Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #9 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 3

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #9 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 3

வெரியர் எல்வின்

பாகம் 1  |  பாகம் 2

பழங்குடியினரைப் பிரித்து ஒதுக்கி வைத்தால் தேச ஒற்றுமையின் அஸ்திவாரமே ஆடிப் போய்விடும் என்று திரு.தாக்கர் பயப்படுகிறார். எனக்கு இது தீவிரமான செய்தியாகத் தெரியவில்லை. பழங்குடி மக்களை நிரந்தரமாகத் தனிமைப்படுத்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே!

ஒன்றன் தலைப்பு இப்படி இருக்கிறது,

‘ஆண்கள் அதிகப் பாலியல் புதுமைகளை வாழ்க்கையில் அனுபவிக்கிறார்கள்.’

மற்றொரு விளம்பரத் தலைப்பு இப்படி இருந்தது,

‘பிரஸ்டி நிறுவனம் ; மேம்பட்ட அழகுக்கு வடிவான மார்பகம் அவசியம். அதைப் பிரஸ்டி நிறுவனத்தின் மூலம் அடையுங்கள். தளர்ந்த மார்பகங்களை மீண்டும் இயல்பு நிலைக்குத் திருத்தி, நேர்த்தியான வடிவில் இளமையின் முழுமையை அனுபவியுங்கள்.’

மற்றொரு தலைப்பும் கண்ணில் பட்டது:

‘வாழ்வுக்கு அமுதமாகும்
நெர்வினஸை ஐ.சி.எஸ். பாராட்டுக்கிறது.’

இது பாலுணர்வூட்டும் மருந்துக்கான விளம்பரம். அதையொட்டியே துறவி ஒருவரின் பரிந்துரை வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.

‘ஒரு பிரபல மகாத்மாவின் ஈடு இணையில்லாத, தேர்ந்தெடுக்கப்பட்ட மூலப் பொருட்களால் ஆன அரிய பொக்கிஷம் இது. இதனை ஒருமுறை உட்கொண்டாலே இளம் ரத்தம் நாளங்களில் பீறிட்டு துள்ளல் போடும். 21 நாட்கள் விடாமல் உட்கொண்டால் கண்கள் பளிச்சிடும்; கண்ணங்கள் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும். உங்கள் இழந்துபோன வாலிபப் பருவத்தை வெறும் 40 நாட்களில் திரும்பக் கொண்டுவர இம்மருந்து உறுதியளிக்கிறது.’

இமயமலையில் தங்கியிருக்கும் சாமியார் ஒருவர், வயதான ஆடவருக்கு ஐந்தாறு வேளைக்கான மாத்திரைகளை, அதன் பயன் தெரிவிக்காமல் கொடுத்து வந்தார். அவற்றை உட்கொண்ட பிறகு, அந்த முதிய ஆடவர் ஒரே மேடையில் மூன்று பெண்களைத் திருமணம் செய்துகொண்டாராம்.

இப்படி, பல செய்திகள் அதில் இடம்பெற்றிருந்தன.

எழுத, படிக்கத் தெரிந்த பல அப்பாவிப் பழங்குடிகளை நான் பார்த்திருக்கிறேன். இதுபோன்று இந்தி நாளிதழ்களில் வரும் விளம்பரங்கள் சிலவற்றைப் பார்த்து, ஏமாந்துபோய் நயவஞ்சகமாக ஏமாற்றுப்பட்டுள்ளனர்.

இந்த ‘நாகரிகம்’தான் முழுமையான நாகரிகம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நாம் காணும் பெரும்பான்மையினர் இப்படித்தான் இருக்கின்றனர். ‘தி கிட்டாவாடா’ மோசமான நாளிதழ் என்று சொல்ல முடியாது. நாட்டின் சிறந்த நாளிதழ்களில் அதுவுமொன்று. உண்மையை உள்ளதுபோல் வெளிப்படுத்துகிறது.

நமது ஐரோப்பிய, இந்தியக் கலாச்சாரம் முழுக்க அதன் உயர்ந்த குணங்களைத் தாண்டி, வன்முறையின் வடுக்கள்தான் அதிகம் நிரம்பியுள்ளன. பொய், பாலியல் தொழில், வழிகாட்டுதல் இன்மை, சொத்துப் பங்கீட்டில் ஏற்படும் குளறுபடி, ஏழைத் தொழிலாளர்களை அடக்குமுறைக்கு ஆட்படுத்தி சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள் நம் நாகரிகத்தில் நிரம்பி வழிகின்றனர்.

பழங்குடியினரின் வாழ்க்கைமுறை, சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. உண்மையும் நேர்மையும் அதன் அசைக்க முடியாத பண்புகள். எவ்வித பாலியல் வக்கிரத்துக்கும், பாலியல் சுரண்டலுக்கும் அங்கு இடமில்லை. மனிதர்களுக்கு மத்தியில் சுமுகமான பேச்சுவார்த்தை இருக்கிறது.

பல தீமைகளும், கொடுமைகளும், பிற்போக்குத் தனங்களும் இவர்கள் வாழ்க்கை நெறியில் உண்டென்றாலும், இதைச் சீர் செய்ய விரும்பும் நாகரிக மனிதன், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் வாழ்க்கையின் பின்தங்கிய படிநிலைகளை ஒருமுறை நினைத்துப் பார்க்க வேண்டும்.

மானுடவியல் அறிஞரின் நிலையைச் சுருக்கமாகச் சொல்கிறேன். மக்களை மிருகக்காட்சி சாலையில் வைப்பதில் அவருக்கு ஒரு துளியும் ஈடுபாடு இல்லை. அப்படிச் செய்வதால், அவருக்கு ஒரு பயனும் கிடையாது. ஆய்வகத்தில் தனியாக அடைத்து வைப்பதற்கு மனிதர்கள் ஒன்றும் கினியா எலிகள் இல்லை என்ற உண்மையை அறிவர்.

தான் நேசிக்கும் மக்களின் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்ய ஆசைப்படுகின்றனர். இந்தியாவில் இரண்டு வகைப் பழங்குடி மக்களை அவர்கள் அடையாளம் காண்கின்றனர்: முதல் வகையினர் ஏற்கனவே புற உலகத்தோடு நெருங்கிய தொடர்பு வட்டத்திற்குள் வந்தவர்கள். அவர்களுக்கு கூடிய விரைவில் கல்விப் பயிற்றுவித்து, வாழ்வின் போராட்டத்தை எதிர்கொள்வதற்கான திறனும் சக்தியும் வழங்குவதுதான் நம்மால் முடிந்த ஆகச் சிறந்த வேலையாக இருக்கும். மண்ட்லா மாவட்டத்தில் உள்ள பூமிஜன் சேவா மண்டல் எனும் நம் நிறுவனம் இதைத்தான் செய்ய முயல்கிறது.

மற்றொரு வகையினர் இந்தியாவின் பரந்த வெளியில் காட்டிலும் மலையிலும், இன்னும் தன் பழைமை மாறாத கலாச்சாரத்தைப் பின்பற்றிக்கொண்டு, பழங்குடி அமைப்பாக வாழ்ந்து வரும் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள். இவர்கள் நிலை இன்னும் கொடியது. இந்தியாவின் பிற பகுதிகளில் நாகரிக வளர்ச்சி சென்றடையாதபோது, இவர்களுக்கு நாகரிக அருளாற்றலைப் பொழிய வேண்டும் என்று சொல்வதில் பயனில்லை.

ஏனைய இந்தியர்களைப்போல பழங்குடியினரும் கல்வி நிலையில் முன்னேற வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக திரு‌. தாக்கர் சொல்கிறார். ஆனால் தற்போதைய சூழலில் தாக்கர் குறிப்பிடும் பரந்து விரிந்த இந்தியாவின் முன்னேறிய சமூகங்களில், கிராமப்புறத்தில் அழுக்குப் படிந்த வாழ்க்கையை நோயிலும் அறியாமையிலும் சுழன்று நாட்கள் நகர்த்தும் பல பகுதிகள் உள்ளன.

எந்தவகையிலும் தவறு நேராத இம்மக்களுக்கு முதலில் நாகரிக வளர்ச்சியைப் பயிற்றுவித்து ஒட்டுமொத்தமாகத் தரம் உயர்த்திய பின்னர், பழங்குடிகளின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வரலாம். அதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

நலிந்த, தரம் தாழ்ந்த, அறியாமை நிறைந்த பள்ளிக்கூட வாத்தியார்களைப் பழங்குடியினப் பகுதிக்கு அனுப்பி வைப்பது உண்மையிலேயே மிக மோசமானது. வெளிச்சமூட்டுவதற்குப் பதில் இருளூட்டும் மையமாகப் பள்ளிக்கூடங்கள் மாறலாம். தீண்டாமைப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் எந்த ஓர் ஆசிரியரையும் பழங்குடியினப் பகுதிக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று நீண்ட காலத்திற்கு முன்பே திரு. தாக்கரிடம் ஒரு சவால் விட்டேன். நான் அதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.

காங்கிரஸ்காரர்கள் தீண்டாமைப் பழக்கத்தைத் தீவிரமாகவே ஒழிக்க விரும்புகிறார்களா என்பதை அறிய, அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கல்விப் பயிற்றுவிக்கவும், பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்யவும் யாரை நியமிக்கிறார்கள் என்ற சிறிய சோதனையின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

தனது வீட்டிலும், பணி செய்யும் இடத்திலும் மனச்சாட்சிக்கு உட்பட்டு தீண்டாமைப் பழக்கத்தை அறவே விட்டொழித்தவராக அவர் இருக்க வேண்டும். இல்லையென்றால் மானுடவியல் அறிஞர்களைக் காட்டிலும் சீர்த்திருத்தவாதிகள்தான் பழ மரபுகள் நீடிப்பதில் ஆசைக் கொண்டவர்கள் என்று உறுதி செய்யலாம்.

குழந்தைத் திருமணம், பெண்களைத் தரக் குறைவாக மதித்தல், விதவைகளை மோசமாக நடத்துதல், தீண்டாமையைக் கைக்கொள்ளுதல் போன்ற அருவருப்பான பழக்கங்களில் இருந்து பழங்குடியினரைப் பாதுகாக்கவே மானுடவியல் அறிஞர்கள் விரும்புகின்றனர்.

இது வெறும் தற்காப்பு முயற்சி மட்டும் அல்ல. செய்ய வேண்டிய மகத்தான பணியொன்று இருக்கிறது. உண்மையில் அரசியல், சமூக மாற்றத்திற்கான மானுடவியல் அணுகுமுறை என்று எதுவும் இல்லை. மானுடவியலாளர் தரவுகளின் உண்மைத் தன்மையில் அக்கறை கொண்டவர். ஆய்வுச் சூழலின் முழுமையான, துல்லியமான தரவை உருவாக்குவது அவரின் வேலை. மற்றவர்கள் விரும்பினால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இங்கு மானுடவியலாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி ஆழமாக இல்லாமல், பொதுவாகப் பேசுவது சாத்தியம்.‌ இதன் மூலம் மானுடவியலாளர்களாக இருப்பவர்களும் அந்தக் குறிப்பிட்ட வகையான அனுபவத்தைப் பெற்ற பெரும்பாலான மக்களும் எதை விரும்புகிறார்கள் என்று தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

அந்த வகையில் பெரும்பாலான மானுடவியலாளர்கள் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலை, நவீன கல்வி வாய்ப்புக்கள் கிடைக்கும் முன்பே, கலாச்சார முறை மாறுதல் அடைவதற்கு முன்பே ஏற்றம் காண விரும்புகிறோம் என்பது உண்மை. இலண்டன் பொருளாதாரப் பள்ளியும், இந்திய அறிவியல் பேராயத்தின் முன் அறிக்கை சமர்ப்பித்த திரு. தாரக் சந்திர தாஸ் அவர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனர். இது பழைய மார்க்சிய அணுகுமுறை.

முதலில் உங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, ஆரோக்கியம், பொருளாதாரத் தேவை போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். கலாச்சார மாற்றம், சீர்த்திருத்தம் போன்ற தந்திரமான கைங்கர்யங்களை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இந்தச் செயல்முறையைத் தலைகீழாகச் செய்ய முயன்றால், பெரும் சேதம் நிகழும்.

அடிக்கடிப் பள்ளிச் செல்லும் இந்தியப் பழங்குடியின குழந்தைகள், கரங்களைப் பயன்படுத்தக் கூட மறந்து போகிறார்கள். நிலத்தில் இறங்கி வேலை செய்து, பரிதாபகரமான வாழ்க்கையை மேற்கொண்டு வெறுத்து ஒதுங்குவதற்குப் பதிலாக அரசுத் துறையில் வேலை தேடுகின்றனர். பழங்குடி மக்களின் உணவுமுறையை மாற்ற நினைக்கும் சீர்திருத்தவாதிகள், அவர்களின் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பழக்கங்களில் இருந்து வெகுதூரம் பிரித்துச் செல்கின்றனர்.

கோழி, முட்டை, பன்றி போன்ற இறைச்சி உணவுகள் தர மறுப்பதோடு அதற்குப் பதிலாக காய்கறி, தயிர், நெய் போன்ற பதார்த்தங்களும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பழங்குடியின மதத்தில் தலையிட முயல்வது எத்தகையதொரு மதத்தையும் அழிக்க விழையும். ஆனால் இந்த மாற்றம் பொருளாதார ஏற்றத்திற்கு முந்தி இருந்தால் மட்டுமே, இவை சாத்தியப்படும். நான் குறிப்பிட்டுள்ள இந்தப் பேரழிவுகள் எல்லாம் கலாச்சார மாற்றத்திற்கு முந்தி ஏற்படும் பொருளாதார மாற்றச் சூழலில் மட்டுமே பொறுத்திப் பார்க்க வல்லன.

மக்களின் வாழ்க்கையே துன்பமாகி அவர்கள் உயிர்வாழும் நாட்கள் குறைபடும்போது, ஆன்மீக இலட்சியவாதம் பற்றி அவர்கள் சிந்திக்க இடம் ஏது? பஸ்தார் மாநிலத்தில் மக்களைத் தொல்லை செய்யாமல் அவர்களுக்கு உதவி செய்வதெப்படி என்று அரசு கைக்கொண்டு வரும் பிரமாதமான திட்டம் ஒன்று இருக்கிறது. வெகுநாட்களாகத் தொல்லை செய்து வந்த ‘யாஸ்’ எனப்படும் கொடிய பாக்டீரியா நோயிலிருந்து பழங்குடியினர் முற்றிலுமாக தேறி விட்டனர்‌ என்று சொல்லலாம். இது மாநிலச் சுகாதாரத் துறையின் அர்ப்பணிப்பால் உருவானது. இத்தகைய விஷயங்களைத்தான் பழங்குடியினருக்கு நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறான். இதில் பெரிதாக முரண்பாடு தோன்றாது.

ஒருமுறை மகாத்மா காந்தி கிறிஸ்தவ மிஷனரிகள் குழுமியிருந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், உங்கள் பசியாறுவதற்காக வழங்கப்படும் தினசரி ரொட்டித் துண்டைப் பரிமாறுவதற்கு முன்னர் சுவிஷேச ரொட்டி வழங்குவதால் ஒரு பயனும் இல்லை என்றார். இந்தியப் பழங்குடிகள் மீது அக்கறைச் செலுத்தும் அரசியல்வாதிகள், சீர்த்திருத்தவாதிகளிடமும் நான் இதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.

அவர்கள் உண்பதற்குத் தேவையான ரொட்டித் துண்டுகளை வழங்குவதற்கு முன்பு, வாழ்வை மேம்படுத்தும் மதம், அறம் சார்ந்த ரொட்டிகள் வழங்குவது பெரும் கேலிக் கூத்து. இவ்விஷயத்தில் மானுடவியலாளர்களின் கொள்கை மீண்டும் மகாத்மா காந்தியோடு ஒத்துப்போகிறது.

இது நாம் எதிர்பார்த்த ஒன்று. கிரிக்சனும் காந்தியும் இயல்புவாதத்தோடு இதை ஒன்றுபோல் அணகுகின்றனர்: அவர்கள் இருவரும் கிராமப்புற வாழ்க்கையின் எதார்த்தத்தன்மையை நன்கு அறிந்திருந்தனர்.

ஆகவே, நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. நாம் பயிற்றுவிப்பதற்கும், வளர்த்தெடுப்பதற்கும், உதவி செய்வதற்கும் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான பாதிக்குப் பாதி நாகரிகம் அடைந்த பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

50 இலட்சத்திற்கும் அதிகமான ஆதிவாசிகளுக்கு மருத்துவ உதவி செய்து, தங்கள் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளோம். ஆகவே என் வாசகர்கள், மானுடவியலாளரின் வேலை ஆதிவாசிகளை மிருகக்காட்சி சாலையில் அடைப்பதைப் போலன்றி அதற்கு நேர்மாறானது என்று புரிந்து கொள்வார்கள்.

பழங்குடி மக்களை காட்டிலும் மலையிலும் சுதந்திரமாக நடமாடுவதை உறுதிசெய்து, பொருளாதாரச் சுரண்டலில் இருந்து காப்பாற்றி, இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய மேலான மனிதனாக வளர்த்தெடுப்பதே எங்கள் கடமை.

0

_________
‘Do We Really Want to Keep them in a Zoo?’ – Verrier Elwin

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *