பகலில் பறந்து திரியும் விட்டில் பூச்சிகளை உறுதியாக அடையாளம் காண இயலாது. அவற்றைப் பார்க்கும்போது இருண்ட இலையுதிர் கால இரவுகளில் நாம் கிளர்ச்சி அடையும் பரவசமும்; ஐவி மலர் பூத்துக் குலுங்கும்போது உண்டாகும் மனதிற்கு நெருக்கமான உணர்வும் தோன்றாது. பொதுவாக விட்டில் பூச்சிகள் தங்களின் மஞ்சள் நிறப் பின்னிறகை பலகணி திரைச்சீலையின் கதகதப்பான நிழலில் வைத்து படுத்துறங்கும்போது நமக்கு ஏற்படும் எவ்விதக் கிறக்கமும் இவற்றைப் பார்க்கையில் உண்டாகாது.
இவை பட்டாம்பூச்சி போல் ஓரின ஈர்ப்புடனோ, மற்றெந்த விட்டில் பூச்சிகளையும் போல் மந்தமாகவோ இருக்காது. இவற்றைக் கலப்பின ஜீவராசி என்று சொல்லலாம். இருந்தாலும் நான் சொல்லும் இந்தப் பூச்சிகள் தன் வைக்கோல் நிற இறகுகளின் விளிம்பில் அதே நிறத்திலான ஒரு குஞ்சம் இழையோடியிருப்பதைக் கண்டு வாழ்க்கையில் திருப்தி அடைகின்றன.
செப்டெம்பர் மாத மத்தியில் ஒரு ரம்மியமான காலைப் பொழுது. அன்றைய சூழல் மென்மையாக தீங்கற்று இருந்தாலும் கோடை மாதக் காற்றைவிடக் கொஞ்சம் தீவிரம்தான். பலகணிக்கு எதிர்ப்புறம் உள்ள நிலத்தைக் கலப்பை இயந்திரம் ஏற்கெனவே பதம் பார்க்கத் தொடங்கியிருந்தது. வாய்ப்பிருக்கும் இடத்தில் எல்லாம் நிலத்தை;த தட்டையாக அழுத்தியதால் ஆங்காங்கே ஈரப்பதம் ஒளிர்ந்தது.
இத்தகு ஆற்றல்மிக்கக் காட்சியை வயல்வெளியில் கண்டபிறகு, எத்தனை முயன்றாலும் புத்தகத்தின்பால் கவனம் செலுத்துவது கடினமான காரியம். ரூக் பறவைகளும் வருடாந்திரக் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான முடிச்சுகளைக் கொண்ட வலை ஒன்று காற்றில் வீசப்பட்டதுபோல் மர உச்சியைச் சுற்றி அவை பறந்துகொண்டிருந்தன. சற்று நேரத்தில், மேலுயர்ந்த பறவைகள் எல்லாம் மீண்டும் மரக்கிளையை நோக்கித் தாழ்வாகப் பறந்து வந்து உட்கார்ந்ததைப் பார்க்கையில் கிளை நுனியில் முடிச்சிட்டதுபோல் இருந்தது.
மிகுந்த ஆரவாரத்துடனும் சத்தத்துடனும் மீண்டும் அந்த வலை பரவலான அளவில் காற்றில் வீசப்படும். வீசப்பட்ட வலை மீண்டும் காற்றில் மிதந்து மெல்ல மரக்கிளையில் வந்து குடியமர்வதைப் பார்ப்பதே ஓர் அற்புதமான அனுபவம்.
ரூக் பறவைகள், விவசாயிகள், குதிரைகள், இன்னும் அடையாளம் தெரியாத சின்னச் சின்னப் பறவைகளின் குட்டி ரோமங்கள் எல்லாம் எவ்வித ஆற்றலால் உந்துதல் பெற்றதோ, அதே மாதிரியான ஓர் ஆற்றல்தான் என் வீட்டுப் பலகணியின் கண்ணாடிச் சட்டத்தில் விட்டில் பூச்சியை படபடக்கச் சொல்லி அனுப்பி வைத்திருக்க வேண்டும். அவரைப் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்த மாத்திரமே, அவர் மீது பரிதாபம் தோன்றும் விசித்திர உணர்வு தொற்றிக் கொள்ளும்.
அன்று காலை மகிழ்ச்சி பூப்பதற்கான சாத்தியக்கூறுகள் மகத்தானதாக இருந்தாலும் விட்டில் பூச்சி அளவு மாறுபட்டு இருந்தன. மேலும் இந்த வாழ்க்கையில் ஒரு விட்டில் பூச்சியின் பங்கை யோசித்துப் பார்த்து, எத்தனை வலிய வாழ்க்கை இந்த ஜீவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என அன்று யோசிக்க முடிந்தது. அற்ப வாய்ப்புகளைப் பயன்படுத்தியாவது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று நாளும் போராடும் அவர் மிகுந்த பரிதாபத்துக்குரியவராகத் தோன்றினார்.
கண்ணாடிச் சட்டத்தின் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு மிகத் தீவிரமாக அவர் பறந்தார். சில நொடிகள் அங்கு அமர்ந்த பிறகு, மீண்டும் மற்றொரு மூலைக்குச் சென்றார். அங்கிருந்து மூன்றாவது மூலை, அதன்பிறகு நான்காவது என்று மாறி, மாறிப் பறப்பதைத் தாண்டி அவரால் என்ன செய்ய முடியும்?
புல் முளைத்த சிற்றுயர மலைகள் எத்தனை எத்தனையாக இருந்தாலும், வானம் எத்தனைத் தூரம் பரந்து விரிந்து காட்சியளித்தாலும், தொலைதூரத்து வீடுகளில் இருந்து புகை கசிந்தாலும், விட்டுவிட்டுக் கேட்கும் நீராவிக் கப்பலின் இதமான சப்தம் எங்கிருந்து ஒலித்தாலும் இவரால் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அவரால் செய்ய முடிந்ததை மட்டும் செய்து வருகிறார்.
அவரைப் பார்க்கும்போது உலகின் மிகச் சக்திவாய்ந்த ஆற்றலை மெலிதான தூய கம்பியில் சுருட்டி, அதை பலவீனம் பொருந்திய அவர் சிறிய உடலில் பொருத்தியதுபோல் தோன்றுகிறது. பலகணிச் சட்டத்தை அவர் கடந்து செல்லும் போதெல்லாம், அபார சக்தியின் ஆற்றல் அடங்கிய கம்பியிலிருந்து இழையொன்று மிளிர்வதை நான் பார்க்கிறேன். மிக அற்பமான ஏதிலியாக இருந்தாலும் அவருக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.
அவர் எத்தனைச் சிறியனாக, அற்ப ஆற்றலோடு இருந்தாலும் திறந்த பலகணி வழியே நுழைந்து என் மூளையின் சிக்கலான குறுகல் பாதையில் அங்கிங்குமாகப் பறந்து பிற மனிதர்களையும் கவர்வதில் அவருக்கு அபார ஆற்றல் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அத்தோடு சோக உணர்வும் சேர்ந்து கொள்கிறது.
யாரோ ஒருவர் ஒட்டுமொத்த வாழ்வில் இருந்து ஒரு குண்டுமணி எடுத்து அதை இறகினும் மெலிதான பறவைச் சிறகில் அலங்கரித்து, அதை மேலும் கீழுமாக வளைத்து வளைத்து ஆட்டி இதுதான் வாழ்க்கையின் இயல்பு என்று சொல்லிக் கொடுப்பதுபோல் இருந்தது. இந்த அந்நியத் தன்மையில் இருந்து யாராலும் மீள முடியாது.
ஏற்ற இறக்கம் நிறைந்த வாழ்க்கையைக் கைக்கட்டிக் கொண்டு, அலங்கரித்து, தடைகளைத் தாண்டி போராடி, கண்ணியத்தைத் தக்கவைக்க எச்சரிக்கையோடு வாழ்வதற்குப் பதிலாக ஒருவர் வாழ்க்கை பற்றி சகலத்தையும் மறந்துவிடலாம். ஒருவேளை அவர் (விட்டில் பூச்சி) வேறு ஏதேனும் உடலில் பிறந்திருந்தால், அவர் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றி அவர் செய்வதை எல்லாம் பச்சாதாபத்தோடு வேடிக்கைப் பார்க்கச் சொல்லி அனுமானிக்கத் தூண்டுகிறது.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, தன் ஆட்டத்தால் சோர்வடைந்த அவர் வெயில் படும்படியாக பலகணி விளிம்பில் அசதி நீங்க உட்கார்ந்தார். விசித்திர ஜாலங்கள் முடிவுக்கு வந்ததால், நானும் அவரை மறந்துவிட்டேன். பின் யதேச்சையாக மேலே பார்த்தபோது, என் கண்களைக் கவர்ந்தார்.
சிரத்தையோடு தன் ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதற்குப் பலவாறாக அவர் முயற்சித்தார். ஆனால் பயனில்லை. அவர் செய்வதெல்லாம் விகாரமாக இருந்தது. பலகணி சட்டத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு சிறகுகளைப் படபடக்க மட்டுமே அவரால் முடிந்தது. அதைத்தாண்டி பறக்கப் போராடினாலும் முன்னேற்றம் இல்லை.
பழுதடைந்த இயந்திரத்தைக் காரணம் கண்டுபிடித்து சரி செய்யதால் மீண்டும் அது இயல்புநிலைக்கு திரும்பிவிடும் என்று காத்திருப்பதைப் போல, வேறு சில அலுவல்களில் குறியாக இருந்ததால் அவர் மேற்கொள்ளும் வீண் முயற்சிகளை அவ்வளவாக அலட்டிக்கொள்ளாமல் மீண்டுமவர் தானாகவே பறப்பார் என்று என்னை அறியாமலேயே காத்திருக்கத் தொடங்கினேன்.
சரியாக ஏழாவது முறை என்று நினைக்கிறேன். மரக்கட்டை விளிம்பில் இருந்து நழுவி, பலகணியின் மேல் தொப்பென்று பின்புறமாக விழுந்து சிறகுகள் படபடக்கும்படி துடித்தார். அவரின் உதவி எதிர்ப்பார்க்காத அணுகுமுறை என்னை மேலும் ஈர்த்தது. அவர் சிரமப்படுவதும், அவரின் கையாலாகாத தனமும், வலியில் கால்கள் துடிப்பதும் என்னுள் மின்னல் போல பளிச்சிட்டது.
அவர் தன்னைத் தானே சரிசெய்துகொள்ள உதவ வேண்டுமே என்று நினைத்து நான் ஒரு பென்சிலை அவர் பக்கம் நீட்டினேன். ஆனால் தோல்வியும் அவஸ்தையும் அவர் மரணத்தை நெருங்கிவிட்டார் என்று உணர்த்தியது. பென்சிலை மீண்டும் கீழே வைத்துவிட்டேன்.
அவர் கால்கள் தானாகக் கலகமிட்டன. யாருக்கெதிராக இவர் போர் தொடுக்கிறார் என்பது போல் சுற்றிமுற்றிப் பார்த்தேன். கதவுக்கு வெளியே நோட்டமிட்டேன். அங்கே என்ன நடந்தது? நேரம் மத்தியானத்தைத் தொட்டிருக்கும். வயல் வேலைகள் நின்றுபோயிருந்தன. முந்தைய காட்சிகளுக்கு மாறாக மௌனமும் அமைதியும் குடிகொண்டன. ஓடைகளில் உணவு தேடி பறவைகள் வேறிடம் போயின. குதிரைகள் அசையாமல் நின்றன.
அங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான அதிகாரம் இருந்தாலும் அலட்சியத்தோடு, நட்புக்கரம் நீட்டாமல், எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். வைக்கோல் நிற விட்டில் பூச்சிக்கு இது ஒருவகையில் எதிரானது. ஏதாவது செய்ய முயற்சித்தாலும் அது வீண்வேலைதான்.
எதிர்வரும் பேரழிவு ஒட்டுமொத்த நகரத்தையும் மனிதக் கூட்டத்தையும் மொத்தமாக கபளீகரம் செய்யும் ஆற்றல் பெற்றது. அதற்கெதிராக இந்தச் சின்னஞ்சிறு கால் படைத்த விட்டில் பூச்சி செய்வதை வெறுமனே வேடிக்கை வேண்டுமானால் பார்க்கலாம். மரணத்தை எதிர்த்துப் போராடுவதற்கு எவ்வித வாய்ப்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
சோர்வுக்குப் பின் சற்று நேரம் ஓய்ந்திருந்த கால்கள் மீண்டும் படபடக்க ஆரம்பித்தன. இந்தக் கடைசி போராட்டம் மிகச் சிறப்பாக, வெறித்தனமாக இருந்தது. இறுதியில் தன்னைத் தற்காத்துக் கொள்வதில் அவர் வெற்றிபெற்றுவிட்டார்.
வாழ்க்கையின் மீதுதான் ஒருவருக்கு அனுதாபம் தோன்றுகிறது என்பதில் சந்தேகமில்லை. தன்மீது அக்கறை செலுத்த யாரும் இல்லாத சூழலில், யாரும் மதிக்காத, தன்னைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாத, சிலவற்றைத் தக்கவைக்கும் பொறுட்டு இந்தச் சிறிய விட்டில் பூச்சி எதிர்கொள்ளும் பிரம்மாண்ட ஆற்றலுக்கு எதிரான மகத்தான போர் பார்ப்பதற்கே விசித்திரமாக இருந்தது. மீண்டும் ஒருவர் வாழ்க்கையை ஒரு சுத்தமான குண்டுமணியோடு ஒப்பிடலாம்.
பயனற்றது எனத் தெரிந்தாலும் நான் அந்தப் பென்சிலை மீண்டும் கையிலெடுத்தேன். நான் அப்படிச் செய்தும், தவறிழைக்காத மரணத்தின் அடையாளங்கள் தங்களை வெளிக்காட்டின. உடல் தளர்ந்து, விறைத்துப் போனது. போராட்டம் முடிவுக்கு வந்தது. அற்பமான அந்தச் சிறிய உயிரினம் மரித்துப் போனது.
இறந்து போன விட்டில் பூச்சியை பார்க்கும்போது, தன் அசாத்திய எதிராளிக்கு மாறாகச் சண்டையிட்ட அபார ஆற்றலின் அந்த நேரத்து வெற்றி என்னை ஆச்சரியப்படுத்தியது. சில நிமிடங்களுக்கு முன்பு வாழ்க்கை அந்நியமாகத் தோன்றியதைப் போல், இறப்பு இப்போது அந்நியமானது. தன்னை இப்போது முழுமையாகச் சரிசெய்துகொண்ட விட்டில்பூச்சிக்கு இனி கண்ணியத்திற்குக் குறையில்லை. ‘அட ஆமாம். மரணம் என்னைவிட வலியது’ என்று அவர் சொல்வதுபோல் உள்ளது.
0
‘The Death of the Moth The Death of the Moth’ – Virginia Woolf
“மரணம் என்னை விட வலியது”அருமை டா தம்பி..❤️❤️❤️👏👏