Skip to content
Home » உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 3

உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 3

Angela Carter

ஆங்கிலேயருடன் போரை ஆரம்பிப்பதென்றால் செவ்விந்தியப் பழங்குடி குலங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய படையை உருவாக்கிக் கொண்டு போரிடவேண்டும் என்று என் கணவர் மூலம் சொல்லியனுப்பினேன். யாரும் கேட்கவில்லை. போரை எப்படி நடத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் குழப்பத்தில் இருந்தனர். ஆன்னேஸ்டவுனில் இரவில் அம்புகளை வாயில் கவ்விக் கொண்டு, நான்கு பக்கமும் கரடிகளைப் போல் சுற்றி வளைத்துத் தாககவேண்டுமா..? ஆங்கிலேயர்கள் வேட்டையாடும்போது ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தாக்கவேண்டுமா… அல்லது நேருக்கு நேராக படையெடுத்துச் சென்று தாக்கவேண்டுமா என்பதில் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழம்பிப் போயிருந்தனர்.

அவர்கள் இப்படி எதிர்க்க முடிவெடுத்ததை நான் மிகவும் நியாயமான, கண்ணியமான செயலாகவே பார்த்தேன். ஆனால், சிங்கத்தின் வாயில் சென்று தலையைக் கொடுப்பது போன்ற ஒரு செயல் என்றும் என மனதில் வருத்தத்தைத் தந்தது. சில பழங்குடியினர் ஆங்கிலேயர்களைத் தமது நண்பர்கள் என்றே இப்போதும் கருதினர். ஏனென்றால் ஆங்கிலேயர்கள் எல்லாம் அவர்களுடைய எதிரிகளின் எதிரிகள். எனவே நமது நண்பர்கள் என்று சொன்னார்கள். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. முடிவில் எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. நான் கர்ப்பமாக இருந்தேன். அமைதியான வாழ்க்கையையே விரும்பினேன்.

ஒரு நாள், நான் பீன்ஸ் தோட்டத்தில் கூர்மையான குச்சியால் நிலத்தைக் கிளறிக் கொண்டிருந்தேன். பனிக்குடம் உடைந்தது தெரிந்ததும் அம்மவைத் தேடி ஓடினேன். ஒரு மணி நேரம் கழித்து என்று நினைக்கிறேன். ஏனென்றால் அங்கு கடிகாரம் எதுவும் இல்லை. ஒரு மணி நேரம் கழித்து என் பச்சிளம் குழந்தையை என் அம்மா ரத்தக்கறை போகக் கழுவிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

என் குழந்தைக்கு செவ்விந்தியப் பெயர் சூட்டினார்கள். அதற்கு ’பூமிக்கு வந்த குட்டி நட்சத்திரம்’ என்று அர்த்தம். இதைக் கேட்டு உங்களுக்கு சிரிப்பு வரலாம். மிக உன்னதமானவர்களுக்கே இந்தப் பெயர் சூட்டப்படும். குழந்தையை ஒரு தோலாடையில் பொதிந்தனர். என் முதுகில் இருந்த பிர்ச் மரப்பட்டையாலான கூட்டில் சுமந்து எல்லா இடத்துக்கும் கொண்டுசென்றேன். எனக்கு என் குழந்தையைப் பார்த்ததும் பிற பெண்களைப் போலவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

என்னுடைய லங்காஷைர் மூதாட்டி என்னைப் பற்றிச் சொன்ன ஜோசியம் இதோடு முடிவுக்கு வந்தது. ஏனென்றால் இந்தக் குழந்தையின் தந்தை ஷேம், ஹம், அல்லது ஜபெட் குலத்தில் இருந்து வந்தவர் அல்ல; குழந்தையின் தாய் விர்ஜின் மேரி போல் இலையென்றாலும் மேரி மக்தலேனா போலவோ மனம் திருந்திய வேசி போலவோதான் இருக்கிறாள். எனினும் என்னுடன் முரண்படும் பாதிரியார் என்னை அது பற்றிப் பேச விடமாட்டார். ஆனால், இந்தச் சிறுவனின் கிரீடம் தங்கத்தாலானதாக இருந்திருக்கவில்லை. கண்ணீரால் ஆனதாகிவிட்டது.

செவ்விந்தியப் படைகள் தமக்குள் ஒற்றுமை இழந்து பிரிய ஆரம்பித்தன. ஆங்கிலேயர்கள் தென் பகுதி கிராமங்களில் புகுந்து தாக்க ஆரம்பித்தனர். நாளாக நாளாக இந்தத் தாக்குதல்கள் மூர்க்கமடைய ஆரம்பித்தன. எங்களில் வீரம் நிறைந்தவர்கள் சிறிது காலம் எதிர்த்து தாக்குப் பிடித்தனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த தளபதிகள் கலந்தாலோசித்தனர். கிராமங்களில் தங்கியிருந்து தற்காத்துக்கொள்ளவேண்டுமா பின்வாங்கிச் செல்லவேண்டுமா என்று ஆலோசனை நடத்தினர். பின் வாங்குதல் என்றால் அங்கிருந்து புறப்படுதல்; அறுவடை முடிந்ததும் எங்களுடைய வயல் வெளியை விட்டுவிட்டு மேற்குப் பக்கம் புதிய புல் வெளிகளை நோக்கித் தப்பி ஓடுதல்.

ஆனால், அதை அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் மேற்குப் பக்கம் ரேச்சாக்ரைன்ஸ் என்று வேறொரு செவ்விந்திய குலத்தினர் இருந்தனர். அவர்களைக் கடந்து செல்வது சாத்தியமில்லை. எனவே ஆங்கிலேயப் படைகளைத் துணிந்து எதிர்க்க முடிவு செய்தனர். என் கணவர் உயிருடன் திரும்ப மாட்டார் என்று எனக்குள் பயம் உருவானது.

கறுப்பு மற்றும் சிவப்பு மையை எடுத்துத் தன் முகத்தில் பூசிக்கொண்டார். குழந்தை அதை பார்த்து பயத்தில் அழுதது. புறப்பட்டுச் சென்றவர்கள் மாலையில் திரும்பிவந்தனர். அவர்களுடைய கோடரிகளில் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. மஞ்சள் நிற முடிக் கற்றையை ஒரு கம்பில் கட்டி வீட்டுக் கூரை மேல் நிறுத்தி வைத்தனர். தாமிர கெட்டில்கள், துப்பாக்கிகுண்டுகள், வெடி மருந்து அப்பறம் கடவுளே… ரம்மும் கொள்ளையடித்துக் கொண்டுவந்தனர்.

வெள்ளைக் குடுமிகளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் கேசத்தின் நிறமும் அதுதான். பாதிரியார் சொல்கிறார்: நான் நல்ல பெண் தான் என்றும் செவ்விந்தியர் மத்தியில் நான் செய்த பாவங்களைக் கடவுள் மன்னிப்பார் என்றும் சொல்கிறார்.

வெடி மருந்துகளைப் பொறுத்தவரையில் என் கணவர் நெடுமரத்தான் என்ன சொன்னாரென்றால், சில வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் அதை அவர்களுடைய தளபதியிடம் கொடுத்துவிட்டு, அதை மக்காச்சோளம் போல மண்ணில் புதைத்து வைக்கவேண்டும்; தோட்டாக்கள் அதில் இருந்து கொத்துக் கொத்தாக முளைக்கும் என்று ரகசியமாகக் காதில் சொன்னார்களாம். சின்னக் குழந்தைகளைப் போல் அவர்கள் ஏமாற்றப்பட்டது குறித்து மிகவும் வருந்தினார்கள். செவ்விந்தியர்கள் மட்டும் சோளம் விதைக்கக் கற்றுக் கொடுத்திருக்காவிட்டால் ஆங்கிலேயர்கள் பசியில் செத்தே போயிருப்பார்கள்.

செவ்விந்தியர்கள் பிடித்து வந்த ஆங்கிலேயரை வெடி மருந்து பீப்பாயில் கட்டி வைத்தனர். வசைபாடினர். தீப்பந்தத்தை அணைத்துவிட்டு அவனை அங்கேயே கிராமத்தின் நடுவில் விட்டுச் சென்றனர். மது அருந்தியபடி ஆடிப்பாடினர். அவர்கள் மது அருந்தினால் பிசாசுகளைப் போல் ஆகிவிடுகிறார்கள்.

என் கணவர் என் அருகில் வந்தார். அவர் மது அருந்தியிருந்தாலும் நிதானம் இழக்கவில்லை. அதிகம் அருந்தினால் நான் திட்டுவேன் என்ற பயம். உன்னுடைய மொழியில் இவனுடன் பேசிப் பார். இவர்களுடன் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் இவர்களுக்கு நினைவிருக்கிறதா? எங்களைப் பகைக் குலத்தின் கைகளில் விரட்டப் பார்க்கிறர்களா? அது நமக்குப் பெரிய நெருக்கடியாகிவிடும். ஒரு பக்கம் ஆங்கிலேயர்; மறு பக்கம் பகைக் குலம் என இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டுவிடுவோம். கேட்டுச் சொல் என்றார்.

முதலில் நான் அதைக் கேட்கவேண்டாம் என்று நினைத்தேன். எனக்கு அந்த ஆங்கிலேயரைப் பார்த்ததும் பரிதாபமாகத்தான் இருந்தது. செவ்விந்தியர்கள் தாம் சிறைப்பிடிப்பவர்களை மிகவும் கொடூரமாக நடத்துவார்கள். கொடூரத்தை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். மது வேறு அருந்தியிருக்கிறார்கள். அதே நேரம் என்னையும் என்னுடன் இருந்த குற்றவாளிகளையும் சங்கிலியால் கட்டி கப்பலில் ஏற்றியபோது இந்த ஆங்கிலேயன் குதிரை மேலே உட்கார்ந்துகொண்டு சவாரி செய்ததைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. என் மனதில் தோன்றிய ஈரம் முழுவதும் ஆவியானது.

நான் ஆங்கிலத்தில் பேசியதைக் கேட்டதும் அவன் ஸ்தோத்திரம் ஆண்டவரே என்று உரக்க அழுதபடியே விளித்தான். கர்த்தரின் நாமத்தினால் இங்கிலாந்து அரசரின் நாமத்தினால் கேட்கிறேன். இந்த செவ்விந்தியர்களைப் பிடித்து வெள்ளையர்களிடம் கொடுத்துவிடு. உனக்கு மன்னிப்பு வாங்கித் தருகிறேன் என்றான். நான் என் குழந்தையை அவனிடம் காட்டினேன். உடனே அத்தனை கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டான். புறச் சாதியில் சென்று சோரம் போன வேசியே என்று வைதான். எனக்குக் கோபம் வந்தது. கூர்மையான கம்பைஎடுத்து அவன் வயிற்றில் செருகினேன். வலியில் கூக்குரலிட்டான். அவனுடைய படையினர் பற்றி எதுவும் சொல்லவில்லை. எங்கிருக்கிறார்கள் என்றும் சொல்லவில்லை. இந்த சபிக்கப்பட்ட செவ்விந்தியர் இங்கிருந்து விரட்டப்படுவார்கள் என்று மட்டும் சொன்னான்.

செவ்விந்தியர்கள் அவனை பீப்பாயில் இருந்து அவிழ்த்தனர். வெடி மருந்தை வீணடிக்க விரும்பவில்லை. கம்பில் கட்டி நெருப்பைப் பற்றவைத்தனர். சீக்கிரமே கருகிச் செத்துப் போனான்.

அவனுடைய சட்டைப் பைகளைத் துழாவியபோது நிறைய நாணயங்கள் இருந்ததைப் பார்த்தேன். சிறுவர்களிடம் அதை எடுத்துக் கொடுத்தபோது ஆற்றின் நீர் மட்டத்தின் மேலே அதை தவளைப் பாய்ச்சல் செய்ய வைத்து விளையாடினர். அந்த ஆங்கிலேயன் அணிந்திருந்த தங்க கடிகாரத்தை என் கணவரிடம் கொடுத்தேன், இங்கிலாந்தில் இருந்த போது நகர சபை உறுப்பினரிடமிருந்து திருடிய கடிகாரத்தின் நினைவாக.

இது என்ன என்று கேட்டார் மிகவும் அப்பாவியாக. அப்போது பார்த்து கடிகாரம்12 முறை ஒலித்தது. பயத்தில் அதைக் கீழே போட்டுவிட்டார். உடைந்துவிட்டது. கடிகாரத்தின் சிறிய சக்கரங்கள், ஸ்பிரிங்குகள் எல்லாம் தரையில் சிதறின. என் பரிதாபத்துக்குரிய கணவர் மூட நம்பிக்கை மிகுந்தவர். எனினும் இந்த உலகிலேயே மிகவும் சிறந்தவர். நடு நடுங்கியபடியே இந்த கடிகாரம் மோசமான மருந்து. காய்ச்சலைக் கொண்டுவந்துவிட்டது என்று பதறினார்.

பிறருடன் சேர்ந்து மது அருந்தச் சென்றார். இறந்த ஆங்கிலேயரின் பாக்கெட்டில் இருந்து கிடைத்த காகிதங்களைப் படித்துப் பார்த்தேன். நாங்கள் கொன்றவர் விர்ஜினியாவின் கவர்னர் என்பது தெரியவந்தது. என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதை நினைத்து பயந்து இவர்களிடம் உடனே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மது போதை அனைவரையும் மயக்கியிருந்தது. அப்படியே படுத்துத் தூங்கிவிட்டனர். ஆனால் மறு நாள் காலையில் சூரியன் உதித்த உடனேயே ஆங்கிலேயப் படைவீரர்கள் குதிரையில் ஏறி வந்துவிட்டனர்.

அறுவடைக்குத் தயாராக இருந்த மக்காச் சோள வயல்களுக்குத் தீ வைத்தனர். வேலிகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்தனர். கொள்ளையடித்து வந்த வெடி மருந்துக்கும் தீ வைத்ததைத் தொடர்ந்து ஒட்டு மொத்த கிராமமும் எரிந்து சாம்பலானது. இந்த பேரழிவை புதர் மறைவில் இருந்து பார்த்தேன். என் கணவரின் தலையில் துப்பாக்கி குண்டு துளைக்கச் செய்தனர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் துவண்டு சரிந்தார். வெளியில் தீ வைக்கப்பட்ட சத்தம் கேட்டதும் முதலில் அவரை எழுப்பிக் கொண்டு தப்பிக்க முயன்றேன். மது போதை தெளியாமல் இருந்ததால் அவரை இழுத்துக் கொண்டு ஓடவும் முடியவில்லை. போதையில் இருந்த கிராமத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர். என் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடினேன். பாதி எரிந்து அடங்கியிருந்த வயலில் உயரமான மேடையில் இருந்த சோளக் கொல்லை பொம்மையின் பின்னால் சென்று மறைந்துகொண்டு தப்பித்தேன்.

ஆனால், தலை முடி பற்றி எரிய ஆற்றின் கரையை நோக்கி தப்பி ஓடிய என் அம்மாவைப் படைவீரர்கள் பிடித்துவிட்டனர். நான் குழந்தையுடன் தப்பித்து ஓடுவதைப் பார்த்து, ’பாசமற்ற பாவியே’ என்று கூச்சலிட்டார். ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ள நான் சென்றதாக நினைத்தார். அதற்கு வாய்ப்பே இல்லை. சிறைப்பிடித்தவர்கள் என் அம்மாவை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன் பின் கழுத்தை அறுத்துக் கொன்றனர். எல்லாம் முடிந்துவிட்டது. எங்கும் சாம்பல், பிணங்கள், குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்மார்களின் ஓலங்கள், படைவீரர்கள் தமது கவர்னரைக் கொன்றதற்குப் பழி வாங்கிய திருப்தியில் இருந்தனர்.

என் குழந்தை அந்த நேரம் பார்த்து வீறிட்டு அழுதது. அதைக் கேட்டுவிட்ட காட்டுமிராண்டி ஆங்கிலேயன் ஒருவன் எரிந்த சோளக்கருதுகளை விலக்கியபடி வந்தான். சொளக் கொல்லை பொம்மையைக் கீழே தள்ளினான். என் கைகளில் இருந்த குழந்தை தடுமாறி கீழே இருந்த பாறையில் தலை மோதும்படியாகக் கீழே விழுந்தது வலி தாங்காமல் வீறிட்டு அழுதது. கல் நெஞ்சம் கொண்டவருக்குக் கூட அதைக் கேட்டால் மனக் கசிந்திருக்கும். ஆனால் இந்த படைவீரன் கீழே விழுந்துகிடந்த என் வயிற்றில் முழங்காலை ஊன்றி அழுத்தியபடி என்னைக் கற்பழிக்கும் நோக்கில் தன் பேண்டைக் கழற்ற ஆரம்பித்தான். அப்போது சட்டென்று என் கண்களைப் பார்த்தவன் அதிர்ச்சியில் துள்ளி எழுந்தபடியே, ’கேப்டன். இங்க அபாருங்க. நீலக் கண்ணுள்ள பெண். இதற்கு முன் இப்படி ஒருத்தியை இங்கு பார்த்ததே இல்லை’.

என் தலை முடியைக் கொத்தாகப் பிடித்தவன் கேப்டனும் பிற வீரர்களும் இருந்த இடத்துக்கு இழுத்துச் சென்றான். கேப்டன் குளிர்ந்த நீரில் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தான். அவனுடைய ஆட்கள் அங்கு கிடைத்த வெற்றிப் பரிசுகளைக் கைகளில் ஏந்திக் கொண்டுநின்றனர். என் பெயர் என்ன… எனக்கு ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டான். நான் பதில் சொல்வதற்குள் டச்சு தெரியுமா.. ஃப்ரெஞ்சு தெரியுமா… ஸ்பானிஷ் தெரியுமா என்று அடுக்கிக் கொண்டே சென்றான்.

நான் செவ்விந்திய மொழியில், நெடுமரத்தானின் விதவை என்று சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை.

அவர்களுக்கு நான் செவ்விந்தியப் பெண் இல்லை என்பது புரிந்துவிட்டிருந்தது. என்னைப் பேச வைக்க ஒரு தந்திரம் செய்தனர். வயலில் அழுதுகொண்டிருந்த என் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்த ஒரு படைவீரன் கத்தியை எடுத்து என் குழந்தையின் உடம்பில் செருகப் போவதுபோல் கொண்டு சென்றான்.

’கர்த்தரின் பெயரால் இதை நிறுத்துங்கள்’ என்று கத்தினேன். என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்காவிட்டால் அவன் கண்களை என் கைகளாலே தோண்டி எடுத்திருப்பேன். கேப்டன் என் கைகளில் போடப்பட்டிருந்த சூட்டுக் கோல் முத்திரையைப் பார்த்தான். நான் தப்பி ஓடிய குற்றவாளி என்பது தெரிந்ததும் என்னைச் சீண்டினான்: ’ஆன்னேஸ்டவுனுக்குப் போனதும் உன் கன்னத்தில் இன்னொரு சூட்டுக் கோல் முத்திரை குத்துவேன். அப்போதுதான் நீ செவ்விந்தியர்கள் மத்தியில் மட்டுமல்ல; யாருடனும் வேசைத்தனம் செய்ய முடியாது’ என்று எகத்தாளம் செய்தான். அவனிடம் நான் கெஞ்சிக் கேட்டதெல்லாம் ஒரு கைக்குட்டைதான். என் குழந்தையின் நெற்றியில் இருந்து வழிந்து கொண்டிருந்த ரத்தத்தைத் துடைக்க வேண்டும் என்று கேட்டேன். கொடுத்துவிட்டான்.

குழந்தை என்னிடம் தரப்பட்டதும் ரத்தத்தைத் துடைத்தேன். குழந்தைமிகவும் பசியில் இருந்தது. பாலூட்டினேன். படை வீரர்களுடன் சென்றேன். அம்மாவும் கணவரும் இறந்துவிட்டனர். எனக்கு வேறு வழியில்லை. மனமுடைந்து போயிருந்தேன். எஞ்சிய செவ்வியப் பெண்கள் படைவீரர்கள் பின்னால் வரிசையாக வந்தனர். அவர்களை நான் சகோதரி என்று அழைப்பது வழக்கம். படைவீரர்களுக்குப் பெண்க: தேவை. பெண்களுக்கு உணவு தேவை. புதிய உலகில் இப்போது வீரமுள்ள ஒருவரும் உயிருடன் இல்லை. இப்போது அதை பூர்வ குடிகள் அழிக்கப்பட்ட நந்தவனம் என்று அழைக்கலாம். இந்த பூலோக சொர்க்கத்தை வாழ்வித்த நதியில் இப்போது ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

செவ்விந்தியர்கள் என்னை சபித்தனர். அவர்கள் மீது நான் பேரழிவைக் கொண்டுவந்திருக்கிறேன். அவர்கள் என் மீது கட்டிய அன்புக்கு பதிலாக நான் அவர்களுக்கு அழிவைப் பரிசாகத் தந்திருக்கிறேன் என்று சபித்தனர். என் பயமெல்லாம் காதுகள் அறுக்கப்பட்ட கங்காணி பற்றியதாகவே இருந்தது. நீதியின் பீடத்துக்கு நான் கொண்டு செல்லப்படும்போது எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.

ஒரு சில வீடுகளே கட்டப்பட்ட பகுதிக்குச் சென்று சேர்ந்தோம். அங்கு ஒரு சர்ச் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. சாத்தானிடமிருந்து பிடுங்கப்பட்ட மிச்சம் என்று சொல்லி பாதிரியிடம் அறிமுகப்படுத்தினான் ஒரு படை வீரன். அவன் தான் என் கணவரை நெற்றியில் சுட்டுக் கொன்றவன். ’செவ்விந்தியக் காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பற்றப்பட்டதற்கு நான் கர்த்தருக்கு நன்றி சொல்லவேண்டும்; அவருடைய வழியில் இருந்து விலகிச் சென்றதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்று பாதிரியார் சொன்னார். அவர் சொன்னதைப்புரிந்துகொண்டு மண்டியிட்டு நின்றேன். இந்தப் பிராந்தியங்களில் இப்படிப் பாவ மன்னிப்பு கேட்பது எனக்கு மிகவும் நன்மையைத் தரும் என்பது புரிந்தது.

என் பெயர் என்ன என்று கேட்டார். லங்காஷைர் மூதாட்டி எனக்கு மேரி என்று பெயர் சூட்டியிருந்தார். அதையே சொன்னேன். அவருடைய ஆவி போலவே நான் வாழத் தீர்மானித்தேன். அந்த மூதாட்டி சொன்ன ஜோசியங்கள் பல பலித்துவிட்டன. ஒரே ஒன்று நீங்கலாக. நான் எங்கள் செவ்விந்தியர்களின் பேரழிவின் தேவதை ஆகிவிட்டேன். என் கலப்பினக் குழந்தை காயினின் அடையாளத்தைத் தாங்கியபடி இருப்பான். இடது கண் அருகில் பட்ட காயத்தின் தழும்பு ஆறவே இல்லை.

பாதிரியாரின் மனைவி சமையலறையில் இருந்து வந்தார். பழைய கவுன் ஒன்றைக் கொடுத்துவிட்டு, என் மார்பகங்களை மறைத்துக்கொள்ளச் சொன்னார். அதைப் பார்த்ததும் என் குழந்தை கதறி அழுதது. அதை சமாதானப்படுத்தவே முடியவில்லை. பாதிரியாரும் அவருடைய மனைவியும் நல்லவர்களாகத் தெரிந்தார்கள். படை வீரர்கள் என்னை அவர்களுடன் ஆன்னேஸ்டவுனுக்குக் கொண்டு செல்வதைத் தடுத்தனர். கேப்டனுக்கு கணிசமான பணம் கொடுத்து என்னை அவர்களுடன் விட்டுச் செல்லச் சொன்னார்கள். என் பச்சிளம் குழந்தையின் மீதான பாசத்தினால் அப்படிச் சொன்னார்கள். கேப்டன் தயங்கியபடியே நின்றார். பாதிரியார் இன்னொரு தங்க நாணயத்தை எடுத்துக் கொடுத்தார். அந்த நல்ல மாவீரர் தங்கக் காசை வாங்கிக்கொண்டு தன் படையுடன் புறப்பட்டுச் சென்றார்.

பூமிக்கு வந்த குட்டி நட்சத்திரம் என்று என் குழந்தைக்கு நான் செவ்விந்திய மொழியில் வைத்திருந்த பெயர் பாதிரியாருக்குப் பிடிக்கவில்லை. ஐஸக், இஸ்மைல் அல்லது அதுபோன்ற ஏதேனும் பெயரைச் சூட்ட முடிவு செய்தார். அவனுக்கு ஏற்கெனவே அழகான பெயர் இருக்கிறதே என்றுசொன்னேன். இது கிறிஸ்தவப் பெயரே இல்லை என்று சொன்னார். கிறிஸ்தவத்துக்கு மாற்றப்படும் என் குழந்தை நியாயத் தீர்ப்பு நாளில் ஆசிர்வதிக்கப்பட்டவர்களின் குழுவில் இடம் பிடிக்கும்போது அவனுடைய தந்தையை அவனால் ஒருபோதும் பார்க்கவே முடியாது என்பது புரிந்தது. எப்போது அந்த பிரேதங்கள் கல்லறைகளில் இருந்து எழுப்பப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும். அதுவும் தெரியாது.

என்னைப் பொறுத்தவரையில் என் குழந்தையை பாதிரியார் வைக்கும் கிறிஸ்தவப் பெயரைச் சொல்லி அழைக்கமாட்டேன் என்று முடிவு செய்தேன். அதோடு அவனுடன் தனியாக இருக்கும் நேரங்களில் செவ்விந்திய மொழியில் மட்டுமே பேசுவது என்றும் முடிவுசெய்தேன்.

சிறிது காலம் கழித்து என்னைப் பற்றிய கதை என்னிடமே சொல்லப்பட்டது. செவ்விந்தியர்கள் வடக்குப் பக்கத்தில் இருந்து வந்து கங்காணியைக் கொன்றுவிட்டு அடிமையாக இருந்த வெள்ளை வேலைக்காரப் பெண்ணைக் கடத்திச் சென்றுவிட்டார்களாம். அந்த வெள்ளையினப் பெண்ணின் மஞ்சள் முடியைப் பற்றி இழுத்துச் செல்வதை தோட்டக்காரர் பார்த்தாராம். இந்தக் கதையில் தோட்டக்காரர் தன் பங்குக்கு என்ன சேர்த்திருப்பார் என்பதும் தெரியும். அவருக்கு நல்லது நடக்கட்டும். என்னைச் செவ்விந்தியர்கள் கடத்திச் சென்றதாகத்தான் கதை கட்ட விரும்பினால் சொல்லிக்கொள்ளட்டும். அது அவர்களுக்கு மகிழ்ச்சியத் தருமென்றால் அப்படியே செய்து கொள்ளட்டும். என்னைத் தொந்தரவு செய்யாமல் விட்டால் போதும்.

இந்தப் பாதிரியார் என் ஆன்மாவை ரட்சித்தே தீரவேண்டும் என்று தவிக்கிறார். அவருடைய மனைவிக்கும் என் குழந்தை மேல் அவ்வளவு பாசம். அவர்களுக்கு குழந்தை இல்லை. எங்களை இங்கு காப்பாற்றி வைத்துக் கொள்ள நிறையவே பணம் கொடுக்கவும் செய்திருக்கிறார்கள். நான் என் வாழ்வாதாரத்துக்கு தண்ணீர் சுமந்து வந்து கொடுக்கிறேன். மரம் வெட்டிக் கொடுக்கிறேன். வீடு பெருக்குகிறேன். சமைக்கிறேன். துணி துவைத்துக் கொடுக்கிறேன். புதிய உலகில், கடவுளின் நகரம் ஒன்றை நிர்மாணிக்கும் நோக்கில் இந்தப் பாதிரியார் இங்கு வந்திருக்கிறார். லங்காஷைரில் இருந்த அதே வேலைக்காரியாகவே இப்போதும் இருக்கிறேன். என்னுடைய இன்னொரு பழைய தொழிலைச் செய்ய வேண்டும் என்று நான் நினைத்தாலும் புனிதர்களின் சமூகத்தில் வேசிகளுக்கு இடம் இல்லை. இடமிருந்தாலும் அதை நான் செய்ய முடியாது. செய்ய மாட்டேன். செவ்விந்தியர்கள் என்னை நல்ல பெண்ணாக என்றென்றைக்குமாக மாற்றிவிட்டனர்.

ஒரு நாள் பாதிரியின் மனைவி வந்து சொன்னார்: மேரி பெண்ணே… அந்த ஜபேஸ் மாதர் உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். அவருடைய மனைவி வயிற்றுப் போக்கினால் இறந்துவிட்டாள். உன் குழந்தையை அவர் எடுத்துக்கொள்ளமாட்டார். நாங்களே வளர்த்து வருகிறோம் என்று சொன்னார்.

எனக்குத் தெரியும் பாதிரியின் மனைவியினால் என் குழந்தையை ஒரு நாளும் தன் குழந்தையாக நினைக்க முடியாது. அதுபோல் ஜபேஸ் மாதரை என்னால் கணவராக ஒருபோதும் ஏற்கவும் முடியாது. எந்தவொரு மனிதரையுமே என்னால் கணவராக ஏற்றுக் கொள்ளமுடியாது. நான் பாபிலோன் நதிக்கரைகளில் அமர்ந்து எனக்கு வாக்களிக்கப்பட்ட பூமியின் கனவுகளிலும் கை நழுவிய சொர்க்கத்தின் நினைவுகளிலும் அழுத வண்ணமே என் காலத்தைக் கழிப்பேன்.

பேரழிவின் தேவதைக்குப் பெருந்துயரம் தானே விதிக்கப்பட்டிருக்கும்.

0

Our Lady of Massacre by  Angela Carter

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *