Skip to content
Home » உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

ஜர்னைல் சிங்

சுர்ஜித் கௌர்

1, நவம்பர், 1984-ல் நந்தநகரி குருத்வாரா, கலவர கும்பலால் இடிக்கப்பட்டது. தினமும் சென்று வணங்கிய அது என்ன நிலையில் இருக்கிறது என்று பார்க்க என் கணவர் புறப்பட்டுச் சென்றார்.

குருத்வாராவில் ஒரு கும்பல் காத்திருந்தது. ஆயத்த உடைகள் விற்கும் எளிய நடைபாதை வியாபாரியான என் கணவரைத் தரதரவென மேல் கூரைக்கு இழுத்துச் சென்று அங்கிருந்து அப்படியே தள்ளிவிட்டனர். பலத்த காயம் பட்டு விழுந்து கிடந்தவரைக் கீழே கம்புடன் இருந்தவர்கள் அடித்தே கொன்றார்கள். அதன் பின் குருத்வாராவுக்குத் தீவைத்துவிட்டு அருகில் இருந்த சீக்கியக் குடும்பங்களைத் தேடிப் புறப்பட்டனர். வீட்டுக் கதவுகளை உடைத்துத் திறந்தனர். உள்ளே சீக்கியப் பெண்கள் அனைத்து சீக்கிய ஆண்களையும் பரண், அலமரி மூலை, மெத்தைக்குக் கீழே என வீட்டுக்குள் ஒளிந்துகொள்ள வைத்திருந்தனர். கலவர கும்பல் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டுமே சொன்னது: ‘சர்தாரை வெளியே அனுப்பிவிடு’.

கண்ணீர் வழியக் கையெடுத்துக் கும்பிட்டபடியே சொன்னேன்:  ‘என் சர்தாரைத்தான் மேலிருந்து கீழே தள்ளி நீங்கள் கொன்றுவிட்டீர்களே… எங்கிருந்து அவரை அழைத்துவர?’

சிறிது நேரம் என்னை முறைத்துப் பார்த்தவர்கள் எதுவும் பேசாமல் வெளியேறினர். ஆனால் அரை மணி நேரம் கழித்துத் திரும்பவும் வீட்டு வாசலுக்கு வந்தனர்: ‘இதோ பாருங்கள்… இனியும் தில்லியில் நீங்கள் இருக்க வேண்டாம். பஞ்சாபுக்குப் புறப்பட்டுப் போய்விடுங்கள்’ என்று என்னிடம் மெதுவாகச் சொன்னார்கள்.

எனக்கு ஒரே நடுக்கம். ஏனென்றால், என் கணவரின் அண்ணன் அலமாரிக்குப் பின்னால் ஒளிந்திருந்தார். கலவர கும்பல் போய்விட்டதா என்று அடிக்கடி கேட்ட வண்ணம் இருந்தார். அங்குதான் அவர் நாள் முழுவதும் ஒளிந்திருந்தார். அங்கேயே அவருக்கு உணவு, தண்ணீர் கொண்டு சென்று கொடுத்துவந்தோம். மறைவிடத்தில் பயந்து பதுங்கியிருந்த அவருடைய முகம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இவர்கள் வாசலில் நிற்கும்போது பார்த்து அவர் ஏதேனும் பேசி மாட்டிக்கொண்டுவிடக்கூடாதென்று என் உடல்நடுங்கியது. அதை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டேன்.

வீட்டு வாசலில்  இருந்த கும்பல் வேட்டை மிருகம் போல் வாசனை பிடித்துவிட்டிருந்தது. அவர்களின் தொனி மாறியது: ’எங்கள் அன்னையைக் கொன்றுவிட்டார்கள். உங்களைச் சும்மா விடமாட்டோம்’.

‘அவர் உங்களுக்கு மட்டுமல்ல; தேசத்துக்கே அன்னைதான்; அவர் கொல்லப்பட்ட செய்தி கேட்டு நாங்களும் வேதனையில் ஒன்றும் சாப்பிடாமல்தான் இருக்கிறோம்’ என்று சொன்னேன்.

ஆனால் அவர்கள் அதையெல்லாம் கேட்கவில்லை: ‘உள்ளே ஒளிந்திருக்கும் சர்தாரை வெளியே வரச் சொல். இல்லையென்றால் வீட்டில் இருக்கும் அத்தனை பேரையும் கொன்று குவிப்போம்’.

சிறிது நேரத்தில் வீட்டுக் கதவை உடைக்கத்தொடங்கினர். வீட்டை எரிக்கவும் முயன்றனர். வீட்டுக்குள் சீக்கிய ஆண்கள் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்று யாரோ உளவு சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது.  வீட்டுக்குள் புகுந்து ஒளிந்திருந்த அத்தனை ஆண்களையும் இழுத்துக் கொண்டு சென்று தீயில் தள்ளினர். அத்தனை ஆண்களும் முழு உடம்பும் பற்றி எரிய, துடி துடித்து இறந்தனர்.

கும்பலில் வந்திருந்தவர்கள் அனைவரும் டோதி அணிந்திருந்தனர். நான் அவர்களை இதற்கு முன் எங்கள் பகுதியில் பார்த்திருக்கவில்லை. என் கணவரின் இளைய சகோதரியின் மூன்று வயதுச் சிறுவன் ஹர்ப்ரீத் சிங் ரிக்கியும் எரியும் தீயில் தூக்கி வீசப்பட்டிருந்தான். ஆனால், எப்படியோ பாடுபட்டு அவனைத் தீயில் இருந்து காயங்களுடன் மீட்டுவிட்டேன். ரிக்கியின் தந்தையை, கும்பல் சுற்றி நின்று அடித்தது.  முதலில் அவருடைய காலைக் குறிவைத்து அடித்தது. துவண்டு சரிந்தார். கீழே விழுந்ததும் தலையில் அடித்து மயங்கவைத்தனர். அதன் பின் அவர் மேல் எளிதில் பற்றி எரியும் வெள்ளை நிறப்பொடியைக் கொட்டினர். அதன் பின் தீவைத்தனர்.

இதுபோல் பலரை அவர்கள் என் கண் முன்னே கொளுத்தினார்கள். அவர்கள் செய்ததைப் பார்த்தபோது இதற்கென்றே நன்கு பயிற்சி பெற்றவர்கள் போல் செய்தனர். என் மகன் தர்வீந்தர் சிங்கும் எங்கோ அங்கேதான் இருந்தான், நெருப்புக்கும் கலவரக்காரர்களுக்கும் நடுவில். நான் அவனைத்தேடி ஓடியபோது என் மீது கற்களை எறிந்தனர். ஒரு கல் என் நெற்றியைப் பதம் பார்த்தது. ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. ஆனால், எனக்கு எந்த வலியும் உணர்வும் இருந்திருக்கவில்லை. ஒட்டு மொத்த உடம்பும் உணர்வும் எப்போதோ மரத்துப் போயிருந்தது.

மகனைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே என் முன்னால் இருந்தது. காயங்களைப் பற்றி பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தேன். ஒரு படிக்கட்டின் கீழே மகன் ஒளிந்துகொண்டிருந்தான். பயந்து, காயம்பட்டு பதுங்கியிருந்த அவனைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அப்போது அவனுக்கு 13 வயதுதான் ஆகியிருந்தது.

தெருவில், வீட்டில் ஒளிந்திருந்த ஆண்கள் அனைவரையும் கொன்றதும் கும்பல் கலைந்து சென்றது. தெருவில்  ‘மாமாஜி’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட முதிய சர்தார்ஜி பலத்த காயத்துடன் முனகுவது தெரிந்தது. இருந்த கொஞ்ச உயிரை வெளிக்காட்டாமல் பிணம் போல் கிடந்திருக்கிறார். செத்துவிட்டார் என்று நினைத்துத்தான் கும்பல் விட்டுச் சென்றிருக்கிறது. சீக்கியப் பெண்கள் அந்த முதியவரைக் கைதாங்கலாக தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். கொஞ்சம் ஆசுவாசமடைந்தவர், வீட்டு வாசலில் தட்டுத் தடுமாறிப் போய் நின்றார். நான் உயிருடன் இருக்கும்வரை பெண்கள் யார் மீதும் கைவைக்க விடமாட்டேன் என்று சொல்லியபடி வாசலில் காவல் தெய்வம் போல் நின்றார். சிறிது நேரம் கழித்து வந்த கும்பல் அந்தக் காவல் தெய்வத்தையும் வெட்டிக் கொன்றது.

0

சர்தார்களைக் கொல்லு; தேசத் துரோகிகள் அவர்கள்… என்று கும்பல் முழங்கியது.

முதலில் அவர்கள் மஹன் சிங்கைச் சுற்றி வளைத்தனர். அவருடைய ஆடைகளை உருவினர். கீழே குனிந்து அவற்றை எடுக்க முற்பட்டபோது, சுற்றி நின்றவர்கள் ஒவ்வொருவராக அடிக்க ஆரம்பித்தனர். முதலில் ஒருவருக்குப் பின் ஒருவர் அடித்தனர்; அதன் பின் மொத்தமாக ஒரே நேரத்தில் அடித்தனர். அவருடைய 13 வயது மகன் இந்தர் பால் சிங்கும் 11 வயது ஹர்கிரத் சிங்கும் வீட்டுக் கூரையில் ஒளிந்திருந்து நடுங்கியபடியே பார்த்தனர். அக்கம் பக்கத்தில் இருந்த சிலர் வந்து கும்பலைத் தடுத்தனர்.

‘மஹன் சிங் ஒரு ராணுவ வீரர். நாட்டுக்காக சேவை செய்தவர். போருக்குச் சென்றுவந்தவர்; அவரை விட்டுவிடுங்கள்’ என்று சொன்னார்கள்.

‘அதுக்கென்ன இப்ப? சர்தார்கள் துரோகிகள்தான்’ என்று கும்பலில் இருந்து யாரோ கத்தினார்கள். ரத்தம் பார்க்காமல் போவதில்லை என்று கும்பல் தீர்மானித்திருந்தது. இரும்புக் கம்பி கொண்டு மஹன் சிங்கைத் தாக்கினார்கள். கூரை மேலே ஒளிந்திருந்த மகன் ஹர்கிரத்தினால் தாங்க முடியவில்லை. அப்பாவைக் காப்பாற்ற மேலிருந்து குதித்து அவரை நெருங்கினான்.

‘அடடே… இன்னொரு சர்தார் சிக்கிவிட்டான்’ என்று கும்பல் ஆர்ப்பரித்தது.  கண் மூடிக் கண் திறப்பதற்குள் கையில் இருந்த வாளினால் அந்தச் சிறுவனை மூன்று துண்டாக வெட்டினார்கள். தன் தந்தையும் சகோதரனும் கண் முன்னே கொல்லப்படுவதை இந்தர் சிங் கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருந்தான். அதை நினைத்துப் பார்த்தால் இன்று இத்தனை வருடங்கள் ஆன பின்னும் அவன் உடல் நடுங்க ஆரம்பித்துவிடும்.

அந்தக் கும்பலில் சுமார் 500 பேருக்கு மேல் இருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் முகத்தையும் அவனால் நினைவுகூர முடியவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம், ‘ஏதாவது பணம், நகை கொள்ளையடிக்க வேண்டுமென்றால் எடுத்துச் செல்லுங்கள். கொல்ல மட்டும் வேண்டாம்’ என்று கெஞ்சினார்கள்.

கும்பலுக்கு அலறலைக் கேட்கும் செவிகள் இல்லை. கண்ணீரைப் பார்க்கும் கண்கள் இல்லை. கைகள் மட்டுமே இருந்தது. அதில் இரும்புக் கம்பிகளும் கத்திகளும் மட்டுமே இருந்தன.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பதிலுக்கு சண்டை போட்டிருக்கலாம். அப்படி எதிர்த்திருந்தால் கும்பல் ஒருவேளை கலைந்து போயிருக்கக்கூடும். மஹன் சிங்கின் மனைவி, பக்சீஷ் கௌருக்கு இப்போது வயது 75. திரிலோகபுரியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அங்கிருந்த சீக்கியக் குடும்பங்கள் அனைத்திலும் யாராவது ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.  கைலாஸுக்கு கிழக்கே காரியில் இருக்கும் விதவைகளுக்கான குடியிருப்பில் வசித்துவருகிறார்.

தன் கணவரும் மகனும் கொல்லப்பட்ட 1984லிருந்து அவர்களுடைய குடும்பம் சீரடையவே இல்லை. இன்று அவர் தன் வீட்டில் தனியே அமர்ந்துகொண்டு அழுதபடியே இருக்கிறார். தங்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தப் படுகொலைச் சம்பவத்தை அவரால் இன்று வரையிலும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நாங்கள் சீக்கியராகப் பிறந்ததைத் தவிர வேறு ஒரு தவறும் செய்யவே இல்லையே… நாட்டுக்காகப் பாடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவே இல்லையே.

மஹன் சிங், ஓய்வு பெற்ற ராணுவ ஹவல்தார், 1965, 1971-ல்  பாகிஸ்தானுடன் நடந்த போர்களில்  பங்கெடுத்தவர்).

0

தர்ஷன் கௌரைப் பார்த்து, நீதிபதி திங்க்ரா கேட்டர்: ‘இவரை நீங்கள் தொலைகாட்சியில் பார்த்திருக்கிறீர்களா?’

‘எங்கள் வீட்டில் டி.வி. இல்லையே. எப்படி அவரைப் பார்த்திருக்கமுடியும்?’

‘அவர் உங்கள் முன்னால் வந்தால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா?’

‘ஆமாம். முடியும்’.

‘நன்றாகப் பாருங்கள். இங்கு இருப்பவர்களில் அவர் இருக்கிறாரா?’

கௌர் சுற்றுமுற்றும் பார்த்தார்.

‘இல்லை சார். அவரைப் பார்க்க்க முடியவில்லை’.

‘நிதானமாகப் பாருங்கள் அம்மா… அவசரமே இல்லை’.

கௌர் மீண்டும் அனைவரையும் உற்றுப் பார்த்தார். அங்கு நின்று கொண்டிருந்தவர்களின் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த அவரைப் பார்த்தார். குழப்பவேண்டும் என்ற நோக்கில் அனைவரும் சீருடை போல் ஒரேவிதமான உடை அணிந்திருந்தனர். ஆனால், கௌரினால் அவரை நன்கு அடையாளம் காண முடிந்தது. கௌருக்குள் ஏதோ ஒரு உணர்ச்சி பீறிட்டது. பாய்ந்து சென்று அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார். ஒளிந்துகொண்டிருந்தவர் கீழே விழுந்தார். தர்ஷன் கௌர் தன் காலில் கிடந்த செருப்பைக் கழற்றினார்…

ஹெச்.கே.எல். பகத்தைப் பார்த்ததும் அவள் முன்னே அன்று நடந்த அனைத்தும் கண் முன்னே ஓடின. இந்தக் கொலைகாரன் அன்று மென் மஞ்சள் நிற உடை அணிந்திருந்தான்.      வீட்டு வாசலின் முன்னால் நின்றபடி கலவரக் கும்பலை வெறியேற்றிக் கொண்டிருந்தான். அன்று பகத் சொன்ன  ஒவ்வொரு வார்த்தையும் கௌரின் மனதில் ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது:  ‘ஒற்றை சர்தாரைக்கூட உயிருடன் விடாதே… துரோகிகள்… மண்ணெண்ணெய், ஆயுதங்கள், எல்லாம் இதோ இருக்கின்றன. போலீஸ் நம் பக்கம் தான். கவலைப்படவேண்டாம். சர்தார்களைக் கொன்று குவியுங்கள்…’

இந்த வெறியூட்டலைக் கேட்டு கௌரின் குடும்பத்தைச் சேர்ந்த 12 ஆண்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவளுடைய கணவருடைய கழுத்தில் ஒரு டயரை மாட்டிவிட்டு தீவைத்துக் கொன்றார்கள். கௌரின் கண் முன்னால்தான் அது நடந்தது.  ‘பாரு… சர்தார் பாங்கரா ஆடறான் பாரு’ என்று அவளுடைய கணவர் துடி துடித்து இறப்பதைக் கை கொட்டி வேடிக்கை பார்த்தனர். கணவரின் மூத்த சகோதரர் கியான் சிங்கின் வயிற்றில் கத்தியால் குத்தியபோது குடல் வெளியே வந்து விழுந்தது.

0

1984 கலவரத்தில் பிரதான குற்றவாளியான ஹெச்.கே.எல். பகத் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராகப்  பதவி உயர்வு பெற்றார். அசோக மண்டபத்தில் நின்று கொண்டு ஹெ.கே.எல் பகத் ஆகிய நான்… தேசத்தின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் கட்டிக் காப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

தர்சன்கௌரின் வீட்டில் அப்போது தொலைகாட்சி இருந்தது. அதில் அவர் அந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டார்.

கௌருடைய மூடிய கண்களுக்குள் குடல் பிதுங்கி இறந்த உறவினரின் ரத்தம் சொட்டிக்கொண்டே இருக்கிறது. அவர் சுவாசிக்கும் காற்றில் எரியும் டயரின் வாடை அடித்துக் கொண்டே இருக்கிறது.

0

இந்திரா யார் என்றே எனக்குத் தெரியாது. நான் செய்தித்தாள் வாசிப்பதில்லை. டி.வி. பார்ப்பதில்லை. 31 அக்டோபர், அக்கம் பக்கக் குடிசைவாசிகள் சிலர் சீக்கியர்களின் வீடுகளுக்குள்  புகுந்து டி,வி, பிரிட்ஜ்கள் என தூக்கிச் சென்றனர். எங்களை நோக்கிச் சிலர் வந்தனர். சர்தார்ஜி கையில் கிர்பனை (குறுவாளை) எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டியடித்தார். அப்போது தூரத்தில் மெலிதாக ஒரு முழக்கம் கேட்டது: ‘எரித்துக் கொல்லு…சீக்கியர்களை உயிருடன் விடாதே…’

பயந்தபடியே கணவரை அழைத்துச் சொன்னேன்: ‘வாருங்கள்… எங்காவது போய்விடுவோம். கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறது’.

என் கணவர் என்னைத் திட்டினார்: ‘அதெப்படி ஒன்றும் செய்யாத நம்மைக் கொல்ல முடியும்? நாட்டில் சட்ட திட்டம் என்று ஒன்று இல்லையா என்ன…? காவலன், நீதிமான், நியாயவான் என்று யாரும் இல்லையா என்ன?’

பாவம் அவருக்குத் தெரியவில்லை. அந்த சில நாட்களுக்கு தில்லி  சட்ட திட்டம் இல்லாத பகுதியாகியிருந்தது. காவலர் விடுப்பில் போய்விட்டனர். நீதி தேவதையோ நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள்.

ஆனால், அன்றிரவு என்னால் உறங்க முடிந்திருக்கவில்லை. மறு நாள் எழுந்து பார்த்தபோது ஊரே அமைதியாக இருந்தது. மயான அமைதி என்றோ புயலுக்கு முந்தைய அமைதி என்பதோ அப்போது எனக்குப் புரியவில்லை. என் ஒரு வயது மகனைக் குளிப்பாட்டினேன். வீட்டு வாசலில் திடீரென்று பெரும் கூச்சல் கேட்டது. போய்ப் பார்த்தால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. வீட்டில் இருந்து பார்த்தபோது வெறும் தலைகள் மட்டும் தெரிந்தன.

மண்ணெணெய் வாசனை மூக்கைத் துளைத்தது. சாக்குத் துணியில் ஊற்றிப் பற்றவைத்தனர். என்னமோ செய்கிறார்களே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான், பற்றி எரியும் சாக்குகளை வீட்டுக்குள் எறிய ஆரம்பித்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தேன். வீடுபற்றி எரிய ஆரம்பித்ததும் வேறு வழியின்றி வெளியே ஓட ஆரம்பித்தோம். யாரோ குறி பார்த்து எறிந்த கல் என் கணவரின் தலையைப் பதம் பார்த்தது. ரத்தம் சொட்டச் சொட்டக் கீழே விழுந்தார். நான் அவரை வீட்டுக்கு தூக்கிவந்து வீட்டைப் பூட்டிக்கொண்டேன். கைக்குக் கிடைத்த துணியை வைத்துக் கட்டுப்போட்டேன்.

சிறிது நேரத்தில் வெளியே கும்பல் கதவை உடைக்க ஆரம்பித்தது.

‘சர்தாரை வெளியே அனுப்பு’ என்று கூச்சலிட்டனர்.

நான் என் மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு வராந்தாவுக்குச் சென்று அந்த கும்பலிடம் மன்றாடினேன். எந்தக் கண்களிலாவது கருணை தெரிகிறதா என்று தேடினேன். எந்த உதட்டிலாவது ஆறுதல் வார்த்தைகள் இருக்கிறதா என்று தவித்தேன். எந்தக் கைகளிலாவது ஆயுதங்கள் இல்லாமல் இருக்கிறதா என்று என் கண்கள் அலைபாய்ந்தன. தேவையான எதுவுமே தேவையான நேரத்தில் கிடைத்திருக்கவில்லை.

கும்பல் தன் குரலை மாற்றிக் கொண்டு பேசியது: ‘நீங்கள் எல்லாரும் பஞ்சாபுக்குப் போய்விடுங்கள். உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம்’ என்று தணிந்த குரலில் பேசியது.

என் கணவரை வெளியே வரவைக்கும் தந்திரம் அது என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை. ஒரு சிலர் இதற்குள் வீட்டுக் கூரை மேல் ஏறியிருந்ததும் எனக்குத் தெரியவில்லை.

அவர்கள் சொன்னதை நம்பி, நான் என் கணவரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டேன். அப்போது கூரையில் ஏறி இருந்தவர்களில் ஒருவன் அப்படியே மேலிருந்து பாய்ந்து கையில் இருந்த இரும்புக் கம்பியால் என் கணவரை ஓங்கி அடித்தான். ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன நான் அவருடைய தலையில் கையை வைத்து அழுத்தியபடியே கும்பலிடம் கெஞ்சினேன்.

அங்கிருந்த அத்தனை பேருக்கும் கண் இருந்தன. காது இருந்தன. ஆனால் கும்பலுக்கு கண்ணும் இருந்திருக்கவில்லை. காதும் இருந்திருக்கவில்லை. மீண்டும் மீண்டும் என் கணவரை மாறி மாறி அடித்தனர். என் மீதும் பல அடிகள் விழுந்தன. இன்றும் என் உடம்பு அதை நினைத்தாலே வலிக்கிறது. வீட்டுக்கு மீண்டும் தீவைத்தனர். குழந்தைகளுடனும் கணவருடனும் நடுத்தெருவுக்கு வந்தேன். எங்களுக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை. உதவிக்கு யாருமே வரவில்லை.

என் கணவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் முடியவில்லை. கும்பல் எங்களைச் சுற்றி நின்றது. என் துப்பட்டாவைக் கிழித்து அவருடைய காயத்தில் கட்டுப் போட்டேன். வெண் நிறத் துப்பட்டா சீக்கிரமே செந்நிறமானது.

ஒருவன் எளிதில் பற்றி எரியக்கூடிய வெண்ணிறப் பொடியைக் கொண்டுவந்து அவர் மேலும் என் மேலும் கொட்டினான்.

‘இந்த சிறுக்கி கணவனை விட்டு பிரியவே மாட்டேன் என்கிறாள். இவளையும் சேர்த்துக் கொளுத்திவிடுவோம்’ என்றான்.

தீக்குச்சியைக் கொளுத்தப் போனபோது அருகில் இருந்த ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த புரோகிதர் ஒருவர் தடுத்தார்.  ‘குழந்தைகளையும் பெண்ணையுமாவது விட்டு விடுங்கள்’ என்று முன்னால் வந்து தடுத்தார்.

‘அப்படியென்றால் சர்தாரைக் கொளுத்தலாம்’ என்று கும்பல் தீர்மானித்தது.

புரோகிதர் எங்களைக் காப்பாற்றியது குறித்த நன்றி உணர்வு என் மனதில் இன்றும் இருக்கிறது. அதே நேரம் அவர் சொல்வதை அந்த கும்பல் கேட்கும் என்றால் அவர் சர்தாரையும் சேர்த்துக் காப்பாற்றியிருக்கலாமே என்று எனக்குத் தோன்றியது. கும்பல் என் கனவரை அங்கிருந்து கண்காணாத இடத்துக்கு இழுத்துச் சென்றது. கதறிக் கொண்டிருந்த என்னிடமிருந்து இழுத்து செல்லப்பட்ட அவர் காயங்களோடு விடப்பட்டிருந்தால் கூட நிச்சயம் பிழைத்திருப்பார். ஆனால், அவருடைய உடம்பில் மேலே வெண்ணிறப் பொடியைத் தூவிவிட்டிருந்தனர். உயிருடனே துடிக்கத் துடிக்கக் கொன்றிருப்பார்கள். எரிந்த உடம்பைக்கூட பார்க்க எங்களால் முடிந்திருக்கவில்லை.

0

இந்திராவை கொன்றது சீக்கிய ஆண்கள் என்பதால் சிக்கும் சீக்கிய ஆண்கள் அனைவரையும் கொன்றுவிடு; பெண்களை விட்டுவிடு என்று கும்பலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அன்று நடந்தது கலவரம் என்பார்கள். உண்மையில் கலவரம் என்றால் இருதரப்புகள் மோதலில் ஈடுபடும். கிட்டத்தட்ட இரு தரப்பிலும் இழப்புகள், கொலைகள், சூறையாடல்கள் இருக்கும். இங்கு அப்படி நடக்கவில்லை. சீக்கியர்கள் மட்டுமே தேடிக் தேடிக்கொல்லப்பட்டனர். சீக்கிய வீடுகள், உடமைகள் மட்டுமே கொளுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட காங்கிரஸ் கும்பலில் ஒருவருக்குக் கூட ஒரு சிறு காயம் கூடப் படவில்லை. ஒரு நயா பைசா இழப்பு கூட ஏற்படவில்லை. அந்த கும்பலில் அனைவருக்கும் முழு ஆதாயமே கிடைத்தது. சிலருக்கு மந்திரி பதவிகளே கிடைத்தது.

0

ஜனாதிபதி கியானி ஜெயில் சிங், தன் உதவியாளர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டார்: ‘நான் தான் இந்த தேசத்தின்  ஜனாதிபதியா..? என் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லையா?’.

அவர் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட இந்திரா காந்தியின் உடல் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் போனபோது, அவருடைய பாதுகாப்பு வண்டிகள் மீது மருத்துவமனையில் கூடியிருந்த கும்பல் கல் எறிந்து விரட்டியது.

0

அன்றைய அரசு இந்த படுகொலையை எப்படிக் கையாண்டது என்பதை இந்த ஒரு வாக்கியம் புரியவைத்துவிடும்:

ஒரு பெரிய மரம் கீழே விழும்போது நிலம் சிறிது அதிரத்தான் செய்யும்.

ஐயாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டதும் ஊரைவிட்டு இடம்பெயர நேர்ந்ததும். ம்ரம் விழுவதால் ஏற்படும் சிறிய அதிர்வாக அன்றைய ராஜீவ் காங்கிரஸ் அரசால் புறமொதுக்கப்பட்டது.

0

I Accuse by Jarnail Singh

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *