Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

ஒரு தூக்குத் தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

பர்மாவில் அந்தக் காலைப் பொழுது மழையில் நனைந்து விடிந்தது. தகரத்தால் ஆன மஞ்சள் நிற ஃபாயில் பேப்பர்போல் மெல்லிய ஒளிக்கீற்று ஒன்று சிறை வளாகத்தின் உயரமான சுவர்களின்மேல் பரவியது. சிறு அளவிலான விலங்குக் கூண்டுபோல் இரட்டை கம்பிகளால் பாதுகாக்கப்பட்ட குற்றவாளிகளின் சிறை அறையின் முன்னதாக நாங்கள் காத்திருந்தோம்.

ஒவ்வொரு அறையும் பத்துக்கு பத்து அளவில் இருந்தன. பலகையில் ஆன படுக்கையும் தண்ணீர் பானையும் தவிர்த்து ஒவ்வொரு அறையும் வெறுமையால் நிரம்பியிருந்தது. சில பழுப்பு நிற மனிதர்கள் கம்பிகள் அடைத்த அறையினுள் போர்வையைச் சுற்றிக் கொண்டு சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் எல்லோரும் இன்னும் இரண்டொரு வாரத்தில் தூக்கிலிடப்படும் குற்றவாளிகள்.

சிறைவாசி ஒருவன் அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டான். அவன் ஓர் இந்து. மழிக்கப்பட்ட தலையும், தெளிவற்ற பார்வையும் கொண்ட மெலிந்த வைக்கோல் போலான தேகம். முளைவிடும் கட்டையான மீசை, அவன் உடலுக்குக் கொஞ்சமும் ஒத்துவராமல் பெரிதாக இருந்தது. ஓரளவு இதைத் திரைப்படங்களில் வரும் நகைச்சுவை நடிகரின் மீசையோடு ஒப்பிடலாம்.

நன்கு உயரமான ஆறு இந்தியக் காவலாளிகள் அவனைக் கண்காணிப்போடு தூக்குமேடைக்கு ஆயத்தப்படுத்தினார்கள். அதில் இருவர் சுழல் துப்பாக்கியும் சுரிகையும் கையில் ஏந்தியிருந்தனர். மற்றவர்கள் அவன் கையில் விலங்கு மாட்டி அதனூடாக சங்கிலி ஒன்றைப் பிணைத்து, அதன் மறுமுனையைத் தங்கள் இடுப்புப் பட்டையோடு இணைத்திருந்தனர். கரங்களின் பக்கவாட்டில் தாக்கி அவனைத் தங்கள் பக்கம் இழுத்தனர்.

எப்போதும் அவன் தங்கள் பிடியில் இருக்கிறான் என்பதை உறுதிசெய்ய, அனுக்கமாக நெருங்கி கவனமாகப் பிடித்திருந்தனர். உயிருள்ள மீன் மீண்டும் தண்ணீரில் குதித்துவிடுமோ என்ற அச்சத்தில் அதை இலாகவமாகக் கையாளும் மீனவரின் பக்குவம் இதில் வெளிப்பட்டது. ஆனால் அவன் மறுப்பின்றி, சங்கிலிகளுக்குத் தன் கையைத் தாராளமாக மனமுவந்து கொடுப்பதுபோல், இங்கு நடப்பவைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நின்றான்.

தூரத்துக் கூடத்திலிருந்து பியூகிள் சத்தமொன்று, ‘எட்டு’ மணி நெருங்கியதைப் பறைசாற்றும் வண்ணம் ஈரக் காற்றில் துணையின்றி மெலிதாகப் பறந்து வந்தது. ஜல்லிக் கற்களைத் தன் குச்சியில் கிளறிக் கொண்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் எங்களிடம் இருந்து விலகி நின்றிருந்தார். பியூகிள் சத்தம் கேட்டதும் அதற்கென்றே காத்திருந்தவர்போல தலையை உயர்த்தி தொண்டையைச் சரிசெய்தார்.

அவர் ஓர் இராணுவ மருத்துவர். சாம்பல்நிற ஹிட்லர் மீசையும் கரகரப்பான குரலும் அவர் அடையாளம்.‌ “அடக் கடவுளே, பிரான்சிஸ்” என்று எரிச்சலோடு கத்தினார்.‌ “இந்நேரம் அவன் இறந்திருக்க வேண்டும். இன்னும் நீங்கள் தயாராகவில்லையா?”

பிரான்சிஸ் கையசைத்து, “இதோ.. இதோ தயார் சார்” என்று விரைந்து பதிலளித்தார். தலைமைக் காவலரான பிரான்சிஸ் கொழுத்த சரீரம் உடைய திராவிடர். வெள்ளை நிற தடித்த ஆடையும் தங்கக் கண்ணாடியும் அவர் அணிந்திருந்தார்.

“எல்லாம் மனநிறைவாக தயாராகிவிட்டது. தூக்கிலிடுபவர் காத்துக்கொண்டிருக்கிறார். நாம் தொடங்கலாம் சார்.”

“அப்போ சரி, விரைவாக அணிவகுத்துச் செல்லுங்கள். இந்தக் காரியம் முடியும்வரை சிறைவாசிகளுக்குக் காலை உணவு கிடையாது.”

நாங்கள் தூக்குமேடை நோக்கிச் சென்றோம். இரண்டு காவலாளிகள் அந்தக் குற்றவாளியின் இருமருங்கிலும் சுழல் துப்பாக்கி ஏந்தி உடன் வந்தார்கள். மற்ற இருவர் அவன் தோல்பட்டை மற்றும் கரங்களை இறுக்கமாகப் பிடித்து ஒத்தாசை செய்வதுபோல் கையோடு இழுத்து வந்தனர்.

நீதிபதி, நாங்கள், இன்னும் சிலர் எல்லாம் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். பத்து அடி வைத்த பிறகு, யாரின் ஆணையும் இல்லாமல் திடீரென்று அந்தக் கூட்டம் அப்படியே நின்றது. அதி பயங்கரமான சம்பவமொன்று அங்கு நிகழ்ந்தது.

திடீரென ஒரு நாய்க்குட்டி எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் எங்களை நோக்கி முற்றத்திற்கு ஓடி வந்தது. குரைத்துக் கொண்டே நெருங்கி வந்து தன் உடலை முழுவதுமாக ஆட்டி மேலும் கீழும் குதித்தது. பல மனிதர்களைக் கண்ட மகிழ்ச்சியில் அது அப்படிச் செய்திருக்க வேண்டும். ஏர்டேல் மற்றும் பரியா இனக் கலப்பில் பிறந்த பெரிய அளவிலான பொசுபொசு நாய்.

வந்த கணத்தில் எங்களைச் சுற்றி பகட்டாக நடந்து கொண்டிருந்த நாய், யாரும் சுதாரிக்கும் முன்னர் குற்றவாளியை நெருங்கி அவன் முகத்தை முழுதாக நக்க முயன்றது. நாயைப் பிடித்திழுக்க யோசனை இல்லாமல், எல்லோரும் திகைத்து நின்றனர்.

“யார் இந்த மிருகத்தை உள்ளே விட்டது?” என்று கண்காணிப்பாளர் கோபமாகத் திட்டினார்.

“யாராவது ஒருவர் பிடியுங்கள்!”

குற்றவாளியின் எஸ்கார்ட்டிலிருந்து விலகிக் கொண்ட காவலாளி ஒருவர் ஆக்ரோஷமாக நாயைத் துரத்திக் கொண்டு ஓடினார். இதை விளையாட்டாக எடுத்துக் கொண்ட நாயும் அவருக்குப் பிடிகொடுக்காமல் நடனமாடி வெறுப்பேற்றியது. யூரேசிய காவலர் ஒருவர் கைநிறைய ஜல்லிக் கற்களை எடுத்து நாய்மீது வீச முயன்றார். ஆனால் அவருக்கும் தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் எங்களை நோக்கி வந்தது.

அதன் கணீரென்ற குரல் சிறைச்சாலைச் சுவரில் பட்டு எதிரொலித்தது. இரு காவலாளிகளின் கிடுக்குப் பிடியில் சிக்குண்டு கிடக்கும் குற்றவாளி இதை ஆரவாரமின்றி வேடிக்கைப் பார்த்தான். மரண நாடகத்தில் இதுவும் ஓர் அங்கம் போல. சில நிமிடப் போராட்டங்களுக்குப் பிறகு நாய் பிடிபட்டது. பின்னர் எனது கைக்குட்டையை அதன் கழுத்துப் பட்டையில் கட்டிவிட்டு நாங்கள் மீண்டும் முன்னோக்கி நடந்தோம். அது மேலும் சிரமப்பட்டுச் சிணுங்கியது.

தூக்குமேடைக்கு இன்னும் 40 அடிகள் இருக்கும். எனக்கு முன் செல்லும் குற்றவாளியின் பழுப்பு நிற முதுகைப் பார்த்தேன்.‌ தன் பிணைக்கப்பட்ட கைகளோடு விகாரமாக நடந்து சென்றான். இருந்தாலும் அவன் நடையில் நிதானமும் முட்டி மடங்காத இந்தியர்களின் துள்ளல் ஓட்டமும் தெரிந்தது.

அவன் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் சதைப்பகுதி அதனதன் இடத்தில் நேர்த்தியாக நழுவிவந்தன; அவன் உச்சந்தலையில் இருந்த மயிர் கற்றை மேலும் கீழும் ஆடியது; ஈர ஜல்லியில் அவன் பாதம் நன்றாகப் பதிந்தது. காவலர்கள் இறுக்கமாகப் பிடித்திருந்தாலும் மழை நீர் குட்டைகளில் கால் வைக்காமல் நழுவ அவர்களை மீறி அவ்வப்போது இடறினான்.

இதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த நொடிவரை ஆரோக்கியமான புத்தி சுவாதீனம் உடைய ஒருவனைத் தூக்கிலிடுவது பற்றி எனக்கு எவ்விதச் சிந்தையும் இல்லை. ஆனால் நீர் குட்டைகளைக் கண்டு ஓரம் சென்று ஒதுங்கும் குற்றவாளியைப் பார்த்த பிறகு, நான் அந்த மர்மத்தை உணர்ந்துகொண்டேன்.

வாழ்க்கை முழுவீச்சில் சென்றுகொண்டிருக்கும்போது அதைப் பாதியில் நறுக்கிவிடுவது எத்தனை சொல்லொணாக் குற்றமென்று புரிந்துகொண்டேன். அவன் மடிந்து கொண்டிருக்கவில்லை. நம்மைப் போலவே துடிப்போடும் உயிர்ப்போடும் இருக்கிறான். அவன் உடலுறுப்புகள் எல்லாம் பிரமாதமாக வேலைசெய்து கொண்டிருந்தன. உணவைக் குடல் செரிமானப் படுத்துகிறது; சதை தன்னை புதுப்பித்துக் கொள்கிறது; நகங்கள் வளர்கின்றன; திசுக்கள் உருவாகின்றன. முட்டாள்தனமான கடின உழைப்பில் அவை மும்முரமாக ஈடுபட்டிருந்தன.

அவன் உயிர் வாழ்வதற்கு இன்னும் பத்து நொடி இருக்கும்வரை, காற்றில் அந்த உயிர் ஊசலாடித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் வரை அவன் நகம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்‌. மஞ்சள் நிற சரளைக் கற்களையும் சாம்பல் நிற சிறைச்சாலை சுவரையும் அவன் கண்கள் நோட்டமிட்டன‌. எல்லாம் அவன் நினைவில் இருந்தன. பின் நிகழப் போவதை முசென்று பார்த்தான். நீர்க் குட்டைகள் பற்றி ஏதோ சிந்தித்தான்.

அவனும் நாங்களும் ஒன்றுசேர்ந்து செல்லும் ஒரு மனிதக் கூட்டம். ஒரே உலகைப் பார்த்து, கேட்டு, உணர்ந்து, உள்வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் இரண்டு நிமிடங்களில், எங்களில் ஒருவர் இல்லாமல் போவார், எங்களில் ஓர் இதயம் இல்லாமல் போகும், எங்களில் ஓர் உலகம் மறைந்து போகும்.

தூக்குமேடை ஒரு சிறிய முற்றத்தில் இருந்தது. சிறை மைதானத்தில் இருந்து வேறுபட்டு, முட்கள் நிரம்பிய உயரமான களைச் செடிகள் மண்டியிருந்தன. கொட்டகையைப் போல் மூன்று பக்கமும் செங்கல்லால் எழுப்பப்பட்டிருந்த அந்த மேடையின் மேற்பகுதி பலகையால் ஆனது. இரண்டு மரக்கட்டைகள் அதைத் தாங்கிப் பிடித்திருந்தன. அதன் குறுக்கில் ஒரு மரப்பட்டையில்தான் தூக்குக்கயிறு தொங்கவிடப் பட்டிருந்தது.

தூக்கில் போடும் நரை பிடித்த நபர், தனக்குக் கொடுக்கப்பட்ட வெள்ளை நிறச் சீருடையில் தூக்கு இயந்திரத்திற்குப் பின்னே பவ்வியமாக நின்றார். எங்களைப் பார்த்ததும் பணிவுடன் கூனி வணக்கம் சொன்னார். பிரான்சிஸ்ஸின் வார்த்தைக்காகக் காத்திருந்த சிறைக் காவலர்கள் முன்பை விட மிக அழுத்தமாக அவன் கைகளை இறுக்கினார்கள்; தூக்குமேடை நோக்கிச் செல்ல உந்தினார்கள்; ஏணியில் ஏற உதவிச் செய்தார்கள். பின்னர் அந்தத் தூக்கில் போடும் நபர் மேலேறி, குற்றவாளியின் கழுத்தைச் சுற்றி கயிற்றை இறுக்கினார்.

நாங்கள் ஐந்தடி இடைவெளியில் நின்று கொண்டிருந்தோம். சிறைக் காவலர்கள் தூக்குமேடையைச் சுற்றி ஒரு தோராயமான வட்ட வடிவில் நின்றார்கள். தூக்குக்கயிறு இறுகுவதைப் பார்த்து, தன் வழிபடு கடவுளை விளித்துக் கத்தத் தொடங்கினான்.

“ராம்! ராம்! ராம்! ராம்!” என்று உயர்ந்த ஸ்தாயியில் மீண்டும் மீண்டும் கத்தினான். ஆனால் அந்தக் குரலில் அவரசமோ நடுக்கமோ இல்லை; கடவுளிடம் வேண்டுவதோ உதவி கேட்பதோ போலல்லாமல் மணி அடிப்பது போன்ற நிதானமான ஒழுங்கைப் பின்பற்றி சீராகச் சத்தமிட்டான்.‌

இந்தக் கூச்சலுக்கு பதில் சொல்வதுபோல் நாய் சிணுங்கியது. இன்னும் மேடையில் நின்று கொண்டிருந்த தூக்கிலிடும் நபர், மாவு அள்ளுவது போன்ற ஒரு சிறிய பருத்திப் பையை எடுத்து குற்றவாளியின் முகத்தில் கவிழ்த்தினார். ஆனாலும் அந்தத் துணிப் பைக்குள், “ராம்! ராம்! ராம்! ராம்! ராம்!” என்ற முணுமுணுப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

தூக்கிலிடும் நபர் கீழிறிங்கி லீவரை இழுப்பதற்குத் தயாராக இருந்தார். நிமிடங்கள் கரைந்ததுபோல் தோன்றியது. ஆனாலும் அந்தக் குற்றவாளி அழுத்தமாக “ராம்! ராம்! ராம்!” என்று குளறாமல் முணுமுணுத்தான்‌. சிறைக் கண்காணிப்பாளர் தலையைத் தாழ்த்தி குச்சியால் தரையைக் கீறிக் கொண்டிருந்தார். ஒருவேளை அவர் குற்றவாளியின் வேண்டுதலை எண்ணிக் கொண்டிருக்க வேண்டும். ஐம்பது அல்ல நூறுமுறை சொல்லும்வரை காத்திருந்து தூக்கில் போடலாம் என்று உத்தேசித்திருக்கலாம்.

எல்லோர் முகமும் வெளிறிப்போய் இருந்தது. இந்தியர்கள் கெட்டுப்போன காப்பிக் கொட்டைபோல் சாம்பல் நிறத்திற்கு மாறியிருந்தார்கள். சுரிகைத் துப்பாக்கி ஏந்திய கைகள் நடுங்கின. தாக்குதலுக்கு ஆளான, முகமூடி அணிந்த குற்றவாளியை நாங்கள் கவனித்தோம். அவன் அலறலைக் கேட்டோம். ஒவ்வொரு கூப்பாடும் அவன் இந்த நொடி உயிரோடு இருக்கிறான் என்று சொல்லியது‌.

‘ஐயோ. அவனைச் சீக்கிரம் கொன்றுவிடுங்கள்‌. இந்த வெறுக்கத்தக்க அலறலிலிருந்து விடுதலை கொடுங்கள்’ என்ற எண்ணம் எங்கள் எல்லோர் மனத்திலும் ஒன்றுபோலத் தோன்றியது.

சட்டென்று சிறைக் கண்காணிப்பாளர் தயாராகிவிட்டார். தன் குச்சியை வேகமாக முன் செலுத்தி, ‘சலோ’ என்று கடுமையாகக் கத்தினார்.

முழங்கும் சத்தமொன்று கேட்டது. அதற்குப் பின் மரண அமைதி. குற்றவாளி இறந்துவிட்டான். தூக்குக்கயிறு தானாகச் சுற்றிக்கொண்டது. பின்னர் நான் அந்த நாயை விட்டுவிட்டேன். தூக்குமேடையின் பின்பகுதிக்குத் தாவிச் சென்ற அது, திடீரென்று முற்றத்தின் ஒரு பகுதியில் செழித்திருந்த களைச் செடிகளுக்குள் சென்று குரைத்துக் கொண்டே எங்களைச் சோர்வாகப் பார்த்தது.

குற்றவாளியின் பிரேதத்தைப் பரிசோதனை செய்ய நாங்கள் அந்தத் தூக்குமேடையைச் சுற்றி வந்தோம். அவன் கால் நகங்கள் நேராகத் தரையைப் பார்த்தபடி இருந்தன. உடல் மெதுவாகச் சுற்றியது. இறுதியில் கல்போல் அப்படியே உறைந்தான்.

குற்றவாளியின் வெற்றுடலை குச்சியால் குத்திப் பார்த்த காவல் கண்காணிப்பாளர், “இவன் ஒகே தான்” என்று சொன்னார். உடல் ஊசலாடியது. தூக்குமேடையின் நிலவறையில் இருந்து வெளியே வந்த அவர் பெருமூச்சு விட்டு நகர்ந்தார்.

மனச்சோர்வடைந்த எரிச்சலான தோற்றம் அவர் முகத்திலிருந்து மறைந்தது. கைக்கடிகாரத்தைப் பார்த்தார். “எட்டு மணியைக் கடந்து எட்டு நிமிடங்கள் ஆகிவிட்டது. நல்லது. இன்று காலை இவ்வளவுதான். கடவுளுக்கு நன்றி.”

காவலாளிகள் துப்பாக்கியில் இருந்து சுரிகையை அகற்றிவிட்டு வேகமாக மறைந்தார்கள். நிதானம் அடைந்த நாய், தான் தவறாக நடந்துகொண்டதை உணர்ந்து காவலர்களைப் பின்தொடர்ந்து சென்றது.

தூக்குமேடை இருந்த முற்றத்தில் இருந்து, சிறைச்சாலையின் மத்திய வளாக முற்றத்திற்குக் குற்றவாளிகளின் சிறை அறைகளைக் கடந்து சென்றோம். லத்தி ஏந்திய காவலர்கள் ஆணைப் பிறப்பித்ததற்கு ஏற்ப சிறைவாசிகள் காலை உணவு பெறத் தொடங்கியிருந்தார்கள்.

ஒவ்வொருவரும் தகரத்தால் ஆன குவளையைக் கையிலேந்திக் கொண்டு நீண்ட வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். சோற்று வாலியை கையிலேந்திய இரண்டு காவலர்கள் முன்னும் பின்னும் வந்து எல்லோருக்கும் பதமாகச் சோறு போட்டார்கள். தூக்கு தண்டனைக்குப் பிறகு வெகு இயல்பான மன நெகிழ்ச்சியான காட்சிபோல் இருந்தது.

வேலை முடிந்தது என்ற ஆத்ம திருப்தி உண்டானது. பாடுவதற்கும், ஓடுவதற்கும், சிணுங்குவதற்கும் ஏற்ற உந்துதலை உணர்ந்தோம். எல்லோரும் மகிழ்ச்சியோடு அரட்டை அடிக்கத் தொடங்கினார்கள்.

நாங்கள் வந்த பாதையைச் சுட்டிக்காட்டி தலையசைத்த யூரேசிய சிறுவன் ஒருவன் எல்லாம் தெரிந்ததுபோல சிரித்துக்கொண்டே சொன்னான், “ உங்களுக்குத் தெரியுமா சார், அவனுடைய மேல்முறையீட்டு மனு தள்ளுபடியானதைத் தெரிந்தபோது, சிறை அறையிலேயே சிறுநீர் கழித்துவிட்டான். அத்தனை பயம். தயவு செய்து சிகரெட் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என் வெள்ளிப் பெட்டி பிடிக்கவில்லையா? இதை நான் தெருவோர வியாபாரியிடம் இருந்து இரண்டு ரூபாய் எட்டு அனாவிற்கு வாங்கினேன். கிளாஸியான ஐரோப்பிய பாணியில் செய்தது.”

சிலர் எதற்குச் சிரிக்கிறோம் என்றே தெரியாமல் சிரித்தார்கள். பிரான்சிஸ் கண்காணிப்பாளரை நெருங்கிச் சென்று அர்த்தமில்லாமல் பேசினார்.

“சிறப்பு சார். எல்லாம் மனநிறைவாக இருந்தது. படபடவென்று கண் இமைக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது. எல்லா நேரமும் இதுபோல் அமையாது. சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள், எனக்குத் தெரிந்த சில வழக்கில் குற்றவாளி இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்ய நிலவறைக்குச் சென்று தூக்கில் தொங்குபவரின் கால்களை இழுத்துப் பார்க்க மருத்துவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். ச்சீய். மிக மோசம்”

“ஆ.‌ நெளித்துச் சுழித்துப் பார்க்க வேண்டுமா? ரொம்ப கஷ்டம்” என்றார் கண்காணிப்பாளர்.

“அச்சோ, சார், அவர்கள் அதுக்கு நெளிந்து கொடுக்கவில்லை என்றால் மேலும் கொடுமை. எனக்குத் தெரிந்து ஒருவன் இருந்தான். அவனைச் சிறை அறையிலிருந்து வெளியே அழைத்துவர முயன்றபோது கம்பிகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வெளியே வர மறுத்துவிட்டான். நீங்கள் இதை நம்பவேண்டும். ஆறு காவலர்கள் ஒன்றுசேர்ந்து அவன் ஒவ்வொரு காலையும் மூன்று – மூன்று பேராக விடாப்பிடியாக பிடித்திழுத்து வெளியேற்றினோம். அத்தோடு இதை நியாயப்படுத்திச் சொன்னோம். “அடேய் அன்பிற்குரியவனே. நீ எங்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறாய் என்று பார்!” ஆனால் அவன் செவிமடுக்கவில்லை. அவன் ரொம்பவும் தொந்தரவு செய்துவிட்டான்!”

நான் கொஞ்சம் பலமாகச் சிரிப்பதை உணர்ந்தேன். எல்லோரும் சிரித்தார்கள். சகித்துக் கொள்ளும் அளவில் கண்காணிப்பாளரும் சிறிய முறுவல் பூத்தார். “இப்போது நாம் எல்லோரும் வெளியே சென்று குடிப்பது நல்லது” என்று அன்பு கலந்து சொன்னார். “என்னுடைய காரில் ஒரு விஸ்கி பாட்டில் இருக்கிறது. அது போதும்”

சிறைச்சாலையின் இரட்டைக் கதவுகளைத் தாண்டி பிரதானச் சாலைக்குச் சென்றோம். “அவன் கால்களை இழுத்துப் பாருங்கள்” என்று பர்மிய நீதிபதி வெடித்துச் சொன்னதும், எல்லோரும் சத்தமிட்டுச் சிரித்தார்கள். மீண்டும் சிரிப்பலை மூண்டது.

அந்தக் கணத்தில் பிரான்சிஸ் சொன்ன துணுக்குக் கதை அதி பயங்கரமாகச் சிரிப்பு மூட்டியது. ஐரோப்பியர்களும் உள்நாட்டவர்களும் இணக்கமாக ஒன்று சேர்ந்து குடித்தோம். இறந்துபோனவனின் பிரேதம் நூறு அடி தூரத்தில் இருந்தது.

0

________

‘A Hanging’ –  George Orwell

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

1 thought on “உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *