Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #16 – பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் – ஓர் இளம் வங்காளியின் வாக்குமூலம்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #16 – பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் – ஓர் இளம் வங்காளியின் வாக்குமூலம்

பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்

ஆங்கிலம் படித்த வங்காளிகளின் சமூக வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும், ஆங்கிலேயக் குணங்கள் மிக வேகமாக மலிந்து வருகின்றன. இதை ஆங்கிலம் படித்த சில வங்காளிகள் மறுக்கலாம்.

ஆனால் நம் வீட்டு அறைகலன்களிலும் பண்ட பாத்திரங்களிலும் உணவிலும் பானங்களிலும் உடையிலும் நெருக்கமானவர்களுக்கு எழுதும் கடிதப் பரிவர்த்தனைச் சொற்களிலும் ஆங்கிலோ-சாக்சன் அடையாளங்கள் ஆழமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் படித்தவர்கள், நம் புறவய வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் இதை நன்கு கவனித்துப் புரிந்து கொள்ளலாம்.

நம் வீட்டுக் கட்டுமானங்கள் கூட ஆங்கிலேய பாணியில், அவர்கள் வசதிக்கேற்ற காற்றோட்ட சௌகரியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பென்னம் பெரிய கட்டடங்கள் எழுப்பும்போது, ஆண்டுக்குப் பதிமூன்று முறை வாசம் செய்யும் தெய்வங்களை மனத்திலிறுத்தி, அவர்களுக்குப் பிடித்தமான வகையில் நம் முன்னோர்கள் வீடு கட்டினார்கள். அவர்கள் ஒருபோதும் வீட்டில் வசிக்கும் குடியானவர்களின் விருப்பத்தைப் பொருட்டாகக் கருதியது கிடையாது.

இறை வழிபாட்டிற்கென ஒதுக்கப்படும் ‘பூஜை அறை’யை நிர்மாணிப்பதற்கே, ஒட்டுமொத்த வீட்டின் யானைப் பங்கு விலையை மொத்தமாக இழைத்துச் செலவு செய்வார்கள். வீட்டின் மற்றெந்த அறையைக் காட்டிலும் பூஜை அறை பெரிதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். நிகழ்காலத்தின் உச்சபட்சக் கலை ரசனையில், தேவையான பணத்தையும் நேரத்தையும் அளந்து கொடுத்துச் செதுக்கி எடுப்பார்கள்.

இத்தனைச் சிரமப்படுவது கட்டடத்தின் அழகியல் நேர்த்திக்காக மட்டும் அல்ல, பூஜை அறையின் அழகையும் அளவையும் பொறுத்துதான் சமூகத்தில் ஒருவர் மதிக்கப்படுகிறார். அவருக்கான அங்கீகாரம் உறுதிசெய்யப்படுகிறது. ஆங்கிலம் படித்த வங்காளிகளின் வீடுகளில் பூஜை அறைகள் மெலிதாகக் குறைந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

மேலுமொரு விஷயம் சொன்னால் உங்களுக்கு உண்மைப் புரியும். வங்காளியில் பூஜை அறையைக் குறிக்கும் ‘பூஜா தலான்’ என்ற வார்த்தையில் ‘தலான்’ என்ற சொல், இன்றளவும் ‘செங்கல்லால் எழுப்பப்பட்ட அறை’ என்றுதான் பெரும்பாலான கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது.

ஒரு வங்காளியின் ஓய்வறையில் விதவிதமான நாற்காலிகள், மேஜைகள், கை விசிறிகளோடு அமெரிக்கக் கடிகாரங்கள், பலவண்ணக் கண்ணாடிச் சாமான்கள், இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸில் வரும் கண்கவர் படங்கள், மண்ணெண்ணெய் விளக்குகள் ஆகியவற்றைக் காணலாம். புத்தக அலமாரியில் ரெனால்ட்ஸ் எழுதிய லண்டன் மர்மங்கள், டாம் பெய்ன் எழுதிய பகுத்தறிவின் காலம், பைரன் பிரபுவின் ஒட்டுமொத்தக் கவிதைத் தொகுப்புகளும் இருக்கும். அலங்காரச் சாமான்களில் ஆங்கிலேய இசைப் பெட்டிக்குத் தனியிடம் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்ஷேயி பகுதியின் துணைநிலை ஆளுநராக இருந்த ஒருவர், அப்பகுதியின் ஆங்கிலேயக் கலாசாரத்தின் மிகக் குறிப்பிடத்தகுந்த அடையாளமாக ‘குதிரை வண்டிகள்’ திகழ்கின்றன என்று சொன்னார். அப்பகுதியின் படித்த இளைஞர்கள் அவர் கருத்தோடு முரண்படாமல், அதைச் சிலாகித்து பகிர்ந்தனர். ஆக, இது வேடிக்கையான விஷயமல்ல என்று புரிந்துபோனது. வங்காளச் சுய ராஜ்யம் பற்றி அவரின் வாக்குறுதிகளில் சந்தேகம் கொண்டவர்கள்கூட, குதிரை வண்டி பற்றி அவர் சொன்ன கருத்தில் நம்பிக்கையோடு இருந்தனர். எங்களின் தீவிரச் சைவ உணவு நம்பிக்கையும் மதுவிலக்குக் கொள்கையும் அறுபட்டது.

வறுத்த மாட்டிறைச்சியையோ, இளம் பசுவின் கறியையோ உண்பதற்கு எங்களிடம் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மேலும், ஆங்கிலேயர்கள்போல மது அருந்துவதற்கும் பழக்க வழக்கம் சார்ந்தும், கொள்கை சார்ந்தும் துளியும் தயக்கம் காட்டவில்லை. எங்கள் பேச்சில் துண்டுபோட்ட ஆங்கிலம் அங்கங்கு மிதக்கும். உடைபட்ட இடங்களில் வங்காளியை இட்டு நிரப்பிக் கொள்வோம்.

வங்காள மொழியின் மோசமான கடித வடிவத்துக்கு மாற்றாக, குக் எழுதிய யுனிவெர்சல் லெட்டர் ரைட்டிங் புத்தகத்தின் உதவியோடு ஆங்கிலத்தைப் பயன்படுத்தினோம். எங்கள் முன்னோர்கள் உடுத்திய இறுக்கமான ரவிக்கைகள், தளர்வான மேல்சட்டைகளுக்குப் பதிலாக ஆங்கிலேயச் சட்டைகளை உடுத்தத் தொடங்கினோம். தளர்ந்திருந்த ஜிப்பாக்கள் மெல்லமாகச் சுருங்கி ஆங்கிலேய மேல்சட்டைபோல் அளவும் வடிவும் பெற்றன. இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளே வெறுத்தொதுக்கும் ஷூக்களை நாங்கள் அணிவோம்.

குறைந்தபட்ச நிதி ஒதுக்கீட்டில், ஆங்கிலேயர்கள் மெச்சிக் கொண்டாடும் ஆங்கிலேயக் கல்வியால் தேசிய, அரசியல், மதவியல் தனித்தன்மைகளோடு இருந்த வங்காளி சமூகத்தில் இத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வெறும் ஒரு தலைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களின் பட்டியலே நெடுந்தூரம் செல்கிறது. இதில் ஆச்சரியமூட்டும் செய்தி என்னவென்றால், இரண்டாவதாகச் சொன்ன காரணம் முன்பு சொன்னதைக் காட்டிலும் அதிகம் செல்வாக்குச் செலுத்துகிறது. இருந்தாலும் முதல் காரணி இல்லாமல், இரண்டாவது காரணியால் தனித்தியங்க முடியாது.

செறிவான ஆங்கில அறிவு இல்லாமல் ஆறு மாதக் காலத்துக்கு இங்கிலாந்து செல்லும் ஒருவரால், ஆங்கிலக் கல்விக்காகத் தன் வாழ்நாள் முழுதையும் இந்தியாவிலிருந்து அர்ப்பணிக்கும் நபரைக் காட்டிலும் ஆங்கிலேயக் கலாசாரப் பழக்க வழக்கங்களை நன்கு புரிந்துகொள்ள முடியும். ஆங்கிலேயக் கல்விமுறையோடு ஆங்கிலேய வாழ்க்கைமுறை சமர் புரியும் சந்தர்பங்கள் உண்டு என்றாலும், கல்விமுறையைக் காட்டிலும் வாழ்க்கைமுறையே குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது நிரூபணம்.

ஒருவன் தன் மத அபிப்பிராயங்களால் நிறைவேற்றும் கொள்கைகளைக் காட்டிலும் வாழ்வின் புற இன்பங்களையும் நுகர வேண்டும் என்ற எண்ணம் ஆங்கிலேயக் கல்வி அறிவால் உருப்பெற்றது என்பதில் துளியும் சந்தேகமில்லை. நமது சாஸ்திரங்களும், வேத நூல்களும் சுய ஒழுக்கத்தைப் பெருமளவில் கட்டிக் காப்பாற்றினாலும், வாழ்வின் மாய எதார்த்தங்களில் இருந்து விடுபட்டு மேலான வாழ்க்கைக்குத் துறவறமே சரியான வழியென்று போதித்துள்ளன.

உலகளாவிய மனித இயல்பின் சாரத்தைப் படம்பிடித்துக் காட்டும் காலஞ்சென்ற கவிஞர் ஒருவரின் சிந்தனையை உணர்ச்சிப் பெருக்கோடு நம் முன்னோர்கள் பகிர்ந்து வந்துள்ளனர். மனித மனத்தின் அனைத்துவிதக் கற்பனைகளையும் இந்தக் கவிஞரின் படைப்பு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

பாவப்பட்ட உலகின் மையத்தில் இயங்கும், ஏழை இதயமே,
உன்னைச் சூழ்ந்திருக்கும் கலகச் சக்திகளால் ஏய்க்கப்பட்டு,
துன்பங்களுக்கு வருந்தி, ஏதிலியாய் உணர்வது ஏன்,
சுற்றுச்சுவர்களைக் கட்ட கோடிகளையா செலவு செய்கிறாய்?
சொற்ப ஆயுளுக்கு ஏன் இத்தனை வரவு செலவு?
தீப்பற்றி எரியும் குடியிருப்பில் வளங்களை வாரிக் கொட்டுவது ஏன்?
புழுக்களும் வாரிசுகளும் உன் அஸ்தியைச் சுருட்டி
வாயில் முழுங்கவா? ஜீவ உடலின் இறுதி நிலை இதுதானா?
ஓ, என் இதயமே, எஜமானின் உடல் பிரிவிலும் உயிர் வாழ்பவனே,
உன் அகச்செல்வம் அழிந்தால் போகிறது, புறச்செல்வம் தேடிப் புறப்படு;
அற்பத்தனங்களுக்குச் செலவு செய்யாமல், நிரந்தரமானவைகளில் முதலீடு செய்,
அகத்தே ஊட்டமளி; அவை ஒதுக்கிப் புறம்தேட வேண்டாம்:
அவ்வாறு செய்தால், மனிதத் திண்ணி மரணத்தை ஒரேயடியாக விழுங்கிவிடுவாய்,
மரணமே மரித்துப் போய்விட்டால், பிறகு இறப்பு ஏது?

அவர்களால் இந்த நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், நிச்சயம் அவர்கள் மனிதராக இருக்க முடியாது. ஆனால் உணவு, உடை சமாசாரங்களில் தன் சொந்த நலனுக்காக அக்கறை செலுத்துவதை, அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து மதத்தின் முந்நூற்றி முப்பது மில்லியன் கடவுளர்களையும் அழிந்துவிட்டு, அவர்களிருந்த இடத்தில் தன் மரியாதைக்குரிய சொந்தக் கடவுளர்களைப் பெயர்த்துவிட்டதில் ஆங்கில நாகரிகத்திற்குப் பெரும்பங்கு உண்டு.

மரபார்ந்த வழிபாட்டு மாற்றத்தை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் நேர்மையும் துணிச்சலும் நமக்கு இல்லை. நமது செயல்பாடுகளை அவதானித்தோ, அகம், புறவய வாழ்வைக் கண்காணித்தோ இந்த விஷயத்தை நாம் எந்தக் கோணத்தில் அணுகினாலும், இறுதியில் நாம் இந்த மனோபாவத்தை அடைந்துவிட்டோம் என்பது மட்டும் தெளிவாகிறது.

உண்மையிலேயே நாங்கள் கூட்டுக் குடும்ப அமைப்பைத் தகர்க்கக் கடுமையாக உழைக்கிறோம். ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், தனிமனிதச் சுதந்திரத்தைப் பேணவும் அயராமல் பாடுபடுகிறோம். இவற்றைக் கேட்பதற்கு உன்னத இலக்குபோல தோன்றும். ஆனால் இவை உண்மையிலேயே எதை நோக்கி நகர்கின்றன என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?

நம் சமூகத்தை ஒன்றிணைத்திருக்கும் ஒரே பாலத்தைச் சிதைப்பதன் மூலம், சமூக நல்லிணக்கத்தின் அஸ்திவாரத்தை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். கூட்டுறவோடு இயங்குவது குறித்தான நம் அறிவுப் போதாமையை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். தொடர்ச்சியான உங்கள் கோரிக்கைகளும், மேல் முறையீடுகளும், பத்திரிகைச் செய்திகளும் பழங்கால இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்புக்கு மாற்றாக ‘கிராம முனிசிபாலிட்டி’ அமைப்பை ஒத்துழைப்புக் கூடமாக மாற்றி அமைக்குமா?

உங்கள் உறவினர்களின் நியாயமான கோரிக்கைகளை நசுக்குவது குறித்தும், நூற்றாண்டு கணக்கான அனுபவங்களையும் மரபுகளையும் முறித்துகொள்ளும் கொடுமையைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

நாம் இதை நடைமுறை ரீதியில் பார்க்கலாம்: கணிதத்திலும் நிதி மேலாண்மையிலும் உங்களுக்கு அடிப்படை புரிதல் இருந்தால், ஏழ்மைக்கு அருகிலிருக்கும் உங்கள் சக நாட்டுக் குடிமக்களில் பெரும்பான்மையானவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது, ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நடைமுறை பலன்கள் உங்களுக்குத் தெரியாதா? உங்களின் முற்போக்கான ‘உயர் கல்வித்’ திட்டம் சமூகத்தின் ஏழை எளிய மக்களிடத்தும் சென்று சேர்வதைப்போல் அல்லாமல், அவர்களிடையே பிரிவினையைத் தோற்றுவிக்கும் இதயமற்ற செய்கையை ஊக்குவிக்கிறது.

சுதந்திரத்தை ஊக்குவிப்பதாகச் சொல்லிக்கொள்கிறீர்களா? இத்தகைய ஆறுதலான வார்த்தைகளால் உங்களையே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் உறவினர்களிடம் இருந்து பிரிவு ஏற்படும்போது, உங்கள் சொந்த நலனும் பொறுப்புகளும் ஒன்றுபோல கூடுவதால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கையின் வேர்கள் துளிர் விடும் நேரம், வளமையான காலங்களில் மட்டுமே வாய்க்கிறது என்பது இதன்மூலம் வெளிப்படையாகிறது.

சாதியை நாங்கள் தூரப் போட்டுவிட்டோம். பிறப்பெனும் விபத்தால் ஏற்றத்தாழ்வுகளை வகைப்படுத்தும் சமூக அமைப்பைக் கடந்துவிட்டோம். நல்லவேளையாக ‘சமத்துவம்‚ சகோதரத்துவம்’ என்று பேசும் வேலைக்காகாத அதித் தீவிரக் கொள்கைகளெல்லாம் எங்கள் இலட்சியப் பயணத்தில் இடம்பெறவில்லை. பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் அந்த அளவு பாதிக்காததற்கு நன்றி சொல்ல வேண்டும்.

நாங்கள் ஆங்கிலேய முறையில் உயர்கல்வி பெற்றிருக்கிறோம். எங்கள் கலாசாரம் ஆங்கிலேய வழியில், அதன் நோக்கங்களை நிறைவேற்ற மீட்டுருவாக்கப்பட்டது. ‘மரியாதைக்குரிய மனிதனுக்கு’ நாங்கள் வைத்துள்ள அளவை என்ன தெரியுமா? வேறெந்த பதிலைக் காட்டிலும் மிக நியாயமான பதிலை இதன்மூலம் சொல்கிறேன்.

கேள்வி : உங்களைப் பொறுத்தவரை மரியாதைக்குரியவன் என்பதற்கு என்ன அர்த்தம்?
பதில் : எவனொருவன் சொந்தமாகக் குதிரை வண்டி வைத்திருக்கிறானோ, அவனே மரியாதைக்குரியவன்.
(ஜான் தர்டெல்லின் நீதிமன்ற விவாதம்)

வங்கியில் பணம் வைத்திருப்பதன் அளவைப் பொறுத்துதான் சமூகத்தில் ஒருவரின் மதிப்புக் கணக்கிடப்படுகிறது. தன் மூதாதையர்களின் ஒன்றிணைந்த நற்குணங்களால் அவன் யாதொன்றையும் அடையப்போவதில்லை.

நம்மில் சிலர் மிகக் கண்ணியத்தோடு பாடம் பயின்று, ஆங்கிலேயக் கல்வியின் மதிப்புமிக்கப் பாடங்களை அப்படியே உள்வாங்கி தனித்தன்மையோடு அதனைப் பின்பற்றுகிறோம். உணவு உண்பதிலும், உடை கலாசாரத்திலும், சமூக நடத்தையிலும் ஆங்கிலேயர்களைப் அப்படியே கடைப்பிடிக்கிறோம். இருப்பினும் கற்றல் செயல்முறையின் காரணமாக நமது ஆரம்பக்கட்ட முயற்சிகள் ஒத்துவராது போயிருக்கலாம்.

வங்காளி உச்சரிப்பை அத்தனை எளிதில் மறந்துபோக முடியாது. சமயத்தில் சில ஆங்கிலேயச் சொலவடைகள் காலை வாருகின்றன. ‘கறுப்பர்’ என்பதிலிருந்து ‘வெள்ளையராக’ மாறுவது இப்போதிருக்கக் கூடிய வேதியியல், அழகுச் சாதனப் பொருட்களால் கூட ஈடுசெய்ய முடியாத பிரம்மாண்ட மாற்றம்.

எவ்வாறிருப்பினும் இதனால் சில விஷேசப் பலன்கள் உண்டு. ஆங்கிலேய நண்பர்களிடமிருந்து அவ்வப்போது இரவு விருந்துக்கான அழைப்பிதழ்கள் வரும்; ரயில்வேயில் பெட்டி தூங்குபவர்கள், வாகன ஓட்டுநர்கள் ஆங்கிலேய உடையைப் பார்த்து வணக்கம் சொல்வார்கள்.

இரண்டாவதாக எங்கள் பேச்சு, நடை, பாவனைகளை வைத்து ‘நிக்கர்’ என்று முடிசூட்டும் வசைமொழிகள் ஓய்ந்துவிட்டன. இதற்கு யாரை நாம் குத்தம் சொல்ல முடியும்? வங்காளிகளின் பாரம்பரிய உடை அடிமைத்தனத்தின் அடையாளமாக மாறியிருந்தால், அதைக் கூடிய விரைவில் நிராகரிப்பதே புத்திசாலித்தனம்.

கல்கத்தாவில் வெளியாகும் ஒன்றுக்கும் மேற்பட்ட இதழ்களில் சர்வ சமய தெய்வ நம்பிக்கை, இறை நம்பிக்கை, பிரம்மாயிசம், முற்போக்கு, அதி-முற்போக்கு இயக்கம் போன்று இந்தியவியல் மதங்களையும் மதம் சார்ந்த இயங்களின் தன்மையையும் குறித்து நீண்ட அளவில் விவாதித்துள்ளனர். இத்தனை இஸங்கள் குறித்து மதிப்பாய்வது, இந்து மதத்தின் கடமைகளில் இருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற வலுவான விருப்பத்தின் மாற்று வடிவம்.

படித்த அறிவாளிகளால் காட்டுத்தனமான உணவுக் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துப்போக முடியாது; பழமை ஊறிப்போன தன் பெற்றோரின் பிற்போக்குவாதங்களுக்குச் செவிமடுப்பதற்காகத் தன் சௌகரியங்களை விட்டொழிக்க முடியாது; தொல் பழங்கால முறையில் துறவறம் மேற்கொள்வதே புனிதமான வாழ்க்கைக்கு அடையாளமெனக் கூறி மரியாதை செலுத்த முடியாது; ஆழமான இலக்கிய அறிவு என்ற பெயரில் வரலாற்றுத் திரிபுகளையும் போலி புவியியல் செய்திகளையும், தவறான இயற்பியல் தேற்றங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது; வாழ்நாள் முழுவதும் கைம்பெண் கோலத்தில் இருப்பதே தார்மீக அறமென்று ஒருபோதும் பொய் பாராட்ட முடியாது. இந்தக் குறைகளை எல்லாம் ஒன்று கூட்டிப் பார்த்தால், ஒற்றைக் குரலாக அவை ஒரே கீதத்தைத்தான் ஒலிக்கின்றன, ‘இந்துத்துவம் அழிந்துபட வேண்டும்’.

ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மனிதனின் ஆன்மீக ஞானம் வெற்றிடத்தை வெறுக்கிறது. மரபார்ந்த இந்து மதத்தின் வீழ்ச்சியாலும் வேறு சில மதங்களின் எழுச்சியாலும் இந்து மத நெறிமுறைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதன் கொள்கைகள் பின்பற்றப்படுவதைக் காட்டிலும் புறக்கணிக்கப்பட்டதாய் பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.

இங்குதான் முக்கியமான கேள்வி எழுகிறது. நமது புதிய நெறிமுறை எங்கே? அதை அமல்படுத்துவதற்கான மக்களின் ஒப்புதல் சாட்சியம் எங்கே? தனிமனிதத் தூய்மை, பணிவு, பொதுநலம், அரசியல் சார்பற்ற தேசபக்தி, ஜீவகாருண்யம், வாழ்நாள் முழுதும் ஒப்பில்லாத கல்வி பெறும் திறன், தார்மீக அறம் போன்ற குணங்களுக்கு இணையான ஒருவரை நம்மிடையே காண முடியுமா?

இந்து மதப் போதனைகளால் வளர்த்தெடுதக்கப்பட்ட மனத்தை நம்மில் யாரேனும் நவீனத் தாக்கத்தைக் கொண்டு உருவாக்க முடியுமா? மரத்தின் அருமையைப் பழங்களை வைத்து எடைபோடுங்கள்.

0

_________
‘The Confession of a Young Bengal’ (1872)  – Bankim Chandra Chattopadhyay

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *