தன் மண்ணுலக மாலிக், வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன அந்தக் கொடிய மாலையின் நினைவுகள் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. இத்தனை வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தபோதும் ஷாய்ன்ஷா பானுவின் முதிய உடம்பின் எலும்புகளுக்குள் மின்னலைப் போல் அதிர்ச்சியை உருவாக்கின. அன்று அவள் மண்ணுலகாலும் விண்ணுலகாலும் முழுமையாகக் கைவிடப்பட்டாள்.
வாசல் கதவை நோக்கிச் சில அடிகள் எடுத்துவைத்தாள். தலை சுற்றியது. கீழே விழப்போனாள். ரெளனக் துல்ஹனின் முதல் கணவரின் மகன் ஷகீல் ஓடி வந்து தன் தோள் கொடுத்துத் தாங்கிக் கொண்டான்.
”பெரியம்மா… கவலைப்படாதீங்க. ஷாஜஹான்பூர்ல இருக்கற அண்ணன் கிட்ட உங்களை நான் அழைச்சிட்டுப் போறேன்’.
அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்துகொண்டிருந்தது.
என்ன நடக்கிறதென்றே அவளுக்குப் புரியவில்லை. இருள் ஏற்கெனவே அவளை விழுங்கியிருந்தது.
இறைத்தூதரின் குடும்பம் பலியான மாலையைத் தொடர்ந்து வந்த சூரிய அஸ்தமனத்தைப் போலவே அன்றைய மாலையும் இருந்தது. முழுமையான கையறு நிலை. வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டதுபோன்ற நிலை. ஷாயின்ஷா பானுவைக் கைத்தாங்கலாக ஷகீல் அழைத்துச் சென்று மூடப்பட்ட கை ரிக்ஷாவில் உட்காரவைத்தான். தோலுறைப் பெட்டி, பருத்திப் போர்வைக்குள் தலையணை, கழிவறைக் கலயம், குடிநீருக்கான மண்பானை, முராதாபாதி வெற்றிலைச் செல்லம் (தூக்கி எறியப்பட்டதில் அதன் மூடி உடைந்திருந்தது)… இவ்வளவுதான் ஷாயின்ஷா பேகத்தின் சொத்துகள். அவள் கண்ணுக்கு முன்பே நாற்பது வருடங்களுக்கு முன் முஸ்தஃபா அலி கானுடைய வீட்டுக்கு அவள் கொண்டுவந்த டெளரி வீடு முழுவதும் நிரம்பி வழிவதைப் பார்க்க முடிந்தது.
மதன் ஃபகீரின் பாடல் மங்கலான தெருவில் எங்கோ ஒலித்தது:
யா அல்லா… உன் இதயத்தில் இருந்து என்னை நீக்கிவிடாதே…
யா ரப்பே… உன் இதயத்தில் இருந்து என்னை நீக்கீவிடாதே…
யா அல்லா… யா மாலிக்… என்னை ஏன் மறந்துவிட்டீர்?
ஏன்… ஏன்…?
கண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இன்று வியாழன். கீர் முல்லா கைரத்தின் வீட்டில் இருந்து மதன் ஃபகீருக்கு கிண்ணம் நிறைய மாவும் உணவும் கிடைக்கும். ஆனால் ஷாயின்ஷா பானுவுக்கோ தன் வீட்டில் இருந்து காலிக் கைகளுடன் வெளியேற வேண்டியிருக்கிறது.
இதமாக வீசிய இரவுக் காற்று ரிக்ஷாவின் திரையை விலக்கியபோது கீர் முல்லா கைரத்தின் வீட்டு வாசல் கதவு பாதி திறந்திருப்பது தெரிந்தது. மாநகராட்சித்தூணில் எரிந்துகொண்டிருந்த விளக்கின் சோகையான ஒளியில் ரெளனக் துல்ஹனின் இருள் படிந்த முகம் தொலைவில் தென்பட்டது. கதவின் சட்டகத்தில் அவள் முகம் சாய்ந்திருந்தது. கண்ணீர் முகத்தில் வழிந்தவண்ணம் இருந்தது.
ரெளனக் துல்ஹனின் ஒவ்வொரு அணுவும் துவா செய்தது. முன்பே ஷாயின்ஷா பானுவின் உள்ளங்கையில் 200 ரூபாயை மறைவாக எடுத்துத் திணித்திருந்தாள். வளர்ப்புத் தந்தையின் வசைகளையும் அடிகளையும் ஷகீல் மெளனமாகச் சகித்துக் கொண்டிருந்தான். பெரியம்மாவை ஒருநாளும் அவன் விட்டுக்கொடுத்ததில்லை.
ரெளனக் துல்ஹனின் அழுகையையும் மதன் ஃபகீரின் இறை ஏக்கப் பாடல்களையும் கேட்டபடியே தெருவில் இருந்து வெளியேறினாள். தன் வீட்டில் இருந்து முதலில் வெளியேறிய நாளை நினைத்துப் பார்த்தாள். வீடு நிக்காஹ் விழாக்கோலம் பூண்டிருந்தது. பெண்களின் பாடல்கள் அன்று வீட்டை நிரப்பியிருந்தன. மகள் விட்டுப் பிரியும் வேதனையில் தந்தை தலை குனிந்து நின்றிருந்தார். சகோதரர்கள் கம்பீரமாக அருகில் நின்றுகொண்டிருந்தனர். பல்லக்கில் அமர்ந்திருந்தவள் சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டாள். திரைச்சீலையை விலக்கிப் பார்த்தபோது தந்தை மாயமாக மறைந்துவிட்டார்! தாய்வீடும் என்றென்றைக்குமாக மறைந்துவிட்டது. அழுகை பொங்கிப் பொங்கி வந்தது.
*
கணவனின் வீட்டை விட்டு வெளியேற்றியபின் என்னவெல்லாம் புரட்சிகள் அவள் வாழக்கையில் நடந்துவிட்டன! மூத்த மகனின் வீட்டில் பல வருடங்கள் வாழ்ந்துவருகிறாள். பாகிஸ்தானில் வசிக்கும் மகன்கள் ஒரு நாளும் அம்மாவை வந்து பார்த்திருக்கவே இல்லை. அவர்களை நினைத்துச் சிறிது காலம் அழுதாள். ஆனால், தேசத்தைவிட்டுச் செல்பவர்கள், அன்புக்குரியவர்களின் நினைவுகளைப் பிழிந்து அதன் சாறை இங்கே விட்டுச் சென்றுவிடவேண்டும். மாறாக அந்த நினைவுகளைச் சுமந்து சென்றால் அந்த ஏக்கத்தில் இருதயம் வெடித்து சிதறிவிடாதா?
ஹாஜஹான்பூரில் ஒரு மகன் வசிக்கிறான். அதுவே போதும். எப்படியோ அவளுடைய முதுமைக்காலத்தில் தங்குவதற்கு இடம் கொடுத்திருக்கிறான். மருமகள் அவ்வளவு மோசமில்லை. ஆனால், ஷாயின்ஷா பானு தொடுத்த வழக்கு நீண்டுகொண்டே சென்றது. அதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
நேரில் பார்த்து நாற்பது வருடங்களுக்கு மேலாகியிருந்த சகோதரர்களை, தன்னை வந்து பார்க்கும்படி செய்தி அனுப்பினாள். மகனின் விருப்பத்தையும் மீறி அவர்களுடன் கலந்தாலோசித்து சிறிது காலம் கழித்து ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடுத்தாள். அந்த வழக்கு ஒன்றரை வருடங்களுக்கு மேல் நீடித்தது. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல்தான் இருந்தாள். ஆனால் ஒருநாள், துலரே மியானிடமிருந்து முதலும் முடிவுமான செய்தி வந்து சேர்ந்தது. வெள்ளைக் காகிதத்தின் வலது கைப் பக்கம் முஸ்தஃபா அலி கானின் பெயர் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில், முத்தலாக் சொல்லி ஷாயின்ஷா பானு விவாகரத்து செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது.
கணவன் முஸ்தஃபா அலிகானின் அரவணைப்பில் இருந்து அவள் நீக்கப்பட்டுவிட்டாள். அதோடு அவளுக்கு டெளராக ரூ 3000 தீர்மானிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அவன் மீதோ அவனுடைய சொத்துகள் மீதோ அவளுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவன் அவளுக்கு இனிமேல் எதுவும் தரவேண்டியதில்லை என்று அந்தக் கடிதம் தெரிவித்தது.
62 வயதில் விவாகரத்து நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற ஷாயின்ஷா பானுவுக்கு முஸ்தஃபா அலி கான் என்ற துலரே மியானிடம் இருந்து நியாயம் கிடைக்கப் பெற்றாகவேண்டும் என்பதே வாழ்க்கையின் ஒரே இலக்காக ஆனது. சாத்தானின் குடல்களைப்போல் சட்ட நடவடிக்கைகள் நீண்டுகொண்டே சென்றன. துலரே மியான் மாதம் தோறும் ஷாயின்ஷா பானுவுக்கு வாழ்வாதாரத்துக்கு ரூ 25 கொடுக்கவேண்டும் என்று ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இரண்டு ஆண்டுகள், நான்கு ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என நீண்டு கொண்டே சென்றது. வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. அங்கு அவளுக்கு ஆயுள் முழுமைக்குமாக 175.20 பைசா மட்டும் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு வந்தது.
முஸ்தஃபா அலி கான் உச்ச நீதிமன்றத்தின் இந்த வழக்கை எதிர்த்து முறையிட்டான். முத்தலாக் சொன்ன பின்னர் காத்திருப்பு காலமும் கழிந்த பின்னர், ஒரு விவவாகரத்தான பெண்ணுக்கு எந்தவொரு ஜீவனாம்சமும் பெறத் தகுதி இல்லை என்று அவன் ஷரியத்தை முன்வைத்துச் சொன்னான். மாறாக, இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி, மறு விவாகம் நடக்கும்வரை விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஜீவனாம்சம் தரவேண்டும் என்று சொல்கிறது.
ஷாயின்ஷா பானுவுக்கு உடல் தானாக நடுங்கியது. முஸ்தஃபா அலிகானுக்கும் ஷாயின்ஷா பானுவுக்கும் இடையில் ஆரம்பித்த சட்ட மோதல் பல ஆண்டுகள் நீடித்தது. இதனிடையில் தீர்ப்பு வருவதற்கு முன்பாக அது இஸ்லாமுக்கும் உருவ வழிபாட்டுமரபுக்கும் (காஃபிர்களுக்கும்) இடையிலான போராக மாறிவிட்டது. இதன் இன்னொரு வடிவில் ஒரு பக்கம் வயதான, தனியான அவள்… மறுபக்கம் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட லட்சக்கணக்கானவர்கள். வெறுப்பு, எதிர்ப்பு, அவமானம்… அவள் நரகத்தீயில் எரிக்கப்பட்டாள். மீசை கூட முளைக்காத சில இளைஞர்கள், மத வெறியூட்டப்பட்டு அவள் வீட்டின் முன்னால் நின்று கோஷங்கள் இட ஆரம்பித்தனர்.
அவளுடைய மகனின் வீட்டுச் சுவர் முழுவதும் மதக் கட்டளைகள் எழுதப்பட்டன. இந்த வழக்கு விவரங்கள், அதுதொடர்பான எதிர்ப்புகள், அவமானப்படுத்தல்களினால் மகனும் மருமகளும் மிகவும் சோர்ந்துபோயிருந்தனர். தேசம் முழுவதிலும் இருந்த ஆயிரக்கணக்கான மசூதிகளில் இருந்த இமாம்களும் உலமாக்களும் அவர்களைச் சபித்தனர்:
‘மார்க்கத்தின் சகோதரர்களே… இது நம் மார்க்கத்துக்கு விடப்பட்ட மிகப் பெரிய, அபாயகரமான சவால். உருவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட ஏக இறைவன் மேல் நம்பிக்கையற்ற இந்த முதியவள் இஸ்லாமின் கெளவரத்துக்கு சவால் விட்டிருக்கிறாள்’.
மகனுடைய வீட்டுக்கு வந்த பின்னர், ஷாயின்ஷா பானுவின் ஒரே வேலை புத்தகங்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் படிப்பது மட்டுமே. நாற்பது வருடங்கள் அவளுக்கு மறுக்கப்பட்டிருந்த மகிழ்ச்சி இது. உடைந்த மூக்குக் கண்ணாடியைக் கவனமாக மூக்கின் மேல் பொருத்திக்கொண்டு ’முசல்மான்களின் குரல்’, ’இஸ்லாமின் அறைகூவல்’ போன்ற செய்தித்தாள்களைப் படித்துவந்தாள். இவையெல்லாம் ’அவளுக்கு மதம் கிடையாது… அவள் காஃபிர்களிடம் தன்னை விற்றுவிட்டாள். இஸ்லாமின் எதிரி இவள்’ என்று திரும்பத் திரும்ப சொல்லின.
இவற்றையெல்லாம் படிக்கப் படிக்க. அவள் உடம்பில் ஓடிய ரத்தம் கண்ணீராக வழிந்தது. அவளுக்கு எதிரான போராட்டங்கள், ஊர்வலங்கள் பெருகத் தொடங்கின. ஐந்தாயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம், லட்சம் எனப் பெருகின. நிராதரவான, தானாக எதையும் செய்ய முடியாத, எழுபது வயது முதியவளால் இஸ்லாமுக்குப் பெரும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.
அவளுடைய உரிமைகளைப் பெற அவள் தொடங்கியிருக்கும் போரைக் கைவிடும்படி நிர்பந்தம் கொடுத்தனர். அவள் பெற்ற வெற்றியைக் கை கழுவும்படிச் சொன்னார்கள். அவள் துளியும் அசைந்துகொடுக்கவில்லை. இந்தப் போரை அவளுக்காகவோ இந்த தேசத்தின் உயர் நீதிமன்றம் தரவிருந்த அற்ப பணத்துக்காகவோ அவள் நடத்தியிருக்கவில்லை. ஒட்டு மொத்த இஸ்லாமியச் சிறுமிகளுக்கும் பெண்களுக்குமாகப் போராடுகிறாள். ஹிந்துஸ்தானில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இஸ்லாமியக் குடும்பங்கள் எல்லாம் அரேபிய அரச குடும்பத்தைப் போல் அதன் அந்தப்புரங்களைப் போல்ல் ஆகிவிட்டன. வருடா வருடம் அவர்கள் காரையும் மனைவிகளையும் மாற்றிக்கொண்டார்கள்.
ஹைதராபாத், பூனே, தில்லி என தேசம் முழுவதிலும் வாழும் அபலை முஸ்லிம் பெண்களின் வேதனைக் கதைகளை அவள் மங்கலான கண்ணைக் கொண்டு செய்தித்தாளில் நிறையப் படித்திருக்கிறாள். சில ஆயிரம் பணத்துக்கு அராபிய ஷேக்குகளுக்கு விற்கப்பட்டு பின்னர் ஒருகையில் விவாகரத்து பத்திரத்துடனும் மறுகையில் குழந்தையுடனும் நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறார்கள். ஹவ்வாவின் (ஏவாளின்) மகளுக்கு ஆதரவு தேவை; இறைத்தூதரின் விசுவாசி… சுலேக்காவின் மகள். இந்தப் பாடலை அவள் வானொலியில் கேட்டிருக்கிறாள். தனது உடைந்த குரலில் மெள்ள தேனீயைப் போல் ரீங்கரித்தபடியே அழுவாள்: ’இறைத்தூதரின் விசுவாசி… சுலேக்காவின் மகள்… ஹவ்வாவின் மகளுக்கு ஆதரவு தேவை’.
சில ஆயிரம் ரூபாய்களுக்காகப் புதிய சிறுமியை அந்தப்புரங்களுக்குக் கொண்டுவருபவர்கள் ஜீவனாம்சத்தை எப்படி ஏற்றுக்கொண்டிருப்பார்கள்? புதிதாக விவாகரத்து ஆன பெண் ஜீவனாம்சம் கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இஸ்லாமிய ஆண்களுக்கு விருப்பம் போல் திருமணம் செய்வதும் விவாகரத்து செய்வதும் மதமே அளித்திருக்கும் உரிமை. அதில் குறுக்கிடுவதென்பது மதத்தையே அவமதிப்பதற்கு சமம்.
மசூதிகளில் இருந்தும் பிரசார மேடைகளில் இருந்தும் மதத்தைக் காக்க மேற்கொள்ளும் செயல்கள் எல்லாம் என்ன ஆகும்? பெண்களை விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பஞ்சமே இல்லை. எழுத்துகள், மேடைப் பேச்சுகள், பத்வாக்கள், அவதூறுகள், எச்சரிக்கைகள்…
’இஸ்லாமுக்கு ஆபத்து… இஸ்லாமிய சகோதரர்களே… இஸ்லாமுக்கு ஆபத்து’.
நெருக்கடி முற்றிக்கொண்டே வந்தது. மதக் கட்டளைகள்… மார்க்கப் பற்றாளர்கள்… மகன், மருமகள்… இதோ ஏக இறைவனின் வழியில் செல்பவர்கள் வெள்ளிக் கிழமைத் தொழுகைக்கு முன்பாக கூட்டமாகக் கூடி இவள் வீட்டை முற்றுகையிட்டிருக்கிறார்கள். ’அல்லாஹு அக்பர்…’ என முழக்கம் விண்ணைப் பிளக்கிறது. சாரை சாரையாக அனைத்து திசைகளில் இருக்கும் அவள் வீட்டை நோக்கி விரைகிறார்கள்.
அராஜகவாதிகள் எய்த அநீதியின் அம்புகள் அவளைக் குறிவைத்துப்பாய்ந்தன. வீட்டுக் கதவுகளை நோக்கி நிஜமாகவே கற்கள் எறியப்பட்டன. சுவர்கள் மீது எறியப்பட்டன. எறியப்பட்ட கற்கள் ஜன்னல் வழியாக வந்து அவளுடைய தொழுகைப் பலகை மீது மோதி அதை உடைத்தன. கதவுகள் கழன்று விழுவதுபோல் ஆட்டப்பட்டன.
மகன் முதலில் கையறு நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் அம்மாவைப் பார்த்தான். அதன் பின் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த மகள்களைப் பார்த்தான்: ‘இந்த வீடு இடிந்து விழும்வரை அம்மீஜான் ஓயமாட்டாயா?’
’நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கத் தயார்… கண்டந்துண்டமாக வெட்டினாலும் சரி… இஸ்லாமுக்காக உயிரையும் கொடுக்கத் தயார்’ என்று வெளியில் கோஷங்கள் சுவர்களில் மோதி அவற்றை உலுக்கின. மரத்தாலான சிறிய மேடை மீது ஷாயின்ஷா பானு மெளனமாக அமர்ந்திருந்தாள். திறந்த முற்றத்தின் வழியே வானத்தைப் பார்த்தாள். அது அவளைக் கைவிட்டது. குனிந்து பூமியைப் பார்த்தாள். அது அவளுடையதாக என்றுமே இருந்ததில்லை. இரு உலகங்களுக்கும் மாலிக்கான ஏக இறைவனை மண்டியிட்டுத் தொழுதாள்.
’நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கத் தயார்… கண்டந்துண்டமாக வெட்டினாலும் சரி… இஸ்லாமுக்காக உயிரையும் கொடுக்கத் தயார்’.
வெளியில் கோஷங்கள் வலுத்தன. அம்புபோல் துளைத்தன; வாள் போல் வெட்டின; கத்தி போல் உடம்புக்குள் ஊடுருவின. ஈட்டி போல் துளைத்தன. கண்டந்துண்டமாக வெட்டிப் போடப்பட்டதுபோல் உணர்ந்தாள். ஃபத்வாக்கள் அவள் மேல் எரி அம்புகளாகப் பொழிந்தன. அவள் நின்றுகொண்டிருந்த நிலத்தை வேருடன் பிடுங்கின. கிழியத் தொடங்கியிருந்த ராமாபுரி தொழுகைப் பாய் அவளுடைய கண்ணீரால் மூழ்கியது:
’ஏக இறைவா… என்னைக் கைதூக்கிவிடு…
எண்ணற்ற சோகங்களால் சூழப்பட்டிருக்கிறேன்.
இங்கு மிகவும் தன்னந்தனியாக
மெலிந்து ஒடுங்கி காத்திருக்கிறேன்.
நூற்றுக்கணக்கான எதிரிகள் என்னை சூழ்ந்துவிட்டனர்…
கல் எறிகளின் வேகம் கூடியது. கதவில் அவை மோதும் சப்தம் காதைப் பிளக்கத் தொடங்கியது. மண்டியிட்டு நெற்றி தரையில் படும்படியாக குனிந்தபோது, மூத்த பேத்தி உரத்த குரலில் அழுதபடி சொல்வது கேட்டது: ’பாட்டிம்மா… அவர்கள் நம்மைக் கொன்று போட்டுவிடுவார்கள்’.
அந்தக் குரலில் மரண பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. அது பேத்தியின் குரல் மட்டுமல்ல; பெண் இனத்தின் முடிவற்ற கேவல். ஆக்கிரமித்த படைகள் அனைத்துமே சூறையாடிய பெண் இனத்தின் கதறல். ஆனால் இங்கு சொந்த மதமே சுற்றி வளைத்திருக்கிறது வரலாற்றின் பக்கங்களில் இருந்து, ஹுர்ரா தாக்குதல் மீண்டும் எழுந்துவந்தது. அவளுடைய மங்கலான கண்கள் மேலும் மங்கின.
தொழுகைப் பாயில் இருந்து தலையை உயர்த்தினாள். கதவைத் திறங்கள்… என்னைக் கொல்ல விரும்புபவர்களை வீட்டுக்குள் வரவிடுங்கள் என்றபடியே போர்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டாள். முன் நெற்றிவரை கவிழ்ந்திருந்த கறுப்பு நிற முக்காடு நரைத்துப் போன இமைகளை முத்தமிட்டபடி இருந்தது.
கதவு திறக்கப்பட்டது. ஏக இறைவனின் நம்பிக்கையாளர்கள் வீட்டு முற்றத்தில் குழுமினர்.
அனைத்து உட்பிரிவுகளைச் சேர்ந்த இமாம்களும் உலமாக்களும் பின்னால் நின்றுகொண்டிருந்தனர். கறுப்பு நிற நீண்ட மேலாடை, மருதாணி பூசிய, நறுமணத் தைலங்கள் மணக்கும் தாடி, கண் மை பூசிய விழிகள்…தலையில் இரட்டை மடிப்பு ராம்புரி குல்லாக்கள் அழகாக அணியப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய கையெழுத்துகள் இருக்கும் பசுமையான காகிதத்தைப் பார்க்கிறார்கள். ஒட்டு மொத்த தேசத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிட்ட, இஸ்லாமுக்கும் உருவ வழிபாட்டாளர்களுக்கும் இடையிலான மோதலின் முடிவை அறிவித்தபடி இருந்தது.
அதாவது, மார்க்கத்தின் உண்மையான நம்பிக்கையாளர்களின் முன்பாக ஷாயின்ஷா பானு, உருவ வழிபாட்டாளர்கள் (காஃபிர்கள்) நிரம்பிய உச்ச நீதிமன்றம் அவளுக்கு அளித்த உரிமையை விட்டுக் கொடுப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஷரியத்தின் அமீர் மெளலானா சிபத்துல்லா நெளமானி அழகிய பார்க்கர் பேனாவைத் தன் கோட் பாக்கெட்டில் இருந்து எடுத்து அவளிடம் நீட்டினார். இதே நபர்தான் தன் மனவியின் மண்ணுலக வாழ்க்கையையே நரகமாக்கியவர். இவருடைய மனைவி 9 ஆண்டுகள் ஒவ்வொரு மன்றமாக, படி படியாக ஏறி இறங்கினாள். அவளுக்குப் பிச்சையாகப் போடப்படுபவற்றை வைத்து வாழ்ந்துகொண்டு ஜீவனாம்சம் கேட்டு நீதி மன்றங்களில் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டிருக்கிறாள்.
ஷாயின்ஷாவை நோக்கி நீட்டிய வாளிப்பான கைகளில் இருந்த பேனாவை அவள் புறக்கணித்தாள். தன் தோளில் நடுங்கியபடி இருக்கும் பேரனின் கரங்களைப் பார்த்தாள்.
’மகனே… அலமாரியில் இருந்து மை புட்டியை எடுத்துவா’.
அவள் சொன்னது யாருக்கும் புரியவில்லை. ஆனால் பேரன் ஓடிச் சென்று மை புட்டியை எடுத்துவந்தான். புட்டியைத் திறந்து வலது கட்டைவிரலில் மையை பூசிக் கொண்டாள். மகன் திகைத்தபடியே,
’அம்மீஜான் என்ன செய்கிறாய்… கைநாட்டா வைக்கப்போகிறாய். உன் கையெழுத்தைப் போடு அம்மீஜான்’.
’எழுத்து, படிப்பு எல்லாம் உருவ வழிபாட்டு மரபை சேர்ந்த பெண்களுக்குத்தான். நமது இஸ்லாமிய பெண்கள் கை நாட்டுதான் வைக்கவேண்டும்’.
கறுப்பு மையை விரலில் தடவி கை நாட்டு அழுத்தி வைத்தாள். பச்சை நிறத்தில் இருந்த பேப்பரில் கறுப்பு முத்திரை நன்கு துலக்கமாகத் தெரிந்தது.
ஷரியத்தின் அமீர், அவளிடமிருந்து அதை வாங்கிக் கொண்டார். முற்றத்தில் கூடியிருந்த கூட்டத்தைநோக்கிச் சென்றார். கையை உயர்த்தி, அந்த பேப்பரை காற்றில் அசைத்து உரத்த குரலில் சொன்னார்: எல்லா புகழும் அல்லாவுக்கே.
’அல்லாஹு அக்பர்’ என முழக்கங்கள் விண்ணை முட்டின. வந்த படை கலைந்து சென்றது.
சில நிமிடங்களுக்கு முன் போர்க்களமாக இருந்த முற்றம் இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் அவர்கள் வீசிய கற்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. படையெடுத்து வந்தவர்களின் கூக்குரல்கள் நூறு பறவைகளின் கொத்தல்களாக அவள் மனதில் கொத்தின. அவற்றின் சிறகடிப்பு சுவர்களில் பட்டு எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
கூரையின் மேலே இருந்த நிலவு பயங்கரமான பழுப்பு நிறத்தில் இருந்தது. எங்கும் விடியலின் தடயங்கள் தெரிய ஆரம்பித்தன.
மிஸ்டர் முஸ்தஃபா அலி கான், நீங்கள் வென்றுவிட்டீர்கள். உமது ஆட்கள் என்னைச் சபிக்கப்பட்டவளக்கிவிட்டனர். கண்ணீரால் நிரம்பிய என் தொழுகைகள்… ரமலானையும் தாண்டி நான் நூற்ற நோன்புகள்… என் கால்களை வீங்கச் செய்த முடிவற்ற மண்டியிடல்கள்…யாருமே இதை பொருட்படுத்தியிருக்கவில்லை. நான் மார்க்கத்தின் எதிரியாகிவிட்டேன். நான் உருவ வழிபாட்டாளராக ஒருகாஃபிராக ஆகிவிட்டேன். என்னைக் கல்லெறிந்து கொல்லவும் அறைகூவல்கள் விடப்பட்டன.
நீங்கள் வேசிகளிடம் சென்றீர்கள்… இரவுகளை காமக் களியாட்டங்களில் கழித்தீர்கள். ஆனால் நீங்கள் இப்போது அதிகாலைப் பனித்துளிபோல் தூய்மையானவராகிவிட்டீர்கள். தலைவராகிவிட்டீர்கள். மார்க்கத்தின் பாதுகாவலராகிவிட்டீர்கள். முஜாஹிதீன் ஆகிவிட்டீர்கள். தேசத்தின் குடிமகளான முதிய பெண்ணாகிய எனக்கு வெளியாட்கள் நீதி வழங்கியிருக்கும்போது, என்னவர்கள் ஏன் அநீதி இழைக்கிறார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை.
வென்றது நீங்களே. மெள்ள மெள்ள இறந்துகொண்டிருக்கும் உங்களுடைய தாய்மொழியை உயிர்ப்பிக்க ஒரு 500 பேரைக்கூட ஒன்று திரட்ட முடியாத உங்கள் ஆட்கள் எந்தப் பாதுகாப்பும் இல்லாத முதியவளான என்னை எப்படியெல்லம் அவமானப்படுத்திவிட்டார்கள். என்னைக் கண்டந்துண்டமாக வெட்டி எறிந்ததுபோல் சிதைத்துவிட்டுப் போய்விட்டார்கள். பர்தா அணியும் முதியவளான என்னை வீழ்த்த, மார்க்கப்பற்று கொண்ட லட்சம் முஜாஹிதீன்கள் படை திரண்டு வந்துவிட்டார்கள். உண்மை வெளிப்பட்டுவிட்டது. நமக்கென்று யாரும் இல்லை; யாருமே இல்லை.
அவமானத்தின் கற்கள் அவள் மீது தொடர்ந்து வீசப்பட்டன. பத்வாக்களின் கூர் முனைகள் அவள் உடம்பைக் குத்திக் கிழித்தன. அவள் ஓடினாள்… ஓடினாள். மயங்கித் தடுமாறினாள். பலத்தைத் திரட்டிக் கொண்டு மீண்டும் ஓடினாள். கொடு வாளின் நிழலில் நிம்மதிக்கு ஏது வழி… உண்மை வெளிப்பட்டுவிட்டது… நமக்கென்று ஒருவரும் இல்லை.
’அப்பா மியான்…’
அடைக்கும் தொண்டையைச் செருமிக் கொண்டு அழைத்தாள்.
“நீங்கள் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், எந்தப் பக்கம் நின்றிருப்பீர்கள்… என் பக்கமா… உங்கள் ஆட்களின் பக்கமா?’
வெடித்துக் கதறியபடியே அழத்தொடங்கினாள். அ வளுக்குள் சோகம் புயல் போல் சுழன்றடித்தது. கொலை வாளின் நிழலில் நிம்மதி ஏது? பழங்காலப் போர்வைக்குள் இதம் தேடிப் புதைந்துகொண்டாள். ஆனால், அதன் பருத்தி கம்பளி நூல் நைந்து முண்டுகளாகி நுனியில் திரண்டுநின்றன.
உயிரை விடப் போகும் நிலையில் இருந்த நிலவொளியை நிமிர்ந்து பார்க்க முயற்சி செய்தாள். கழுத்தை நிமிர்த்த முடியாமல் கனத்தது. அப்பா மியான் படுக்கைக்கு அருகில் இருந்து அவளை அழைத்தார். மரியாதை நிமித்தமாக எழுந்திருக்க முயன்றாள். ஆனால் அவளுடைய உடம்பு மரத்துப் போயிருந்தது. அவள் மீது கொடிய வானம் முழுவதுமாக விழுந்திருந்தது. எப்படி அவளால் எழுந்திருக்கமுடியும்?
அப்பா மியானிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்பதுமட்டும் நினைவுக்கு வந்தது. அவளுடைய இதழ்கள் துடித்தன.
‘இந்தப் புனிதப்போரில் யார் பக்கம் அப்பா நீங்கள்..?’
அவளுடைய மங்கலான கண்கள் அப்பாவின் முகத்தில் பதிலைத் தேடித் தவித்தது.
அப்பா மியானின் தலை கவிழ்ந்தபடியே இருந்தது. அவருடைய மெளனம் மண்ணிலிருந்து விண்ணுலகம் வரை கனத்துக் கிடந்தது. ஹர்மிலியாவின் அம்பைப் போல் அப்பா அமியானின் மெளனம் அவளைத் துளைத்தது. தளர்ந்து கீழே விழுந்தாள்.
பூமியில் நெருப்புக் கங்குகள் ஒவ்வொரு இடத்தில் இருந்தும் முளைக்க ஆரம்பித்தன பதறியபடியே எழுந்து ஓடினாள். பூமியில் கால் வைத்த இடங்களில் எல்லாம் தீக்கங்குகள் முளைக்க ஆரம்பிக்கவே விண்ணுலகை நோக்கித் தப்பி ஓடினாள். அங்கிருந்தும் நெருப்புச் சுவாலைகள் மழையாகப் பொழிய ஆரம்பித்தன. பற்றி எரிய ஆரம்பித்தது. ஷெஹர்ஷாதே… தினஷாதே… பேகம் ஜெலீம் ஜபர்தஸ்த்… நூர் ஜஹான் பானோ பேகம் நெருப்புக் கடலில் கரையும் களிமண் பொம்மை. பூமி பற்றிக் கொண்டு எரிகிறது… சுவனமும் சுட்டுப் பொசுக்குகிறது. எல்லையற்ற தீ அனைத்தையும் சூழ்கிறது.
முடிவற்று நடுங்குகிறது உடல்…
தீராமல் வாட்டுகிறது தாகம்…
யா அல்லா…
யா ரப்பே…
இறுகிய நாவும் வறண்ட உதடுகளும் வழக்கமான துவாவை உச்சரித்தன. ஒரு மிடறு… ஒரே ஒரு மிடறு… கானல் நீரால் சூழப்பட்டிருந்தாள். சுற்றிலும் நீர்ச் சுழல்கள்… நானோ கரையில் போடப்பட்ட மீனாகத் துடிக்கிறேன்.
ஒளி மங்கத் தொடங்கிவிட்டது. தோழிகள் சண்பக மலர், அரபு மல்லி, வகுள மலர் கிண்ணங்களை அவள் நாசியின் அருகில் கொண்டுவருகிறார்கள். எங்கும் நறுமணம் பரவுகிறது. நாசி, கண், செவி, உடல், உணர்வுகள், அணுக்கள் என அனைத்திலும் பரவுகிறது. எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவுகிறது. பொழுது விடிந்தது. அவள் ஒடுங்கினாள். மரணத்தின் படகு வந்து வாசலில் நிற்கிறது. கால் எடுத்து வைத்து நினைவுகள் அற்ற உலகுக்குள் நுழைந்தாள். பால்ய காலத் தோழி ராய் பெல் அவள் விடைபெறுவதைப் பார்த்தாள். அழுதபடியே இறுகப் பற்றிக் கொண்டாள்.
பற்றி எரியும் மண்ணுலகில் இருந்து தப்பித்துவிடு என்று கண்ணால் விடை கொடுத்து அனுப்பினாள். சுவனமும் சுட்டுப் பொசுக்கும் என்பது பாவம் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
0
The Earth is Ablaze and the Heavens are Burning by Zahida Hina