Skip to content
Home » உலகக் கதைகள் #6 – ரசேல் ஹேரிங் கார்ன்னின் ‘திரும்பி வர முடியாத பாதை’

உலகக் கதைகள் #6 – ரசேல் ஹேரிங் கார்ன்னின் ‘திரும்பி வர முடியாத பாதை’

Rachel Haring Korn

அன்று காலையிலேயே ஊரில் இருந்த அனைவருக்கும் அந்தப் புதிய உத்தரவு நன்கு தெரிந்துவிட்டிருந்தது. எனினும் ஹெர்ஷ் லாஸர் சோகோல் வீட்டினர் எதுவுமே தெரியாததுபோல், ஏதோ அதுவும் இன்னொரு சாதாரண நாள் என்பதுபோல் நடந்துகொண்டிருந்தனர். அம்மா பெய்லி அடுப்பைப் பற்றவைத்து இரும்பு வேலி முகாமில் வாழும் யூதக் குடும்பத்தினருக்கு அளந்தெடுத்துத் தரப்பட்ட பாதி அழுகிய உருளைக்கிழங்கு, மக்காச்சோளம் ஆகியவற்றைச் சமைக்க ஆரம்பித்தார். பிற எல்லா நாளையும்போல், உணவு மேஜையில் ஏழு தட்டுகள், ஏழு கரண்டிகளை இரண்டு வரிசையாக அடுக்கி வைத்தார். அப்படி இரண்டு வரிசையாக அடுக்கிவைப்பது, வீட்டுக்குள் நுழையத் துடிக்கும் துர்தேவதைகளை விரட்டியடிக்கும்.

அடிக்கடி வாசலுக்கு ஓடிச்சென்று, கண்ணாடி ஜன்னலில் படியும் நீராவியைச் சமையல் உடையைக் கொண்டு (ஏப்ரன் கொண்டு) துடைத்து வாசலில் என்ன நடக்கிறது என்று பார்த்துவந்தார். 1942 இலையுதிர் கால நாளில் அந்த கலீசியன் கிராமத்தில் ஒரு யூதரையும் வெளியில் பார்க்க முடியவில்லை. ஒரே ஒரு யூதக் காவலர் மட்டுமே கை நிறையக் கோப்புக் கட்டுகளுடன் யூதன்ரெட் அலுவலகம் நோக்கிச் செல்லும் சாலையில் அவ்வப்போது நடந்து சென்று மறைந்தார்.

‘இவங்க அப்பாவை எங்கே இன்னும் காணும்’ என்று பெய்லி தனக்குள்ளாகவே முணுமுணுத்தார். அடுக்களைக்கு அருகில் அமர்ந்திருந்தபடியே, கோழிச் சிறகுகளை ஒட்டுப் போட்ட பையில் போட்டுக்கொண்டிருந்த மாமியார், ’என்ன சொல்ற பெய்லி’ என்று கேட்டார்.

ஒண்ணுமில்லை மாமியார்.

திடீரென்று கடைக்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்த மூலையில் ஏதோ சத்தம் கேட்டது. சோர்கியின் கையில் இருந்த பொம்மையை டோவிடில் ஒரு குச்சியைக் காட்டி மிரட்டியபடியே பிடுங்கிக் கொண்டிருந்தான்: ’நான் சொன்னா நீ கேட்டாகணும். உன் குழந்தையைக் கொடுத்துடு. இல்லைன்னா உன்னையும் பிடிச்சிட்டுப் போயிடுவேன். உனக்கும் செமத்தியா அடி விழும்’.

பெய்லி வேகமாக ஓடி வந்து, ’என்ன சத்தம்… என்ன நடக்குது இங்க?’ என்றார்.

‘அம்மா… இவன் என்னை அடிக்கறான்’ சோர்கி அழுதபடியே சொன்னாள்.

‘அவளை இந்த நிமிஷமே விடுடா’ பெய்லி கண்டித்தார். ஆனால் எட்டு வயது டோவிடில் தங்கையின் கைகளில் இருந்து பொம்மையைப் பிடித்து இழுப்பதை நிறுத்தவே இல்லை.

‘நாங்க கர்ஸிங் விளையாட்டு (அட்டையில் எழுதப்பட்டிருப்பதைச் செய்யும் விளையாட்டு) விளையாடறோம் அம்மா. அந்த விளையாட்டில் அம்மால்லாம் வரக்கூடாது. இந்த விளையாட்டுல போலீஸ்காரரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டாகணும். குழந்தையைக் கொடுக்கலைன்னா அவளும் குழந்தையும் ஜெயிலுக்குப் போயாகணும். இதோ பார் என் கையில துப்பாக்கி’ என்று கையில் இருந்த குச்சியைக் காட்டி மிரட்டினான்.

‘டூஃபூ… நீயும் உன் விளையாட்டும்… அந்தக் குச்சியை இப்பவே தூக்கி எறி. இங்கே வா. என்ன கண்றாவி விளையாட்டைக் கண்டுபிடித்திருக்கிறாய்…’

‘அம்மா… பக்கத்து வீட்டு மால்கிக்கும் ஸ்மெர்க் யோசெஃபின் குழந்தைக்கும் அதுதானே அம்மா நடந்தது. குழந்தையோடு சேர்த்து போலீஸ்காரங்க அம்மாவையும் இழுத்துட்டுப் போய்ட்டாங்கள்ல… மறந்துட்டியா?’

‘என் வீட்டுல இப்படியான விளையாட்டை அனுமதிக்கவே மாட்டேன். இவ்வளவு வளர்ந்த பிறகும் ஒண்ணுமே புரியலையே உனக்கு. போ உன் அண்ணன் லிபி கிட்டே போ’.

டோவிடிலை எப்போதெல்லாம் சமாளிக்க முடியாமல் ஆகிறதோ அப்போதெல்லாம் மூத்தவனிடம் அனுப்பிவிடுவாள் பெய்லி. அண்ணன் சொல்வதை மட்டும்தான் அவன் கேட்பான்.

லிபி அடுத்த அறையில் மேஜையின் முன் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். அவன் பொதுவாக எதுவும் பேசவும்மாட்டான். எதைக் குறித்தும் கோபப்படவும் மாட்டான். அவனுடைய அம்மா அவன் பின்னால், குறும்புத்தனம் மிகுந்த டோவிடிலை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினாள். குட்டிப் பையன் திடீரென்று அமைதியாகிவிட்டான். அண்ணாவை ஆர்வத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான். லிபியின் கையில் இருந்த பேனா வெற்றுக் காகிதத்தில் மளமளவென வேகமாக எழுதிக் கொண்டிருந்தது, ஏதோ அந்தப் பேனா தானாகவே எழுதிக் கொண்டிருப்பதுபோலவும் லிபி வெறும் ஒரு கருவி போல் யாரோ ஒருவருடைய விருப்பத்தை நிறைவேறிக் கொண்டிருப்பவன் போலவும் இருந்தான்.

சிறு சப்தம் கேட்டாலும் கூர்ந்து கவனித்துவிடும் பெய்லியின் காதில் பட்டுத் துணி சலசலப்பது போல் ஒரு சப்தம் கேட்டது. அங்கு பார்த்தபோது துணிகள் வைக்கப்பட்டிருந்த பீரோ கதவுகள் திறந்து கிடப்பதையும் நடுவில் மகள் மிர்ல் ஒவ்வொரு ஆடையாக எடுத்து கண்ணாடி முன்னால் நின்று அணிந்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தாள்.

என்ன கரி நாள் கொண்டாட்டத்துக்குத் தயாராகிட்டிருக்க?

அம்மா… சும்மா போட்டுப் பார்க்கனும்னு ஆசையா இருந்தது.

யாரோ அந்நியர் ஒருவரைப் பார்ப்பதுபோல் மகளை உற்றுப் பார்த்தாள் பெய்லி. கடந்த இரண்டு வருடங்களாக பயமும் பதற்றமுமாக வாழ்ந்து வருகிறாள். குழந்தைகளை வெளி உலகின் அனைத்து அபாயங்களில் இருந்தும் காப்பாற்றியாகவேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதை உணர்ந்திருந்தாள். அதே நேரம் 14 வயதான மகள் மிர்ல் திடீரென்று வயது முதிர்ந்து பெரிய பொண்ணாக மாறிவிட்டதுபோல் தோன்றியது. மிர்லினின் சின்னஞ்சிறு குழந்தைத் தோள்கள் மென்மையாக வளைந்து புதிய, ரகசிய ஆசைகளைச் சுமக்கத் தயாராகிவிட்டதுபோல் தெரிந்தன. அவளுடைய இளமைத் துடிப்பு மிகுந்த பழுப்பு நிறக் கண்கள், விதியை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பெண்களின் கண்களைப் போல் ஆகிவிட்டிருந்தன.

வேகமாக வளர்ந்து வரும் இந்தப் பெண்ணுக்குப் பட்ட கடனை, திவாலான கடனாளி போல், தன்னால் கொடுக்க முடியாது என்று நினைத்தாள். கீழே அமர்ந்து வேதனைப் பெருமூச்சை உமிழ்ந்தாள். மனதுக்குள் அடைக்கப்பட்டிருந்த பயம், தவிர்க்க முடியாத எதிர்காலத்தின் அபாயங்கள் எல்லாம் அவளுக்குள் ஊடுருவி கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்தன. தலையைக் கையால் பிடித்தபடி அலைபாயத் தொடங்கினாள். அவளுக்குள் இருந்த தாய்மையின் கனவுகள், பொறுப்புகள் எல்லாம் வெடித்துச் சிதறியதுபோல் நொறுங்கினாள்.

கடைக்குட்டிகள் இருவரும் சத்தம் எழுப்பாமல் நுனிக்காலில் மெள்ள நடந்து சென்று சமையலறையில் இருந்த பானைகள், பாத்திரங்களைப் பூனைக் குட்டிகளைப் போல் மெள்ள முகர்ந்து பார்த்தனர். சோர்க்கி சமையலறையில் இருந்து வெளியே வந்து மிர்லை, துணி பீரோவில் இருந்து இழுத்துச் சென்றாள்: ’வா அக்கா… உருளைக்கிழங்கு வெந்திருக்கான்னு கரண்டியால குத்திப் பார்க்கலாம்’.

‘அப்பா என்ன இன்னும் காணலை. நான் போய்ப் பர்க்கறேன்’ என்றபடியே டோவிடில் வாசலுக்கு ஓடினான்.

வேதனை நினைவுகளில் இருந்து மீண்டிருந்த பெய்லி ’வீட்டை விட்டு வெளிய ஒரு அடி எடுத்து வைக்கக்கூடாது… … அப்படி வெச்சன்னா என்ன நடக்கும்னே எனக்குத் தெரியாது’ என்று திட்டினாள்.

வெளியே காலடிச் சத்தம் ஒவ்வொரு அடியாக படிகளில் மெதுவாக ஏறும் சத்தம் கேட்டது. லிபி, எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டுத் தன் சட்டைப் பையில் அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு, வெளி வாசல் கதவைத் திறக்க ஓடினான். ஜெர்மானியர்களின் வருகைக்குப் பின்னர் வீட்டுக் கதவை எப்போதும் உள் பக்கமாகத் தாழிட்டு வைப்பது வழக்கமாகியிருந்தது.

அப்பாவும் மகனும் நேருக்கு நேர் சந்தித்தனர். மகனின் கண்களில் ஏராளம் கேள்விகள். அப்பாவுக்குத் தெரிய வந்திருக்கும் புதிய விஷயங்கள் என்ன? இப்போதைக்குக் குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைத்து வைக்கவேண்டிய அந்த விஷயங்கள் என்னென்ன?

அப்பா தலை குனிந்துகொண்டார். எல்லாக் கஷ்டங்களுக்கும் தான்தான் காரணம்; மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றமுடியாத நிலையிலும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டது, குழந்தைகள் பெற்றுக் கொண்டது என தான்தான் குற்றவாளி என்பதுபோல் அப்பா தலைகுனிந்துகொண்டார்.

என்ன விஷயம் என்று கேட்கவேண்டிய அவசியமே இல்லை என்பது தன் கணவரின் கண்களை ஒரு முறை பார்த்ததுமே பெய்லிக்குப் புரிந்துவிட்டது.

ஹெர்ஷ் லாஸரின் முகத்தில் இருந்த கோடுகள் மேலும் இறுகின. தெருவில் இருந்த தூசியும் துரும்புகளும் அதில் படிந்து உறையும் அளவுக்குக் காலத்தின் களிம்புகள் படிந்த கல்வெட்டுபோல் முகம் ஆகிவிட்டிருந்தது. அவருடைய மூக்கு மிகவும் நீண்டு ஒரு சவத்தின் மூக்குபோல் கூர்மையானதுபோல் தெரிந்தது. பொதுவாக நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் கறுமையான அடர்ந்த அவருடைய தாடி கலைந்தும் சிதைந்தும் கிடந்தது.

‘கை அலம்பிக் கொள்கிறீர்களா ஹெர்ஷ் லாஸர்’.

‘இதோ உடனே அலம்பிக் கொண்டு வருகிறேன். எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்’.

அதன் பின் எங்கும் மயான அமைதி. கரண்டியில் என்ன உணவு இருக்கிறது; எவ்வளவு இருக்கிறது என்பதையெல்லாம் பார்க்காமல் சாப்பிடத் தொடங்கினர். பாதி மென்று பாதி மெல்லாமல் அப்படியே விழுங்கினர். நிச்சயமின்மைக்கும் பயத்துக்கும் பழகிய குழந்தைகள்கூட ஏதோவொரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொண்டிருந்தனர். ஆனால், என்ன என்று கேட்கத் தைரியம் வரவில்லை. ஏதோ ஒரு அபாயம் நெருங்கவிருக்கிறது.

யதேச்சையாகக் கரண்டி தட்டில் ,லேசாக உராய்ந்து சத்தம் எழுப்பினால் அனைவரும் அதிர்ந்துபோய் நிமிர்ந்து பார்த்தனர். அவர்களில் பாட்டி மட்டுமே பல்லில்லாத வாயில் போட்டு மெல்லும் முன் கரண்டியில் எடுத்த உணவை உற்றுப் பார்த்துக்கொண்டு சாப்பிட்டார்.

சாப்பாட்டு மேஜையில் இருந்து முதலில் எழுந்தது ஹெர்ஷ் லாஸர்தான். பின் கையால் மீசையைத் துடைத்துக் கொண்டவர், குறுக்கும் நெடுக்குமாக பித்துப் பிடித்தவர்போல் நடக்க ஆரம்பித்தார். பெய்லி உணவு மேஜையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தபோது, ’பெய்லி அதுபாட்டுக்கு இருக்கட்டும்’ என்று சைகையால் சொன்னார்.

பெய்லியின் கைகள் மிகவும் கனமானதுபோல் தொய்ந்துவிழுந்தன. நடந்து கொண்டிருக்கும் கணவருக்குக் குறுக்கே வந்து நின்றுகொண்டாள்.

‘நீங்கள் புதிதாக எதையாவது கேள்விப்பட்டீர்களா..? எல்லாரும் சொல்வது நிஜம் தானா?’

‘உண்மைதான். எல்லாரும் சொல்வது உண்மைதான் பெய்லி’. தொண்டையில் முள் குத்திக் கொண்டிருப்பதுபோல் குரல் கரகரப்பாக சன்னமாக ஒலித்தது.

‘எல்லா கட்டடங்கள், இரும்பு வேலிகளின் மேலே அறிவுப்புத் தட்டிகள் இ வைக்கப்பட்டுள்ளன. இரண்டு மணி நேரத்துக்குள் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் யாரேனும் ஒருவரை அனுப்பியே ஆகவேண்டும். அதற்கு அர்த்தம் என்ன என்று உனக்குத் தெரியுமா பெய்லி. ஒவ்வொரு குடும்பமும் அவர்களே அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பலிமேடைக்கு அனுப்பிவைக்கவேண்டும். நம் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் போயாகவேண்டும். இல்லையென்றால் அவர்கள் வந்து அனைவரையும் இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள். ஒருவரைக் கூட விட்டுவைக்கமாட்டார்கள்’ என்று சொன்னவர், ’நமது மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்தரத்தை ஜெர்மானியர்கள் மிகுந்த கருணையுடன் நம்மிடமே தந்திருக்கிறார்கள்’ என்று கசந்த புன்னகையுடன் சொன்னார்.

அதைக் கேட்டதும் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். ஆனால் யாருக்கும் எந்த ஆச்சரியமும் இல்லை. ஜெர்மானியர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவரின் மன ஓட்டத்தை அவதானித்தனர். யார் போவது? திரும்பி வரவே முடியாத இடத்துக்கு யார் போவது?

அனைவர் மனதிலும் ஒருவித ஒட்டுறவற்ற மனப்பான்மை நிரம்பியது. அனைவருமே அடுத்தவரை அனுப்பிவைக்கத் தயாராகினர். அனைவருக்குள்ளும் ஒருவிதப் பகைமை உருவானது. கொடிய விலங்கிடமிருந்து தப்பிக்க அவர்களும் விலங்காகியாக வேண்டியிருந்த கொடுமை.

யாரை அனுப்புவது..? யார் அனுப்பிவைப்பது? எதன் அடிப்படையில் அந்த முடிவை எடுக்கவேண்டும்? யார் இன்று இறப்பது… யாரை வாழ அனுமதிக்கலாம், குறைந்தபட்சம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு.

தலை குனிந்திருப்பவர் யாரையும் பார்க்காமல் லிபி அசாதாரணமான நிதானத்துடன் ஆரம்பித்தான்: ’அப்படியானால்…’

சொல்லவிருக்கும் வார்த்தைகளின் கனத்தை யாராலும் தாங்க முடியாது என்பதை உணர்ந்தவன் போல் பாதியிலேயே நிறுத்தினான். குடும்பத்தில் இருப்பவர்களில் குறைவான முக்கியத்துவம் உள்ளவர் யார்? குடும்பத்தில் யாரை வதைமுகாமுக்கு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அனுப்பி வைக்கலாம்?

பெய்லி, கடைக்குட்டிகள் இருவரையும் தன் இரு கைகளால் கட்டி அணைத்துக் கொண்டாள். ஏதோ ஒரு சுவர் எழுப்பி எதிரிகள் யாரும் நெருங்க முடியாமல் மறைத்துக்கொள்வதுபோல் அவள் செய்கை இருந்தது.

தாம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டோம்; இன்னும் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பதைப் பெரியவர்கள் கணக்கிடத் தொடங்கினர். ஒவ்வொருவருடைய முகத்திலும் இருக்கும் கோடுகளின் எண்ணிக்கையையும் தளரத்தொடங்கிய நரம்புகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டனர்.

அப்பாவை வதைமுகாமுக்கு அனுப்பக்கூடாது. அதில் அனைவரும் ஒருமித்த மனதுடன் இருந்தனர். அவர்தான் குடும்பத்தைக் காப்பாற்றுபவர். உணவு தேடிக் கொண்டுவந்து தருபவர். நிச்சயமாக அம்மாவையும் பலி கொடுக்க முடியாது; குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது?

லிபியின் விஷயத்தை எடுத்துக் கொண்டால் 24 வயதுதான் ஆகியிருக்கிறது. வாழ்க்கையில் எதையுமே அவன் இன்னும் அனுபவிக்கவில்லை. அதிலும் கடைசி இரண்டு வருடங்கள் ஜெர்மானிய ஆக்கிரமிப்பினால் ஏற்கெனவே பாழாகிவிட்டன. அவன் நிதானமாக இதையெல்லாம் யோசித்துப் பார்த்தாக வேண்டும். அல்லது அவன் தன் முடிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் செய்யலாம். அவனுடைய அம்மா தலைமுடியை விரித்துப் போட்டுக்கொண்டு உரத்த குரலில் சில நாட்கள் அழுவாள். அப்பா நீத்தார் நினைவுச் சடங்குகள் செய்யும் போது வெடித்துச் சிதறி அழுவார். டோவிடில் அண்ணனை எங்கே காணும் என்று சில நாட்கள் ஒன்றும் புரியாமல் அழுவான். ஆனால், அவர்கள் அனைவரையுமே மரணத்தில் இருந்து லிபி காப்பாற்றியிருப்பான். இந்த ஆசுவாசமே அவர்கள் மனதில் அதன்பின் வந்து போகும்.

லிபி, மனதளவில் அனைவரிடமும் ஏற்கெனவே விடைபெற்றிருந்தான். இனிமேல் அவனுக்கு நாளை என்று ஒன்று இல்லை. இன்றோடு எல்லாம் முடிந்துவிடும். உலகில் எல்லாமே முன்பு போலவே நடக்கும். அவன் மட்டும் இருக்கமாட்டான். சூரியன் தினமும் உதிக்கும். வானம் என்றென்றைக்கும் இருக்கும். வீட்டில் இருக்கும் கடிகாரம் கூட நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும். இதையெல்லாம் பார்க்க அவன் மட்டும் இருக்கமாட்டான்.

சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தான். அதில் இருந்த பணத்தை எடுத்துக் கீழே வைத்தான். கைக் கடிகாரத்தைக் கழற்றி வைத்தான். அனைத்தையும் பிரக்ஞையின்றிப் பெரிய கடிகாரத்தின் அடியில் தள்ளிவைத்தான். தான் எழுதிக் கொண்டிருந்த கடிதத்தை மடித்துவைத்தான். அது அவனுடைய காதலி எல்க்குக்கு எழுதிய கடிதம். கடைசி கடிதம்.

போலந்து நண்பர் ஒருவரைப் பார்த்து அதைக் கொடுத்தனுப்பவேண்டும் என்று நினைத்திருந்தான். இரும்பு வேலி யூதக் குடியிருப்பில் இருந்து கடிதங்கள் ஒருவருக்கு வந்து சேர்வதென்பது அவர்களுக்கான மரண ஓலையாகிவிடும். எல்க், போலந்துக்காரி என்ற போர்வையில் போலியான ஆரிய ஆவணங்களுடன் வாழ்ந்துவருகிறாள். லிபிக்கும் அதுபோல் போலி முத்திரை, கையெழுத்துகள் கொண்ட ஆவணங்கள் தயாரிக்கும் முயற்சியில் அவள் இருப்பதாகச் சொல்லியிருந்தாள். அது கைக்குக் கிடைத்ததும் இவர்கள் இருவரும் இங்கிருந்து தப்பித்து ஏதாவது ஒரு பெரு நகருக்குச் சென்று போலந்து மக்கள் கூட்டத்துக்குள் ஒளிந்து வாழலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

லிபிக்கு பதிலாக வதை முகாமுக்கு வேறு யாரை அனுப்பலாம்? பெய்லியின் மாமியார் பாட்டி இருக்கிறாரே? பாட்டியைத் தேடி லிபியின் கண்கள் துழாவியபோது பெற்றோரின்  கண்களைச் சந்தித்தன. இலையெல்லாம் உதிர்த்து மொட்டையாக நிற்கும் மரம் போல் பாட்டி தன் வாழ் நாள்களையெல்லாம் வாழ்ந்து உதிர்த்துவிட்டு நிற்கிறாள். ஆனால், யாரும் இதை வாய்விட்டு சத்தமாகச் சொல்லத் தயாராக இல்லை. எஞ்சியிருக்கும் சொற்ப நாட்களை விட்டுவிட்டு ’போய்விடு’ என்று அவளுக்கு மரணத் தீர்ப்பு வழங்க யாருக்கும் மனமில்லை.

அனைவர் மனதிலும் இப்படியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க பாட்டி, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் மேலும் அழுத்தமாகத் தன்னைப் புதைத்துக் கொண்டாள். அப்படியே நாற்காலியோடு நாற்காலியாக உருகிக் கலந்துவிட விரும்பியதுபோல் அழுத்தமாக அமர்ந்துகொண்டாள். தன் காலடிக்குக் கீழே இருக்கும் நிலத்தினுள் வேரைப் பாய்ச்சிக்கொண்டு யாராலும் பிடுங்கி எடுக்கவே முடியாத அளவுக்கு ஊன்றிக்கொண்டாள். அந்த நொடியில் மற்ற அனைவரின் உணர்வுகள் மிகவும் நுட்பமாக, உணர்வுபூர்வமாகக் கூர்மையடைந்தன.

அடுத்தவர் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒவ்வொருவருக்கும் நன்கு வெளிப்படையாகத் தெரிந்ததுபோல் ஆனது. பாட்டியின், பார்வை மங்கி மூடிய விழிகளைப் போலவே அவர் என்ன நினைக்கிறார் என்பது மட்டுமே யாருக்கும் புரியவில்லை. மரணத்தை நோக்கி மெள்ள இழுத்துச் செல்லும் இந்த மணித்துளிகளில் இருந்து தப்பிக்கும் நோக்கில் தன் மனதின் வாசல்கள் அனைத்தையும் இறுக மூடிக் கொண்டிருந்தாள்.

சட்டென்று குடும்பத்தினர் அனைவரும் தன்னைத் தனிமைப்படுத்தியதுபோல் உணர்ந்தாள். தான் உடலும் உயிரும் கொடுத்த தன் மகனிடமிருந்தும் தனது உடம்பின் சதை ரத்தத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டதுபோல் உணர்ந்தாள். மகனின் கண்கள் கூடப் பாட்டியைத் தேடிக் கொண்டிருந்தன. பாட்டியை நோக்கிக் குவிந்திருந்தன.பாட்டி தன் உடம்பில் எஞ்சியிருந்த பலம் முழுவதையும் திரட்டிக் கொண்டு அதை எதிர்த்தாள். அவளுக்குப் பதிலாக வதைமுகாமுக்குப் போக யாரும் தயாரில்லை. ஒருவருடைய கண்ணிலும் அவள் எதிர்பார்க்கும் கருணை இல்லை. உயர்ந்த மதில் சுவருக்கு அப்பால் கொண்டு செல்லப்படவிருக்கும் அவளுக்கு ஆறுதல் சொல்ல ஒரு வார்த்தையும் அங்கு இல்லை. யாருக்கும் வேண்டாதவராகிவிடும் நிலையில் மரணம் எளிதுதான்.

வயதானவர்களுக்கு இறப்பது மிகவும் எளிது என்று நினைக்கிறார்கள். இருக்கலாம். ஆனால் அது அதற்கான நேரத்தில், அதற்கான இடத்தில், நமது படுக்கையில் அது நேரும் போதுதான் அப்படி இருக்கும். ஆனால், ஒவ்வொரு காலடியாக எடுத்துவைத்து, எலும்பும் சதையுமாக, தட்டுத்தடுமாறி நடந்து சென்று மரணத்தைச் சந்திப்பதென்பது அப்படியானது அல்ல. அவள் அதற்குத் தயாரில்லை.

வாழ்க்கையை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்து வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. அம்மாவின் வீட்டில் சின்னஞ்சிறு குழந்தையாக அவள் இருந்த தருணத்தில் இருந்து வாழ்ந்து பார்க்க விரும்பினாள். அவளது மகனையும் பேரன்களையும் போல் அவளும் ஒருகாலத்தில் குழந்தையாக இருந்திருக்கிறாள். பெய்லியின் மடியில் சோர்கி உட்கார்ந்திருப்பதுபோல் பாட்டியும் அவளுடைய அம்மாவின் மடியின் இதமான கதகதப்பில் உட்கார்ந்திருக்கிறாள்.

‘அம்மா அம்மா…’ என்று பாட்டியின் நீல நிற உதடுகள் துடித்தன. இறந்தவர்களின் உலகில் இருந்து அவளுடைய அம்மாவை எழுப்பிக் கொண்டு வந்துவிடும் போல் அத்தனை ஏக்கத்துடன் இருந்தது அந்த அழைப்பு. சிறு வயதில் யாரேனும் பயமுறுத்தினால் ’அம்மா’ என்று அடைக்கலம் தேடி அழைப்பாளே அதுபோல் இருந்தது அந்த அழைப்பு. அம்மாவின் முகம் பாட்டிக்கு மறந்து போயிருந்தது. மங்கலாக, காலத்தின் களிம்பு ஏறிய புகைப்படம் போல் தெளிவின்றி மனதுக்குள் ஒரு சித்திரம் உருவானது. மூடிய கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர்த் துளிகள், சுருக்கம் விழுந்த கன்னத்தின் வழியே உருண்டு வழிந்தன.

பின்னர் பாட்டியின் மனக்கண்ணில் அவள் மணப்பெண்ணாக இருந்த நாள் நினைவுக்கு வந்தது.  மணமகன் டேவிட்டை  ஒரே ஒரு முறைதான், அதுவும் திருமண நிச்சயதார்த்தத்தின் போதுதான் பார்த்திருந்தாள். இருந்தும் அவளுடைய உலகின் மையமாக அவளுடைய கனவுகளின் நாயகனாக அவனே ஆகியிருந்தான். திருமண நாளுக்கான உடைகள், அலங்காரங்களைத் தேர்ந்தெடுக்கும்போது அனைத்துமே மிக மிக விலை உயர்ந்ததாக, மிக மிகத் தரமானதாக இருக்கவேண்டும் என்று அத்தனை மெனக்கெட்டது நினைவுக்கு வந்தது. அதி அற்புதமான ரோஜா மலர்கள் நெய்யப்பட்ட நீல நிறப் பட்டாடையை ஆசை ஆசையாகத் தேர்ந்தெடுத்தது நினைவுக்கு வந்தது. மணமகனை முழுவதுமாக வசீகரித்து மயக்கிவிடவேண்டும்; திருமண நாளில் மயங்கும் அவன் வாழ்நாள் முழுவதும் தன் நினைவிலேயே இருக்கும்படி வசீகரிக்கவேண்டும் என்று துடித்தது நினைவுக்கு வந்தது.

வீட்டில் பாட்டியின் அலமாரியில் மிகச் சமீப காலம் வரை அந்தத் திருமண உடை தொங்கிக் கொண்டிருந்தது. யாரையும் அதைத் தொட விடவே மாட்டாள். பேத்தி மிர்ல் அவளைப் போலவே இருப்பதால் அவளை மட்டும் அதைத் தொட சமீபகாலமாக அனுமதித்தாள். மிர்லைப் பார்க்கும்போது சின்ன வயதில் தன்னைப் பார்த்ததுபோலவே பாட்டிக்கு இருந்தது.

கடிகாரம் இரண்டு முறை அடித்தது. அனைவரும் சுய நினைவுக்கு வந்தனர். விரைவில் வதைமுகாமுக்கு ஒருவரை அனுப்பியாகவேண்டும். இதுவரையும் எதிர்பாராத ஏதாவது நடக்கும் என்று காத்துக் கொண்டிருந்தனர். ஏதாவது அதிசயம் நடந்துவிடலாம். இப்போதோ இன்னும் அரை மணி நேரம் தான் மிச்சமிருக்கிறது. அனைவரும் இறப்பதா..? யாரேனும் ஒருவரை மரண முகாமுக்கு அனுப்பிவைப்பதா?

மிர்ல் துணிச்சலுடன் எழுந்து நின்றாள். சுவரில் தொங்கிக் கொண்டிருந்த தன் மேலாடையைத் தட்டி எடுத்து அணிந்துகொண்டாள். வீட்டின் நடுப்பகுதிக்கு வந்தாள்.

’நான் போறேன்’.

அனைவருடைய தலையும் அவள் பக்கம் திரும்பியது. அம்மாவின் திட்டுக்களையும் மீறி அவள் அணிந்துகொண்டிருந்த பட்டு உடையுடன் நின்று கொண்டிருந்தாள். அந்த உடை அவளை வயதானவளாகக் காட்டியதா… அதிகம் வளர்ந்துவிட்டதாகக் காட்டியதா… அவள் முகத்தில் தெரிந்த இறுக்கமான உணர்வு அப்படிக் காட்டியதா… தெரியவில்லை. மிர்ல் சில மணி நேரங்களில் மிக அதிக உயரம்  வளர்ந்துவிட்டதுபோல் அதிக வயதாகிவிட்டதுபோல் அனைவருக்கும் தோன்றியது.

’எங்க போகப் போற? போறேன்னா என்ன அர்த்தம்’ கண்கள் ரத்த சிவப்பில் மின்ன அப்பா அதட்டினார்.

’உங்களுக்கே தெரியும். எல்லாருக்கும் குட் பை… நான் போறேன்’ என்றபடியே வாசலை நோக்கிச் சென்றாள்.

அப்பா பாய்ந்து சென்று அவள் தோளை இறுக்கிப் பிடித்தார்: ’இந்த நொடியே உள்ள போ. இல்லைன்னா நிலைமை ரொம்ப மோசமாகிடும். சொல்றது கேட்குதா..?’

மிர்ல் அவர் சொன்னதைக் கேட்காமல் திமிறினாள். பழைய பட்டாடை இழுத்த இழுப்பில் கிழியத் தொடங்கியது.

அனைவரும் அங்கு நடப்பதைப் பார்த்தனர். யாரும் இருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. அப்பாவைத் தடுக்கவோ மிர்லுக்கு உதவவோ ஒருவரும் முன்வரவில்லை. ஹெர்ஷ் லாஸர் ஒருகையால் மிர்லைப் பிடித்தவர், இன்னொரு கையால் தன் இடுப்பில் இருந்த பெல்ட்டைக் கழற்றினார்.

என்ன நடக்கிறது என்றே இருவருக்கும் புரியவில்லை. தனது செல்ல மகளை அடிக்கப்போகிறாரா..? இதுநாள்வரையில், அவர் அவளை அடிப்பதை விடுங்கள்; அடிக்கப் போவதாகக் கையை ஓங்கியதுகூட இல்லை. கடைக்குட்டிகளைவிட செல்ல மகளுக்குத்தான் கூடுதல் பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்த அப்பா… இன்று நிதானம் இழந்துவிட்டார். அன்பைக்கூட ஆவேசமாக வெளிப்படுத்தவேண்டிய கொடூரம். அவர்கள் அனைவரும் அனுபவித்து வந்த குழப்பமும் கலக்கமும் அப்படி நடந்துகொள்ளவைத்துவிட்டது. இரவெல்லாம் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பிவிட்டன, புண்ணில் சிறுகச் சிறுகச் சேகரமாகும் சீழ் வெடித்துக் கொப்பளிப்பதுபோல.

பெல்ட்டை மிர்லின் தலைக்கு மேலே சுழற்றி அடித்தார். மிர்ல் அசையாமல் நின்றாள்.  பெல்ட் மிர்லின் முதுகைப் பதம் பார்க்கத்தொடங்கியது. இடுப்பில் விளாசினார். கோதுமைக் கதிரை சுழற்றிச் சுழற்றிச் சூடடிப்பதுபோல் ஓங்கி ஓங்கி அடித்தார். அடி பலமாக விழுகிறதா என்று சோதித்துப் பார்த்து பார்த்து அடித்தார். மிர்ல் துளியும் அசைந்து கொடுக்காமல் நிற்கவே, கன்னுக்குட்டியைத் தரதரவென இழுப்பதுபோல் அவளை இழுத்துச்சென்று மேஜையின் ஒரு காலில் பெல்ட்டால் கட்டிப் போட்டார். பெல்ட் பக்கிளைப் பல்லால் கடித்துப்  பூட்டினார். முன் நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி சோர்ந்துபோய்க் கீழே உட்கார்ந்தார். அவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

மிர்ல் முட்டிக்கால் போட்டபடி மேஜையுடன் தளர்ந்துபோல் உட்கார்ந்திருந்தாள். கடந்த சில நிமிடங்களில் என்ன நடந்தது என்றே புரியாமல் அசைவற்றுக் கிடந்தாள். அவளுடைய இளமைக்காலத்தில், முதன் முதலாக, ஒரு விஷயத்தைத் துணிச்சலாகச் செய்ய விரும்பினாள். அது மரணமாகவே இருந்தாலும், அதனால் என்ன? ஒரு மண மகள் தன் மணமகனை ஆசையுடன் சென்று சந்திக்கப் போவதுபோல் அவள் புறப்பட்டிருந்தாள்.

அன்று அதிகாலையில் இருந்தே அவள் அதற்குத் தயாராகிவந்திருந்தாள். இப்போது அவளை அவமானப்படுத்தி அடித்து ஒடுக்கிவிட்டார்கள். அதுவும் அவளுடைய அன்பு அப்பா, ஆசை அப்பா… அவளை வேறு யாரைவிடவும் அதிகம் புரிந்துவைத்திருந்தவர். அம்மாவைவிடவும் அதிகம் புரிந்து வைத்திருந்தவர் இன்று இப்படி அவமானப்படுத்திவிட்டார். அவள் தன்னைப் பலிகொடுக்க விரும்பினாள். அவர் அதைத் தடுத்துவிட்டார்.

ஐசக்கை பலி கொடுக்கலாம். அது சரியாம். ஆனால், இவளைப் பலி கொடுக்க அப்பா தயாரில்லை. ஐசக்கின் அப்பா ஆப்ரஹாம் தான் தன் மகனைப் பலி கொடுக்க முன்வந்தார். கடவுள் கேட்டுக்கொண்டதன்படி பலிகொடுக்கத் தன் மகனைக் கைபிடித்து அழைத்து வந்தது அப்பா ஆப்ரஹாம்தான். இங்கோ எல்லாரும்… ஆமாம் எல்லாரும், பாட்டியைப் பலி கொடுக்க விரும்புகிறார்கள். பாட்டியால் அந்தத் தொலை தூரங்களுக்கு நடந்து செல்ல முடியுமா என்ன? வயதானவர் எப்படியும் சீக்கிரமே இறக்கத்தான் போகிறார். அப்படியான ஒருவரைப் பலி கொடுப்பது எப்படிச் சரியான பலியாக இருக்க முடியும்?

மிர்லுக்கு அப்பாவின் மேல் முதல் முறையாக வெறுப்பு வந்தது. ஆத்திரத்தில் திமிறிக் கொண்டு தப்பிக்க முயன்றாள். அவள் திமிறத் திமிற பெல்ட் அவள் காலை மேலும் அழுத்தி இறுக்கத் தொடங்கியது. சோர்ந்துபோய் கால்களுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள்.

ஜன்னல் வழியாக ஓர் ஒளிக்கற்றை அவள் காலடியில் விழுந்தது. அவளுடைய நீலப் பட்டாடையில் அந்த ஒளி விழுந்ததும் ரோஜா மலர்கள் புத்துணர்ச்சி பெற்றதுபோல் இதழ் விரித்துச் சிரித்தன. வீட்டில் மீண்டும் மயான அமைதி கவிழ்ந்தது. ஒரே ஒரு ஈ மட்டும் தூங்குவதற்கு அமைதியான இடம் தேடி அலைந்துகொண்டிருந்தது.

அனைவருடைய தலையும் கவிழ்ந்துகிடந்தன. என்ன நடக்கவேண்டுமோ அது நடக்கட்டும். யாரை இழுத்துச் செல்லப்படவேண்டுமோ அதை ஆக்கிரமிப்பாளர்களே தீர்மானிக்கட்டும். ஒரே ஒருவருக்குப் பதிலாக அனைவருமே வதை முகாமுக்குப் போக நேர்ந்தால் அது அப்படியே நடக்கட்டும். கடவுளின் சித்தம் அதுவானால் அப்படியே ஆகட்டும். அது அப்படித்தான் நடக்கவேண்டும் என்று அவர் விரும்பினால், அதை அப்படி நடக்க அவர் அனுமதித்தால் அந்த மரணத்தை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாரானார்கள்.

சுவரில் தொங்கிய கடிகார முள் கெடுவைக்கப்பட்ட நேரத்தை நெருங்குவதையே அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். மயான அமைதி நிலவிய அந்த வீட்டில் கடிகார முள் நகரும் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

சட்டென்று அப்பாவின் தலை திரும்பியது. அனைவருடைய கண்களும் அவர் பார்த்த திசையில் திரும்பின. பாட்டியின் நாற்காலி காலியாக இருந்தது. அனைவரும் அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருந்ததால்  பாட்டி நடந்துசென்றதை யாரும் கவனிக்கவில்லை. எங்கே போனாள்? யார் காதிலும் எந்த சப்தமும் விழாமல் எப்படி அவள் சென்றாள்? ஒருவருக்குமே எந்த சப்தமும் காதில் விழுந்திருக்கவில்லை. சில நிமிடங்களுக்கு முன்புதான் புறப்பட்டுச் சென்றிருக்கவேண்டும்.

அனைவருடைய கண்களும் எல்லா மூலைகளையும் துழாவின. திடீரென்று வாசல் நோக்கிச் செல்லும் வராந்தாவின் ஜன்னல் கண்ணாடியில் நிழலாடியது. நிழல் மெள்ள மெள்ளப் பெரிதானது. அனைவருடைய கண்களும் அங்கேயே பார்த்தன. ஆம். அது பாட்டிதான். விடுமுறை நாட்களில் அணிந்துகொள்ளும் தனது பழைய கறுப்புத் தொப்பியை அணிந்துகொண்டிருந்தார். ஒரு கையில் பிரார்த்தனை புத்தகம். இன்னொரு கையால் வாசல் கதவை மெள்ளத் திறந்து வெளியே சென்றார். கதவு ஓரிரு தடவை திறந்து மூடியது.

இருந்த இடத்திலிருந்து ஒருவரும் எழுந்திருக்கவில்லை; ஒருவரும் பாட்டியைத் தடுக்கவில்லை; திரும்பிவரும்படி அழைக்கவில்லை. அனைவரும் தமது இருக்கைகளில் பனிபோல் உறைந்துகிடந்தனர். அவர்களுடைய தலை மட்டுமே மேலும் மேலும் கீழே குனிந்தன. காலடியில் தூசியும் துரும்புமாகக் கிடந்த தரைமட்டுக்கும் தாழ்ந்து, அதுதான் அவர்களுக்கான இடம் என்பதுபோல் முழுவதுமாகக் குனிந்தன.

0

The Road of no Return by Rachel Haring Korn

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *