அஸ்லாமு அலைக்கும்.
என் பெயர் மிர்குல் துர்சுன். சீன கம்யூனிஸ வதைமுகாமில் எனக்கு நேர்ந்தவற்றை, எனக்குத் தெரிந்த அளவுக்கு உடைந்த ஆங்கிலத்தில் சொல்கிறேன். எனக்கு ஆங்கிலப் புலமை கிடையாது. முடிந்த அளவுக்கு விவரிக்கிறேன். அல்லா எனக்கு உயிர் வாழ இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவருக்கு என் வணக்கங்கள். எனக்கு ஆதரவாக இருக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்கும் நன்றிகள்.
நான் உய்குர் பூர்வ நிலமான கிழக்கு துர்கிஸ்தானில் பிறந்தேன். பத்து வயது வரை உய்குர் மொழியில் படித்தேன். எனக்குப் பத்து வயது ஆனபோது, சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் என்னை சீனாவில் இருந்த க்வாஞ்சு நகருக்குக் கொண்டுசென்றனர். அது என் சொந்த ஊரில் இருந்து 2700 மைல் தொலைவில் இருக்கிறது. சீன மாணவர்களுடன் உயர் நிலைப் பள்ளிவரை சீன மொழி, சீன வரலாறு படிக்கச் சொன்னார்கள். சுமார் பத்து ஆண்டுகள் என் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு சீனாவில் வாழ்ந்தேன். 20 வயது ஆன பின் உயர் படிப்புக்காக சீனாவுக்கு வெளியே சென்று படிக்க விண்ணப்பித்தேன். எகிப்தில் கெய்ரோ பல்கலையில் படிக்க விரும்பினேன். அங்கு அரபு மொழி கற்றுக்கொண்டேன். நான்கு ஆண்டுகள் வணிகவியல் படிப்பு படித்து முடித்தேன்.
எகிப்தில் இருந்தபோது எனக்குத் திருமணம் நடந்தது. என் கணவர் ஒரு எகிப்திய இஸ்லாமியர். எனக்கு மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தன. இரண்டு ஆண் குழந்தைகள்; ஒருபெண் குழந்தை. குழந்தை பிறந்து இரண்டு மாதத்தில் என் பெற்றோரைப் பார்க்க உய்குருக்குச் செல்ல விரும்பினேன். குழந்தைகள் பிறந்ததும் இஸ்லாமிய வழக்கப்படி சில விருந்து, விழாக்கள் செய்வது உண்டு. என்னுடைய எகிப்திய பாஸ்போர்ட், சீன பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் சீனா வந்து சேர்ந்தேன். என் கணவரும் சீனாவுக்கு வர அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு சீன அரசு அனுமதி தரவில்லை. ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என் கணவர் பின்னால் வந்துகொள்ளட்டும் என்று சொல்லி என் மூன்று குழந்தைகளுடன் நான் தனியே சீனா வந்தேன்.
2015 மே 12. சீன விமான நிலையத்துக்கு நான் வந்ததும் சீன போலீசார் என்னிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்று சொன்னார்கள். என் மூன்று குழந்தைகளை என்னிடமிருந்து பறித்துச் சென்றனர். எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டபோது ஒரு பதிலும் சொல்லவில்லை. என்னிடம் மூன்று மணி நேரம் ஏராளமான கேள்விகள் கேட்டனர். எதற்காக நான் எகிப்து சென்றேன் என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். நான் கல்லூரிப் படிப்புக்குச் சென்றேன் என்பது அவர்களுக்குத் தெரியும். சீன அரசின் அனுமதி பெற்றுத்தான் போயிருந்தேன்.
அவர்கள் மூன்று மணி நேரம் கேள்விகளால் என்னைத் துளைத்தபோது என் குழந்தைகள் எங்கே என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். பிறந்து இரண்டு மாதம் தன் ஆகியிருந்தது. குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டியிருந்தது. டயஃபர்கள் மாற்ற வேண்டும். குழந்தைகளைக் கொண்டுவாருங்கள் என்று கெஞ்சினேன். சீன போலீஸ் அதற்கு எந்த பதிலும் சொல்லவே இல்லை.
நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். எங்களைக் கேள்வி கேட்காதே என்று மிரட்டினார்கள். மூன்று மணி நேரம் கழித்து ஒரு போலீஸ் வந்தார். என் ஹிஜாபைக் கழற்றினார். கைகளில் விலங்கு பூட்டினார். போலீஸ் வேன் வந்தது. என்னைத் தரதரவென இழுத்துச் சென்று வேனில் தள்ளி ஏறவைத்தார். அவர் தள்ளியதில் நான் கீழே விழுந்து என் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. ரத்தத்தைத் துடைக்க கைக்குட்டை கூட கைவசம் இல்லை. அன்றிலிருந்து இரண்டு மாதங்கள் வதைமுகாமில் என்னை அடைத்துத் துன்புறுத்தினர்.
என் மூன்று பிஞ்சுக் குழந்தைகளுக்கு என்ன ஆனது? என் பெற்றோருக்கு என்ன ஆனது? என் கணவர் எங்கு இருக்கிறார் என எதுவுமே எனக்குத் தெரியவில்லை.
என்னைத் தேடி யாரும் வரவும் இல்லை. யாருக்கும் என்னைப் பற்றி எதுவும் தெரிவிக்கவும் இல்லை. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்னை வதை முகாமில் இருந்து இழுத்துக் கொண்டு சென்று கேள்வி கேட்பார்கள். துன்புறுத்துவார்கள். அடிப்பார்கள்.
இரண்டு மாதங்கள் கழித்து, உன் குழந்தைகளுக்கு உடல் நிலை சரியாக இல்லை என்று சொன்னார்கள். சிறையில் இருந்து வெளியே சென்று வரலாம் என்று அனுமதித்தார்கள். நான் எங்கு சென்றாலும் என் பின்னால் இரண்டு போலீஸ்காரர்கள் கண்காணித்தபடி வருவார்கள். என்னுடைய சீன பாஸ்போர்ட்கள், அடையாள அட்டைகள் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டிருந்தனர். நான் அவர்களுடைய கறுப்புப் பட்டியலில் இருக்கும் அபாயகரமான நபர் என்று சொன்னார்கள். எப்போது வேண்டுமானாலும் என்னை மீண்டும் சிறையில் அடைப்போம் என்று சொன்னார்கள்.
என்னுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே என்னை வெளியில் அனுப்பியிருக்கிறர்கள். நான் வேறு யாருடனும் பேசக்கூடாது. என்னிடம் செல்போன் இருக்கக்கூடாது. எனக்கு ஏதாவது தேவையென்றால் என்னைக் கண்காணித்துவரும் போலீஸ்காரர்களிடம் சொல்லவேண்டும்.
சீனாவில் என் குழந்தைகள் இருந்த குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றேன். ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தையைக் காட்டினார்கள். உடம்பில் அறுவை சிகிச்சை செய்து கட்டுப் போட்டிருந்தார்கள். உடல் நிலை மிகவும் மோசமாக வேறு இருந்தது. இன்னொரு ஆண் குழந்தையான முஹம்மது எங்கே என்று கேட்டேன். இறந்துவிட்டது. இன்று காலையில்தான் இறந்துவிட்டது என்றார்கள். பிறந்து நான்கு மாதங்கள்தான் ஆகியிருந்தது. அதில் இரண்டு மாதங்கள் என் குழந்தையை என்னிடம் இருந்து பறித்துவிட்டார்கள். என்னால் அவர்களைப் பார்க்கவே முடியவில்லை. இப்போது பார்க்க வந்தபோது ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்ற இரண்டுக்கும் ஏதோ ஒரு அறுவைசிகிச்சை செய்திருக்கிறார்கள். என் குழந்தைகளுக்கு என்ன ஆனது. என் குழந்தைகளைப் போய் ஏன் இப்படி தண்டிக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு எனக்கு விடையே கிடைக்கவில்லை.
எனக்கு வயது 25 ஆகிறது. இந்தக் குழந்தைகள் என் முதல் பிரசவக் குழந்தைகள். அவர்கள் தொடர்பாக எனக்குப் பெரிய கனவுகள் இருந்தன. இறந்த குழந்தையின் உடலைக் கொடுத்து மருத்துவமனையைவிட்டு வெளியே செல்லும்படிச் சொன்னர்கள். எந்த மருத்துவரும் எந்த பதிலும் சொல்லவில்லை. என்னிடம் யாரும் பேசத் தயாராகவே இல்லை.
இதனிடையில் என் அம்மாவுக்கு தகவல் சொல்லி அவரும் வந்திருந்தார். முதல் முதலாக அவர் தன் பேரனைப் பார்த்தபோது அவன் இறந்திருந்தான். இறந்த குழந்தையின் உடலை எடுத்துக் கொண்டு மசூதிக்குச் சென்று ஜனாஸா தொழுகை நடத்தவேண்டும் என்று கேட்டோம்.
சீனாவில் அது முடியாது; கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
எவ்வளவு காசு வேண்டுமானாலும் தருகிறேன். இந்தக் குழந்தை அல்லாவின் குழந்தை. மசூதிக்குக் கொண்டு சென்று துவா செய்தாகவேண்டும் என்று கெஞ்சினேன். ஏற்றுக்கொள்ளவில்லை. முடியவே முடியது என்று சொல்லிவிட்டார்கள். கப்ரவில் அடக்கம் செய்ய அனுமதியுங்கள் என்று கேட்டேன். அதற்கும் முடியாது என்று சொல்லிவிட்டனர்.
அங்கிருந்த ஒரு உய்குர் முஸ்லிம் எனக்கு உதவ முன்வந்தார். ஒரு ரகசியமான இடத்தில் குழந்தையின் உடலைப் புதைக்க போலீசார் அனுமதித்தனர். அங்கு நானோ என் அம்மாவோ யாரும் அழவோ துவா செய்யவோ கூடாது என்று சொல்லி போலீஸார் உடம்பைக் கொடுத்தனர். எந்தவொரு துவாவும் செய்யப்படாமல் என் முதல் குழந்தை அடக்கம் செய்யப்பட்டது. எனக்கு இந்த கொடுமையைத் தாங்கமுடியவில்லை.
அதன் பிறகு உயிருடன் இருந்த இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு என் அம்மாவுடன் சொந்த ஊருக்குத் திரும்பினேன். இரண்டு நாள் பயணம். 2700 மைல் பயணம். அங்கு சில மாதங்கள் இருந்தேன். சொந்த ஊருக்குப் பல வருடங்கள் கழித்துத் திரும்பியிருந்தேன். எகிப்தில் இருந்தபோது சொந்த ஊர் பற்றி ஏராளமான கனவுகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளுடன் வந்திருந்தேன். இப்போதோ என் மகனை இழந்து எல்லா ஆசைகளும் மடிந்து நடைபிணமாகத் திரும்பியிருந்தேன். சில மாதங்கள்தான் அங்கு இருந்திருப்பேன். மீண்டும் சீன கம்யூனிஸ்ட் போலீஸ் என்னைப் பிடித்துக்கொண்டு வதை முகாமுக்குக் கொண்டுபோய்விட்டது. முதல் முறை இரண்டு மாதங்களில் வெளியே விட்டுவிட்டனர். இந்த முறை என்னை சுமார் மூன்று வருடங்கள் வதைமுகாமில் அடைத்து சித்ரவதை செய்தனர்.
இந்த முறை என்னை பல வதை முகாம்களுக்கு மாற்றிக்கொண்டே இருந்தனர். மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று என்னென்னவோ ஊசிகள் போட்டனர்.
எங்களுக்கு அங்கு ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. ஒரு பெரிய அரங்கம் போன்ற இடத்தில் விலங்குகளைப் போல் அடைத்துவைத்திருப்பார்கள். யாராவது இறந்தால் விலங்கை இழுத்துச் செல்வதுபோல் இழுத்துச் சென்று புதைப்பார்கள். பல பெண்களை முகாமில் இருந்து வெளியே கொண்டு சென்றார்கள். பல புதிய பெண்களைக் கொண்டுவந்து அடைத்துவைத்தார்கள். வெளியே போனவர்கள் திரும்பிவந்ததில்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது.
வதை முகாமில் குடிக்க தண்ணீர் கிடைக்காது. குளிக்க முடியாது. எல்லா பெண்களும் ஒரே அறைக்குள் தான் இருக்கவேண்டும். எங்கள் தலையை மழித்துவிட்டார்கள். கைகளில் விலங்குகள் எப்போதும் இருக்கும். எங்களுக்கு அங்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு… எங்களுடைய மரணம் எப்போது எங்களுக்கு வரும் என்பதுதான்.
அடிக்கடி மயங்கி விழுந்துவிடுவேன். எழுந்து பார்த்தால் மருத்துவமனையில் இருப்பேன். படுக்கைக்கு அருகில் இரண்டு காவலர்கள் அமர்ந்திருப்பார்கள். அங்கும் என் கைகள் கட்டப்பட்டுத்தான் இருக்கும். என்ன மருந்து கொடுக்கிறார்கள்… என்ன ஊசி போடுகிறார்கள் என்பதெல்லாம் எதுவுமே தெரியாது. உடம்பு கொஞ்சம் சரியானதும் வதைமுகாமுக்குக் கொண்டுசென்றுவிடுவார்கள்.
இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள். அதில் என்னைக் கையெழுத்து போடச் சொன்னார்கள். இப்போது எனக்கு மட்டும் ஆரஞ்சு நிற உடை தந்திருந்தார்கள். முன்பு வதை முகாமில் இருந்த எல்லோரையும் போல் நீல நிற உடையில் இருந்தேன். எதற்காக இந்த உடை மாற்றம் என்று கேட்டேன். எனக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்களாம். நான் ஒரு தீவிரவாதியாம்.
நான் எகிப்துக்குச் சென்றிருக்கிறேன். ஹிஜாப் அணிய ஆரம்பித்திருக்கிறேன். இஸ்லாமிய பிரார்த்தனைகள் செய்கிறேன். இஸ்லாமியர்களுடன் சில காலம் வசித்திருக்கிறேன். எனவே எனக்கு தீவிரவாத எண்ணம் வந்திருக்கும். எனவே எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக சீன கம்யூனிஸ்ட் போலீஸ்கள் சொன்னார்கள்.
என் இரண்டு குழந்தைகளின் பெயரை எழுதச் சொன்னார்கள். நான் எனக்கு மூன்று குழந்தைகள். என் ஒரு குழந்தையை நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்று சொன்னேன். இந்த இரண்டு குழந்தைகளை நீங்கள் என்னைக் கொல்வதற்கு முன்பாக எகிப்துக்கு அனுப்பிவிடவேண்டும். இல்லையென்றால் என் கணவரும் எகிப்திய அரசும் குழந்தைகள் எங்கே என்று தேடி இங்கு வருவார்கள் என்று சொன்னேன். சீன போலீஸ், எகிப்திய தூதரகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள் போலிருக்கிறது. மிகவும் கோபத்துடன் வந்து ஒரு நாள் என்னை இழுத்துச் சென்றனர். இந்த முறை என்னைக் கொலைக்களத்துக்குத்தான் கொண்டு செல்லப் போகிறர்கள் என்பது புரிந்தது.
எனக்கு மூன்று வாய்ப்புகள் தந்தனர்.
ஒன்று என் மரணத்தை நானே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கலாம். மருந்து வைத்துக் கொல்லப்பட சம்மதிக்கலாம். வேண்டுமானால் என் உடம்பை/உறுப்புகளை ஏதேனும் மருத்துவமனைக்கு கொடுக்கச் சொல்லலாம்.
நீங்கள் விரும்பும்படிக் கொன்று கொல்லுங்கள். என் அல்லாவிடம் நான் முறையிட்டுக் கொள்கிறேன். எனக்கு தொழுகை செய்ய அனுமதி கொடுங்கள் என்று கேட்டேன். அங்கு ஒருபோதும் அதற்கு அவர்கள் அனுமதித்ததில்லை. ஆனால், எங்கள் வேதனையும் மெளனமான பிரார்த்தனையும் அல்லாவுக்குக் கேட்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கைவிலங்கிடப்பட்ட நான் மனதுக்குள் எத்தனையோ முறை பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
எனக்கு 27 வயதுதான் ஆகியிருக்கிறது. நான் இறப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் இரண்டு குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள். அவர்களைக் கவனித்துக்கொள்ளவாவது என்னைக் காப்பாற்று…. யா அல்லா என்று மனதுக்குள் மன்றாடினேன். அல்ஹம் துல்லா… எனக்கு இரண்டாவது உயிர் வாழ இரண்டாவது வாய்ப்பு கொடுங்கள் என்று பிரார்த்தனை செய்தேன்.
சில நாட்களில் என்னை வதை முகாமில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சீன கம்யூனிஸ்ட் போலீஸ்கள் அழைத்துச் சென்றனர். அங்கு எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. எகிப்து கணவரும் எகிப்து தூதரக அதிகாரிகளும் இருந்தனர்.
என் கணவர் எங்களுடைய மூன்றாவது குழந்தை எங்கே என்று கேட்டார்.
சீன அதிகாரிகள், எங்களுக்குத் தெரியாது. எகிப்தில் இருந்து நான் இரண்டு குழந்தைகளுடன் தான் வந்தேன் என்று பொய் சொன்னார்கள். இது தொடர்பாக அவர்கள் எங்கெல்லாம் பேசினார்களோ அங்கெல்லாம் எனக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே என்றே சொன்னார்கள். இரண்டு வருடங்கள் கழித்து என்ன சொன்னார்களென்றால் என்னுடைய ஒரு குழந்தை துருக்கியில் இருக்கிறது. இரண்டு குழந்தைகள் என்னுடன் அமெரிக்கவில் இருக்கிறது என்கிறார்கள்.
ஓர் அம்மா எதற்காகத் தன் குழந்தை இறந்துவிட்டது என்று பொய் சொல்லப் போகிறாள்? இன்ஷா அல்லா… அல்லாவுக்கு எது உண்மை என்பது தெரியும்.
என் கணவர் நான் எகிப்துக்குச் சென்று உலக மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்வேன். சீன அரசு என் மனைவிக்கும் குழந்தைக்கும் செய்த கொடுமையை உலகுக்கு அம்பலப்படுத்துவேன் என்று எச்சரித்தார்.
சீன காவலர்களோ பதிலுக்கு அவரை மிரட்டினார்கள். வாயை மூடிக் கொண்டு இருப்பேன் என்று உத்தரவாதம் தந்தால் மட்டுமே மனைவியையும் குழந்தையையும் அழைத்துச் செல்ல முடியும் என்று சொன்னார்கள்.
அதன் பின் நாங்கள் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் தான் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு எகிப்துக்கு உயிர் தப்பிச் சென்றோம். பீஜிங் விமான நிலையத்தில் என் கணவரை நான்கு சீன காவலர்கள் தனியாக சந்தித்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். மனைவியை விட்டுச் சென்றுவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அவர் சத்தம்போடவே வேறு வழியின்றி ஒதுங்கிவிட்டார்கள்.
நான் சீனாவை விட்டு வெளியேறுவது அவர்களுக்கு நல்லதல்ல என்று அவர்கள் பயந்தார்கள். ஒருவழியாக எகிப்துக்குச் சென்று சேர்ந்தோம். ஆனால் அங்கு எனக்கு வேறொரு பிரச்னை காத்திருந்தது. எகிப்து அரசாங்கம் என் கணவரைப் பிடித்துவைத்துக்கொண்டது. உன் மனைவி சீன தேசத்தவர். சீன தேசத்தவர் எகிப்தில் தங்க அனுமதி இல்லை என்று சொன்னார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் நிறைய உய்குர் மாணவர்கள் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். எகிப்துக்கும் சீனாவுக்கும் இடையில் ஏதோ பேச்சுவார்த்தைகள் நடந்ததைத் தொடர்ந்து இப்போது உய்குர் முஸ்லிம்கள் யாரையும் எகிப்துக்கு வர அனுமதி மறுத்துவிட்டார்கள். அங்கு படித்துக் கொண்டிருந்த 350க்கு மேற்பட்ட உய்குர் முஸ்லிம்களை சீனாவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டனர். எனவே நான் எகிப்தில் இருக்க இருக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
சீன அரசுக்கும் எகிப்து அரசுக்கும் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. எனவே நாங்கள் கெய்ரோவில் என் கணவரின் வீட்டில் இருந்த இரண்டு வாரம் முழுவதும் எகிப்திய காவலர்கள் தினமும் வந்து என் கணவரை தனியே சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றனர். அவர்கள் சொன்ன ஒரே விஷயம்: என்னை சீனாவுக்குத் திருப்பி அனுப்பிவிடவேண்டும்.
எனக்கு வேரு வழியின்றி என் பெற்றோருக்கு போன் செய்து பேசினேன். சீனாவுக்கு வா… எங்களைப் பார்க்க வா… உன் குழந்தைகள் எல்லாம் வளர்ந்து பெரியவர்களான பின் வா என்று சொன்னார்கள்.
எனக்கு அவர்கள் சொல்ல வந்தது புரிந்துவிட்டது. ஏனென்றால் அவர்களுடைய போனை சீன காவல்துறை ஒட்டுக் கேட்பது அவர்களுக்குத் தெரியும். இப்போது நான் சீனாவுக்குத் திரும்பிச் சென்றால் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்பது புரிந்தது. நான் சீனாவில் இருந்து எகிப்துக்குச் சென்றபோது என் குடும்பத்தைச் சேர்ந்த 26 பேரையும் சீன அரசு சிறையில் அடைத்திருந்தது. நான் சர்வ தேச ஊடகங்களில் எதுவும் பேசிவிடக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்திருந்தார்கள்.
என் அம்மா, அப்பா, சகோதரர், சகோதரி, உறவினர்கள் என பலரை சிறைப்பிடித்திருந்தனர். என்னைத் திரும்பி வரவைக்கவேண்டும்; இல்லையென்றால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் கொன்று விடுவேன் என்று அவர்களை மிரட்டியிருந்தார்கள். எனவே என் பெற்றோர் சீனாவுக்குத் திரும்பிவா… உன் குழந்தைகள் எல்லாம் பெரியவர்களானதும் வா என்று சொன்னார்கள். அதன் அர்த்தம், ’இப்போது வந்துவிடாதே. எங்களைப் பற்றிக் கவலைப்படாதே’ என்பதுதான்.
நான் திரும்பிச் சென்றால் என்னையும் கொன்றுவிடுவார்கள். எங்கள் குடும்பத்தையும் சிறையில் அடைத்துவிடுவார்கள். இப்போது எனக்கு ஒரு பிரச்னை. நான் எகிப்திலும் இருக்கமுடியாது…. ஏனென்றால் நான் ஒரு சீன உய்குர் முஸ்லிம். நான் சீனாவிலும் இருக்க முடியாது ஏனென்றால் நான் ஒரு உய்குர் முஸ்லிம்.
நான் எனக்கு ஏதாவது நடந்து உயிர் போவதற்குள் எனக்கும் என்னைப் போல் பல உய்குர் முஸ்லிம்களுக்கும் சீன கம்யூனிச வதைமுகாமில் நடக்கும் வேதனைகளைச் சொல்லிவிட விரும்பினேன். துருக்கிக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்தேன். அங்கும் எனக்கு உதவி கிடைக்கவில்லை. அதன் பின் அமெரிக்க தூதரகத்துக்குச் சென்றேன். நான் எகிப்தியர் அல்ல; சீனரும் அல்ல; உய்குர் முஸ்லிம். மிக மிக கடுமையான துயரங்களை சீன வதைமுகாமில் அனுபவித்திருக்கிறேன் என்று என் கதை முழுவதையும் சொன்னேன். அவர்கள் என் ஆவணங்கள் மற்றும் நான் சொன்னவை உண்மையா என்பதையெல்லாம் சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்டனர். அதன் பின் என்னையும் என் குழந்தைகளையும் அமெரிக்காவுக்கு அகதியாக அழைத்து வந்தனர்.
இப்போது நான் அமெரிக்காவில் என் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறேன். அவர்கள் சிறுவயதில் நடந்த அறுவை சிகிச்சையினால் உடல் ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள். முகாமில் இருந்த போது எனக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்திருந்தனர். என் ஒரு பக்கக் காது கேட்காமல் போய்விட்டது. எனக்கு கட்டாய கருப்பை நீக்கம் செய்துவிட்டனர். எனக்கு இனி மேல் குழந்தை பிறக்க முடியாது. எனக்கு என்னென்னனவோ மருந்துகள், ஊசிகள் போட்டதால் உடம்பில் நிறைய அசெளகரியங்கள் இருக்கின்றன. என் கணவர் என்னுடன் இல்லை. என் அம்மா, அப்பா, சகோதரர்கள், குடும்பத்தினர் யாரும் இல்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்றே எனக்குத் தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்றே எனக்குத் தெரியவில்லை.
என் குழந்தைகள் என்னிடம் அடிக்கடிக் கேட்கும்… அப்பா எங்கே அம்மா? எங்களுக்கு தாத்தா பாட்டி இல்லையா என்று கேட்பார்கள். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாது. சீனாவில் பிறக்கும் முஸ்லிம்களுக்குக் குடும்பம் இருக்காது என்று என் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்ல?
நான் உய்குர் முஸ்லிம்களுக்கு நடக்கும் துயரங்கள் பற்றி எங்காவது உரையாற்றப் போகும்போது அங்கு வரும் முதியவர்களின் முகங்களில் என் அம்மா அப்பாவின் முகங்களைத் தேடித் தவிப்பேன். என் சகோதர சகோதரிகள் யாரேனும் இருக்கிறார்களா… என் பெற்றோரைச் சந்தித்தவர்கள் யாரேனும் வந்து என்னிடம் ஏதேனும் சொல்வார்களா என்று ஏங்குகிறேன். அல்ஹம் துல்லா… எனக்கு எதற்காக வாழ்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி வரும். ஆனால் அல்லா எனக்கு என் பிரார்த்தனையை ஏற்று இந்த இரண்டாம் பிறப்பைக் கொடுத்திருக்கிறார். வதைமுகாமில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் பட்ட வேதனையை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அவர்களின் ஓலங்கள் என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
முஸ்லிமாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எத்தனையோ பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய குரலாக நான் இந்த உலகில் ஒலித்தாகவேண்டும். சீன கம்யூனிஸ அரசு உய்குரில் செய்துவரும் இஸ்லாமிய இனப்படுகொலையை எப்படியாவது, என்ன செய்தாவது தடுத்து நிறுத்துங்கள். எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
0
I was there… by Mihrigul Tursun