Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #14 – கிறிஸ்டோபர் மார்லி – புத்தகக் கடைக்குச் செல்லும் அனுபவம்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #14 – கிறிஸ்டோபர் மார்லி – புத்தகக் கடைக்குச் செல்லும் அனுபவம்

கிறிஸ்டோபர் மார்லி

ஏதாவது ஒரு குறிப்பிட்ட புத்தகம் வேண்டுமென்றால் மட்டுமே புத்தகக் கடைக்குச் செல்வது பல பேரின் வாடிக்கையாக இருப்பதை எண்ணி நான் சற்றே வேடிக்கையாக உணர்கிறேன். அப்பாவித்தனமான ஒரு புத்தகப் போதைக்காகவோ, புத்துணர்ச்சிக்காகவோ கூட இவர்கள் ஒருபோதும் புத்தகக் கடைக்குப் போக மாட்டார்களா?

சில கண்ணியமான மனிதர்கள், தங்கள் பிரம்மாண்ட பயணத்தின் ஒரு பகுதியாகப் புத்தகக் கடைக்கு வருகிறார்கள். தான் விரும்பும் புத்தகத்தை வாங்குவது மட்டுமே அவர்கள் நோக்கமல்ல. மாறாகத் தன்னைத் தேடும், தனக்கான புத்தகத்தைக் கண்டுபிடிக்கும் சாகசப் பயணமாக இதைக் கருதுகின்றனர்.

ஆர்வமூட்டக்கூடிய, அன்பின் இழைகள் அறுபட்டுப்போன, அலமாரியின் மேல்பலகையில் நெடு நாட்களாக வீற்றிருக்கும் புத்தகங்களைக் கையில் ஏந்தி நீங்கள் ஏன் தெம்பூட்டக்கூடாது? அவற்றை ஏன் வீட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடாது? (ஒருவேளை அவை உங்களையும் மகிழ்ச்சியூட்டலாம்) என் இனிய புத்தகப் பிரியர்களே, கண்ணியத்தோடு சிறிதளவு சாகசம் மேற்கொள்ளுங்கள்.

மக்களுக்குப் புத்தகக் கடைகளைப் பயன்படுத்தும் அளவுக்குப் போதுமான அறிவில்லை. நாகரிக உலகில் இதில் மட்டுந்தான் மக்கள் அறிவுப் போதாமையுடன் இருக்கிறார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. இந்தக் காலகட்டத்தில், இன்னும் குறிப்பாக இந்த நகரத்தில் நம் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள போதுமான நேரமில்லை.

புத்தகங்களைப் பொறுத்தவரை ஒரு விநோதமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அதனிடம் இதயம் திறந்து உரையாடினால் அவை உடனடியாக உங்களைப் பின்தொடர ஆரம்பிக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் தெளிவாக இருந்தால் (சிலர் உங்களைப் புத்தகப் புழு என்று சொல்லலாம்), உங்களுக்கான புத்தகத்தைக் கையில் தொட்டதும் தெரிந்துகொள்வீர்கள்.

நீங்கள் அதைத் தவிர்த்தாலும் தயங்கினாலும் உங்கள் கண்ணில் படும் ஒவ்வொரு பத்தியும், ஒவ்வொரு வசனமும், குறைந்தபட்சம் அதில் பொதிந்துள்ள ரசமான சுவையாவது முன்பைவிட மிக ஆழமாக உங்களைப் பின்தொடரும். ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் நீங்கள் எதேச்சையாகக் காணும் சில வரிகள், உங்கள் நாளின் ஒட்டுமொத்த சிந்தனையையும் தலைகீழாகப் புரட்டிப்போடலாம், உங்கள் பார்வையை மாற்றி அமைக்கலாம், நீங்கள் காணும் உலகத்தையே வேறுமாதிரி அறிமுகப்படுத்தலாம்.

மற்றொரு நாள், இரவு நேரச் சுரங்க ரயில் பயணத்தில், வால்டர் டிலெ மேராவின் ‘ரூபர்ட் ப்ரூக்’ பற்றிய சுவாரஸ்யமான கட்டுரையொன்றை நீங்கள் படிப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் கனவு காண்பது பற்றியும், அவர்கள் அப்பழுக்கற்றுப் பூரணத்துவமாக இயங்குவது பற்றியும் அந்தக் கட்டுரை பேசுகிறது. இதைப் படித்து முடிக்கும்போது, பயண நேரத்தின் இறுதியில் உங்கள் மனம் விஷேசமான மாயாஜாலத்தால் திடீரென உருமாறியிருப்பதை உணர்வீர்கள். சக மனிதர்களோடு காட்டுத்தனமாக, ஏதோவொரு ஆதாயத்தோடு நம்பிக்கையின்றிச் சண்டையிடுவதை இந்த எண்ணம் சுக்குநூறாக உடைக்கிறது. குழந்தை போன்ற பரிசுத்தமான மனத்தோடு அன்றிரவு உறங்கச் செல்வீர்கள்.

சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தப் புத்தகம் இப்பொழுதோ எதிர்வரும் பொழுதோ தனக்கானது என்றறிந்து, அதை நேருக்கு நேர் சந்திந்து, ஸ்பரிசம் தொட்டுப் பிரிக்கும்போது உலகின் அதி அற்புதமான மகிழ்வூட்டும் தருணத்தை நீங்கள் கண்முன் காண்பீர்கள். விவரிக்க முடியாத விஷேச உணர்வுகளைச் சில புத்தகங்கள் நம்மேல் கடத்துகின்றன.

இந்த விவகாரங்களை மென்மையாய் உணர்ந்துகொள்ளக் கூடிய ஒருவருக்கு, உன்னதமான புத்தகங்களின் வாசனையைத் தூரத்திலிருந்தே உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் வாய்க்கிறது. புத்தகங்களின் மகோன்னதமும் உண்மையும் அதற்குத் தேவையான விளம்பரங்களைச் செய்கின்றன. புத்தக அட்டையின் தேவைக்கதிகமான விளம்பர வாசகங்கள், அளவுக்கு மீறிய வர்ணனைகளைத் தாண்டி அதன் ஆத்மார்த்தமான உள்ளடக்கம் அதிர்வலைகளை உண்டாக்கும்.

புத்தகங்களைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர், சன்ஸ் புத்தக விமர்சன இதழின் தலையங்கத்தில், ‘அட்டைப் படத்தில் இருக்கும் மிதமிஞ்சிய வசனங்களும், ஓவியங்களும் புத்தக விற்பனைக்கு மட்டுமன்றி, புத்தகத்துக்கு ஒருபோதும் உதவி செய்யாது’ என்று குறிப்பிட்டார். நேர்மையான புத்தக விரும்பியின் பார்வையிலிருந்து பார்த்தால் அவர் சொன்னது மிகச்சரியான கூற்று.

வரிந்து கட்டிய வெளிப்புற உறையை வைத்தா, நாம் நமது உணவைத் தேர்வு செய்கிறோம்? அதன் தரத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டுதானே உத்தேசிக்கிறோம்.

இன்னொரு நாள், ஒரு புத்தகக் கடையில் சுற்றித் திரிந்தபோது, ஆலிஸ் மெய்னெல் எழுதிய ஒரு சிறிய கவிதைப் புத்தகத்தின் இரண்டு மென் அட்டைப் பதிப்புப் பிரதிகள் கிடைத்தன. குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது அவை இதே இடத்தில் இருந்திருக்க வேண்டும்.

நாங்கள் ஓரிரண்டு வருடங்களுக்கு முன்பே இங்கு அதைப் பார்த்திருக்கிறோம், ஆனால் அதன் வசீகரத்திற்குப் பயந்து விலை கொடுத்து வாங்கத் துணியவில்லை. இந்தமுறை துணிந்தோம். அதிலிருந்து ‘ஓ என்றவளின் இருண்ட கண்களுக்கு’, ‘இங்கிலாந்தின் தெளிந்த வானிலையில் வீசும் காற்று’ என்ற இரண்டு கவிதைகளை வாசித்த கணமே, அந்தப் புத்தகம் எங்களுக்கானது எனத் தோன்றியது. இல்லையென்றால் நாங்கள் அதன் வசம் ஆட்பட்டோம் என்று சொல்லலாம். இருந்தும் அதை எங்களால் உடனடியாக வாங்கமுடியாத சூழல். மறுநாள் வந்து பணம் செலுத்திப் பெற்றுக்கொண்டோம்.

இப்பேற்பட்ட புத்தகத்தை இத்தனை நாட்கள் எப்படித் தேக்கி வைத்திருக்க முடிந்தது என்று நாங்கள் இப்போதும் ஆச்சரியமடைகிறோம். அதை வாங்கியதும், அந்த நாளே வித்தியாசமாக இருந்தது. வானம் பிரகாசமான நீல நிறத்தில் நிரம்பியிருந்தது. காற்றும் கதிரொளியும் பின்னிப் பிணைந்து நுரையீரலில் நுழைந்து புத்துணர்வூட்டின.

தெருவில் பார்க்கும் மனிதர்கள் எல்லோரும் அதே அளவிலான உத்வேகத்தில், ஆரவாரத்தோடு எங்களை மேலும் மகிழ்வூட்டினர். சசெக்ஸ் நகரில் திருமதி. மெய்னெலை வசீகரித்த அவர் கவிதையில் வாழும் அதே காற்று, நாங்கள் தூரவெளியில் காணும் மலை முகட்டிலும், வான் வெளியிலும் இன்னும் வீசிக் கொண்டிருந்தது.

உங்களால் ஓர் உண்மையான புத்தகத்தை ஒருபோதும் தவறவிட முடியாது. கிட்டத்தட்ட உண்மைப் புத்தகத்தைத் தேடுவது, காதலிப்பதுபோல் ஒரு சாகசப் பயணம். அதனளவில் ஒரு சமூக அனுபவம். மதிமயங்கிக் காதல் வயப்பட்டவனைப்போல், புத்தகப் பிரியர்களும் தான் புளகாங்கிதம் அடைந்ததைப் பிறர்க்கு ஆவலோடு சொல்வார்கள்.

அதைப் பற்றிக் கடிதம் எழுதுவார்கள், அனைத்துவகைத் தொலைதொடர்பிலும் பிற்சேர்க்கையாக அச்செய்தியினை இணைத்துவிடுவார்கள். அலைபேசி உரையாடலில் நூலைப் பற்றி விரிவாகப் பேசுவார்கள். இன்னும் ஒருபடி சென்று, தான் விரும்பித் தேர்ந்த புத்தகத்தின் தலைப்பைத் தன் நண்பர்களைக் கொண்டு எழுத வைப்பார்கள்.

தன் காதலி மீது ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட, அப்பாவித்தனம் நிறைந்த ஒரு நேர்மையான காதலனைப்போல், புத்தகப் பிரியர்கள், ‘நீங்களும் இதை விரும்ப வேண்டும்’ எனச் சொல்வார்கள். தான் விரும்பும் புத்தகத்தின் மீது இவர்களுக்கு எப்போதும் ஓர் அபிலாஷை உண்டு. தனக்குப் பதிலாக அப்புத்தகத்தை வேறொருவர் கண்டுபிடித்திருந்தால் அதை நினைத்துப் புழுங்கித் தவிப்பார்கள்.

தி நியூயார்க் ரிபப்ளிக் போன்றதொரு நாளிதழில், தான் விரும்பும் புத்தகத்தைப் பற்றி உற்சாகமூட்டும் விமர்சனமொன்றைப் பார்த்துவிட்டால், ‘நான் அதை மூன்று மாதங்களுக்கு முன்பே படித்துவிட்டேன்’ என்று புத்தகப் பிரியர்கள் அலட்சியமாக நடந்துகொள்ளும் வாய்ப்புகள் உண்டு.

தனக்கு ஆகாத விமர்சகர் ஒருவர், தனக்குப் பிடித்த புத்தகம் பற்றி ஆஹா ஓஹோ என்று மெச்சினால், அதை அவர் காரணமின்றியே காலால் மிதிக்கும் சம்பவங்களும் திடீர் திருப்பத்துடன் ஏற்படலாம்.

தனக்கான புத்தகத்தைச் சொந்தமாகக் கண்டுபிடிப்பதில், எல்லோரும் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். பல்வேறு காரணத்திற்காகச் சிலர், தனக்கான புத்தகத்தை வேறு ஒருவர் பரிந்துரைக்க விரும்புகின்றார். இருப்பினும் உண்மையான புத்தகப் பிரியர்களுக்கு, தானாகச் சுயாதீன முயற்சியில் கண்டுபிடிப்பதைத் தாண்டி வேறெதிலும் மகிழ்ச்சி உண்டாகாது.

ஆகவே பதிப்பாசிரியராக வேலை செய்வது, ஒரு சிலருக்கு எப்போதும் மகிழ்வூட்டும் பணியாக இருக்கின்றது. நேர்த்தியாகத் தொகுக்கப்பட்ட வசீகரமான கதைத் தொகுப்பின் மூலம் எங்களைச் சமீபத்தில் ஆச்சரியப்படுத்திய ஹெச். எம். டாம்லின்சன் தனது ‘ஓல்ட் ஜங்க்’ எனும் புத்தகத்தில் குறிப்பிடுவதுபோல்,

ஒளிவீசக் கூடிய பரபரப்பான துறைமுகத்தில் செதுக்கியெடுத்தார் போன்ற வசீகரிக்கும் கப்பலைப் பார்க்கும் சமயத்தில், அது நகராது நீரோடு நங்கூரமிட்டு நின்றாலும் அதன் வான் முட்டும் பாய்மரங்களைப் பார்த்துப் பரவசமடைவதுபோல், நிதானமாகப் புத்தகம் படிக்கும்போது நினைவுக்கு வரும் ஒரு பழம்பாடலின் மனதிற்கு நெருக்கமான வரி அலாதி இன்பம் தரக்கூடியது.

இதில் ‘ஒளிவீசக் கூடிய பரபரப்பான துறைமுகம்’ என்ற குறிப்பிட்ட இடத்தை மட்டும் வாசித்தாலே, கற்பனைக் குதிரைகள் லகான் இன்றிப் பறந்து சாகசப் பயணம் மேற்கொள்கின்றன. அதுபோல் புத்தகக் கடைக்குச் செல்வது ஒரு வழக்கமான சம்பிரதாயச் செயல் அல்ல. மாறாகப் புத்தகத்தின் மீதுள்ள காதலுக்குத் தன்னை முழுமனதாக அர்பணிக்கும் செயல்.

ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கவேண்டுமே என்ற நோக்கத்தில் நாங்கள் புத்தகக் கடைக்குச் செல்வதில்லை‌. மாறாக மற்றொருவரின் மகிழ்வூட்டும், சரளமான எழுத்துப் பிரயோகத்தின் வழி, வலிசுமந்து கொண்டிருக்கும் மனித மனத்தை மயிலிறகால் வருடிக்கொடுக்கும் வார்த்தைகளைத் தேடும் பயணம் அது.

0

_________
‘On Visiting Bookshops’ (1920)  – Christopher Morley

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *