‘பழங்குடியின மக்களைத் தங்கள் ஆராய்ச்சியின் காட்சிப் பொருளாகவும் அறிவியல் ஆய்வின் உபகாரப் பொருளாகவும் கருதும் மானுடவியல் அறிஞர்கள், அவர்களை விலங்குபோல் மிருகக்காட்சிசாலையில் அடைக்க விரும்புகிறார்கள்.’ இது அவர்கள் மீது சுமத்தப்படும் மிகச் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களில் ஒன்று. சீர்திருத்துநர்கள், அரசியல்வாதிகளைத் தாண்டி சில அறிவுஜீவிகளும் இந்தப் பழிசுமத்தலில் ஈடுபட்டுள்ளதால் சிரத்தையோடு நாம் இதை ஆய்வு செய்ய வேண்டும்.
மிகப் பரவலாக வாசிக்கப்படும் ‘பிக்சர் போஸ்ட்’ என்ற ஆங்கில இதழை நான் தற்செயலாக வாசித்தபோது ஆச்சரியப் பட்டேன். தன் சத்தியாகிரகச் சோதனைகளுக்காக இந்தியாவை ஆய்வுக்கூடமாகப் பயன்படுத்தும் மகாத்மா காந்தி மீதும் இதே மாதிரியான ஒரு குற்றச்சாட்டைக் குறிப்பிட்டு அதில் ஒரு கட்டுரை எழுதியிருந்தனர்.
சாதாரண இந்து கிராமங்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் பல படங்கள் அதில் அச்சாகியிருந்தன. அந்தக் கிராமங்கள் எத்தனைக் கொடிய பஞ்சத்திற்கு ஆளாகியிருக்கின்றன, மூடநம்பிக்கைகள் எவ்வளவு தூரம் வேரூன்றியுள்ளது என அதில் தெளிவாக இருந்தது. அதே சமயம் நவீன மருத்துவம், நவீன இயந்திரம் மற்றும் நியாயமான நாகரீக வளர்ச்சிகளுக்குப் புறம்பான மகாத்மா காந்தி, இந்திய கிராமங்களைத் தேக்கநிலையில் வைத்திருக்க விரும்பும் சூழலை விளக்கியிருந்தனர்.
கிராமச் சாலையில் தந்திகம்பி ஒன்று ஓடுவதைப் பார்த்தால் மகாத்மாவிற்கு எப்படி கசக்குமென்று எங்களுக்குச் சொல்லியிருந்தனர். மகாத்மா காந்திக்கு ஈடாக தாமும் இருப்பதை எண்ணி மானுடவியல் அறிஞர்கள் தங்களை மெச்சிக்கொள்ளலாம். ஆனால் இருவர் பக்கமும் குற்றம் இல்லை.
மிருகக்காட்சிசாலையில் ஒரு விலங்கை அடைப்பதன் மூலம் என்ன சாதிப்பீர்கள்? அதன் மரபார்ந்த வாழ்விடத்திலிருந்து பெயர்த்து, அதன் பழகிப்போன உணவுகளைத் தர மறுத்து, அதன் எல்லாவித பழக்க வழக்கங்களையும் மாற்றி, அதன் சுதந்திரத்தைப் பறிப்பீர்கள். ஆனால் மகாத்மா காந்தி போராடுவது எதற்காக?
இந்தியர்களின் தாய்நாட்டை மீட்டுக்கொடுத்து, அவர்கள் போக்கில் வாழச் சுதந்திரம் வென்றெடுத்து, மேற்கத்திய தாக்கமில்லாத மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுக்க. மானுடவியல் அறிஞர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.
பழங்குடியின மக்களின் வாழ்வுக்காக எங்கள் உயிரையும் பணயம் வைக்கிறோம். தங்கள் மூதாதையரின் மலையிலும் காட்டிலும் அவர்கள் வசிப்பதற்காக இறுதிவரை போராடுகிறோம். பழங்குடி மக்கள் தங்கள் இயல்பான வாழ்வியலைப் பின்பற்றவும், தங்கள் கலாச்சாரத்தை பேணிக் காக்கவும், பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளவும் மலைப் பிரதேசங்களின் பரந்த வெளியில் இயல்பான சுதந்திர வாழ்க்கையை மேற்கொள்ளவும் நாங்கள் விரும்புகிறோம். இதைக்காட்டிலும் எங்களுக்கு வேறெந்த ஆசையும் கிடையாது. மனித விடுதலையில் மானுடவியல் அறிஞர்களைக் காட்டிலும் ஈடுபாடு உடையவர் எவரும் இல்லை. மானுடவியலாளர்கள் மட்டுந்தான் உண்மையான மனிதநேயத்தோடு நடந்துகொள்கிறார்கள்.
மானுடவியல் கோணத்தில் தொழில்நுட்ப ரீதியாகச் சொல்ல முயன்றால், இன்னும் சில விஷயங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். மிருகக்காட்சிசாலைபோல் செயற்கையாகத் தனிமைப்பட்டிருக்கும் மக்களை ஆராய்வதில் சிறிதளவு அறிவியல் ஆதாயமும் உண்டு. மானுடவியல் அறிஞர் என்ற பதத்தை அடிக்கடிச் சொல்ல முடியாது. ஆனால் அவர் ஒட்டுமொத்த மனித வாழ்வையும் கவனத்தில் கொள்கிறார்.
அவர் பழமையான கலாச்சாரத்தில் ஆழத் தோய்ந்தவர் கிடையாது. கடந்த பத்தாண்டுகளில் மிகவும் மேம்பட்ட மக்கள் பற்றிய ஆய்வுகளில்தான் அதிக நேரம் செலவிட்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் மேற்கொள்ளும் பெருந்திரள் கண்காணிப்புப் பணிகளை மட்டுந்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
கடின உழைப்பின் மூலம் கலாச்சார மாற்றத்தை எதிர்கொள்ளும் சமூகங்களும், வேற்றுமைகள் நிரம்பிய மிக முன்னேறிய சமூகங்களும்தான் மானுடவியல் அறிஞர்களுக்கு உவப்பாக இருக்கின்றன. தேக்கநிலையில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்வியலை பெரும்பாலும் ஆவணப்படுத்தி விட்டார்கள். அவர்களிடையே உள்ள கணிசமான ஒற்றுமைகள் மானுடவியல் அறிஞர்களைச் சலிப்பூட்டுகிறது.
நான் ஒரு மானுடவியல் சரணாலயம் அமைக்க விரும்பினால், அதில் முரியா மக்களும் பைகா மக்களும் இருக்கமாட்டார்கள். மாறாக சில வித்தியாசங்களைக் கையாளுவேன். சேவாகிராம் ஆசிரமம் முழுவதையும் ஒரே கூண்டில் அடைத்து வைப்பேன். அதற்கருகிலேயே காந்தி பேசுவதை கேட்கும் தூரத்தில் மிக அழகாக ஒப்பனை செய்யப்பட்ட மற்றொரு கூண்டில் முஸ்லிம் லீக் தலைவரை அடைத்து வைப்பேன்.
பம்பாய் ப்யூரிட்டி லீக்கின் அலுவலகப் பொறுப்பாளர்கள் கொஞ்சம் முயன்றால், எலுமிச்சைச் சாறு பருகிக் கொண்டே இவர்களை வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தை கவர்ந்திழுக்க முடியும். மற்ற இடங்களில் இந்து சனாதனிகளையும், அதிதீவிர இந்திய குடிமைப் பணி அலுவலர்களையும் மிக இலாவகமாகப் பொறுக்கியெடுத்துக் கூண்டில் அடைப்பேன்.
டோடோ பறவைகளைப் போல் விரைவில் அழியப் போகும் இத்தகைய மனிதர்களின் மேல் அளவுகடந்த சமூக அக்கறை உள்ளது. இவர்களை நிச்சயம் பாதுகாக்க வேண்டும். சந்தாலி இன ஏழை மக்களைக் காட்டிலும் லின்லித்கோ பிரபுவின் மனநிலையை ஆராய்வதில் எதிர்கால அறிஞர்கள் பெருவிருப்பம் கொள்வார்கள். திருவாளர் அமேரி அவர்களையும் எனது சேகரிப்பில் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் அத்தகைய காட்சிப் பொருள், மிகுந்த விலை மதிப்பு உடையது என அறிவேன். இத்தகைய பொருளை போர்க்கால நெருக்கடிக்கு மத்தியில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவருவது உண்மையிலேயே சவாலான காரியம்.
மானுடவியல் அறிஞர்கள் இந்தச் சூழலில் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப் படுகின்றனர். சிந்தனையோட்டமில்லாத பலர் மானுடவியல் அறிஞர் என்றால் நாசகாரர் என்றும், பழங்குடி மக்களை நாகரிக வாழ்விலிருந்து தடுத்தாட்கொள்பவர் என்றும், பாலியல் இச்சையில் இலயத்துப்போகிறவர் என்றும் தவறாக உத்தேசிக்கின்றனர்.
ஆனால் உண்மையான மானுடவியலாளர்கள் மிக உன்னிப்பாக கவனிக்கிறார்கள். சிறந்த முறையில் புகைப்படம் எடுக்கிறார்கள். பிறரைக் காட்டிலும் கிழக்கும் மேற்குமாக நெடுந்தூரம் பயணிக்கிறார்கள். இத்தனைக்கும் இவர்களுக்குத் தொழில்நுட்ப அறிவுகூட கிடையாது.
தன் மக்களோடு நெடுநேரம் செலவுசெய்து அவர்களைக் கூர்ந்து கவனிப்பதால், மிகுந்த அர்ப்பணிப்போடு அவர்கள் நலனைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுகின்றனர்.
உலகெங்கிலும் உள்ள மானுடவியல் அறிஞர்கள், தான் என்ன பேசுகிறோம் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். கட்டுப்பாடற்ற, அவசரகதியிலான வளர்ச்சியால் ஆதிவாசிகளின் வாழ்க்கை இழிவான, அழிவுகர விளைவை ஏற்படுத்துகிறது என்று ஒருமனதாக ஒப்புக் கொள்கின்றனர்.
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் விரவியிருக்கும் ஆங்கிலேய சமயப் பிரச்சாரம், ஆங்கிலேய வர்த்தகம், ஆங்கிலேய ஏகாதிபத்தியம், ஆங்கிலேய பானங்கள் அங்குள்ள ஆதிவாசிகளின் வாழ்க்கையில் பேரிடியாக விழுந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை சொற்பமாகப் படித்த இந்துவும் இஸ்லாமிய கிராமத்தானும் தன் பழங்குடியின சகோதரனைக் காட்டிலும் சற்று முன்னேறியிருப்பதால், இந்த மாற்றம் மெதுவாக இருட்டடிப்பில் தெரிகிறது. ஆனால் இது ஓர் உறுதியான மாற்றம்.
இதன்மூலம் பழங்குடி மக்களைப் பாதுகாக்க விரும்பும் மானுடவியல் அறிஞனுக்கு, மிக நேர்த்தியான காரணம் வாய்க்கிறது. இந்திய சமவெளி மக்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வது, அவர்களுக்குத் துன்பகர விளைவுகளை ஏற்படுத்தும். ‘நின்றுபோன நாடித்துடிப்பு’ என்ற கட்டுரையில் இந்தத் தொடர்பின் விளைவுகளாக நான் எழுதியவற்றை இங்குச் சுருக்கமாகப் பட்டியலிடுகிறேன்.
நேர்மையான எளிய பழங்குடியினரை, சமவெளி மக்கள் சூழ்ச்சியால் ஏமாற்றி தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றுகிறார்கள். பழங்குடி மக்களுக்கு பணமும் பொருளும் இரவல் கொடுத்து எப்போதும் தன் பொருளாதார அடிமையாக வைத்துக் கொள்கிறார்கள். மலையில் வசிக்கும் பழங்குடி மக்கள், சமவெளி மக்களோடு உறவு கொள்ளும்போது பாலியல் சார்ந்த நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
பஸ்தார் மாநிலத்தில் உத்தியோகம் செய்யும் மூத்த மருத்துவ அலுவலர் என்னிடம் சொன்னது ஆச்சரியமாக இருந்தது, ’என் முப்பது வருட அனுபவத்தில் அசல் மலைவாழ் மக்களில் ஒருவருக்குக்கூட பாலியல் சார்ந்த நோய்த் தாக்குதல் கிடையாது. பள்ளிக்கூடம் செல்ல வெளியுலகத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ளும் கணிசமான சிறுவர்களுக்கு இந்நோய் தாக்குதல் தென்படுகிறது. ஆனாலும்கூட பஸ்தாரில் இந்நோய் தாக்கம் இல்லாத பெரிய மலையொன்று இருக்கிறது. அதற்குக் கீழுள்ள சமவெளிப் பகுதியில்தான் 80% மக்களிடம் இத்தாக்கம் தென்படுகிறது.
சமவெளி மக்களுடன் பேசி உறவாடும்போது, மலைவாழ் மக்களின் நேர்மையான குணமும் எளிமையும் நீர்த்துப்போகிறது. மலைப் பிரதேசங்களுக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் வாதம் பயற்சிசெய்யும் வக்கீலிடம் கேட்டுப் பாருங்கள். மலைவாழ் மக்கள் எத்தனை நேர்மையாளர் என்றும், பள்ளி சென்றபிறகு அவர்கள் வஞ்சகத்தோடு பொய் பேசுவதையும், வெளியுலகத் தொடர்பினால் ஏமாற்றக் கற்றுக்கொண்டதையும் சொல்வார்கள்.
வெளியுலகத் தாக்கத்தினால் பழங்குடியின கலாச்சாரம் விரைவில் விரிசல் விடுகிறது. பழங்குடியின மதம், நீதிமுறைமை, கலாரசனை, கவித்துவம் ஆகியவற்றில் இருந்து விலகி வாழ்கையிழந்த தீண்டத்தகாத மனோபாவத்திற்கு உந்தப்பட்டு, வண்ணமற்ற வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.
மலைவாழ் மக்கள் சமவெளி மக்களோடு ஒன்றுசேர்வதில் ஏற்படக்கூடிய மிக மோசமான விளைவுகளில் ஒன்று, பழங்குடியின மக்களும் தீண்டாமையைப் பின்பற்றத் தொடங்குவது. நிலைமை அத்தோடு நில்லாமல் குழந்தை திருமணத்தை ஏற்றுக்கொள்ளுதல், பெண்களுக்கு பர்தா அணிதல் என்று நீள்கிறது.
ஆனால் இதெல்லாம் சுத்த முட்டாள்தனம் என்று சொல்பவர்களில் திருவாளர் ஏ.வி. தாக்காரும் ஒருவர். மனிதநேயம் போற்றும் நாயகர். தன் வாழ்வின் பெரும்பகுதியை ஏழை மக்களுக்குச் சேவை செய்ய அர்ப்பணித்தவர். குஜராத்தில் அவர் தொடங்கிய ‘பில் சேவா மண்டல்’ அவரின் மேதாவித்தனத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
அரிஜன் சேவக் சங்கத்தின் செயல்பாடுகள் அவரைத் தழுவியும் அவரின் கட்டுப்பாட்டிலும் இயங்கிவரும் உலகளாவிய உன்னத நிறுவனம். அவரின் நல்லெண்ணமும் பரிபூரண இதயமும் உலகறிந்த ஒன்று. எனவே பழங்குடியினர் விஷயத்தில், மகிழ்ச்சிகர முடிவுக்கு வழிவகுக்கும் அறிவுஜீவுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கவேண்டும்.
கோகலே நிறுவனத்தில் சிறப்புரை ஆற்றுகையில் தாக்கர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நிருபர்களோடு உரையாடும்போதும் அதே கருத்து முன்மொழியப்பட்டது. ஒரிசா மாகாணத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட பகுதிகள் குறித்தான விவகாரங்களை மேற்கொள்ளும் கமிட்டி ஒன்றிற்குத் தாக்கரை அம்மாகாண அரசு தலைவராக நியமித்திருந்தது. எனவே அவரின் கருத்தாக்கம் குறித்து மேலும் புரிந்துகொள்ள கமிட்டியின் அறிக்கை உதவுமென்று நாங்கள் நினைத்தோம்.
திரு. தாக்கரின் கோகலே நிறுவன சிறப்புரையில் பழங்குடி மக்கள் மீதான அன்பும் அக்கறையும் வெளிப்பட்டது. அது அவரின் இயல்பு. அவர்களுக்குச் செய்யவேண்டிய நலத் திட்டங்களை ஆசையோடு பகிர்ந்தார். ஆனால் அதில் அடிப்படையிலேயே தவறான பல அனுமானங்கள் இருந்தன. நிச்சயம் இது அவரின் முடிவுகள் குறித்து தவறான அபிப்பிராயம் ஏற்படுத்தும்.
சமவெளி மக்களோடு பழங்குடியின மக்கள் ஒன்றுசேர்வதில் உள்ள ஆபத்தை யார் சொன்னாலும், அதைப் புறங்கையால் ஒதுக்கி, அற்பமான கற்பனைக் கதையாடல் எனக் கருதுகிறார். ‘சமவெளியில் உள்ள இந்து முஸ்லிம்களோடு பழங்குடியினர் ஒன்றுசேர்வதைக் கண்டு ஏன் சிலர் அஞ்சுகின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை சமவெளி மக்களின் சமூகத் தீங்குகளை அப்பாவி மலைவாழ் மக்கள் கற்றுக் கொள்வார்கள் என்று ஓரிண்டு சம்பவத்தை முன்னிறுத்தி மறுக்கலாம்’ என்கிறார்.
மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராம விவகாரங்களில் இத்தனை அறியாமையோடுதான் திரு. தாக்கர் இருக்கிறாரா? ஏதோ ஒன்றிரண்டு சம்பவங்கள் என்று குறைத்துச் சொல்கிறாரே, எல்லாவிடத்திலும் இதுதான் பிரச்சினை என்று அவருக்குத் தெரியாதா? மேலும் திரு. தாக்கர் சில விஷயங்களை பரிந்துரைக்கிறார், ‘பழங்குடியினருக்கும் சமவெளி மக்களுக்கும் இடையே நட்பு ரீதியிலான உறவு மலர வேண்டும். ஒவ்வொருவரும் கலாச்சார ரீதியில் மற்றொருவரிடம் இருந்து இலபாகரமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா என்றொரு தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக ஒவ்வொருவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றுதிரள வேண்டும்.’
மீண்டும் திரு. தாக்கர் சில விஷயங்களை மறந்துவிட்டார். அரிஜன் சேவக் சங்கம் நடத்துவதில் தனக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை அவர் எப்படி மறந்தார் என்று வியக்கிறேன். முன்னேறிய சமூகத்தினர் தீண்டத்தகாதவர்களை மதிப்பதைக்காட்டிலும் மலைவாழ் மக்களை மேலாக நடத்துவார்கள் என்று அவர் நம்புகிறாரா?
பழங்குடி மக்களும் சமவெளி மக்களும் ஒன்றுசேர்ந்து பழகினால், பழங்குடி மக்கள்தான் நஷ்டம் அடைவார்கள். பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவார்கள். அவர்களின் மதம், குணம், நீதிமுறை எல்லாம் பாழாய் போகும். அவர்களின் நிலத்தையும் உடமையையும் சமவெளி மக்கள் பறித்துக் கொள்வார்கள்.
_________
‘Do We Really Want to Keep them in a Zoo?’ – Verrier Elwin
யாவரும் நிச்சயமாக சிந்தனையில் எடுக்க வேண்டிய கட்டுரை , வாழ்த்து நன்றி…