Skip to content
Home » உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 2

உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 2

புரட்சியாளன்

3

அவர்கள் மொத்தம் 17 பேர் இருந்தனர். 15 படைவீரர்கள், ஒரு கடைநிலை படைவீரர், தாடியில்லாத இளம் அதிகாரி. அதிகாரி தழல் விட்டெரியும் நெருப்பின் முன்னால் அமர்ந்துகொண்டு தீ ஜுவாலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். படைவீரர்கள் தமது வாகனத்தில் அமர்ந்துகொண்டு துப்பாக்கிகளைச் சரி செய்துகொண்டிருந்தனர்.

சாம்பல் நிற உருவங்கள் பின்னணியில் இருண்டு கிடந்த நிலத்தில் சப்தம் எழுப்பாமல் நடந்துகொண்டிருந்தன. வழியில் நெருப்புக் குவியலில் நீட்டிக் கொண்டிருந்த மரக் கட்டைகளில் லேசாக இடறிக்கொள்ளவும் செய்தனர்.

கேப்ரியல் ஆண்டர்ஸன், மேல் கோட் அணிந்து, கைத்தடியைப் பின்பக்கம் வைத்துக்கொண்டு அவர்களை நெருங்கினார். மிகவும் குண்டானவரும் பெரிய மீசை இருந்தவருமான கடைநிலை வீரர் துள்ளிக் குதித்து வந்து அவரைப் பார்த்தார்.

யார் நீ… என்ன வேண்டும் உனக்கு என்று பரபரப்புடன் கேட்டார்.

படுகொலைகள் செய்தபடியும் சித்ரவதை செய்தபடியும் பயங்கரத்தைப் பரப்பிவரும் படைவீரர்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் யாரைப் பார்த்தாலும் பயந்திருந்தனர் என்பது அவருடைய குரலிலேயே தெரிந்தது.

அதிகாரியே… இவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை என்றார் கடைநிலை வீரர்.

அதிகாரி எதுவும் பேசாமல் ஆண்டர்சனையே உற்றுப் பார்த்தார்.

அதிகாரியே… என் பெயர் மைக்கேல்சன் என்று பொய் சொன்னார் ஆண்டர்ஸன். நான் ஒரு வியாபாரி. கிராமத்துக்கு வியாபாரம் செய்யப் போகிறேன். நீங்கள் நினைக்கும் வேறு நபராக என்னைத் தவறாக நினைத்துவிடாதீர்கள் என்று பயந்த குரலில் சொன்னார்.

வியாபரியா… ஏளனமாகக் கேட்டார் ஒரு படைவீரர். இவரை நன்கு பரிசோதித்துப் பார்க்கவேண்டும். இனிமேல் இந்த வியாபாரி நம்மை மீண்டும் இரவில் வந்து தொந்தரவு செய்யாத அளவுக்கு பரிசோதிக்கவேண்டும். தாடையில் ஓங்கிக் குத்துவதில் இருந்து நம் பரிசோதனையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார்.

இவரைப் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது. இவரை முதலில் கைது செய்துவிடுவோமா அதிகாரியே என்று கடைநிலை வீரர் பதற்றத்துடன் கேட்டார்.

வேண்டாம்… எனக்கு ’இவன்களைக்’ கண்டாலே கடுப்பாக இருக்கிறது என்றார் அதிகாரி சோம்பலுடன்.

கேப்ரியல் ஆண்டர்சன் எதுவும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தார். இரவில் கனன்று எரியும் நெருப்பின் ஒளியில் அவருடைய கண்கள் ஜொலித்தன. இந்த நள்ளிரவில் படைவீரர்கள் நடுவே, குட்டையான, நேர்த்தியான, மேல் கோட் அணிந்து கைத்தடியுடனும் கண்ணாடிகளுடனும் இருக்கும் இவரைப் பார்க்க விசித்திரமாக இருந்தது.

படைவீரர்கள் அவரை அங்கே விட்டுவிட்டு விலகிச் சென்றனர். கேப்ரியல் ஆண்டர்சன் சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். பின் இருளில் வேகமாக நடந்து சென்று மறைந்தார்.

இரவு முடியும் நேரம். காற்றில் குளிர் அதிகரித்திருந்தது. புதர்கள் இருளில் மேலும் கருமை கொண்டிருந்தன. ஆண்டர்சன் சிறிது நேரத்தில் மீண்டும் அந்த ராணுவ முகாமுக்குச் சென்றார். இந்த முறை அவர் புதர்களின் மறைவில் ஒளிந்தபடி தவழ்ந்து சென்றார். அவர் பின்னால் ஏராளமான கிராமத்தினர் எந்த சத்தமும் எழுப்பாமல் இரவு விலங்குகளைப் போல் மெள்ள ஊர்ந்துவந்தனர். கேப்ரியேல் ஆண்டர்சனுக்கு அருகில் பதுங்கியபடி வந்த மிகவும் உயரமான கிராமத்தான் கையில் துப்பாக்கி இருந்தது.

மலைப் பகுதியில் அவர்கள் எதிர்பார்த்திராத பகுதியில் இருந்து ஒரு ராணுவ வீரர் வெளிப்பட்டான். அணையத் தொடங்கியிருந்த இரவு நெருப்பின் மங்கலான ஒளியில் அவன் உருவம் தெரிந்தது. ஆண்டர்சனுக்கு அவன் யார் என்பது தெரிந்தது. தாடையில் ஒரு குத்து குத்தி பரிசோதனை செய்யவேண்டும் என்று சொன்ன வீரன். ஆண்டர்சனின் மனது எந்தவித சலனமும் இன்றி இருந்தது. முகம் உணர்ச்சியற்று ஏதோ தூக்கத்தில் இருப்பவரின் முகம் போல் இருந்தது. நெருப்பைச் சுற்றி படைவீரர்கள் தாறுமாறாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். கடைநிலை வீரன் மட்டும் தூங்காமல் நாடியை முழங்காலில் ஊன்றியபடி அமர்ந்திருந்தான்.

ஆண்டர்சனுக்கு அருகில் இருந்த உயரமான கிராமத்தான் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார். கண்ணைப் பறிக்கும் ஒளி, காதை அடைக்கும் சத்தம்.

காவலன் கைகளை உயர்த்தியபடி எழுந்து பின் தரையில் அமர்ந்துகொண்டார். அனைத்து திசைகளில் இருந்தும் துப்பாக்கி வெடித்துப் பொறிகள் பறந்தன. சுடும் சத்தம் ஒன்று சேர்ந்து பெரும் முழக்கமாகக் கேட்டது. துப்பாக்கி குண்டு பாய்ந்த கடைநிலைப் படைவீரன் துள்ளி எழுந்து நெருப்பில் போய் விழுந்தார். சாம்பல் நிற படைவீரர்களின் உருவங்கள், எல்லா திசைகளிலும் துள்ளித் தெறித்து அலறி அடித்துக் கொண்டு விழுந்து புரண்டு ஓடினர்.

புரட்சிக்காரர்கள் சுற்றி வளைத்துவிட்டது தெரிந்து இளம் அதிகாரியும் உயிர் பயத்தில் பதறியபடிப் பறக்கும் பறவை போல் கைகளை விசித்திரமாக அடித்துக்கொண்டு ஆண்டர்சனைத் தாண்டி பாய்ந்து ஓடினார். ஆண்டர்சன் தன் முழு பலத்தையும் திரட்டி, தன் கைத்தடியால் அந்த அதிகாரியின் தலையில் ஓங்கி அடித்தார். வலி தாங்காமல் தலை சுற்றி புதர் மேல் சென்று மோதினார் அந்த அதிகாரி. இரண்டாவது அடி தலையில் விழுந்ததும் தலையைக் கைகளால் மூடியபடி குழந்தைபோல் உட்கார்ந்துகொண்டார்.

யாரோ ஒருவர் ஓடிச் சென்று அவர் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டார். அதிகாரி பெரும் சப்தத்துடன் தலை தரையில் மோதியபடி துவண்டு சரிந்தார்.அவருடைய கால்கள் சிறிது நேரம் துடித்தன. அதன் பின் மெள்ள அடங்கின.

துப்பாக்கிச் சூடு முடிவுக்கு வந்தது. கறுப்பு உடை அணிந்த வெள்ளை மனிதர்கள் இருளில் பேய்களைப் போன்ற உருவத்துடன், கீழே விழுந்து கிடக்கும் படை வீரர்களினூடே ஊடுருவிச் சென்று அவர்களுடைய துப்பாக்கிகள், குண்டுகளைக் கைப்பற்றிக் கொண்டனர்.

ஆண்டர்சன் அனைத்தையும் கண்களில் எந்த உணர்ச்சியும் இன்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அனைத்தும் முடிந்ததும் அவர் எழுந்துகொண்டார். கடைநிலை படைவீரனின் கருகிய உடம்பை நெருப்பில் இருந்து வெளியே இழுத்துப் போட முயற்சி செய்தார். மிகவும் கனமாக இருந்தால் அப்படியே விட்டுவிட்டார்.

4

டவுன் ஹாலில் சிலை போல் அமர்ந்தபடி ஆண்டர்சன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். கைத்தடியும், கண்ணாடியும் மேல் கோட்டும் அணிந்தவரும் கவிதைகள் எழுதுபவருமான அவர் எப்படிப் பொய்ச் சொல்லி பதினைந்து பேரை ஏமாற்ற முடிந்தது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அது அவருக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர் மனதில் எந்தவொரு பச்சாதாபமோ, அவமானமோ, வருத்தமோ இருந்திருக்கவில்லை. அவர் விடுதலை செய்யப்பட்டால் தனது கண்ணாடியை அணிந்து கொண்டு கைத்தடியை எடுத்துக் கொண்டு கவிதையைச் சுமந்துகொண்டு மீண்டும் இதையே செய்வார்.

தன் ஆன்மாவில் என்ன நடக்கிறது என்று தன்னைத்தானே சுய பரிசோதனை செய்ய முயற்சியெடுத்தார். ஆனால், அவருடைய சிந்தனைகள் தீவிரமாகவும் குழப்பமாகவும் இருந்தன. என்ன காரணத்தினாலோ, மூன்று பேர் பனியில் இறந்து கிடந்த காட்சி அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. தான் தன் கைத்தடியால் தலையில் அடித்துக் கொன்ற அதிகாரியைவிட வெகு தொலைவில் விண்ணில் இருக்கும் வெளிறிய வட்டு போன்ற நிலவை வெறித்துப் பார்த்தபடிக் கிடந்த உயிரற்ற கண்களை அவரால் மறக்கமுடியவில்லை.

தனது மரணம் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. வெகு காலத்துக்கு முன்பே எல்லாம் முடிந்துவிட்டது என்ற மனநிலைக்கு வந்துவிட்டிருந்தார். அவருக்குள் இருந்த ஏதோ ஒன்று இறந்துவிட்டது. அவரை விட்டு விலகிவிட்டது. அவருக்குள் இப்போது வெறுமை மட்டுமே இருக்கிறது. இனி அதைப் பற்றி அவர் சிந்தக்கவே கூடாது என்று முடிவுசெய்திருந்தார்.

புதிய வீரர்கள், பிடிபட்ட அவரைத் தோளைப் பிடித்துத் தூக்கியபோது எழுந்துகொண்டார். முட்டைகோஸ்களின் வாடிய தலைகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தோட்டத்தினூடாக அவர்கள் அவரை வேகமாக இழுத்துச் சென்றனர். அவர் மனதில் எந்தவொரு எண்ணமும் இல்லாமல் வெறுமையே நிரம்பியிருந்தது.

சாலைக்கு இழுத்துச் சென்றவர்கள் அவரை இரும்பு வேலியோடு சேர்த்து வைத்து நிறுத்தினர். அவர் தன் கண்ணாடிகளைச் சரி செய்துகொண்டார். கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டார். நேர்த்தியான சிறிய உடம்பை நேராக வைத்துக் கொண்டு நின்றார். தலைமட்டும் ஒரு பக்கம் லேசாக சற்று சரிந்து இருந்தது.

அவர் முன்னே துப்பாக்கி முனைகள் அவரது தலை, மார்பு, வயிறு என அனைத்தையும் குறி பார்த்தபடி இருந்தன. சுற்றிலும் வெளிறிய முகங்கள், நடுங்கும் உதடுகளுடன் இருப்பதைப் பார்த்தார். அவருடைய நெற்றியைக் குறிவைத்திருந்த ஒரு துப்பாக்கி சட்டென்று கீழிறக்கப்பட்டதைப் பார்த்தார்.

புரிந்துகொள்ளமுடியாத, விளக்க முடியாத இந்த உலகைச் சாராத ஒரு சிந்தனை ஏதோவொன்று அவர் மனதில் ஓடியது. தனது குட்டையான உடம்பை முடிந்த அளவுக்கு நிமிர்த்திக்கொண்டு தலையைப் பெருமிதத்துடன் உயர்த்தினார். இனம் புரியாத நேர்த்தி, தூய்மை, வலிமை, பெருமை அவர் ஆன்மாவில் நிரம்பியது. சூரியன், வானம், மக்கள், நிலம், மரணம் எல்லாம் எல்லாம் துச்சமாக அவசியமற்றவையாக எங்கோ தொலைவில் அவருக்குத் தொடர்பற்று இருப்பவையாகத் தோன்றின.

மார்பு, இடது கண், வயிறு அனைத்தையும் துளைத்துச் சென்றன துப்பாகி குண்டுகள். அவருடைய அதி தூய்மையான கோட்டினூடாகப் பொத்தல் இட்டுக் கொண்டு துளைத்தன. அவருடைய கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. வலியில் கத்தியவர் தளர்ந்து சுருண்டு கீழே சரிந்தார். அவருடைய முகம் வேலியின் இரும்புக் கம்பிகளில் சென்று மோதியது. இன்னொரு கண் அகலத் திறந்தபடிக் கிடந்தது. நீட்டிய கரங்கள் கொண்டு பூமியை இறுகப்பற்றியபடி விழுந்தார்.

அதிகாரி, வேகமாக ஓடிவந்து தன் துப்பாக்கியை ஆண்டர்சனின் கழுத்தில் சொருகி இரண்டு முறை சுட்டார். ஆண்டர்கள் உடம்பை விரித்தபடி தரையில் விழுந்தார். படைவீரர்கள் மெள்ள விலகிச் சென்றனர். ஆண்டர்சன் பனிச் சாலையில் விழுந்துகிடந்தார். இடது கையின் ஆட்காட்டி விரல்மட்டும் சில விநாடிகள் நடுங்கிக் கொண்டிருந்தது.

0

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

1 thought on “உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 2”

  1. மிகவும் பயங்கரமான நினைவுகளை மேலெழுப்புகின்றன….

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *