Skip to content
Home » உலகக் கதைகள் #11 – ஐ.எஸ்.ஐ.எஸும் யாஸ்தி பெண்களும்

உலகக் கதைகள் #11 – ஐ.எஸ்.ஐ.எஸும் யாஸ்தி பெண்களும்

உலகக் கதைகள்

அழகே உருவான ஸெரி குதேர் இஸ்மயிலுக்கும் அன்பே உருவான அத்னன் ஜமீல் சாட்டோவுக்கும் திருமணமான சில நாட்களிலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ். படை அவர்களைச் சுற்றி வளைத்துவிட்டது. சின்ஜாரில் இருந்த டெல் அஸெர்பகுதியில் வசித்து வந்த கணவர் ஜமீலின் குடும்பத்தினர் கொஞ்ச நாட்கள் ஊரில் இருந்து பார்க்கலாம் என்று தீர்மானித்திருந்தனர். ஊரில் இருந்த பலரும் அப்படித்தான் நினைத்தனர். யாருக்கும் உடனே அனைத்தையும் விட்டு வெளியேற மனம் இருந்திருக்கவில்லை.

தப்பி ஓடுபவர்களைத் தடுக்கவும் ஓடியவர்களைத் திரும்பவரவைக்கவும் ஐ.எஸ்.ஐ.எஸ். நிறைய போலி வாக்குறுதிகள் கொடுத்திருந்தது. சதாம் ஹுசேன் காலத்தில் இதுபோல் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றியும் அவை மீறப்பட்டது பற்றியும் ஸெரியின் குடும்பத்தினருக்கும் நன்கு தெரியும். ஆனால், சதாமின் கொடுமைகளையே சமாளித்துவிட்ட நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற கும்பலின் குறுகிய கால ஆக்கிரமிப்பை எளிதில் சமாளித்துவிடலாம் என்று மெத்தனமாக இருந்தனர்.

பலருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடுத்த வாக்குறுதிகளில் எந்த நம்பிக்கையும் இருந்திருக்கவில்லை. எனினும் எப்படியாவது சமாளிப்போம்… ஏதாவது நல்லது நடக்கும் என்றல்லாம் நினைத்துக் கொண்டு ஊரிலேயே இருக்க முடிவெடுத்தனர். ஆனால் தாங்கள் செய்தது எவ்வள்வு பெரிய தவறு என்பது ஸெரி குடும்பத்தினருக்கு விரைவிலேயே புரியவந்தது. ஜிஹாதி போராளிகளின் வெறித்தனத்தை அவர்கள் மிகவும் குறைத்து மதிப்பிட்டிருந்தனர். பூர்விக சொத்துகளை ஸெரிக்கும் அவளுடைய கணவருக்கும் கொடுத்துவிடலாம் என்று நினைத்தது பெரிய தவறாகிவிட்டிருந்தது. வெகு சீக்கிரமே உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலை உருவாகியிருந்தது.

ஸெரியின் மாமனார்தான் முதலில் கொல்லப்பட்டார். எந்த எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கவில்லை. யாரும் எதையும் நினைத்துப் பார்ப்பதற்குள் அந்தத் தாக்குதல் ஆரம்பித்திருந்தது. ஸெரியின் சகோதரர்கள் மிகவும் சிறியவர்கள்தான். ஆனால் முகத்தில் ரோமம் முளைக்க ஆரம்பித்திருந்ததால் அவர்களையும் கண்ட இடத்திலேயே சுட்டுத் தள்ளியிருந்தனர். ஆண்கள் கொல்லப்பட்ட பிறகு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு பறிபோயிருந்தது. யாராலும் எந்த எதிர்ப்பையும் காட்ட முடிந்திருக்கவில்லை.

சிறுவர்களையெல்லாம் குடும்பத்தினரிடமிருந்து பறித்துகொண்டு போர்ப் பயிற்சி கொடுக்க ஜிஹாதிகள் அழைத்துச் சென்றனர். ஸெரி உட்படப் பெண்களையெல்லாம் தலெபாருக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அனைவரையும் அழைத்துச் சென்றனர். சின்ஜார் காவல் நிலையம் ஏற்கெனவே ஐ.எஸ்.ஐ.எஸ். கட்டுப்பாட்டுக்குள் வந்ததோடு அவர்களுடைய தலைமையகம் போல் ஆகிவிட்டிருந்தது. காவல் நிலையத்தில் ஒருவிதமான பரிசோதனைகள், வகைப்படுத்தல்கள், பிரிவுகள் எல்லாம் நடந்தன. அங்கிருந்து ஸெரியை ஒரு பஸ்ஸில் பிற இளம் பெண்களுடன் ஏற்றி மொசூல் நகருக்கு அனுப்பினர். ஸெரி பேருந்தில் ஏறும்போது ஜிஹாதிகள் அதிக சோதனைகள் எதுவும் செய்யாமல்விட்டனர். அவளிடம் ஒரு செல் போன் இருந்தது. அதை துணிகளுக்குள் மறைத்து வைத்திருந்தாள்.

மிகவும் அழகாக இருந்ததால் ஸெரி மற்ற பெண்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். பெரும்பாலான யாஸ்தி பெண்களைப் போலவே ஸெரியும் சிவந்த தோல், அகன்று விரிந்த கண்கள்கொண்டிருந்தார். அவளுடைய அழகிய கூந்தலின் கருமை நிறம் பழுப்பு நிறக் கூந்தல் கொண்ட மற்றவர்களிடமிருந்து அவளை மேலும் தனித்துக் காட்டியது. ஸெரி இனிமையானவள், நட்பார்ந்தவள். அவளைச் சுற்றி இருப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருபவளாக இருந்தாள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டுக்கு ஸெரியும் பிற அழகான இளம் பெண்களும் கொண்டுசெல்லப்பட்டனர். மிகவும் அழகான பெண்கள் எல்லாம் தலைவர்களுக்கு விருந்தாகவேண்டும். பெண்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர். ஜிஹாதிகள் அரபு மொழி பேசினர். அது யாஸ்திகளின் மொழியில் இருந்து மாறுபட்டது. மொசூல் ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன் இந்த வீடு யாஸ்தி குடும்பத்துக்கு சொந்தமாக இருந்தது. ஜிஹாதிகள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும். ஸெரியையும் எடுத்துக்கொள்ள விரும்பினர்.

அந்த வீட்டுக்கு ஸெரியும் பிற பெண்களும் கொண்டுவரப்பட்டதும் ஸெரி யாருக்கு சொந்தம் என்று ஜிஹாதிகளிடையே போட்டி எழுந்தது. படையின் அதிகாரப் படிநிலைதான் அதைத் தீர்மானிக்கும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஸெரியை ’மனைவி’ ஆக்கிக்கொள்ளும் ’உரிமை’ தமக்குத்தான் இருப்பதாகச் சண்டையிட்டனர்.

இறுதியாக ஒருவன் ஸெரியைப் பார்த்து உரத்த குரலில் உத்தரவிட்டான்: போய் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டு வா. ஜிஹாத் போராளிகள் கற்பழிப்பை பொதுவாக ’கல்யாணம்’ என்றுதான் சொல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்ற முடிவு பெண்களுக்கு எப்போதுமே எடுக்க முடியாது. அந்தத் திருமண பந்தம் அதிக நாட்கள் நீடிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உண்மையில் இஸ்லாமின் ஷரியத் சட்டங்களின்படி ஒரு திருமணம் சில மணி நேரங்களுக்குக் கூட நிச்சயிக்கப்படலாம். இது பொதுவாக விபச்சாரத்துக்கான சட்டபூர்வ அங்கீகாரமாகவே பயன்படுத்தப்படும். பல பெண்களைத் திருமணம் செய்வதையும் விவாகரத்துக்கு ஆணின் விருப்பம் மட்டுமே போதும் என்பதையும் இஸ்லாம் அனுமதிக்கிறது. அப்படியாக முஸ்லிம் ஆண்கள் என்ன பாலியல் பலாத்காரங்கள் செய்தாலும் அல்லாவின் முன் தவறு செய்தவராகத்தோன்றிவிடாமல் இருக்க இந்தக் குறுகிய காலத் திருமணங்கள் வழி ஏற்படுத்தித் தந்துவிடுகின்றன.

வெளி நாடுகள், ஊர்களுக்குச் செல்லும் இஸ்லாமிய ஆண்கள் அங்கு இருக்கும் சொற்ப காலத்துக்கு யாரேனும் பெண்ணை திருமணம் செய்துகொள்வார்கள். வேறு இடத்துக்குப் போகும் முன் விவாகரத்து செய்துவிடுவார்கள். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முஸ்லிம் அப்பாவும் கிட்டத்தட்ட இதுபோல் செய்தவர்தான். கென்யாவில் அவருக்கு ஒரு குடும்பம் இருந்தது. ஹவாய் பல்கலையில் படிக்கச் சென்றபோது திருமணம் செய்துகொண்டார். ஹவாயில் இருந்து புறப்பட்டபோது அந்தக் குடும்பத்தைவிட்டுவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டார். இன்னொரு குடும்பத்தை அமைத்துக் கொண்டார்.

ஷரியத் விதிகளின்படி, முஸ்லிம் இமாம்கள் சில சடங்குகளைச் செய்து (அவற்றுக்கு கட்டணம் கட்டாயம் தரவேண்டும்) குறுகிய காலத் திருமணங்களை நடத்திவைப்பார்கள். ஒரு திருமணம் முறிக்கப்பட்டதும் இன்னொரு ஆண் காசு கொடுத்து அவளைத் திருமணம் செய்துகொள்ளலாம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். படையினருக்குப் பெண்களை ஏற்படு செய்துதரும் பொறுப்பு ஜிஹாதி தலைவர்களுக்கு இருந்தது. படைவீரர்கள் யாருக்கும் இறந்த பின் சுவனத்தில் கிடைக்கப் போகும் கன்னிப் பெண்களுக்காகக் காத்திருக்க விருப்பம் இல்லை. 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபிகளின் படையில் இருந்தவர்களுக்கு உடனே பரிசு கிடைத்ததுபோல் தமக்கும் இங்கேயே இப்போதே கிடைக்கவேண்டும் என்று நினைத்தனர்.

ஸெரிக்கு இந்த ஷரியத் சட்டங்கள் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், குளியறைக்குச் சென்று குளித்துவிட்டு வரும்படிச் சொல்லியிருப்பது உண்மையான கல்யாணத்துக்கு அல்ல; அவளை கற்பழிக்கப் போகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. அமைதியாக அவர்கள் சொன்னபடி நடப்பதுபோல் நடித்தாள். என்ன ஆனாலும் யார் கையும் தன் மீது பட விடக்கூடாதென்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.

மோசூலில் இருந்த யாஸ்தி பெண்கள் பலரும் ஏற்கெனவே பாலியல் அடிமைகளாக்கப்பட்டிருந்தனர். கையும் காலும் கட்டிப் போடப்பட்டு வலுக்கட்டாயமாகத் ’திருமணம்’ செய்துவிக்கப்பட்டிருந்தன. ஜிஹாதிகளுடன் சண்டை போட்டுத் தப்பிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. தன் முன்னால் இருந்த ஒரே வழியில் தப்பிச் செல்வது என்று முடிவெடுத்தாள் : தற்கொலை.

குளிக்கப் போகும் வழியில் அவளுடைய கண்கள் பரபரவென ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தன. ஒரு கயிறு கிடைத்தது. மாடி உத்தரத்தில் கயிறை மாட்டினாள். சில நாட்களுக்கு முன் நடந்த திருமண நாளில் எடுத்த வண்ணப் புகைப்படமும் அதில் சிரித்தபடி இருந்த கணவரின் அன்பு முகமும் கண் முன் தோன்றியது. கழுத்தில் சுருக்குப் போட்டுக்கொண்டாள். வண்ணப் புகைப்படம் கறுப்பு வெள்ளையானது. தொப்பென்று குதித்தாள். கழுத்து உடைந்தது. எங்கும் இருள்.

தப்பிக்க வேறு எந்த வழியும் இல்லாது போகும்போது தற்கொலை செய்துகொண்ட, செய்துகொள்ள முயன்ற நூற்றுக்கணக்கான யாஸ்தி பெண்களில் ஸெரியும் ஒருவர்.

ஸெரி குளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிறதே என்று ஜிஹாதிகள் போய்ப் பார்த்தபோது அவர்களுடைய ’கொழுத்த வேட்டை’ தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ந்தனர். உயிர் ஏற்கெனவே போயிருந்தது. அவள் இப்படி தன் விருப்பப்படியான முடிவை எடுத்ததைப் பார்த்து ஜிஹாதிகளுக்கு ஆத்திரம் வந்தது. ஒருவன் தன் வாளை உருவி இறந்த உடலின் கழுத்தை வெட்டி எறிந்தான். அதைப் படமெடுத்து ஸெரியின் குடும்ப உறுப்பினரின் முக நூல் பக்கத்தில் வெளியிட்டான்.

அதைப் பார்த்துக் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். நூற்றுக்கணக்கான யாஸ்தி பெண்கள் இதுபோல் குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதிலுமான ஊடகங்களின் கேமராக்கள் இவற்றைப் படமெடுப்பதில்லை. தொலைகாட்சிகளில் இவை காட்டப்படுவதில்லை. யாஸ்திகளின் வேதனை உலகுக்குத் தெரிவிக்கப்படவே இல்லை. தெரிவிக்கப்பட்டவையெல்லாம் சின்னஞ் சிறு மணல் குன்று மட்டுமே. மறைக்கப்பட்டது ஒரு மிக மிகப் பெரிய பாலைவனம்.

0

அந்த மூதாட்டி மிகவும் அதிர்ஷ்டம் செய்திருந்தார். அவருடைய குடும்பத்தினர் அவரை ஒரு தள்ளுவண்டிபோன்ற ஒன்றில் தள்ளிக்கொண்டு கிட்டத்தட்ட மலை உச்சி வரை எப்படியோ வந்துசேர்ந்துவிட்டனர். வண்டியைத் தள்ளிக் கொண்டுவந்தவர் தளர்ந்துபோய்விட்டார். பிறருடைய உதவி தேவைப்பட்டது. தனியாகத் தள்ள முடியவில்லை. மலைப் பாதையில் இருந்த பாறைகள் எல்லாம் மிகவும் பெரிது பெரிதாக இருந்தன. அவற்றைச் சுற்றிச் சுற்றித் தள்ளிக்கொண்டு செல்ல முடியவில்லை. தாகம் தொண்டையை வாட்ட சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டார். தனியாக இனியும் அந்த வண்டியை ஒரு அங்குலம் கூடத் தள்ள முடியாது என்பது புரிந்ததும் மூதாட்டியை அங்கு விட்டுவிட்டு, யாரையேனும் உதவிக்கு அழைத்து வரச் சென்றார்.

அந்த வண்டி உண்மையில் மனிதர்களை உட்கார வைத்துத் தள்ள முடிந்த வண்டியல்ல. கரடு முரடான பாதையில் மேலும் கீழுமாகக் குதித்து குதித்து வந்த அந்த வண்டியில் இருந்த மூதாட்டி தன் உடம்பைச் சற்று செளகரியமான நிலைக்கு மாற்றிக்கொள்ள முயன்றார். வண்டி குடை சாய்ந்துவிட்டது. மூதாட்டியும் வண்டியும் ஏழெட்டு குட்டிகர்ணம் அடித்துக் கீழே சென்றார்கள். கடைசியில் ஒரு பாறையில் வண்டி மோதி நின்றது; மூதாட்டியின் உயிரும் நின்றது.

அதைப் பார்த்தவர்கள் சாதாரண நாளில் என்றால் விழுந்தடித்து ஓடிச் சென்று உதவியிருப்பார்கள். ஆனால் இது சாதாரண நாள் அல்ல. வழியெங்கும் இறந்த உடல்கள் விழுந்து கிடந்தன. மூதாட்டி உயிருடன் இருக்கிறாரா இறந்துவிட்டாரா என்று போய்ச் சென்று பார்க்கக்கூட யாரும் முயற்சி செய்திருக்கவில்லை. இறந்துவிட்டதாகவே அனைவரும் நினைத்தனர். இறந்துவிடுவதே ஒருவகையில் அது அந்த மூதாட்டிக்கு நல்லது என்றே நினைத்தனர். பட்டினி கிடந்தோ நீர்ச்சத்து வற்றியோ அணுஅணுவாக உயிர் துறக்க வேண்டியிருக்காது.

இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டு சென்றவர்களுக்கு அடுத்ததாக இறக்கப் போவது அவர்களாக இருக்கலாம் என்பது தெரியும். மலையடிவாரத்தில் சண்டை உச்சத்தை எட்டத்தொடங்கியிருந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ். சின்ஜாருக்குள் நுழைந்து தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டுவிட்டது. எண்பத்தெட்டு ஆயிரம் மக்களை மூன்று பக்கங்களில் இருந்தும் விரட்டினர். இந்த மலை உச்சிக்குச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஆக்கிவிட்டனர். இனிமேல் மலை உச்சியில் அடைக்கலம் தேடிய மக்களைச் சுற்றி வளைத்து நிறுத்தி நிதானமாகக் கொன்று குவிக்கலாம் என்பதுதான் ஐ.எஸ்.ஐ.எஸின் திட்டம்.

கிராமத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் ஏற்கெனவே நீண்ட நெடும் பயணம் மேற்கொண்டு அங்கு சென்று சேர்ந்திருந்தவர்களுடன் இணைந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸினர் ஜஸீரா, குஸாரிக், டெல் அஸீர் மற்றும் சின்னச் சிறிய கிராமங்களைக் கைப்பற்றி முடித்ததும் சின்ஜார் மலை நோக்கி மேற்குவழியாகக் குவிந்தனர். இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸின் கோட்டையான மொசூலில் இருந்து அவர்கள் கிழக்கு வழியில் வந்தனர். பாஜ் மற்றும் பிற சன்னி அராபிய கிராமங்களில் இருந்து இளைஞர்களைப் படையில் இணைத்துக் கொண்டு சின்ஜாருக்குத் தெற்கு வழியிலும் வந்து குவிந்தனர்.

டெல் அஸெர் பகுதியில் நடந்ததுபோலவே இந்தப் பகுதியும் எளிதில் ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் வீழ்ந்தது. பெரிய ஆண்களும் இளைஞர்களும் முதியவர்களும் உடல் ஊனமுற்றவர்களும் வரிசையாகக் கொன்றுகுவிக்கப்பட்டனர். இளம் பெண்களையும் சிறுவர்களையும் மட்டும் தனியாகக் கொண்டு சென்றனர். பிற கிராமங்களில் இருந்து பிடித்துவரப்பட்டவர்கள் வரிசையாகக் கொண்டுவரப்பட்டனர். அங்கிருந்த ஷியா முஸ்லிம் மசூதிகள் அனைத்தும் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன. அதன் மெளல்விகள் எல்லாம் கொல்லப்பட்டனர்.

மலையின் தெற்குச் சரிவு வழியாக மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி ஏறிக் கொண்டிருந்தனர். சிலர் தமது வீடுகளுக்குச் சென்று தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டி மலையில் ரொம்ப தூரம் போகாமல் மெதுவாகச் சென்றனர். 23 வயதான அலி ஜமீல் கலாஃப், 22 வயதான சுலைமான் அலி கலாஃப் இருவரும் மலையில் மூன்று நாட்கள் ஒளிந்து இருந்தனர். அதன் பின் தமது வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்குச் சிறிது உணவு எடுத்துக்கொண்டு வரலாம் என்று கீழே இறங்கினர். ஆனால், பாவம் வழியில் அவர்களைப் பார்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் கொன்றுவிட்டனர்.

சுமார் பத்தாயிரம் யாஸ்திகள் அந்த மலையில் தஞ்சம் அடைந்தனர். உணவு இல்லாமல் தளர்ந்து போயிருந்தனர். போரினாலும் உணவின்றியும் பலர் இறக்கத் தொடங்கியிருந்தனர். நீங்கள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகவில்லையென்றால், வாளால் கொல்லப்படுவீர்கள். உங்கள் தலை வாளினால் கொய்யப்படாமல் இருந்தால், நீர்ச்சத்து குறைந்து நீங்கள் இறப்பீர்கள். அப்படியும் இறக்கவில்லையென்றால், ஐம்பது டிகிரி செல்ஷியஸ் வெப்பம் உங்களைக் கொன்றுவிடும்.

சமூக சேவகர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார்கள். ஆனால், தரை மார்க்கமாக வர முடிந்திருக்கவில்லை. இராக்கிய ஹெலிகாப்டர்களில் இருந்து உணவுப் பொதிகளையும் தண்ணீர் பாட்டில்களையும் மலையில் இருந்தவர்களுக்கு வானில் இருந்தபடி வீசினர். பல குடும்பங்களுக்கு எதுவும் கிடைத்திருக்கவில்லை. தண்ணீர் ஊற்றுகள் பள்ளத்தாக்குகளைவிட மலைச் சரிவுகளில் மிகவும் அதிகம் இருந்தன. மலை பாறை இடுக்குகளுக்கு இடையே தஞ்சம் புகுந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அது மிகவும் பாதுகாப்பாக இருந்தது.

மலையடிவார கிராமங்களில் பிணங்கள் சிதறிக் கிடந்தது மேலிருந்து பார்த்தபோதே தெரிந்தது. மலையிலும் சில குகைகளுக்குள் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் இறந்துகிடந்தனர். எங்கும் பிண வாடை மூச்சு முட்ட வைத்தது.

ஆகஸ்ட் 15, வெள்ளிக் கிழமை தாக்குதல் ஆரம்பித்த இரண்டு வாரங்கள் கழித்து, நானூறு யாஸ்தி ஆண்களை ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர் கொச்சோ கிராமத்துக்கு நான்கு கிலோ மீட்டர் தொலைவில் வரிசையாக நிற்க வைத்தனர். ஒவ்வொருவராக மரத்தில் தூக்கிலிட்டு 400 பேரையும் கூட்டுக் கொலை செய்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்களும் சிறுவர்களும் சுற்றி வளைக்கப்பட்டுச் சிறைப்பிடிக்கப்பட்டனர். இளைஞர்கள் எல்லாம் தீவிரவாதப் படைப் பயிற்சிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். பெண்கள் எல்லாம் ஐ.எஸ்.ஐ.எஸ். படையினருக்கு பாலியல் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டனர்.

மூதாட்டி உருண்டு விழுந்த இறந்த மலையின் அடிவாரச் சாலையில் தாய் கோச்சார் தன் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார். கோச்சார் அப்போதுதான் பிறந்திருந்த தன் அழகிய குழந்தைகளை இழக்க நேர்ந்திருந்தது. ஆனால், மற்ற ஐந்து குழந்தைகளுடன் சின்ஜார் மலைக்கு ஒருவழியாக வந்துசேர்ந்துவிட்டிருந்தார். வேறு பல பெண்களும் அவருடன் அந்த மலைக்கு அடைக்கலம் தேடிப் புறப்பட்டிருந்தனர். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்திருக்கவில்லை.

சற்று பெரிய குன்றின் நிழலில் அவர்கள் அமர்ந்திருந்தனர். அவருடைய குழந்தைகள் தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர். வெய்யில் சுட்டெரித்தது. கையில் தண்ணீர் துளியும் இல்லை. எங்கு சென்று கொண்டுவர என்றும் தெரியவில்லை.

பிற பெற்றோர் தங்களது குழந்தைகளை மலை உச்சியில் இருந்து கீழே தூக்கி எறிய ஆரம்பித்திருந்தனர். தங்கள் குழந்தைகள் சிறுகச் சிறுகத் தமது கண் முன் இறப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. அதைவிட ஐ.எஸ்.ஐ.எஸ். கையில் தம் குழந்தைகள் சிக்கினால் என்ன ஆகும் என்பது அவர்களை நிலைகுலையவைத்திருந்தது. பலருக்கு புத்தி பேதலித்ததுபோல் ஆகிவிட்டது. அனைத்துமே ஒரு முடிவற்ற கொடுங்கனவு போலவே இருந்தன.

நெருக்கடிகள் முற்றும்போது யாஸ்தி பெண்கள் மலை உச்சிக்குச் சென்று அங்கிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் நீண்ட பாரம்பரியம் உண்டு. ஆனால், தமது குழந்தைகளை வீசி எறிவதென்பது இதற்கு முன் எங்கும் எப்போதும் கேட்டிராத கொடூரம்.

குன்றின் நிழலில் ஒதுங்கியிருந்த தாயின் மீதும் குழந்தைகள் மீதும் வெய்யில் கொளுத்த ஆரம்பித்தது. சூரியன் உச்சிக்கு ஏறிவிட்டது. நிழல் தேடி ஒளிய இனி இடமே இல்லை. இப்போது என்ன செய்ய என்று அவருக்குத் தெரியவில்லை. பிற தாய்மார்கள் என்ன செய்கிறார்களோ அதையே இவரும் செய்தார். குழந்தைகளின் முடிவற்று நீளும் துயரை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

0

பாலைவனத்தில் இனப் படுகொலை (வாய் மொழி வரலாறு) – தொகுப்பு : யூஜின் பாக் & டாக்டர் பவுல் கிங்கெரி
Genocide in the Desert – Eugene Bach & Dr Paul Kingery

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *