Skip to content
Home » உலகக் கதைகள் #7 – பஸில் ஃபெர்னாண்டோவின் ‘நாம் ஒரு நாள் வெல்வோம்’

உலகக் கதைகள் #7 – பஸில் ஃபெர்னாண்டோவின் ‘நாம் ஒரு நாள் வெல்வோம்’

நாம் ஒரு நாள் வெல்வோம்

1983 ஸ்ரீ லங்காவுக்கு மறக்க முடியாத வருடம். ராவத்தை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி மிஷ்கினுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸோய்ஸாவுக்கும் முனிசிபல் கவுன்சில் உறுப்பினர் பெனெடிக்டுக்கும் மறக்க முடியாத வருடம்தான். அதைவிட இந்த மூவரின் கூட்டணி ராவத்தை மக்கள் அனைவருக்கும் ஒருநாளும் மறக்க முடியாததாக அமைந்தது.

இவர்களில் மிஷ்கின் தான் மிகவும் இளையவர். வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டாட விரும்பினார். எல்லா காவல்துறை அதிகாரிகளையும் போல விரைவிலேயே பணக்காரன் ஆக விரும்பினார். இந்த மூவரில் மூத்தவர் பேராசையும் தந்திரமும் பண்பற்ற குணமும் நிறைந்த பெனெடிக்ட். நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவர்கள் இருவருடைய பலவீனங்களும் நன்கு தெரியும். நேரம் வரும்போது இவர்களை வைத்து நல்ல பலன் அடைந்துகொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தார்.

அவர் எதிர்பார்த்த அந்த நேரம் 1983-ல் வந்தது.

ராவத்தை பகுதியில் இருந்த அத்தனை தமிழர்களின் வீடுகளும் தீயில் எரிந்தன. உண்மையிலேயே தீ வைக்கப்பட்டன. பெனெடிக்ட் தான் கும்பல் சேர்த்துக்கொண்டு தலைமை தாங்கிச் சென்று தீ வைத்தார். கள்ள ஓட்டுகள் போட, விளம்பர போடுகளில் கல் எறிய, எதிர்க் கட்சியினரின் போஸ்டர்களைக் கிழிக்க, தொந்தரவு கொடுப்பவர்களுக்கு அநாமதேயமாக போன் செய்து மிரட்ட போன்றவற்றுக்கெல்லாம் முன்பே ஒரு கும்பல் சேர்த்து வைத்திருந்தார். இந்தச் செயல்கள் எல்லாம் ஒரு வகையில் சட்டத்துக்கு உட்பட்ட செயலாகிவிட்டிருந்தன. இந்த முறை அந்தக் கும்பலை வைத்துக்கொண்டு அடுத்தகட்டமாக தமிழர் வீடுகளுக்கெல்லாம் சென்று தீ வைத்தார்.

மிஷ்கின் இந்தக் கலவரம் பரவ வழி செய்தார். தன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த தமிழர்கள் அனைவரையும் விரட்டியடித்தார். தொலைபேசி அழைப்புகள் எது வந்தாலும் எடுக்கவேண்டாம் என்று உதவி காவலர்களுக்கு உத்தரவிட்டார். அவரும் பிற காவலர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்பதை வெளிப்படையாகத் தெரியவைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பான தொலைவில் இருந்தார். நடந்த கலவரம் அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடியும், உதவி கேட்டு வந்த தமிழர்களுக்கு எங்காவது பாதுகாப்பான இடத்துக்கு ஓடித்தப்பிவிடுங்கள் என்று பொறுப்புடன் ஆலோசனை சொல்லியபடியும் நேரத்தைக் கழித்தார்.

இதனிடையில் ராவத்தையில் கொள்ளையடிப்பு, திருவிழாக் கொண்டாட்டம்போல் ஆகியிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் இறங்கியிருந்தனர். இரண்டு முழு பகல்கள், இரண்டு முழு இரவுகள் அனைத்தும் நடந்தேறின. இனிமேல் கொள்ளையடிக்க எதுவும் இல்லை என்ற நிலையும் கண்ணில் ஒரு தமிழரும் படவில்லை என்ற நிலையும் வந்த பின்னரே எல்லாம் ஓய்ந்தது.

இப்போது சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொறுப்பு மிஷ்கினிடம் வந்தது. நிறைய பேர் கைது செய்யப்பட்டனர். மிஷ்கினின் உதவி காவலர்கள் கொள்ளையடித்தவர்களிடம் தங்கள் பங்கைக் கேட்டு மிரட்ட ஆரம்பித்திருந்தனர்.

அனைவருடைய கண்களும் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் குவிந்தது. வெகு தொலைவில் இருந்த கலவர பூமியில் இருந்து தொலைபேசி அழைப்புவிடுத்த தமிழர்களிடம் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். இருந்தும் தமிழர்கள் தமது சொத்துக்களையெல்லாம் விற்றுவிடுவதே நல்லது; மறுபடியும் கலவரம் மூளாது என்று எந்த உத்தரவாதமும் தரமுடியாது என்று அவர்களுக்கு நிதானமாக ஆலோசனை வழங்கினார். முன்பு என்ன விலை கிடைத்ததோ அந்த விலைக்கு இப்போது விற்க வழியிருக்காதுதான். ஆனால், இனியும் விலை மோசமாகத்தான் ஆகும் என்று அக்கறையுடன் சொன்னார். சொத்துகளை வாங்கத் தயாரானவர்களை அடையாளம் காட்டி உதவி செய்யத் தயார் என்று பண்புடன் சொன்னார். அப்போதுதான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் ஆரம்பித்திருக்கும் முனிசிபல் கவுன்சில் உறுப்பினர் பெனிடிக்டிடம் பேசி ஏற்பாடு செய்து தருவதாக நல்வழிகாட்டினார். இதுபோல் பல வழிகளை, உதவிகளை ஸோய்ஸா அன்று முழுவதும் வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு கருணையுடன் பதிலாகச் சொல்லிவந்தார்.

இதனிடையில் ராவத்தையில் இருந்த மிஷ்கின் வசம் ஏராள தங்க நகைகள் குவிந்துவிட்டதாகவும் மனைவிக்கும் ஆசை நாயகிக்கும் (பலரும் இதைப்பற்றியே அதிகம் பேசினார்கள்) நகைகளைக் கொடுத்த பின்னர் நண்பர்களுக்கும் கொடுத்துவருகிறார் என்றும்  ‘வதந்திகள்’ பரவின. வேறு பல பொருட்களும் அவரிடம் குவிந்துவிட்டிருந்தன என்று சொல்லப்பட்டது. இப்போதே அவர் ஓய்வு பெற்று பெரும் செல்வந்தராக வாழ்க்கையைக் கழிக்கலாம்.

இன்னொரு கதையின்படி, மிஷ்கின் ஒரு லாரி நிறைய கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை கலவரத்தின் முதல் நாளே ஏற்றி, அவர் சொன்ன இடத்தில் இறக்கவைத்தார்; பொருட்களையெல்லாம் இறக்கியதும் லாரி டிரைவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அருகில் தீவைக்கப்பட்டிருந்த மில் ஒன்றுக்குள் வீசிவிட்டார் என்று சொன்னார்கள். பின்னாளில் ஏதேனும் விசாரணை என்று வந்து அவன் எதையாவது சொல்லிவிடக்கூடாதே.

மூன்றாவது நாளில் அதாவது கலவரம் முடிந்த மறு நாள் பெனெடிக்ட் ஒரு நோட்டரி வழக்கறிஞர் வீட்டில் இருந்தபடி வீட்டு விற்பனைப் பத்திரங்கள் எப்படி எழுதப்படவேண்டும், எவ்வளவு பணம் தரப்படவேண்டும், பத்திரத்தில் எவ்வளவு தொகை என்று குறிப்பிடவேண்டும் என்றெல்லாம் உத்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.

மிஷ்கின், பெனெடிக்ட், ஸோய்ஸா மூவரும் கொழும்புவில் மிகப் பெரிய பண்ணை வீட்டில் வருங்காலத்தில் வரவிருந்த செல்வங்கள் குறித்த மகிழ்ச்சியில் மது பானம் அருந்திக் கொண்டாடினார்கள்.

நான்காவது நாள், நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டு அழைப்பொலி அதிகாலையில் திடீரென்று இடைவிடாமல் ஒலித்தது. பதறியபடியே எழுந்து சென்று பார்த்தார். வீடு முழுவதும் விளக்குகள் இரவு முழுவதும் எரிந்துகொண்டிருந்தன. காவலர்கள் கண் விழித்துக் காத்துவந்தனர். வெளியில் வந்திருப்பது யார் என்பதை உள்ளே மறைந்து நின்றபடியே பார்க்க முடியும்படியான ஏற்பாட்டை ஸோய்ஸா செய்திருந்தார். வந்திருப்பது அவருடைய தீவிர தொண்டர் தான். ராவத்தையில் இருந்து வந்த சில வயதான பெண்மணிகள் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தனர். ஸோய்ஸா கதவைத் திறந்து பேச ஆரம்பிக்கும் முன் அந்தத் தொண்டர் மளமளவென பேச ஆரம்பித்தார்: சர்… நம்ம ஆட்களையெல்லாம் போலீஸ் அரெஸ்ட் பண்றாங்க. ஆச்சரியமா இருக்கு. நம்ம ஆளுங்க வீட்டுக்குள்ளயும் வந்து நம்ம போலீஸ் எல்லாத்தையும் தேடுது’.

அதெப்படி… நான் இப்பவே மிஷ்கின் மஹத்தையாவுக்கு போன் போடறேன் என்றார் ஸோய்ஸா. ஆனால் அவர் அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் வந்திருந்த மூதாட்டி பேசினார்:

‘மிஷ்கின் மஹத்தையாகிட்ட பேசியாச்சு. அவரால ஒண்ணும் பண்ண முடியாதாம். மேலிடத்து உத்தரவாம்.’

ஸோய்ஸா சிறுது நேரம் யோசித்தார்: ‘எனக்குத் தெரியும்… எதாவது அசம்பாவிதம் இப்படி நடக்கும்னு எனக்குத் தெரியும்’.

அவர் சொல்லி முடிப்பதற்குள் இன்னொரு மூதாட்டி, ‘மிஷ்கின் மஹத்தையாவும் பெனெடிக்ட் மஹத்தையாவும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கலைன்னா நாங்க எந்த தப்பும் செய்திருக்கமாட்டோம்னு என் பையன் சொல்றான்’.

இப்ப என்னடான்னா பெயில் கூடக் கிடைக்காதுனு சொல்றாங்க.

ஐய்யோ… என் பையன் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள இதுவரை நுழைஞ்சதே இல்லையே. ஜெயிலுக்குள்ள எப்படிப் போவான்?

என் கணவர் அவமானத்துல செத்துருவாரு.

அப்பாவியான எங்க பிள்ளைங்க தான் மாட்டிக்கிட்டிருக்காங்க. தப்பு செஞ்சவனுங்க தப்பிச்சிட்டானுங்க.

ஸோய்ஸா அவர்கள் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டு நின்றார். தொண்டரை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார். அவர் உடனே அந்த மூதாட்டிகளைப் பார்த்துச் சொன்னார்: அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நம்ம மஹத்தையா நிச்சயம் உதவுவார்.

ஆமாம். என்னால் முடிந்ததை நான் செய்யறேன் என்று வந்தவர்களை அனுப்பிவைப்பதில் குறியாக இருந்தார்.

‘சரி நான் உங்களை அப்பறம் வந்து பாக்கறேன்’ என்று சொல்லியபடியே அந்த தொண்டர் பெண்களைப் பார்த்து, ‘வாங்க. அப்பறம் வந்து பார்த்துப் பேசிக்கலாம்’ என்றார்.

‘நாம பெனிடிக்டோட வீட்டுக்குப் போய் பேசிப் பார்ப்போம்’ என்று ஒரு பெண்மணிசொன்னார். அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். ஸோய்ஸா கதவை உடனே மூடிக் கொண்டார்.

ஸோய்ஸாவைப் பார்க்க வந்துகொண்டிருந்தவர்கள் இவர்களைப் பார்த்ததும் சரி, பெனெடிக்டையே போய் பார்ப்போம் என்று இவர்களுடன் சேர்ந்துகொண்டனர். பெனெடிக்ட் வீட்டு வாசலில் ஏற்கெனவே பெரிய கூட்டம் கூடியிருந்தது. வீட்டின் கதவு மட்டுமல்ல; வெளி காம்பவுண்டின் சுவர் கூட மூடிக் கிடந்தது. அங்கு காவலுக்கு இருந்த ஒருவர், பெனெடிக்ட் மஹத்தையா கொழும்புவுக்கு முக்கிய வேலையாகப் போயிருக்கிறார். எப்ப திரும்பி வருவாருன்னு தெரியாது’ என்றார்.

‘அவரோட மனைவி நோநாவாவது இருக்கிறாரா’ யாரோ ஒருவர் கேட்டார்.

‘இல்லை. அவருக்கு உடம்பு சரியில்லை. குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குப் போய்விட்டார்’ என்று பதில் சொன்னார்.

முண்ட மஹா லேதா (இவங்களுக்குன்னு இந்த நேரத்துல பெரிய நோக்காடு வந்திருமே) என்று ஒரு பெண் உரத்த குரலில் சலித்துக் கொண்டார்.

இதனிடையில் நூற்றுக்கணக்கானார்கள் கைது செய்யப்பட்டனர். ஏழை, அப்பாவிகளாகப் பார்த்து கைதுசெய்யபட்டனர்.

நான்காவது நாளில் மிஷ்கின் மீது புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கப்போவதாக வதந்தி பரவியது. அவரைக் கைது செய்துவிட்டதாகக்கூடச் சிலர் சொன்னார்கள். சிலருடைய மரணம் குறித்து அவரிடம் விசாரிக்கப்படவிருப்பதாகச் சொன்னார்கள். ஏராளமான தங்க நகைகள், பணங்களுடன் அவருடைய மனைவி வெளி நாட்டுக்குப் போய்விட்டதாகச் சிலர் சொன்னார்கள்.

ஐந்தாவது நாள் மூவருக்கும் நல்ல நாளாக அமைந்தது. நெகெம்போவில் இருந்த அதி ஆடம்பர ஹோட்டலில் சந்தித்தனர். மிஷ்கின் தான் அந்த ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். அங்கு கொண்டாட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் அவரே செய்து முடித்திருந்தார்.

மது, மாது, ஆட்டம், பாட்டம் என ராஜ போகக் கொண்டாட்டம். பெனெடிக்ட் எக்கச்சக்கமாகக் குடித்து உளற ஆரம்பித்தார்: நான் சொன்னேன்ல நான் அன்னிக்கே சொன்னேன்ல… நாம் ஒரு நாள் வெல்வோம் அப்படின்னு. கத்தோலிக்க கிறிஸ்தவர் அவர். ஸோய்ஸாவும் அதுவே. அவர் கான்வெண்ட் பள்ளியில் படித்தபோது இந்த தேவாலயப் பாடலைக் கேட்டிருக்கிறார். பாடியிருக்கிறார்.

ஸோய்ஸா இதுபோல் வெளிப்படையாக எதையும் பேசவில்லை. மிஷ்கின் காதில் எதையோ முணுமுணுத்தார். சிறிது நேரத்தில் பெனெடிக்டைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று ஒரு அறைக்குள் விட்டுவிட்டு வந்தார்கள். அங்கு ஒரு அழகிய பெண் அவருக்காகக் காத்திருந்தாள்.

மற்ற இருவரும் ஏரியைப் பார்த்தபடி அமைந்திருந்த நெகெம்போவின் ஹோட்டல் பால்கனியில் அமர்ந்தபடி நீல வானத்தையும் நட்சத்திரங்களையும் ரசித்தபடி மதுக் கோப்பைகளைக் காலி செய்தனர். அன்றைய கொண்டாட்ட இரவை நிறைவு செய்ய அவர்களுக்கான அறைகளுக்குள்ளும் காத்திருந்தார்கள் அழகிகள்.

மது… மாது… ஆட்டம் பாட்டம்… எல்லாமே இலவசம்.

இரண்டு நாட்கள் கழித்து மிஷ்கின் வேறொரு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராவத்தையில் இருந்தவர்கள், ‘இதெல்லாம் கண் துடைப்பு. அவருக்குக் கிடைத்த பணத்தை வைத்து பல தலைமுறைகள் காலாட்டிக் கொண்டே கழித்துவிடலாம்’ என்றனர்.

இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து இரண்டு ஆண்ட்கள் கழித்து மிஷ்கின் அரசுப்பணியின் அனைத்து சலுகைகளுடனும் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார். அதன் பின் தொழில் தொடங்கி வெற்றிக் கொடி நாட்டினார்.

நில பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்த ஒரு வழக்கறிஞர் ஏராளமான வீடுகள், நில புலன்கள் எல்லாம் பெனெடிக்டின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தார்.

தலைநகரில் மிக பிரமாண்டமான வீடு ஒன்றை வாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கேயே குடும்பத்துடன் குடியேறினார். ராவத்தையில் இருக்கும் அவருடைய வீட்டை சுற்றுலா விடுதியாக மாற்றிவிட்டார். விரைவில் அமைச்சராகிவிடுவார் என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள்.

என்ன கேட்டீர்கள்… சிறையில் அடைக்கப்பட்ட சிங்கள அப்பாவிகள் என்ன ஆனார்களா? அப்படி ஒன்று நடந்ததா என்ன?

அப்பறம் என்ன கேட்டீர்கள்: தமிழர்கள் என்ன ஆனார்களா..?

யார் அவர்கள்?

0

We shall win some day by Basil Fernando

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *