Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #17 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 1

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #17 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 1

சார்ல்ஸ் லேம்ப்

மனித நாகரிகம் தோன்றியபின், முதல் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு அவர்கள் பச்சை மாமிசத்தை நகத்தால் கீறியும், பற்களால் கிழித்தும் சாப்பிட்டார்கள் என்று சீனக் கையெழுத்துப் பிரதி ஒன்றின் வாயிலாக நண்பர் எம் படித்துக் காட்டினார் (தாமஸ் மேனிங்). அபிசீனியாவில் இந்தப் பழக்கத்தை இன்றும் காணலாம்.

இந்தக் காலகட்டம் பற்றிய தெளிவான சித்திரத்தைச் சீனப் பேரறிஞர் கன்பூசியஸின் ‘முண்டேன் மியுட்டேசன்ஸ்’ (Mundane Mutations) என்ற புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் பார்க்க முடியும். சமையல்காரர்களே இல்லாத ‘சோ-ஃபாங்’ என்று சொல்லக்கூடிய ஒரு வகையான பொற்காலத்தை அவர் குறிப்பிடுகிறார்.

வறுப்பதும், வாட்டுவதும் எதிர்பாரா விபத்தில் கண்டுபிடித்த சமையல் உத்தி என அந்தச் சீனக் குறிப்பு சொல்கிறது. நான் அந்த விஷயத்தை விவரமாகச் சொல்கிறேன்.

ஹோ-டி என்கிற மேய்ப்பர், ஒரு நாள் காலையில் தன் பன்றிகளுக்காக உணவு சேகரித்து வருவதற்காகக் காட்டுக்குள் சென்றார். தான் திரும்பி வரும்வரை மூத்த மகன் போ-போவின் பராமரிப்பில் பன்றிப் பண்ணையை ஒப்படைத்திருந்தார். அவன் வயது இளைஞர்களுக்கு நெருப்புடன் விளையாடுவதில் கொள்ளைப் பிரியம். போ-போவும் அத்தகைய முட்டாள்தான்.

திடீரென்று வைக்கோலில் நெருப்பு பற்றி, கண் இமைக்கும் நேரத்தில் பண்ணை முழுக்கப் பரவிவிட்டது. பன்றிப் பண்ணை முழுவதும் தீக்கிரையாகி, சாம்பலானது. பண்ணையைக் காட்டிலும் (பல்லாண்டுகளுக்கு முந்தைய கட்டடம் என்பதால், உங்களால் அதன் உருவத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியாது) முக்கியத்துவம் வாய்ந்த சின்னஞ் சிறிய ஒன்பது பன்றிக் குட்டிகளும் அந்த விபத்தில் உருக்குலைந்துவிட்டன.

வரலாற்றின் சுவடுகள் கிடைக்கும் மிகப் பண்டைய காலந்தொட்டுச் சீனப் பன்றிகள் என்றால், கீழை நாடுகளில் அதற்கு அத்தனை மவுசு உண்டு. ஆக, பன்றிகள் இறப்பையொட்டித் தன் தந்தை என்ன சொல்வார் என போ-போ கலக்கமுற்றான். பண்ணையைப் பற்றிப் பெரிதாகப் பயமில்லை‌. காய்ந்த மரக் கிளைகளும் சருகுகளும் வைத்து ஒன்றிரண்டு பேர் கூடினால் இரண்டு மணிநேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வேறொரு குடிசையைக் கட்டிக் கொள்ளலாம். ஆனால் பன்றிகளுக்கு என்ன செய்வது?

தந்தையிடம் என்ன சொல்வது என்று யோசித்துக்கொண்டே புகைந்த எச்சங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, முன்பெப்போதும் நுகர்ந்திடாத வித்தியாசமான நாற்றமொன்று அவன் நாசியைத் துளைத்தது. இது எங்கிருந்து வருகிறது?

நிச்சயமாக எரிந்த குடிசையின் மிச்சத்தில் வரும் வாசனை அல்ல. சேட்டைக்காரப் போ-போ இதற்குமுன் பல குடிசைகளை எரித்திருக்கிறான். அவன் அந்த வாசத்துக்குப் பழகிப்போயிருந்தான். இது துரதிர்ஷ்டவசமாகத் தீக்காயம் பட்ட இளம் பன்றிக்குட்டிகளின் நாற்றமாக இருக்கவேண்டும்.

வேறெந்த மூலிகையும் செடிகளும் பூக்களும் இதுபோல் வாசனையைக் கொண்டிருக்கவில்லை. அந்நேரத்தில் அவன் உதட்டோரம் ஈரம் வழிந்தது. என்ன யோசிப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.

பன்றிகள் உயிரோடு இருக்கும் அறிகுறிகள் தென்படுமா என்று கீழே குனிந்து ஆராய்ந்தான். சூடான பன்றிக்குட்டியின் சருமத்தைத் தொட்டுப் பார்க்கும்போது எதிர்பாராமல் தன் விரல்களைச் சுட்டுக்கொண்டான். அதை நிவர்த்தி செய்ய, உடனே விரல்களை வாய்க்குள் வைத்துச் சப்பினான்.

அவ்வாறு செய்யும்போது, பன்றிக்குட்டியின் மிருதுவான தோல் பகுதிகள் சில அவன் விரலோடு ஒட்டிக் கொண்டிருந்ததை உணர்ந்தான். அவன் வாழ்விலேயே முதன்முறையாக (உலக வரலாற்றிலேயே என்றுகூடச் சொல்லலாம். அதுவரை வறுத்த பன்றிக்குட்டியின் தோலை யாரும் சுவைத்ததில்லை) அதைச் சுவைத்துப் பார்த்தான். மொறுமொறுப்பாக இருந்தது.

மீண்டும் பன்றியைத் தொட்டுப் பார்த்தான். இப்போது அவ்வளவாகச் சூடு இல்லை. இருந்தாலும் பழக்கதோஷத்தில் விரல்களைப் சப்பினான்.‌ நீண்ட நேரம் புரிபடாமல் இருந்த உண்மை, மெல்ல அவனுக்குப் புரிந்துபட்டது. அந்த நாற்றத்துக்கும் ருசிகரச் சுவைக்கும் பன்றிக்குட்டிகள்தான் காரணம்.

இந்தப் புதிய இன்பத்தில் தன்னை முற்றிலுமாக பறிகொடுத்து, இறந்துகிடக்கும் பன்றிகளின் தோலைச் சதையுடன் கிழித்து, கைநிறைய அள்ளித் தன் தொண்டையில் அடைத்தான். மிகுந்த பேராசையுடன் விலங்குகளைப் போல் அளவுக்கு மீறி வாயில் அள்ளிப்போட்டுக் கொண்டான்.

சம்பவம் அறிந்து, கையில் தடிக் குச்சியுடன் போ-போவின் தந்தை குடிசையை நெருங்கினார். காட்சியைக் கண்டதும் அனைத்தும் புரிந்தவர்போல, சேட்டைக்காரப் போ-போவின் தோள்பட்டைமேல் ஆழங்கட்டிபோல் பலமாகத் தாக்கத் தொடங்கினார். பன்றிக் கறியைச் சுவைத்துக் கொண்டிருந்த போபோ, பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஈக்களைத் தூர விரட்டுவதுபோல் அற்பமாக உதறினான்.

அலாதியான சுவையினால் பேரின்பம் எய்திய போ-போவுக்கு, வேறெந்த அசௌகரியங்களிலும் மனத்தைத் திருப்பச் சிந்தையில்லை. அவன் தந்தை தொடர்ச்சியாகப் போ-போவை அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் பன்றி இறைச்சியைக் கீழே போட மனமின்றி, முழுவதுமாகத் தின்று தீர்க்கும் வரை அவன் அசையவில்லை. இறுதியில் சந்தர்ப்பச் சூழலை உணர்ந்தவனாய் சுதாரித்துக் கொண்டு தன் தந்தையுடன் உரையாடத் தொடங்கினான்.

‘இரங்கமற்ற நாயே, நீ எதைச் சாப்பிடுகிறாய்? உன் முட்டாள்தனமான செய்கையால் மூன்று வீடுகளை எரித்தது போதாதா? நான் உன்னைத் தண்டித்ததை மறந்துவிட்டாயா? இன்னும் தின்பதற்கு அங்கு என்ன இருக்கிறது, நெருப்பைத் தவிர நீ எதை விட்டுவைத்தாய்? சொல்லு’

‘அட அப்பா, இங்கே ஓடிவாருங்கள். இந்தப் பன்றி.. அடடா சுட்டுப்போட்ட இந்தப் பன்றிக்குட்டிகள் எத்தனைச் சுவையாய் இருக்கிறதென்று ஒருமுறை சுவைத்துப் பாருங்கள்’

இதைக் கேட்டதும் ஹோ-டியின் காதுகள் திகிலில் உறைந்தன. தன் மகனைச் சகட்டு மேனிக்குச் சபித்தார். சுட்டெடுத்த பன்றி இறைச்சியை உண்ணும் ஒருவன் தனக்கு ஏன் மகனாய் பிறக்க வேண்டும் என்று தன்னைத் தானே சபித்துக் கொண்டார்.

காலையில் இருந்தே போ-போவின் நாசித் துவாரங்கள் பன்றி இறைச்சியின் நாற்றத்தால் மதிமயங்கிப் போயிருந்தன. அருகிலிருந்த மற்றொரு பன்றியின் தோலைக் கிழித்து, அதைத் தந்தையின் கையில் திணித்து, ‘சாப்பிடுங்கள். சுட்டுப்போட்ட பன்றிக் கறி! இதன் சுவை இருக்கிறதே, அடக் கடவுளே!’ என்று காட்டுமிராண்டித்தனமாக மூச்சு முட்டும் அளவுக்குத் திணித்தான்.

ஹோ-டி அருவருப்புடன் நடுங்கிக் கொண்டே செய்வதறியாமல் முழித்தார். இயற்கைக்கு மாறான அரக்கத்தனமான செய்கைக்காகத் தன் மகனைக் கொலைசெய்யக்கூடாதா எனச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, பன்றி இறைச்சி அவர் விரல்களைச் சுட்டுவிட்டது. மகனுக்கு ஏற்பட்டது போலவே, ஹோ-டிக்கும் நேர்ந்தது.

போ-போவைப் போல விரல்களை எடுத்து வாயில் வைத்துக்கொண்டார். அதன் ருசி அவருக்கு வித்தியாசமாக இருந்தது. வாயில் புளிப்புத்தன்மையை உணர்ந்தார்.‌ ஹோ-டிக்கு அதன் சுவை மிகவும் பிடித்துவிட்டது.

(கையெழுத்துப் பிரதியின் குறிப்பு இங்கு மிகவும் அலுப்பூட்டுகிறது) இறுதியில் தந்தை மகன் இருவரும் புகைந்த பண்ணைத் தரையில் உட்கார்ந்து கொண்டு, ஒன்றுவிடாமல் அத்தனைப் பன்றிகளையும் உண்டு முடித்துவிட்டுதான் எழுந்தார்கள்.

இந்த ரகசியத்தை அண்டை வீட்டார்களுக்குத் தெரியாமல் பத்திரமாய் பாதுகாக்க வேண்டுமென்று போ-போவிடம் அவன் தந்தை கட்டளையிட்டார். கடவுள் கொடுத்த இறைச்சியை நல்ல முறையில் பாதுகாக்காமல், காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதை அறிந்தால் நிச்சயம் கல்லெறிந்தே கொலை செய்து விடுவார்கள் என்று ஹோ-டிக்கு தெரியும்.

இப்போது ஹோ-டியின் பண்ணையைப் பற்றி நிறைய கதைகள் உருவாகின. இருந்தாலும் முன்பைவிட அடிக்கடி ஹோ-டியின் பண்ணை தீப்பிடித்தது. ஆனால் எல்லாமுறையும் நெருப்பு மட்டுமே எஞ்சியதை ஊரார் கவனித்தனர். சில சமயம் இரவில் தீப்பிடிப்பது உண்டு, சில சந்தர்ப்பங்களில் பட்டப் பகலிலும் தீப்பிடிப்பது உண்டு.

பன்றிகள் எப்போதெல்லாம் குட்டிகளை ஈனுகிறதோ, அப்போதெல்லாம் ஹோ-டியின் பண்ணை தவறாமல் தீப்பிடித்துவிடும். இப்போதெல்லாம் ஹோ-டி தன் மகனைத் தண்டிப்பதோ, திட்டுவதோ கிடையாது. முன்பைவிட அளவுக்கு அதிகமாய் பாசத்தைப் பொழிகிறார்.

நீண்ட நாட்கள் கண்காணித்ததன் பிறகு, ஊராருக்கு மர்மம் பிடிபட்டது. தந்தையும் மகனும் பெக்கினில் (பீஜிங்) விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட எரிந்த பன்றிகளின் மாமிசத்தைக் கொஞ்சமாவது மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நடுவர் மன்றத் தலைவர் குற்றவாளிகளிடம் இறைஞ்சினார். அருவருப்பான பன்றி இறைச்சியைப் பெட்டியில் அடைத்து மன்றத்தில் சமர்ப்பித்தனர். ஆதாரத்தைக் கண்டதும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கத் தயாரானார்கள்.

அதற்குமுன் ஒவ்வொருவராகப் பன்றி இறைச்சியைக் கையிலெடுத்துத் தொட்டுப் பார்த்தார்கள். விதி வயத்தால் எல்லோரும் சூடு வாங்கிக் கொண்டார்கள். இயற்கை அவர்கள் எல்லோரையும் விரல் சூப்பிச் சாந்தமடைய ஆற்றுப்படுத்தியது. போ-போவும் அவன் தந்தையும் அடைந்த அதே இன்பத்தை நுகர்ந்தார்கள்.

இதுநாள்வரை நீதி தவறாத, உண்மைக்குக் கட்டுப்பட்ட நீதிபதியின் தீர்ப்பை எதிர்பார்த்திருந்த ஒட்டுமொத்த நீதிமன்றத்துக்கும், ஊர் மக்களுக்கும், அந்நியர்களுக்கும், அறிக்கை எழுதுபவர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பெட்டியில் வைத்த கையை எடுக்காமல், ஆதாரங்களும் குற்றச்சாட்டுகளும் பலமாக இருப்பதைப் பொருட்படுத்தாமல், எவ்வித ஆட்சேபனையும் இன்றி நிரபராதி என்று இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

சூட்சுமப் புத்தியுடைய நீதிபதி ஒருவர், தீர்ப்பின் அக்கிரமத்தைக் கண்டு பராமுகம் கொண்டார். நீதிமன்ற அவை கலைந்ததும், யாருக்கும் தெரியாமல் அந்தரங்கமாகச் சென்று அங்கிருந்த அனைத்துப் பன்றிகளையும் வாங்கி விட்டார். பணத்தின் பொருட்டா, கருணையின் பொருட்டா என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் சில நாட்களில் அந்நீதிபதி தங்கியிருந்த வீடும் தீப்பற்றி எறிவதைக் காண முடிந்தது. விஷயம் காற்றில் கசிந்தது. திரும்பும் திசையெல்லாம் தீப்பற்றி எறிவதைத் தவிர்த்து வேறெதுவும் காண்பதற்கு இல்லை. பன்றியின் விலையும் எரிபொருள் விலையும் மாவட்டமெங்கும் கிடுகிடுவென உயர்ந்தன. காப்பீட்டு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன.

கட்டடக்கலை விஞ்ஞானம் விரைவில் அழிந்துபோகுமோ என்று அஞ்சும் அளவுக்கு, மக்கள் சின்னஞ் சிறிய வீடுகளைக் கட்டிக் கொண்டு அதைத் தீக்கிரையாக்கினர். இவ்வாறு வீடுகளை எரிக்கும் வழக்கம் பல ஆண்டுகள் நீடித்ததாகக் கையெழுத்துப் பிரதி குறிப்பிடுகிறது.

ஜான் லாக்கைப் போன்று அங்கு ஒரு முனிவர் தோன்றினார். பன்றி இறைச்சியையோ பிற மாமிச இறைச்சியையோ சமைத்து உண்பதற்கு (அவர்கள் சொல்வதுபோல் சுட்டு உண்பதற்கு) வீட்டைக் கொளுத்த வேண்டிய அவசியமில்லை என்று அவர் கண்டறிந்து சொன்னார்.

கிரில் பலகையின் மூலம் சுட்டுச் சாப்பிடும் வழக்கம் இத்தகைய முரட்டுத்தனங்களின் வழியாகத்தான் உருப்பெறத் தொடங்கியது. கம்பிக்கட்டி வறுக்கும் வழக்கத்தை ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் கடைப்பிடித்திருக்க வேண்டும். யாருடைய வம்சத்தில் தோன்றியது என நான் மறந்துவிட்டேன்.

இத்தகு வெளிப்படையான, பயனளிக்கவல்ல கலைவடிவின் மூலமே மனிதக் குலத்துக்கு வழி பிறக்கிறது என்ற மென்மையான வார்த்தைகளால் அந்தக் கையெழுத்துப் பிரதி முற்றுப்பெறுகிறது.

மேலே சொன்ன கதை, எத்தனைத் தூரம் நம்பத் தகுந்தது என்று கேட்டால் எனக்குப் பதில் தெரியாது. ஒருவேளை அது உண்மையாக இருந்தால், ஏதாவது ஓர் உணவுப் பண்டத்தைச் சமைப்பதற்காக ஒட்டுமொத்த வீட்டையும் எரித்துத் தீக்கிரையாக்கி நாசம் செய்ய வேண்டுமென்றால், அதற்குத் தகுதியான உணவு வறுத்த பன்றியாக மட்டுந்தான் இருக்க முடியும்.

ஒட்டுமொத்த உலகின் ருசிகரக் கடலில் குளித்து எழச் சொன்னாலும், அதன் உச்சபட்சச் சுவை வறுத்த பன்றியில்தான் இருக்கிறது என்பதில் எனக்கு எப்போதும் மாறுபட்ட கருத்துக் கிடையாது.

(தொடரும்)

_________
‘A Dissertation upon Roast Pig’ (1822)  – Charles Lamb

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *