Skip to content
Home » உலகக் கதைகள் #2 – ரெனோசுகே அகுதகவாவின் மூங்கில் காட்டுக்குள்ளே

உலகக் கதைகள் #2 – ரெனோசுகே அகுதகவாவின் மூங்கில் காட்டுக்குள்ளே

மூங்கில் காட்டுக்குள்ளே

காவல் துறை அதிகாரியிடம் மரவெட்டி கொடுத்த வாக்குமூலம்

ஆமாம் ஐயா, நான் தான் அந்த சடலத்தை முதலில் பார்த்தேன். வழக்கம் போல் இன்று காலையில் நான் மரம்வெட்ட காட்டுக்குப் போயிருந்தேன். மலைக் காட்டுக்குள் ஒரு பள்ளத்தாக்கில் இந்த சடலத்தைப் பார்த்தேன். சரியாக எங்கு என்று சொல்லவா? யமஷினா சாலையில் இருந்து 150 மீட்டர்கள் உள்ளே காட்டுக்குள். மூங்கில் மற்றும் தேவதாரு மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த காடு. நீலப் பட்டாடையும் க்யோட்டோ பாணியில் தலைப்பாகையும் அணிந்திருந்த இந்த உடம்பு தரையில் மல்லாந்து கிடந்தது. மார்பில் வாளால் குத்தப்பட்ட தடம் இருந்தது. உடலுக்கு அருகில் உதிர்ந்திருந்த மூங்கில் இலைக் குப்பைகளில் ரத்தத்துளிகள் தென்பட்டன. ஆமாம், ரத்தம் உறைந்து போயிருந்தது. மார்புக் காயம் உலர்ந்திருந்தது என்றுதான் நினைக்கிறேன். என் காலடிச் சத்தம் கேட்டுக்கூட விலகாமல் ஈய்க்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

வாள் அல்லது அதுபோன்ற வேறு எதையேனும் அங்கே பார்த்தாயா என்று கேட்கிறீர்களா? இல்லை. அப்படி எதையும் பார்க்கவில்லை. அருகில் இருந்த தேவதாரு மரத்தின் வேர் முண்டில் ஒரு கயிறு காணப்பட்டது. அதோடு, அருகில் ஒரு சீப்பும் இருந்தது. அவ்வளவுதான். இறந்தவர் அநேகமாக உயிர் துறக்கும் முன் கடுமையாகச் சண்டைபோட்டிருக்கவேண்டும். அருகில் இருந்த மூங்கில் தண்டுகள், இலைகள் எல்லாம் வெட்டப்பட்டதுபோல்தரையில் விழுந்து கிடந்தன.

அருகில் குதிரை ஏதேனும் இருந்ததா?

இல்லை ஐயா, அடர்ந்த காடு; மனிதர்கள் நுழைவதே மிகவும் கடினம். குதிரையாலெல்லாம் அந்த இடத்துக்குச் செல்லவே முடியாது.

காவல் துறை அதிகாரியிடம் பெளத்த நாடோடித் துறவி தந்த வாக்குமூலம்

இறந்தவரை உயிருடன் பார்த்தபோது நேரமா? நேற்று மதியம் ஐயா. துரதிஷ்டசாலியான இந்த மனிதர், ஷேகியாமா-யமாஷினா சாலையில் ஷேகியாமைவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். குதிரையில் அமர்ந்தபடி ஒரு பெண்ணும் இவருடன் சென்றுகொண்டிருந்தார். இறந்தவரின் மனைவி என்று தெரிந்துகொண்டேன். தலையில் போட்டிருந்த துணி அந்தப் பெண்ணின் முகத்தை மறைத்தபடி இருந்தது. வெளிறிய ஊதா நிற உடை அணிந்திருந்தார். குதிரை செம்மண் நிறத்தில் இருந்தது. கழுத்துப் பகுதியில் நிறைய முடியும் இருந்தது.

பெண்ணின் உயரமா? அது வந்து… நான்கு அடி ஐந்துஅங்குலம் இருக்கலாம். நான் ஒரு பெளத்த துறவி. எனவே அந்தப் பெண்ணை நான் அதிகம் கவனித்திருக்கவில்லை.

இறந்த மனிதரிடம் வாள், வில், அம்பு எல்லாம் இருந்தன. அவருடைய அம்பறாத்தூளியில் சுமார் இருபது அம்புகள் இருந்திருக்கும். அவருக்கு இப்படியான சோக முடிவு ஏற்படும் என்று நான் நினைத்துப் பார்த்திருக்கவே இல்லை. அதிகாலைப் பனித்துளிபோல், மின்னல் வெட்டு போல் மனித வாழ்க்கை ஒரு நொடியில் மறைந்துவிடுகிறது பாருங்கள். அந்த மனிதர் மீதான என் பரிவை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.

காவல் துறை உயரதிகாரியிடம் காவலர் தந்த வாக்குமூலம்

நான் கைது செய்தவனைப் பற்றிச் சொல்கிறேன். அவன் ஒரு பிரபல கொள்ளையன். பெயர் தஜோமரு. நான் அவனைக் கைது செய்தபோது குதிரையில் இருந்து கீழே விழுந்திருந்தான். அவாதகுச்சியில் இருந்த பாலத்தினருகில் வேதனையில் முனகிக்கொண்டிருந்தான்.

நேரமா? நேற்று முன்னிரவு நேரம். நான் அவனை முன்பே கைது செய்ய முயற்சி செய்தேன். ஆனால், தப்பித்துவிட்டான். அடர் நீல நிற கிமோனோ பட்டாடை உடுத்தியிருந்தான். நீண்ட வாள் ஒன்றும் அவனிடம் இருந்தது. வில்லும் அம்பும் அவனுக்கு எங்கிருந்தோ கிடைத்திருந்தது. இந்த வில்லும் அம்பும் இறந்தவர் வைத்திருந்ததைப் போலவே இருந்தன என்கிறீர்கள். அப்படியானால், தஜோமரு தான் கொலை செய்திருக்கவேண்டும். தோல் பட்டைகளால் கட்டப்பட்ட வில், கறுப்பு நிற அம்பறாத்தூளி, கழுகு இறகுகள் பொருத்தப்பட்ட 17 அம்புகள் இவையெல்ல்லாம் அவனிடம் இருந்தன. ஆம், நீங்கள் சொன்னதுபோல் அந்தக் குதிரை செம்மண் நிறத்தில் நிறைய கழுத்து முடியுடன் இருந்தது. கல் பாலத்துக்கு சற்று தள்ளி இந்தக் குதிரை சாலையோரப் புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்தது. அதன் நீண்ட கடிவாளம் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. குதிரையால் கீழே தள்ளப்பட்டவனை கடவுள்தான் காப்பாற்றினார் என்றே சொல்லவேண்டும்.

க்யோடோ பிரதேசத்தில் இருக்கும் கொள்ளையன்களில் இந்த தஜோமருதான் பெண்களைத் துன்புறுத்துவதில் மிகவும் கொடியவன். கடந்த இலையுதிர் காலத்தில் பிண்டோராவுக்குப் பின்பக்கம் இருக்கும் டோரிபி மலைக் கோவிலுக்கு வந்த பெண்ணும் அவருடைய மகளும் கொல்லப்பட்டுவிட்டனர். அதைச் செய்தது தஜோமருவாகத்தான் இருக்கவேண்டும். இந்த வழியில் சென்ற ஆணை இவன் கொன்றிருக்கிறானென்றால் அவருடைய மனைவியை என்ன செய்திருப்பான் என்று சொல்லவே முடியாது. அதையும் நீங்கள் தீர விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மூதாட்டியின் வாக்குமூலம்

இறந்தவர் என் மருமகன். அவர் கியோட்டோவில் இருந்து வரவில்லை. வாகாஸா பிராந்தியத்தில் இருக்கும் கோகுஃபுவைச் சேர்ந்த சாமுராய் அவர். அவருடைய பெயர் தகேகிகோ அல்ல; கனாஸவா. அவருடைய வயது 26. மிகவும் நல்லவர். மற்றவரைக் கோபப்படுத்தும்படியாக நிச்சயம் எதுவும் அவர் செய்திருக்கமாட்டார்.

என் மகளின் பெயர் மசாகோ. வயது 19. சுறுசுறுப்பானவள். சிரித்துப் பேசி அன்பாக நடந்துகொள்வாள். தன் கணவரைத் தவிர வேறு யாரையும் அவளுக்குத் தெரியாது. சிறிய உருவம், நீள் வட்ட முகம், கறுப்பு நிறம். இடது கண்ணுக்கு மேலே ஒரு மச்சம் இருக்கும்.

நேற்று அவள் தன் கணவருடன் வாகஸாவுக்குப் புறப்பட்டாள். இப்படி ஒரு சோக முடிவு ஏற்படும் என்று நினைத்தே பார்க்கவில்லை. என் மகளுக்கு என்ன ஆனது? என் மருமகன் இறந்துவிட்டார். என் மகளுக்கு என்ன ஆனது? அதுவே எனக்குக் கூடுதல் வேதனை தருகிறது. எவ்வளவு கஷ்டப்பட்டாவது அவளைக் கண்டுபிடித்துவிடுங்கள். அந்தக் கொள்ளையன் தஜோமருவை நான் ஆழமாக வெறுக்கிறேன். என் மருமகனைக் கொன்றது மட்டுமல்ல… என் மகளையும் (மேற்கொண்டு வார்த்தைகள் வராமல் அழத் தொடங்குகிறார்)

தஜோமருவின் வாக்குமூலம்

அவனைக் கொன்றேன். ஆனால், அவளை அல்ல.

அவள் எங்கே? எனக்குத் தெரியாது. என்னை எவ்வளவுதான் சித்ரவதை செய்தாலும் எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நான் எப்படிச் சொல்லமுடியும்? நிலைமை இப்படியாகியிருக்கும்போது எதையும் நான் மறைக்கவும் விரும்பவில்லை.

நேற்று நண் பகல் தாண்டி இந்த தம்பதியை சாலையில் சந்தித்தேன். அந்த நேரம் பார்த்து காட்டில் இருந்து வீசிய தென்றல் காற்று அந்தப் பெண்ணின் முகத்திரையைச் சற்று விலக்கிக் காட்டியது. அவளுடைய அழகிய முகத்தை நான் ஒரு நொடி பார்த்தேன். சட்டென்று திரை மூடிக் கொண்டது. அவளுடைய முகம் போதிசத்வரின் முகம் போல் ஒளிவீசியது. இந்த ஆணைக் கொன்றாவது அவளைக் கைப்பற்றிவிடவேண்டும் என்று அந்த நொடியே முடிவு செய்தேன்.

ஏனா? கொலையெல்லாம் எனக்குப் பெரிய விஷயமே இல்லை. ஒரு பெண்ணைக் கைப்பற்றவேண்டுமென்றால் அவளுடைய ஆணைக் கொன்றுதான் ஆகவேண்டியிருக்கும். என் இடுப்பில் தொங்கும் வாளைக் கொண்டுதான் நான் கொலை செய்வேன். நான் மட்டுமேவா கொலை செய்கிறேன். நீங்கள் வாள் கொண்டு கொல்வதில்லை. உங்கள் பணம், அதிகாரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொல்கிறீர்கள். சில நேரங்களில் அடுத்தவர்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லிக் கொண்டு கொல்கிறீர்கள். அவர்கள் ரத்தம் சிந்துவதில்லைதான். உடம்பில் உயிர் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவர்களின் ஆன்மாவை நீங்கள் கொன்றிருப்பீர்கள். யார் பெரிய குற்றவாளி நீங்களா நானா? (எள்ளலாகச் சிரிக்கிறான்)

ஆணைக் கொல்லாமலேயே பெண்ணைக் கவர முடிந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். அதைத்தான் முதலில் செய்யத் தீர்மானித்தேன். அவனைக் கொல்லாமலேயே அவளைச் சிறைப்பிடிக்கத் தீர்மானித்தேன். ஆனால், யமாஷிகா சாலையில் இதைச் செய்யமுடியாது. எனவே அவர்களை மலைக் காட்டுக்குள் ஆசைகாட்டி இழுத்துச் சென்றேன்.

எப்படிச் செய்தேனா? அது மிகவும் எளிது. வழிப்போக்கன் போலவே நானும் இவர்களுடன் சிறிது தூரம் சென்றேன். பேச்சுக்கொடுத்தபடியே, மலையில் ஒரு சிறிய மணல் மேடு இருந்தது. அதைத்தோண்டிப் பார்த்தபோது வாள்களும் பிற விலை மதிப்பு மிகுந்த பொருட்களும் இருப்பதைப் பார்த்தேன் என்று சொன்னேன். அவற்றையெல்லாம் எடுத்து மலைக்குப் பின்னால் இருக்கும் காட்டுக்குள் வேறொரு இடத்தில் புதைத்திருக்கிறேன்; அவற்றை மிகவும் மலிவான விலைக்கு யாருக்கேனும் விற்றுவிட விரும்புகிறேன் என்றும் சொன்னேன்.

அதன் பின்… பேராசை எல்லாரையும் வீழ்த்திவிடும் அல்லவா. நான் விரித்த வலையில் விழுந்தான். விலைஉயர்ந்த பொருட்களைப் புதைத்து வைத்திருக்கும் காட்டுப் பகுதிக்கு என்னுடன் வர சம்மதித்தான். அடர்ந்த காட்டுப் பகுதிக்கு முன்னால் வந்ததும் இருவரையும் உள்ளே வாருங்கள் சென்று பார்க்கலாம் என்று கூப்பிட்டேன். ஆணுக்குப் பேராசை கண்ணை மறைத்திருந்தது. உடனே எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்றான். அந்தப் பெண் நான் குதிரை மேலேயே இருந்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள். மிகவும் அடர்ந்த காட்டுப் புதர். எனவே அவள் அப்படி தயங்கியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. நான் திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. அவளை சாலையிலேயே விட்டுவிட்டு இவனை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் போனேன்.

முதலில் சிறிது தூரத்துக்கு மூங்கில் மரங்கள் மட்டுமே இருந்தன. ஐம்பது அடிக்கு அப்பால், சற்று திறந்த வெளியிருந்தது. அங்கு தேவதாரு மரங்கள் வரிசையாக வளர்ந்திருந்தன. எனக்கு மிகவும் வாகான இடம். நான் காட்டுச் செடிகளை விலக்கியபடியே உள்ளே சென்றேன். தேவதாரு மரமொன்றின் பின்னால் அந்த பொக்கிஷங்களைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னேன். கஷ்டபட்டு மரக் கிளைகளை தள்ளியபடி வந்தவன் அந்த தேவதாரு மரத்தைத் தொலைவில் இருந்து பார்த்தான். மூங்கில் மரங்கள் முடிந்து வரிசையாக தேவதாரு மரங்கள் வளர்ந்திருந்த பகுதிக்கு முன்னேறி வந்தான். அங்கு அவன் வந்ததும் சட்டென்று பின் பக்கமாகச் சென்று அவனை இறுக்கப் பிடித்தேன். ஏனென்றால் அவன் வாள் ஏந்திய வீரன். மிகவும் பலசாலியும் கூட. ஆனால் நான் திடீரென்று அவனை பின்பக்கமாகச் சென்று இறுக்கிப் பிடித்ததை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. உடனே அவனை அந்த தேவதாரு மரத்தில் கட்டிப் போட்டேன்.

கட்டிப் போட கயிறு எங்கிருந்து கிடைத்தது என்கிறீர்களா? நான் தான் கொள்ளைக்காரனாயிற்றே. என்னிடம் கயிறு இருந்தது. உயரமான மதில்களை ஏறிச் சென்று திருட எனக்கு அது அவசியமாயிற்றே. கீழே உதிர்ந்து கிடந்த மூங்கில் குப்பைகளை எடுத்து அவன் வாயில் திணித்து சத்தம் போடமுடியாமல் தடுத்தேன்.

அவனைக் கட்டிப் போட்டதும் அந்தப் பெண்ணைப் பார்க்கப் போனேன். அவருடைய கணவருக்கு திடீரென்று உடல்நிலை மோசமாகி மயங்கி விழுந்துவிட்டதாகச் சொல்லி அவளை அவனுக்கு உதவ வரும்படிச் சொன்னேன். இந்தப் பொய் நன்கு வேலை செய்தது. அந்தப் பெண் உடனே பதறியடித்து என்னுடன் காட்டுப் புதருக்குள் வந்தாள். நான் அவள் கைகளைப் பற்றியபடி அழைத்துச் சென்றேன். தேவதாரு மரப் பகுதிக்கு வந்தவள் தன் கணவர் கட்டிப் போடப்பட்டிருப்பதைப் பார்த்ததும் இடுப்பில் வைத்திருந்த குறுவாளை சட்டென்று ஆவேசத்துடன் உருவினாள். இப்படியான பெண்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். நான் மட்டும் கொஞ்சம் மெத்தனமாக இருந்திருந்தால் அந்தப் பெண் என்னைக் குத்தி வீழ்த்தியிருப்பாள். நான் சட்டென்று விலகித் தப்பித்தேன். அவள் மீண்டும் என்னை நோக்கிக் குறுவாளுடன் பாய்ந்து வந்தாள். அவளுடைய வேகத்தைப் பார்த்தால் வேறு ஆளாக இருந்திருந்தால் குத்திக் கொன்றிருப்பாள். ஆனால் நான் தான் தஜோமெரு ஆயிற்றே. என்னிடம் முடியுமா? என் வாளை உருவாமலேயே அவள் கையில் இருந்த ஆயுதத்தைக் கீழே விழவைத்தேன். ரொம்பவும் ஆவேசமாக இருந்த அவள் ஆயுதத்தை இழந்ததும் முற்றிலும் கைவிடப்பட்டவளானாள். அவளுடைய கணவனைக் கொல்லாமலேயே என் ஆசையைத் தணித்துக்கொள்ள முடிந்தது.

ஆமாம். அவனைக் கொல்லாமலேயே. அவனைக் கொல்லவேண்டும் என்று நான் விரும்பியிருக்கவே இல்லை. அந்தப் பெண் அழுதுகொண்டிருந்தாள். அவளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓட முயன்றேன். ஆனால் அவள் என்னைப் பாய்ந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள். தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தெரிந்துகொண்டிருக்கும் இரண்டு பேர் உயிருடன் இருக்கும்வரையில் தன்னால் நிம்மதியாக வாழவே முடியாது. நீங்கள் இரண்டு பேரும் சண்டையிடுங்கள். யார் ஜெயிக்கிறீர்களோ அவர்களுடன் வந்துவிடுகிறேன் என்று அவள் சொன்னாள். அதற்குப் பின்னரே அவனைக் கொன்றுவிடவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் பூதாகரமாக உருவெடுத்தது.

இதைச் சொல்வதால் நான் உங்களைவிட மிகவும் கொடியவனாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அவளுடைய முகத்தை நீங்கள் பார்த்திருந்தால் இப்படிச் சொல்லமாட்டீர்கள். அந்த நொடியில் அவள் கண்களில் தெரிந்த அந்த ஒளி… அவளை நான் கண்ணோடு கண் பார்த்தேன். என் தலையில் இடியே விழுந்தாலும் அவளை என் மனைவியாக்கிக் கொண்டுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆம், அவளை என் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினேன். அந்த ஒரு எண்ணமே என் மனம் முழுவதும் நிறைந்தது. நீங்கள் நினைப்பதுபோல் இது வெறும் காமம் இல்லை. காமம் மட்டுமே என் மனதில் இருந்திருந்தால் என் ஆசை தீர்ந்ததோடு அவளைக் கீழே பிடித்துத்தள்ளிவிட்டு நான் தப்பி ஓடியிருப்பேன். அவனுடைய ரத்தால் என் வாளை நனைத்திருக்கவேமாட்டேன். அந்த இருண்ட கானகத்தில் அவளுடைய ஒளி பொருந்திய முகத்தைப் பார்த்த நான் இவனைக் கொல்லாமல் அங்கிருந்து செல்லவேண்டாம் என்று முடிவெடுத்தேன்.

ஆனால், நான் அவனை நயவஞ்சகமாக, கோழை போல் கொல்ல விரும்பியிருக்கவில்லை. கட்டுகளை அவிழ்த்துவிட்டேன். என்னுடன் வாள் சண்டை போட அழைத்தேன். தேவதாரு மரத்தடியில் உங்களுக்குக் கிடைத்த கயிறு நான் விட்டுச் சென்ற கயிறுதான். கட்டுகளை அவிழ்த்ததும் அவன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கோபத்துடன் என் மீது பாய்ந்தான். எங்களுடைய வாள் சண்டை எப்படியெல்லாம் நடந்தது என்பது பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை. 23வது வாள் வீச்சின்போது, இதை நன்கு நினைவில் கொள்ளுங்கள்… என்னுடன் அவ்வளவு நேரம் தாக்குப் பிடித்த வேறொருவனை நான் இதுவரை பார்த்ததில்லை (உற்சாகச் சிரிப்பு)

அவன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும் என் வாளைத் தாழ்த்தியபடி நான் அவள் பக்கம் என் பார்வையைத் திருப்பினேன். ஆனால், எனக்கு அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவளை அங்கு காணவில்லை. காட்டுக்குள் அவளைத் தேடிப் பார்த்தேன். தேவதாரு மரக் கூட்டத்துக்குள் மறைந்திருப்பாள் என்று பார்த்தேன். ஆனால், அந்த அத்துவானக் காட்டில் இறந்து கொண்டிருக்கும் மனிதனின் வேதனை நிறைந்த குமுறல் மட்டுமே கேட்டது.

நாங்கள் இருவரும் வாள் சண்டை ஆரம்பித்த உடனேயே அவள் உதவி கோரி அங்கிருந்து தப்பியிருக்கக்கூடும். உடனே எனக்கு வாழ்வா சாவா பிரச்னையாகிவிட்டது தெரிந்தது. எனவே அவனிடமிருந்த வாளையும் வில் அம்பையும் திருடிக் கொண்டு மலைப்பாதையை நோக்கி ஓடினேன். அங்கு குதிரை மெளனமாக மேய்ந்து கொண்டிருந்தது. பின்னர் நடந்தவற்றைச் சொல்வதில் எந்தப் பெரிய நன்மையும் இல்லை. நகருக்குள் நுழைவதற்குள் ரத்தக் கறை படிந்த என் வாளைத் தூர எறிந்துவிட்டேன். இதைத் தவிர சொல்ல எனக்கு எதுவும் இல்லை. எனக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்பது எனக்குத் தெரியும். கடுமையான தண்டனை எது உண்டோ அதை எனக்குக் கொடுங்கள் (விரக்தி மேலிட)

பெண்ணின் வாக்குமூலம்

நீலப் பட்டு கிமொனோ அணிந்திருக்கும் அந்த நபர் அவனுடைய இச்சைக்கு என்னை அடிபணியவைத்தபின் என் கணவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். என் கணவருக்கு எவ்வளவு பயங்கரமாக அது இருந்திருக்கும். அவர் எவ்வளவு முயற்சி செய்த பின்னரும் அவரை இறுகக் கட்டியிருந்த கயிற்றில் இருந்து விடுதலை பெற முடியவில்லை. நான் தட்டுத் தடுமாறி அவர் பக்கம் செல்ல முயன்றேன். கிட்டத்தட்ட அவரை நோக்கி ஓடினேன். ஆனால் இந்த நபர் என்னைச் சட்டென்று தாக்கிக் கீழே விழவைத்துவிட்டான். அந்த நேரத்தில் என் கணவரின் கண்களில் இனம் புரியாத ஒரு ஒளியைப் பார்த்தேன். அதை எப்படி என்னால் விளக்கிச் சொல்ல என்றே தெரியவில்லை. அந்தக் கண்கள் இப்போதும் என் கண் முன் மின்னுகின்றன. அந்தப் பார்வை, ஒரு வார்த்தை கூட வாய் திறந்து சொல்லாமல், அவருடைய இதயத்தில் இருந்ததைத் தெளிவாக எனக்குச் சொல்லிவிட்டது. அவருடைய கண்களில் அப்போது தெரிந்தது கோபம் அல்ல; சோகமும் அல்ல. வெறுப்புதான் தெரிந்தது. இந்த திருடன் அடித்ததால் விழுந்தேன் என்பதைவிட என் கணவரின் கண்களில் பார்த்த வெறுப்பினால்தான் அதிர்ந்து நினைவிழந்து கீழே விழுந்தேன்.

சிறிது நேரம் கழித்துக் கண் விழித்துப் பார்த்தபோது அந்தத் திருடனைக் காணவில்லை. தேவதாரு மரத்தில் கட்டப்பட்டுக் கிடந்த என் கணவரைப் பார்த்தேன். மூங்கில் குப்பைகள் மீது விழுந்து கிடந்த நான், சிரமப்பட்டு எழுந்து அவரைப் பார்த்தேன். அவர் கண்களில் முன்பு பார்த்த அதே உணர்வே நிறைந்திருந்தது. வெறுப்பு.

அவமானம், சோகம், கோபம்… என அலையடித்த என் மனதின் உணர்வை அந்த நொடியில் எப்படி வெளிப்படுத்த என்றே தெரியவில்லை. தவழ்ந்து சென்று என் கணவரைச் சென்று சேர்ந்தேன்.

தகேஜிரோ, இத்தனை நடந்த பிறகு நான் உங்களுடன் வாழ முடியாது. நான் சாகப் போகிறேன். ஆனால், நீங்களும் இறந்தாகவேண்டும். நான் களங்கப்பட்டதை நீங்கள் பார்த்துவிட்டீர்கள். உங்களை உயிருடன் விட்டுவிடவும் முடியாது.

இவ்வளவுதான் என்னால் தட்டுத் தடுமாறிச் சொல்ல முடிந்தது. இப்போதும் அவர் கண்களில் அதே வெறுப்பு… அதே அவமதிப்பு நிறைந்திருந்தது. என் இதயம் உடைந்து நொறுங்கியது. அவருடைய வாள் எங்கே என்று தேடினேன். அந்தக் கொள்ளையன் அதை எடுத்துச் சென்றிருக்கவேண்டும். என் கணவரின் வாளோ அம்போ வில்லோ எதுவுமே அந்தக் காட்டில் எங்கும் தென்பட்டிருக்கவில்லை. ஆனால், என்னுடைய குறு வாள் என் காலடியில் கிடப்பதைப் பார்த்தேன். அதைக் கையில் எடுத்து என் தலைக்கு மேலேதூக்கியபடி, என் கணவரைப் பார்த்துச் சொன்னேன்: நீங்கள் உங்கள் உயிரைக் கொடுங்கள். நான் உங்கள் பின்னாலேயே வந்துவிடுவேன்.

நான் சொன்னதைக் கேட்டதும் என் கணவர் மிகவும் சிரமப்பட்டு உதடுகளைத் திறக்க முயற்சி செய்தார். அவர் வாயில் முங்கில் இலைக் குப்பைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், அவர் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை. ஆனால், அவர் சொல்ல விரும்பியதை நான் புரிந்துகொண்டுவிட்டேன். என்னை இகழ்ச்சியாகப் பார்த்த அந்தக் கண்கள் சொல்லின: என்னைக் கொன்றுவிடு. அரை மயக்க நிலையில் இருந்த நான் வெளிறிய ஊதா நிற கிமோனோவினூடாக குறு வாளினால் அவர் மார்பின் குத்தினேன். மீண்டும் நான் மயங்கிவிழுந்துவிட்டேன். நான் விழித்துப் பார்த்தபோது தேவதாரு மரத்தில் கட்டப்பட்ட நிலையிலேயே அவர் இறந்துவிட்டிருந்தார். மூங்கில் மரங்கள், தேவதார மர கிளைகள் இவற்றினூடாக அஸ்தமிக்கும் சூரியனின் கதிர்கள் அவருடைய வெளிறிய முகத்தின் மேல் விழுந்துகொண்டிருந்தன. அழுகையை அடக்கியபடியே கட்டுகளை அவிழ்த்து, உடலைத் தரையில் கிடத்தினேன்.

அதற்குப் பிந்தைய என்னுடைய நிலை பற்றிச் சொல்ல எனக்கு எந்தத் தெம்பும் இல்லை. தற்கொலை செய்துகொள்ளும் வலுவும் இல்லை. குறுவாளால் என் கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றேன்.மலையடிவாரத்தில் இருந்த குளத்தில் குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றேன். எதுவும் முடியாமல் போய்விடவே அவமானத்துடன் இன்னும் உயிருடன் இருக்கிறேன். ஒன்றுக்கும் உதவாதவளாகிப் போனேன். கருணையே உருவான போதிசத்வர்கூட என்னைக் கைவிட்டுவிடக்கூடும். என் கணவரைக் கொன்றுவிட்டேன். ஒரு கொள்ளையன் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான். என்னால் என்னதான் செய்ய முடியும்… என்னால் என்னதான்… (தேம்பித் தேம்பி அழுகிறாள்)

கொலை செய்யப்பட்டவர் ஆவியுடன் பேசுபவர் மூலமாகத் தந்த வாக்குமூலம்

என் மனைவியைப் பலாத்காரம் செய்தபின் அந்தக் கொள்ளையன் அவளிடம் ஆறுதல் வார்த்தைகள் சொல்ல ஆரம்பித்தான். என்னால் எதுவும் பேச முடிந்திருக்கவில்லைதான். தேவதாரு மரத்தில் என்னைக் கட்டிப் போட்டிருந்தான். ஆனால் கண்ணச் சிமிட்டிச் சிமிட்டி என் மனைவியிடம் இந்தக் கொள்ளையனை நம்பாதே என்று சொல்ல முயற்சி செய்தேன். அவளுக்கு எப்படியாவது உண்மையைப் புரியவைத்துவிடவேண்டும் என்று துடித்தேன். ஆனால் மூங்கில் இலைகளின் மேல் சோகமாக தளர்ந்து போய் அமர்ந்திருந்த என் மனைவி, தலை குனிந்து தன் மடியையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கொள்ளையன் சொல்வதை அவள் பொறுமையாக செவி கொடுத்துக் கேட்பது போலவே இருந்தது. எனக்கு அதைப் பார்த்ததும் பொறாமையும் கோபமும் வந்தது.

கொள்ளையன் சாமர்த்தியமாக ஒவ்வொரு விஷயமாக ப் பேசிக் கொண்டே போனான். நீ களங்கப்பட்டுவிட்டாய். உன் கணவருடன் இனியும் உன்னால் நிம்மதியாக வாழமுடியாது. என் மனைவியாகிவிடேன் என்று இறுதியில் துணிச்சலாகக் கேட்டேவிட்டான். உன் மீது நான் கொண்ட காதலே இப்படி பலாத்காரம் செய்ய வைத்தது என்று சொன்னான்.

அவன் அப்படிப் பேசியதைக் கேட்ட என் மனைவி தன் முகத்தை உயர்த்தினாள். பேரின்ப நிலையில் இருந்ததுபோல் அவள் முகம் இருந்தது. அந்த நிமிடத்தில் அவள் முகத்தில் தெரிந்த பேரழகுடன் அவள் முன் எப்போதும் இருந்திருக்கவே இல்லை. நான் கட்டப்பட்ட நிலையில் இருக்கும்போது என் அழகிய மனைவி என்ன சொன்னாள் தெரியுமா? என் காலடியில் இருந்த நிலம் இடிந்து நொறுங்கியதுபோல் உணர்ந்தேன். அவள் சொன்னதைக் கேட்டு கோபத்திலும் வெறுப்பிலும் பொறாமையிலும் எரிந்தேன்.

‘அப்படியானால் என்னை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்’ என்று அவள் அந்தக் கொள்ளையனைப் பார்த்துச் சொன்னாள்.

அவள் அதோடு நிறுத்தவில்லை. அதோடு போயிருந்தால் நான் இப்படி இறந்து இருளில் தவிக்க நேர்ந்திருக்காது. ஏதோ ஒரு கனவில் நடந்து செல்பவள்போல் அந்தக் கொள்ளையனின் கையைப் பிடித்தபடி அந்தக் காட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றவள், திடீரென்று முகம் வெளிற, தேவதாரு மரத்தில் கட்டப்பட்டுக் கிடக்கும் என்னைக் கைகாட்டிச் சொன்னாள்: அவனைக் கொன்றுவிடு! இவன் உயிருடன் இருக்கும்வரை என்னால் உங்களை மணந்துகொள்ள முடியாது. அவனைக் கொன்றுவிடு என்று பைத்தியம் பிடித்தவள் போல் பல முறை பிதற்றினாள்.

இப்போது கூட அந்தக் குரல் என்னை பிடிமானம் இல்லாமல் இருளின் பாதாளத்தில் முடிவற்று விழுந்துகொண்டிருப்பதுபோல் என்னை நிலைகுலையச் செய்கிறது. இப்படி ஒரு வெறுப்பான வார்த்தைகள் மனித குலத்தில் யார் வாயிலாவது இதற்கு முன் வந்திருக்குமா? இப்படிச் சபிக்கப்பட்ட வார்த்தைகள் யார் காதிலாவது இதற்கு முன் விழுந்திருக்குமா? ஒரே ஒரு முறையாவது இப்படியான… (எக்காளமான இளக்காரக் குரல் வெடித்துக் கொண்டு பீறிடுகிறது).

இதைக் கேட்டதும் அந்தக் கொள்ளையன் கூட அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.  ‘கொன்றுவிடு இவனை’ என்றபடி அவன் கைகளைப் பற்றிக் கொண்டு அவள் வீறீட்டாள். அவளைக் கூர்ந்து பார்த்தவன் சரி என்றோ இல்லை என்றோ எதுவும் சொல்லவில்லை. அவனுடைய பதில் என்னவாக இருக்கும் என்று நான் யோசிப்பதற்குள் அவன் அவளைக் கீழே மூங்கில் இலைக் குவியலில் பிடித்துத் தள்ளினான். கைகளைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு என்னைக் கூர்ந்து பார்த்தபடிக் கேட்டான்: ’நீ இவளை என்ன செய்யப்போகிறாய்? கொல்லப் போகிறாயா… காப்பாற்றப்போகிறாயா..? நீ தலையசைத்தால் போதும். கொன்றுவிடவா இவளை?’

அந்த நொடியிலேயே அந்தக் கொள்ளையனை அவன் செய்த குற்றங்களுக்கு மன்னித்துவிட முடிவுசெய்தேன்.

நான் பதில் சொல்லத் தயங்கியதைப் பார்த்ததும் அவள், காட்டுக்குள் ஓடித் தப்பித்துவிட்டாள். கொள்ளையன் அவளை எட்டிப் பிடிக்க முயன்றான். அவளுடைய உடையைக் கூட அவனால் தொடமுடியவில்லை.

அவள் தப்பி ஓடியபின், அவன் என் வாளையும் வில், அம்புகளையும் எடுத்துக் கொண்டான். என்னைக் கட்டியிருந்த கயிறை ஒரே வெட்டில் அறுத்தெறிந்தான். ’அடுத்தது என் விதி’ என்று அவன் முணுமுணுத்தது நன்கு நினைவிருக்கிறது. அவன் அங்கிருந்து சென்ற பின் எங்கும் அமைதி. இல்லை… யாரோ அழும் குரல் கேட்டது. என்னைக் கட்டியிருந்த கயிறை முழுவதுமாக அவிழ்த்துக் கொண்டேன். கூர்ந்து கவனித்தேன். அது என்னுடைய அழுகுரல் தான்! (நீண்ட நேர மெளனம்)

தேவதாரு மரத்தடியில் இருந்து தளர்ந்து போயிருந்த என் உடம்பை நிதானப்படுத்திக் கொண்டு எழுந்தேன். என் முன்னே என் மனைவி விட்டுச் சென்றிருந்த குறுவாள் தரையில் மின்னிக் கொண்டிருந்தது. அதை எடுத்து என் நெஞ்சை நானே குத்திக் கொண்டேன். தொண்டைக்குள் ரத்தம் பீறிட்டது. ஆனால், எந்தவொரு வலியும் இருந்திருக்கவில்லை. என் மார்பு குளிரத் தொடக்கியது. மயான அமைதி அந்த காட்டில் நிலவியது. என்னே ஒரு மயான அமைதி! அந்த அடர்ந்த மலைக் காட்டின் மேலே தெரியும் வானில் ஒற்றைப் பறவையின் ஒலி கூடக் கேட்கவில்லை. தேவ தாரு மரங்களின் மீது தனிமையின் ஒளி பாய்ந்துகொண்டிருந்தது. ஒளி மெள்ள மெள்ள மங்கியது. தேவதாரு மரங்களும் மூங்கில் மரங்களும் பார்வையில் இருந்து மறையத் தொடங்கின. தரையில் கிடந்த என்னை மயான அமைதி வந்து சூழ்ந்தது.

அதன் பின் யாரோ என் அருகில் வந்தனர். யார் என்று பார்க்க முயற்சி செய்தேன். ஆனால், ஏற்கெனவே இருள் சூழ்ந்துவிட்டிருந்தது. யாரோ…யாரோ ஒருவர், என் மார்பில் குத்தியிருந்த குறுவாளை மென்மையாக உருவி எடுத்துக் கொண்டார்கள். மீண்டும் என் வாய்ப்பகுதி நோக்கி ரத்தம் பாய்ந்தது. அதன் பின் இருள் வெளியில் என்றென்றைக்குமாக மூழ்கிப்போனேன்.

0

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *