Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #19 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 1

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #19 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 1

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

அணுக் கதிர்வீச்சு வெளியேறியதில் புதிதாய் ஒன்றும் சிக்கல் இல்லை. ஏற்கெனவே கிடப்பில் இருந்த மிக முக்கியப் பிரச்னையைச் சீர்செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு அது கவனப்படுத்தியிருக்கிறது. அணுசக்தியின் பிரம்மாண்டத்தால் எல்லைகடந்து பதற்றம் அடைந்த அதேசமயம், பிரச்சனையின் தன்மையில் எவ்வித மாறுதலும் இல்லை என்று நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இறையாண்மை மிக்க தேசங்கள் அளவுக்கு மீறிய அதிகாரத்தைத் தன் கைக்குள் வைத்திருக்கும் நாள் வரை, போர் ஓயாது. என்றைக்குப் போர் நிகழும் என்ற குறிசொல் ஏதுமில்லை என்றாலும், போர் நிச்சயம் நடந்தேறும் என்ற உறுதிப்பாடு இருந்தது. அணுகுண்டு கண்டுபிடிப்பதற்கு முன்புவரை இதுதான் நிலை. ஆனால் போரில் ஏற்படும் அழிவை மென்மேலும் உயர்த்துவதன் மூலம் அணு ஆயுதங்கள் கவனம் பெறுகின்றன.

அணுகுண்டுகள் கொண்டு சண்டையிடும் ஒற்றைப் போரினால், உலக நாகரிகங்கள் ஒட்டுமொத்தமாய் அழிந்துபோகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மனிதகுலத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஜீவராசிகள் ஒரேயடியாக இறந்துபோவார்கள். அதில் போதுமான சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதர்களும், அறிவு வளர்ச்சிக்குப் போதுமான புத்தகங்களும் எஞ்சலாம். ஆகவே நாகரிகத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு உண்டு.

ஐக்கிய நாடுகள் சபையிடம் அணுகுண்டு தயாரிப்பின் ரகசியங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சோவியத் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் எனக்குத் திருப்தி கிடையாது. இருதரப்பிலுமே பணம் படைத்த பெரும் மனிதர்கள் இருக்கிறார்கள். பணத்திற்காக வேலை செய்யும் ஒருவரைப் பணியில் அமர்த்தி, தன்னிடம் உள்ள பாதிச் செல்வத்தைக் கொட்டியளந்து இவர்களும் அதே வேலையில் ஈடுபடலாம். இதற்குப் போட்டியாக எதிர்க்கட்சியினர் மற்றொரு ஆளைப் பணியில் அமர்த்தி அவர்களும் அதே வேலையில் இறங்கலாம். சுமுகப் புரிதலால் மாற்றங்கள் ஏற்படுத்தாமல், போர் ஒன்றையே பிரதானப்படுத்துவார்கள்.

இதற்கு மாற்றாக அணு ஆயுத ரகசியங்களை ஓர் உலக அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேண்டும். அமெரிக்கா தன் ரகசிய அணு ஆராய்ச்சிப் படிப்பினைகளை, உலக அரசாங்கத்திடம் உடனடியாகச் சமர்ப்பிக்க இசைவு தெரிவிக்க வேண்டும். உலகளாவிய பெரும் இராணுவப் படைகளைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் ஒன்றியங்கள் கூட்டாகச் சேர்ந்து உலக அரசாங்கத்தை நிர்வகிக்கலாம்.

இம்மூன்று நாடுகளும் தனது ஒட்டுமொத்த இராணுவப் படைகளை உலக அரசாங்கத்தின் பார்வைக்கு எவ்வித காய்தலுமின்றி உடனடியாகக் காட்சிப்படுத்த வேண்டும். கணிசமான இராணுவப் படையைக் கொண்டிருக்கும் இம்மூன்று நாடுகளுக்கும், உண்மையான உலக அரசாங்கத்தை நிர்மாணிக்க எதுவும் தடையாய் இருக்கக்கூடாது.

சோவியத் ஒன்றியம் தவிர்த்து அமெரிக்காவும் பிரிட்டனும் அணு ஆயுத ரகசியங்கள் வைத்திருக்கின்றன. எனவே உலக அரசை நிர்மாணிப்பதன் முதற்கட்ட அரசமைப்பு வரைவைச் சோவியத் ஒன்றியம் தாக்கல் செய்ய வருமாறு இவ்விரு நாடுகளும் அழைப்பு விடுக்க வேண்டும். அணு ஆயுத ரகசியங்களைத் தாங்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதற்கே அவை ரகசியம் காக்கப்படுவதாய் புழுங்கி தவிக்கும் ரஷ்யர்களை, இந்த முடிவு ஓரளவு சாந்தப்படுத்தும். நிச்சயமாக முதல் வரைவே முற்றும் முடிவானது அல்ல. அது மாறுதலுக்கு உட்படும். என்றாலும், புதிய அரசாங்கம் ரஷ்யர்களுக்கு எல்லாவிதத்திலும் பாதுகாப்பானது என்று உணர்வூட்ட இந்த முடிவு அவசியமானதாய் தோன்றுகிறது.

இந்த அரசமைப்புச் சட்டத்தை ஏதேனும் ஓர் அமெரிக்கனும், ஒரு பிரிட்டனும், ஒரு ரஷ்யனும் கூடியாலோசித்து எழுதி முடித்தால் அது பொருத்தமாக இருக்கும். வேண்டுமானால் அவரவர்களுக்கு ஆலோசகர்களை நியமித்துக் கொள்ளலாம். ஆனால் தேவையென்ற பட்சத்தில் மட்டுமே ஆலோசனை பெறவேண்டும்.

எல்லோருக்கும் உவப்பளிக்கக் கூடிய ஓர் இயங்குதன்மையிலான அரசமைப்புச் சட்டத்தை வெறும் மூன்று பேரால் எழுத முடியும் என்றெனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆறு அல்லது ஏழுக்கு மேற்பட்ட நபர்களைப் பணிக்கு அமர்த்தினால் சொதப்பி விடுவார்கள். மூன்று பெரும் நாடுகளும் அரசமைப்புச் சட்டத்தை வரைவு செய்து அமல்படுத்தியதும், உலக அரசாங்கத்தின் அங்க உறுப்பினர்களாகக் கலந்துகொள்ளச் சிறிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கலாம்.

அங்கத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேற அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அந்தச் சுதந்திரத்தின் தன்மை கருதியே, அவர்கள் அங்கத்தின் உறுப்பினராய் உள்ளே வருவார்கள். முப்பெரும் நாடுகள் கட்டியெழுப்பும் உலக அரசாங்கத்தின் அரசமைப்பில் இயற்கையாகவே அவர்களுக்குச் சில மாற்றுக் கருத்துகள் உண்டாகும். ஆனாலும் சிறு நாடுகள் உறுப்பினராகச் சேர்கின்றனவோ இல்லையோ, உலக அரசை நிர்மாணிப்பதில் முந்நாடுகளும் முழுமூச்சில் ஈடுபட வேண்டும்.

உலக அரசாங்கத்திற்கு அனைத்து மட்ட இராணுவ விவகாரங்களைத் தாண்டிய அதிகாரத்தை வழங்க வேண்டும். அதற்கு ஒரேயொரு விஷேசச் சக்திதான் தேவை. சிறுபான்மையினரை நசுக்கி ஆளும் பெரும்பான்மையினர் வாழும் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் கலந்து கொள்ளும் உரிமையை அதற்குத் தாருங்கள். அதன்மூலம் ஸ்திரத்தன்மை இல்லாத ஆட்சியையும் போர் மூளும் சூழல்களையும் ஊகித்து அறிந்து அவற்றை உலக அரசாங்கம் தவிர்க்க பாடுபடலாம்.

ஸ்பெயின், அர்ஜென்டினா போன்ற நாடுகளில் நிலவும் சூழலை இதன்மூலம் தீர்த்து வைக்கலாம். தலையிடா கொள்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டும். ஆனால் அந்த முற்றுப்புள்ளி அவர்கள் வாழ்வை மாற்றும் ஓர் அமைதிப்புள்ளியாகச் செயல்பட வேண்டும்.

உலகின் முப்பெரும் அதிகார மையமாகத் திகழும் பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் நாடுகளில் சமச்சீரான சுதந்திரம் வாய்க்கும் வரை, உலக அரசாங்கத்தை நிறுவக் காத்திருக்கக் கூடாது. சோவியத் ஒன்றியத்தில் சிறுபான்மையினர் ஆட்சி நடைபெறுவதால், அவர்களால் உலக அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்றெனக்குத் தோன்றவில்லை.

ரஷ்ய மக்களுக்கு நீண்ட நெடுங்காலமாக அரசியல் அறிவு இல்லையென்பதை நாம் சகித்துக்கொள்ள வேண்டும். அங்கிருக்கும் பெரும்பான்மையினருக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆகவே, ரஷ்ய நிலையைச் சீர்ப்படுத்தும் எல்லாவித முன்னெடுப்புகளையும் சிறுபான்மையினர்தான் செயல்படுத்த வேண்டும். நான் ஒரு ரஷ்யனாகப் பிறந்திருந்தால், என்னால் இந்தச் சூழலைப் புரிந்து ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

தனித்துவ இராணுவ அதிகாரங்களோடு உருவாகவிருக்கும் உலக அரசாங்கத்தினால், உலகின் முப்பெரும் அதிகார மையத் தேசங்களுக்கு எவ்விதச் சேதாரமும் ஏற்படப் போவதில்லை. அதன் அரசமைப்பை உருவாக்கப்போவதே அவர்கள்தான் என்பதால், தத்தமது நாட்டின் விஷேசக் கட்டமைப்புக்கு ஏற்ப விதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உதயமாகவிருக்கும் உலக அரசாங்கத்தின் கொடுங்கோன்மையை நினைத்து எனக்குப் பயம் இல்லையா என்று கேட்டால், நிச்சயம் எனக்குப் பயமிருக்கிறது. ஆனால் அதைக்காட்டிலும் எதிர்வரும் யுத்தங்களை எண்ணி அஞ்சுகிறேன். எவ்வித அரசாங்கமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நாம் அதன் கோரமுகத்தைக் காணவேண்டி வரும். அந்தக் கோர முகங்களைக் காட்டிலும், யுத்தங்களின் அவல நிலை பன்மடங்குக் கொடியது. தீவிரமான அழிவிலிருந்து ஓரளவேனும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள இதுவொன்றே வழி.

இத்தகைய உலக அரசாங்கத்தை நாம் ஒரு சுமுக ஒப்பந்தத்தின் பேரால் கொண்டுவராவிடினும், நிச்சயம் அது ஏற்படத்தான் போகிறது. தானாக உருவாகும் பட்சத்தில் அதன் கொடுங்கோன்மை நினைத்துப் பார்க்க முடியாத அளவு வீரியம் கொண்டதாக இருக்கும். ஏனென்றால் யுத்தங்களைப் பொறுத்தவரை, வெற்றிபெறும் சாரார் மற்றொரு சாராரை அடுக்கியொடுக்கிக் கட்டுக்குள் வைப்பதே இராணுவ வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

நம்மிடம் இப்போது அணு ஆயுத ரகசியம் இருக்கிறது. எதன் பொருட்டும் அதை இழக்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் சபையிடமோ, சோவியத் அரசாங்கத்திடமோ அதை ஒப்படைத்தால் அதன்வழி பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர்கள் என்ற அவப்பெயரைச் சுமக்க வேண்டி வரும். அணுகுண்டை ரகசியமாக வைத்திருக்கும் நோக்கம் அதிகார அபிலாஷைகள் பொதிந்தது அல்ல, உலகில் அமைதி பூத்திட என்று கூடிய விரைவில் தெளிவுறுத்துவோம். உலக அரசின் இந்தக் கனவை நனவாக்க நம்மால் இயன்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

உலக அரசாங்கம் அமைவதற்கு உறுதுணையாக இருக்கும் சிலரே, மாற்றங்கள் பொறுமையாக நிகழ்ந்தால் போதும் என்றிருக்கிறார்கள். நான் அவர்களை அறிவேன். படிப்படியாக அடியெடுத்து வைத்து மெல்லமாக அரசு அமைப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், நம் கையில் அணுகுண்டை வைத்துக்கொண்டு ரகசியம் தெரியாதவர்களிடம் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாதென்பதற்குப் போதிய காரணமின்றி மலுப்பல் சொற்களோடு அவஸ்தைப்பட வேண்டும்.

எதிரும் புதிருமான நாடுகளுக்கு இடையே உள்ள அரசல் புரசலான உறவுகளும் விரிசல் விட்டுப் போர் மூள, இதுவொன்றே போதும். சமாதானம் நோக்கிச் சிறிய அடியெடுத்து வைப்பவர்கள், உலக அமைதியை ஒட்டி நெருங்கி வருவதாகக் கனவு காண்கிறார்கள். உண்மையில் அவர்கள் யுத்தக் களம் நோக்கி மெல்லமாக முன்னேறுகிறார்கள். யுத்தம் நோக்கிச் செல்ல நமக்குத் துளியும் நேரமில்லை. போர் வேண்டாமென்றால், உடனடியாக அதை மறுக்க வேண்டும்.

நாம் இந்த ரகசியத்தை வெகு காலம் வைத்திருக்க முடியாது. அணு ஆயுதம் தயாரிக்கும் அளவுக்கு, வேறெந்த நாட்டிலும் பொருளாதார வசதி இல்லை என்ற பேச்சை நான் கேட்டிருக்கிறேன். எனவே கூடுமானவரை ரகசியம் காப்பதற்குக் காலம் வாய்க்குமெனச் சொல்லிக் கொள்கிறார்கள். ஒன்றன் விலையை அதன் உற்பத்திச் செலவில் இருந்து நிர்ணயிக்கும் முட்டாள்தனமான தவறை இந்த நாட்டில் அடிக்கடி செய்கிறார்கள். மூலப் பொருள், ஆள் பலம், சிறிதளவு கரிசனம் கூடிய வேறெந்த தேசத்திலும் அந்நாட்டவர்கள் நினைத்தால் வெகுச் சாமர்த்தியமாக அணு ஆயுதங்களைத் தயாரிக்கலாம். அவர்களுக்குப் பணம் ஒரு பொருட்டே கிடையாது.

அணு ஆற்றல் உற்பத்திக்கு நான்தான் காரணகர்த்தா என்று கருதமாட்டேன். அதில் என் பங்கு சற்றே மறைமுகமானது. அதன் உற்பத்தியை என் வாழ்நாளில் கண்ணாறக் காணமுடியும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. கோட்பாட்டு ரீதியாகவே சாத்தியப்படும் என்றிருந்தேன். ஆனால் சங்கிலித் தொடர்வினையினால் எதிர்பாரா விபத்தில் திடுமெனக் கண்டுபிடிக்க நேர்ந்துவிட்டது.

பெர்லினைச் சார்ந்த ஹான் என்பவர் இதைக் கண்டுபிடித்தார். ஆனால் தன் கண்டுபிடிப்பைப் பற்றி அவரே தவறாகப் புரிந்துகொண்டிருந்தார். லீஸ் மயிட்னர் இதற்குச் சரியான விளக்கங்களைக் கொடுத்து, நீல்ஸ் போரின் கைகளில் ஒப்படைப்பதற்காக ஜெர்மனியை விட்டுத் தப்பிச் சென்றார்.

ஒருங்கிணைக்கப்பட்ட பெரும் நிறுவனங்களைப்போல், அணு அறிவியல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து வேலை வாங்க முடியாது‌ என்று நான் கருதுகிறேன். ஏற்கனவே கண்டிப்பிடித்த ஒன்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமானால் விஞ்ஞானிகளை ஒருங்கிணைக்கலாம். ஆனால் கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கு ஒருங்கிணைப்புச் சாத்தியப்படாது. தனியொருவர்தான் அதைச் செய்ய வேண்டும்.

இருந்தாலும் விஞ்ஞானிகளுக்கு ஏற்ற சூழலும் வசதியும் வாய்த்தால் இந்த ஒருங்கிணைப்பு ஒருவேளை சாத்தியப்படலாம். சான்றாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ள அறிவியல் பேராசிரியர்களிடம் கற்பிக்கும் பொறுப்பு பெரிதாகச் சுமத்தப்படுவதில்லை‌. அவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட போதுமான நேரம் இருக்கிறது. சார்லஸ் டார்வினின் கண்டுபிடிப்புகளை எல்லாம் விஞ்ஞானிகள் பலர் கூடி கண்டுபிடிப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

அமெரிக்காவில் உள்ள பெரும் தனியார் நிறுவனங்களை இந்நேரத்தில் நம்ப முடியுமா என்றெனக்குத் தெரியவில்லை. அளவுக்கு மீறிய அதிகாரங்களை எவ்விதப் பொறுப்பும் இல்லாத பெரும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திருப்பதை எண்ணி வேற்றுக் கிரகத்தில் இருந்து வரும் அந்நியர்கள் ஆச்சரியப்பட மாட்டார்களா?

அமெரிக்க அரசாங்கம் அணு ஆற்றல் உற்பத்தியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் நான் இதை அழுத்திச் சொல்கிறேன். சோசலிஸத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது என் வாதம் அல்ல. அணு ஆற்றலைக் கண்டுப்பிடித்தது அரசாங்கம் என்பதால், பொதுமக்களுக்குச் சொந்தமான அதன் ரகசியங்களைத் தனிப்பட்ட நபர்களுக்கோ ஒரு சாராருக்கோ சொல்வது உசிதமில்லை என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சோசலிஸத்தைப் பொறுத்தவரை உலகளாவிய அதிகார மையமாக விளங்கும் வகையில், ஓர் உலக அரசாங்கத்தை நாம் நிறுவ வேண்டும். அதனுள் சர்வ இராணுவ அதிகாரங்களும் பொருந்த வேண்டும். இல்லாவிடில் முதலாளித்துவ அரசாங்கங்களைக் காட்டிலும் மிகக் கொடிய யுத்தங்களைச் சோசலிஸ அரசு ஏற்படுத்தும். ஏனெனில் முதலாளித்துவத்தை விட சோசலிஸ அரசில் அதிகாரம் மொத்தமும் மையத்தில் குவிந்திருக்கும்‌.

அணு ஆற்றல் உற்பத்தியினால் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் நிகழலாம் என்று யாரேனும் உத்தேசித்தால் அதற்குத் துளியும் வாய்ப்பில்லை. இப்போதைக்குப் பெருவாரியான யுரேனியத்தை எங்கனம் பயன்படுத்தலாம் என்று மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். குறைந்த அளவிலான யுரேனியத்தைக் கொண்டு கார், விமானம் போன்ற வாகனங்களை இயக்கலாமா என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. எப்போது சாத்தியப்படும் என்றும் சொல்ல முடியாது. படிப்படியாக மெல்லமாய் உபாயம் அறியலாமே ஒழிய, கச்சிதமாகக் காலத்தை நிர்ணயிக்க முடியாது.

யுரேனியத்தைக் காட்டிலும் சுலபத்தில் கிடைக்கக் கூடிய தனிமங்களைக் கொண்டு அணு ஆற்றல் உற்பத்திச் சாத்தியமாகுமா என்ற கேள்விக்கு இப்போதுவரை பதில் இல்லை. இருப்பினும் அணு விளைவுக்குப் பயன்படும் எல்லாத் தனிமங்களும் அதிகப்பட்ச அணு நிறை கொண்டிருக்க வேண்டுமென்று கருதுகிறோம்‌. அத்தகைய தனிமங்கள் நிலையில்லாமல் இருப்பதால், அரிதிலும் அரிதாகவே கிடைக்கும். பெரும்பாலும் அவை கதிரியக்க ஆற்றலால் இந்நேரம் அழிந்து போயிருக்கலாம். எனவே அணுசக்தியின் பயன்பாடு மனிதக் குலத்திற்குப் பெரும்பாலும் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் முழு திறத்தையும் அறிந்துகொள்ளச் சிறிது காலம் பிடிக்கும்.

மனிதகுலம் சந்திக்கவிருக்கும் மிக அபாயமான சிக்கலை, அவர்கள் புரிந்துகொள்ளும் அளவு எனக்குச் சுலபமாகச் சொல்லத் தெரியவில்லை. ஆகவே அங்ஙனம் தெளிவுறுத்தும் முக்கியமான நபர் ஒருவரைப் பாராட்டி அறிமுகப்படுத்துவதன் மூலம் நான் அந்தப் பணியைச் சுலபமாக்க முயல்கிறேன். எமிரி ரெவிஸ் என்பவர் ‘தி அனடாமி ஆஃப் தி பீஸ்’ (The Anatomy of the Peace) என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். போரின் அவல நிலை குறித்தும் உலக அரசாங்கத்தின் இன்றியமையாமை குறித்தும் அப்புத்தகத்தின் வழி சுருக்கமாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கியுள்ளார்.

அணுசக்தி ஆற்றல் வெகுக் காலத்திற்கு நன்மை பயக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இப்போதைக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஒருவகையில் இது நல்ல சமிக்ஞையாகக் கூட இருக்கலாம்‌. நல்ல முடிவை எட்டுவதன் பொருட்டு, உலகின் அதிகார மையங்களை ஒற்றைக் குடைக்குள் செயல்படச்சொல்லிச் சொல்லொணா பயம் காட்டி உலக அரசாங்கம் ஏற்பட வலியுறுத்துகிறதே!

(தொடரும்)

_________
‘Atomic War or Peace’ (1945) – Albert Einstein

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *