கிழக்கு திசையில் நகர்ந்தது பிறை நிலா. அதன் மங்கும் ஒளியில் மலர்ந்த செம்பக மலர், அரபு மல்லி, வகுள மலர் கொத்துகளில் இருந்து எழுந்த நறுமணம் காற்றில் பரவியது. பனித்திவலைகள் பொழிந்த முற்றத்தில் இரை தேடும் வன் விலங்குபோல் சப்தம் எழுப்பாமல் உலவிக் கொண்டிருந்தது இருள். காட்டு மல்லிக் கொடிகள் படர்ந்திருந்த தாழ்வாரத்தினூடாக இதமாக வீசிக் கொண்டிருந்தது தென்றல். முற்றத்தில் கிடந்த கூழாங்கற்கள் கண்ணுக்குப் புலனாகவில்லை. ஆனால், அள்ளினால் பல கூடைகள் நிரம்பும் அளவுக்கு அவை அங்கு கிடப்பது அவளுக்குத் தெரியும்.
பழங்காலப் போர்வைக்குள் சுருண்டு கிடந்தவள் தன் இடது காலைத் தலையணைத் திண்டின் மேல் வைத்துக்கொண்டாள். கண் நோயினால் பார்வை பாதிக்கப்பட்டுப் பல காலம் ஆகியிருந்தது. இதனால் நிலவின் பிரகாசமான வெண்ணொளி அவளுக்கு வெள்ளித் தூசிப் படலம் போல மங்கலாகத் தெரிந்தது. நான்கு பக்கமும் சூழ்ந்திருந்த மலர் தோட்டத்திலிருந்து எழுந்த நறுமணம் அவளை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. இந்த நறுமணத்தைச் சுவாசித்தபடியே ஆயுளைக் கழித்துவிடலாம் என்று நினைத்தாள். பருக முடிந்திருந்தால் அந்த நறுமணத்தைக் கிண்ணங்களில் நிரப்பிப் பருகிக் கொண்டே இருந்துவிடுவாள்.
முற்றத்தின் உயரமான மதில்களின் மேலே பனி மூட்டமான நிலவொளி அசைவற்று நிரம்பியிருந்தது. ’கோபத்தின் நினைவுகளை வானலிருந்த கலவர மேகக்கூட்டம் கிளர்த்திக் கொண்டிருந்தது; நிலவு எண்ணற்ற நட்சத்திரங்களுடன் நகர்ந்துகொண்டிருந்தது’ என்ற கவிதை வரிகள் மனதில் எழுந்தன. வீழும் பனித்துளிகள், மங்கலான நிலவொளி ஐம்பது ஆண்டுகளாக இதுதான் இவளின் உலகம்… வயது 75க்கு மேல் ஆகிவிட்டது. உடல் தொடர்ந்து நடுங்கிக் கொண்டே இருந்தது. கல்லெறிந்து கொல்லப்படவிருந்தபோதும் ஆண்கள் கூட்டம் சுற்றி வளைத்து முற்றுகையிட்டபோதும் நடுங்காத உடல் இன்று தானாக ஏன் இப்படி நடுங்குகிறது?
கடந்த இரண்டு இரவுகளாக அப்பா மியான் அவளுடைய கனவுகளில் வந்துகொண்டிருக்கிறார். அவளுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு மலர்த் தோட்டத்தில் நடக்கிறார்; கஞ்சியில் முக்கியெடுத்த தூய வெண்ணிற உடை அணிந்துகொண்டு, இரு மடித் தொப்பியுடன் வரும் அவர், ’அன்பு மகளே ஷாயின்ஷா பானு, இப்போதெல்லாம் நீ அருகில் இல்லாதது, என்னை மிகவும் வாட்டுகிறது’ என்று அவளைப் பார்த்து மெள்ளச் சொல்கிறார். நடக்க முடியாமல் அவள் கால்கள் தடுமாறுகின்றன. அந்தத் தோட்டமும் சுற்றுப்புறமும் சட்டென்று மாயம் போல் மறைந்துவிடுகின்றன.
ஷாயின்ஷா பானு… தன் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கிறாள். ஒரு கசப்பு தொண்டையில் படர்கிறது. சபிக்கப்பட்ட என்னை இந்தப் பெயரைச் சொல்லி எதற்கு அவர் அழைக்கிறார். ஏக்கம் மனதைக் கவ்வியது. தூக்கம் எங்கோ தொலைந்துபோயிருந்தது. கடந்த கால வாழ்க்கையின் நினைவுகள் அவளைச் சூழத் தொடங்கின.
அந்தச் சிறு பிராயத்தில் மணப்பெண்ணைப் போல் அவள் மலர்களாலும் நகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். கரி பூசப்பட்ட சிலேட்டு, வெள்ளி புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்தது. பொடிக்கப்பட்ட குங்குமப்பூ வெள்ளிக் கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் நறுமணத்தை முகர்ந்தபடி கண்களை மூடிக் கொண்டிருந்தாள். உற்றார் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். இளம் பெண்கள் அனைவரும் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் குடும்பத்திலேயே பள்ளிக்குப் படிக்கப் போகும் முதல் பெண்!
மகிழ்ச்சியில் மெள்ள நடுங்கும் அவளுடைய கரங்களில் அப்பா மியான் ஓர் அழகிய முங்கில் எழுதுகோலைக் கொடுக்கிறார். குங்குமப்பூ கரைசலில் அதை முக்குகிறாள். சுற்றி நின்று பார்க்கும் விழிகள் எல்லாம் வியப்பில் விரிகின்றன. இந்தச் சிறுமி வாசிக்க மட்டுமல்ல; எழுதவும் கற்றுக் கொள்ளப்போகிறாள்!
அப்பா மியான் நவீன கல்வியின் ஆதரவாளர். பெண் கல்வியின் புரவலர். அவளுக்குக் கல்வி பெறுவதற்கான வயது வந்ததும் அவளுடைய அலமாரியில் புத்தகங்களைக் கொண்டுவந்து நிரப்பியிருந்தார். அம்மீ ஜான் மட்டும் புயலைக் கிளப்பாமல் இருந்திருந்தால் ஆங்கிலப் பாடம் படிக்கவும் ஏற்பாடு செய்திருப்பார்.
உலகம் வேகமாக மாறிவருகிறது. அவளுடைய தோழிகள், உறவினர்களின் குழந்தைகள் எல்லாரும் அவளைச் சுற்றிக் குழுமுவார்கள். முதிய பெண்களுக்குத் தெரியாமல் ஷாயின்ஷா பானு அமிர் நமாஸையும் திலிஸம் ஏ ஹொஸ்ருபாவையும் வாசிப்பதைக் கேட்பதில் என்ன ஹராம் இருக்கப் போகிறது? இவையெல்லாம் ஆண்கள் ஆண்களுக்காக எழுதியவை. அவற்றுக்கென்றே தனி மணமும் குணமும் உண்டு. சிறுமிகள், பெண்கள் அதை வாசிக்கவும் கேட்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஷாயின்ஷா பானு அவற்றைத் தன் மயக்கும் குரலில் வாசிக்க ஆரம்பித்தாள்:
‘தனது படை வந்து சேர்ந்தது தெரியவந்ததும் மாலிகா சனத் (ராணி சனத்), சர்ப்பங்கள் இழுத்துச் செல்லும் தன் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தாள். பொழுது விடியும் வரைக் காத்திருக்காமல் உடனே போர் முரசுகளை ஒலிக்கச் செய்தாள். மஹ்ரஹை நோக்கி விரைந்தாள். தன் படை இருந்த இடத்தை நெருங்கும் போது போர்க்கூச்சல்களைக் கேட்டாள். மந்திர வாள்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டிருந்தன. கஞ்சிராக்கள், நாகூர்கள் (முழவுகள்), போர் முரசுகள் இடிபோல் ஓங்கி ஒலித்தன.
பாலைவனப் பறவைகள் சொல்லின: ஓ மாலிகா… எதிரிகளுடனான போர் தவிர்க்கமுடியாது.
மாலிகா மஹ்ருஹா தன் படைகளை முன்னேற உத்தரவிட்டார். மறு பக்கம் மாலிகா சனத், தனது மந்திர வாளுடன் 5000 வீரர்களைக் கொண்ட மஹ்ருஹாவின் படையை எதிர்க்கக் களம் புகுந்தாள். மாலிகா மஹ்ருஹாவும் தன் படையுடன் போர் முனையில் இறங்கினாள். நெருப்பு மேகங்கள் விண்ணை நிறைத்தன. வானில் ஈட்டிகளும் அம்புகளும் மழையாகப் பொழிந்தன’.
சிறுமிகள் இந்த விசித்திரக் கதைகளை வியப்புடன் கேட்டனர். பொறுமையின் நதிகளில் தமது படகுகளை நளினமாக ஓட்டி வந்தனர் இந்தப் பெண்கள். ஆணாதிக்கத்தின் புயல் இவர்களை ஓர் ஓரமாக, ஒதுக்குப்புறமாகக் கொண்டு சேர்த்திருந்தது. ஜெனானாவின் சிறைக் கைதிகள். இந்தச் சிறையில் இருந்து விடுதலை என்பது கல்லறைக்குச் செல்லும்போதுதான் கிடைக்கும்.
ஆனல், திலிஸம் ஏ ஹொஸ்ருபாவின் உலகம் வேறு மதிரியானது. அங்கு பெண்கள் அரசாட்சி செய்கின்றனர். போர்க்களங்களில் குதிரையில் ஏறிச் சென்று போரிடுகின்றனர். ஆண்களை வாள், அம்பு, மாயங்கள், வசியங்கள் கொண்டு அடக்குகின்றனர். சிறைக் கைதிகளைப் பிடித்துக் கொண்டு வீடு திரும்புகின்றனர். போரில் கிடைத்தவற்றைக் குதிரைகளில் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்புகின்றனர். காதல் அன்பு, பாசங்களில் திளைக்கின்றனர். பொறாமை கொள்கின்றனர். பெருங் கூட்டங்களில் அணிகலனாக மின்னுகின்றனர்.
மின்னல் வாளின் மாலிகா, தெளிந்த சிந்தனை கொண்ட மாலிகா, கண்ணியமிகு மாலிகா, சுடரும் சிந்தனை கொண்ட மாலிகா, மாயங்களில் தேர்ந்த மாலிகா, வணிக மாலிகா, மந்திரங்களில் தேர்ந்த மாலிகா என ஏராளமான ராணிகள் இருந்தனர். இவர்கள் மாயா ஜாலங்கள், வசியங்களில் தேர்ந்தவர்கள்; மாபெரும் சாம்ராஜ்ஜியங்களை நிறுவியிருக்கிறார்கள்; இவர்களுடைய ஆட்சி மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும் பரவியிருந்தது.
காலத்தின் முழவுகள் அதிர்கின்றன. பெண்களின் இனிமையான குரல்கள் கசப்பின் வலியை எடுத்துக்காட்டின. ஷாயின்ஷாவுக்கு நிக்காஹ் முடிந்துவிட்டது. தந்தை தலை குனிந்து நிற்கிறார்; சகோதரர்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். மகிழ்ச்சி, பயம், நிச்சயமற்ற தன்மை, சடங்குகள்… அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், இவையெல்லாம் குடும்பம் நிலைபெற அல்ல; அழியவைக்கும் முன் தயாரிப்புகள் என்பது காலத்துக்குத் தெரிந்திருந்தது. தனது அப்பாவின் வீட்டில் இருந்து என்றென்றைக்குமாக விடைபெற்றுச் செல்கிறாள். அன்பும் அரவணைப்பும் செல்லமும் சலுகைகளும் என அனைத்தையும் விட்டுச் செல்கிறாள். தங்க நூலிழைகளால் நெய்யப்பட்ட அவளுடைய காலணிகள் இனிமேல் தோல் செருப்பையும் விட இழிவாகப் போகிறது. ரோஜப் பூக்களின் நறுமணத்தால் வாசம் பெற்ற குளியல் நீர் இனி இல்லை. அவை இனிமேல் கூர்மையான கத்திகளைப் போல் சருமத்தைக் குத்திக் கிழிக்கப் போகின்றன.
இதமான நிலவொளி போய் சுட்டெரிக்கும் சூரியன் உதித்துவிட்டது. ’அப்பா மியான்… பெயர்கள் ஒருவருடைய தலையெழுத்தைத் தீர்மானிக்குமா… ஷாயின்ஷா பானு என்று எனக்கு ஏன் பெயரிட்டீர்கள்… யார் மீது என் செல்வாக்கைச் செலுத்தியிருக்கமுடியும்…’ என்று எத்தனை முறை அவரிடம் கேட்டிருப்பாள்.
’நான் நணயங்களில் என் பெயரை பொறிக்கும்படியாகப் புகழுடன் விளங்கிய நூர் ஜஹான் பானு பேகமா என்ன? என் பெயரில் ஒரு தாஜ்மஹால் கட்டப்படும்படியான அதிர்ஷ்டம் கொண்ட அர்ஜுமன் பானுவா நான்? வரலாறு எழுதும் கவிதைகள் எழுதும் குல்பதன் பானுவோ சைபின்னுஸா பானுவோ அல்ல நான்… என் இல்லத்தில் நான் வளர்ப்பது இரானிய இளவரசியாகவே இருக்கப் போகிறாள்?
நானோர் எளிய, அறிவில் சிறிய இஸ்லாமியப் பெண்; ஆணின் காலில் கிடக்கும் செருப்புக்கு சமமானவள். ஓர் ஆணுக்குத் திருமணம் செய்துவைக்கப்படவே இந்த பூமியில் பிறந்திருக்கிறேன். அவனுடைய ஒவ்வொரு உத்தரவுக்கும் கீழ்ப்படிதலே என் வாழ்க்கை. என் விருப்பங்கள் என்பவை கைவிடப்பட்ட வீடு போன்றது; மரணம் மட்டுமே எனக்கு விடுதலை தரமுடியும். அப்பா மியான்… என்னை நீங்கள் இந்த இடத்தில் கட்டுண்டு கிடக்க வைத்துவிட்டீர்களே என்பதல்ல என் வருத்தம். எனக்கு ஏன் எழுதவும் படிக்கவும் சிந்திக்கவும் கற்றுக் கொடுத்தீர்கள் அப்பா..? இந்த அடிமைக்கு ஏனப்பா மாலிகாவின் பெயரைச் சூட்டினீர்கள்’.
நிக்காஹின்போது மெஹ்ராக (சீதனமாக) குர்ரான் ஷரீஃபுடன் அலங்காரம் மிகுந்த வேலைப்பாடு கொண்ட பஹிஸ்தி ஸெவார் கிதாபையும் (சுவனத்து அணிகலன்கள்) அப்பா மியான் தந்ததை நினைத்துப் பார்த்தாள். இன்னொரு பெட்டியில் அவளுக்குப் பிடித்த கிதாப்களையெல்லாம் கட்டிக் கொடுத்திருந்தார். திலிஸம் ஏ ஹொர்ஷுபா, ஆலிஃப் லைலா, இந்தெர் சபா, அரைஷ் ஏ மெஹ்ஃபில், அராப் கா சாந்த், ஃப்ளோரா ஃப்ளோரிந்தா, மன்சூர் மொஹ்னா…
நிக்காஹுக்குப் பின் அவளுடைய மண்ணுலக மாலிக்கான முஸ்தஃபா அலி கான் அல்லது துலரே மியான், இவளைக் கிதாபும் கையுமாக முதன் முறையாகப் பார்த்தபோது என்ன நடந்தது என்பதும் அவளுக்கு கூடவே நினைவுக்கு வந்தது. கையில் இருந்த கிதாப் அடுத்த நொடியில் சுக்கு நூறாகக் கிழித்தெறியப்பட்டு தர்வாஜா வழியாக வெளியே வீசிஎறியப்பட்டது. பெட்டியில் இருந்த கிதாப்கள் எல்லாம் முற்றத்தில் போட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
அப்பா மியானின் நண்பரின் மகனும் சட்டம் படித்த இளைஞனுமான துலரே மியான், அதன் பின் தனது இருண்ட அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டான். அவனுடைய குரல் ஷாயின்ஷா பானுவின் உலகத்தை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்துவிட்டது: ’
இனிமேல் உன் கையில் ஒரு கிதாபின் ஏதேனும் ஒரு பக்கத்தைக் கூடப் பார்த்தாலோ உன் விரல்கள் காகிதத்தில் எதையேனும் எழுதுவதைப் பார்த்தாலோ அல்லாவின் பெயரால் சொல்கிறேன்… கையை வெட்டி, விரல்களை உடைத்து உன் வாப்பாவுக்கு அனுப்பிவைப்பேன்’.
மருதாணி பூசிய தன் விரல்களை ஷாயின்ஷா பானு தலை குனிந்தபடி உற்றுப் பார்த்தவண்ணம் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தாள். கைகளை வாள் கொண்டோ கத்தி கொண்டோதான் வெட்ட முடியும் என்று யார் சொன்னார்கள்? மண்ணுலக மாலிக் இடும் உத்தரவும் கையைத் துண்டித்துவிட முடியும்; விரல்களை ஒடித்துவிட முடியும். தன் மகள் தன் கைப்பட எழுதும் ஒரே ஒரு கடிதம் வந்துவிடாதா என்று அப்பா மியான் ஆயுள் முழுவதும் ஏங்கியபடியே உயிர் துறந்திருந்தார்.
மாலை நேரங்களில் துலரே மியான் எங்கு செல்வான் என்பது அவளுக்குத் தெரியும். நன்கு குளித்துவிட்டு, நறுமணத் தைலங்கள் தடவிக் கொண்டு வெளியே செல்வான். பின்னிரவில் வீடு திரும்புவான். அவனுடைய உதடுகளைச் செக்கச் செவேலெனச் சிவக்க வைத்திருக்கும் வெற்றிலையை யார் மடித்துக் கொடுத்திருப்பாள்; யாருடைய நறுமணத்தைல வாசனை இப்போது அவன் உடம்பில் இருந்து நாறுகிறது என்பது எல்லாம் அவளுக்கு நன்கு தெரியும்.
துலரே மியான் கவிதைகள் எழுதுவதுண்டு; முஷைராக்களுக்குச் செல்வதுண்டு; ஸஹர் ஏ இஷ்க் என்று மென்மையாகப் பாடுவதுண்டு; குல் பகாவ்லி கதைகள் படிப்பதுண்டு என்பதெல்லாம் அவளுக்குத் தெரியவந்திருக்கின்றன. அவன் ஒரு ஆண். எனவே இவையெல்லாம் அவன் செய்வது மிகவும் இயல்பானதுதான். அவன், தன் தாய் வழி சகோதரி ஒருத்தியின் மகளை விரும்பியிருந்தான். குடும்பச் சண்டை காரணமாக அந்த நிக்காஹ் நடக்காமல் போய்விட்டது. லக்கு பாயிடம் அதற்கான வடிகால் தேடிக் கொண்டான். குடும்பத்தின் மீதான வன்மத்தை ஷாயின்ஷா பானு மீது கொட்டினான். புதிதாக நிக்காஹ் செய்துவந்த மணப் பெண் மீது பரம்பரை பகைமை இருப்பதுபோல் நடந்துகொண்டான்.
நிக்காஹ் முடிந்த சில மாதங்களிலேயே துலரே மியான் தினமும் இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினான். ஒரு நாள் ஷாயின்ஷா பானு அவனுக்காகக் காத்திருந்து காத்திருந்து களைத்துப் போய் சற்று கண் அசந்திருந்தாள். வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்துகொண்டாள். வேகமாக விளக்கை ஏற்றினாள். நறுமணத் திரவியங்களால் நனைந்திருந்த தனது ஷேர்வாணியின் பொத்தான்களைக் கழற்றிய துலரே மியானின் பார்வையில் பாதி தூக்கக் கலக்கத்துடன் நின்று கொண்டிருந்த பானுவின் முகம் பட்டது. கழற்றிக் கொண்டிருந்த உடையைக் கீழே வீசி எறிந்துவிட்டு அலமாரியில் இருந்து பஹிஸ்தி ஸேவார் நூலை வேகமாக எடுத்தான்.
இஸ்லாம் பற்றி உன் வாப்பா உனக்கு என்னதான் கற்றுக் கொடுத்திருக்கிறார்? துலரே மியானின் உரத்தகுரல் அந்த அமைதியான இரவில் ஓங்கி ஒலித்ததென்பது இருளைக் கிழித்தபடி இறங்கும் மின்னல் போல் இருந்தது. ’என் மகள் குர்ரான் படித்துமுடித்துவிட்டாள். ஹதீத்கள் எல்லாம் அவளுக்கு நன்கு தெரியும். எக்கச்சக்கமான நூல்களை அவள் படித்திருக்கிறாள்… பஹிஸ்தி ஸெவார் படித்திருக்கிறாள்’ என்று அப்பா மியானின் குரலில் நக்கலாகப் பேசிக்காட்டினான்.
’வாப்பாவைப் பற்றி எதுவும் சொல்லாதீர்கள்’ என்று ஷாயின்ஷா பானு உடைந்த குரலில் கெஞ்சினாள்.
’எல்லாத்துக்கும் நாக்கு மட்டும் நீளுது. உன் அப்பா மியான் என்ன அல்லா மியானா… அவரைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவே கூடாதா? மார்க்கம் பற்றி என்னதான் தெரிந்துகொண்டிருக்கிறாய் நீ… அல்லாவின் அருளுக்குப் பாத்திரமான அஸ்ரஃப் அலி தான்வி என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா… ஓ பெண்களே… எவ்வளவு முடியுமோ அவ்வளவு உங்கள் கணவரை பற்றிக் கொள்ளுங்கள். அவருடைய கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றுங்கள். உங்கள் கைகளைக் குவித்தபடி இரவு முழுவதும் நிற்கும்படிக் கணவர் கட்டளையிட்டால் இந்த உலக மற்றும் மறு உலக நன்மையைக் கருத்தில் கொண்டு இந்தச் சிறிய அசெளகரியத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் மறு உலகில் மகிமை மிகுந்த இடத்தைப் பெற உங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கணவரின் மனம் கோணும்படியான எதையும் எப்போதும் சொல்லவேண்டாம். அவர் பகலை இரவென்று சொன்னால் அதையே நீங்களும் சொல்லுங்கள்’.
பஹிஸ்தி ஸேவாரில் இருந்து துலரே மியான் உற்சாகத்துடன் படித்துக் கொண்டே சென்றான். இதைத்தான் ஷரியா ஷரிஃப் சொல்வது. நீ என்னடா என்றால் எனக்காகக் கண் விழித்துக் காத்திருக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய்’.
குனிந்த தலையை நிமிர்த்தி ஷாயின்ஷா பானு தன் மண்ணுலக மாலிக்கைப் பார்த்தாள்: ’இரவில் சிறிது நேரம் கண் அசருவது ஒன்றும் பெரிய பாவம் இல்லையே…’ நடுங்கிய குரலில் சொன்னாள்.
’இல்லைதான். நிச்சயமாக இல்லை. நீ எந்த பாவமும் செய்யவில்லை. நான் தான் அற்பன்; தில்லியின் மாலிகா ஷாயின்ஷா பானு பேகத்தின் தூக்கத்தைக் கெடுத்த பாவி நான் தான்’.
துலரே மியானின் கிண்டல் அவளைத் தேள் போல் கொட்டின.
என்ன ஒரு சுய நலமான கெடுமதி கொண்ட கசாப்புக்காரனின் மகன் போன்ற இழி பிறவி இந்த துலரே மியான். அவளுடைய மனதின் சதைகளை வெட்டி வெட்டி எறிந்தான். வெறுப்பின் நெருப்பில் இட்டு வாட்டினான். இவையெல்லாம் பத்தாதென்று ஒரு நாள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சுடவே வந்துவிட்டான்.
மூத்தவனுக்கு வயது ஐந்து ஆகியிருந்தது. இரண்டாமவனுக்கு இரண்டு வயது. அவனுக்கு ஒரு நாள் காய்ச்சல் கொதியாகக் கொதித்தது. வழக்கம் போல் துலரே மியான் வீட்டுக்கு நள்ளிரவில் வந்தான்.
குழந்தையின் உடம்பு காய்ச்சலில் கொதிப்பதைப் பார்த்ததும் அவனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது… ’எனக்கு ஏன் சொல்லி அனுப்பவில்லை’ என்று கூச்சலிட்டான்.
’எங்கு சொல்லி அனுப்ப..? லக்குபாயின் விடுதிக்கா..?’ என்று குழந்தையின் நெற்றியில் நனைந்த துணியால் ஒற்றி எடுத்தபடியே ஷாயின்ஷா பானு நிதானமாகக் கேட்டாள்.
அந்தப் பெயர் அவனுக்குள் இருந்த வெடி மருந்தைப் பற்றவைக்கும் தீப்பொறியாக விழுந்தது. பாய்ந்து சென்று சுவரில் தொங்கிக் கொண்டிருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்தான்: ’அவளுடைய பெயரை நீ இனி ஒரு தடவை உச்சரித்தாலும் உன் தலையைச் சிதறடித்துவிடுவேன்’.
அன்றிரவும் பஹிஸ்தி ஸெவர் நூல் அலமரியில் இருந்து எடுக்கப்பட்டது. துலரே மியான் உரத்த குரலில் வாசித்துக் காட்டினான்: ’லக்னோவில் ஒரு பெண்ணின் கணவர் தினமும் இரவில் வேறொரு பெண் வீட்டில் தங்குவது வழக்கம். வீட்டுக்கு சரியாக வரவே மாட்டான். இது மட்டுமா… அந்த இன்னொரு பெண் தனக்கு பிரியாணி வேண்டும் என்று கேட்பாள். இவளுடைய மனைவி அதைச் செய்து தரவேண்டும். அவள் எது கேட்டாலும் செய்து தரவேண்டும். அந்தப் பாவப்பட்ட மனைவி ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசமாட்டாள். உலகில் இருக்கும் அனைவரும் அந்த மனைவியை வானளாவப் புகழ்ந்தார்கள். அல்லாவின் ராஜ்ஜியத்தில் அவளுக்குக் கிடைக்கவிருந்த உயரிய நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம்’.
கிதாபை மூடிவிட்டு துலரே மியான் கத்தினான்: நான் என்றைக்குடி இப்படி வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கியிருக்கிறேன். என்றைக்கு உன்னை லக்கு பாய்க்கு பிரியாணி செய்துகொடு என்று கேட்டிருக்கிறேன். நான் சொல்லி நீ என்னவெல்லாம் சமைத்துச் சமைத்து அனுப்பிவிட்டாய்? இதோ பார்… உன் மனதுக்குள் இருக்கும் சாத்தானைத் துரத்தியடி. பெண்கள் கீழானவர்கள்தான். எனவே ஆணுக்குப் பணிந்துதான் நடந்தாகவேண்டும். பெண்கள் மிச்சம் வைக்கும் நீரில் குளிப்பது காலைக் கடன்கள் முடிப்பது கூட ஆணுக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது. பெண்களை அடக்கி ஆளப்பிறந்தவர்கள் ஆண்கள். புரிகிறதா?’
அன்றிரவு முதன் முறையாக ஷாயின்ஷா பானுவுக்கு ஓர் உண்மை புரிந்தது: விண்ணிலிருந்து பெண்களுக்கு விடுதலை என்று எதுவும் இறங்கி வந்திருக்கவே இல்லை. மார்க்கத்தின் அனைத்து புனித வசனங்களும் நூல்களும் போதனைகளும் பெண்களை விடுதலையே இல்லாத ஏழாம் நரகத்தில் சிறைப்படுத்தும் அதிகாரத்தை ஆணுக்கு வழங்கவே உருவாக்கப்பட்டுள்ளன.
அன்றிரவு முன் பின் தெரியாத, தெரிந்துகொள்ளவே முடியாத ஒரு பெண் அழுதபடியே அவள் மனதுக்குள் நுழைந்தாள். அங்கேயே நிரந்தரமாகத் தங்கியும்விட்டாள். ஷாயின்ஷா பானு தொழுகைக்கு அமரும்போதெல்லாம், மனதுக்குள் நுழைந்த அந்தப் பெண் கேள்விகளால் துளைக்க ஆரம்பிப்பாள்: பெண்களுக்கென்று இருக்கிறாரா ஒரு நபி? சிருஷ்டியில் பெண்ணுக்கென்று ஏதேனும் மரியாதை, மதிப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடி ஷாயின்ஷா பானு அல்லாவிடம் மன்றாடுவாள். குனிந்து தொழுபவள் அப்படியே எழுந்திருக்காமல் விழுந்து கிடப்பாள். தொழுகை விரிப்பு கண்ணீரால் மூழ்கும். ஆனால் அவளுடைய மனதுக்குள் நுழைந்த மாயப் பெண்ணின் குரல் மட்டும் ஓயவே ஓயாது.
ஏன் இல்லை, பெண்களுக்கென்று ஒரு இறைத்தூதர்?
(தொடரும்)
The Earth is Ablaze and the Heavens are Burning by Zahida Hina