ஓர் ஓவியர் உலகில் இருப்பவற்றை அப்படியே வரையக்கூடாது என்று அறிவாளிகள் (கலை விமர்சகர்கள்) சொல்வதுண்டு. வெறும் வண்ணப் புகைப்படம் இதைச் செய்துவிடும். சதுரங்கள், முக்கோணங்கள் இவற்றின் கலப்பு, வளை கோடுகள் ஆகியவற்றின் மூலம் ஓவியர் ஒரு பொருளை அல்லாமல் அதன் ஆன்மாவை வரையவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், புரட்சி நடந்து முடிந்து ஐம்பது ஆண்டுகள் ஆன பின்னர் பெரெடெல்கினோ சர்ச்சின் ஈஸ்டர் ஊர்வலத்தின் எளிய வண்ணப் புகைப்படம் ஒன்று அதில் காட்சியளிப்பவர்களின் முகங்களின் மூலம் முக்கியமான விஷயத்தை ஒரே புகைப்படத்தில் அழகாகக் காட்டிவிடுவதையும் பார்க்கத்தான் முடிகிறது. முக்கோணங்கள், சதுரங்கள் எல்லாம் இல்லாமல் இன்றைய ஈஸ்டர் ஊர்வலம் மரபான வழியில் நமக்கு எத்தனையோ விஷயங்களைச் சொல்லாமல் சொல்லத்தான் செய்கிறது.
சர்ச் மணிகள் ஒலிக்க ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக, அந்த ’உருமாற்ற தேவாலயத்தின்’ முற்றமானது, தொழில் நகரமொன்றின் சனிக்கிழமை இரவு நேரக் கேளிக்கை விடுதிபோலத் தோற்றமளித்தது. பளீர் நிறம் கொண்ட ஸ்கார்ஃப்களும் ஸ்கி பேண்டும் (ஒரு சிலர் ஸ்கர்ட் அணிந்துகொண்டிருந்தனர்) அணிந்த பெண்கள் மூன்று நான்கு பேர் கொண்ட குழுக்களாக உரத்தகுரலில் பேசியபடி இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தனர். அவர்கள் சர்ச்சுக்கு உள்ளே வர முயன்றார்கள். ஆனால், அங்கே மிகவும் நெரிசலாக இருந்தது. முன் மாலையிலிருந்தே வயதான பெண்கள் அங்கு குழுமிவிட்டிருந்தனர். எனவே இளம் பெண்கள் அவர்களைப் பார்த்து உரத்த குரலில் கத்திக்கொண்டிருந்தனர். சர்ச் வளாகத்தில் யாரையும் பொருட்படுத்தாமல் வளவளவென்று பேசியபடியும் ஒருவரை ஒருவர் கத்திக் கூப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். சர்ச் சுவர்களில் இருந்த குறியீடுகளிலும் பிஷப்கள் மற்றும் தலைமை பாதிரிகளின் கல்லறைகளிலும் தொங்கும் பச்சை, பிங்க் மற்றும் வெள்ளை நிற விளக்குகளை வெறித்துப் பார்த்தபடி சுற்றி வந்தனர்.
சண்டியர் போன்ற முரட்டுத் தோற்றம் கொண்டவர்கள் முதல் மெலிந்த தேகம் கொண்டவர்கள் வரையான இளைஞர் கூட்டமும் அங்கு இருந்தது. அனைவர் முகத்திலும் ஒரே மாதிரியான திமிர்த்தனம் வெளிப்பட்டது (இந்த இளைஞர்களிடம் தம்மை எல்லாவற்றையும் விட மேலானவர்களாக நினைத்துக் கொள்ளும்படி அப்படி என்னதான் இருக்கிறது. ஐஸ் ஹாக்கி நன்றாக விளையாடுவார்கள் என்பதால் வந்த திமிரா?) அனைவருமே தொப்பி அணிந்திருந்தனர். அப்படியே சிலர் தொப்பி இல்லாமல் இருந்தாலும் புனிதமான இடத்துக்கு வந்திருக்கிறோம் என்ற எண்ணத்தினால் அல்ல.
நான்கில் ஒருவர் மது அருந்தியபடியும் பத்தில் ஒருவர் தள்ளாடிக் கொண்டும் பாதிபேர் சிகரெட் பிடித்துக் கொண்டும் இருந்தனர். கீழுதட்டில் சிகரெட் பசைபோட்டு ஒட்டியதுபோல் இருந்தது. ஊதுபத்திகள் இன்னும் ஏற்றப்படவில்லை. அவற்றுக்கு பதிலாக நிலச் சாம்பல் நிற சிகரெட் புகை சர்ச் விளக்குகளின் ஒளியில் மின்னும் ஈஸ்டர் வானில் மேகம் போல் மிதந்துகொண்டிருந்தது. நடைபாதையில் துப்பிக் கொண்டும் ஒருவரை ஒருவர் வேடிக்கையாக இடித்துத் தள்ளிக் கொண்டும் உரக்க விசில் அடித்துக் கொண்டும் இருந்தனர். சிலர் கெட்ட வார்த்தைகள் பேசினர். பாக்கெட்டில் வைத்திருந்த டிரான்சிஸ்டர் ரேடியோவில் இருந்து ஒலித்த பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தனர்.
சிலர் தமது பெண் தோழிகளை முத்தமிட்டுக் கொண்டுருந்தனர். அவர்களை ஒவ்வொரு இளைஞனும் தம் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்களில் தெரிந்த வெறியைப் பார்த்தால் எப்போதுவேண்டுமானாலும் வாளை உருவிச் சண்டையை ஆரம்பித்துவிடுவார்கள் போலிருந்தது. கத்தியை உறையில் இருந்து உருவிவிட்டால் சர்ச்சுக்கு வந்திருப்பவர்கள் மேல் அதைச் சொருக ஆரம்பித்துவிடுவார்கள். அந்த இளைஞர்கள் சர்ச்சுக்கு வந்திருப்பவர்களை ஓர் இளைஞர் முதியவரைப் பார்ப்பதுபோலவோ ஒரு விருந்தாளியை வீட்டுக்காரர்கள் பார்ப்பதுபோலவோ அல்ல… குடும்பப் பெண் ஈயைப் பார்ப்பதுபோல் இழிவாகவே பார்த்தனர்.
நல்ல வேளை யாரும் கத்தியைக் கொண்டுவந்திருக்கவில்லை. சர்ச் வளாகத்தில் நாலைந்து காவலர்கள் நிலைமையைக் கண்காணித்தபடி சுற்றி வந்துகொண்டிருந்தனர். இளைஞர் கூட்டம் தமக்குள் உற்சாகமாகப் பேசிக் கொண்டு இருப்பதுபோலவே அனைத்தையும் செய்துவந்தனர். எனவே அவர்கள் எந்தச் சட்ட மீறலிலும் ஈடுபடவில்லை என்று கருதி காவலர்கள் இளைஞர்களைப் பார்த்து புன்னகை செய்தவண்ணம் இருந்தனர். இளைஞர்களிடமிருந்து காவலர்கள் சிகரெட்டைப் பறிக்கவோ, தொப்பியை பறிக்கவோ செய்யப்போவதில்லை. ஏனென்றால் இது பொது இடம். அதோடு கடவுள் மீது நம்பிக்கையற்று இருக்க கம்யூனிஸ அரசியல் சாசனத்தில் முழு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
கல்லறைத்தோட்ட வேலியோடும் சர்ச் சுவர்களோடும் ஒண்டியபடி விசுவாசிகள் பயந்தபடி நின்றுகொண்டிருந்தனர். யாருக்கும் எதிர்த்துப் பேச தைரியம் இல்லை. யாரும் நம்மைக் கத்தியால் குத்தாமல் இருந்தால் போதும். வாட்ச்சைக் கொடு என்று பறிக்காமல் இருந்தால் போதும் (இயேசு உயிர்த்தெழும் நேரத்தைத் தெரிந்துகொள்ள அது அவர்களுக்கு அவசியம்) என்ற மனநிலையில் இருந்தனர். சர்ச்சுக்கு வெளியே கூச்சலிட்டபடி இருக்கும் கும்பல் சர்ச்சுக்குள் இருப்பவர்களைவிட மிக மிக அதிகம். தார்தாரியர்களின் ஆட்சி காலத்தில் இருந்ததைவிட விசுவாசிகள் இப்போது மிகுந்த பயத்துடன் ஒடுங்கி இருந்தனர். என்னதான் கொடியவர்கள் என்றாலும் ஈஸ்டர் அதிகாலை வழிபாட்டை தார்தார்கள் கெடுக்க முனைந்திருக்கவில்லை.
இந்த இளைஞர்கள் சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை. அவர்கள் செய்வது வன்முறைச் செயல்கள்தான். ஆனால் ரத்தம் சிந்தப்படவில்லை. அவர்களுடைய உதடுகளில் ரெளடிகளைப் போன்று வெளிப்படும் வெறுப்பு கலந்த சிரிப்பு, கூப்பாடு, வெடிச் சிரிப்பு, காதல் சீண்டல்கள், ஏளன நகைச்சுவைகள், சிகரெட், மது அருந்துதல், துப்பிக் கொண்டே இருப்பது இவையெல்லாம் அவர்களுக்கு சில அடிகள் தொலைவில் இயேசு மீதான விசுவாசத்தினால் நடந்து கொண்டிருக்கும் புனிதக் கொண்டாட்டத்துக்கு பெரும் இழுக்கை விளைவித்துக் கொண்டிருந்தன. முன்னோர்களின் சடங்குகளை முதிய தலைமுறை எப்படிக் கொண்டாடும் என்று வேடிக்கை பார்க்க வந்த ரெளடிகள் போல் திமிருடன் வெறுப்புடன் வந்து நின்றுகொண்டிருந்தனர்.
விசுவாசிகளில் ஓரிரு யூத முகங்களையும் பார்க்க முடிகிறது. ஒன்று அவர்கள் மதம் மாற்றப்பட்டிருக்கலாம். அல்லது வெறுமனே வேடிக்கை பார்ப்பவர்களாகவும் இருக்கலாம். வறண்ட பார்வையுடன் சுற்றிப் பார்க்கும் அவர்களும் ஈஸ்டர் ஊர்வலத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். நாமெல்லாரும் யூதர்களைச் சபிப்பதுண்டு. ஆனால் என்னவிதமான ரஷ்யர்களை (இளைய தலைமுறையை) உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும். இவர்கள் எல்லாம் முப்பதுகளில் இருந்தது போன்ற தீவிர நாத்திகர்கள் அல்ல. விசுவாசிகளின் கைகளில் இருந்து புனித ஈஸ்டர் கேக்குகளைப் பறித்து, சாத்தான்களைப் போல் பாவனை காட்டி ஆடிய அவர்களைப் போன்றவர்கள் அல்ல.
இந்த இளைய தலைமுறை எதிலும் ஆர்வமற்று சோம்பித் திரியும் கூட்டம். தொலைகாட்சிப் பெட்டிகளில் ஒலிபரப்பான ஐஸ் ஹாக்கி போட்டிகள் முடிவடைந்துவிட்டன. கால் பந்து போட்டிகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இவர்கள் சர்ச்சுக்கு வந்திருப்பதற்கான முழு காரணம் பொழுது போக்க வேறு வழியில்லை. விசுவாசிகளை வைக்கோல் கட்டுகளைப் போல் பிடித்துத் தள்ளுகிறார்கள். சர்ச் வணிகமயமாகிவிட்டதென்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். இருந்தும் எதனாலோ மெழுகுவர்த்திகளையும் வாங்குகிறார்கள்.
ஒரு விஷயம் மற்றும் புரியவில்லை. இவர்கள் எல்லாம் வெளியூர்க்காரர்கள். இருந்தும் அனைவரையும் அனைவரின் பெயரையும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். எப்படி இப்படி நன்கு பழகிய நண்பர்களாக இருக்கிறார்கள். ஒரே தொழிற்சாலையில் பணி புரிபவர்களா? அல்லது இது போன்ற ஃப்ரிமேசனரி கொண்டாட்டங்கள் அவர்களை ஒன்றிணைக்கின்றனவா?
தலைக்கு மேலே சர்ச் மணி ஓங்கி ஒலிக்கிறது. ஆனால் அதில் ஏதோ ஒரு பொய் கலந்திருக்கிறது. மணியின் ஒலி ஆழமாக உரக்க ஒலிப்பதற்கு பதிலாகத் தகரச் சத்தம் போல் ஒலித்தது. திருவிழா ஊர்வலம் ஆரம்பிக்கப் போவதை அது அறிவித்தது. கொண்டாட்டம் களை கட்டத்தொடங்கியது. ஆனால், விசுவாசிகள் அல்ல; கூச்சலிடும் இளைஞர் கூட்டம் இரண்டு மூன்று என்று வரிசையாக அணிவகுக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு என்ன வேண்டும், எங்கே போகவேண்டும்; ஊர்வலம் எங்கு செல்லும் என்பதெலாம் அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தும் அவர்கள் பரபரப்படைந்தனர். சிவப்பு ஈஸ்டர் மெழுகுவர்த்திகளைக் கொளுத்திக் கொண்டனர். அதைக் கொண்டு எல்லோரும் பார்க்கும்படியாக சிகரெட்களைப் பற்ற வைத்துக்கொண்டனர். கூட்டமாகக் குழுமினர். எங்கிருந்தாவது ஆரம்பிக்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தனர். கல்லறைகளில் பீய்ச்சியடிக்க உயரமான சுருள் முடி கொண்ட இளைஞர்களுக்கு இப்போது பீர் பாட்டில்கள் உடனே தேவை (நல்ல வேளை நமது இனம் குள்ளமாகவில்லை).
ஊர்வலத்தின் தலைவர் ஏற்கெனவே சர்ச் முகப்பிலிருந்து சென்றுவிட்டிருந்தார். அவர் இப்போது இந்த திசையில் திரும்பி வந்துகொண்டிருந்தார். அவருடன் மென்மையான மணி ஒலியும் உடன் வந்தது. அவருக்கு முன்னால் இரண்டு எளிய விசுவாசிகள் அவருக்கு முடிந்த அளவுக்கு வழிவிடும்படிக் கேட்டுக்கொண்டே வந்தனர். அவர்களுக்கு மூன்றடி பின்னால் முதிய வழுக்கையான சர்ச் வார்டன் ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்ட கண்ணாடி லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டுவந்தார். அதன் சுடர் நேராக நின்று எரியும்படி எச்சரிக்கையுடன் அதைப் பிடித்துவந்த அதே நேரம் அக்கம் பக்கம் பயத்துடன் பார்த்துக்கொண்டும் வந்தார். நான் வரைய விரும்பும் ஓவியம் இதுதான். வருங்காலத் தூண்களான இளைய தலைமுறை எந்த நேரமும் தன் மீது பாய்ந்து தன்னை அடிக்கக்கூடும் என்ற பயம் அவர் முகத்தில் நன்குதெரிந்தது. சுற்றியிருந்த பார்வையாளர்களுக்கும் இந்த பயத்தை உணர முடிந்திருந்தது.
கால் சராய் அணிந்திருந்த பெண்கள் கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்திக் கொண்டிருந்தனர். இளைஞர்களுடைய உதட்டில் சிகரெட் நடனமாடிக்கொண்டிருந்தது. தலையில் தொப்பியுடன் மேலாடைகளின் பட்டன் போடாமல், துளியும் தகுதியற்ற கர்வத்துடன் மூடத்தனமான திமிருடன் இருந்தனர். வேறு சிலர் எளிய தோற்றத்துடன் இருந்தனர். இவர்களில் பலர் ஓவியத்தில் இருக்கவேண்டும். என்ன விலை கொடுத்தாலும் வேறு எங்கும் காண முடியாத இந்த ஊர்வலத்தில் நெருக்கியடித்தபடி இவர்கள் அனைவரும் இருக்கும்படியாக அந்த ஓவியம் இருக்கவேண்டும். லாந்தர் விளக்கின் பின்னால் இரண்டு பேர் கிறிஸ்தவப் பதாகை ஒன்றை ஏந்தி வந்தனர். அவர்களுமே இடைவெளி விட்டு தனியாக நடப்பதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் பயத்தில் நெருங்கியபடி நடந்து வந்தனர்.
அவர்களுக்குப் பின்னே பத்து பெண்கள் ஜோடிகளாக வந்தனர். அவர்கள் கைகளில் நன்கு கொழுந்துவிட்டு எரியும் மெழுகுவர்த்திகள் இருந்தன. அவர்களும் இந்த ஓவியத்தில் இடம்பெற வேண்டும். நிலை குத்திய விழிகளுடன் இருந்த முதியவர்களின் முகங்களில் இப்போது தாக்கப்பட்டு மரணம் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்பது போன்ற பாவனை இருந்தது. பத்து பெண்களில் இரண்டுபெண்கள், சுற்றி இருந்த திமிர் பிடித்த இளைஞர் கூட்டத்தினருடைய அதே வயதில் இருந்தனர். இருந்தும் அவர்கள் முகங்களில்தான் என்னவொரு ஒளி… என்னவொரு துலக்கம். பத்து பெண்களும் நெருங்கியபடி புனித கீதம் பாடியபடி நடந்தனர். என்னவோ அவர்களைச் சுற்றி நிற்பவர்கள் சிலுவைக் குறியிட்டுக் கொண்டு பிரார்த்தனை செய்வதுபோலவும் மண்டியிட்டுத் தமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதுபோலவும் நினைத்துக் கொண்டு தமது ஊர்வலத்தைத் தொடர்ந்தனர். சுற்றிலும் மண்டிய சிகரெட் புகைகளை அவர்களுடைய நாசிகள் முகரவில்லை. சுற்றிலும் கேட்கும் எக்காளச் சிரிப்புகளை அவர்களுடைய காதுகள் கேட்கவில்லை. சர்ச் முற்றம் கேளிக்கை நடன விடுதியாக ஆக்கப்பட்டதை அவர்களுடைய கால்கள் உணரவில்லை.
உண்மையான ஊர்வலம் அப்படியாக ஆரம்பித்தது. இரு தரப்புக் கும்பலினூடாக ஒரு மெல்லிய அதிர்வு பரவியது. கூச்சல் கொஞ்சம் குறைந்தது.
பத்து பெண்களின் பின்னே ஏழு ஆண்கள், பாதிரிகள், டீக்கன்கள் பளீரென்ற உடையுடன் வந்தனர். அவர்கள் அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கொண்டு தமதுகையில் இருந்த தூபக் கால்களை அசைக்க முடியாமல் அல்லது தமது புனித துப்பட்டாக்களை உயர்த்தி யாருக்கும் ஆசி வழங்க முடியாமல் பயத்துடன் வந்துகொண்டிருந்தனர். (கம்யூனிஸ அரசு) தடை செய்திருக்காவிட்டால் அனைத்து ரஷ்யாவின் மதத் தலைமைகூட இந்த விழாவுக்குத் தலைமை தாங்கி சடங்குகளைச் செய்திருப்பார்.
நெருங்கியபடி இருந்த சிறிய குழு வேகமாக நடந்து சென்றது. இதுதான் ஈஸ்டர் ஊர்வலம். வேறு எதுவும் வேறு யாரும் இல்லை. உண்மையில் கூட்டத்தில் ஒரு விசுவாசிகூட இல்லை. அப்படி யாரேனும் இருந்திருந்தால் அவர்கள் கூட இந்தக் கேலிக் கூத்துகளைப் பார்க்கப் பொறுக்காமல் சர்ச்சில் இருந்து எப்போதோ புறப்பட்டுச் சென்றிருப்பார்கள். விசுவாசிகள் யாருமே இல்லாதபோதும் இந்த ரெளடி கும்பல் தொழிற்சாலை ஒன்றின் கதவை உடைத்துக் கொண்டு கொள்ளையடிக்கப் பாய்வதுபோல் பாய்ந்து, உணவுப் பொட்டலங்களைக் கிழித்து, நதியில் ஏற்படும் சுழல் போல் சுற்றி சுழன்று கும்பலாக முட்டி மோதி முன்னேறி… இவையெல்லாம் எதற்காக? அவர்களுக்கு அவர்கள் யார் என்பதே தெரியாது. பாதிரிகளை முட்டாளாக்குவதுதான் நோக்கமா? அல்லது வெறுமனே தள்ளு முள்ளில் இருக்கும் இன்பத்துக்காகவே இப்படித் தள்ளுகிறார்களா?
விசுவாசிகளே இல்லாத கிறிஸ்தவ ஊர்வலம். அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவரும் சிலுவைக் குறி இடவில்லை. தொப்பிகள் அணிந்துகொண்டு சிகரெட் குடித்தபடி சட்டைப் பாக்கெட்களில் டிரான்சிஸ்டர்கள் அலறிக் கொண்டு இருந்தவர்களால் அது நிரம்பியிருந்தது. முன் வரிசையில் இருப்பவர்கள் சர்ச் வளாகத்துக்குள் முண்டியடித்துக் கொண்டு செல்வதும் ஓவியத்தில் இடம்பெறவேண்டும். அப்போதுதான் அனைத்தும் முழுமையடையும்.
ஒரு மூதாட்டி சிலுவைக் குறியிட்டபடியே அருகில் இருந்த பெண்ணிடம் சொன்னார்: நல்ல வேளை இந்த ஆண்டு ரெளடித்தனம் எதுவும் இல்லை. நிறைய காவலர்களும் இருந்தனர்.
ஆமாம். அப்படியென்றால் இது மிகவும் நல்ல ஈஸ்டர் கொண்டாட்டங்களில் ஒன்றுதான்.
நாம் சோறூட்டி சீராட்டு வளர்த்த இந்த லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? மகத்தான சிந்தனையாளர்களின் உத்வேகமூட்டும் சிந்தனைகள், அறிவார்ந்த முயற்சிகள் எல்லாம் நம்மை எங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன? எதிர்காலத் தலைமுறையிடமிருந்து நாம் எதை எதிர்பாக்க முடியும்?
ஒரு நாள் அவர்கள் அனைவரும் நம் அனைவர் மீது பாய்ந்து தாக்கப் போகிறார்கள். மேலும் யாரெல்லாம் இவர்களை இப்படிச் செய்யச் சொல்லித் தூண்டிவிடுகிறார்களோ அவர்கள் மீதும் பாய்ந்து தாக்க ஆரம்பிப்பார்கள்.
ஈஸ்டர் திருநாள்
10, ஏப், 1966
0
Easter Procession by Aleksandr Solzhenitsyn