Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #11 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #1

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #11 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #1

ஜார்ஜ் ஆர்வெல் - ஒரு யானையைச் சுடுதல்

கீழைப் பர்மாவின் மௌல்மெய்ன் பகுதியில் வசிக்கும் பெருவாரியான மக்கள் என்னை முழுவதுமாக வெறுத்தார்கள். இந்த வெறுப்புணர்வுக்கு முக்கியக் காரணியாக நான் ஒரேயொரு முறை இருந்திருக்கிறேன். ஐரோப்பிய எதிர்ப்புணர்வு கொழுந்துவிடும் நகரமொன்றில், நான் துணை வட்டார காவல் அதிகாரியாகப் பணிசெய்து கொண்டிருந்த காலமது.

ஐரோப்பியருக்கு எதிராகக் கலகம் செய்யும் அளவுக்கு யாருக்கும் அங்கு தைரியமில்லை. ஆனால் தன்னந்தனியாகப் பஜார் வீதிக்குச் செல்லும் ஐரோப்பியப் பெண்ணின் உடையில் வெற்றிலை எச்சிலைத் துப்பும் அளவுக்கு அவர்கள் துணிவார்கள்.

ஒரு காவல் அதிகாரியாக, அவர்களின் தெளிவான தாக்குதல் பார்வைக்கு நான் ஆட்பட்டேன். தற்காத்துக் கொள்ளும் பொறுட்டுச் சில சமயங்களில் வேண்டுமென்றே கோபத்தை வெளிப்படுத்தினேன்.

கால்பந்து மைதானத்தில் வேகமாக ஓடிவந்து என்னையொரு பர்மிய நாட்டுக்காரன் தள்ளிவிட்டபோது, நடுவர் வேறெங்கோ பார்த்தார். அவரும் ஒரு பர்மியர்தான். இதைப் பார்த்த ரசிகர் கூட்டம் பயங்கரமாக வெடித்துச் சிரித்தது. இந்தச் சம்பவம் பலமுறை தொடர்ந்தது. என்னை ஏளனமாகப் பார்த்த மஞ்சள் முகங்கள், நான் பாதுகாப்பான இடத்துக்குப் பல மடங்கு தூரம் சென்றபிறகும் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதுபோல உணர்ந்தேன்.

இளம் புத்த பிக்குகளின் நிலை இதில் இன்னும் மோசம்.‌ சில ஆயிரக் கணக்கான இளம் பிக்குகள் வேறெந்த வேலையும் இல்லாமல், வீதி ஓரமாக நின்று ஐரோப்பியர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இவையெல்லாம் குழப்பமூட்டியதோடு வருத்தத்தையும் மிகுவித்தன. ஏகாதிபத்தியம் ஒரு மோசமான சமாச்சாரம் என்று இந்த இடைப்பட்ட காலத்தில் நான் தெரிந்துகொண்டேன். இந்த வேலையைக் கூடிய விரைவில் உதறிவிட்டு வேறொரு நல்ல பணியில் அமரவேண்டும் என்று சித்தம் கூடியது.

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நான் ரகசியமாகப் பர்மிய மக்களுக்கு ஆதரவாகவும் ஐரோப்பியர்களுக்கு எதிராகவும் வேலை செய்தேன். இத்தகைய வேலையின் கசப்புணர்வை என்னால் எளிதில் புரியவைக்க முடியாது. பேரரசின் மோசமான கைங்கரியங்களை இதுபோன்ற வேலையில் நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.

நாற்றம் வீசும் லாக்-அப் அறைகளில் பதுங்கி கிடக்கும் அவலட்சணமான கைதிகளும், நீண்டகாலம் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் நரைத்த முடியும், முதிர்ந்த முகமும், மூங்கில் பிரம்பால் புட்டத்தில் அடிவாங்கிச் சகித்திருக்கும் மனிதர்களின் வலியும் என்னை மென்மேலும் குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தின. ஆனால் எதையும் என்னால் தெளிந்த கண்ணோட்டத்தில் பார்க்கமுடியவில்லை.

நான் கல்வியறிவு அற்ற ஓர் இளைஞன். கிழக்கின் ஆங்கிலேயர்கள் மீது திணிக்கப்படும் முழு மௌனத்திலிருந்துதான் நான் என் குழப்பத்திற்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அழிந்து கொண்டிருப்பதுகூட எனக்குத் தெரியாது. பென்னம் பெரிய சாம்ராஜ்யத்தைப் பெயர்த்தெடுக்கும் சின்னஞ்சிறு சாம்ராஜ்யங்களைவிட பிரிட்டிஷ் அரசே மேலானது என்ற அளவில்தான் நான் அறிவு பெற்றிருந்தேன்.

நான் பணியாற்றிவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மீதான என் வெறுப்புணர்வுக்கும், என் பணிகளைச் சாத்தியமற்றதாக மாற்றும் தீய சக்திகள் நிரம்பிய மிருகக் கூட்டத்தின் மீதான கோபத்துக்கும் மத்தியில் நான் சிக்குண்டு கிடப்பதை மட்டுமே அறிந்தேன்.

காலகாலத்துக்கும் அடிபணிந்து வாழும் மக்கள் கூட்டத்தின் விருப்பத்தினால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஓர் அசைக்கமுடியாத கொடுங்கோன்மைப் பந்து என ஒரு பக்கம் தோன்றுகிறது. மறுபுறம், ஒரு பௌத்தப் பிக்குவின் இதயத்தில் கூர்மையான கத்தியை உட்செலுத்துவதே மட்டற்ற மகிழ்ச்சி என்று தோன்றுகிறது. இத்தகைய தலைகால் புரியாத எண்ணவோட்டங்கள் எல்லாம் ஏகாதிபத்தியத்தின் துணை வஸ்து என்று வேலையிலிருந்து வரும் எந்தவொரு ஆங்கிலோ – இந்திய அதிகாரியிடம் கேட்டாலும் உங்களுக்குச் சொல்வார்.

ஒருநாள் சுற்றுச்சந்தி சாலையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றினால் எனக்குப் பல விஷயங்கள் தெளிவாகின. அது ஒரு சாதாரணச் சிறிய விபத்துதான் என்றாலும் ஏகாதிபத்தியத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், சர்வாதிகார அரசாங்கங்கள் செயல்படும் நோக்கத்தைத் தெரிந்துகொள்வதற்கும் எனக்குச் சிறந்த வாய்ப்பாக இருந்தது.

ஒருநாள் அதிகாலையில் நகரின் மறுமுனையில் இருந்து காவல் துணை ஆய்வாளர் ஒருவர், ஊருக்குள் புகுந்த யானை ஒன்று பஜாரில் நாசம் செய்து கொண்டிருப்பதாகத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார். என்னால் நேரில் வந்து ஏதும் செய்ய முடியுமா என்று கேட்டார். எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரும்பினேன். குதிரையில் ஏறி பஜாரை நோக்கி விரைந்தேன்.

பழைய 44 வின்செஸ்டர் துப்பாக்கி ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டேன். யானையைக் கொல்லும் அளவுக்கு இது பெரிய துப்பாக்கி இல்லைதான். இருந்தாலும், இதன் பயங்கரச் சத்தம் யானையைப் பயமுறுத்த உதவும் என்று நினைத்தேன். வழியில் பல பர்மியர்கள் என்னை இடைமறித்து யானையின் அட்டகாசத்தைப் பட்டியிலிட்டுச் சொன்னார்கள்.

நிச்சயமாக இது காட்டு யானை அல்ல. பாங்காகப் பழக்கப்பட்ட ஒன்று. மதம் பிடித்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் ‘மதம்’ பிடிக்கலாம் எனும் நிலையில் உள்ள இது போன்ற யானைகளைச் சங்கிலியில் பிணைத்திருப்பார்கள். ஆனால் முந்தைய இரவு இது தன் சங்கிலியை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளது.

இந்த நிலையில் இதைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரே நபர் யானைப் பாகர் மட்டுந்தான். அவரும் யானையைப் பின்தொடர முயன்று வழிதவறிச் சென்றிருக்கக் கூடும். பன்னிரெண்டு மணிநேரப் பயணத்துக்குப் பிறகு, அதிகாலைச் சமயத்தில் மீண்டும் நகரத்தை அடைந்திருந்துகிறது யானை.

பர்மியர்களிடம் ஆயுதம் கிடையாது. பாவம்போல் நிராதரவாக நின்றுகொண்டிருந்தார்கள். ஏற்கெனவே ஒருவரின் மூங்கில் குடிசையைச் சின்னாபின்னமாகியுள்ளது. பசுவைக் கொன்று, பழக்கடைகளைச் சூறையாடியுள்ளது. அத்தோடு நில்லாமல் நகராட்சிக் குப்பை வண்டியைத் தலைகுப்புற கவிழ்த்தியுள்ளது. நல்லவேளையாக ஓட்டுநர் வெளியே குதித்துவிட்டார்.

யானை வந்துசென்ற பகுதியில் இந்தியக் காவலர்களும் பர்மிய துணை ஆய்வாளரும் எனக்காகக் காத்திருந்தனர். அந்தப் பகுதி மிகுந்த சேதாரத்துக்கு உள்ளாகி இருந்தது. செங்குத்தான மலைப்பாதையில் வளைந்து நெளிந்த தளத்தில் மூங்கில் கொட்டகைகளைப் பனையோலை கொண்டு வேய்ந்திருந்தனர். மழை வருவதற்கு முந்தி மேகமூட்டம் கொண்ட, அந்த அடர்த்தியான காலைப் பொழுது இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

யானை எங்கிருந்து வந்தது, எங்கே சென்றது என்ற வழக்கமான கேள்விகளை அக்கம் பக்கம் விசாரித்தோம். அவர்களும் வழக்கம்போல் தெளிவற்ற தகவல்களைச் சொன்னார்கள். கிழக்கின் மாறாத குணம் இது. தூரத்தில் இருந்து கேட்கும்போது கதை தெளிவாக இருக்கும். பக்கம் நெருங்க நெருங்க, கதையில் பல ஓட்டைகளும் தெளிவின்மைகளும் பிறக்கும்.

சிலர் யானை அந்தப் பக்கம் போனதாய் சொன்னார்கள். சிலர் இந்தப் பக்கம் என்றார்கள். இன்னும் சிலர் யானை பற்றிய அரவமே கேட்கவில்லை என்றார்கள். சிறிது தொலைவில் வரும்போதே, இவர்களின் கூச்சலைக் கொண்டு இவையெல்லாம் பொய்க்கதை மூட்டை என்று நான் தீர்மானித்து விட்டேன்.

ஓர் உரத்த அவமானகரமான குரலில், ‘இங்கிருந்து செல்லுங்கள். உடனே ஓடுங்கள் குழந்தைகளே!’ என்றொரு வயதான பெண் குடிசையின் மூலையைச் சுற்றிவந்து, நிர்வாணமாக நின்றுகொண்டிருந்த குழந்தைக் கூட்டத்தைக் காட்டமாகக் கத்தி விரட்டினாள். சில பெண்கள் அவளைப் பின்தொடர்ந்து சென்று ஆச்சரியமாக உச்சுக்கொட்டினார்கள். நிச்சயமாக அது குழந்தைகள் பார்க்கக்கூடாத ஏதோவொன்றாக இருக்க வேண்டும். நான் அந்தக் குடிசையைச் சுற்றிவந்து பார்த்தேன். ஒரு மனிதனின் சடலம் சேற்றில் தோய்ந்து கிடந்தது.

அவன் ஒரு இந்தியன். கறுப்பு நிற, திராவிடக் கூலியாள். கிட்டத்தட்ட ஆடையின்றி நிர்வாணமாகக் கிடந்தான். அவன் இறந்து ரொம்ப நேரம் ஆகியிருக்காது. திடுதிப்பென்று வந்த யானை, மூலையில் உள்ள இவன் குடிசையில் புகுந்து துதிக்கையால் சுற்றி வளைத்து, அவன் முதுகில் கால்பதித்து நிலத்தோடு மதித்ததாக ஊர் மக்கள் சொன்னார்கள்.

அது மழைக்காலம் என்பதால், தரை மிருதுவாக இருந்தது. இரண்டு கெஜம் நீளத்துக்கு அவன் முகம் யானையின் காலடித் தடத்துக்கு ஏற்ப ஆழமாக உட்சென்றிருந்தது. இரண்டு கைகளையும் சிலுவையில் அறைந்தார்போல் விரித்து, கழுத்தை ஒருபக்கமாகச் சாய்த்து, தன் வயிற்றின் மேல் படுத்திருந்தான்.

அவன் முகத்தில் சேறு பூசப்பட்டு, கண்கள் அகலத் திறந்திருந்தன. பற்களின் வெறுமை, தாங்க முடியாத வேதனையை வெளிக்காட்டும்படிச் சிரித்தன. (மரணம் சாந்தமானது என்று என்னிடம் இனி ஒருபோதும் சொல்லாதீர்கள். நான் பார்த்த பாதிக்கு மேலான பிணங்கள் மூர்க்கமானவை) முயலைத் தோலுரிப்பதுபோல் யானையின் காலடிப் பட்டதும் அவன் முதுகுச் சதை அறுபட்டு இருந்தது.

சடலத்தைப் பார்த்த மறுகணமே யானையைச் சுட்டு வீழ்த்துதற்காகத் துப்பாக்கியை இரவல் பெற்று வரும்படி அருகிலிருந்த ஒரு நண்பரின் வீட்டுக்கு ஆர்டர்லியை அனுப்பிவைத்தேன். யானையின் வாசம் பிடித்து, என்னைத் தூக்கி எறிந்துவிடக் கூடாது என்று முன்னரே யோசித்துக் குதிரை வண்டியைத் திருப்பி அனுப்பிவிட்டேன்.

சில நிமிடங்களில் ஐந்து தோட்டாக்களையும், ஒரு துப்பாக்கியையும் ஏந்திக்கொண்டு ஆர்டர்லி வந்துவிட்டான். அதே சமயம் சில நூறு அடியில், மலைக்குக் கீழுள்ள நெல் வயல் ஒன்றில் யானை பதுங்கியிருப்பதாகச் சில பர்மியர்கள் வந்து சொன்னார்கள். அவர்கள் சொன்ன திசையில் துப்பாக்கி ஏந்திக்கொண்டு நான் முன்னேறியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மக்கள் எல்லோரும் வீட்டைவிட்டு வெளியேறி என்னைப் பின்தொடர்ந்தார்கள்.

துப்பாக்கியைப் பார்த்து, நானந்த யானையைச் சுட்டு வீழ்த்தப் போகிறேன் என்று ஆரவாரமாக ஒலியெழுப்பினார்கள். அவர்களின் வீட்டை யானை நாசம் செய்தபோது இல்லாத அக்கறை, தற்போது குண்டடிப்பட்டுச் சாகப் போகையில் பீரிடுகிறது. ஆங்கிலேயரைப்போல் இவர்களுக்கும் இது ஒரு வேடிக்கை. இதைத் தாண்டி யானையின் இறைச்சிக்காகவும் அதைப் பின்தொடர்ந்தார்கள். எனக்கு இது மேலும் குழப்பமூட்டியது.

யானையைக் கொல்லும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. ஒருவேளை ஆபத்து நேர்ந்தால் என்னைத் தற்காத்துக் கொள்ளவே துப்பாக்கி கொண்டுவரச் சொல்லி ஆளை அனுப்பினேன். இத்தகைய வேளையில் என்னைப் பின்தொடரும் கூட்டம் மிகுந்த கவலையளிக்கிறது. என்னை ஒரு முட்டாளாக உணர்ந்து, தோளின் மீது துப்பாக்கி சுமந்து, என் காலடி அசைவுக்கு ஏற்ப நகரும் மக்கட்திரளை வழிநடத்தி மலையின் கீழ் அணிவகுத்துச் சென்றேன்.

குடிசைகளை விட்டு கீழே இறங்கி வந்ததும், ஒரு கான்கிரீட் சாலை இருந்தது. அதைத் தாண்டி ஆயிரம் கெஜம் அளவுக்குப் பரந்து விரிந்த ஒரு நெல் வயல். இன்னும் அறுவடை செய்யாத அவ்வயலில் மழைநீர் நிறைந்து, சேறும் சகதியுமாக இருந்தது. சாலையிலிருந்து எட்டடி தூரத்தில், எங்களின் வலதுபுறமாக யானை நின்றுகொண்டிருந்தது. மக்கள் திரளை அது ஏறெடுத்தும் பார்க்கவில்லை. புற்களைக் கத்தையாகப் பிடுங்கி, அவற்றை முட்டியில் அடித்துச் சுத்தப்படுத்தி வாய்க்குள் திணிப்பதில் மும்முரமாக இருந்தது.

நான் சாலையில் அதே இடத்தில் நின்றுவிட்டேன். யானையைப் பார்த்த மறுகணமே, அதைச் சுட்டுவிடக் கூடாது என்ற தெளிவில் என்னை உறுதிப்படுத்திக் கொண்டேன். உயிருள்ள யானையைச் சுட்டு வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. விலையுயர்ந்த பெரும் இயந்திரத்தை அழித்துக்கட்டுவதற்குச் சமானம். அதைத் தவிர்ப்பதற்கு போதுமான சூழல் வாய்க்கும்வரை அவ்வாறு செய்யாமல் இருப்பதே நல்லது.

தூரத்தில் நின்று அமைதியாகத் தின்றுக்கொண்டிருக்கும் யானையைப் பார்ப்பதற்குச் சாதாரண பசு போலத்தான் இருந்தது. மதம் பிடித்த யானையின் ‘சூரதீரச்’ செயல்கள் ஒருவழியாக ஓய்ந்துவிட்டதாக நான் அப்போது நினைத்தேன். யானைப் பாகன் திரும்பிவந்து அதனைப் பிடித்துச் செல்லும்வரை ஆபத்தின்றி அங்குமிங்கும் உலவும் என்று நினைத்தேன்.

மேலும் அதைச் சுட்டுத்தள்ள எனக்குத் துளியும் விருப்பமில்லை. மீண்டும் மதம்பிடித்து காட்டுத்தனமாக நடந்துகொள்ளாமல் இருக்கும்வரை அதை நிதானமாகப் பார்த்துவிட்டு வீடு திரும்பலாம் என முடிவு செய்தேன். அந்த முடிவோடு பின்னால் திரும்புகையில், கடல்போலக் குழுமியிருந்த கூட்டத்தினரின் முகம் என் பார்வையை நிறைத்தது.

(தொடரும்)

_________
‘Shooting an Elephant’ –  George Orwell

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *