இயல்பு வாழ்க்கையைக் காட்டிலும் காதல் பற்றிய கட்டுமானங்கள் மேடை நாடகத்தில் மிகுதியாக இருக்கின்றன. நாடகத்தைப் பொறுத்தவரை காதல் எப்போதும் வேடிக்கையான விஷயம். அவ்வப்போது அதில் துன்பியல் சேர்ந்து கொள்வதும் உண்டு.
ஆனால், எதார்த்த வாழ்வில் காதல் பல பொல்லாத விஷயங்களைச் செய்கிறது. சில நேரங்களில் சைரன்1 போல ஏமாற்றுகிறது; சில நேரங்களில் கண்மூடித்தனமான கோபத்தால் கிறங்க வைக்கிறது. (ஆதிகாலத்தில் இருந்து நிகழ்காலம் வரை என் ஞாபகத்தில் இருந்து சொல்கிறேன்) நீங்களே கவனித்துப் பாருங்கள், உலகின் மதிப்புமிக்க மாபெரும் மனிதர்கள் எவரும் காதலில் பித்துப்பிடித்துப்போய் முட்டாளாகத் திரியவில்லை.
உயர்ந்த உள்ளம் படைத்தவர்களும், செயற்கரிய செயல்களுக்குச் சொந்தக்காரர்களும் இந்த வலிமைக் குன்றிய வேட்கையில் இருந்து விலகியிருப்பதை இது காட்டுகிறது.
ரோமப் பேரரசின் ஒரு பாதியை ஆண்டு வந்த மார்க் ஆண்டனியும், சட்ட வல்லுநர்கள் பதின்மருள் ஒருவரான ஏப்பியஸ் கிளாடியஸும் இதற்கு விதி விலக்கு. சிற்றின்ப நுகர்ச்சிக்கு ஆட்பட்டு அதீத புலன் இன்பங்களைச் சுவைப்பவன் ஆண்டனி. ஆனால், ஏப்பியஸ் கிளாடியஸ் ஆச்சாரமான மனிதன். அவன் ஒரு புத்திசாலி.
(அரிதாக இருந்தாலும்) இதன்மூலம் வெளிப்படுவது என்னவென்றால், உணர்ச்சிவயப்படும் பலகீனமான இதயங்களை மட்டுமின்றி, கோட்டைக் கொத்தளங்களில் பூட்டி வைக்கப்படும் இரும்பு இதயங்களையும் காதல் ஊடுருவிச் செல்லும். காவலுக்குக் கட்டுப்பாடு குன்றினால், அங்குக் காதல் கால்நீட்டிப் படுத்துக்கொள்ளும்.
‘மனிதனின் படிப்பினைகளிலேயே மிகச் சிறந்தது, மனிதனைப் பற்றிய படிப்பினைதான்’ என்று எபிகியூரஸ் சொல்கிறார். சொர்க்கத்தைப் பற்றியும், உலகின் உன்னதமான புனிதச் சின்னங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டிய மனிதன், சிலை போன்ற ஒரு பெண்ணின் முன்னால் அற்பமாக மண்டியிட்டு தன்னையே அர்பணிக்கிறான். (மிருகங்களைப் போல்) வயிற்றுப் பசிக்காகப் பின்தொடர்ந்தாலும் பரவாயில்லை, உயர்ந்த நோக்கத்துக்காகப் படைக்கப்பட்ட கண்களின் மயக்கத்திற்கு ஆட்பட்டு அலைகிறான்.
காதலின் போக்கு மிகுதியாவதைப் பார்க்க விசித்திரமாய் இருக்கும். அது மனித இயல்பைப் புரட்டிப்போடுகிறது; வாழ்வின் அறங்களை உடைத்துப்போடுகிறது. இயல்புக்கு மீறி தற்குறிப்பேற்றி பேசும் பண்பு, காதலில் மட்டுமே உண்டு. வார்த்தைக்காக அல்ல, இவர்கள் வாழ்க்கையே இப்படித்தான்.
போலியாக முகஸ்துதி செய்து துதிபாடுபவர்கள் எல்லோரும் தங்கள் காரியத்திற்காக ஏதும் செய்கிறவர்கள். ஆனால் காதலில் விழுந்தவனோ, துதி பாடுபவர்களுக்கெல்லாம் ஆதி அந்தமாய் உள்ளவன். அவனைக் காட்டிலும் தாஜா செய்பவன் யாரும் கிடையாது.
தன்னை மெச்சிக் கொள்ளும் தற்பெருமைக்காரன் கூட, அவனைப் பற்றி பொருந்தாத அபத்தமான விஷயங்களை ஏற்றுக் கொள்ளமாட்டான். ஆனால் காதல் வயப்பட்டவன், தன் காதலர் பற்றி இல்லாத பொல்லாத விஷயங்களை ஏற்றிக் கூறிவான். ஆகவே, காதலும் அறிவும் ஒரே இடத்தில் தோன்றாது என்று மிகச் சரியாகச் சொல்லி வைத்தார்கள். இந்தப் பலவீனம் ஒருதலைக் காதலர்களுக்கோ, பரஸ்பரக் காதலர்களுக்கோ மட்டுமின்றி கண்மூடித்தனமாய் காதலிப்பவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பது உண்டு.
காதலில் ஒரேயொரு விதி உண்டு. மேல்சொன்ன முறைமைகளில் நீங்கள் காதலிக்கும்போது உங்கள் காதலரிடம் இருந்து இவை அப்படியே திரும்ப வரலாம், இல்லையெனில் இவையெல்லாம் முட்டாள்தனம் என்ற அவச்சொல் ஏற்படலாம். இந்த விஷயத்தில் மனிதன் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மற்றவைகளோடு காதலையும் சேர்ந்து இழக்க நேரிடும்.
மற்ற இழப்பீடுகளைப் பொறுத்தவரை நம்மால் சேதாரத்தைக் கணக்கிட முடியும். ஆனால், காதலில் முடியாது. ஜூனோ, பல்லாஸ் ஆகியோர் கொடுத்த பரிசுகளைப் புறமொதுக்கி, ஹெலினா கொடுத்த பரிசைத் தானே பாரிஸ் ஏற்றுக்கொண்டான்2. காதலுணர்ச்சியை அளவுக்கு அதிகமாய் உள்வாங்கிக் கொள்பவன் செல்வத்தையும் அறிவையும் ஒருசேர இழக்கிறான்.
உள்ளத்தில் உறுதியின்றி, பலகீனமாக உணரும்போது, காதல் என்ற உணர்வு வெள்ளம்போல் மனதைச் சூறையாடும். கற்பகத் தருவாய் விரும்பியதெல்லாம் வழங்கினாலும், அதனால் ஏற்படும் துன்பங்களும் உண்டு. ஆனால் அதை யாரும் பெரிதாக உணர்வதில்லை.
காலப்போக்கில் நன்மை தீமை இரண்டும் சேர்ந்து காதலை ஒருவன் மனத்தில் தூண்டிவிடும். அதன் தீவிரத்தை உணர்த்தும். இவையெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டுபோல அவனுள் அரங்கேறும்.
காதல் வயப்பட்டும் அதற்கு முழுமையாய் ஆட்படாத சிலர் உள்ளனர். காதலை எந்த நிலையில் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். வாழ்வின் தீவிரமான பொறுப்புகளுக்கு இடையில் அதை நுழைத்துக் கொண்டு சின்னாபின்னம் செய்வதில் அவர்களுக்கு ஈடுபாடு கிடையாது. காதலைத் தன் அலுவலோடு போட்டுக் குழப்பிக் கொண்டால், அது தன் எதிர்காலத்திற்குப் பொல்லாததாய் விடியும் என்று நன்கு அறிவர்.
போர்வீரர்கள் எளிதில் காதல் வயப்படுவது ஏன் என்று எனக்குத் தெரியாது. போர் உண்டாக்கிய ரணத்தை மது உண்பதன் மூலம் மறப்பது போல, சிற்றின்பத்தில் மூழ்குவது தங்கள் கடந்தகாலக் கசப்புணர்வை மறக்க உதவும் என்று ஒருவேளை அவர்கள் எண்ணியிருக்கலாம்.
இயற்கையிலேயே மனிதன் தன்னை அறியாமல் பிறர் மீது காதல் கொள்வது அவன் இயல்பில் உள்ளது. ஆனால் அதை யாரோ ஒருவர் மீதோ, குறிப்பிட்ட சிலர் மீதோ கொள்ளாமல் ஒட்டுமொத்த மனித இனத்தின் மீதும் அன்பு செலுத்தபவராக நீங்கள் மாறினால் மனிதாபிமானம் கொண்ட தருமச் சிந்தனை உடையவராக நீங்கள் காட்சியளிப்பீர்கள். இது சில நேரங்களில் தேவாலயப் பாதிரிமார்கள் வெளிப்படுத்தும் குணம்.
திருமணப் பந்தமுடைய காதல் மனித இனத்தை விரித்தியாக்குகிறது; நட்புணர்வு கூடிய காதல் அதைச் சீர் செய்கிறது; ஆனால் விளையாட்டுத்தனமாக நாம் இப்போது நடைமுறைப்படுத்தும் காதல், இருவரின் உறவையும் சிதைத்துத் தரம் தாழ்த்துகிறது.
0
1. சைரன் ஒரு கடல் தேவதை. கிரேக்கப் புராணத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கதாபாத்திரம். ரசமான குரலில் காமம் கலந்து பாடி, தூரத்து மாலுமிகளைத் தன்வயம் ஈர்க்கும் திறம் கொண்டது சைரன். அவர்களைத் தனிமையில் அழைத்துச் சென்று ஆசைதீர கொலை செய்யும் இயல்புடைய ஜீவராசி.↩
2. இது கிரேக்க புராணத்தில் இடம்பெற்றுள்ள கதை. பாரிஸிடம் ஒரு தங்க ஆப்பிள் இருந்தது. அதை கைமாறாகப் பெற்றுக்கொள்வதற்கு ஜூனோ பணமும் அதிகாரமும் தருவதாகச் சொன்னாள். பல்லாஸ் அறிவும் ஞானமும் தருவதாகச் சொன்னான். ஆனால் உலகிலேயே அழகான இளம் பெண்ணைத் தருவதாக ஹெலினா சொன்னதும் முன்னிருவரின் கோரிக்கைகளையும் நிராகரித்து, தங்க ஆப்பிளை ஹெலினாவிடம் ஒப்படைத்துவிட்டான் பாரிஸ்.↩
_________
‘Of Love’ (1612) – Francis Bacon