அந்த செவ்விந்தியப் பெண் என்னைக் கொல்வதற்கு முன் நான் அவளைக் கொன்றுவிடவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், அவள் கையில் ஆயுதம் எதும் இல்லை என்பதை அதன் பின்தான் பார்த்தேன். அவள் மூலிகை இலைகளைப் பறித்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள். எனவே அவள் பார்வையில் படாமல் ஒளிந்து கொள்ளத் தீர்மானித்தேன். அது வேறு யாரோ ஒருவருடைய தோட்டம் போலிருந்தது. அங்கு அவள் வேலைக்கு இருக்கிறாள் போலிருக்கிறது. என் இங்கிலாந்தைச் சேர்ந்த யாருமே இதுவரை கால் பதித்திராத இடத்துக்கு வந்திருப்பதாகவும் நினைத்தேன். ஆனால் என் காலடி பட்டுச் சருகுகள் எழுப்பிய சப்தத்தை அவள் கேட்டுவிட்டாள். ஏதோ பேயைப் பார்த்ததுபோல் சட்டென்று பயத்தில் துள்ளினாள். அவள் கூடை மேல் மோதியதில் பறித்த மூலிகை இலைகள் எல்லாம் தரையில் கொட்டின.
நான் உடனே சட்டென்று அவளுக்கு அருகில் சென்று கீழே கொட்டிய இலைகளை எடுத்து கூடையில் போட்டேன். சீப்சைட் தெருவில் பழக்கடைக்காரரின் கூடையில் இருந்து ஆப்பிள்கள் தரையில் விழுந்தால் எடுத்துவைப்பேனே… அதே போல் தன்னிச்சையாக, அவளுக்கு உதவினேன். என் கையில் போடப்பட்டிருந்த சூட்டுக்கோல் முத்திரையைப் பார்த்தாள். அவளுக்கு அதன் அர்த்தம் புரிந்ததுபோல் மெள்ள வேதனையில் தனக்குள் முனகினாள். என் மீதான பயம் அதைப் பார்த்ததும் அவளுக்கு அகன்றது. எனினும் என்னுடைய தோற்றம் அவளுக்குப் பிடித்திருக்கவில்லை. என்னை காட்டிலேயே விட்டுவிட்டுச் செல்லத் தீர்மானித்து என் கையில் இருந்து கூடையை வாங்கிக் கொண்டாள். ஆனால் நான் அவளுடைய ஆண்மை கலந்த அழகில் மயங்கினேன். சிவப்பு அல்ல; அற்புதமான பழுப்பு நிறத்தில் இருந்தாள். நான் என் உள்ளாடையைத் திறந்து நான் ஒரு பெண் என்பதைக் காட்டினேன். என்னுடைய தோல் நிறம் அதி வெண்மையாக இருந்தது. அருகில் வந்தவள் என் மார்பைத் தொட்டுப் பார்த்தாள்.
அந்த செவ்விந்தியப் பெண்ணுக்கு நடுத்தர வயது இருக்கும். மான் தோலில் செய்யப்பட்ட ஸ்கர்ட் அணிந்திருந்தாள். நான் இப்போதும் ஆங்கிலேய உடையையே அணிந்திருந்தேன். அது அழுக்கடைந்திருந்தது. அந்த வகை மார்பை இறுக்கிப் பிடிக்கும் ஆடை செவ்விந்திய பகுதியில் அறிமுகமாகியிருக்கவில்லை. எனவே நான் அதைக் கழற்றி எறிந்தேன். மூச்சுவிட எளிதாக இருந்தது. என் உடைக்குள் ஒளித்து வைத்திருந்த கத்தியைக் கொடுக்கும்படிக் கேட்டாள்.
அது எனக்குத் தேவைப்படும் என்று மனதுக்குள் நினைத்தேன். ஆனால் அவள் கேட்டதும் புன்னகைத்தபடியே அவளிடம் கொடுத்தேன். அவளுடைய மொழியில் ஏதோ சொன்னாள். கத்தி என்று சொல்வதாக நினைத்துக் கொண்டு நானும் அதைத் தொட்டுக் காட்டி அதே வார்த்தையைச் சொன்னேன். அவள் தன் தலையை அசைத்தபடியே கத்தியின் மீது கையை மென்மையாக ஓட்டிக் காட்டினாள். அதி கூர்மையானது அல்லது அதி பயங்கரமானது என்று அவர்கள் மொழியில் சொல்லியிருக்கிறாள் போல. அதை மீண்டும் சொன்னேன். நான் முதன் முதலாக உச்சரித்த வட அமெரிக்கப் பூர்வகுடி வார்த்தை அது. அதன் பிறகு நிறைய வார்த்தைகள் சொல்ல ஆரம்பித்தேன் என்பது வேறு விஷயம். அந்தப் பெண் நல்ல உடல் அமைப்புடன் இருந்தாள். என் லண்டன் மூதாட்டி சொன்னது போன்ற விர்ஜினியா ராணி போல் இருந்தாள். நான் அவளிடம் ‘ஷலோம்’ என்று சொல்லிப் பார்த்தேன். அவள் அதை பணிவுடன் திரும்பச் சொன்னாள். அவளுக்கு அதன் அர்த்தம் புரியாமல்தான் சொன்னாள் என்பது எனக்குப் புரிந்தது.
தன்னுடன் வரும்படிச் சொன்னாள். அவளுடன் செல்லலாமா? செவ்விந்தியர்கள் மத்தியில் கங்காணி நிச்சயம் என்னைத் தேடி வரமாட்டான். நான் அவர்களுடைய செவ்விந்திய கிராமத்துக்குச் சென்றேன். ஆனால், என்னை அவர்கள் கடத்திச் சென்றதாகவும் தலை முடியைப் பிடித்துத் தர தர இழுத்துச் சென்றதாவும்தான் பாதிரியார் சொல்வார். அவர் அப்படித்தான் நம்ப விரும்பினால் அப்படியே நினைத்துக் கொள்ளட்டும்.
அவர்களின் அழகிய சிறிய ஊர் மிகவும் தூய்மையாக சிறிய மர வேலி/ தடுப்பு கொண்டதாக இருந்தது. வீடுகள் எல்லாம் பிர்ச் மரப்பட்டைகள் கொண்டு கட்டப்பட்டிருந்தன. பூசணிவகைச் செடியின் கொடிகள் படர்ந்திருந்தன. மாமிச உணவு தயாராகும் வாசனை காற்றில் மிதந்து கொண்டிருந்தது. அது இரவு/மாலை உணவுக்கான நேரம் போலிருக்கிறது. ஒரு பெரிய பானையைத் திறந்த வெளி அடுப்பில் வைத்து ஆடைகள் இல்லாத செவ்விந்தியர்கள் அதைச் சுற்றி குத்தவைத்து அமர்ந்திருந்தனர். நிதானமாக, நெருப்பை மரப்பட்டைகளால் விசிறிக் கொண்டிருந்தனர். அந்த ஊரைச் சுற்றிலும் புகையிலை வயல்கள், மக்காச்சோள வயல்கள் நிறைந்து காணப்பட்டன. அருகில் ஒரு நதி ஓடிக் கொண்டிருந்தது. பசுக்களோ, குதிரைகளோ கோழிகளோ எதையும் பார்க்கவில்லை. ஏனென்றால் எதையும் அவர்கள் வளர்க்கவும் இல்லை. தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். எனக்கு குளிக்க நீரும் உடலைத் துடைத்துக் கொள்ள இறகால் செய்யப்பட்ட துண்டும் கொடுத்தாள். குளித்து புத்துணர்சி அடைந்தேன்.
செவ்விந்தியர்கள் எல்லாம் டிராகன்களைப் போன்றவர்கள் என்றும் இறந்த மனிதர்களைத் தின்பார்கள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களுடைய குழந்தைகள் எல்லாம் பொம்மைகளுடன் புழுதியில் புரண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்வளவு அழகிய குழந்தைகள் நர மாமிசம் உண்பவர்களால் வளர்க்கப்பட வாய்ப்பே இல்லை. என் செவ்விந்திய அம்மா (அவரை அப்படித்தான் அழைக்க ஆரம்பித்தேன்) ஒரு விஷயம் சொன்னார்: வட பகுதியில் இருக்கும் அவருடைய உறவினர்கள் சிறைப்பிடிப்பவர்களின் தொடையைச் சுட்டுத் தின்பார்கள் என்றும் இறந்தவர்களை மகிமைப்படுத்தும் நோக்கில் அதை ஒரு புனிதச் சடங்கின் அங்கமாக மட்டுமே செய்வார்கள் என்றும் சொன்னார்.
பாதிரியாருடன் இது பற்றி நான் கடுமையாக விவாதித்திருக்கிறேன். செவ்விந்தியர்களின் இந்தச் சடங்கு, நமது சர்ச்களின் திருப்பலி வழிபாடுபோலவே இயற்கை வழிபாட்டின் புனிதச் சடங்கு என்று சொல்லியிருக்கிறேன். ஒன்று நான் நீண்ட காலம் சாத்தானுடன் வாழ்ந்துவிட்டதால் இப்படியான எண்ணங்கள் வந்திருக்கும் அல்லது ரோமானிய கத்தோலிக்கரின் திருப்பலி என்பது செவ்விந்திய நர மாமிச விருந்தின் ஆங்கிலேய வடிவம் என்று பதில் சொல்வார்.
என்னைப் பொறுத்தவரையில் நான் செவ்விந்தியர்களுடன் இருந்த நட்களில் மீன், வேட்டையாடிக் கொண்டுவந்த காட்டுக் கோழி (வேகவைத்து அல்லது சுட்டு) பல்வேறு வகைகளில் சமைக்கப்பட்ட மக்காச்சோளம், பீன்ஸ், பருவ காலங்களில் பழசாறுகள் இவைதான் சாப்பிட்டேன். மிகவும் ஆரோக்கியமான உணவு முறை. அவர்களில் நோய்வாய்ப்பட்டவர்களையே நான் பார்த்ததில்லை. பல்வலி என்றோ தசைப்பிடிப்பு என்றோ வீங்கிய கண்கள் என்றோ முதுமையில் முடங்கிப் போயோ யாரையும் நான் பார்த்ததில்லை.
தட்ப வெப்பநிலை மிகவும் இதமாக இருந்தது. அவர்களுடைய நிர்வாணம் முதலில் எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. ஆண்கள் எதுவும் அணிந்திருக்கமாட்டார்கள். பெண்கள் மிகச் சிறிய இலை ஆடை அணிந்திருப்பார்கள். சிறிது நாட்களில் எனக்கு அவர்களுடைய நிர்வாணம் பழகிவிட்டது. என்னுடைய பெட்டிகோட்டைக் கொடுத்துவிட்டு என் அம்மா எனக்குக் கொடுத்த மான் தோல் ஆடையை அணிந்துகொண்டேன். அவர் எனக்கு சிப்பிகளைக் கடைந்து செய்த ஒரு நெக்லெஸும் கொடுத்தார். அவருக்குப் பெண் குழந்தைகள் இல்லை. காடுதான் ஒரு பெண் குழந்தையைத் தந்திருக்கிறது. என்னைக் கைவிட்டதற்கு ஆங்கிலேயருக்கு நன்றி என்று சொன்னார்.
அவர் என் மீது காட்டிய அன்புக்கு எல்லையே இல்லை. அவருடைய அறையிலேயே தங்கிக் கொண்டேன். அவருக்கு கணவர் இல்லை. அந்த பழங்குடியினருக்கு அவர்தான் செவிலித்தாய், மருத்துவச்சி. பிரசவ காலங்களில் அந்தக் குலத்தினர் அனைவருக்கும் இவரே உதவி செய்தார். நான் முதலில் காட்டில் என் அம்மாவைப் பார்த்தபோது அவர் சேகரித்துக் கொண்டிருந்த மூலிகைகள் எல்லாம் பிரசவகால மற்றும் மாதவிலக்கு கால வலிகளுக்கான மருந்துகளுக்குத்தான்.
சிறிய பிசாசுகள் என்று சொல்லப்படும் அவர்களுடைய வாழ்க்கை எப்படியானது? ஆண்களுடைய வாழ்க்கை மிகவும் உல்லாச வாழ்க்கைதான். வேட்டை அல்லது எதிரிகளுடன் சண்டை போடாத நாட்களில் நாள் முழுவதும் வெறுமனே உட்கார்ந்து பொழுதைப் போக்குவார்கள். பொதுவாகவே இந்தப் பழங்குடிகள் எல்லாரும் தமக்குள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டே இருப்பார்கள். ஆங்கிலேயர்களுடனும் சண்டையிடுவார்கள். பழங்குடிகளின் தலைவரை ‘வெரோவன்ஸ்’ என்று அழைக்கிறார்கள். உண்மையில் அவர் கிராமத்தின் மன்னரோ தலைவரோ அல்ல. ஆங்கிலேயர்கள் இவர்களை அப்படிச் சொல்கிறார்கள். ஆனால், போரில் முதல் ஆளாகச் செல்வார். பின்னால் நின்றுகொண்டு படைவீரர்களை போராடத்தூண்டும் ஆங்கிலேய தளபதிகளைவிட இவர்கள் வீரம் நிறைந்தவர்கள்.
செவ்விந்தியத் தாயுடன் குடிசையில் வசித்து வந்தபோது, குத்தவைத்து அமர்வது தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது போன்ற அவர்களுடைய பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொண்டேன். அவர்கள் வீட்டில் மரச் சாமான்கள் எதுவும் இருக்காது. உணவைப் பாயில் பரத்திவைப்பர்கள். தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும். மான் தோல், எருமைத் தோல் ஆகியவற்றை உரிக்கவும் அவற்றில் ஆடைகள் செய்யவும் கற்றுக் கொண்டேன். அந்த உடைகளின் விளிம்புகளில் சிப்பிகள் அலது இறகுகளை அலங்காரமாகக் கோக்கவும் கற்றுக் கொண்டேன்.
என் ஏப்ரானில் ஊசிகள் குத்திக் கொள்ளும் பை இருந்தது. அம்மாவுக்கு அந்த எஃகு ஊசிகள் பிடித்திருந்தன. தீக்கடைக்கோல் பெட்டியும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னிடம் இருந்த கத்தியும் அதுபோல் மிகவும் அற்புதமான பொருள் என்று சொன்னார். அவர்களுக்கு உலோகப் பயன்பாடு எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனினும் அந்த செவ்விந்தியப் பெண்கள் ஆற்றுக் களிமண் கொண்டு அருமையாக பானைகள் செய்து அவற்றை திறந்தவெளி அடுப்பில் வைத்து சுட்டு பானை செய்துகொள்கிறார்கள். கல்லாலான கத்தி வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு மிக அழகாக ஆண்கள் சவரம் செய்துகொள்கிறார்கள். ஒருவர் கூட தாடியுடன் இருப்பதில்லை.
அவர்களிடம் ஓரிரு துப்பக்கிகள் இருந்தன. நான் அங்கு வருவதற்கு முன்பாக சில ஸ்காட்லாந்தினர் வந்திருக்கிறார்கள். அவர்கள் இவர்களிடமிருந்து அலங்கார உடைகளை வாங்கிக் கொண்டுவிட்டு துப்பாக்கியும் மதுவும் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். மது இவர்களைப் பித்துப் பிடித்து ஆடவைக்கிறது. இவர்களுக்கு துப்பாக்கியைச் சுடவும் தெரிந்திருக்கிறது.
அறுவடை நெருங்கியது. மக்காச்சோளங்கள் அனைத்தையும் சேகரித்தனர். மிகவும் மலினமான சிறிய வகை சோளம். என் கட்டை விரலைவிட சற்று பெரியவை. அவ்வளவுதான். சாப்பிட்டதுபோக எஞ்சிய மக்காச்சோளக் கதிர்களைக் காயவைத்து ஆறு ஏழு அடி குழி தோண்டி அதற்குள் சேமித்து கொண்டோம். மண்ணைத் தோண்டுவது மிக மிக சிரமமாக இருந்தது. ஏனென்றால் கடப்பரை, மண்வெட்டி என எதுவுமே கிடையாது. ஆங்கிலேயரிடமிருந்து திருடியவை தவிர உலோகங்கள் எதுவும் கிடையாது. மரக் குச்சிகள் அல்லது மானின் தோல் எலும்புகளைக் கொண்டுதான் குழி தோண்டவேண்டும்.
எனக்கு இந்த செவ்விந்தியர்கள் மீதான ஒரே ஒரு விமர்சனம் என்னவென்றால், ஆண்கள் விவசாயத்தில் ஈடுபடமாட்டார்கள். அது மிகவும் கடினமான வேலை. இருந்தும் அதை அவர்கள் செய்வதில்லை. மீன் பிடிக்கச் செல்வார்கள். மானைத் துரத்திச் சென்று வேட்டையாடுவார்கள். வயலைச் சுற்றி நடனம் ஆடுவார்கள். அப்படி ஆடினால் மக்காச்சோளம் நன்றாக வளருமாம். ஆண்கள் இப்படி இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.
ஆனால், அம்மா என்ன சொன்னரென்றால், ‘இதில் ஒரு தவறும் இல்லை. அது ஆண்களை நம்மிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறதே அதுவே போதும்’.
காலங்கள் ஓடின. நான் செவ்விந்திய மொழியில் சரளமாகப் பேச ஆரம்பித்தேன். ஏதோ நான் அந்தக் குலத்தில்தான் பிறந்ததுபோல் பேசினேன். என் பேச்சில் ஒரே ஒரு ஹீப்ரு வார்த்தை கூடக் கலந்திருக்கவில்லை. லங்காஷைர் மூதாட்டி இவர்கள் இஸ்ரேலின் வழிதவறிய பழங்குடியினர் என்று சொன்னது பொய்யாகிவிட்டது. இவர்களை மதம் மற்றுவது தொடர்பாகச் சொல்வதென்றால் நான் வேறு எதை எதையோ செய்துவந்தேன். அது என் மனதில் இல்லவே இல்லை.
என்னுடைய வெளிறிய முகமானது அறுவடை முடியும் காலத்தில் அவர்களுடையதைப் போலவே பழுப்பு நிறமாகிவிட்டது. என் அம்மா என்னுடைய முடியைக் கருமையான மை கலந்து அவர்களுடைய மத்தியில் நான் தனித்துத் தெரிவதை மாற்றியமைத்தார். ஆறு மாத காலத்தில் நான் அம்மா என்று அழைத்த பெண்மணிதான் என் உண்மையான அம்மா… நான் அவர்களுக்குப் பிறந்து அவர்களால் வளர்க்கப்பட்டவள் போலவே ஆகிவிட்டேன். ஆனால், என் நீலக் கண்கள் மட்டும் ஒரு அதிசயமாக, தனித்து மின்னிக் கொண்டிருந்தன.
என் அம்மாவுடனான என் பந்தம் இத்தனை அன்பானதாக இருந்த பின்னரும் எனக்கு ஃப்ளோரிடாவுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் இருந்துவந்தது. குளிர் அதிகமாகத் தொடங்கியதும் இந்த எண்ணமும் அதிகரிக்கத் தொடங்கியது. பழக்கம் மற்றும் இயல்பின் குணமே இதுதான். நான் மட்டும் அந்த செவ்விந்திய குலத்தின் வீரம் நிறைந்த ஒருவர் மீது மையல் கொண்டிருக்காவிட்டால் ஃப்ளோரிடா சென்றிருப்பேன். அந்த வீரனுக்கு மனைவி என்று யாரும் இல்லை. அவனும் என் மீது ஆசை கொண்டான். ஆனல் அது பற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொன்னதில்லை. என்னை முறையாக திருமணம் செய்து கொள்ள விரும்பினான் போலிருக்கிறது. எனவே என் அம்மதான் கடைசியாக அதுபற்றிப் பேசினார்: அந்த உயரமான ஹிக்கோரியை (ஒருவகை மரத்தின் பெயர்) உனக்குத் தெரியும் அல்லவா… அவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். இங்கிலாந்தில் ஜேம்ஸ், மேத்யூ என்றெல்லாம் பெயர் இருப்பதுபோல் மரம், செடி, நதி, நட்சத்திரம் இவற்றின் பெயர்கள் அங்கு பரவலாக வைக்கப்பட்டன.
அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்பதைக் கேட்டதும் எனக்கு அழுகை வந்துவிட்டது. அவர் மிகவும் நல்லவர்.
‘நான் எப்படி ஒரு நல்லவருக்கு மனைவியாக இருக்கமுடியும்? என் ஊரில் நான் ஒரு மோசமான பெண் அம்மா’ என்று அழுதபடியே சொன்னேன்.
மோசமான பெண்ணா… அப்படியென்றால்?
சீப்சைட் தெருவில் என் பிழைப்புக்கு நான் என்ன தொழில் செய்தேன் என்பதை அம்மாவிடம் விளக்கமாகச் சொன்னேன். நான் ஒரு திருடி என்பதையும் சொன்னேன். என்னுடைய வேசைத்தனத்தைப் பொறுத்தவரையில் அம்மாவால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆங்கிலேயர்கள் நான் சொன்ன விஷயத்துக்காக, மெனக்கெட்டுப் பணமெல்லாம் கொடுப்பார்களா என்பதை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை ஏனென்றால் செவ்வியக் குலங்களில் அது மிகவும் இயல்பாக இலவசமாக பரிமாறிக் கொள்ளப்பட்டது. என்னுடைய கற்பு பறிபோனது பற்றிச் சொன்னபோது, ‘உன்னால் அவர்களை நன்கு திருப்திப்படுத்த முடிந்திருக்கும். இல்லையென்றால் யாருமே உன்னைத் தேடித் தேடி வந்திருக்கமாட்டார்கள்’.
ஆனால் நான் திருட்டில் ஈடுபட்டது குறித்து வருந்தினார். ‘அன்பு மகளே. என்னுடைய அறையில் இருந்து கிண்ணம் அல்லது சிப்பி மாலை என எதையேனும் எடுத்துக்கொண்டுவிட்டு, எனக்குத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுவாயா’ என்று கேட்டார்.
‘அப்படி எப்படிச் செய்வேன் அம்மா… எனக்கு ஏதாவது தேவையாக இருந்தால், நீங்கள் எங்கள் ஊசியையும் தீக்கடைக் கோலையும் கத்தியையும் பயன்படுத்திவிட்டுத் திருப்பிக் கொடுப்பதுபோல் நானும் தேவையானதைப் பயன்படுத்திவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிடுவேன் அம்மா’.
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்த செவ்விந்திய பூமியில் என் மனதில் பேராசையே எழவில்லை. எனக்கு இரவு உணவு தேவையென்றால் இந்த செவ்விந்திய கிராமத்தின் எந்தவொரு வீட்டிலும் சென்று சாப்பிட்டுக்கொள்ளமுடியும். அதுதான் இங்கு வழக்கம். எனவே ஆசையோ தேவையோ எதுவுமே எனக்குள் இங்கு திருட்டு எண்ணத்தை விதைப்பதில்லை. என்னைத் திருடியாக்கும் எதுவும் இங்கு இல்லை.
‘அப்படியென்றால் எங்கள் மத்தியில் வந்து சேர்ந்தது நீ செய்த அதிர்ஷ்டமே. அப்படியே நீ நீடிப்பாய் என்று நம்புகிறேன். சரி… நீ நான் சொன்னவனைத் திருமணம் செய்துகொள்ளலாமே…’
இந்தக் குலத்தின் தளபதி, மத குரு (மதம் சார்ந்த விஷயங்களில் அவர் ஈடுபடுகிறர் என்பதால் அப்படி அழைக்கலாமென்று நினைக்கிறேன்) இவர்களெல்லாம் மூன்று நான்கு பெண்களுடன் வாழ்கிறார்கள். அவர்களுடைய நிலங்களை உழுவதற்கு இந்த மூன்று நான்கு பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நான் அப்படி ஒருவராக இருக்கவிரும்பவில்லை. என் கணவருக்கு நான் ஒருத்தி மட்டுமே மனைவியாக இருக்கவேண்டும். இதுதான் எங்களுக்கு வழக்கம். இந்தப் பழைய முறையை நான் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.
நான் இப்படிச் சொன்னதைக் கேட்டதும் அம்மா குழம்பிப் போனார். இத்தனைக்கும் அவர் எந்த ஒரு ஆணுக்கும் மனைவியாக இருந்திருக்கவே இல்லை. கண்ணைச் சிமிட்டியபடியே, ‘செக்ஸில் அதிக ஈடுபாடு கிடையாது; சுய இன்பமே மிகவும் பிடிக்கும் என்றார்.
ஒரு பெண்ணுக்கும் அவளுடைய தோழிகளுக்கும் இடையே திருமணம் ஒரு பிரச்னையாக வரும் அளவுக்கு நாமெல்லாம் ரொம்ப ‘நல்லவர்களாக’ இருக்கிறோமே என்று சொன்னார்: ‘ஒரு ஆணுக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்களோ அவ்வளவு அவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும். குழந்தைகளைப் போட்டுக் குளிப்பாட்ட அத்தனை கூடுதல் கால்கள் கிடைக்கும். கூடுதல் மக்காச்சோளம் விதைத்து அறுவடை செய்யமுடியும். நாலைந்து பெண்கள் சேர்ந்து ஒரு ஆணுடன் வாழ்ந்தால் அவ்வளவு நல்ல வாழ்க்கை அமையும்’.
ஆனால், எனக்கு அவர் சொன்னது புரிந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ‘நான் ஒருத்தி மட்டுமே அவருடைய மனைவியாக இருப்பேன். அல்லது எனக்குத் திருமணமே வேண்டாம்’.
‘இதோ பார் பெண்ணே… நீ என் மீது பாசமாக இருக்கிறாயா?’
‘ஆமாம். அம்மா… என் முழு மனதுடன் உங்கள் மீது அன்புடன் இருக்கிறேன்’.
‘உன்னுடைய காதலன் நம் இருவரையும் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், உனக்கு என் மீதான அன்பு குறைந்துவிடுமா என்ன?’
நான் தலையைக் குனிந்துகொண்டு அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தேன். ஒருவேளை நான் அதே அளவு அன்புடன் இருப்பேன் என்று சொன்னால் என் காதலனிடம் அவளையும் திருமணம் செய்துகொள்ளச் சொல்லிக் கேட்டுக்கொண்டாலும் கேட்டுக்கொண்டுவிடுவாள். நான் அவரை மிக மிகத் தீவிரமாக காதலிக்கிறேன். எனவே வேறு எந்தப் பெண்ணுக்கும் அவரைப் பங்கிட்டுக் கொடுக்கமாட்டேன். அதற்கு யாருக்கும் துளி வாய்ப்புகூடத் தரமாட்டேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
என் அம்மா செல்லமாக என் பின் பக்கம் தட்டியபடியே, ‘செல்ல மகளே… இந்த பொறாமைதான் எவ்வளவு மோசமானது. ஒரு மகளைத் தன் அம்மாவுக்கு எதிராகவே திருப்பிவிடுகிறது!’
நான் மேலும் அவமானத்தில் வருந்தக்கூடாதென்று நினைத்து அம்மா சொன்னார்: ‘எனக்கு ரொம்ப வயதாகிவிட்டது. இன்னொரு திருமணம் பற்றியெல்லாம் நினைக்கவே இல்லை. அதோடு அந்த இளைஞன் உன் மீது மிகுந்த காதல் கொண்டிருக்கிறான். உன்னுடைய ஆங்கிலேய வழிமுறையில் நீ சொல்லும் அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு உன்னைத் திருமணம் செய்து கொள்வான். கவலைப்படாதே’ என்று ஆறுதல் சொன்னாள்.
செவ்விந்திய ஆண்கள் தமது மனைவிகளை மிகவும் நேசிப்பார்கள். எத்தனை பேர் என்றாலும் அவர்கள் அனைவரையும் சுதந்தரமாக நடந்துகொள்ளவும் அனுமதிப்பார்கள். என்னுடைய இரண்டு கைகளைக் கொண்டு மட்டுமே தன் நிலத்தை உழுதுகொள்ள விரும்பினால் அதற்கும் அனுமதி கொடுப்பார். குறுக்கிட்டு எதுவும் பேசமாட்டார்.
அடுத்த மக்காச்சோளம் பயிரிடும் காலத்தில் எங்களுக்குத் திருமணம் நடந்தது. ஆட்டம், பாட்டு என்று மிகவும் உற்சாகமாக விதை நடும் விழா நடக்கும். பெண்களாகிய நாங்கள்தான் குறுக்கு ஒடிய விதைப்போம்; ஆண்கள் ஆடிப்பாடுவார்கள். நான் இந்த கிராமத்துக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அடுத்த குளிர் காலம் கழிந்து வசந்த காலம் வந்தபோது குட்டி வீரனை ஈன்றெடுக்கத் தயாராகியிருந்தேன். நான் வெய்யிலில் வேர்த்து விறுவிறுத்து நிலத்தில் பாடுபட்டுக்கொண்டிருந்தபோது என் கணவர் அவர் பாட்டுக்கு இருந்ததைப் பார்த்தபோது பேசாமல் இங்கிலந்துக்குத் திரும்பிவிடலாம் என்று தோன்றியது உண்மையே.
இதனிடையில், அந்த கிராமத்தின் தளபதி அங்கிருந்த நாலைந்து குலங்களும் தமது வேறுபாடுகளையெல்லாம் மறந்துவிடவேண்டும்; செவ்விந்திய குலங்கள் எல்லாம் ஒன்று கூடி ஆங்கிலேயர்களை அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத்துக்கே திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று சொன்னார். வேறு சிலரோ தமது செவ்விந்தியப் பகைக் குலங்களை அழிப்பதற்கு ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய துப்பாக்கிகள் வாங்கிக் கொள்ளவேண்டும் என்றனர்.
பெண்களுக்கு இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு பெற அனுமதி இல்லை. எனவே தமது கணவர்களிடம் தாம் சொல்ல விரும்புபவற்றைச் சொல்லி அனுப்புவார்கள். நானும் என் கணவர் மூலம் சொல்லி அனுப்பினேன். அமெரிக்கா முழுவதும் உள்ள அத்தனை செவ்விந்திய குலங்கள் ஒன்று சேர்ந்தால்தான் ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க முடியும். நாலைந்து குலங்கள் மட்டும் சேர்ந்தால் போதாது. அதோடு விரட்டியடிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் தமது நாட்டுக்குச் சென்று இரு மடங்கு படைகளுடன் திரும்பிவருவார்கள். இங்கே தமது குடியிருப்பை அமைக்க அவர்கள் வெறியுடன் இருக்கிறார்கள். எனவே செவ்விந்திய குலங்கள் அனைத்தையும் சேர்த்து மிக பிரமாண்டமான படையை உருவாக்கவேண்டும். ஆங்கிலேயர்கள் சொல்லும் எதையும் நம்பவே கூடாது. ஏனென்றால் வாய்ப்பு கிடைத்தால் அனைத்து ஆங்கிலேயரும் திருடர்களே. நானே அதற்கான வாழும் உதாரணம். திருட எதுவும் இல்லை என்ற நிலைவந்தபோதே திருட்டைவிட்டிருக்கிறேன்.
நான் சொல்லி அனுப்பியதை யாரும் பொருட்படுத்தவில்லை.
(தொடரும்)
Our Lady of Massacre by Angela Carter