Skip to content
Home » உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 1

உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 1

புரட்சியாளன்

பள்ளித் தோட்டத்தின் விளிம்புக்குச் சென்ற ஆசிரியர் கேப்ரியேல் ஆண்டர்ஸன் அடுத்தது என்ன செய்ய என்று தெரியாமல் சிறிது நேரம் நின்றார். இரண்டு மைல் தொலைவில் அடர்ந்த காடு வெண்பனிப்படுகை மேலே நீல ஆடை போல் படர்ந்து கிடந்தது. மிகவும் இனிமையான நாள். தூய வெண்பனிப் படுகை மேலே தோட்டத்து இரும்புவேலிக் கிராதிகள் மின்னிக் கொண்டிருந்தன. காற்று மிக மென்மையாக வீசிக் கொண்டிருந்தது. பனிப்படலம் முற்றாக விலகியிருந்தது. அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வசந்த காலத்தின் தொடக்க நாட்களில் மட்டுமே காண முடிந்த இதம். கேப்ரியல் ஆண்டர்ஸன் நீல நிறத்திலிருந்த கானகப் பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

’என் வாழ்வில் இன்னொரு வசந்தம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர் மூச்சை ஆழமாக இழுத்துக் கொண்டு, தனது கண்ணாடிகளினூடாக வானத்தை நிமிர்ந்து பார்த்தார். மனதில் கவிதை உருக்கொள்ள ஆரம்பித்தது. கைத்தடியைச் சுழற்றியபடியே நடந்தார்.

தோட்டத்து வேலிக்கு வெளியே சில ராணுவ வீரர்கள் குதிரைகளில் போவதைப் பார்த்தார். கண்ணைப் பறிக்கும் வெண் பனிப் படுகைக்கு முன்பாக அவர்களுடைய சீருடை மங்கித் தெரிந்தன. ஆனால், அவர்கள் கரங்களில் இருந்த வாள்களும், துப்பாக்கிகளும் குதிரையின் சருமமும் பளபளவென மின்னின. பனிச் சாலையில் குதிரைகள் சிரமப்பட்டு நடந்துசென்றன. ராணுவத்தினர் அங்கு என்ன செய்கிறார்கள் என்று ஆண்டர்சன் சிறிது நேரம் யோசித்தார். அவர்களுடைய அன்றாடப் பணி என்னவாக இருக்கும் என்பது அவருக்குச் சட்டென்று உறைத்தது. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவருடைய உள்ளுணர்வு சொன்னது. மிக மோசமான மிகவும் அசாதாரணமான ஒன்று நடக்கவிருக்கிறது. அதே உள்ளுணர்வு படைவீரர்களின் பார்வையில் இருந்து ஒளிந்துகொள்ளவேண்டும் என்பதையும் சொன்னது.

சட்டென்று இடது பக்கம் திரும்பி, கால் மடக்கி அமர்ந்துகொண்டு மெள்ளத் தவழ்ந்து சென்றார். வைக்கோல் போருக்குப் பின்னே கழுத்தைக் குறுக்கிக் கொண்டு ஒளிந்துகொண்டு படைவீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்கத்தொடங்கினார்.

12 வீரர்கள் இருந்தனர். சாம்பல் நிற உடையும் இடுப்பில் வெள்ளி பெல்டும் அணிந்த இளம் அதிகாரி ஒருவரும் இருந்தார். அவருடைய முகம் மிகவும் சிவந்து காணப்பட்டது. தொலைவில் இருந்து பார்த்தபோதிலும் நன்கு தெரியும் படியாக வெண்ணிற மீசையும் புருவங்களும் அவருடைய சிவந்த முகத்தில் எடுப்பாகத் தெரிந்தன. அவருடைய கரகரத்த குரல் ஆண்டர்சன் மறைந்திருந்த இடம் வரையிலும் தெளிவாகக் கேட்டது.

’நான் என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்கு நன்கு தெரியும். யாருடைய அறிவுரையும் எனக்குத் தேவையில்லை’ என்று உரத்த குரலில் முழங்கினார். படைவீரர்களில் ஒருவனைப் பார்த்து, ’ஒரு கலகக்காரனாக இருப்பது எப்படி என்பதை உனக்குக் காட்டுகிறேன் முட நாற்றம் வீசுபவனே’ என்று இடுப்பில் கை ஊன்றியபடியே கொக்கரித்தார்.

ஆண்டர்சனின் இதயம் வேகமாகத் துடிக்கத்தொடங்கியது. அடக் கடவுளே… என்ன நடக்கப் போகிறது என்று பயந்தவரின் உடல் நடுங்கியது.

வீரர்களிடமிருந்து ஒருவன், ’அதிகாரியே… இதைச் செய்ய உங்களுக்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். நீங்கள் நீதிபதிஅல்ல. இது பச்சைப் படுகொலை’ என்று சொல்ல ஆரம்பித்ததும், ’வாயை மூடு. நீதி மன்றம் என்றால் என்ன என்பதை உனக்குக் காட்டுகிறேன்… இவ்னோவ் சொன்னதைச் செய்’ என்று உறுமினார் அதிகாரி.

குதிரையைக் காலால் உதைத்துப் புறப்படச் சொன்னார். குதிரை நடன அசைவுகளைப் போல் மிக நேர்த்தியாகக் காலெடுத்து வைத்து நகர்ந்தது. அதன் காதுகள் விடைத்துக்கொண்டு நின்றன. படைவீரர்களிடையே சிறிது சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. இரண்டு உயரமானவர்கள், ஒரு சிறியவன் என மூன்று கறுப்பு உடை மாட்டிய உருவங்களை மட்டும் விட்டுவிட்டு வீரர்கள் அனைவரும் ஒவ்வொரு திசைக்குப் பிரிந்து சென்றனர். சிறியவனின் தலைமுடியை ஆண்டர்சனால் பார்க்க முடிந்தது. மென்மையான நிறத்தில் பட்டுப் போல் இருந்தது. அவனுடைய ரோஜா நிற காதுகள் இரு பக்கம் துருத்திக் கொண்டிருப்பதும் தெரிந்தது.

என்ன நடக்கப் போகிறது என்பது ஒளிந்துகொண்டிருக்கும் ஆண்டர்சனுக்குப் புரிந்துவிட்டது. தான் காண்பது கனவா என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் அசாதாரணமான ஒன்று நடக்கப் போகிறது.

பனிப்படுகை, காடுகள், வானம் அனைத்தும் பிரகாசமாக, பேரழகுடன் திகழ்ந்தன. வசந்த காலத்தின் ஸ்பரிசம் அனைத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்தது. இருந்தும் இந்த இதமான காலத்திலும் மக்கள் கொல்லப்படுகிறார்கள். எப்படித்தான் இப்படி நடக்கின்றனவோ? மிகவும் கொடூரம்… அவருடைய சிந்தனைகள் அவரைக் குழப்பத்திலும் வேதனையிலும் ஆழ்த்தின.

திடீரென்று புத்தி பேதலித்துப் போனதுபோல் ஆனது. தான் இதுவரை பார்த்திராத, கேட்டிராத விஷயங்களைப் பார்க்கவும் கேட்கவும் செய்கிறார். கேட்கவும், பார்க்கவும் உணரவும் கூடாதவற்றை கேட்கவும் பார்க்கவும் உணரவும் செய்கிறார்.

கறுப்பு உடை அணிவிக்கப்பட்ட மூவரில் இருவர் ஒருவருக்கொருவர் நெருங்கியபடி நிற்கின்றனர். சிறுவன் சற்று தள்ளி நிற்கிறான்.
’கடவுள் நாம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் அதிகாரியே…’ படைவீரர்களில் ஒருவர் பரிதாபமான குரலில் கெஞ்சினார்.

எட்டு வீரர்கள் குதிரையிலிருந்து இறங்கினர். தமது துப்பாக்கிகளை அசிங்கமாகக் பிடித்துக் கொண்டு ஏதோ திருடர்கள் போல், அதிகாரி சொன்னதை அவசர அவசரமாகச் செய்து முடிக்க முற்பட்டனர். கறுப்பு உடை அணிவிக்கப்பட்டவர்களிடமிருந்து சற்று தொலைவில் வரிசையாகச் சென்று நின்றுகொண்டனர். தமது துப்பாக்கிகளை குறிவைத்துப் பிடித்துக் கொண்டனர். ஒரு படைவீரனின் தொப்பி கீழே விழுந்தது. அதில் ஒட்டிய பனித்துகள்களைத் தட்டாமலே எடுத்து அணிந்துகொண்டான்.

அதிகாரியின் குதிரை, நின்ற இடத்திலிருந்தபடியே நடனம் போல் அசைந்தாடிக் கொண்டிருந்தது. அதன் காதுகள் விடைத்தபடியே இருந்தன. பிற குதிரைகளின் காதுகளும் அப்படிக் கூர்ந்து கேட்பதுபோலவே இருந்தன. ஆனால், அவை ஆடாமல் அசையாமல் கறுப்பு உடை அணிவிக்கப்பட்டவர்களையே பார்த்துக் கொண்டிருந்தன.

’சிறுவனையாவது விட்டு விடக்கூடாதா…? அவன் என்ன தவறு செய்தான்? சிறுவனை எதற்குக் கொல்லவேண்டும்’ என்று ஒரு குரல் உரக்க மன்றாடியது.

’இவானோவ், நான் சொன்னதைச் செய்…’ இடிபோல் முழங்கினான் அதிகாரி. பிற குரல்கள் எல்லாம் அடங்கி ஒடுங்கின. செக்கச் சிவந்த கம்பளியைப்போல் அவன் முகம் ஆகியிருந்தது.

அதைத் தொடர்ந்து அந்தக் கொடூரமான காட்டுமிராண்டித் தனம் அரங்கேறியது. கறுப்பு உடையில் மென்மையான கேசமும் ரோஜா நிற காதுகளும் கொண்டிருந்த சிறுவன் உயிர் பயத்தில் வாய் விட்டு அலறியபடியே கீழே துவண்டு விழுந்தான். உடனேயே இரண்டு மூன்று படைவீரர்கள் ஓடிச் சென்று அவனைத் தூக்கி நிறுத்தினர். சிறுவன் மேலும் நடுங்கினான். மேலும் இரண்டு படைவீரர்கள் அவர்களை நெருங்கினார்கள்.

’என்னை விட்டு விடுங்கள்… நான் எங்காவது போய்விடுகிறேன்’ என்று சிறுவன் கதறினான்.

வெட்டப்பட்டு உயிர் இன்னும் போயிருக்காத பன்றிக் குட்டியின் ஈன ஸ்வரம் போலிருந்தது அவனுடைய குரல். சட்டென்று குரல் அடங்கியது. யாரோ ஒங்கி அடித்திருக்கவேண்டும். எதிர்பாராத, அடக்குமுறையிலான அமைதி நிலவியது. சிறுவனை முன்னோக்கித் தள்ளினார்கள். காதை அடைக்கும் படியான வெடிக் சத்தம் கேட்டது. ஆசிரியர் ஆண்டர்ஸன் இவை அனைத்தையும் நடுங்கியபடியே மறைவில் இருந்து பார்த்துவந்தார். அனைத்து அவருக்கு மிக மிகத் துல்லியமாகத் தெரிந்தன. அதேநேரம் அனைத்துமே ஏதோ கனவில் பார்ப்பதுபோலவும் இருந்தன.

இரண்டு கறுப்பு உருவங்கள் மெள்ளச் சரிந்து விழுந்தன. தெளிந்த வானில் மெல்லிய புகைப்படலம் கிளம்பியது. படைவீரர்கள், கீழே விழுந்த உடம்புகளைக்கூடப் பார்க்காமல், வேகவேகமாகக் குதிரையில் ஏறிக்கொண்டனர். பனி படர்ந்த சாலையில் துவக்குகளும் வாள்களும் மின்ன குதிரைகளின் குளம்புகள் ஒலிக்க அவர்கள் செல்வதை ஆண்டர்சன் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

எப்போது வைக்கோல் போர் மறைப்பில் இருந்து வெளியே வந்தோம் என்பது தெரியமல், சாலையின் நடுவில் நின்றுகொண்டிருந்தார். முகத்தில் சவக்களை நிரம்பியிருந்தது. உடல் வேர்வை வழிந்து நடுங்கிக் கொண்டிருந்தது. இனம் புரியாத உணர்வு அவரைச் சூழ்ந்துகொண்டது. மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்டதுபோல் மிகவும் பயங்கரமாக வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது.

படைவீரர்கள் கானகம் நோக்கிய தூரத்து வளைவில் மறைந்து போனதும் கிராம மக்கள் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். இதுவரையிலும் ஒருவரைக் கூட அங்கு பார்க்க முடிந்திருக்கவில்லை.

பனி படர்ந்த சாலையில் தோட்டத்து வேலிக்கு அப்பால், அற்புதமான தட்ப வெப்ப நிலவிய நாளில் அந்த உடல்கள் விழுந்துகிடந்தன. இரண்டு பெரியவர்கள், ஒரு சிறுவன் என மூன்று உடல்கள். சிறுவன் தன்னுடைய அழகிய கழுத்தை நீட்டிக் கொண்டு பனியில் விழுந்துகிடந்தான். சிறுவனுக்கு அருகில் குப்புற விழுந்து கிடந்தவனின் முகம் ரத்த வெள்ளத்தில் மிதந்தது. மூன்றாவது நபர் பெரிய உருவம் கொண்டவர். கறுப்பு மீசையும் வாட்ட சாட்டமான உடம்பும் கொண்டவர். முழு உடம்பையும் நீட்டிப் பரப்பிக் கொண்டு விழுந்து கிடந்தார். நீண்ட அவருடைய கைகளைச் சுற்றிலும் இருந்த பனித்துகள்கள் ரத்தத்தில் மூழ்கிக் கிடந்தன.

தூய வெண்ப் பனிப் படலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட மூவரின் உடலும் அசைவற்றுக் கிடந்தன. இந்தக் காட்சி ஏற்படுத்திய பயங்கர உணர்வை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

அன்றிரவு ஆண்டர்சன் தன்னுடைய சிறிய வீட்டில் வழக்கம் போல் எழுதும் கவிதைகளை எழுத முடிந்திருக்கவில்லை. ஜன்னல் அருகில் நின்றபடி வெகு உயரத்தில் தொலைதூரத்தில் மங்கலான நீல வானில் வெளிறிய தட்டு போல் உறைந்து கிடந்த நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய எண்ணங்கள் ஏதோ மேக கூட்டம் அவர் மூளைக்குள் இறங்கிவிட்டதுபோல் குழம்பியும், வேதனை நிறைந்தும் கனத்தும் இருந்தன.

வேலிக் கிராதிகள், மரங்கள், வெறுமையான தோட்டம் ஆகியவற்றின் கறுமையான கோட்டுச் சித்திரங்கள் மங்கலான நிலவொளியில் தென்பட்டன. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த மூவருக்கும் அவர் செய்ய வேண்டியது ஏதோ இருப்பதாக அவருக்குத் தோன்றியது. சாலை ஓரத்தில் அவர்களின் உடல்கள் இன்னமும் அப்படியே கிடக்கின்றன. வெறுமையான அமைதியான பனிச் சாலையில் அந்த உடல்கள், உயிருள்ள இவர் பார்ப்பதைப் போலவே, தொலை தூரக் குளிர் நிலவை வெறித்துப் பார்த்தபடி கிடந்தன.

என்றாவது அந்த நாள் வரும்
அடுத்தவர்களைக் கொல்வதென்பது
அசாத்தியமானதாக ஒரு நாள் ஆகும்
இந்த மூவரைச் சுட்டுக் கொன்ற
அதிகாரியும் படை வீரர்களும் கூட
தாம் செய்த தவறை உணர்வார்கள்
ஆம் அந்த நாள் வரும்
அவர்கள் தாம் செய்த தவறை உணர்வார்கள்

ஆண்டர்சனின் கண்களில் பெருகிய கண்ணீர், வெளிறிய நிலவை அவர் பார்வையில் இருந்து மறையச் செய்தது. அந்த நிலவை வெறித்துப் பார்த்தபடிக் கிடக்கும் கண்கள் அவர் மனதில் தாங்க முடியாத சோகத்தை எழுப்பின. பெரும் ஆத்திரம் எழுந்து ஒரு கத்தியால் வெட்டியதுபோல் அவரைத் துளைத்தது.

நிதானப்படுத்திக் கொண்டு ’தாம் செய்வது என்னதென்று அவர்கள் அறியவில்லை’ என்று சொல்லியபடி மனதைத் தேற்றிக் கொண்டார். இந்த பழமை வாய்ந்த வாக்கியம் அவருக்குள் உருவான கோபத்தையும் வேதனையையும் சமாளிக்கும் தெம்பை அவருக்குத் தந்தது.

0

வசந்த காலம் ஆரம்பித்து நாட்கள் பல ஓடிவிட்டன. அன்றைய தினம் பிரகாசமாகவும் அதி வெண்மையுடனும் இருந்தது. நனைத்த நிலம் வசந்தத்தின் நறுமணத்தை பரப்பியபடி இருந்தது. உருகத் தொடங்கிய பனிப் பாளங்களின் கீழே தூய்மையான குளிர்ந்த நீர் எங்கும் ஓடிக் கொண்டிருந்தது. மரங்களின் கிளைகள் எளிதில் வளைந்து நெளியும்படியாக நெகிழ்ந்திருந்தன. பல மைல் தொலைவுக்கு கிராமப்புறங்கள் முழுவதும் நீல நிறத்தில் மின்னின. எனினும் வசந்த காலத்தின் இனிமை எதுவும் அந்த கிராமத்தில் இருந்திருக்கவில்லை. கிராமங்களுக்கு அப்பால் ஆளரவமற்ற பகுதிகளில் காடுகளில் மலைகளில் சிதறிக் கிடந்தனர். கிராமத்தில் மூச்சு முட்டிக் கொண்டிருந்தது காற்று. இறுக்கமான மெளனம், உறைய வைக்கும் பயங்கரம் எங்கும் நிரம்பி வழிந்தது.

சாலையில் சோகமாக, சுய நினைவு அழிந்தது போன்றிருந்த கூட்டத்தினரின் அருகில் ஆண்டர்சன் நின்றுகொண்டிருந்தார். சாலை நடுவில் ஏழு விவசாயிகளைக் கட்டி வைத்து சாட்டையால் அடிக்கவிருந்தார்கள்.

ஆண்டர்சனுக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அந்த கிராமத்தினரை அவருக்கு நீண்ட காலமாகவே நன்கு தெரியும். அந்த ஏழு பேரும் ஒவ்வு மொத்த உலகிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். மிகவும் அவமானகரமான, கொடூரமான, ஒரு நாளும் மறக்கவே முடியாதவை அவர்களுக்கு நடக்கப்போகின்றன. அவர்களுடைய உணர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை ஆண்டர்சனால் நினைத்துப் பார்க்கவேமுடியவில்லை. அவருடைய மற்றும் உலகத்தினரின் உணர்வு என்னவாக இருக்கும் என்பதை அந்த ஏழு விவசாயிகளாலும் புரிந்துகொள்ளமுடிந்திருக்கவில்லை. அவர்களைச் சுற்றிலும் படைவீரர்கள் கம்பீரமான உயரமான குதிரைகளில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அருமையாக உட்கார்ந்திருந்தனர். குதிரைகள் தமது தலையை உயர்த்தி இறுக்கமான முகத்தை இங்குமங்கும் அசைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தன. ஆண்டர்சனை இழிவாகப் பார்த்தன. இந்த பயங்கரம், அவமானம் ஆகியவற்றை வெறுமனே வேடிக்கை பார்க்கப் போகிறார். எதுவும் செய்யாமல், எதையும் செய்யத் துணிவின்றி நின்றுகொண்டிருக்கிறார். எதுவும் பேச முடியாமல், அழ முடியாமல், முனகக்கூட முடியாமல் அனைத்தையும் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

முதல் விவசாயியை படைவீரர்கள் நடுவில் தனியாக நிறுத்தினர். அவருடைய நிராதரவான, மன்றாடக்கூடிய பார்வையை ஆண்டர்சன் பார்த்தார். அவருடைய உதடுகள் அசைந்தன. ஆனால், எந்தவொரு சப்தமும் வெளியே வரவில்லை. கண்கள் இங்குமங்கும் பார்த்தன. சித்தம் கலங்கியவரின் பார்வையைப்போல் அவர் கண்கள் மிரட்சியில் ஒளிர்ந்தன. என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ளவேமுடியவில்லை.

அந்த விவசாயியின் முகம் பயத்தில் உறைந்து கிடந்தது. ஒரு கணம் அனைத்தையும் புரிந்துகொண்டதுபோலவும் மறுகணம் சித்தம் கலங்கியிருந்தது போலவும் இருந்தது. அவரைப் பனிச் சாலையில் குப்புறப்படுக்க வைத்தனர். அவருடைய திறந்த முதுகு பளிங்குபோல் மின்னியது.

சிவப்பு தொப்பி அணிந்த, சிவந்த நிறமுடைய ஆஜானுபாகுவான படைவீரன் முன்னால் வந்தான். படுத்துக் கிடக்கும் விவசாயியின் முதுகை உற்சாகத்துடன் கண்கள் மின்னப் பார்த்தான்.

கடவுள் உனக்கு அருள் புரிவார்… அவனை விட்டுவிடு என்று கூட்டத்தில் யாரோ கத்தினார்கள்.

படைவீரன் காதில் எதுவும் விழவில்லை. படைவீரர்கள், வானம், குதிரைகள், மக்கள் கூட்டம் எதையும் ஆண்டர்சன் பார்க்கவில்லை. எந்தவொரு அவமானம், குளிர், பயங்கரம் எதுவுமே அவரை பாதிக்காததுபோல் தன்னை ஆக்கிக் கொள்ள முயன்றார். சாட்டைக் கயிறு காற்றில் வீசப்படும்போது எழும் சத்தம், முதுகுத் தோல் உரியும் போது எழும் விவசாயியின் அலறல், எதையுமே அவர் கேட்கவில்லை. விவசாயியின் ஆடை இல்லாத முதுகில் சாட்டைத்தடங்கள் பதிந்து தோல் கன்றிப் போய் சதை கிழிந்து தொங்க ஆரம்பிப்பதைக் கண்ணிமைக்காமல் பார்த்தார். மனிதச் சதை என்பதே தெரியாத அளவுக்கு வெற்று முதுகு உருக்குலைந்தது. உடல் கன்றி, ரத்தம் உறைந்து, துளித்துளியாக வழிந்து, ஆறாகப் பெருகி வெண் பனிச் சாலை முழுவதும் ஓடியது.

வெற்றுடம்புடன் சாலையில் படுக்கவைக்கப்பட்டு சாட்டையால் அடித்துத் தோலுரிக்கப்பட்டவர் எழுந்து நின்று தன்னைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் அனைவரையும் நேருக்கு நேர் பார்க்கும் தருணம் வரப்போகிறது என்று ஆண்டர்சனின் ஆன்மா நடுங்கத் தொடங்கியது. கண்களை இறுக மூடிக் கொண்டார். சிறிது நேரம் கழித்துக் கண் திறந்து பார்த்தபோது சிவப்பு தொபியும் சீருடையும் அணிந்த படைவீரர்கள் இன்னொரு விவசாயியைப் பனித் தரையில் படுக்கவைத்துக் கொண்டிருந்தனர். அவருடைய உடம்பிலும் மேலாடை இல்லை. அவமானமும் பயங்கரமும் சோகமும் நிறைந்த அதே காட்சி மீண்டும் அரங்கேறியது.

மூன்றாவது விவசாயிக்கும் இதுவே நடந்தது. நான்காவது, அதற்கு அடுத்தவர்… என அத்தனை பேருக்கும் அதுவே நடந்தது.

கேப்ரியல் ஆண்டர்சன், இளகத்தொடங்கியிருந்த பனிப் பாளங்களின் மேல் நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தார். ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. மனம் முழுவதும் அவமானமும் சோகமும் கவிந்தன. மிகவும் அவமானகரமான உணர்வு. தன்னையும் பிடித்து அதுபோல் அடித்துவிடுவார்களோ என்று பயந்து அங்கிருந்து விலகிச் சென்றார்.

பாம்பு போல் நெளியும் சாட்டைகள், படைவீரர்களின் சாட்டை வீச்சொலி, குதிரைகளின் கனைப்பொலி, விவசாயிகளின் வெற்று முதுகு, பிய்ந்து தொங்கும் சதைகள், பெருகி வழியும் ரத்தத் துளிகள், கேவல்கள், அலறல்கள்… அந்த கிராமத்தில் வசந்தகாலத்தின் நிர்மலமான வானில் இருந்து முடிவற்று வீசியது குளிர் காற்று.

அங்கிருந்து வேதனையுடன் விலகிச் சென்றவர் டவுன் ஹாலில் ஏற்கெனவே இந்த அவமானங்களுக்கு ஆளானவர்கள் சிலரைப் பார்த்தார். அவர்களைப் பார்க்கும் திராணியற்றுச் சட்டென்று தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். இந்தக் கொடூரங்களைப் பார்த்த பின் ஒருவர் உயிர் வாழ்வதில் அர்த்தமே இல்லை என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது.

(தொடரும்)

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *