அமீர் அப்லாத் சமன்
கிறிஸ்தவ தம்பதிகளான அமீர் அப்லாத் சமன் (59), அத்மீத் ஹஸீப் சலீம் (48) இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., மொசூல் நகரை ஆக்கிரமித்தபோது அங்குதான் வசித்துவந்தனர். இராக்கின் இந்தப் பகுதிகளை அவர்கள் தாக்கப் போகிறார்கள் என்று ஏற்கெனவே செய்திகள் காற்றுவாக்கில் வந்திருந்தன. ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பின் முழுப் பெயரான இராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசாங்கம் என்பது இந்தப் பகுதி முழுவதையும் தம் கட்டுப்பாட்டில் எடுக்கவிரும்பும் அவர்களுடைய இலக்கைத் தெளிவாகச் சொல்லிவிட்டிருந்தது.
முதல் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் அமீர் குடும்பத்தினர் பெட்டி படுக்கைகளை மூட்டை கட்ட ஆரம்பித்துவிட்டனர். வீட்டில் இருந்த பணம், விலை மதிப்பு மிகுந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு காரில் ஏறினர். சினார் நகரில் அத்மீத் ஹசீபின் தோழி ஒருவர் வசித்துவந்தார். அந்தப் பகுதி ராணுவ முக்கியத்துவம் இல்லாதது. மொசூலைவிட நிச்சயம் பாதுகாப்பானது. அந்த ஊருக்கு வந்து சேர்ந்தவர்களுக்கு விட்டு வந்த சொந்த ஊரின் நினைவுகள் வாட்டின. கைவசம் போதிய பணம் இல்லாததால் சினார் நகரில் காலம் தள்ளுவதும் சிரமமாகவே இருந்தது. அங்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ். மொசூலைக் கைப்பற்றிவிட்டதா என்று தினமும் தொலைகாட்சியில் செய்திகளைப் பார்த்துவந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுடன் பேசிவந்தனர். சாதகமான பாதகமான தகவல்கள் கிடைத்தன. இரண்டு வாரங்கள் கழிந்ததும் சொந்த ஊருக்கே திரும்பிவிடலாம் என்று தோன்றியது. இதற்கு முன் சதாம் ஹுசேன் காலத்துக் கொடுமைகளை ஏற்கெனவே அனுபவித்தவர்கள்தான். அவனைவிட ஐ.எஸ்.ஐ.எஸ். கொடுமைப்படுத்திவிடுவார்களா என்று நினைத்தனர்.
இஸ்லாமிய தேசமான இராக்கில் வாழ்ந்துவரும் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் இவர்கள். எனவே மதவாதக் கொடுமைகளுக்கு இதற்கு முன் ஆட்படாதவர்கள் ஒன்றும் இல்லை. அதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்கெனவே அனுபவித்துவந்தவர்கள்தான். இயேசுவை விசுவசிப்பவர்களுக்கு துயரங்கள் ஒன்றும் புதிதல்ல. சதாமின் முடிவோடு கிறிஸ்தவ ஒடுக்குமுறை முடிவுக்கு வந்திருக்கவும் இல்லை. முன்பை விட நிலைமை மோசமாகத்தான் செய்திருந்தது. 2004-2006 காலகட்டத்தில் அவர்களுடைய மர் குலோஸ் சர்ச் அடிப்படைவாத இஸ்லாமியர்களால் இரண்டுமுறை வெடி குண்டுத்தாக்குதலுக்கு ஆளாகியிருந்தது.
2004-ல் அவர்களுடைய சர்ச் முதல் வெடி குண்டுத் தாக்குதலுக்கு ஆளான நாள் அமீருக்கு நன்கு நினைவிருக்கிறது. சர்ச்சுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் வெடி குண்டைப் பொருத்தி வெடிக்கச் செய்திருந்தார்கள். எல்லா திசையிலும் வெடித்துச் சிதறின. அமீரின் மகள் கிட்டத்தட்ட இறந்திருப்பாள். வெடித்துச் சிதறிய துண்டு ஒன்று அவள் தலையில் வந்து மோதி பலத்த காயம் பட்டிருந்தது. அவர்கள் சர்ச்சில் வழிபட வந்திருந்தபோது தெளிவாகத் திட்டமிட்டு அந்தத் தாக்குதல் நடந்திருந்தது. அதன் பின்னர் அந்த சர்ச்சை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் கார் கழுவும் மையமாக மாற்றிக் கொண்டனர். அது வெடி குண்டு வைத்துத் தகர்த்த அளவுக்கு வலி தருவதாக இல்லை என்பதால், இந்த முறை மொசூலுக்குத் திரும்ப முடிவு செய்தனர்.
என்ன நடக்கும் என்பது தெரிந்திருக்கவில்லை. எனினும் இஸ்லாமியர் போலவே முழு பர்தா அணிந்துகொண்டு அமீரின் மனைவி திரும்பினார். வீட்டை விட்டுச் சென்றவர்கள் ஏதேனும் மிச்சம் மீதி இருக்கிறதா… அதைக் கொண்டு வாழ்க்கையை மீட்டெடுக்க முடியுமா என்று பார்க்கச் சென்றனர். இதனிடையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அந்தப் பகுதியின் மின்சாரத்தைத் துண்டித்திருந்தனர். உணவுப் பொருட்கள் எல்லாம் பெரும் தட்டுப்பாடாகியிருந்தன.
மிகவும் சிரமமாக இருந்தும் மனதைத் தேற்றியபடி சிறிதுகாலம் வாழ்ந்தனர். ஆனால், நம்பிக்கைகள் முழுமையான நொறுங்கும் நேரம் சீக்கிரமே வந்தது. ஜூலை 17 அன்று ஊர் முழுவதும் இருந்த ஒலிப் பெருக்கிகள் மெள்ள உயிர் பெற்று எழுந்தன. இஸ்லாமியருடைய குரல் உரக்க ஒலித்தது: உங்களுக்கு 24 மணி நேர அவகசம் தரப்படுகிறது. இஸ்லாமுக்கு மதம் மாறுங்கள். அல்லது அனைத்தையும் இழந்து நில்லுங்கள்.
சதாம் ஹுசேனுடைய ஆட்சி காலத்தில் இருந்ததைவிட ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதிக்கத்தின் கீழ் நிலைமை மேலும் மோசமாகும் என்பது அந்தக் கிறிஸ்தவ குடும்பத்துக்கு உடனே புரிந்துவிட்டது. கிறிஸ்தவர்களான அவர்கள் எத்தனையோ சிரமங்களை இதுவரை சமாளித்திருக்கலாம். ஆனால் எந்தவொரு வலியும் ஐ.எஸ்.ஐ.எஸ். தரவிருப்பதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைத் தரமுடியாது. மொசூலுக்கு அவர்கள் திரும்பியிருக்கவே கூடாது. மிக மோசமான மிகவும் அபாயகரமான தவறு. மொசூலில் இருந்து தன் குடும்பம் உயிருடன் வெளியேறவேண்டுமென்று கர்த்தரிடம் மன்றாடினார்.
மீண்டும் வீட்டில் இருந்த அனைத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு புறப்பட்டனர். ஆனால், எடுத்துக்கொள்ளும் அனைத்தையும் இம்முறை பத்திரமாகக் கொண்டுசென்றுவிட முடியாது என்பது புரிந்தது. ஊரின் எல்லைகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். இப்போது தடுப்பு அரண்கள் அமைத்துவிட்டனர். இவர்கள் காரில் ஏறித் தப்பிச் செல்ல நிச்சயம் அனுமதிக்கமாட்டார்கள். தடுப்பு அரணில் இருப்பவர்கள் காரைப் பிடுங்கிக் கொண்டுவிடுவார்கள். எனவே காரை வீட்டிலேயே விட்டுவிட்டு ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்துகொண்டு புறப்பட்டனர். பக்கத்து வீட்டில் இருந்து முஸ்லிம் ஒருவரிடம் காரின் சாவியைக் கொடுத்தனர். நிலை சரியாகி அவர்கள் திரும்பும்வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாக அவர் உறுதியளித்தார்.
அவர்கள் பயந்ததுபோலவே, தப்பி ஓட முயன்றவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தடுத்து நிறுத்தினர். டாக்ஸில் இருந்து இறங்கும்படி உத்தரவிட்டனர். இவர்கள் வசம் இருந்து பொருட்கள் அனைத்தையும் அந்த இஸ்லாமிய ஜிஹாதிகள் பறித்துக் கொண்டனர். கையில் சட்டைப் பையில், பெட்டி படுக்கைகளில் ஏதேனும் ஒளித்துவைத்திருந்தால் அதையும் கொடுத்துவிடும்படி மிரட்டினர். உயிர் பிழைக்கவேண்டும் என்ற பயத்தில் இருந்ததால் இவர்களும் எதையும் ஒளித்துவைத்திருக்கவும் இல்லை. இவர்கள் எதுவும் இல்லை என்று சொன்ன பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் ஒளித்துவைத்திருந்ததைக் கண்டுபிடித்தால் நிச்சயம் கோபத்தில் கொன்றுவிடுவார்கள் என்பது தெரியும்.
குரானில் சொல்லப்பட்டிருக்கும் ஷரியா சட்டத்தின் படி முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் பொய் சொல்லலாம்; ஆனால், கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களிடம் பொய் சொல்லக்கூடாது. அப்படிப் பொய் சொன்னால் அதற்கான தண்டனை மரணம்.
கல்யாண மோதிரத்தைக் கழற்றிக் கொடு என்று அமீரின்மனைவியைப் பார்த்து ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ். பெண் தீவிரவாதி உத்தரவிட்டாள் (தாலிக்கு நிகரானது கிறிஸ்தவர்களின் திருமண மோதிரம்). அவர்களிடம் இருந்த விலை மதிப்பான பொருட்கள் அனைத்தையும் பறித்துவிட விரும்பினர். திருமண மோதிரம் கூட விட்டுவைக்கப்படாது.
அணிந்து பல வருடங்கள் ஆனதால் கை விரல்கள் சற்று பருத்திருந்தன. மோதிரத்தைக் கழற்ற முடியவில்லை என்று அத்மத் ஹசீப் வருந்தியபடியே சொன்னார்.
’உங்களால் மோதிரத்தைக் கழற்றிக் கொடுக்க முடியவில்லையென்றால் நாங்கள் விரலோடு வெட்டி எடுத்துக் கொள்வோம். எது வேண்டுமென்று முடிவு செய்துகொள்ளுங்கள்’.
உண்மைதான். அவர்கள் எந்தவொரு கொடூரத்தையும் சிறிதும் தயங்காமல் செய்யக்கூடியவர்கள்.
பயந்து பதறிய அத்மத் கஷ்டப்பட்டு ஒருவழியாக திருமண மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தார்.
விலை மதிப்பு மிகுந்தவற்றையெல்லாம் பறித்துக் கொண்டதும் அந்தக் குடும்பத்தை டாக்ஸியில் ஏறிக் கொள்ள அனுமதித்தனர். ஆனால் குடும்பத்தலைவர் அமீரைப் பிடித்துவைத்துக் கொண்டனர். அவருக்கு ஒருவகையில் நிம்மதி… குடும்பத்தினரையாவது தப்பிக்க அனுமதித்தனரே… இதைவிட மோசமாக நடக்கும் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தார்.
ஒருவன் அமீரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான். அமீர் நிமிர்ந்து நின்றார். ஓடவோ எதிர்க்கவோ முடியாது. சுட்டுக் கொல்ல அவர்கள் நினைத்திருந்தால் யாராலும் காப்பாற்றவோ தடுக்கவோ முடியாது.
கிறிஸ்து கடவுள் இல்லை. அல்லா மட்டுமே ஒரே கடவுள் என்று சொல். இல்லையென்றால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டினான்.
அமீர் அந்தப் பாலை நிலத்தில் தன்னந்தனியாக ஆறுதலுக்கும் உதவிக்கும் யாருமின்றி நின்றுகொண்டிருந்தார். நிதானமாகச் சொன்னார்: கிறிஸ்துவை மறுதலிப்பதற்கு பதிலாக உன்னால் கொல்லப்படுவதையே விரும்புவேன். கொன்று கொள்.
துப்பாக்கியுடன் நின்றவன் எதிர்பார்க்கும் பதில் இது அல்ல என்பது அவருக்குத்
தெரியும். அதோடு அவனை மிகவும் கோபப்படவைக்கும் பதில் என்பதும் தெரியும்.
ஆனால், கர்த்தரை நியாயத் தீர்ப்பு நாளில் சந்திப்போம் என்ற நம்பிக்கை மனதில்
இருப்பவர் இந்த ஒரு பதிலைத்தானே சொல்லவும் முடியும்.
ஆச்சரியப்படும்வகையில் அந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.காரன், பிழைத்துப் போ என்று அவரைக்
கை அசைத்துப் போகச்சொல்லிவிட்டான். அவரிடமிருந்து வீடு, கார், துணிமணிகள்,
விலை மதிப்பு மிகுந்த பொருட்கள், திருமண மோதிரம் என அனைத்தையும் பறித்துக்
கொண்டனர். ஆனால், அவரையும் குடும்பத்தினரையும் உயிருடன் விட்டுவிட்டனர்.
வேறு பல கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்காத அதிர்ஷ்டம் இது.
0
எமாத் நோயல் ஃபதூஹி
எமாத் நோயல் ஃபதூஹி (35), மனைவி லீனா இயா மஜித் (31) மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மோஹத் (7), தீமா (5), ஸெயின் (4) இவர்கள் எல்லாம் அமெரிக்கப் படை மொசூலை சதாம் ஹுசேனிடமிருந்து மீட்டெடுத்துவிட்டதாகச் சொல்லப்பட்ட காலத்தில் அங்குதான் வசித்தனர். சதாம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு வெற்றிடம் உருவாகியிருந்தது. கிறிஸ்தவர்களை அச்சுறுத்த உள்ளூர் முஸ்லிம்களுக்கு முழு சுதந்தரம் தரப்பட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல்கள் எதுவும் மேற்குலக ஊடகங்களில் வெளியாகவே இல்லை.
எமாத், மொசூல் பகுதியில் சதாமின் ஆட்சி அகற்றப்பட்டபின் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் வாழ்ந்தார். அது கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த நகரம்தான். எனினும் அங்கு அவர்களுக்கு அதிக நெருக்கடிகள் ஏற்பட ஆரம்பித்தன. ’சா’ மாவட்டத்தில் இருந்த டெமினிக்கன் சர்ச்சில் வெடி குண்டு வெடித்ததைத் தொடர்ந்து மொசூலில் இருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். சதாமின் ஆட்சி முடிந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்திருந்தது. எமாத் அங்கு ஒரு சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். நல்ல சம்பளம். நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்தார். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.
அமெரிக்கப் படை விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் நிலைமை அதல பாதாளத்தில் விழத் தொடங்கியது. வெடி குண்டு தாக்குதல்கள், ஆள் கடத்தல்கள் எல்லாம் அதிகரிக்கத் தொடங்கின. 2013 வாக்கில் எமாத் குடும்பம் அங்கிருந்து வெளியேறியது. கிறிஸ்தவர்களைக் கடத்துவதென்பது மொசூலில் இஸ்லாமியர்களுக்கு நல்லதொரு வணிகமாக ஆனது. முதலில் கிறிஸ்தவர்களைக் கடத்துவார்கள். அதன் பின் அவருடைய குடும்பத்தினரிடம் கணிசமான தொகையை மிக எளிதில் கறப்பார்கள்.
உள்ளூர் கிறிஸ்தவர்கள் மீது அரசுக்கும் காவல் துறைக்கும் பெரிய அக்கறை எதுவும் கிடையாது. அதோடு அவர்களால் இப்படியான கடத்தல்களைத் தடுக்கவும் முடியாது. கிறிஸ்தவர்களால்தான் இந்த பிரச்னையே என்று கூட சில அதிகாரிகள் குற்றம் சொன்னார்கள். இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டால் பிரச்னையே இல்லை என்று வழி சொன்னார்கள்.
அரசு வர்க்கத்தில் இருந்த பலரும் சொல்லும் எளிய தீர்வு: இஸ்லாமுக்கு மாறிவிடு.
எமாதின் சர்ச்சைச் சேர்ந்த கிறிஸ்தவர்களில் பலர் ஏற்கெனவே மொசூலில் இருந்து வெளியேறியிருந்தனர். எமாத் மற்றும் ஒரு சிலரின் குடும்பத்தினர் மட்டுமே அங்கு இருந்தனர். செப்டம்பர் 2013 வாக்கில் அவருடைய நண்பர்களின் தொடர் வற்புறுத்தலுக்கு ஏற்ப டெலஸ்காஃப் பகுதிக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். அது மொசூலில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருந்தது. அங்கு ஒரு வீடு கட்டிக் கொண்டவர் மொசூலில் இருந்த சிமெண்ட் ஆலைப் பணிக்கு வந்து போக ஆரம்பித்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். வருவதற்கு முன்பிருந்தே எமாதும் அவருடைய குடும்பத்தினரும் பல நெருக்கடிகளை அனுபவித்துவந்தனர். இரண்டாம் தரக் குடிமகனாக நடத்தப்படுவதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது. அக்கம் பக்கத்தில் இருந்த இஸ்லாமியர்கள் நட்பாக அன்பாக நடந்துகொண்டனர். ஆனால், அடிப்படைவாதிகளின் கை ஓங்க ஓங்க, அந்தப் பெரும்பான்மையின் மிதவாதம் மெள்ள மெள்ளப் பின்னுக்கு நகர்ந்தது. சிறிய அளவில் இருந்த அடிப்படைவாதிகளின் வன்முறை நடவடிக்கைகளை பெரும்பான்மை தடுத்து நிறுத்தாவிட்டால் அந்த மிதமான பெரும்பான்மை இருந்தும் எந்தப் பயனும் இல்லை.
சக கிறிஸ்தவர்களைப் போலத்தான் எமாத் குடும்பத்தினரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றி கருதினர். என்னதான் செய்துவிட முடியும் அவர்களால்..? எமாதும் அக்கம் பக்கத்து கிறிஸ்தவர்களும் எவ்வளவோ மதக் கொடுமைகளைச் சகித்திருக்கிறார்கள். எப்படியோ அவை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு வாழப் பழகிவிட்டார்கள்.
மொசூல் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பாக டெல் கெஃபில் இரவு பத்துமணி வாக்கில் முதல் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். நடத்தினர். அது டெலிஸ்காஃப் பகுதியில் இருந்த எமாத்தின் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்தது. நல்லவேளையாக அங்கிருந்த குர்திய பேஷ்மெர்கா படை அவர்களை எதிர்த்துப் போரிட்டது. மலைப்பாங்கான பகுதியில் இருந்த எமாதின் வீட்டிலிருந்து அங்கு நடக்கும் சண்டைகளையும் துப்பாக்கிகள், குண்டுகள் வெடிக்கும் சத்தத்தையும் நன்கு கேட்க முடியும்; பார்க்க முடியும்.
டெல் கெஃப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எல்லாம் கைக்குக் கிடைத்தவற்றைத் தூக்கிக்கொண்டு உயிர் பயத்தில் ஓடத்தொடங்கியிருந்தனர். தன் வீட்டினரையும் அனைத்தையும் மூட்டை கட்டிக் கொள்ளச் சொல்லி எமாத் உரத்த குரலில் கத்தினார். இதுவரையிலும் புறப்படுவது பற்றி எதுவும் தீர்மானித்திருக்கவில்லை. ஆனால், ஏதேனும் விபரீதமாக நடந்தால் தயாராக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.
பீரங்கி வண்டிகள், ஜீப்புகள், டிரக்குகள், பஸ்கள் என போர் நடக்கும் இடத்துக்கு உதவி செய்ய ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தன. ஐ.எஸ்.ஐ.எஸ். அனைத்துப் பகுதிகளையும் பாலைவனப் புயல் போல் சூழந்து ஆக்கிரமித்துவருகிறது என்பது புரிந்துவிட்டது. மொசூலில் எமாதின் பூர்விக வீடு இருக்கும் ஊரும் அவர்கள் பார்வையில் பட்டுவிட்டது தெரிந்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ். படை மொசூலில் நுழைந்தபோது எமாதின் சகோதரி அங்குதான் இருந்திருக்கிறார். உடனேயே குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள். கையில் எடுத்துக்கொள்ள முடிந்த சொற்ப பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்கள் நடந்தே எமாதின் வீட்டுக்கு எப்படியோ வந்து சேர்ந்துவிட்டனர்.
ஆகஸ்ட் 3, 2014 அன்று எமாதின் அக்கம் பக்கத்தினர்களில் ஒருவர் பேஷ்மேர்கா ராணுவத்தில் இருந்தார். அவர்கள் டெல் கெஃப் பகுதியில் இருந்து தமது படையைப் பின்வாங்கிக் கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் எமாத் குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து தப்பித்துவிடவேண்டும் என்று எச்சரித்திருந்தார். எமாத், அவருடைய சகோதரி இருவருடைய குடும்பத்தினர் அனைத்தையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு, அன்று மதியமே புறப்பட்டனர். நல்லவேளையாக அந்த ராணுவ வீரரின் எச்சரிக்கை இவர்களைக் காப்பாற்றியது. ஏனென்றால் ஆகஸ்ட் 12 வாக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். ராணுவம் அங்கு நுழைந்து அந்தப் பகுதியைக் கைப்பற்றிவிட்டது.
0
ஹக்கீம் சாதுலா ஜார்ஜஸ்
ஜார்ஜஸ் (32) அவருடைய மனைவி ரூவா சபா சாதிக் (26) இவர்களின் குழந்தைகள் ஜார்ஜ் ஹக்கீம் சாதுலா (6) பேனாம் காஹிம் சாதுலா (5) அனைவரும் டைக்ரிஸ் நதியின் கிழக்குப் பகுதியில் மொசூலின் நூர் மாவட்டத்தில் வசித்துவந்தனர்.
மொசூலில் இருந்த பிற கிறிஸ்தவர்களைப் போலவே ஹக்கீமும் தனியாக வியாபாரம் செய்துவந்தார். வாகன சப்ளை கடை மற்றும் விற்பனையாளராக இருந்தார். வணிகம் நல்லபடியாக நடந்தது. ஆனால், எல்லாம் அப்படியே நடந்துவிடவில்லை. ஹக்கீம் வசித்து வந்த தெருவின் பெயர் மரண வீதி. அந்தத் தீவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். எனவே அந்தப் பெயர் வந்திருந்தது. பல கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஹக்கீம் நேரில் பார்த்திருக்கிறார்.
2003-ல் அமெரிக்கப் படைகள் இராக்கை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கொன்று தெருக்களில் வீசப்பட்டனர். மொசூலில் இருந்த முஸ்லிம்கள் தமது முழு கோபத்தையும் கிறிஸ்தவர்கள் மேல் காட்டினர். எங்கெல்லாம் கண்ணில் பட்டார்களோ அங்கெல்லாம் வெட்டிக் கொன்றனர். அமெரிக்கப்படைகளுக்கு மொசூல் கிறிஸ்தவர்கள் ஆதரவு கொடுப்பதாகச் சொல்லிச் சொல்லிக் கொன்றார்கள்.
மொசூலில் ஹக்கீமின் நண்பர்களில் ஒருவர் உணவு விடுதி நடந்த்திவந்தார். அவர் கிறிஸ்தவர் என்பது பலருக்கும் தெரியும். அருகில் இருந்த அமெரிக்க ராணுவ முகாமுக்கு அவருடைய விடுதியில் இருந்து உணவு கொண்டுசெல்லப்பட்டது. எனவே உள்ளூர் முஸ்லிம்களுக்குக் கோபம் வந்துவிட்டது. அதைச் சாக்காக வைத்து அவனைக் கடத்த வந்தனர். விடுதி எஜமானரைக் கடத்தி வைத்தால் கேட்கும் பணத்தைக் குடும்பத்தினர் கொடுத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், ஹக்கீமின் நண்பரான விடுதி உரிமையாளர் பணமும் தரவில்லை. அவர்கள் கூடப் புறப்படவும் இல்லை. அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து தெருவில் இறங்கி ஓடினார். மரண வீதி என்று அழைக்கப்பட்ட தெருவில் அவரைச் சுட்டு வீழ்த்தினர். அந்தத் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்ட முதல் கிறிஸ்தவர் அவர் அல்ல. கடைசி கிறிஸ்தவரும் அவர் அல்ல.
ஜனவரி, 2007 வாக்கில் இனியும் இங்கு இருக்கமுடியாது என்று முடிவு செய்து ஹக்கீம் குடும்பத்தினர், மொசூலில் இருந்து வெளியேறி டெல் கெஃபுக்குச் சென்றனர். உள்ளூர் கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும் அளவுக்கு அங்கு முஸ்லிம்கள் அதிகம் இல்லை. மெசூலைவிட இங்கு வாகன பாகங்கள் வணிகம் மிகவும் சிறப்பாக நடந்தது. ஹக்கீம் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகத் தொடங்கிய நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அந்தப் பகுதியையும் தாக்கத் தீர்மானித்தது. மிகுந்த தயக்கத்துக்குப் பின்னர் 2014, ஜுலை 23 வாக்கில் ஹக்கிம், தான் புதிதாகக் கட்டிய வீட்டையும் தன் வணிகத்தையும் கைவிட்டார். அவரும் குடும்பமும் மீண்டும் தப்பி ஓட வேண்டிவந்தது.
0
சபா ஜமீல் ஹன்னா
சபா ஜமீல் ஹன்னா (68), அவருடைய மனைவி அப்துனூர் ஹன்னா (60) அவர்களுடைய நான்கு குழந்தைகளில் திருமணமாகியிருந்த மூவருடன் மொசூலில் இருந்து ஜூலை, 10, 2014-ல் காரில் ஏறித் தப்பினர். சபா இளைஞராக இருந்திருந்தால் எதிர்த்து நின்றிருப்பார். வயதாகிவிட்டது. அதோடு ஏராள ரத்தம் சிந்துதலை நேரில் பார்த்துவிட்டிருந்தார்.
இராக் ராணுவத்தில் பணிபுரிந்த அவர் இரானில் போர்க் கைதியாக 13 வருடங்கள் இருந்தார். டைக்ரிஸ் நதியின் மேற்குப் பக்கத்தில் இருந்த பயங்கரமான நோபே மாவட்டத்தில் வாழ்ந்திருக்கிறார். அந்தப் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளவே கிறிஸ்தவர்கள் எல்லாரும் அஞ்சி நடுங்குவார்கள். அங்கு வசிப்பதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அங்கு கடைசிவரை வசித்த கிறிஸ்தவ குடும்பம் சபாவினுடையதுதான். 68 வயதாகியிருந்தது. நிஜத்தில் அதைவிட வயதானவர்போல் அனுபவங்கள் உணரச் செய்திருந்தன. இருந்தும் தன்னந்தனியாக அந்தத் தெருவில் உலவி வந்தார்.
கிறிஸ்தவர்களுக்கு நெருக்கடிகள் வந்து வந்து போவதை அவர் பார்த்திருக்கிறார். ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ். காலத்தில் வந்த அளவுக்கு அதற்கு முன் எப்போதும் அவர் பார்த்ததில்லை. 1959களில் கிறிஸ்தவர்கள் தெருக்களில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டு சுடப்பட்டதை கண் முன்னே பார்த்திருக்கிறார். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் செல்வாக்கும் அதிகரித்துவிட்டதாக இஸ்லாமியர்களுக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மொசூலில் படுகொலைகளின் காலம் ஆரம்பித்துவிடும்.
இந்தமுறை ஜூன் ஆறாம் தேதி தொடங்கி ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் ஆரம்பித்திருந்தது. சபா எங்கும் செல்வதாக இல்லை. எதிர்த்துத் தாக்கவும் விரும்பவில்லை. ஆனால், என்ன நடந்தாலும் அங்கிருந்து செல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தார். தன்னுடைய வீடு, வேலை, இனிய நினைவுகள் தந்த இடங்கள் எதையும் விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை. ஜூன் எட்டாம் தேதியன்று வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தபோது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. தாக்கியவரை அவரால் பார்க்க முடிந்திருக்கவில்லை. கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்தார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நர்ஸ். முடிந்த சிகிச்சைகள் தந்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். அவருடைய வீட்டுக் கதவில் மிகப் பெரிய அரபு எழுத்துடன் ஒரு கடிதத்தைப் பதித்திருந்தனர். இனிமேல் அந்த வீடு சபாவுடையது அல்ல. இஸ்லாமிய அரசினுடையது. இனிமேல் சபா என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாகப் புரிந்துவிட்டது. அவரும் குடும்பத்தினரும் அடையாள அட்டைகள் உட்பட முக்கியமான பொருட்கள் அனைத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு காரில் ஏறினர். தடுப்பரணில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அனைவரையும் ஐ.எஸ்.ஐ.எஸ்.காரர்கள் முழுமையாக பரிசோதனை செய்தனர். இவர்கள் உடம்பில் இருந்த மதிப்பு மிகுந்தவை அனைத்தையும் கழற்றிக் கொடுத்தபின்னரே போக அனுப்பினர். இஸ்லாமுக்கு மாறத் தயாராகாத கிறிஸ்தவர்களுக்கு அங்கிருந்து எதையும் கொண்டு செல்ல அனுமதி இடையாது.
முதலில் கிறிஸ்தவர்களை உயிருடன் அனுப்பினர். நாளாக நாளாக ஐ.எஸ்.ஐ.எஸின் அதிகாரம் கூடிக் கொண்டே சென்றது. அவர்களின் நிதானம் முடிவுக்கு வந்தது. இவ்வளவு சீக்கிரம் மொசூலைக் கைப்பற்ற முடியும் என்று அவர்களே நினைத்திருக்கமாட்டார்கள். சிரியாவிலும் இராக்கிலும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு சர்வ தேச சமூகம் உடனே உதவிக்கு வரும் என்று அவர்கள் நினைத்திருக்ககூடும். முதல் தாக்குதல் நடந்து முடிந்ததுமே உலகம் இங்கு அக்கறை செலுத்தவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ்.உக்கு உலக நாடுகளில் இருந்து எழுந்த எதிர்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. சிறுபான்மையான கிறிஸ்தவர்களை கொன்று குவித்தாலும் அதைத் தடுக்க சர்வ தேச சமூகம் முன்வராது என்பது உறுதியானது. அது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை மேலும் கொடூரமாக நடந்துகொள்ள வைத்தது.
0
தாலிப் ஜமீல் மமோ
தாலிப் ஜமீல் மமோ (37) அவருடைய மனைவி பர்வீண் வில்லியம் ஸ்லெவா (29) இரண்டு குழந்தைகள் ஜமீல் தாலில் ஜமீல் (5), ஜான் தாலில் ஜமீல் (3) அனைவரும் டைகிரிஸ் நதியின் மேற்குப் பகுதியில் வசித்து வந்தனர். ஜூன் பத்து வாக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அங்கு நுழைந்தது.
அன்று தாலிப் வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருக்கவில்லை. நிலைமை மோசமாகத் தொடங்கியிருந்ததால் குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்வது என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். மொசூல் பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ். சுற்றி வளைத்ததும் மின்சாரம், தண்ணீர் எல்லாம் நிறுத்தப்பட்டன. உணவுப் பொருட்கள் கிடைப்பது சிரமமானது. விலைவாசியெல்லாம் கூரையைப் பிய்த்துக் கொண்டு பறந்தன. தாலிபும் அவருடைய மனைவியும் கிறிஸ்தவர்கள் என்றாலும் ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் சிக்கினால் என்ன ஆவது என்ற அச்சத்தில் மனைவி ஹிஜாப் அணிந்துவந்தார்.
நீண்ட காலம் நெருங்கிப் பழகிய இஸ்லாமிய அண்டைவீட்டார்கள் அனைவரும் சட்டென்று ஐ.எஸ்.ஐ.எஸுக்கு ஆதரவாக நடந்துகொள்ள ஆரம்பித்தனர். தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்குகொள்ளவே இல்லை. ஐ.எஸ்.ஐ.எஸின் கட்டுப்பாட்டில் அனைத்தும் வந்ததும் கிறிஸ்தவர்களின் சொத்துகள் எல்லாம் தமக்குத்தான் நேரடியாகக் கிடைக்கும் என்பது இஸ்ஸாமியக் குடும்பங்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. சில இஸ்லாமியக் குடும்பத்தினர், தாலிபை மசூதிக்கு வந்து தொழுகையில் ஈடுபட்டு இஸ்லாமியராக மாறியதுபோல் நடிக்கச் சொன்னார்கள்.
ஜூலை 17 அன்று, தெருவெங்கும் இருந்த ஒலிப்பெருக்கிகள் உயிர் பெற்று எழுந்து ஐ.எஸ்.ஐ.எஸினரின் உத்தரவுகளை ஊரெங்கும் எதிரொலித்தன. கிறிஸ்தவர்களுக்கு மூன்று வாய்ப்புகளை அது வழங்கியது:
இஸ்லாமுக்கு மதம் மாறு;
ஊரை விட்டு வெளியேறு;
அல்லது செத்துப் போ.
அதைத் தொடர்ந்து விரைவிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் ஒவ்வொரு வீடாக வந்து வாசல் கதவில் அரபு புனித எழுத்தைப் பதித்தனர். அக்கம் பக்கத்தில் இருந்த முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பது நன்கு தெரியும். அது ஒன்றும் ரகசியம் அல்ல.
தடுக்க முயன்றால் என்ன நடக்கும் என்பது தாலிப் குடும்பத்தினருக்கு நன்கு தெரியும். அங்கு இனிமேல் இருக்க முடியாது. 18-ம் தேதி காலை பத்து மணிக்கு தாலிபும் குடும்பத்தினரும் மொசூலைவிட்டு வெளியேறினர். 21 இருக்கைகள் கொண்ட பேருந்து ஒன்றில் இடம் கிடைத்தது. உடுத்திய ஆடை நீங்கலாக அவர்களிடம் வேறு எதுவும் இருந்திருக்கவில்லை. எல்லையில் பேருந்தை நிறுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். சோதித்தனர். விலை மதிப்பு மிகுந்த எது கிடைத்தாலும் பறித்துக் கொண்டனர். அடையாள அட்டைகளைக்கூடப் பறித்துக் கொண்டனர். அவர்களுக்கு மன நிறைவு ஏற்பட்ட பின்னரே பேருந்தைப் போக அனுமதித்தனர்.
2014-ல் வெளியேறிய தாலிப் அதன் பின் தன் சொந்த வீட்டுக்குத் திரும்ப முடிந்திருக்கவில்லை. இனியும் முடியுமா என்பது தெரியவில்லை.
0
பாலைவனத்தில் இனப் படுகொலை (வாய் மொழி வரலாறு) – தொகுப்பு : யூஜின் பாக் & டாக்டர் பவுல் கிங்கெரி
Genocide in the Desert – Eugene Bach & Dr Paul Kingery