Skip to content
Home » உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 1

உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 1

Angela Carter

என்னுடைய பெயர் ரொம்பவே குழப்பமானது. பழைய உலகில் இருந்தபோது பல பெயர்களை வைத்துக்கொண்டிருந்தேன். அவை பற்றி இப்போது எதுவும் சொல்லமாட்டேன். அப்பறம் என்னுடைய செவ்விந்தியப் பெயர் ஒன்று இருக்கிறது. அது பற்றி நான் ஒருபோதும் பேசப்போவதே இல்லை. எனவே என்னுடைய பெயராக நான் எதை இங்கு குறிப்பிட என்று குழப்பமாகத்தான் இருக்கிறது. எனது பெயர், நான் யார் என்பதையோ என்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் என்ன என்பதையோ நான் எப்படிப்பட்டவள் என்பதையோ சொல்லிக் காட்டப்போவதே இல்லை.

நான் பழைய இங்கிலாந்தில் லங்காஷையரில் பிறந்தேன். என் அப்பா ஒரு ஏழை விவசாயி. பிளேக் நோய் தாக்கியதில் என் அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டனர். அப்போது நான் மிகவும் சிறியவள். நானும் என் சகோதரர்களும் சகோதரிகளும் ஒரு சர்ச்சின் பராமரிப்பில் வாழ்ந்தோம். அப்பறம் அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. எனக்குக் கொஞ்சம் தையல் வேலை தெரியும். இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வேன். எனவே, அந்தப் பகுதியில் இருந்த மூதாட்டி ஒருவருடைய வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் பணிப்பெண்ணாக அனுப்பினர். அப்போது எனக்கு 9-10 வயது இருக்கும்.

அந்த மூதாட்டி அல்லது சீமாட்டி திருமணம் செய்துகொண்டிருக்கவில்லை. ரோமான் கத்தோலிக்க மத நம்பிக்கை கொண்டவர். அதை அவர் தனக்குள் மட்டுமே வைத்திருந்தார். அவருடைய அப்பா ஓர் ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பியிருந்தார். இவர்தான் பிறந்தார். எனினும் மகளுக்கு லத்தீன், கிரேக்கம், கொஞ்சம் ஹீப்ரு எல்லாம் கற்றுக் கொடுத்தார். அவர் ஓர் அருமையான தொலைநோக்கி ஒன்றையும் விட்டுச் சென்றிருந்தார். இந்த மூதாட்டி, கண் பார்வை மங்கிய நிலையிலும் மாடியில் வைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கியால் வானத்தை தினமும் வேடிக்கை பார்ப்பார். ’இந்த உலகத்து விஷயங்களைவிட வரவிருக்கும் உலகம் பற்றித் தனக்கு நன்கு தெரியும் என்பதால் அனைத்தையும் இட்டுக் கட்டிப் புரிந்துகொண்டுவிடுவேன்’ என்று சொல்வார்.

அவருக்கு ஒரே துணை நான்தான் என்பதால், என்னையும் வானத்து நட்சத்திரங்களை வேடிக்கை பார்க்கச் சொல்வார். அவருடைய அப்பா விட்டுச் சென்றிருந்த நட்சத்திர அட்டவணைகள், காலக் கணிப்புகளைக் கொண்டு எனது ஜாதகத்தை அவர் எழுதிக் கொடுத்தார். என் வாழ்நாளில் ஹோமர் இலக்கியத்தைப் படிக்கும் அளவுக்கான மொழிப் புலமை என்றைக்குமே எனக்கு தேவைப்படப்போவதில்லை என்றாலும் பேச முடியும் அளவுக்கு ஹீப்ரு தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்லி கற்றுக் கொடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணங்கள்:

அவருடைய செல்லக் குழந்தையான நான் (அப்படித்தான் அழைப்பார்) பின்னாளில் புதிய உலகுக்கு (அமெரிக்காவுக்கு) நீண்ட நெடிய பயணம் மேற்கொள்வேனாம். அங்கு எனக்கு ஒரு குழந்தை பிறக்குமாம். அந்தக் குழந்தையின் அப்பாவின் அப்பா (முன்னோர்கள்) நோவாவின் படகில் பயணம் செய்திருக்கவே மாட்டார்களாம். அந்த செவ்விந்தியக் குழந்தைகள் இஸ்ரேலின் தொலைந்த பழங்குடிகள்தான். எனவே யூத மொழியில் ஷலோம், அன்பு, பசி போன்ற வார்த்தைகளோடு வேறு பலவும் கற்றுக்கொடுத்தார். நான் என்னுடைய யூத கணவரைச் சந்திக்கும்போது பேச தேவைப்படும் என்று சொன்னார். அவற்றில் பலவற்றை நான் மறந்துவிட்டேன். நான் திடமான சிறுமியாக இருந்திருக்காவிட்டால் இதுபோன்ற மூடக் கதைகளால் என் மனதை நிரப்பிவிட்டிருப்பார்.

கடலுக்கு அப்பால் இருக்கும் தூர தேசத்தின் பெயர் விர்ஜினியாவாம். விர்ஜின் மேரியின் நினைவாக வைக்கப்பட்ட பெயர். அந்த ஊரில் பாயும் நதி ஏதேன் தோட்டத்தில் இருந்து நேரடியாகப் பாய்கிறதாம். அங்கிருக்கும் பூர்வ குடிகளையெல்லாம் உண்மையான மதத்துக்கு மாற்றும் பொறுப்பை என்னிடம் அந்த மூதாட்டி கொடுத்தார். ஏகப்பட்ட ஆவே மரியா விளிகளுடன் அவள் மேலும் சொன்னாள். செவ்விந்தியப் பூர்வ குடிகள் அனைவரையும் மதம் மாற்றிமுடித்ததும் உலகம் முடிவுக்கு வந்துவிடுமாம். இறந்தவர்கள் எல்லாம் கல்லறைகளில் இருந்து எழுப்பப்படுவார்கள். தகுதி உடையவர்கள் எல்லாம் சொர்க்கத்துக்குச் செல்வார்களாம். என்னுடைய குழந்தை தங்க கிரீடம் அணிந்துகொண்டு அனைத்தையும் பார்த்துச் சிரித்தபடி இருக்குமாம். லத்தீனில் எதுவோ பேசி சிலுவைக் குறியிட்டுக் கொள்ளுமாம்.

நான் அந்த மூதாட்டியின் ரோமான் கத்தோலிக்க நம்பிக்கைகள் பற்றியோ நட்சத்திர கணிப்புகள், ஆராய்ச்சிகள் பற்றியோ யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அவளை புறச் சமயவாதி என்று சொல்லாவிட்டாலும் சூனியக்காரி என்று சொல்லி நிச்சயம் தூக்கில் தொங்கவிட்டிருப்பார்கள்.

ஒரு நாள் அந்த மூதாட்டி இறந்தார். இரவில் படுக்கையில் படுத்தவர் அதன் பின் எழுந்திருக்கவே இல்லை. அவருடைய உறவினர்கள் வந்தார்கள். அவர்களால் எடுத்துக்கொள்ள முடிந்த முக்கியமான பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டனர். என்னை ஒரு பொருட்டாக மதித்திருக்கவில்லை. எனவே எனக்கு அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. லண்டனுக்குப் போகலாம்; அங்கு ஏதாவது பிழைப்புக்கு வழி கிடைக்கும் என்று நினைத்தேன். நான் நல்ல பலசாலி என்பதால் நெடுஞ்சாலை வழியாக நடக்க ஆரம்பித்தேன். இரவுகளில் தானியக் கிடங்குகள், வேலியோரங்கள் ஆகிய இடங்களில் படுத்துத் தூங்கினேன். ஐந்து நாட்களில் லண்டனுக்குச் சென்று சேர்ந்துவிட்டேன். அங்கு பசி தாங்க முடியாமல் ஒரு கடையில் ஒரு ரொட்டித் துண்டைத் திருடினேன். அதை என் பாக்கெட்டில் போடுவதை ஒரு கனவான் பார்த்துவிட்டார். கூச்சல் போட்டு என்னைக் காட்டிக் கொடுக்காமல், மெள்ள என்னைப் பின் தொடர்ந்து வந்தார்.

சில தெருக்களைக் கடந்த பின் என் அருகில் வந்தவர் என் கைகளை அன்புடன் பற்றியபடி, தேவைக்காகத் திருடினாயா… ஆசைக்காகத் திருடினாயா என்று கேட்டார். ’பசியினால்தான் எடுத்தேன் சார்’ என்று சொன்னேன். இவ்வளவு சிறு வயது ’லங்காஷைர் பால்காரி’யான நான் அவர் உடம்பில் உயிர் இருக்கும்வரை இனிமேல் இப்படியான பசியில் தவிக்கக்கூடாது; தவிக்க விடமாட்டேன் என்று பரிந்து பேசி என் மனதைக் கரைத்தார். ஒரு படுக்கை மட்டும் போடப்பட்டிருந்த அறைக்கு அவருடன் வரும்படி என்னை சம்மதிக்கவைத்தார். அந்தப் பொது விடுதியில் அவரைப் பலருக்கும் நன்கு தெரிந்திருந்தது.

எனக்கு அதுதான் முதல் தடவை; அதற்கு முன் நான் இதைச் செய்திருக்கவில்லை என்பது அவருக்குத் தெரிந்ததும் என்னைச் சீரழித்ததற்கு வருந்தியபடி மார்பில் அடித்துக்கொண்டு அழுதார். எனக்கு ஐந்து தங்க நாணயங்கள் தந்தார். அதுவரையில் அவ்வளவு பெரிய தொகையை நான் பார்த்ததே இல்லை. சர்ச்சுக்குச் சென்று, தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்கப் போவதாகச் சொன்னார். அதன் பின் அவரை நான் பார்க்கவே இல்லை. நான் என்னுடைய அந்த ஆதி பாவத்துக்குப் பின் அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். லங்காஷைரின் பால்காரி வெகு சீக்கிரமே லங்காஷைரின் வேசியானேன்.

இப்போது நான் என்னுடைய நேர்மையான வேசைத்தனத்தின் மூலம் மன நிறைவுடன் வழ்ந்தேன். பட்டாடைகள் உடுத்திக் கொண்டு, என்னுடைய வாகனத்தில் சீப்சைட் தெருவில் பயணித்தபடி, இன்றும், இனி என்றும் எனக்கு புலம் பெயர்வின் கசப்பு ரொட்டியை உண்ண வேண்டிய அவசியமே வராது என்று இறுமாந்திருந்தேன். நான் முதலில் தங்க நாணயத்தைப் பார்த்தபோது அது என்னை வசீகரித்து மயக்கியது. தேவைதான் என்னைத் திருட வைத்திருந்தது என்றாலும் பேராசை என்னைத் திருட்டுக் கலையில் நிபுணராக்கியது. வேசைத்தனம் என்பது ஒரு நல்ல போர்வையாக எனக்குப் பயன்பட்டது. வாடிக்கையாளர்கள் எல்லாம் காமத்தினாலும் மதுவினாலும் குருடர்களாகியிருப்பார்கள். அவர்களிடமிருந்து திருடிச் செல்வது இறந்த வாத்தைப் பிடிப்பதைவிட மிகவும் எளிது.

நகராட்சிக் குழு மூத்த உறுப்பினர் ஒருவரிடமிருந்து எடுத்த தங்க கடிகாரம் என்னை நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. நான் தங்கியிருந்த வீட்டு எஜமானி, நான் வாடகை சரியாகத் தராததால் என் மீது ஏற்கெனவே கோபத்தில் இருந்தார். நகராட்சிக் குழு உறுப்பினர் என்னைப் பற்றி வீட்டு எஜமானியிடம் புகார் சொல்லவே அவர் என் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அப்படியாக, லங்காஷைர் மூதாட்டி சொன்ன ஜோசியத்தின்படி நான் கடல் கடந்து விர்ஜினியவுக்குச் சென்று சேர்ந்தேன்; ஆனால் என்ன… குற்றவாளி என்ற முத்திரையுடன்! எல்லா குற்றவாளிகளுக்கும் செய்வதுபோல் என் கைகளில் சூட்டுக் கோலால் முத்திரை குத்தி ஒரு எஸ்டேட்டில் ஏழு ஆண்டுகள் வேலை செய்யும்படி தண்டனை கொடுத்து அனுப்பினர். அதன் பின்னர் எனக்கு விடுதலை கிடைக்கும் என்று சொன்னார்கள்.

எஸ்டேட் முதலாளிக்கு என்னை மிகவும் பிடித்திருந்தது. எனக்கு வயது 17 தான் ஆகியிருந்தது. புகையிலை தோட்டப் பணிகளில் இருந்து என்னை விடுவித்து சமையல்காரி வேலை கொடுத்தார். ஆனால் கங்காணிக்கு இது பிடிக்கவில்லை. என்னை இனிமேல் சாட்டையால் அடிக்க முடியாதே… அதோடு, நான் சீப்சைட் தெருவில் வேசியாகத் திரிந்தவள் என்பதால் விர்ஜினியாவில் நல்ல சமையல்காரி போல் நடிக்கக்கூடாது என்று சிறிதும் கருணையற்றுக் கடிந்துகொண்டான். ஞாயிறு காலையில் எஸ்டேட் முதலாளி சர்ச்சுக்குப் போயிருந்தபோது இந்த கங்காணி வீட்டுக்கு வந்து என் மார்பகங்களில் ஒரு கையை வைத்தான். இன்னொரு கையினால் என் ஸ்கர்ட்டை உயர்த்தினான். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதை நான் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்று மிரட்டினான்.

நான் அருகில் இருந்த பெரிய கத்தியை எடுத்து சட்டென்று அவனுடைய காதுகளை ஒவ்வொன்றாக அறுத்து எறிந்தேன். என்ன ஒரு அற்புதமான காட்சி அது! பன்றியை வெட்டியதுபோல் ரத்தம் கொட்டியது. அவன் வலியில் கூக்குரலிட்டான். திட்டினான். நான் கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் தோட்டத்துக்கு ஓடினேன்.

காய்கறிக் கூடையுடன் இருந்த தோட்டக்காரர் என்னை அந்தக் கோலத்தில் பார்த்ததும் என்ன ஆயிற்று பெண்ணே என்று பதறினார்.

கங்காணி என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தான். காதை அறுத்துவிட்டேன்; வேறொன்றைத்தான் அறுத்திருக்கவேண்டும் என்றேன்.

அந்தத் தோட்டக்காரர் நல்ல, அன்பான நீக்ரோ. ஒரு அடிமை. அவரை இந்தக் கங்காணி சாட்டையால் அடிக்கடி அடிப்பான். நான் சொன்னதைக் கேட்டுப் பொங்கி வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டபடியே சொன்னார்: ’பெண்ணே… நீ இப்போதே இந்தக் காட்டுக்குள் ஓடித் தப்பித்துவிடு. காட்டுமிராண்டி செவ்விந்தியர்களின் கருணைக்கு உன்னை ஒப்படைத்துவிடு. ஏனென்றால், நீ செய்திருக்கும் செயலுக்கு, இங்கிருந்தால் தூக்கு தண்டனை நிச்சயம்’.

கொஞ்சம் இரவு உணவை ஒரு கைக்குட்டையில் பொதிந்து அவரிடமிருந்த சிறிய தீக்கடைக் கோல், அரணிக் கட்டைகள் இருந்த மரப்பெட்டி ஒன்றையும் கொடுத்தார். அதை என் உடைக்குள் வைத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடினேன். என் குற்றப்பட்டியலில் மிக மிக மோசமான ஒன்றைச் சேர்த்துக் கொண்டேன் : அடிமைத்தனத்தில் இருந்து தப்பி ஓடியது.

லங்காஷைரில் இருந்து லண்டனுக்கு நடந்தே சென்றதை முன்பே சொல்லியிருக்கிறேன். அதிலிருந்து என் கால்களின் வலிமை உங்களுக்குப் புரிந்திருக்கும். இரவு வந்ததும் தோட்டக்காரர் தந்த ரொட்டித் துண்டு, பன்றிக் கறியைத் தின்ன ஒரு இடத்தில் உட்கார்ந்தபோது எஸ்டேட்டில் இருந்து 15 மைல் தொலைவுக்குப் போய்விட்டிருந்தேன். என் எஜமானர் புகையிலை பயிரிட காட்டை வெட்டிச் சரிசெய்திருந்தார். கடினமான பயணம்தான் என்றாலும் ஆங்கிலேயரின் ஆதிக்கம் இல்லாத இடத்துக்குச் சென்று சேர்ந்துவிடவேண்டும் என்பதுதான் என் ஒரே குறிக்கோளாக இருந்தது. ஸ்பானியர்களும் ஃப்ரெஞ்சுக்காரர்களும் கடலோரப் பகுதிகளில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அங்கு அந்தப் புதியவர் மத்தியில் என் தொழிலை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஒரு வேசிக்குத் தன் தொழிலை ஆரம்பிக்கத் தன் உடல் ஒன்றே போதுமே.

எனக்கு அந்த நிலவியல், ஊர்கள் பற்றி எதுவும் தெரியாது. விர்ஜினியாவிலிருந்து ஃபுளோரிடாவுக்கு 10-12 நாட்களில் நடந்தே போய்விடலாம் என்று நினைத்தேன். அதற்கு மேலே எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால் அமெரிக்காவின் முழு விஸ்தீரணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. செவ்விந்தியர்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. ஒரு வெள்ளைக் கங்காணியை என்னால் என் கத்தியைக் கொண்டு வெட்டி விரட்ட முடிந்திருக்கிறது. எனவே செவ்விந்தியர்களைச் சமாளிப்பது அப்படியொன்றும் சிரமமாக இருக்காது. திறந்த வானத்தின் கீழே படுத்து இரவுகளைக் கழித்தேன். சூரியக் கதிர்களின் வெப்பம் மறு நாள் எழுப்பியதும் எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

வழி நெடுகப் பாய்ந்த நீரோடைகளில் இருந்து தூய்மையான நீர் குடிக்கக் கிடைத்தது. அது பெர்ரிகள் காய்த்துக் குலுங்கும் பருவம். பழங்களைச் சாப்பிட்டு காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டேன். ஆனால், நாள் முழுவதும் நடந்து களைத்துப் போனதால் இரவுகளில் கொஞ்சம் திடமான உணவு தேவைப்பட்டது. காட்டு வழியெங்கும் எத்தனையோ பறவைகளும் சிறு விலங்குகளும் இருந்தன. கொஞ்சம் புத்தியை உபயோகித்தால் பட்டினி கிடக்கவே தேவையில்லை என்பது புரிந்தது. என் காலணிக் கயிறுகளைப் பயன்படுத்தி சிறு கண்ணி வலை போல் செய்து விரித்தேன். சிறிய பழுப்பு நிற முயல் போன்ற ஏதோ ஒரு விலங்கு பிடிபட்டது. அதற்குக் காதுகள் இல்லை. அதன் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொன்றேன். தோலை உரித்து, தோட்டக்காரர் கொடுத்த தீக்கடைக் கோல் மரப்பெட்டியில் இருந்து தீயை உருவாக்கி, வாட்டிக் கொண்டேன். ரொட்டித் துண்டும் உப்பும் மட்டுமே தேவையாக இருந்தது.

சாப்பிட்டு முடித்த பின் அங்கிருந்த ஓக் மரங்களில் ஏக்ரான் கொட்டைகள் நிறைந்து இருந்ததைப் பார்த்தேன். அவற்றை இரண்டு தட்டையான கற்களுக்கு இடையே அரைத்து மாவு தயரித்துக் கொள்ளமுடியும் என்று யோசித்தேன். வீட்டில் இருந்தபோது சில நேரங்களில் அப்படிச் செய்திருக்கிறேன். இந்த மாவுடன் நீர் கலந்து பிசைந்து அதை நெருப்பில் போட்டு ரொட்டியாக்கிக் கொள்ளலாம். வாட்டிய மாமிசத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

வெள்ளிக் கிழமைகளில் லங்காஷைர் மூதாட்டி மீன் சாப்பிடுவது வழக்கம். அது எனக்கும் தொற்றியிருந்தது. அருகில் ஓடிய ஓடைகளில் ஏராளமான மீன்களிருந்தன. கைகளால் துழாவியே மீன்களைப் பிடிக்கத் தெரியாத கிராமப் பெண்ணே இருக்க முடியாது. பிக் பாக்கெட் அடிப்பது போல் எளிய வேலைதான். மல்பரிகளை வெய்யிலில் காயவைத்தால் ஒரு மாதத்துக்கு வைத்திருந்து சாப்பிட முடியும். உணவுக்காக இவ்வளவு யோசித்த நான் இந்த காட்டில் உப்பில்லாத மாமிசத்தைச் சாப்பிட்டே சுகமாக வாழ்ந்துவிட முடியும் என்று தோன்றியது.

என்னிடம் உலோகக் கருவிகள் இருக்கின்றன. நெருப்பும் இருக்கிறது. தட்ப வெப்பநிலை மிதமாகவே இருக்கிறது. காடும் கனிகள் நிறைந்து காணப்படுகிறது. இது பூலோக சொர்க்கம் என் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும். இங்கு நான் மரக்கிளைகளைக் கொண்டு சின்னக் குடிசை கட்டிக் கொள்வேன். காதறுந்த கங்காணி சாகும் வரை இங்கு இருந்துவிட்டு, தென் திசை நோக்கி நல்ல நேரம் பார்த்து சென்றுவிடுவேன். அதுமட்டுமல்ல, என் நாசியில் மனித இனத்தின் வாசம் தாங்க முடியாத நாற்றத்தைத் தந்துவருகிறது. ஃப்ளோரிடாவின் வேசியர் கூடத்துக்கு இத்தனை வேகமாகத் திரும்ப வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. எனது பாதுகாப்புக்காக நான் இன்னும் கொஞ்சம் இந்த அடர்ந்த காட்டுக்குள் ஊடுருவிச் சென்றாகவேண்டும். என்னைத் தூக்கிலிடுவதற்காகத் தேடித் துரத்திவரும் கும்பலிடமிருந்து அப்போதுதான் தப்பிக்க முடியும். என் மனம் அதை நினைத்துத்துத்தான் ரொம்பவே நடுங்கிக் கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்திராத செவ்விந்தியரைவிட, தெரிந்த வெள்ளையர் மீதான அச்சமே மிக மிக அதிகமாக இருந்தது.

எனவே, இன்னொரு நாள் முழுவதும் நடந்தேன். பறவைகளின் ஒலிகளைத் தவிர வேறு எந்த சத்தமும் கேட்காத அளவுக்கு இன்னொரு நாள் காட்டுக்குள் மேலும் நடந்து சென்றேன். அடுத்த நாள் ஒரு செவ்விந்தியப் பெண்ணின் மெல்லிய பாடல் என் காதில் விழுந்தது. பண்படுத்தப்பட்ட நிலத்தில் அவள் பாடிக் கொண்டிருந்தாள். அவள் என்னைக் கொல்வதற்குள் அவளை நான் கொன்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தேன்.

(தொடரும்)

Our Lady of Massacre by  Angela Carter

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *