Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

ஜார்ஜ் ஆர்வெல்

உரைநடை எழுதுவதற்கான நான்கு மகத்தான நோக்கங்கள் பின்வருமாறு.

1. சுத்த அகங்காரம்

இந்த நோக்கம் உடையவர்கள் தங்களைப் புத்திசாலியாகக் காட்டிக்கொண்டு, பிறரும் தன்னை அப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். மரணித்த பிறகும் தான் நினைவுகூரப்பட வேண்டும் என்பது இவர்கள் அவா. குழந்தைப் பிராயத்தில் புறக்கணித்தவர்கள்கூட, அருமை புரிந்து தங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். உண்மையில் இது ஒரு நோக்கமே கிடையாது. இதற்கு வலிமையான காரணகாரியம் சேர்ப்பது படு அபத்தம்.

எழுத்தாளர்கள் மட்டுமல்ல விஞ்ஞானிகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், வக்கீல்கள், போர்வீரர்கள், வெற்றி பெற்ற வியாபாரிகள் என்று மனித குலத்தின் பெரும்பான்மையினர் இந்த நோக்கத்தில்தான் வாழ்கின்றனர். ஆனாலும் மனிதர்களின் சரிபாதி விகிதம் சுயநலத்தால் சூழ்ந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. சராசரியாக முப்பது வயதிற்குமேல் அவர்கள் தனிப்பட்ட லட்சியத்தைக் கைவிடுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் ‘தான்’ என்ற உணர்வு அவர்களை விட்டு வெகுதூரம் போய் விடுகிறது. அதற்குப்பின் மற்றவர்களுக்காக வாழத் தொடங்குகிறார்கள். இல்லையென்றால் அலுப்பூட்டும் கடின வேலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஆனால் அதிலும் சிலர் விஷேசமாக வாழ்நாளின் இறுதி நொடிவரை தனக்காக வாழத் தீர்மானிக்கிறார்கள். எழுத்தாளர்கள் இந்த வகைப்பாட்டுக்கு உட்பட்டவர்கள். மொத்தத்தில் பணத்தின்மீது ஆர்வம் குறைவாக இருந்தாலும், தீவிர எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களைவிட சுயநலமிக்கவர்கள், முக்கியத்துவம் அற்றவர்கள் என்று நான் சொல்வேன்.

2. அழகியல் கொண்டாட்டம்

உலக வாழ்வில் இருக்கும் புறவயமான அழகியலைப் புரிந்துகொள்வது இவர்கள் நோக்கம். சொற்களின் ஒழுங்கமைவில் ரசமான அழகு வழிந்தோடுவதை இவர்கள் கண்டடைகிறார்கள். உரைநடையின் தெளிவும், சொற்கூட்டங்கள் ஒலிக்கும் அழகும், ஒரு நல்ல கதையின் இயைபும் இவர்களைக் காற்றில் மிதக்கச் செய்யும்.

பகிரத்தக்க அனுபவத்தின் பரவசத்தை எப்படியேனும் மற்றவர்களுக்குக் கடத்திவிட வேண்டுமென்று மெனக்கெடுவார்கள். இன்றைக்குப் பல எழுத்தாளர்களிடம் அழகியல் நோக்கம் குறைபட்டிருக்கிறது. சாதாரணமாகத் துண்டுப் பிரசுரம் எழுதுபவரும், பாடப்புத்தகம் எழுதுபவரும்கூட பயன்பாடு கருதாமல், கொஞ்சுவதற்கான செல்ல வார்த்தைகளைக் கையாளுகிறார்கள். எழுத்துரு குறித்தும் பக்க வடிவமைப்பின் ஓர அகலம் குறித்தும் இவர்களுக்கு ஓர் அபிப்பிராயம் உண்டு. அழகியல் குறித்த கருத்தாக்கங்களைப் பொறுத்தவரை, ரயில்வே வழிகாட்டிப் புத்தகங்களைத் தாண்டி இன்னும் எந்தப் புத்தகமும் அதிலிருந்து விடுபடவில்லை.

3. வரலாற்று உந்துதல்

இருப்பதை அசலுக்கு நேர்மையாய் பதிவு செய்து உண்மையைக் கண்டடைய விரும்புவார்கள். எதிர்வரும் சந்ததியினருக்கு குறிப்புப் பொருள் சேர்த்து வைக்கும் நோக்கம் இது.

4. அரசியல் ஆதாயம்

‘அரசியல்’ என்ற வார்த்தையைச் சாத்தியமான மட்டும் பரந்த அளவில் பொருட்படுத்துதல். மற்றவர்களின் எண்ணவோட்டத்தில் இருந்து மாறுபட்டு, உலகை ஒரு குறிப்பிட்ட திசையில் மடைமாற்ற முயற்சி செய்யும் நோக்கம் இது. எந்தவொரு புத்தகமும் அரசியல் சார்பிலிருந்து விடுபட்டது என்று சொல்லமுடியாது. கலைக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது என்ற கருத்துதான்‌ இந்த அரசியல் அணுகுமுறை.

ஒவ்வொரு நோக்கமும் தன்னோடு போட்டிப் போட்டு மல்லுக்கட்டுவதை நாம் பார்க்கலாம். மேலும் அவை நபருக்குத் தகுந்தார் போல், காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. பக்குவம் அடைந்த பிறகு, நீங்கள் கண்டடைந்த முதல் நிலையை உங்கள் ‘இயற்கையான’ நோக்கம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். என் அளவில், நான்காவது நோக்கத்தைவிட முதல் மூன்று நோக்கங்களும் மிகுதியாய் உள்ளவன் நான்.‌

ஆரவாரமில்லாத வயதில் நன்கு அலங்கரிக்கப்பட்ட, வர்ணனை நிறைந்த புத்தகங்களை நான்‌ எழுதியிருக்கலாம். என் அரசியல் நிலைப்பாடு பற்றி அறியாமல் இருக்கலாம். அதுபோல் நான் இப்போது, ஒரு வகையான துண்டுப் பிரசுர எழுத்தாளராக உருவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். தொடக்கத்தில் ஓர் ஐந்தாண்டு காலத்தை எனக்கு ஒவ்வாத தொழிலில் (பர்மாவில் இந்திய ஏகாதிபத்திய போலீஸ் பணி) செலவழித்தேன். அங்கு பஞ்சத்திற்கு ஆட்பட்டு தோல்வியை உணர்ந்தேன்.

அது அதிகார வர்க்கத்தின் மேல் எனக்கிருந்த இயற்கையான பகையைத் தூண்டிவிட்டதோடு, அங்கிருந்த உழைக்கும் வர்க்கத்தினரை அடையாளம் காண உதவி செய்தது. பர்மாவில் எனக்கு வாய்த்த பணி அனுபவம், ஏகாதிபத்தியம் குறித்த முழு புரிதலையும் ஏற்படுத்தியது. ஆனால் இந்த அனுபவங்கள் மட்டுமே துல்லியமான அரசியல் புரிதலை ஏற்படுத்திக்கொள்ள போதுமானதாக இல்லை.

அதற்குப் பின்னர் ஹிட்லர் வந்தார். ஸ்பெயினில் உள்நாட்டுக் கலவரம் மூண்டது. 1935ஆம் ஆண்டின் இறுதியிலும் நிலையான புரிதல் கிடைக்காமல் தள்ளாடினேன். அதுவா இதுவா என்றிருந்த இரண்டும் கெட்டான் நிலையை வெளிப்படுத்தும் விதமாக நான் அப்போது எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

‘இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு,
ஊழிப் பேரழிவை போதித்துக் கொண்டு
வளமையின் வயல்கள் செழிப்படைவதைக் காணும்
ஒரு மகிழ்ச்சியான போதகராக நான் பிறந்திருக்கலாம்.

ஆனால் அந்த ரம்மியமான புகலிடத்தைத் தவறவிட்டு,
கொடுங்கோன்மை காலத்தில் பிறந்துவிட்டேன்.
என் மேல் உதட்டில் முடி வளரும் வேளையில்,
மதகுருமார்கள் எல்லோரும் மொத்தமாக மழித்துவிட்டார்கள்.

அந்நாட்களில் நேரம் நன்றாக இருந்தது,
அற்ப விஷயங்களுக்கும் முறுவல் பூத்தோம்;
மரத்தின்‌ மார்பில் உட்கார்ந்து கொண்டு,
உறுத்திய எண்ணங்களை உறங்கச் செய்தோம்.

அறியாமை இருளைச் சொந்தம் கொண்டாடினோம்,
இன்று மகிழ்ச்சி நம்மை மயக்குகிறது;
ஆப்பிள் மரக்கிளையில் இருக்கும் பச்சைப் பறவையே,
நம் எதிரிகளை நடுங்குறச் செய்கிறது.

சிறுமிகளின் தொந்தியும் பாதாமி மரமும்,
நிழல் படிந்த நீரோடையில் நீந்தும் கரப்பானும்,
விடிகாலையில் பறக்கும் வாத்தும் குதிரையும்
எல்லாம் ஒரு கனவாகிப் போனது.

மீண்டும் கனவு காண தடை செய்யப்பட்டுள்ளது;
மகிழ்ச்சியை மறைத்துக் கொள்கிறோம், அல்லால் மறந்து விடுகிறோம்;
குதிரைகள் குரோமியத்தால் செய்யப்படுகின்றன,
அதில் குண்டாஞ்சட்டியாக ஒருவர் பயணம் செய்கிறார்.

கூடு திரும்பாத புழு நான்,
அந்தப்புரம் இல்லாத பேடி நான்,
போதகருக்கும் கமிஷாருக்கும் இடையில்
யூஜீன் ஆரம் போல் நடைபோடுகிறேன்.

வானொலி இசைக்கும் போது,
கோமிசார் என் எதிர்காலத்தைச் சொல்கிறார்;
ஆனால் டக்கி பணம் செலுத்துவார் என்று,
ஆஸ்டின் செவனை பாதிரியார் பந்தயம் வைக்கிறார்.

பளிங்கு மண்டபத்தில் வசிப்பதாய் கனவு கண்டேன்,
அது உண்மையாக இருக்காதா என்று கண்விழித்தேன்;
என்ன செய்வது நான் அப்படி ஒரு காலத்தில் பிறக்கவில்லையே;
ஒருவேளை ஸ்மித், ஜோன்ஸ் அல்லது நீங்கள் இருந்தீர்களா?’

1936-37 காலக்கட்டத்தில் நிகழ்ந்த ஸ்பானிய போரில் நிறைய கற்றுக்கொண்டேன். நான் எந்தப் பக்கம் என்ற புரிதல் வந்தது. 1936இல் இருந்து நான் எழுதிய ஒவ்வொரு வரியும் எனக்குத் தெரிந்த அளவில் மிகத் தீவிரமாக சர்வாதிகாரத்தை எதிர்த்தும், ஜனநாயக சோசலித்தை ஆதரித்தும் எழுதியவை என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். நாம் வாழ்வது போன்ற காலக்கட்டத்தில், இப்படியான விஷயங்களை எழுதுவதில் இருந்து தவிர்க்கலாம் என்று நினைப்பதே அதி முட்டாள்தனமாகத் தோன்றுகிறது.

ஒவ்வொருவரும் தான் சார்ந்த அணிக்கு ஆதரவாக எழுதுகிறார்கள். ஒருவர் எந்த அணிக்கு ஒத்துழைப்பு தருகிறார், என்னவிதமான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார் என்பதுதான் கேள்வி. ஒருவரின் அரசியல் சார்பு பற்றி நாம் எவ்வளவு அதிகமாக தெரிந்துகொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் நமது அழகியல் மற்றும் அறிவுசார் ஒருமைப்பாட்டைத் தியாகம் செய்யாமல் அரசியல் ரீதியில் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கடந்த பத்து வருடங்களாக அரசியல் எழுத்தை ஒரு கலையாக மாற்ற வேண்டுமென்று இயங்கி வருகிறேன். ஒருதலைபட்சமாக எழுதத் தொடங்குகிறேன் என்பது குற்றத்தின் ஒரு சமிக்ஞைதான். ஆனால் ஒரு புத்தகத்தை எழுத உட்காரும்போது, ‘நான் ஒரு கலைப் படைப்பை உருவாக்கப் போகிறேன்’ என்று எனக்குள் சொல்லிக் கொள்வதில்லை. ஒளிந்திருக்கும் உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும்; பொதிந்திருக்கும் உண்மைக்கு கவனம் கொடுக்க வேண்டும் என்றுதான் எழுதத் தொடங்குகிறேன்.

ஆனால் நான் எழுதும் பத்திரிகை கட்டுரையோ, முழு நீளப் புத்தகமோ அழகியல் தன்மை வாய்ந்ததாக இல்லையென்றால் என்னால் ஒரு வரிகூட எழுத முடியாது. என் படைப்புகளில் வெளிப்படையான பிரசாரக் கருத்துகள் இருந்தாலும், முழு நேர அரசியல்வாதிக்கு ஒவ்வாத பல பக்கங்கள் இருப்பதைக் கவனமாக ஆய்வு செய்யும் ஒருவர் கண்டுபிடித்துவிடலாம்.

குழந்தைப் பிராயத்தில் சேகரமான உலக அபிப்பிராயங்களை என்னால் முற்றிலுமாகத் தவிர்க்க முடியவில்லை. உரைநடையின் வடிவம் மீதும், பூமியின் அழகியல் குறித்தும், குப்பையான போலிச் செய்திகள் குறித்தும் நான் உயிரோடு இருக்கும்வரை நம்பிக்கொண்டும் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டும்தான் இருக்கவேண்டும். என்னுடைய மறுபக்கத்தை அடங்கி ஆள்வதால் ஒரு பயனும் இல்லை. ஆழ வேரூன்றிய விருப்பு வெறுப்புகளைச் சமரசம் செய்வதே எனக்கு வாய்த்திருக்கும் பணி. காலத்தின் கட்டாயத்தின் பேரில் நான் அதை பொதுத் தளத்திலும், தனி நபர் சாராத செயல்பாடுகளிலும் கொண்டுசேர்க்க வேண்டும்.

இது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. கட்டுரையின் கட்டுமானத்திலும் மொழி அமைப்பிலும் சிக்கல் வரலாம். எழுத்தின் உண்மைத் தன்மை குறித்து புதிய வகையில் குழப்பம் உண்டாகலாம். எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தைச் சொல்லி இதை விளக்குகிறேன். ஸ்பானிய உள்நாட்டுப் போர் பற்றி நான் எழுதிய ‘Homage to Catalonia’ என்ற புத்தகம் அப்பட்டமான ஓர் அரசியல் படைப்பு. ஆனால் முடிந்தவரை யார் மீதும் பற்றுதல் இன்றி, வடிவத்தின் மீது அக்கறை செலுத்தி எழுதினேன்.

கூடுமானவரை இலக்கிய உள்ளுணர்வுக்குக் குந்தகம் விளைவிக்காமல் உண்மையைப் பதிவு செய்ய முயன்றேன். மற்ற புத்தகங்களைக் காட்டிலும் இதில் மிக நீண்ட அத்தியாயங்கள் உண்டு. ஃபிராங்கோ உடன் கூட்டுச் சேர்ந்து டிராட்ஸ்கியின் ஆதரவாளர்கள் சதித் திட்டம் தீட்டவில்லை என்று மெய்ப்பிக்கும் பல செய்தித்தாள் கட்டுரைகளை மேற்கோள் காட்டினேன். இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின் அதை வாசிக்கும் ஒருவர், நிச்சயம் அந்த அத்தியாயத்தில் ஆர்வம் இழப்பார்‌. புத்தகத்தை அது கெடுத்துவிடும்.

என் மரியாதைக்குரிய விமர்சகர் ஒருவர், இதைப் பற்றிய நீண்ட விவாதம் எழுப்பிவிட்டு, ‘ஏன் அந்த எல்லா துணுக்குகளையும் அதில் எழுதினீர்கள்?’ என்று கேட்டார்‌. ‘அருமையாக வரவேண்டிய புத்தகமொன்றைப் பத்திரிகை அறிக்கை போல் மாற்றிவிட்டீர்கள்’ என்பது அவர் வாதம். அவர் சொல்வதும் உண்மைதான், ஆனால் அதைத் தவிர்த்து வேறு என்ன வழி இருக்கிறது?

இங்கிலாந்தில் இருக்கும் சில மக்கள் அப்பாவிகள் குறித்து என்ன நினைக்கிறார்கள்‌ என்பதை நான் கேள்வியுற்றபோது, என்னால் வேறு என்ன செய்ய முடியும்? அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தப் புத்தகம்.

ஏதோ ஒரு வகையில் இந்தச் சிக்கல் மீண்டும் மீண்டும் வருகிறது. மொழி கட்டுமானம் பற்றியதான குழப்பத்தை எளிதில் தீர்த்துவிட முடியாது. அது மிகவும் நுட்பமானது. விவாதிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். கடந்த சில ஆண்டுகளில் நான் மிகக் குறைவாகவே அழகியலோடும் துல்லியத்தோடும் எழுத முயற்சித்தேன் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். நீங்கள் ஏதாவது ஒரு எழுத்துப் பாணியை முழுமையாக கைக்கொண்டிருக்கிறீர்கள் என்று ஒருகணம் நினைத்தால், நீங்கள் அதைத் தாண்டி பலதூரம் சென்றுவிட்டீர்கள் என்று நான் சொல்வேன்.

நான் என்ன செய்யவேண்டும் என்ற புரிதலோடு, அரசியல் நோக்கத்தையும் கலையின் நோக்கத்தையும் கலந்து எழுதிய முதல் புத்தகம் ‘விலங்குப் பண்ணை’. அதற்குப்பின் ஏழு ஆண்டுகளில் நான் இன்னும் ஒரு நாவல்கூட எழுதவில்லை. கூடிய விரைவில் மற்றொரு நாவல் எழுதுவேன் என்று நம்புகிறேன். இது ஒருவகையில் தோல்வியாகத்தான் இருக்கும். உண்மையில் ஒவ்வொரு புத்தகமும் தோல்விதான். ஆனால் எம்மாதிரியான புத்தகத்தை எழுத விரும்புகிறேன் என்று ஓரளவு தெளிவாகத் தெரிகிறது.

கடைசி இரண்டொரு பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில் எனது எழுத்தின் நோக்கம் முழுக்க முழுக்க பொதுநலம் சார்ந்தது என்று வெளிப்படையாக உணர்த்தியிருக்கிறேன். ஆனால் அது இறுதி அபிப்பிராயமாக வாசகர் மனதில் பதிய வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல.‌

எல்லா எழுத்தாளர்களும் வெற்றியளிக்காத செயல் ஒன்றைச் சுயநலத்தோடு, சோம்பேறித்தனத்தில் ஊறியபடி செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் மர்மமாக இருக்கிறது. ஒரு புத்தகத்தை எழுதுவது அலுப்புத் தட்டக் கூடிய பயங்கரமான போராட்டம். வலி உண்டாகும் நோயை நீண்ட காலம் முதுகில் சுமப்பது போலான இறுக்கமான நிலை. தன்னை இம்சிக்கக்கூடிய கொடிய சாத்தானை புரிந்துகொள்ளவோ, எதிர்ப்பு சொல்லவோ மனம் வராத ஒருவர்தான் புத்தகம் எழுதத் தொடங்குகிறார்.

கவனம் ஈர்க்க விரும்பும் குழுந்தையின் அதே உள்ளுணர்வைச் சாத்தானும் கைக்கொள்கிறது. ஒருவர் தன் சொந்த ஆளுமையைத் தொடர்ச்சியாக சிதைக்க முன்வரும்வரை, உருப்படியாக அவரால் எதுவும் எழுத முடியாது. நல்ல உரைநடை ஜன்னல் கண்ணாடி போன்றது.

நான் எந்த நோக்கத்தைத் தீர்க்கமாகப் பின்பற்றுகிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பின்பற்றத் தகுந்த நோக்கம் எதுவென்று தெரியும். எனது படைப்புகளைப் புரட்டிப் பார்க்கையில், வெற்று வார்த்தை ஜாலங்களும் அலங்காரச் சொற்களும், அர்த்தமற்ற பத்திகளும், போலி வர்ணனைகளும் எங்கெல்லாம் நிறைந்திருக்கிறதோ மாறுபாடே இல்லாமல் அங்கெல்லாம் அரசியல் நோக்கம் குறைந்திருக்கிறது என்று நான் கண்டடைகிறேன்.

0

‘Why I Write’ –  George Orwell

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *