Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #18 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 2

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #18 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 2

சார்ல்ஸ் லேம்ப்

நான் இங்கு வளர்ந்த பன்றிகளைக் குறிப்பிடவில்லை. சின்னஞ் சிறிய இளம் குட்டிகளைப் பற்றியே பேசுகிறேன். அவை உண்மையிலேயே மிக இளமையானவை. அதிகபட்சம் பிறந்து ஒரு மாதம் ஆகியிருக்கலாம். பன்றித் தொழுவத்தின் அழுக்குப்படிந்த சேற்றுச் சகதிக்குக் கூடப் பழக்கப்படாதவை.

தன் முன்னோர்களிடம் இருந்து எவ்விதத் தீயப் பழக்கங்களும் கற்றுக்கொள்ளாத இளம் பிஞ்சுகள். அதன் உறுமல் சத்தம் கூட முழுமையாக உருப்பெற்றிருக்காது. உயர்ந்த ஸ்தாயியில் குழந்தை அழுவதற்கும், பன்றிகளின் வழக்கமான உறுமலுக்கும் இடைப்பட்ட மென்மையான குரல்.

இளம் குட்டிகளை வறுத்து உண்ண வேண்டும். நம் முன்னோர்கள் அவற்றை வேகவைத்து உண்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவ்வாறு செய்தால் வெளிப்புறச் சதை வீணாகிவிடும்.

இத்தகைய இளம் பன்றிகளின் இறைச்சிச் சுவைக்கு வேறெதுவும் ஈடாகாது. அதன் மொறுமொறுப்புத் தன்மையும் பொன்னிற வறுவலும் வேறெந்த இறைச்சியிலும் இத்தனை மிருதுவாகப் பார்க்க முடியாது. இதன் முரட்டுச் சுவையை உங்கள் பற்களால் ருசி பார்க்கலாம்.

பன்றியின் சருமத்தில் அப்பிக்கிடக்கும் எண்ணெய் பிசுக்கைப் பார்த்து, கொழுப்பு என்று ஏமாந்து விடாதீர்கள். விவரிக்க முடியாத இனிப்புச் சுவையின் சாரம் அது. தூய்மையான இளம் பன்றியின் வளப்பமான சதைப் பிடிப்பிலிருந்து ஒழுகும் இனிய சாறு. கொழுத்த பாகங்களும் மெலிந்த பாகங்களும் கச்சிதமாகப் பொருந்தி, தேவலோகச் சுவையை வாரி வழங்குகின்றன.

அந்தப் பன்றியைப் பாருங்கள். வறுத்துச் சமைக்கும்போது, அதன் உணர்ச்சிகளுக்குக் காது கொடுங்கள். தன்னைச் சுட்டெரிக்கும் நெருப்பைப் பொருட்படுத்தாமல், அதன் கதகதப்பில் இதமாய் ஆடுகிறது. கம்பியில் மாட்டிக்கொண்டும் அது சும்மாயிருக்கிறதா? உடம்பின் எல்லாப் பாகத்திலும் நெருப்புப் பட, சந்தோஷமாகச் சுழல்கிறது. இந்த இளம் வயதில் இத்தனை உணர்ச்சிப் பெருக்கு கூடிய பன்றியைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஜொலிக்கும் ஜெல்லியைப் போன்றும் கண் கூசும் வால் நட்சத்திரம் போன்றும் அழுது வடித்த அதன் கண்கள் குளமாக மின்னுகின்றன.

தன் இரண்டாவது தொட்டிலில் படுத்துறங்குவதுபோல், உணவுத் தட்டில் அமைதியாகக் கண்ணுறங்குகிறது. இந்த இளம் குட்டி வளர்ந்த பிற்பாடு, மற்ற பன்றிகளைப் போல் பேராசை, குழப்பம், பிடிவாதக் குணம் பிடித்து விரும்பத்தகாத உயிரினமாக மாறும் என்பதைக் கற்பனையிலாவது உத்தேசிக்க முடிகிறதா?

கொழுத்தச் சதைகளைக் கொண்டு பெருந்தீனியாக மாறி, பிடிவாதம் கொண்ட குழப்ப விலங்காக மாறுவதற்கு எல்லாவகைப்பட்ட அறிகுறிகளும் இதனிடம் உண்டு. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதன் ஊழிலிருந்து, இந்த இளம் பன்றியைக் காப்பாற்றிவிட்டோம்.

‘பாவம் உடலைப் பற்றுவதற்கு முன்பே,
துக்கம் உயிரைத் துண்டாடுவதற்கு முன்பே,
மரணம் இவனைச் சரியான நேரத்தில் கொண்டுசேர்த்தது’

பலத்த நாற்றமுடைய பன்றி இறைச்சியை, தன் வயிறு உண்ண மறுத்தாலும், விதூஷகன் அதனைக் குறைசொல்ல மாட்டான். அதை நினைக்கும்போதே அவனுக்கு நாற்றமெடுக்கும். சுரங்கத் தொழிலாளர்கள் நாற்றமெடுக்கும் இறைச்சிகளை உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. இந்த விஷேசமான பன்றி இறைச்சியைச் சாப்பிடத் தகுந்தவர்கள், உணவுப் பிரியர்கள்தான். பன்றிக்கு மிகச் சிறந்த ஓய்விடம் உணவுப் பிரியர்களின் இரைப்பை என்பதில் சந்தேகம் வேண்டாம். இறந்த பன்றியை அவர்கள் வயிற்றில் அடக்கம் செய்வதில் பன்றிகளுக்கு மனப்பூர்வ திருப்தி உண்டாகும். சுவையூட்டக்கூடிய பதார்த்தங்களில் பன்றியே மிகச் சிறந்த உணவு.

அன்னாசிப்பழம் மிகுந்த சுவையுடையது. பாவப்பட்டதாகக் கருதினாலும், மகிழ்வூட்டக்கூடிய இனிய பழம் அது. மெல்லிய உணர்திறன் கொண்ட நபர், ஆசையூட்டக்கூடிய அன்னாசிப்பழத்திடம் கவனமாக இருக்க வேண்டும். தன்னைத் தீண்டும் இதழ்களை, தன்னால் காயப்படுத்தமுடியும் என்ற பூரிப்பு அவளுக்கு உண்டு. உணர்ச்சிமிக்க முத்தங்களைப்போல், அவள் இதழ்களைக் கடிக்கிறாள்.

அவளின் சுவை எல்லையில்லாதது. நம்மைப் பித்துப்பிடித்து அலைய வைக்கும். ஆனால் இதழ்களின் சுவையை மட்டுமே அவள் திருப்தி செய்கிறாள். வயிற்றுப் பசியை அவளால் போக்க முடியாது. காட்டுப் பசியோடு இருந்தால், துளியும் வருத்தமின்றி அவளை ஆட்டுக் கிடா துண்டுகளுக்கு மாற்றாக விற்றுவிடலாம்.

பன்றிகள் ருசியானவை. காட்டுத் தீனி தின்பவர்களையும் நுனிப் புல் மேய்பவர்களையும் பாரபட்சமின்றித் திருப்தி செய்பவை. வலிமையானவர்கள் பன்றி இறைச்சியில் விருந்து உண்ணுகிறார்கள். மெலிதானவர்கள் மென்மையான பகுதிகளை உண்டு அனுபவிக்கிறார்கள்.

நற்குணங்களும் தீக்குணங்களும் நிரம்பி வாழும் சிக்கலான மானுடர்களைப்போல் அல்லாமல், எல்லா வகையிலும் நன்மை நிரம்பிய பன்றிகளைப் புரிந்து கொள்வதில் எவ்விதக் குழப்பமும் இல்லை. அதன் ஒவ்வொரு அங்கமும் உயர்வு, தாழ்வு இல்லாமல் சரிசமமாக ருசிக்கிறது. சுற்றி இருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்ய முயல்கிறது.

மற்றவர்களின் உயரிய விஷயங்களைக் கண்டு, அவர்கள் நன்றாக உணவருந்துவதைப் பார்த்து பன்றிகள் எப்போதும் பொறாமை கொண்டதோ, வெறுப்பு உமிழ்ந்ததோ கிடையாது. தன் அண்டைவாழ் உயிரினங்களை அன்புடனும் நேர்மையுடனும் நடத்துகின்றன.

என் வாழ்வில் ஏற்படும் நற்காரியங்கள் மிகக் குறைவானது என்றாலும், அவற்றை ஒன்றுவிடாமல் என் நண்பர்களிடத்துச் சொல்லும் பழக்கம் உடையவன் நான். அதைப்போல, என் நண்பனின் சொந்த விருப்பங்களையும் மகிழ்ச்சிகளையும்கூட எனது சொந்த இலட்சியம் ஈடேறுவதைப்போலக் கொண்டாடுபவன் நான் என்பதை உறுதியோடு சொல்கிறேன்.

‘மறைந்து போனவர்கள் மீதான பாசத்தை, பரிசுகள் நினைவூட்டுகின்றன’ என்று நான் அடிக்கடிச் சொல்வேன். முயல், செம்போத்து, கோழி, சிப்பி போன்ற உணவு பதார்த்தங்களை நண்பர்களுக்குக் கொடுத்தும் அவர்களிடமிருந்து பரிசாக வாங்கியும் உண்டு களித்திருக்கிறேன். ஆனாலும் நாம் எவ்வளவு கொடுக்கிறோம், எவ்வளவு பெறுகிறோம் என்பதில் ஒரு வரன்முறை வேண்டும். நாடகத்தில் வரும் லியர் அரசன்போல நாம் இருந்துவிடக் கூடாது.

தன் உடைமைகள் அனைத்தையும் அவன் கொடுத்தான். நான் எனது எல்லையைப் பன்றிக் கறியோடு முடித்துக் கொள்கிறேன். சிநேகிதர்கள், நட்பு போன்ற அற்ப காரணத்துக்காகப் பன்றிக் கறி போன்ற சுவைமிக்க இறைச்சியை முட்டாள்தனமாகப் பரிசளிப்பது நன்றிகெட்ட காரியமென்றும் கருதுகிறேன்.

எனது பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற இத்தகைய சம்பவமொன்றை என்னால் நினைவுகூர முடியும். விடுமுறை நாட்களில் எனது அத்தை வீட்டுக்குச் செல்வேன். அங்கிருந்து திரும்பும்போது இனிப்புப் பதார்த்தங்களை எனது பையில் நிரப்பி ஆசைதீர வழியனுப்பி வைப்பார் அவர். அப்படியொரு மாலை வேளையில் சுவைமிக்க பிளம் கேக் ஒன்றைச் சுடச்சுட கையில் தந்தார்.

இலண்டன் பிரிட்ஜ் வழியாகப் பள்ளிக்குச் சென்ற நான், நரை மலிந்த வயதான பிச்சைக்காரன் ஒருவனை வழியில் சந்தித்தேன். அவனைப் பார்க்க உண்மையானவன் போல் தெரியவில்லை. பணத்திற்காக வேஷமிடுபவன் போல் இருந்தான். கையில் கொடுப்பதற்கு என்னிடம் துளியும் பணமில்லை. எனவே கருணை கொண்ட பள்ளிச் சிறுவனாக வெளிகாட்டிக்கொள்ள, எனது பிளம் கேக் முழுவதையும் அவனிடம் கொடுக்கவேண்டி இருந்தது.

கொஞ்ச தூரம் வரையில் மனநிறைவோடு, மகிழ்ச்சியாகச் சென்றேன். ஆனால் பிரிட்ஜை கடந்ததும், எனது அத்தைக்கு நான் நன்றியோடு நடந்துகொள்ளவில்லையோ என்று உணர்ந்து அழத் தொடங்கினேன். அவர் எனக்கு அளித்த பரிசை, நல்லவனா கெட்டவனா என்று அறியாத மூன்றாம் நபருக்குத் தாரை வார்த்திருக்கிறேன். அந்தக் கேக்கை நான் மட்டுமே உண்பேன் என்று நினைத்து, எனது அத்தை திருப்தி அடைந்திருப்பார்; அதன் சுவையை நான் மட்டுமே ருசிப்பேன் என்று எண்ணி மகிழ்ந்திருப்பார்.

அத்தகைய பரிசை வேறொருவருக்கு வழங்கியதை எண்ணி நான் அவமானப் படுகிறேன். அதன் சுவைக் கமழும் மணம் இன்னும் என் நாசியில் நிற்கிறது. நல்லவன்போல் வேஷமிட்ட ஒருவனுக்கு, தாரை வார்த்ததை எண்ணி என் தவற்றை உணர்ந்தேன். எல்லாவற்றுக்கும் மேல் அந்தத் தந்திரமான, ஒன்றுக்கும் உதவாத மோசகரப் பாவியை இனி என் வாழ்நாளில் பார்த்துவிடக் கூடாது எனச் சொல்லிக் கொண்டேன்.

எங்கள் முன்னோர்கள், இந்த இளம் பிராணிகளை அன்பிற்குரிய முறையில் பலியிடுவார்கள். ஆனால் அதே சமயம் பன்றிகளைச் சாட்டையால் அடித்துப் பலியிடும் முறையைப் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் இப்போது இந்த வழக்கம் நடைமுறையில் இல்லை. கடந்த காலத்தில், கடுமையான ஒழுக்கத்தை மக்கள் பின்பற்றினார்கள்.

இவ்வாறு சாட்டையில் அடித்துப் பலியிடுவதால், பன்றிக்கறியின் தோல் மிருதுவாக இலகுத்தன்மை எய்துவதாய் அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையை எண்ணி நான் ஆச்சரியப்படுகிறேன். தேனைச் சுவையூட்டச் சர்க்கரை சேர்ப்பதுபோல் உள்ளது இந்தக் கதை.

நாம் இந்தக் கொடுமையை விமர்சிப்பதில் செலுத்தும் கவனத்தை, இந்த நடைமுறைக்குப் பின்னால் உள்ள சாத்தியமான ஞானத்தை அறிந்துகொள்ளவும் செலவழிக்க வேண்டும். ஒருவேளை இந்தமுறையினால் இறைச்சியில் புது சுவை கூடியிருக்கலாம்.

நான் செயின்ட் ஆமர்ஸில் இருந்தபோது, சில இளம் மாணவர்கள் ஒரு கருதுகோளை முன்னிறுத்தி விவாதம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது. ‘சவுக்கால் அடித்துக் கொல்லப்படும் பன்றியின் சுவை, அந்தச் செயலால் பாதிக்கப்படும் பன்றியின் வலியைக் காட்டிலும் அதிக இன்பத்தைத் தந்துவிடுமா?’ என்று அவர்கள் விவாதித்தனர். விலங்கைக் கொள்வதற்குச் சவுக்கடி சரியான முறையா? என்று கேள்வியெழுப்பினர்‌. ஆனால் அவர்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்று எனக்கு நினைவில்லை.

நாம் பன்றி இறைச்சி சாஸ் பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம்‌. அதில் கல்லீரல், மூளையோடு, சீமைக் கற்பூரவள்ளி இலைகளும் சேர்த்து சிறிதளவு ரொட்டித் தூளோடு குழப்பிச் சமைக்க வேண்டும். சமையல்காரர்களே, தயவு செய்து அதில் வெங்காய இனங்களைச் சேர்த்துவிடாதீர்கள்.

முழுப் பன்றி இறைச்சி என்றால், உங்கள் இஷ்டம்போல பார்பக்யூ முறையில் சமைக்கலாம்; வெங்காயம் சேர்த்து ஊற வைக்கலாம்‌; வலுவான பூண்டு மசால்களை இறைச்சியில் திணிக்கலாம். நீங்கள் என்ன செய்தாலும் அவற்றை மேலும் கடினப்படுத்தவோ, மோசமாக்கவோ முடியாது. ஒன்றை மட்டும் மறந்துவிட வேண்டாம், இளம் பன்றிகள் மலர்போல மென்மையானவை.

0

_________
‘A Dissertation upon Roast Pig’ (1822)  – Charles Lamb

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர். இதுவரை இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார். வரலாறும் இலக்கியமும் இவருடைய விருப்பத்துக்குரிய துறைகள்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *