இந்தியாவில் சூரத் நகரில் இருக்கும் ஒரு காஃபி நிலையம். அங்கு உலகின் பல பகுதிகளில் இருந்து அந்நியர்களும் நெடுவழிப் பயணிகளும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம்.
ஒரு நாள் பாரசீக இறையியலாளர் ஒருவர் அந்த காஃபி நிலையத்துக்கு வந்தார். கடவுளின் இயல்பு பற்றி ஆராய்வதிலும் அது தொடர்பான புத்தகங்களைப் படிப்பதிலும் எழுதுவதிலும் தன் வாழ்நாளைச் செலவிட்டு வந்தார். கடவுளைப் பற்றி நிறையச் சிந்தித்திருக்கிறார்; படித்திருக்கிறார்; எழுதியிருக்கிறார். கடைசியில் என்ன ஆனதென்றால் மிகவும் குழம்பிப் போய், கடவுள் இருக்கிறார் என்பதையே மறுதலிக்கும் எல்லைக்குச் சென்றுவிட்டார். பாரசீக அரசர் ஷாவுக்கு இது தெரியவந்ததும் இவரை நாடுகடத்திவிட்டார்.
மூல முதல் காரணம் பற்றி இத்தனை நாளும் விவாதித்துக் களைத்த அந்தத் துரதிஷ்டவசமான இறையியலாளர், தனது சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டார் என்பதைப் புரிந்துகொள்ளாமல், உலகைக் கட்டுப்படுத்தும் உயர்ந்த காரண காரியம் இருக்கிறது என்பதையே மறுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டார்.
இவருக்கு ஓர் ஆப்பிரிக்க அடிமை இருந்தார். இவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவரும் பின்னாலேயே வருவார். காஃபி நிலையத்துக்குள் பாரசீகர் சென்றபோது அவருடைய அடிமை வாசல் கதவருகில், சூரிய ஒளியில் காய்ந்து கொண்டிருந்த ஒரு கல்லில் அமர்ந்துகொண்டு தன்னை மொய்க்கும் ஈக்களைத் துரத்திக் கொண்டிருந்தார். உள்ளே ஒரு மேஜையில் அமர்ந்த பாரசீகர் ஒரு கோப்பை ஓபியம் கொண்டுவரும்படிச் சொன்னார். அதை அருந்தியதும் அவருடைய மூளை சுறுசுறுப்படைந்தது. வாசலில் உட்கார்ந்திருந்த தன்னுடைய அடிமையைப் பார்த்துச் சொன்னார்:
‘அடிமையே சொல்… கடவுள் இருக்கிறாரா இல்லையா?’
‘கட்டாயமாக இருக்கிறார். நான் பிறந்த நொடியிலிருந்து அவர்தான் என்னைக் காப்பாற்றிவருகிறார். எங்கள் ஊரில் இருக்கும் அனைவரும் அந்தப் புனித மரத்தைக் கும்பிடுவார்கள். அந்த மரத்திலிருந்துதான் இந்தக் கடவுள் செய்யப்பட்டிருக்கிறார்.’
இறையியலாளருக்கும் அவருடைய அடிமைக்கும் இடையிலான இந்த உரையாடலைக் கேட்டதும் அந்த காஃபி நிலையத்தில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். பாரசீகரின் கேள்வியைக் கேட்டதும் எழுந்த ஆச்சரியம் அடிமையின் பதிலைக் கேட்டதும் மேலும் அதிகரித்தது.
அவர்களில் இருந்த பிராமணர் ஒருவர், இந்த உரையாடலைக் கேட்டதும் அந்த அடிமையின் பக்கம் திரும்பிச் சொன்னார்: ‘அட அறிவற்றவனே… கடவுளை இப்படி ஒருவர் தன் கச்சையில் கட்டிக் கொண்டு செல்லமுடியுமா என்ன? உலகில் ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். பர பிரம்மம். இந்த உலகையே படைத்தவர் அவர்தான். எனவே அவர் உலகை விடப் பெரியவர். பிரம்மமே ஒரே கடவுள். கங்கை நதிக் கரையோரம் அந்த சர்வ வல்லமை படைத்த கடவுளைப் பெருமைப்படுத்தும் வகையில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. உண்மையான கடவுளின் உண்மையான பூஜாரிகளான பிராமணர்கள் அங்கு அவரைத் துதித்துப் போற்றுகின்றனர். அவர்களைத் தவிர இந்த உலகில் வேறு யாருக்கும் உண்மையான கடவுளைப் பற்றி எதுவும் தெரியாது. பல யுகங்கள் கழிந்துவிட்டன. ஒரே கடவுளான பர பிரம்மம் பிராமணர்களைக் காத்து அருள் புரிவதால் அவர்களே உச்சத்தில் இருந்துவருகிறார்கள்’ என்றார்.
தான் சொன்னதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற பெருமிதத்துடன் அவர் இருந்தார். ஆனால், அங்கிருந்த ஒரு யூத வணிகர் உடனே பிராமணரைப் பார்த்துச் சொன்னார்:
‘இல்லை. உண்மையான கடவுளின் கோயில் இந்தியாவில் இல்லை. அதுமட்டுமல்ல, கடவுள் பிராமணர்களை ஒன்றும் காப்பாற்றுபவரல்ல. பிராமணர்களின் கடவுள் உண்மையான கடவுளே இல்லை. ஆப்ரஹாம், ஐசக், ஜேக்கப் ஆகியோரின் கடவுளே உண்மையான கடவுள். அவர் தன்னால் ஆசிர்வதிக்கப்பட்ட இஸ்ரவேலர்களையே ரட்சிக்கிறார். உலகம் உருவான நாளில் இருந்தே எங்கள் தேசம் அவரை மகிமைப்படுத்தி வருகிறது. எங்கள் தேசம் மட்டுமே உண்மையில் அவரை நேசிக்கிறது. இப்போது இஸ்ரவேலர்கள் உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கிறோம். இது அந்தக் கடவுள் எங்களுக்கு வைத்திருக்கும் பரீட்சை. அவர் எங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். வாக்களிக்கப்பட்ட பூமியான ஜெருசலேமில் எங்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டுவார். பழங்கால உலகின் அற்புத ஆலயமான ஜெருசலேம் ஆலயம் அதனுடைய பழைய மகிமைக்குத் திரும்பும். அனைத்து நாடுகளுக்கும் அரசனாக இஸ்ரேல் நிலைநிறுத்தப்படும்.
இப்படிச் சொன்ன அந்த யூதர் மேலும் பேச முடியாமல் உடைந்து அழத் தொடங்கினார். அருகில் இருந்த இத்தாலிய மிஷினரி குறுக்கிட்டார்.
‘நீங்கள் சொல்பவையெல்லாம் உண்மையில்லை’ என்று யூதரைப் பார்த்துச் சொன்னார்.
‘நீங்கள் தேவனுக்கு அநீதி கற்பிக்கிறீர்கள். உங்களுடைய ஒரு தேசத்தை மட்டும் அவர் பிற தேசங்களைவிட ஆசீர்வதிப்பார் என்று சொல்லவே முடியாது. பழங்காலத்தில் அவர் இஸ்ரவேலர் மீது ப்ரியமானவராக இருந்தபோதிலும் அவரை நீங்கள் கோபப்படுத்தி 19 நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. உங்கள் நகரத்தை அவர் அழித்து உலகம் பூராவும் உங்களைச் சிதறிப் போகப் பண்ணிவிட்டார். இதனால் உங்கள் மதத்துக்குப் புதிதாக யாரும் மதம் மாறி வரமுடியாமல் செய்து இங்கும் அங்கும் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதுபோல் உங்களைச் செய்துவிட்டார். எந்தவொரு தேசத்துக்கும் கடவுள் கூடுதல் கருணை காட்டுவதில்லை. ரோமில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையினால் ரட்சிக்கப்படும்படி மன்றாடுபவர்களை மட்டுமே அவர் ரட்சிப்பார். அதற்கு வெளியில் இருப்பவர்களுக்கு ரட்சிப்பு இல்லை.’
இத்தாலிய மிஷனரி இப்படிச் சொன்னதைக் கேட்டதும் அங்கிருந்த ப்ராட்டஸ்ண்ட் போதகரின் முகம் கோபத்தில் வெளிறியது. கத்தோலிக்க போதகரைப் பார்த்துக் கோபத்துடன் சொன்னார்:
‘உங்களுடைய மதத்தினருக்கு மட்டுமே ரட்சிப்பு கிடைக்கும் என்று சொல்ல உங்களுக்கு என்ன துணிச்சல்? கிறிஸ்துவின் நாமத்தை உணர்வாலும் உள்ளத்தாலும் மதித்து, புனித வசனங்களின் படி கடவுளுக்குச் சேவை புரியும் ப்ராட்டஸ்டண்ட்கள் மட்டுமே அவரால் ரட்சிக்கப்படுவார்.’
அந்த காஃபி நிலையத்தில் ஒரு துருக்கியரும் இருந்தார். அவர் சூரத்தில் இருந்த சுங்க வரிச் சாவடியில் அதிகாரியாக இருந்தார். அருகில் அமர்ந்துகொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்த அவர், அந்த கிறிஸ்தவர்கள் இருவரையும் சற்று இளக்காரமாகப் பார்த்தபடி சொன்னார்: ‘ரோமானிய மதத்தின் மீதான உங்களுடைய நம்பிக்கை துளியும் பயனில்லாதது. 1200 ஆண்டுகளுக்கு முன்பாக அவை உண்மையான இறை மார்க்கத்தினால் ஓரங்கட்டப்பட்டுவிட்டது. அதுதான் இறைத்தூதர் முஹம்மதுவின் மார்க்கம். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முஹம்மதுவின் மார்க்கம் எப்படிப் பரவுகிறது என்பதை நீங்கள் கைகட்டி வேடிக்கைதான் பார்க்கமுடியும். இவ்வளவு ஏன் விழிப்பு உணர்வு மிகுந்த சீனாவில் கூட அது பாலைவனக் காற்றுபோல் பரவிக் கொண்டிருக்கிறது.
கடவுள் யூதர்களைக் கைவிட்டு விட்டதாகச் சொன்னீர்கள். அதற்கான எடுத்துக்காட்டாக யூதர்கள் உலகில் அவமானப்படுத்தப்பட்டு, தமது மந்தையைப் பெருகச் செய்ய முடியாமல் செய்யப்பட்டிருப்பதைச் சொல்லிக் காட்டினீர்கள். அப்படியென்றால் முகமதிய மார்க்கமே உலகின் தலை சிறந்த மார்க்கம் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அதுதானே இன்று வெற்றிகரமாக உலகின் அத்தனை மூலை முடுக்குகளிலும் பரவிவருகிறது. முஹம்மதுவின் அன்புக்குரியவர்கள் மட்டுமே ஏக இறைவனால் காப்பாற்றப்படுவார்கள். எல்லையற்ற அருளாளன் அனுப்பிய இறுதித் தூதுவர். அதிலும் அலியின் வழியில் நடப்பவர்கள் அல்ல; ஓமரின் வழியில் நடப்பவர்களே காப்பாற்றப்படுவார்கள். ஏனென்றால் அவர்களே உண்மையான மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.’
பாரசீக இறையியலாளர் உண்மையில் அலியின் பிரிவைச் சேர்ந்தவர். அவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் அங்கு இருந்த வேறு பல மதத்தினரிடையே மிகப் பெரிய வாக்குவாதம் மூண்டுவிட்டது. அபிசினிய கிறிஸ்தவர்கள், திபெத்திய லாமாக்கள், அக்னி வழிபாட்டாளர்கள் முதலானோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொருவரும் கடவுளின் குணம் என்னதென்றும் எப்படி வழிபடவேண்டும் என்றும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். தமது நாட்டினருக்கு மட்டுமே உண்மையான கடவுளைத் தெரியும் என்றும் அங்கு மட்டுமே முறையான வழிபாடு நடப்பதாகச் சொன்னார்கள்.
அத்தனை பேரும் இப்படிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சீனர் மட்டுமே அமைதியாக இருந்தார். அவர் கன்ஃபூசியஸத்தை ஏற்றுக்கொண்டவர். காஃபி நிலையத்தில் நடக்கும் சண்டையில் பங்கெடுக்காமல் தேநீரை ரசித்துப் பருகியபடியே இவர்கள் அனைவரும் பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எதுவுமே சொல்லவில்லை.
துருக்கியர் இதைப் பார்த்துவிட்டார். சீனரைப் பார்த்துச் சொன்னார்: ‘அன்புக்குரிய சீனரே… நீங்கள் மிகவும் அமைதியாக இருக்கிறீர்கள். எதுவுமே பேசவில்லை. ஆனால், நீங்கள் வாயைத் திறந்து பேசினால், நிச்சயம் நான் சொன்னதுதான் சரி என்று சொல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் நாட்டில் இருந்து என் உதவி கேட்டு வரும் வணிகர்கள், உங்கள் நாட்டில் பல மதங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலும் சீனர்களாகிய நீங்கள் முஹமதிய மதமே மிகவும் சிறந்தது என்று கருதுகிறீர்கள் என்றும் அதையே மனப்பூர்வமாகப் பின்பற்றுகிறீர்கள் என்றும் சொன்னார். நான் சொன்னவை உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துங்கள். உண்மையான இறைவனும் இறைத்தூதரும் யார் என்பது பற்றிய உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்’ என்றார்.
அங்கிருந்த அனைவரும், ‘ஆமாம்… ஆமாம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உடனே சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர்.
கன்ஃபூசியஸின் ஆதரவாளரான சீனர் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் சிந்தித்தார். கண்களை மெள்ளத் திறந்தார். தனது கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டார். நிதானமாக, மென்மையாகப் பேச ஆரம்பித்தார்.
(தொடரும்)
இரவுகள் என்றும் கனவுகள்.
கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது.
யார் சொன்னது “காலத்தை கடக்க முடியாது என்று “?
நம் தாத்தா , பாட்டி சொன்ன ; சொல்லிக்கேட்ட கதைகள் -ஏராளம் ,ஏராளம்.
இந்த கதைகளை காலத்தின் எல்லையை வைத்து நிர்ணயிக்க முடியாது.
நான் ஒரு நாள் என்பாட்டியிடம் கேட்டேன்.
கடவுள் யார்?
கண்ணை மூடிப்பார் கடவுள் தெரிவார்!!!
கண்ணை மூடினேன், தெரியவில்லை என்றேன். திரும்பவும் செய்யச் சொன்னாள் என் அம்மாச்சி!!!
நான் ‘கவிஞர் இல்லை’ கடவுளை காண என்றேன்;
தொடர்ந்தது என் இமைகள்;
கடந்தது என் கற்பனைகள்.
-இப்போது ஒரு வினவல்;
எப்படி அறிவது ?
பாட்டி- ‘எனக்கான வைத்தியத்தை கொடுத்தாள்’.
தெரிதலில் தெளிதல் பெற
அறிவதில் ஆர்வம் வேண்டும்.
இந்த அறிதல் தொடர்ந்தால் “கவிஞரே கடவுள் என்றாள்”.
என் “அநுபூதி ” சொன்னது.
நீ படைக்கப்பட்டு இருக்கிறாய்.
உன் எழுதளும், வீழ்தளும் உன் சக படைப்பின் உழைப்பினால் அன்றி வேறு எதுவும் இல்லை.
எனவே “தான்” என்ற தன்னை மறந்து “தமது” என்ற ஏற்றுமை ஒங்க உணர்வு கொள்.
மனித உணர்வே ஆத்ம உணர்வு; ஆன்மீக உணர்வு. அன்பை அறவணை ;ஆற்றல் பெறுகும்.
உன் கடமை சித்தமாகும்.
கடவுளுக்கு நன்றிகள்.