Skip to content
Home » உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2

ஸகிதா ஹினா

அப்பா மியானின் கெளவரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் ஷாயின்ஷா பானு தன்னைப் புனிதப் பலிபீடத்தில் காலையும் மாலையும் கிடத்திக் கொண்டாள். மார்க்கத்தின் கூர்மையான கத்திகள் அவளுடைய மென்மையான சதையைக் கீறின. எந்தவொரு முனகலும் இன்றி அதைப் பொறுத்துக்கொண்டாள். தனது விதி இப்படியானது தொடர்பாக யாரிடமும் எதுவும் சொல்லி ஆறுதல் எதையும் தேடிக்கொள்ள அவள் முயற்சி செய்யவே இல்லை. தனது பெற்றோரின் வீட்டுக்குச் செல்ல அவளுக்கு அனுமதி முழுவதுமாக மறுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமா… வீட்டை விட்டு வெளியே செல்லக்கூட அனுமதி கிடையாது.

ஹஸரத் மெளலானா என்ன சொல்லியிருக்கிறாரென்றால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதும் இங்குமங்கும் சுற்றுவதும்தான் பெரும்பாலான தீமைகளுக்குக் காரணமாக இருக்கிறது. அதற்கு அனுமதிக்கவே கூடாது என்று விதி வகுத்திருக்கிறார். பஹிஷ்தி ஸெவர் நூலின் ஏழாம் பாகத்தில், திருமணங்கள், குழந்தைகளின் தலைமுடியை மழித்தல், சீமந்தம், திருமணச் சடங்குகள், சுன்னத், நிச்சயதார்த்தம் போன்றவற்றுக்கு வெளியில் செல்வது, பிறரை அழைப்பது எல்லாமே கூடத் தவறு என்று சொல்லியிருக்கிறார்.

அம்மீஜானின் மரணச் செய்தி வந்தபோது ஷாயின்ஷா வேறொரு ஊரில் இருந்த தன் மண்ணுலக மாலிக் திரும்பிவரும்வரை வீட்டில் காத்திருந்தாள். அவனுடைய அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் காலடி எடுத்துவைக்க அவளுக்கு உரிமை இல்லை. மீரட்டில் இருந்து அவன் திரும்பிவருவதற்குள் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. எனவே அம்மீஜானின் தீஜா ஃபாதியா இறுதிச் சடங்குகள் நடந்துமுடிந்திருந்தன. ஷாயின்ஷா பானுவுக்கு அம்மீஜனின் முகத்தை இறுதிவரை பார்க்க முடியாமலே போய்விட்டது.

அப்பா மியான் இறந்துவிட்ட தகவல் சாச்சா-ஜானிடமிருந்து வந்தபோது துலரே மியான் வீட்டில்தான் இருந்தான். செய்தி கேட்டதும் ஷாயின்ஷா பானு இடி விழுந்ததுபோல் உறைந்துவிட்டாள். காலிபின் வரிகள் அவள் மனதில் புயலைக் கிளப்பின:

எனக்காக இன்னும் சில நாட்கள் காத்திருந்திருக்கலாமே…

ஏன் இங்கிருந்து நீயாகத் தனியே சென்றுவிட்டாய்…

பார்…

எனக்காக இன்னும் சிறிது காலம்

அங்கு நீ காத்திருக்கவேண்டியிருக்கும்

துலரே மியான் தில்லி ரயில் பற்றிப் பேச்சை எடுத்தான். தன் மாலிக்கை நிமிர்ந்து பார்த்தாள். திருமணம் முடிந்த கையோடு இங்கு வந்துவிட்ட என் முகத்தை ஒரு முறை கூடப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் மட்டுமல்ல; நான் கைப்பட எழுதிய ஒற்றைக் கடிதத்தைக் கூட கண்ணில் பார்க்க முடிந்திருக்கவில்லையே… இதற்கா ஆசை மகளுக்கு கல்வி கற்றுத் தந்தேன் என்ற வலியுடன் தான் அவர் இறந்துவிட்டிருக்கிறார்.

ஷாயின்ஷா வேதனையுடன் சொன்னாள்: அப்பாவுக்கு உடம்பு சரியாக இல்லாதபோதே போய்ப் பார்க்க முடிந்திருக்கவில்லை. இப்போது போய் என்ன ஆகப்போகிறது? நான் (நாம்) போவதற்குள் அவரைப் புதைத்துவிட்டிருப்பார்கள்’.

அப்பா மியானின் இப்படிப் பிரிந்துசென்றதோ, அவருடைய முகத்தைக் கடைசியாகப் பார்க்க முடியாமல் போனதோ பெரிய வலி இல்லை என்று நினைக்கும் அளவுக்கு துலரே மியானின் அடுத்த வார்த்தைகள் ஷாயின்ஷா பானுவை மேலும் நிலைகுலையவைத்தன.

உனது சொத்துக்களையெல்லாம் உன் ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் உறவினர்களுக்கும் தூக்கிக் கொடுக்க எதற்கு விரும்புகிறாய்? உன்னுடைய சொத்துரிமையை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று எந்த ஷரியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?’ – துலரே மியான் தனது புனித முகத்தை உயர்த்தியபடி கேட்டான்.

இவர் உண்மையிலேயே மனிதன் தானா… கசாப்புக் கடைக்காரரா? கசாப்புக் கடைக்காரர்கூட வெட்டிக் கொல்வதற்கு முன் நீரும் உணவும் அன்பாகக் கொடுத்து வளர்ப்பார். அப்பா மியானின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் கூடப் பரவாயில்லை. இப்படியா சொத்து வெறி பிடித்துப் பேசுவது. அதுவும் ஷரியத் உரிமைகளைச் சொல்லியா அதைக் கேட்கவேண்டும்.

’உண்மைதான். ஒருவருடைய ஷரியத் உரிமைகளை விட்டுக் கொடுக்கலாமா என்ன?’ என்று கசந்த புன்னகையுடன் சொன்னாள்.

’அப்பா இறந்ததற்கு சிரிக்க உன்னால் மட்டும்தான் முடியும்’ – துலரே மியான் திட்டியபடியே ஆண்களின் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான்.

நினைவுகளின் சுழலுக்குள் ஷாயின்ஷா பானு சிக்கிக் கொண்டாள். மங்கிக் கொண்டுவரும் கண்களால் முற்றத்தைப் பார்த்தாள். நிலவின் ஒளி தேயத் தொடங்கியிருந்தது. சுற்றி இருந்தது எல்லாம் இருள்… அச்சுறுத்தும் இருள். புயல் வீசும் நள்ளிரவில் நதி ஒன்றைக் கடப்பது பற்றி அவள் படித்திருக்கிறாள். நாடிழந்து, புலம் பெயர்ந்து அகதிகளாக வாழ நேர்ந்தவர்கள் பற்றி அவளுக்கு நிறையவே தெரியும். ஆனால், அவளைப் பொறுத்தவரையில் அவளுடைய சொந்த வீடான கீர் முல்லா கைரத்தில் வாழ்வது கூட அவளுக்கு அகதி வாழ்க்கைதான். இங்கு அவள் சந்திக்காத துயரம் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன?

மேலிருந்து கீழாக விரிந்து செல்லும் பைஜாமாவை அணிந்துகொள்ள உரிமை கிடையாது. இறுக்கமான ஸ்கர்ட்கள் அணிந்துகொள்ளமுடியாது. சிறு பிராயத்தில் இருந்து அவளுக்கு மிகவும் பிடித்திருந்த நறுமணத் தைலங்களை பூசிக் கொள்ளமுடியாது. அத்தர் பூசிக் கொள்ள ஏங்கினாள். உடல் முழுவதையும் மறைக்கும் சாக்கு போன்ற உடை, முழுக்கை சட்டை, மென்மையான மஸ்லின் முக்காடு இவற்றையே எப்போதும் அணிந்துகொள்ளவேண்டும். அவள் மணமானவள் என்பதை எடுத்துக்காட்டும் ஒரே ஒரு விஷயம் அவளுடைய ஆடைகள் வண்ணங்களுடன் இருந்தது மட்டுமே. இல்லையென்றால் அவளுடைய உடை என்பது விதவையின் உடைதான்.

பிரிவினையின் சூறைக்காற்று தேசத்தை உலுக்கியபோது அவளுடைய மாமனார் இறந்தார். சில நாட்கள் கழித்து மாமியாரும் இறந்துவிட்டார். ஷாயின்ஷா பானுவுக்குக் கொஞ்சம் போல் ஆசுவாசமாக இருந்தது. ஒருவேளை அவளுக்கு இனிமேல் நல்லது நடக்கும்போலிருந்தது. துலரே மியான் வீட்டில் இல்லாத நேரங்களில் அவளுக்குத் தன்னுடைய விருப்பம்போல் நடந்துகொள்ளமுடிந்தது. ஆனால் மனதில் நிம்மதி இருந்திருக்கவில்லை. மாமியார் இறந்த ஆறு மாதங்களில் அவள் வீட்டில் வெடி குண்டு வெடித்ததுபோல் ஒரு சம்பவம் நடந்தது. துலரே மியான் இரண்டாம் நிக்காஹ் செய்துகொண்டான்.

ஒரு நாள் மன்னராக்கிவிட்டு அடுத்த நாள் கீழே தள்ளப்பட்டவனைவிட ஷாயின்ஷா பானுவின் நிலை மேலும் மோசமானது. சில நாட்களில் புது மணப் பெண் இவள் இருந்த வீட்டுக்கே குடிவந்துவிட்டாள். அவளை வரவேற்க ஏக தடபுடலாக விருந்து, கொண்டாட்டம் நடந்தது. மேல் தளத்தில் புதிதாக இரண்டு அறைகள் கட்டப்பட்டன. வீடு முழுவதும் வெள்ளையடிக்கப்பட்டது. புது மணப்பெண்ணும் தில்லியில் இருந்துதான் வந்திருப்பதாகப் பணிப் பெண்கள் சொன்னர்கள். அவளுடைய முதல் கணவர் இறந்துவிட்டாராம். முதல் திருமணத்தில் அவளுக்கு நான்கு வயதுக் குழந்தை ஒன்று இருந்தது.

அந்தப் பெண் தன் கணவருடைய சொத்தில் பங்கு பெறுவது தொடர்பாக, வழக்கறிஞரான துலரே மியானிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறார். விரைவிலேயே அவனுடைய மனதைக் கவர்ந்துவிட்டாள். துலரே மியானின் அப்பாவும் அம்மாவும் இறந்ததைத் தொடர்ந்து, தடை சொல்ல யாரும் இல்லை என்ற தைரியத்தில், இரண்டாம் நிக்காஹ் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டான். இனி அவன் யாருக்குப் பயப்படவேண்டும். யார் அவனைத் தடுக்க முடியும்?

புதிய மணப்பெண்ணின் வருகையைத் தொடர்ந்து ஷாயின்ஷா பானுவின் உலகம் அவளுடைய அறை, சமையல் அறை என்று மேலும் குறுகியது. குடும்ப நிர்வாகப் பொறுப்புகள் முழுவதும் புதியவளிடம் ஒப்படைக்கப்பட்டு ஷாயின்ஷா பானு ஓரங்கட்டப்பட்டாள். ரெளனக் துல்ஹன் (ஒளி மிகு மணப்பெண்) என்ற சிறப்புப் பெயரை துலரே மியான் புதியவளுக்குச் சூட்டினான். ஷாயின்ஷா பானுவைக் கடும் கோபத்துடன் நடத்திய அவன் புது மணப் பெண்ணை அவ்வளவு நேசித்தான். புதுப்புது பதார்த்தங்கள், இனிப்பு வகைகள், நகைகள், மலர் அலங்காரங்கள், அத்தர், நறுமணத் தைலங்கள், சருமத்துக்குப் பொலிவூட்டும் களிம்புகள், உதட்டுச் சாயம், கண் மை என ஒளி மிகு மணப்பெண்ணுக்கு எந்தவொன்றின் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டான்.

முதலில் ஷயின்ஷா பானுவிடமிருந்து ரெளனக் துல்ஹன் சற்று விலகியே இருந்தாள். நாளடைவில் பானு பெயரளவிலான மனைவி மட்டுமே என்பது புரிந்ததும் அவளிடம் கொஞ்சம் இறுக்கம் விலகி நடந்துகொள்ள ஆரம்பித்தாள். வெற்றி பெற்றவர் தோற்றவரிடம் பரிவு காட்டுவது வழக்கம் தானே. ரெளனக் துல்ஹனும் பரிதாபம் காட்டினாள். அவள் இறை அச்சம் கொண்டிருந்தாள். எனவே துலரே மியான் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பரிகாரம் செய்ய முயன்றாள். ஆனால், அதுவே ஷாயின்ஷா பானுவை மேலும் துயருக்குள் தள்ளியது. எதிரி போல் நடத்தியிருந்தால் கூட ஷாயின்ஷா ஒருவேளை இத்தனை வேதனை அனுபவித்திருக்கமாட்டாள்.

ஷாயின்ஷா பானுவின் மூன்று மகன்களும் வளர்ந்து பெரியவர்களாயினர். இரண்டு பேருக்குத் திருமணம் முடிந்து பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டனர். மூன்றாமவன் ஷாஜஹான்பூரில் வேலையில் இருந்தான். அவனுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. வீட்டில் ரெளனக் துல்ஹனின் குழந்தைகள் பெரியவர்களானார்கள். ஷாயின்ஷா பானுவைப் பெரியம்மா என்று அழைத்தனர். அவளுக்கும் அவர்கள் மேல் கொள்ளை பிரியம். ரெளனக்கின் முதல் திருமணத்தில் பிறந்த மகன் ஷகீல் இவள் சொன்னதையெல்லாம் சந்தோஷமாகச் செய்துகொடுத்தான்.

சொத்து முழுவதும் பறிபோன செய்தி தெரிந்ததும் துலரே மியான் கோபத்தில் வீட்டுக்குள் நுழைந்தவிதம் ஷாயின்ஷாவுக்கு மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அப்பா மியான் இறந்ததைத் தொடர்ந்து சொத்தில் பங்கு கேட்டு ஷாயின்ஷாவின் ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் வழக்கு தொடுத்திருந்தான். உயிருடன் இருந்தபோது அப்பா மியான் அவர்கள் இரண்டு பேருக்கும் வீடு ஒன்றை எழுதிக் கொடுத்திருந்தார். இது பொய்யான உயில்; ஒன்றுவிட்ட சகோதரர்கள் சதி செய்கிறார்கள் என்றுதான் துலரே மியான் வழக்கைத் தொடுத்திருந்தான்.

கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்த வழக்கை இப்போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சொத்து அவர்களுக்கே என்று தீர்ப்பு சொல்லிவிட்டது. ஒன்றுவிட்ட சகோதரன்கள் மீது துலரே மியான் திட்டிய வசைகளையெல்லாம் பொறுமையின் சிகரமாக இருந்து 56 வயதான ஷாயின்ஷா மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவர்களை அவள் நேரில் பார்த்து நாற்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவர்கள் எல்லாம் ந மெஹ்ரம். அதாவது திருமணம் செய்யத் தகுந்தவர்கள். அவர்களிடம் பேசுவது அல்ல; அவர்களைப் பார்ப்பதே தவறு என்று ஷரியத் சொல்கிறது.

அப்பா மியான் இவளுக்கு நிறைய சொத்து விட்டுச் சென்றிருந்தார். ஆனால், அவள் அதில் ஒரு நயா பைசாவைக் கூடக் கண்ணில் பார்த்ததில்லை. துலரே மியான் வீடுகள், கடைகள், பணம் என அனைத்தையும் சிறு ஏப்பம் கூட வெளியே கேட்காமல் அப்படியே முழுங்கிவிட்டான். வீடு, வாசலை விடுங்கள். திருமணத்தின் போது போட்டு அனுப்பிய நகைகளைக் கூட ஷாயின்ஷா பானு அதன் பின் பார்க்கக்கூட முடிந்திருக்கவில்லை. ஷாயின்ஷாவின் மகனுக்கு நிக்காஹ் ஆகும்போது மருமகளுக்குத் தரவேண்டும் என்று சொல்லி மாமியார் வாங்கிவைத்துக்கொண்டுவிட்டார்கள். இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. சகோதரன்களைத் தொடர்ந்து வசைபாடுவதைக் கேட்கப் பொறுக்காமல், எதிர்த்துப் பேசினாள்.

’போதும். திட்டுவதை நிறுத்துங்கள்’.

’நான் எதற்காக நிறுத்தவேண்டும்? உன்னுடைய ஷரியத் உரிமையை மறுத்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தபடி நடந்துகொள்ள இங்கு என்ன சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது? இங்கு சட்டமும் பின்பற்றப்படவில்லை… ஷரியத்தும் பின்பற்றப்படவில்லை’- துலரே மியான் இடி போல் முழங்கினான்.

பிரிவினைக்குப் பின்னர் அவர் இஸ்லாமிய அரசியலில் பங்கெடுக்க ஆரம்பித்து பாதி அரசியல்வாதியாகவும் ஆகியிருந்தான். முஸ்லிம் தனிச் சட்டம், முஸ்லிம் அடையாளம் பற்றிய அவனுடைய கட்டுரைகள் எல்லாம் உருது பத்திரிகைகளில் வெளியாகிவந்தன.

’அப்பா மியான் அந்த வீடுகளை அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே என் ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அவருடைய மரணத்துக்குப் பின்னர், எல்லாம் உங்களுக்கு வேண்டும் என்கிறீர்கள். இதில் என் ஷரியத் உரிமைகள் எங்கே பறிபோகின்றன?’ – ஷாயின்ஷா பானு கோபத்தில் பதிலடி கொடுத்தாள்.

அவை துலரே மியானை துப்பாக்கி குண்டு போல் துளைத்தன. ’இனியும் இதுபோல் நீ பேசினால் உன் நாக்கை இழுத்து வைத்து அறுத்துவிடுவேன். என்னுடைய பணம் ஆயிரக்கணக்கில் இந்த வழக்குக்காகச் செலவாகிவிட்டது. நீ அவர்களுக்காகப் பரிந்துபேசுகிறாயா? உன் அப்பா உயிருடன் இருந்தபோதே எல்லாவற்றையும் என் பெயரில் எழுதிவாங்கிக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். என் தவறுதான். சாகும் போதும் கெடுதல் செய்துவிட்டுப் போயிருக்கிறான் ராஸ்கல்…’ – துலரே மியான் கத்தினான்.

ஆயிரம் பீரங்கி குண்டுகள் ஒரே நேரத்தில் துளைத்ததுபோல் ஷாயின்ஷா பானு நிலைகுலைந்தாள். அப்பா மியான் எத்தனை கண்ணியமானவர். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமின். அல்லா அவரை ஆசீர்வதிக்கட்டும். அவருடைய எலும்புகளை மண் அரித்துவிட்டிருக்கும். இப்போது இப்படியான வசையா? ஷாயின்ஷா பானுவின் இதயம் நொறுங்கியது. நாற்பது ஆண்டுகள்… அப்பா மியானின் கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காகவே வாயை முட்டிக் கொண்டு மெளனமாக அனைத்து வேதனையையும் சகித்து வந்திருந்தாள்.

இனி பொறுப்பதில்லை என்று முடிவு செய்தாள்.

’மிஸ்டர் முஸ்தஃபா அலி கான்… அறிவோடு பேசுங்கள். சொல்வது என்ன என்று புரிந்துதான் சொல்கிறீர்களா? யாரைப் பற்றிப் பேசுகிறோம் என்பது புரிந்துதான் செய்கிறீர்களா?’

ஷாயின்ஷா பானு தன்னுடைய மண்ணுலக மாலிக்கை தலை நிமிர்ந்து கண்ணுக்குக் கண் பார்த்து கேள்வி கேட்டாள். வாழ்வில் முதல் முறையாக அவள் கேட்ட கேள்வி. அவளுடைய குரல் அந்த அறையையும் தாண்டி முற்றத்தையும் தாண்டி ஓங்கி ஒலித்தது.

தன் மனைவி இப்படிப் பேசியதைக் கேட்டு துலரே மியான் அதிர்ச்சியில் உறைந்தான். கோபம் உச்சத்தை எட்டியது.

‘ஆமாம். தெரிந்துதான் பேசுகிறேன். உன் அப்பாவைப் பற்றித்தான் பேசுகிறேன்’- விழிகள் கோபத்தில் பிதுங்கிக் கொண்டு வெளியே வந்துவிடுவதுபோல் பெரிதாகின.

ஷாயின்ஷா பானுவின் முன் நெற்றி துடிக்க ஆரம்பித்தது. அடக்கப்பட்டிருந்த நெருப்பு பொறிபறந்தபடி எழுந்தது.

‘இப்போது உன்னுடைய ஷரியா என்ன ஆனது? என் தந்தையைப் பற்றி இப்படி அவதூறு பேசுகிறாயே… அவர் போட்ட பிச்சை காசில்தான் இத்தனை ஆண்டுகாலம் நீ வாழ்ந்திருக்கிறாய் என்பதை மறந்துவிட்டாயா?’

இரட்டைக் குழல் துப்பாக்கியால் மார்பில் வெகு அருகில் நின்று சுட்டுத் தள்ளியதுபோல் துலரே மியான் நிலைதடுமாறினான்: ’உன் அப்பாவின் சம்பாத்தியத்திலா… நானா…’ கூச்சலிட்டான்.

’ஆமாம். என் அப்பாவின் காசுதான். இந்த வீடு, பணம் எல்லாமே நீ தானே அவரிடமிருந்து விழுங்கினாய். யார் இதையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்து வீணாக்கியது?’

நாற்பது ஆண்டுகாலமாக தீர்க்கப்படாத கணக்குகள் முழுவதையும் இன்றே, இந்த நிமிடமே பேசித் தீர்த்துவிடுவதென்று ஷாயின்ஷா பானு முடிவு செய்திருந்தாள்.

’அவருடைய சொத்து எல்லாம் உனக்குத்தான் சொந்தம்’ என்று ஸ்டூலை எட்டி உதைத்தபடியே கத்தினான் துலரே மியான். ஸ்டூல் பறந்துபோய் விழுந்தது.

’அப்படியென்றால் நீ எனக்குக் கடன்பட்டவன். என் உப்பைத் தின்றிருக்கிறாய். என் தந்தையைப் பற்றிப் பேசும்போது நாக்கை அடக்கிப் பேசு’.

ஷாயின்ஷா பானுவுக்கு இதையெல்லாம் தான் தான் சொன்னோமா என்று நம்பவே முடியவில்லை.

துலரே மியான் அதிர்ச்சியில் வெளிறிப்போனான். ஆணின் காலில் கிடக்கவேண்டிய செருப்பு போன்ற பெண்… அறிவில்லாதவள்… ஆணுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கவேண்டியவள்… அவள் மிச்சம் வைத்த நீரை ஆண்கள் பயன்படுத்தக்கூடாது… இப்படி இருக்கவேண்டியவள் இன்று ஆணை அதுவும் மண்ணுலக மாலிக்கான கணவனைப் பார்த்து நீ என் தயவில் இருக்கிறாய் என்று சொல்கிறாள். அவனுக்குப் பேச நா எழவில்லை. சிறிது நேரம் உயிரற்ற சடம் போல், கல் போல் உறைந்து நின்றான். அதன் பின் அவளைப் பார்த்தான். அவளுடைய மண்ணுலக மாலிக்கான அவன் கண்களில் நெருப்புப் பொறி மின்ன அவளை உற்றுப் பார்த்தான்.

’ஷாயின்ஷா பானு… இந்த நாளை நீ உன் வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்துத் தேம்பப்போகிறாய்…’ கோபத்தில் சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான்.

ஷாயின்ஷா பானு சற்று நிதானத்துக்கு வந்தாள். தானா இப்படிக் குரல் உயர்த்திப் பேசியது என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அவளுடைய மண்ணுலக மாலிக்கை, தனது சொத்தில் வாழ்க்கை நடத்துவதாக அவளா சொன்னாள்? நாற்பது ஆண்டுகால துயரங்கள், நினைவுகள் அனைத்தையும் மனக்கண்ணில் மெள்ள ஓடவிட்டாள்.

சமையலறைக்குச் சென்று தேநீர் தயாரித்துக் கொண்டு முற்றத்தில் அமர்ந்து மெள்ளப் பருக ஆரம்பித்தாள். துவர்ப்பும் கசப்புமாக கடந்த காலம் அவளுக்குள் மெள்ள நிரம்பியது. அப்போது துலரே மியான் வெகு வேகமாக அவளை நோக்கிவந்தான். அருகில் வந்ததும் அவளுடைய துணிகள் அடங்கிய பெட்டி ஒன்றை இழுத்துக் கொண்டுவருவது தெரிந்தது.

’இந்தா உன் பெட்டி… துணிமணிகள். எடுத்துக் கொண்டு இந்த நிமிடமே வீட்டை விட்டு வெளியே போ…’

ஷாயின்ஷா பானு தேநீர் கோப்பையை நிதானமாக மரக் கட்டிலில் வைத்தாள். அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் சொன்னது முதலில் புரியவில்லை.

’வெளியே போகவேண்டுமா… எங்கே போவது?’

’எங்காவது போ… நரகத்துக்குப் போ. இங்கிருந்து போய்விடு.’

துலரே மியானின் கூச்சலைக் கேட்டு ரெளனக் துல்ஹன் சமையல் அறையில் இருந்து விரைந்து வந்தாள். அவள் எதிரே ஷாயின்ஷா பானுவின் வெற்றிலைப் பெட்டி வீசி எறியப்பட்டதைப் பார்த்தாள். அதிலிருந்த வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை எல்லாம் முற்றத்தில் தெறித்து விழுந்தன.

’என்ன செய்கிறீர்கள்… கொஞ்சம் நிதானத்துக்கு வாருங்கள்’ என்று ரெளனக் துல்ஹன் தன் கணவருக்கு அருகில் சென்று சமாதானப்படுத்தினாள்.

’துல்ஹன்… கொஞ்சம் அமைதியாக இரு. இந்த தேவ்டியாளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட உன்னிடம் இருந்து வரக்கூடாது’ – துலரே மியான் எச்சரித்தான்.

’யா அல்லா… எங்களைக் காப்பாற்று… என்னவெல்லாம் வார்த்தைகள் உங்கள் வாயில் இருந்து வருகின்றன…’

ஷாயின்ஷா பானு பற்றி இப்படியான வசைச் சொற்களைத் தன் கணவன் வாயில் இருந்து கேட்டதும் அவளுக்கும் கோபம் வந்துவிட்டது.

குழந்தைகள் எல்லாம் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன. பணிப்பெண் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள். ரெளனக் துல்ஹன் தன் கணவரிடம் கெஞ்சினாள். அல்லாவின் பெயரால்… இறைத்தூதரின் பெயரால் கெஞ்சிக் கேட்கிறேன் என்று மன்றாடினாள். இந்தக் கீழ்ப்படிதல் இல்லாத, மானங்கெட்ட பெண் இனி இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று அவன் உறுதியாக, இறுதியாகச் சொன்னான்.

மண்ணுலக மாலிக் விரட்டியடித்தபின் எங்கு செல்வாள்?

(தொடரும்)

The Earth is Ablaze and the Heavens are Burning by Zahida Hina

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *