நான் இங்கு பேசுவதற்காக அழைக்கப்படலாம் என்று அவர்கள் சொன்னபோது, என்ன பொருண்மையில் பேச வேண்டும் என்று அவர்களிடம் விசாரித்தேன். இளைஞர்களுக்கு ஏற்ப ஏதேனும் ஒருவகையில் அறிவுரையோ, நல்வழிப்படுத்தும் போதனையோ, மேம்படுத்தும் ஆலோசனையோ சொன்னால் நல்லது என்றார்கள்.
மிக நல்லது. இளைஞர்களுக்காகச் சில அறிவுரைகள் சொல்லவேண்டும் என்று என் மனத்தை வெகுநாட்களாக சில விஷயங்கள் அரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வயதில்தான் அதைப் புரிந்துகொள்வதற்கான மனப் பக்குவமும், உயர் பண்புகள் வேர் பிடிக்கும் திடநிலையும் வாய்க்கும். என் இளைய நண்பர்களே, நான் உங்களிடம் மன்றாடி, வற்புறுத்திச் சொல்கிறேன். கேளுங்கள்.
எப்போதும் உங்கள் பெற்றோரின் பேச்சுக்கு மதிப்புக் கொடுங்கள். குறைந்தபட்சம் அவர்கள் முன்னிலையிலாவது நீங்கள் அப்படி நடந்துகொள்ள வேண்டும். நீண்ட காலத்திற்கு ஓட்டம் பிடிக்க இதுவொன்றுதான் சிறந்த வழி. இல்லையென்றால் நீங்கள் கீழ்படிந்து நடக்கும்படி அவர்களாகவே ஏதேனும் ஒன்றை நிர்பந்திப்பார்கள்.
பொதுவாக குழந்தைகளைவிட தனக்கு அதிகம் தெரியும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு உண்டு. உங்கள் சொந்த அபிப்பிராயத்தில் முடிவெடுப்பதைக் காட்டிலும் அவர்களின் மூடநம்பிக்கையை விளையாட்டாகக் கையாண்டால் நிறைய விஷயங்கள் சாதிக்கலாம்.
உங்களைக் காட்டிலும் வயதில் முதியவர்களுக்கு மரியாதை கொடுங்கள். அவர் முன்பின் தெரியாத அந்நியராய் இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. உங்களை ஒருவர் புண்படுத்தினால், அது உள்நோக்கம் நிறைந்ததா எதேச்சையானதா என்று குழப்பத்தில் அதி தீவிர முடிவுகளுக்குச் செல்ல வேண்டாம்.
உங்கள் வாய்ப்புக்காகக் காத்திருந்து, உரிய நேரம் வாய்க்கையில் செங்கல்லால் செமத்தியாகத் தாக்குங்கள். அதுவே போதுமானது. ஒருவேளை அவர் செய்ததில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லையென்று தெரியவந்தால், பதற வேண்டாம். ஒரு பெரிய மனிதர்போல உங்கள் செய்கையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, உள்நோக்கத்துடன் நீங்கள் இதைச் செய்யவில்லை என்று புரியவைக்கலாம்.
ஆம். எப்போதும் வன்முறையில் இறங்கக் கூடாது. அன்பும் கருணையும் பீடித்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் வன்முறைக்குத் துளியும் இடம் இல்லை. குரோதச் செயல்களைக் கீழானவர்களும் நாகரிகமற்றவர்களும் பார்த்துக் கொள்வார்கள்.
இரவில் சீக்கிரம் தூங்கச் சென்று, அதிகாலையில் துயில் எழுவது புத்திசாலித்தனமான செயல். சில அதிகார மையங்கள் சூர்ய உதயத்தின்போது எழுந்திருக்க வேண்டுமென்று சொல்கின்றன. வேறு சிலர் வேறொன்றோடும்; இன்னும் சிலர் மற்றொன்றோடும் தொடர்புபடுத்தி விதவிதமாக அறிவுரை சொல்கின்றனர்.
ஆனால் வானம்பாடி பறவைகளோடு துயில் எழுவது என்னளவில் சிறந்ததென்று கருதுகிறேன். வானம்பாடிகளோடு தூங்கச் சென்று, அத்தோடு துயில் எழுவதைக் கேள்விப்பட்டால் பிறருக்கு உங்கள் மீது நன்மதிப்பு உண்டாகும்.
ஆனால் உங்களுக்கு உகந்த வானம்பாடியை நீங்கள் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. அதைத் தொடர்ச்சியாக பயிற்றுவித்து வந்தால் சராசரியாக 9.30 மணிக்கு எழுந்திருக்கும்படியான வானம்பாடியோடு நீங்களும் நிம்மதியாகத் தூங்கலாம். இதில் மாயாஜாலமோ வித்தையோ கிடையாது.
பொய் சொல்லும் விஷயத்தில் நீங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் மாட்டிக் கொள்வதற்கு அநேக வாய்ப்பு உண்டு. ஒருமுறை பிடிபட்டால், இதுநாள்வரை உங்கள் மீதிருந்த அத்தனை அபிப்பிராயங்களும்; உங்கள் மீதான ஏகோபித்த அவதானிப்புகளும் மாறிவிடும்.
ஏடாகூடமாகச் சொன்ன ஓர் அசட்டுப் பொய்யினால் சிலரின் வாழ்க்கை நிரந்தரமாகப் பாழடைந்திருக்கிறது. அனுபவக் குறைபாட்டால் தோன்றும் அஜாக்கிரதையின் விளைவு இது. இளைஞர்கள் பொய் சொல்லவே கூடாதென்று சில அதிகார மையங்கள் முரண்டு பிடிக்கின்றன. நிச்சயம் இது தேவைக்கும் அதிகமான கட்டுப்பாடு.
என்னால் இதை நேர்த்தியாகச் சொல்ல முடியாமல் போனாலும், நான் பின்பற்றும் அளவில், எனக்குச் சரியெனப்பட்டதை உங்களுக்குச் சொல்கிறேன். பொய் சொல்லும் இந்த அரிய கலையில் போதுமான பயிற்சியும் அனுபவமும் இல்லாதவரை நம்பத்தகுந்த, நளினமான, உண்மைக்கு நிகரானதொரு பொய்யை உங்களால் சொல்ல முடியாது. அதில்தான் இந்தப் பொய்யாடல் கலையின் வெற்றியும் அழகும் ஒளிந்திருக்கிறது.
பொறுமையாக விடாமுயற்சியுடன் மெனக்கெட்டு சின்னச் சின்னக் குறிப்புகளையும் ஒன்றுசேர்த்து சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் மாணவர்களே இந்தக் கலையில் நிபுணத்துவம் அடைகிறார்கள். அவர்களின் எதிர்காலம் மேன்மை அடைய உறுதியான அடித்தளம் அமைகிறது.
‘வாய்மை வலிமையானது. வாய்மையே வெல்லும்’ என்ற மாபெரும் உண்மை எலும்புடைந்து போனாலும் அதை உலகின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்கும்படிச் செய்த ஒப்பற்ற மனிதரின் இடைவிடாத ஆண்டுக்கணக்கான போராட்டங்களையும், படிப்பினைகளையும், எண்ணவோட்டங்களையும், பயிற்சிகளையும், அனுபவங்களையும் எண்ணிப் பாருங்கள். நம் ஒட்டுமொத்த இன வரலாற்றிலும், தனிநபர் அனுபவத்திலும் ‘உண்மையை அழிப்பது அத்தனைச் சிரமமில்லை என்றும் நன்கு சொல்லப்பட்ட புறமொழிக்கு மரணமில்லை’ என்றும் ஊர்ஜிதமாகும் சான்றுகள் நிறைய உள்ளன.
மயக்கமருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு பாஸ்டனில் ஒரு சிலை இருக்கிறது. ஆனால் உண்மையில் அதை அவர் கண்டுபிடிக்கவில்லை; மற்றொருவரின் கண்டுபிடிப்பை அவர் திருடிவிட்டார் என்ற உண்மை இப்போது பெரும்பாலோருக்குத் தெரியும். இந்த உண்மை மிகப் பெரியதென்றால் எத்தனை நாட்கள் நீடிக்கும்?
என் நண்பர்களே, அந்தச் சிலை திடமான கடினப் பொருளினால் வடிவமைக்கப் பட்டது. ஆகையால் அந்தப் பொய் லட்சக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழும். அருவருப்பான, நம்பத்தகாத, கசியும் தன்மையுடைய பொய் சொல்வதிலிருந்து நீங்கள் ஓயாமல் பயிற்சி எடுத்துத் தவிர்க்க வேண்டும். சராசரி உண்மையைக் காட்டிலும் அந்தப் பொய் நிலைத்திருக்கும் சாத்தியக்கூறு மிகக் குறைவு. இதற்குப் பதிலாக உண்மையைச் சொல்லி ஒரேயடியாக முடித்து விடலாம்.
ஒருவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டாக இல்லாதபட்சத்தில் நம்பத்தகாத, முட்டாள்தனமான, அபத்தமுடைய பொய் இரண்டு ஆண்டுகளுக்குமேல் நிலைத்திருக்காது. ஒரு பொய்யின் நிலைத்த தன்மையில் நிச்சயம் உங்களுக்குப் பங்கு கிடையாது. இறுதியாகச் சொல்கிறேன்: கருணைமிக்க வசீகரக் கலையை, கூடிய விரைவில் பயிற்சி செய்யுங்கள். முடிந்தால் இன்றைக்கே தொடங்கலாம். ஒருவேளை நான் முன்னரே பயிற்சி பெறத் தொடங்கியிருந்தால், இந்தக் கலையில் பாண்டித்தியம் பெற்றிருப்பேன்.
ஆயுதங்களை எப்போதும் கவனமாகக் கையாளுங்கள். இளைஞர்கள் அப்பாவித்தனமாக, கவனமின்றி ஆயுதங்களைக் கையாண்டதில் பல துயரச் சம்பவங்களும் துன்பக் காட்சிகளும் அரங்கேறியுள்ளன. நான்கு நாட்களுக்கு முன்பு, நான் தங்கியிருக்கும் கோடைக்காலப் பண்ணை வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி ஒரு சம்பவம் நடந்தது.
அந்த வீட்டில் ஒரு வயதான பாட்டி இருக்கிறார். அங்கிருக்கும் வெகுசில அன்பான மனிதர்களுள் அவரும் ஒருவர். எப்போதும் போல அன்றைக்கும் தன் வேலைகளில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். அவரின் சிறுவயது பேரன் தரையில் ஊர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது துருப்பிடித்த, பழைய துப்பாக்கி ஒன்றைக் கண்டெடுத்தான்.
பல ஆண்டுகளாக யார் கையும் படாமல் பலத்த சேதமடைந்த நிலையில் இருந்தது. ஆகையால் அதில் தோட்டாக்கள் இருக்க வாய்ப்பில்லை. அப்பாவிச் சிறுவன் அந்தத் துப்பாக்கி முனையை பாட்டியின் முன் வைத்து சிரித்துக்கொண்டே பயமுறுத்தினான்.
பாட்டியும் வெகு ஈடுபாட்டுடன் அலறுவதுபோல் துடித்து விளையாட்டாக அறையின் மறுபக்கம் வரை கெஞ்சிக் கொண்டே ஓடினாள். ஆனால் பாட்டி அவனைக் கடந்து செல்லும்போது, அவன் அவளை நெருங்கி கிட்டத்தட்ட அவள் மார்புக்கு நேராகத் துப்பாக்கியை நிலைநிறுத்தி படார் என்று சுட்டான். அவன் அதில் தோட்டா இல்லையென்று நினைத்தான். ஆம் அது உண்மைதான். அதில் தோட்டா இல்லை. அதனால் பிரச்சனை இல்லை. நான் கேள்விப்பட்ட ஒரே சம்பவம் இதுதான்.
எனவே, அதைத்தான் நான் சொல்கிறேன். தோட்டாக்களற்ற பழைய துப்பாக்கிகளிடம் சகவாசம் வேண்டாம். மனிதக் கண்டுபிடிப்பில் நேர்த்தியான மிகக் கொடிய விஷயம் அதுதான். அத்தோடு நீங்கள் எவ்வித வலிக்கும் ஆளாக வேண்டாம்; அமைதியிழக்க வேண்டாம்; துப்பாக்கிகளைப் பார்க்க வேண்டாம்; இலக்கைக் கூட குறிவைக்க வேண்டாம். உங்கள் சொந்தக்காரர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இதைத் தொடர்ந்து செய்தால், எதிர்பார்த்தது நடக்கும்.
முப்பது அடி தூரத்தில் இருக்கும் தேவாலயத்தை கேட்லிங் துப்பாக்கிகளால் குறிவைத்து முக்கால் மணி நேரத்தில் சுடமுடியாத ஒருவர் தோட்டாக்களில்லாத ஒரு பழைய தெறாடி துப்பாக்கியால் தன் பாட்டியை ஏராளமான முறை சுட்டு வீழ்த்த முடியும்.
வாட்டர்லூ யுத்தத்தில் தோட்டாக்கள் இல்லாத பழைய தெறாடி துப்பாக்கிகள் ஏந்திய சிறுவர்கள் ஒருபுறம் ஆயுதம் பலம் பொருந்திய போர்வீரர்கள் மறுபுறம் என்று யோசித்துப் பாருங்கள். வெற்று யோசனையே நடுங்குறச் செய்கிறது.
பலவகையான புத்தகங்கள் இருந்தாலும், நல்ல புத்தகங்களை மட்டும்தான் இளைஞர்கள் படிக்க வேண்டும். நினைவிற் கொள்ளுங்கள். அவைதான் உங்கள் ஏற்றத்திற்கான மிகச்சிறந்த, அளவிட முடியாத பாதைகளை வடிவமைக்கின்றன. ஆகையால் மிகுந்த எச்சரிக்கையுடன் புத்தகங்களைத் தேர்வு செய்யுங்கள் நண்பர்களே.
ராபர்ட்சனின் ‘பிரசங்கம்’, பாக்ஸ்டரின் ‘துறவிகளின் ஓய்வு’, ‘வெளிநாட்டுவாழ் அப்பாவிகள்’ போன்ற நூல்களால் உங்கள் தேடல் பட்டியலை நிரப்பவேண்டும்.
போதுமானவரை நான் சொல்லிவிட்டேன். நான் சொன்ன அறிவுரைகளில் இருந்து தேவையானவற்றை போற்றிப் பாதுகாப்பீர்கள் என்று நம்புகிறேன். இது உங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவும்; புரிதலுக்கான ஒளியாகவும் விளங்குமென்று எதிர்பார்க்கிறேன். இந்த விதிமுறைகளின் அடிப்படையில் உங்கள் பழக்க வழக்கங்களை சிரத்தையெடுத்து சீர்படுத்துங்கள். எந்த அளவுக்கு நீங்கள் மற்றவர்களோடு ஒத்திருக்கிறீர்கள் என்ற ஆச்சரியத்தை எண்ணி மகிழ்ச்சி அடைவீர்கள்.
0
________
‘Advice to Youth’ – Mark Twain