ஜோஷி சற்றுத் தடுமாறினார். கட்சி மீது ஒடுக்குமுறை வரும் என்று அவர் நினைத்தார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைவரையும் இணைத்து ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டுமென்றார் ஜோஷி. கட்சிக்குள் கடுமையான எதிர்வினை ஏற்பட்டது. 1947 ஆகஸ்டில் நடந்த கட்சி மத்தியக்குழுக் கூட்டம் அவரது கூற்றை நிராகரித்தாலும், அவர் அதையே வலியுறுத்தினார். மத்திய அரசு தாக்குதல் நடத்தக் காத்திருந்தது.
அப்போது கல்கத்தாவில் கூடிய கட்சியின் இரண்டாவது மாநாட்டில் ரணதிவே ஜோஷியைக் கடுமையாக விமர்சித்து ஓர் அறிக்கையையும், அரசியல் கோட்பாடு குறித்து இன்னொரு அறிக்கையையும் வைத்தார். அதில் ரணதிவேயின் கருத்துகள் உற்சாகமாக வரவேற்கப்பட்டன. ஆனால் அவரது கோட்பாட்டில் பல தவறுகள் இருந்ததைப் பலரும் கவனிக்கத் தவறினர். இப்போதைய அரசைத் தூக்கியெறிந்துவிட்டு, சோஷலிச அரசை அமைக்க வேண்டும் என்பதே அவரது முடிவு. மாநாடு நடக்கும்போதே தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளைக் கைது செய்ய போலீஸ் வந்ததால் அவர்கள் தப்பி விட்டனர். ரணதிவே பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்காகக் காத்திருந்த மத்திய அரசு தாக்குதலைத் தொடுத்தது. நாடெங்கும் தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். ரணதிவேயும் பல தலைவர்களும் தலைமறைவாயினர். மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ணயிப்பை ஏற்கவில்லை. இதைக் கட்சி கவனிக்கத் தவறிவிட்டது. புறநிலையைக் கட்சி கவனத்தில் எடுக்கவில்லை.
1949இல் கட்சி ரயில்வே வேலை நிறுத்தம் நடத்த வேண்டுமென்று கட்டளையிட, பிஆர் அது நடக்காது என்று கூறினார். எனினும் அதை ஏற்கப் பிடிவாதமாக மத்தியக்குழு மறுத்தது. பிஆர் கூறியது போலவே வேலைநிறுத்தம் பிசுபிசுத்தது. ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர்.
கட்சி மேலும் வினோதமாகச் சிறையில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் உள்ளேயே போராட்டம் நடத்தி மக்களை ஈர்க்க வேண்டுமென்று கட்டளையிட்டது. அரசோ கடும் தாக்குதலை ஏவியது. சேலம் சிறைக்குள்ளேயே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கட்சி கடும் நெருக்கடிக்கு உள்ளானது.
கட்சியின் நிலை தவறு என்ற கடும் நிர்ப்பந்தம் ஏற்பட்ட பிறகு வேறு வழியின்றி ரணதிவே மத்தியக் குழுவைக் கூட்ட நிர்பந்திக்கப்பட்டார். ரணதிவேயைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்குவது என்றும், அரசியல் தலைமைக்குழுவை மாற்றியமைப்பது என்றும் கட்சி முடிவெடுத்தது. எந்த முன்னேற்றமும் இல்லாததால் சோவியத்துக்கு ஒரு குழு சென்று சோவியத் தலைவர்களுடன் விவாதிக்க முடிவெடுத்தது. அங்கு ஸ்டாலின் ரணதிவேயைப் பற்றி விசாரித்துவிட்டு, அவரை விட்டுவிடாதீர்கள். அவரது தவறைச் சரி செய்யுங்கள். அவரது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப வேலை கொடுத்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று வழிகாட்டினார். மீண்டும் கூடிய மத்தியக்குழு அவரை இரண்டாண்டுகள் தாற்காலிகமாக நீக்கியது. அதை ரணதிவே ஏற்றுக்கொண்டார்.
பலரால் ரணதிவே அவமதிக்கப்பட்டாலும், அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. புத்தகங்கள் எழுதினார், படித்தார். மக்கள் அந்தப் புத்தகங்களை வரவேற்றனர்.
ரணதிவேயின் குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்தது. அவரது சகோதரி அகல்யா ரங்னேகர் வீட்டில் ஒரு சிறிய அறையில் ரணதிவே, விமலா, அவர்களது மகன் ஆகியோர் இருந்தனர். விமலா வேலைக்குப் போய் வந்தார். சுந்தரய்யா அவ்வப்போது சிறிய தொகை கொடுத்து உதவினார். கட்சி நிறுத்திய அலவன்சை மீண்டும் சுந்தரய்யா பெற்றுக் கொடுத்த பிறகுதான் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.
1955ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலக் கட்சிச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சம்யுக்த மகாராஷ்டிரா அமைப்பதற்கான போராட்டம் மகாராஷ்டிராவில் வெடித்தது. இப்போராட்டம் ரணதிவேயையும் அம்பேத்கரையும் ஒன்று சேர்த்தது. சம்யுக்த மகாராஷ்டிரம் அமைந்தது. 1957இல் நடந்த தேர்தலில் டாங்கே உட்படப் பலரும் வென்றனர்.
1956இல் பாலக்காட்டில் நடந்த மாநாட்டில் மீண்டும் ரணதிவே மத்தியக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூ ஏஜ் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். 1958ஆம் ஆண்டில் அமிர்தசரஸ் மாநாட்டில் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் 1962 விஜயவாடா மாநாட்டிலும் அப்படியே.
1954 ஆண்டு முதல் கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் தீவீரமடைந்தது. கடும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. தேசிய ஜனநாயகப் புரட்சி என்ற கோட்பாட்டை ஜோஷி உள்ளிட்டோர் முன்வைக்க, ரணதிவே உள்ளிட்டோர் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற கோட்பாட்டை முன்வைத்தனர். விஜயவாடாவிலேயே கட்சி பிளவுபட்டிருக்கும். எனினும் தவிர்க்கப்பட்டது. 1962இல் பொதுச்செயலாளர் அஜய் கோஷ் மரணமடைந்ததும் மீண்டும் நெருக்கடி தலை தூக்கியது.
1962இல் வெடித்த இந்திய-சீனப் போரில் ஒரு தரப்பு போரை ஆதரிக்க, இன்னொரு தரப்பு பேச்சு வார்த்தையை வலியுறுத்தியது. பேச்சு வார்த்தையை ஆதரித்த ரணதிவே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிகார பூர்வ கட்சி இதனை எதிர்க்கவேயில்லை. ரணதிவேயும், பம்பாயில் கைது செய்யப்பட்ட இதர தோழர்களும் நான்கு ஆண்டுகள் வரை பாதுகாப்புக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
அக்காலத்தில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சிப் போராட்டம் முற்ற, தில்லியில் 1964ஆம் ஆண்டு நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் 32 தலைவர்கள் வெளியேறித் தனிக்கட்சியைத் தோற்றுவித்தனர். அவர்கள் ஒரு நகல் திட்டத்தைத் தயாரித்தனர். அதை ரணதிவேவுக்கும் அனுப்பி அவரது ஒப்புதல் பெறப்பட்டது. 1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 அன்று முடிவடைந்த மாநாடு சிபிஐ(எம்) கட்சியை உருவாக்கியது. ரணதிவே அதன் அரசியல் தலைமைக்குழுவில் ஒன்பது பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(தொடரும்)