கன்ஃபூசியஸின் ஆதரவாளரான சீனர் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் சிந்தித்தார். கண்களை மெள்ளத் திறந்தார். தனது கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டிக் கொண்டார்.நிதானமாக, மென்மையாகப் பேச ஆரம்பித்தார்:
ஐயா… மத நம்பிக்கைகளில் ஒருவருடைய கருத்தை இன்னொருவர் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு கர்வமே காரணம். இதைப் புரியவைக்க நான் ஒரு கதை சொல்கிறேன்.
நான் சீனாவில் இருந்து இங்கு ஒரு ஆங்கிலேயக் கப்பலில் வந்தேன். அது உலகம் முழுவதும் செல்லும் கப்பல். வழியில் சுமத்ரா தீவின் கிழக்குக் கரையில் நல்ல தண்ணீருக்காக எங்கள் கப்பல் நிறுத்தப்பட்டது. மதிய நேரம். கரையில் இறங்கிய எங்களில் சிலர், அங்கிருந்த தென்னை மரத் தோப்பில் சென்று அமர்ந்துகொண்டோம். கிராமம் ஒன்று அருகில்தான் இருந்தது. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் எங்கள் குழுவில் இருந்தனர்.
நாங்கள் அங்கே அமர்ந்திருந்தபோது கண் தெரியாத ஒருவர் அங்கு வந்தார். அவர் சூரியனைத் தொடர்ந்து நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்ததால் கண் பார்வை பறிபோயிருந்தது.
சூரிய ஒளி என்பது உண்மையில் என்ன..? அந்த ஒளியைக் கைப்பற்றுவது எப்படி என்று அவர் பரிசோதனை செய்துபார்த்திருக்கிறார். தொடர்ந்து அப்படிச் சூரியனைப் பார்த்துக் கொண்டேயிருந்ததால் கண் பார்வை போய்விட்டது.
அவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்: சூரிய ஒளி ஒரு திரவம் அல்ல; அப்படி இருந்திருந்தால் ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொன்றுக்குள் ஊற்ற முடிந்திருக்கும். காற்று அதை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்த முடிந்திருக்கும். அது நெருப்புமல்ல; நெருப்பாக இருந்திருந்தால் தண்ணீர் அதை அணைத்திருக்கும். சூரிய ஒளி என்பது ஆவியுமல்ல; ஏனென்றால் அதைக் கண்ணால் பார்க்க முடிகிறது. எனவே சூரிய ஒளி என்பது திரவமல்ல; நெருப்பு அல்ல; ஆவியுமல்ல. அது எந்தப் பொருளுமே இல்லை. எதுவுமே இல்லை.
சூரியனையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த்தாலும் அதையே நினைத்துக் கொண்டிருந்ததாலும் பார்வையையும் சிந்திக்கும் மனதையும் இழந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, சூரியன் என்ற ஒன்று இல்லவே இல்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்.
இந்தப் பார்வை இழந்தவருடன் ஓர் அடிமையும் வந்திருந்தார். தென்னை மர நிழலில் தன் எஜமானரை அமரவைத்த பின்னர் அந்த அடிமை, தரையில் கிடந்த தேங்காயைக் கொண்டு ஓர் இரவு விளக்கு செய்ய ஆரம்பித்தார். முதலில் அதன் நார்ப்பகுதியைக் கொண்டு ஒரு திரி தயாரித்தார். தேங்காயைப் பிழிந்து எண்ணெய் எடுத்து அதன் ஓட்டில் விட்டார். தேங்காய் நாரில் செய்த திரியை அதில் போட்டார்.
இதையெல்லாம் செய்து முடித்த அடிமை எஜமானருக்கு அருகில் வந்து அமர்ந்தார். பார்வையிழந்த அந்த எஜமானர் அவனிடம் சொன்னார்:
நான் உன்னிடம் சூரியன் இல்லை என்று சொன்னேனே சரிதானே. பார் எவ்வளவு இருட்டாக இருக்கிறது. ஆனாலும் சூரியன் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இருக்கிறது என்றால் என்னதான் அது?
அடிமை சொன்னான்: எனக்கு சூரியனைப் பற்றி எதுவும் தெரியாது. அதைத் தெரிந்துகொள்வது என் வேலையும் இல்லை. ஆனால், ஒளி என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும். இதோ நான் ஓர் இரவு விளக்கு தயாரித்திருக்கிறேன். இதைக் கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்யமுடியும். இரவு நேரத்தில் இந்தக் குடிசையில் இருக்கும் எதையும் என்னால் எடுத்துக் கொள்ளவும் முடியும்.
தேங்காய் ஓட்டைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த அடிமை மேலும் சொன்னான்: இதுவே என் சூரியன்.
தாங்கு கட்டைகளுடன் அருகில் அமர்ந்திருந்த ஊனமுற்றவர் ஒருவர், இதைக் கேட்டதும் சிரித்தார்.
உங்களுடைய தீவைத் தாண்டி எங்குமே சென்றிருக்காத மூடர்களான நீங்கள் உங்கள் நாட்டில் மட்டுமே சூரியன் உதித்து மறைவதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சூரியன் என்றால் என்ன என்பதே தெரிந்துகொள்ளாமல், உங்கள் வாழ் நாள் முழுவதற்கும் குருடராகிவிட்டீர்கள். நான் அது என்ன என்று சொல்கிறேன். அது நெருப்புப் பந்து. கடலில் இருந்து தினமும் காலையில் உதிக்கிறது. தினமும் மாலையில் எங்கள் தீவின் மறு முனையில் இருக்கும் மலைகளில் சென்று மறைந்துவிடுகிறது. நாங்கள் இதையெல்லாம் பார்த்திருக்கிறோம். உங்களுக்கு மட்டும் கண் பார்வை இருந்தால் நீங்கள் இதைப் பார்த்திருக்கமுடியும்.
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மீனவர் சொன்னார்: நீங்கள் உங்களுடைய இந்தத் தீவை விட்டு வெளியே எங்கும் போனதே இல்லை என்பது இதிலிருந்து தெரியவருகிறது. நான் மீன்பிடிப் படகில் சென்றதுபோல் நீங்களும் சென்றிருந்தால், சூரியன் உங்கள் தீவின் மலைகளுக்குப் பின்னால் அல்ல; காலையில் கடலில் இருந்து உதிப்பது போலவே மாலையிலும் கடலுக்குள்ளேயே மறைகிறது என்பது உங்களுக்குத் தெரியவந்திருக்கும். நான் சொல்வது உண்மை. நான் தினமும் இதை என் கண்ணால் பார்த்துவருகிறேன்.
எங்களுடன் வந்திருந்த ஓர் இந்தியர் குறுக்கிட்டுச் சொன்னார்: ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் கூட இப்படி முட்டாள்த்தனமாகப் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு நெருப்புப் பந்து கடல் நீருக்குள் சென்றால் அணையாமல் எப்படி இருக்கமுடியும்? சூரியன் என்பது நெருப்புப் பந்தே அல்ல; அது ஒரு தெய்வம். சூரிய தேவன். பொன்னாலான மேரு மலையின் மேல் தேரில் ஏறிச் செல்கிறார். ராகு, கேது எனும் தீய நாகங்கள் அவரைத் தாக்கி அவரை முழுங்கிவிடும். அப்போது பூமியே இருண்டுவிடும். எங்கள் பூசாரிகள் அந்த சூரிய தேவனின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அதைத் தொடர்ந்து அவருக்கு விடுதலை கிடைத்துவிடும். உங்களுடைய தீவைத் தாண்டி எங்குமே சென்றிருக்காத மூடர்களான நீங்கள் மட்டுமே உங்கள் நாட்டில் மட்டுமே சூரியன் உதித்து மறைவதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்றார்.
அங்கிருந்த எகிப்திய கப்பலின் எஜமானர் சொன்னார்:
இல்லை நீங்கள் சொல்வது தவறு. சூரியன் ஒரு தெய்வம் அல்ல. இந்தியாவை மட்டுமோ அதன் தங்க மலையை மட்டுமோ அது சுற்றிவரவில்லை. நான் கருங்கடல் வரையில் பயணம் செய்திருக்கிறேன். அரேபியக் கடலின் கடற்கரைகள் அனைத்துக்கும் சென்றிருகிறேன். மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ் என பல இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். சூரியன் ஒட்டு மொத்த உலகத்துக்கும் ஒளி தருகிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல. ஒரே ஒரு மலையை மட்டும் சுற்றிவரவில்லை. கிழக்கில் ஜப்பான் தீவுகளுக்கு அப்பால் வெகு தொலைவில் உதிக்கிறது. இங்கிலாந்து தீவுகளையும் தாண்டி எங்கோ மேற்கே மறைகிறது. இதனால்தான் ஜப்பானியர்கள், தங்கள் நாட்டை “நிப்பான்’ என்று அழைக்கிறார்கள். அதற்கு சூரியனின் பிறப்பிடம் என்று அர்த்தம். இது எனக்கு நன்கு தெரியும். நானும் இதைப் பார்த்திருக்கிறேன். கடலின் மறு கோடிவரை பயணம் செய்த எங்கள் தாத்தா சொல்லி நிறையவே கேள்விப்பட்டும் இருக்கிறேன்.
எகிப்தியர் மேலும் சொல்லியிருப்பார். ஆனால், அதற்குள் ஒரு ஆங்கிலேய மாலுமி குறுக்கிட்டார்:
சூரியனைப்பற்றி அதன் நகர்வுகளைப் பற்றி எங்கள் நாட்டினருக்குத் தெரிந்த அளவுக்கு உலகில் யாருக்குமே தெரியாது. சூரியன் எங்கும் உதிப்பதும் இல்லை. மறைவதும் இல்லை. இது இங்கிலாந்தில் இருக்கும் அனைவருக்கும் நன்கு தெரியும். அது இடைவிடாமல் பூமியைச் சுற்றிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் உலகம் முழுவதையும் சுற்றி வந்திருக்கிறோம். எங்குமே சூரியனுடன் மோதிக் கொண்டதே இல்லை. அது ஒரு இடத்தில் உதித்து ஒரு இடத்தில் மறைவதாக இருந்தால் நாங்கள் அதன் மீது எங்காவது மோதியிருப்போமே. எனவே அது உலகைச் சுற்றிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் எங்கெல்லாம் சென்றோமோ அங்கெல்லாம் அது காலையில் கிழக்கு உதித்தது. மாலையில் மேற்கில் மறைந்தது. இங்கு நடப்பதுபோலவேதான் உலகில் எங்கு சென்றாலும் நடக்கிறது.
அந்த ஆங்கிலேயர் ஒரு குச்சியை எடுத்து தரையில் வட்டங்கள் வரைந்து, சூரியன் எப்படியெல்லாம் வானில் நகர்கிறது; உலகை எப்படியெல்லாம் சுற்றுவருகிறது என்று காட்டினார். ஆனால், அவரால் அதை முழுவதும் தெளிவாக விளக்கமுடியவில்லை. கப்பலின் மாலுமியைக் கை காட்டி அந்த ஆங்கிலேயர் சொன்னார்:
இவருக்கு என்னைவிட அதிகம் தெரியும். தெளிவாக விளக்கமாக இவர் சொல்வார்.
அந்த மாலுமி மிகவும் புத்திசாலி. தன்னைப் பேசும்படி மற்றவர்கள் கேட்டுக் கொள்ளும்வரை அமைதியாக அனைவர் பேசுவதையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எல்லார் கவனமும் அவர் பக்கம் திரும்பியதும் அவர் சொன்னார்:
நீங்கள் எல்லாரும் ஒருவரை ஒருவர் தவறாக வழிநடத்துகிறீர்கள். மேலும் நீங்களே குழம்பியும் இருக்கிறீர்கள். சூரியன் பூமியைச் சுற்றிச் சுழல்வதில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. 24 மணி நேரத்துக்கு ஒருமுறை சூரியனை நோக்கித் திரும்புகிறது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் மட்டுமல்ல; நாம் இப்போது இருக்கும் சுமத்ரா தீவு மட்டுமல்ல; ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகில் இருக்கும் அனைத்து பகுதிகளும் அப்படித்தான்.
ஒரே ஒரு மலை அல்லது ஒரே ஒரு தீவு அல்லது ஒரே ஒரு கடல் அல்லது ஒரே ஒரு பூமிக்கு மட்டுமே ஒளி தந்துகொண்டிருக்கவில்லை. பிற கோள்களுக்கும் அது ஒளி தருகிறது. நாம் நம் காலடியில் இருப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காமல் மேலே ஆகாயத்தையும் பார்த்தால் இவையெல்லாம் புரியவரும். சூரியன் உங்களுக்காக மட்டுமே உங்களுடைய நாட்டுக்காக மட்டுமே ஒளி தருகிறது என்றெல்லாம் பேசமாட்டீர்கள்.
உலகின் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்; ஆகாயத்தை மிக அதிக அளவுக்கு ஆராய்ந்தவரான அந்த மாலுமி அப்படியாகச் சொன்னார்.
இந்தக் கதையைச் சொல்லி முடித்த கன்பூசிய மாணவராகிய சீனர் சொன்னார்: அப்படியாக மத நம்பிக்கை விஷயத்தில் ஒவ்வொருவர் கொள்ளும் கர்வமே/பெருமிதமே பிழைகளுக்கும் மற்றவர்களை மறுதலிக்கவும் வழிவகுக்கிறது. சூரியன் விஷயத்தில் எது உண்மையாக இருக்கிறதோ அதுவே கடவுள் விஷயத்திலும் உண்மையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தமக்கென்று அல்லது தமது பூர்விகப் பகுதிக்கென்று தனி கடவுள் வேண்டும் என்று விரும்புகிறார்கள். உலகுக்குள்ளேயே அடக்க முடியாத கடவுளை ஒவ்வொரு நாடும் தாம் கட்டிய கோவில்களுக்குள் அடக்கிவைக்க விரும்புகிறார்கள்.
இறைவன், உலகில் உள்ள மனிதர்கள் அனைவரையும் ஒரே மதம், ஒரே நம்பிக்கைக்குள் ஒன்றுபடுத்துவதற்காக இறைவன் கட்டியிருக்கும் கோவிலோடு நம் யாருடைய கோவிலையாவது ஒப்பிட்டுப் பேசமுடியுமா என்ன?
கடவுளின் சொந்த பூமி இது. அதுவே அவர் எழுப்பிய கோவில். அவர் உருவாக்கிய இந்தக் கோவிலை முன் மாதிரியாகக் கொண்டே மனிதர்கள் கட்டும் கோவில்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன. புனித தீர்த்தங்கள், உயரமான கூரைகள், விளக்குகள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், புனித சட்ட நூல்கள், காணிக்கைகள், பலிபீடங்கள், பூசாரிகள் என ஒவ்வொரு கோவிலுக்கும் இருக்கின்றன. ஆனால் கடவுள் கட்டிய கோவிலுக்குக் கடல் நீர் இருப்பதுபோல், அதி உயரக் கூரையாக ஆகாயம் இருப்பதுபோல் விளக்காக சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இருப்பதுபோல் நம் கோவில்கள் எதிலேனும் இருக்கிறதா?
நம் கோவில்களில் அவரைப் போல் அன்பு செலுத்தி பரஸ்பரம் உதவும் மனிதர்கள் இருக்கிறார்களா? கடவுள் மனிதர்களின் மகிழ்ச்சிக்காகப் படைத்திருக்கும் விஷயங்கள், அவர் தந்திருக்கும் ஆசிகள் இவற்றைப் போல் எளிதில் புரிந்துகொள்ளும்படியாக நம் கோவில்களில் என்ன இருக்கின்றன? கடவுள் நம் ஒவ்வொருவரின் இதயத்தில் எழுதும் மனசாட்சியின் மொழியைப் போல் தெளிவான சட்ட புத்தகம் நம்மிடம் எங்கே இருக்கிறது? அன்பில் திளைக்கும் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் மேற்கொள்ளும் சுய மறுப்புக்கு இணையாக எந்த தியாகத்தைச் சொல்லமுடியும். கடவுளுமே ஏற்றுக்கொள்ளும் நல்ல மனிதனின் இதயத்தைப் போல் சிறந்த பீடம் எதுவாக இருக்கமுடியும்?
கடவுள் பற்றிய மனிதர்களின் கருத்தாக்கம் எந்த அளவுக்கு உயர்வாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவரை ஒருவர் அறிந்துகொள்ளமுடியும். கடவுளை மிக அதிகமாக நன்கு புரிந்துகொண்டால், கடவுளின் நல்லெண்ணம், கருணை, மனிதர் மீதான நேசம் இவற்றை மனிதர்களும் நகலெடுக்க ஆரம்பிப்பார்கள். அதுவே அவர்களை அவர்பக்கம் இட்டுச் செல்லும்.
எனவே உலகம் முழுவதையும் தன் ஒளியால் நிரப்பும் சூரியனைப் புரிந்துகொள்பவர்கள், ஒட்டுமொத்த சூரியனின் ஒற்றை ஒளிக் கதிரை மட்டுமே தாம் உருவாக்கிய சிலையின் முலம் தரிசிக்கும் மக்களை பழிக்கவேண்டாம். மூட நம்பிக்கையில் இருப்பவர்களை வெறுக்கவேண்டாம். கண் தெரியாமல் சூரியனையே பார்க்க முடியாமல் இருக்கும் நம்பிக்கையற்றவரையும் வெறுக்கவேண்டாம்.
கன்பூசியஸின் மாணவரான சீனர் இப்படியாகச் சொன்னார். காபி நிலையத்தில் இருந்த அனைவரும் அதைக் கேட்டு அமைதியில் ஆழ்ந்தனர். தமது மதமே சிறந்தது என்ற சண்டையை அதோடு நிறுத்திக் கொண்டனர்.
(1893)
0