‘காட்டு வாத்து கத்துவதைக் கேட்பதற்காக, இரவில் யாரேனும் தன்னந்தனியாக விழித்திருக்கிறீர்களா?’
எப்போதாவது ஒருமுறை நீங்கள் இரவில் கண்விழிக்கும்படி நேர்ந்துவிடுகிறது. ஏன் இப்படி நிகழ்கிறது என்று, இதுவரையிலும் என்னால் காரணம் தேட முடியவில்லை. செரிமானம் ஆகாத உணவுப் பண்டங்களோ, மிதமிஞ்சிய தேயிலையோ, தேநீரின் ரசாயன உன்னதங்களோ, உணர்வைப் பாதிக்கும் எதிர்பாராத சம்பவங்களோ, ஆர்வமூட்டும் உரையாடல்களோ இதற்குக் காரணமென்று நீங்கள் நினைத்தால் அவை உண்மையல்ல.
உண்மையிலேயே நீங்கள் நன்றாக உறங்க வேண்டும் என்றுதான் படுக்கைக்குச் செல்கிறீர்கள். ஆனால் காட்டிலிருந்து கேட்கும் அரவம் கிட்டத்தட்ட ஒரு கணத்தில் பெருஞ்சத்தமாக உயர்கிறது. நிசப்தம் நிலவிய இரவை, உயர்ந்து வரும் இந்தச் சப்தம், கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறது. எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் கனவுக்கும் நனவுக்கும் மாறி மாறி எண்ண அலைகளைச் சிதறவிட்டுத் திரியும்போது, உங்கள் அனுமதியின்றியே உறக்கம் பறிபோனதை உணர்வீர்கள்!
ஒருவேளை இரவில் நேர விரயம் செய்வதற்குத் தேவையான ஆற்றலை உங்கள் உடல் சேமித்து வைத்திருக்கலாம். இல்லையெனில் மர்மம் நிறைந்த தன் புதிர்களை எல்லாம் உங்களிடம் அறிமுகம் செய்வதற்காக, இயற்கைத்தாய் தன் கபட நாடகத்தை அரங்கேற்ற காத்திருக்கலாம்.
தூக்கமின்மையால் இரவில் விழித்திருக்கும் சாதாரண இரவுகளைக் காட்டிலும், மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் தூங்காமல் கண் விழித்திருப்பது ஓர் அலாதியான அனுபவம். உறங்க விரும்பியும், உறங்க முடியாமல் தவிப்பது நிச்சயமாகக் கவலையூட்டக்கூடிய செயல்தான்.
ஆனால் சற்று நேரத்தில் ஒரு மாற்றம் ஏற்படும். கவலைகள் பறந்தோடும். எதையும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல், மெனக்கெட்டுச் சிந்திக்காமல் தன்போக்கில் மனம் லயிக்கும். தெளிவில்லாத சிந்தனைகளும், நினைவுகளும் அவ்வப்போது வந்துபோகும்.
சில நேரங்களில் தெளிந்த நீரோடை போன்ற சிந்தனைகள் உங்கள் கனிவான பார்வைக்குக் காத்திருந்து, உங்கள் கவனம் வேண்டி நிற்கும். வேறு சில சமயங்களில் அவை மங்கலாகி, அரைத் தூக்க நிலையில் உங்களோடு புதைந்து விடும். ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும், அவை உங்கள் கற்பனை உலகத்தின் மாய எதார்த்தத்தைத் தொட்டுப் பார்த்து, அதன் தோற்றுவாயைத் தேடுகின்றன. இவை எல்லாவற்றையும் பொறுமையாக உள்வாங்கி சிந்திக்கும் பணி உங்கள் மூளைக்கு ஒதுக்கப்படுகிறது.
அமைதியான சூழலில் உங்கள் மூளை நிதானமாகச் சிந்திக்கும். இயற்கையின் முழு பிம்பத்தையும் நீங்கள் தெள்ளத் தெளிவாகப் பார்த்து, கேட்டு, அதன் வாசத்தில் இரண்டறக் கலப்பதற்கு இரவு நேரத்தில்தான் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தக் கிளர்ச்சியூட்டும் உணர்வுகளில் ஆழத் தோய்ந்தாலும், உங்களால் அவற்றைச் சுறுசுறுப்பாகப் பின்தொடரமுடியாது. தேன் கமலும் ரோஜா இதழ்களை மெத்தையில் பரப்பி உறங்குவதுபோல் மகிழ்வூட்டக்கூடிய பெரும் தாக்கம் ஏற்பட்டாலும், உணர்ச்சி வெள்ளத்திலிருந்து மெல்லமாக விடுபடுவீர்கள்.
மாலுமிகள் சொல்வதுபோல் ஆர்ப்பரிக்கும் நதியின் மென்மையான சத்தத்தை இந்தச் சமயத்தில்தான் கேட்கமுடியும். பெரும்பாலான மக்களுக்கு இந்தச் சத்தம் என்னவென்றே தெரியாது. தொடர்ச்சியான பெரும் ஆராவாரத்துக்கு மத்தியிலும் பட்டுத் தெறிக்கும் நீர்த் திவலைகளுக்கு அடியில் மெல்லமாக நதி கிசுகிசுத்துக் கொண்டுதான் இருக்கிறது. சில சமயங்களில் பெருஞ்சத்தத்தில் ஒளிந்துகொண்டு ஒலிக்கிறது.
தோட்டத்தில் வேடிக்கைப் பார்க்கும்போது கண்ணுக்குள் மாயமாகத் தோன்றும் சிறிய அளவிலான கண் மிதவைகள்போல, இந்தச் சத்தத்தை சிரத்தையெடுத்துப் பின்தொடர்வது முடியாத காரியம். நீங்கள் எதார்த்தமாகச் சுற்றும்போது, அவை தானாக உங்கள் பார்வைக்குத் தட்டுப்படும்.
அரைத் தூக்கத்தில் மதிமயங்கும்பொழுது இந்தச் சத்தம் உங்களோடு உரையாடும். ஆனால் கவனம் குவித்து மும்முரமாக அதைப் பின்தொடர்ந்தால், முணுமுணுப்புகள் மறைந்து நதிக் கொந்தளிக்கும் சத்தம் மட்டுமே காதில் நிலைக்கும்.
நீங்கள் அதைக் காது கொடுத்துக் கேட்டால், அந்தச் சத்தம் அத்தனைத் தெளிவாக இருக்கும். சிலநேரங்களில் மறந்துபோன நினைவுகளை, எங்கிருந்தோ வரும் வாசனை, கணப்பொழுதில் ஞாபகமூட்டுவதுபோல், நதியின் கொந்தளிப்புச் சத்தம் மட்டுமே அங்கிருக்கும் ஒட்டுமொத்த இயற்கைக் காட்சிகளையும் கண்முன் நிறுத்துகிறது. ஒரு பழைய நகரத்து வீதியில் தூரத்திலிருந்து மணியடிக்கும் சத்தம் எழும்புகிறது, சந்தைக் கடையில் மக்கட்கூட்டம் முணுமுணுப்பது தெரிகிறது, தெருவில் நடப்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள், அழகிய தேவாலயத்தில் மணியடிக்கும் ஓசை, இத்தனைக்கும் மேற்பரப்பில் புழுதிபடர்ந்த காற்றைக் கிழித்துக் கொண்டு ஊடுருவும் சூரிய ஒளியைக் கூட நம்மால் அங்கிருந்து அத்தனை அழகாகக் கற்பனை செய்ய முடிகிறது.
பெருஞ்சத்தத்தில் ஒளிந்துகொண்டு ஒலிக்கும் நதியின் கிசுகிசுப்புகளில், கரைந்து வரும் தூரத்துச் சிரிப்பொலியும், மென்மையான பாட்டொலியும், காதில் கேட்கும். நதியின் கொந்தளிப்புக்கு எதிராக நிறைய மரக்கலங்கள் போட்டிப்போடும் சத்தம் இது. ஆனால் அந்தக் கலங்கள் ஒருபோதும் கரை சேராது. கரைந்து வந்த சத்தமும், ஒரு கணத்தில் முழுமையாக நின்றுவிடும்.
மூடுபனியில் தோன்றும் இந்த மர்ம மனிதர்களை ‘வேட்டையாடிகள்’ என்று மாலுமிகளும் பயணிகளும் சொல்வார்கள். அவர்களைக் காணவே இவர்களுக்குப் பொல்லாத பயம். ஒவ்வொருவருக்கும் மூடுபனி குறித்து வெவ்வேறு அனுபவங்கள் உள்ளன. உலகின் வெவ்வேறு நாட்டினரும் காணாமல்போன தங்கள் பிரஜைகளோடு, நதி கொந்தளிக்கும் சத்தத்தில் உரையாடிக் கொள்கின்றனர்.
ஆனால் நதியெழுப்பும் ஓசையைப் பற்றி அவர்கள் ஆச்சரியமூட்டும்படி சொல்வார்கள். பயிர் அறுவடை செய்யும் ரம்மியமான வயல்வெளிக் காட்சியும், தெருக்கூத்து நிகழ்ச்சியும், பெரும் தேவாலயம் அமைந்திருக்கும் தெருவின் அமைதியான ஞாயிற்றுக்கிழமை விடியலும், ஓய்வெடுக்கும் பயணிகளின் அசதி தீர்ந்த களிப்பும் அவர்களுக்கு அந்தச் சத்தம் வழியாகக் காட்சியாய் தெரியுமாம். அவர்களுக்கு இதனால் குழப்பமோ கஷ்டமோ எப்போதும் தோன்றியதில்லை. ஒருவேளை துயரங்களைக் கடந்து செல்ல இயற்கை இட்ட விதி இதுதானா!
நதி பாயும் மென்மையான ஒலியைவிட பேசுவதற்கு ஆச்சரியமான விஷயம் வேறெதுவுமில்லை. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை. நீங்கள் உறங்காமல் விழித்திருக்கும் இரவுகளில் நதி உங்களை அமைதியாக அழைக்கிறது. படிப்படியாக அதன் மகோன்னதங்கள்மீது உங்களுக்குப் பித்துப்பிடிக்கிறது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் நீங்கள் சிக்குண்டபொழுது, தூரத்து மணியோசை நெருங்கி வந்து காதருகில் ஒலிக்கும். அந்த வேளையில் காட்டிலிருந்து கேட்கும் ஒரு சிறிய சத்தத்தால், கட்டிக்காக்கப்பட்ட பேரமைதி உடைந்துபோகும்.
ஆந்தை அலறுகிறது, இராப்பாடி பாடுகிறது. இரவு நேரப் பறவைகள் ஜாக்கிரதையாக அடியெடித்து வைத்தும் கிளை முறிந்து போகிறது. இத்தனை நேரம் தெளிவாக இருந்த பிரெஞ்சுப் புல்வெளி திடீரென மங்கலடித்துக் காணாமல் போகிறது. நிலவின் கறைபடிந்த உருவம் உங்கள் கூடாரத்துணியின் மீது ஊடுருவி வருவதை நீங்கள் வெறித்தபடி பார்த்துக் கொண்டிருப்பீர்கள் .
நீரலையின் அலம்பல்போல் இடையறியாது ஒலித்த சத்தம் மங்கிப்போனது. வனாந்தரம் முழுவதும் பேர் அமைதி குடிகொண்டாலும், அதன் உள்ளுக்குள் அசைவிருக்கிறது. இராப்பாடிப் பறவைகள் தங்களுக்குப் பிடித்த பாடலைப் பாடிக்கொண்டு மேலும் கீழும் பறக்கின்றன. ஆந்தை ‘ஊவ்வ்.. ஊவ்வ்.. ஊவ்வ்..’ எனத் திரும்பத் திரும்ப அலறுகிறது. நீரலையின் பின்னணியில் இந்தச் சத்தங்களைக் கொண்டு நுட்பமான ஆச்சரியங்களை இரவு நெய்கிறது.
சத்தமில்லாத காலடி அசைவுகள், நகத்தால் பிராண்டும் கீறில்கள், மோப்பம் பிடித்து மூச்சை வெளியேற்றும் சத்தம், சிறிய ஆந்தைகளின் ‘கோ.. கோ.. கோ..’ என்ற திடீர் அலறல், மீன்கொத்திகளின் தனிமையும் துக்கமும் கலந்த அழுகுரல், வலசை போகும் அயல்நாட்டுப் பறவைகள் உச்சியில் பறந்திசைக்கும் இனிமையான சத்தம், குறிப்பிட்ட இடைவெளியில் உதிர்ந்து விழும் இலைகளின் சிறிய மௌனம், அருகாமைப் புதரிலிருந்து தன் அழகின் நவீனத்தால் இரைந்து பாடும் வெள்ளைத் தொண்டைச் சிட்டுக்குருவிகளின் தூய வெள்ளிக் குரல் இசையாக மாறும் தூரத்து அற்புதங்கள் போன்ற பல ஓசைகள் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம்.
இதன் ஊடாகவே கறைபடிந்த நிலவின் உருவம் உங்கள் கூடாரத்தின் விளிம்பில் மேலெழும்பும். இவை அத்தனையும் நுட்பமாக ஒரே இடத்தில் இணைந்து, அமைதி குடிகொண்டுள்ள இரவில் மொத்தமாகச் சேர்ந்து, இவற்றைப் பற்றிச் சிந்திக்க உங்களை அழைக்கின்றன.
ஒரு கோப்பை நிறைய குளிர்ந்த நீரைப் பருகுவதைக் காட்டிலும் அந்நேரத்தில் வேறெந்தப் பானமும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாது; அடர்ந்தக் காட்டை இமைக்கொட்டாமல் வெறித்துப் பார்ப்பதைத் தவிர வேறெந்த அனுபவமும் இளமை நினைவுகளைக் கண்முன் கொண்டுவராது. போர்வையின் அரவணைப்பால் கனவின் பித்துப்பிடித்த நிலையிலிருந்து கிறங்கும்போது, உடலும் மனமும் சில்லென்ற குளிர்ச்சியை உணர்கின்றன. மெய்ப்பொறிகள் ஒவ்வொன்றும் திறமாகத் தூண்டப்பட்டதால், இராப்பூச்சிகளின் மெல்லிய அரவத்திலிருந்து பெருஞ்சத்தம் வரை கச்சிதமாய் உள்வாங்கமுடிகிறது.
காடுகளில் இருந்து வரும் ஈரப்பதத்தின் மென்மையான வாசனை, உங்கள் நாசியில் நுழைந்து குதூகலமூட்டும். ஒரு சிறிய தொடுதலால் எல்லையற்ற ஆற்றலும் இயக்கமும் உருமாறுவதைப்போல, புரிந்துகொள்ள மர்மமாக இருந்தாலும், உலகின் முழு படைகளும் அதனதன் செயல்பாட்டின் விளிம்பில் இருப்பதுபோல் தோன்றுகிறது.
ஆனால் இனி அந்தத் தொடுதல் ஏற்பட வாய்ப்பில்லை. சுற்றி எழும் அரவங்களுக்குக் காதுகொடுக்க முடியாமல் படைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த அமைதியான வசிப்பிடத்தின் ஆழமும் மௌனமும் புரிந்துகொண்டதால், பயபக்தியோடும் மரியாதையோடும் நீங்கள் இங்கு வசிக்கத் தொடங்குவீர்கள்.
இத்தகைய நேரத்தில் நீங்கள் பலவித சாகசங்களை எதிர்கொள்ளலாம். ஒருநாள் இரவில் எங்கள் கூடாரத்துக்கு அருகில் வந்த 14 முள்ளம்பன்றிகளையும் நாங்கள் விரட்டவேண்டி இருந்தது. மற்றொரு முறை மெக்கிரஹார் விரிகுடா அருகில், எங்கள் கூடாரத்தையொட்டி 9 மான்கள் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து உறைந்து போய்விட்டேன். அவற்றைப் பார்ப்பதற்கே அத்தனை அழகாக இருந்தது.
என் நண்பர் ஒருவர், அவர் கூடாரத்திற்கு அருகில் படுத்துறங்கிய மான்குட்டி பற்றி ஒரு கதை சொன்னார். தன் தாய் மான் இறந்துபோனதால், கூடாரத்துக்கு வெளியே நண்பரின் தலைக்கு அடுத்துத் தலைசாய்த்து நரிகளிடம் இருந்து பதுங்கிக் கொண்டதாம். கூடாரத்துக் கதவருகில் மெல்லிசாக ஏதும் அசைந்தால் கூட அடுத்த விநாடி அந்தக் குட்டி மறைந்துவிடும். நண்பர் விடிகாலையில் எழுந்திருப்பதற்குள் அங்கிருந்து சென்றுவிடுமாம். கரடிகள் இரவில் உணவுதேடி வருவது கூட அங்குச் சாதாரண வழக்கம்.
ஆனால் நீங்கள் வெறுமனே வௌவால், காட்டு மரங்களின் நிழல், நட்சத்திரம் என்று இவற்றோடு இருந்தாலும் உலகம் உறங்கும் வேளையில் இங்கிருக்கும் அனுபவமே அசாத்தியமானது. இதை வேறு எந்த வழியிலும் உங்களால் ஈடுசெய்ய முடியாது.
இரவு முழுதும் தூங்காமல் கண் விழித்திருப்பது மட்டுமே இதைப் புரிந்துகொள்ள போதுமான தகுதியென்று நினைத்துவிடாதீர்கள். இரவை உங்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும். தூக்கத்தின் விளிம்பிலிருந்து இரவின் பாதைக்குச் சென்று, அத்தோடு அணுக்கமாக நேருக்கு நேர் நேரம் செலவிட வேண்டும்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, நதியில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றும் காட்டுப்பகுதியில் இருந்து வீசும் காற்றும் உங்கள் மேனியை நடுங்க வைக்கும். போர்வையைப் பற்றி யோசிக்கத் தொடங்குவீர்கள். சில கணங்களுக்குள் கதகதப்பான கம்பளித் துணியில் உங்கள் உடலைச் சுற்றிக் கொள்வீர்கள். திடீரென விடிந்து விடும்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பகல் முழுதும் சோம்பலாக இருக்குமென்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்றைக்கு ராத்திரி ஒன்பது மணிக்குப் பதில் எட்டு மணிக்கே உறங்கச் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலும், வழக்கத்தை விட வேகமாகத் தூங்கினாலும், உங்கள் நாளைத் தெளிவான மனத்துடன் தொடங்குவீர்கள். எவ்விதச் சோர்வும், மந்த புத்தியும், தளர்ச்சியும் இனி உண்டாகாது. இம்முறை உங்கள் இரண்டு மணிநேரத் தூக்கமென்பது ஒன்பது மணிநேர உறக்கத்திற்கான புத்துணர்வை அளித்துள்ளது.
0
_________
‘On Lying Awake at Night’ (The Forest, 1904) – Stewart Edward White