Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #20 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 2

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #20 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – அணு ஆயுதப் போர் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை – 2

Albert Einstein

முதல் அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகும், போரின் அழிவுப் பிடியிலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்கு ஒரு காரியமும் செய்தபாடில்லை. மாறாக யுத்தத்தின் நாசக்காரச் சக்தியை மேலும் வலுவூட்டுவதற்கு நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அணுகுண்டுத் தயாரிப்பில் நான் நேரடியாகக் கலந்துகொள்ளாததால், அதைப் பற்றி அதிகம் பேசமுடியாத சூழலில் உள்ளேன். ஆனால் அதன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்ட வல்லுநர்கள், அணு ஆயுதத்தின் தாக்கம் பற்றிப் போதுமென்ற அளவுக்குச் சொல்லிவிட்டார்கள்.

முன்பைக் காட்டிலும் பெரிய அளவிலான அணுகுண்டைத் தயாரித்து, அதைக்காட்டிலும் பிரம்மாண்ட அளவில் சேதாரம் உண்டாக்க முடியும்‌. கதிரியக்க வாயுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்து, கட்டடங்களுக்குச் சேதாரம் ஏற்படாமல் மனித உயிர்களை மட்டுமே காவு வாங்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

பாக்டீரியாக்களைத் தூண்டிவிட்டு அதன் மூலம் யுத்தம் மேற்கொள்ளும் போர்முறைகளைக் கண்டு நாம் அதிகம் அஞ்ச வேண்டியதில்லை. அணு ஆயுதப் போர்முறையைக் காட்டிலும் அதில் அதீத அபாயம் இருக்காது. சங்கிலித் தொடர்வினையைத் தூண்டிவிடுவதன் மூலம் கண்டம் முழுதும் அழிந்துபடும் என்றோ, பூமியின் ஒரு பகுதி சேதமடையும் என்றோ எனக்குப் பயம் இல்லை.

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட அணு ஆயுத வெடிப்புகளால் உலகம் அழிந்துபோகும் என்றால், பூமியின் மேற்பரப்பில் நிறைந்து கிடக்கும் காஸ்மிக் கதிர்களால் என்றைக்கோ அது நிகழ்ந்திருக்க வேண்டுமே! அதன் அடிப்படையில்தான் நான் இந்த யோசனையை மறுக்கிறேன்‌.

அணு ஆயுதப் போரின் விபரீதங்களைப் புரிந்துகொள்ள நோவா வெடிப்பு, ஸ்டெல்லார் வெடிப்பு என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம். ஆனால் மீண்டுமொரு அணு ஆயுதப் போர் வராமல் தடுக்க வேண்டும். இல்லையெனில் நாம் இதுவரை காணாத அளவு பெரும் அழிவு ஏற்படும். அதில் சிறு நாகரிகங்கள் மட்டுமே உயிர் தப்பும்.

அணு ஆயுதக் காலத்தின் முதலிரண்டு வருஷத்தில் மற்றுமொரு முக்கியச் சங்கதி குறித்துக்கொள்ளும்படி இருக்கிறது. அணு ஆயுதப் போர்முறையின் அசம்பாவிதங்களை முடிந்த அளவு எடுத்துச் சொல்லியும், மக்கள் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை; அதன் தீவிரத்தைக் குறைக்க யாதொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நம் எச்சரிக்கை வாசகங்களையும் புறக்கணித்துள்ளனர்.

நம்மால் தவிர்க்க முடியாத ஆபத்து நேருமென்றால், அதை மறந்துவிடுதல் நல்லது. அதேபோல், அந்த ஆபத்திலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள எல்லாவித முன்னேற்பாடுகளும் செய்திருந்தால், அதையும் மறந்துவிடுதல் நலம். ஒருவேளை ஆபத்தைக் குறைக்கும் முகமாக, அமெரிக்கா தன் தொழிற்சாலைகளை விரிவுபடுத்தி நகரங்களைப் பரவலாக்கியிருந்தால் எதிர்வரும் ஆபத்தைப் பற்றி அஞ்சாமல், மக்கள் இயல்பாக வாழத் தொடங்கியிருப்பார்கள்.

நான் இதை எளிமையாகச் சொல்கிறேன். நம் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே நல்லது. ஒருவேளை ஏதாவது செய்திருந்தால், அது அணு ஆயுதப் போரை மேலும் வலுப்படுத்தியிருக்கும். மக்களும் அதைச் சகஜமாக ஏற்றுக்கொண்டு, மற்றொரு போருக்குத் தயாராவார்கள். அணு ஆயுதப் போரைத் தடுக்கும் முகமாக நாம் எதுவும் செய்யாவிடினும், அதன் கோர முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். எனவே அழிவை நம்மால் புறக்கணிக்க முடியாது.

அணுகுண்டு தயாரித்ததில் இருந்து, யுத்தத்தை நிறுத்துவதற்காக எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று நான் சொல்கிறேன். அணு ஆற்றலைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அதிகாரத்திற்கான ஒரு கூட்டு முன்மொழிவை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்தது. ஆனால் அதிலிருந்த சில நிபந்தனைகளுக்குச் சோவியத் அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே சோவியத் அரசாங்கம்தான், அணு ஆற்றல் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திற்கு இடையூறாக இருக்கிறதென்று ஒட்டுமொத்த மக்களும் குறைசொல்லத் தொடங்கினார்கள்.

ரஷ்யர்களைக் குறைசொல்லும் அதேநேரம், அமெரிக்கர்கள் ஓர் உண்மையை மறந்துவிடக் கூடாது. சர்வதேச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாகக் கூட, சாதாரணப் போர் நெறிகளிலிருந்து அணுகுண்டுப் பிரயோகத்தைத் தடை செய்கிறோம் என்று அமெரிக்கா ஒருபோதும் சொல்லவில்லை. தன்னைச் சர்வதேசக் கட்டுப்பாட்டு மையமாக மற்ற தேசங்கள் அங்கீகரிக்கும் வரை, தன்னுடைய அணுகுண்டுப் பிரயோகத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று அண்டைத் தேசங்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது, அமெரிக்கா.

ஆக்கிரமிப்பு அல்லது பெரும் அச்சுறுத்தல் காரணங்களுக்காக, யுத்தத்தைத் தொடங்க மாட்டோம் என்று தன் நாட்டைப் பற்றி அமெரிக்கர்கள் உறுதியாக நம்பலாம். அதன் விளைவாகக் கூட, மீண்டும் நாங்கள் அணுகுண்டைப் பயன்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது தேவையற்றது என்று அவர்கள் யோசிக்கலாம். ஆனால் அணுகுண்டுப் பிரயோகத்தைத் தாமாக முன்வந்து கைவிடவேண்டும் என்று அமெரிக்கர்களிடம் எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. என்ன காரணத்தாலோ, சர்வதேச அதிகார விதிகளுக்கு மற்ற தேசங்கள் உடன்படாததால் அமெரிக்கா அந்த எண்ணத்தை விட்டொழித்தது.

இந்தக் கொள்கை தவறானது என்று நம்புகிறேன். அணுகுண்டு ஆயுதத்தைப் பயன்படுத்துவது, அமெரிக்கர்களின் இராணுவ பலத்தை வெளிக்காட்டிக்கொள்ளவே உதவும்; மற்ற தேசங்கள் அமெரிக்கா மீது படையெடுக்க அஞ்சும். இந்தக் கொள்கையால் சில பல எதிர்மறை விளைவுகளும் உண்டு.‌

சர்வதேச அதிகாரத்தால் அணு ஆற்றல் உற்பத்தியைக் குறைந்த அளவுக்குக் கட்டுப்படுத்தலாம். தற்போது அமெரிக்க அரசிடம் மட்டுமே அணுகுண்டுகள் இருப்பதால், இராணுவ ரீதியாக அமெரிக்காவிற்கு எவ்விதச் சிக்கலும் கிடையாது. ஒருவேளை மற்ற நாடுகளும் அணு ஆயுத உற்பத்தித் திறன் வாய்க்கப் பெற்றால், அமெரிக்காவிற்கு அதைவிடப் பெரிய அச்சுறுத்தல் இருக்க முடியாது. சர்வதேச ஒப்பந்தம் இல்லாவிடில், அணு ஆயுதச் சண்டை கேட்பாரற்று நடைபெறும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களும் தொழிற்சாலைகளும் தாக்கப்படலாம். அதன் அன்றாட இயங்குதன்மை கேள்விக்குள்ளாகும்.

தன்னிடம் மட்டும்தான் அணுகுண்டுகள் இருப்பு உள்ளன என்பதைத் தெரிந்தும், அதற்குத் தடைவிதிக்க மறுப்பதனால் அமெரிக்கா மேன்மேலும் ஒரு பிரச்சினையை உருவாக்குகிறது. அதன்மூலம் கடந்த யுத்தத்தின் முன்னால் உலக நாடுகள் வரையறுத்துக் கொண்ட தார்மீகப் போர் நெறிகளை அமெரிக்கா கடைப்பிடிக்கத் தவறுகிறது. ஜெர்மானியர்கள் அணுகுண்டு தயாரிப்பதை நிறுத்தும் பொருட்டுதான், அமெரிக்காவில் அணு ஆயுத ஆராய்ச்சியை ஆயத்தப்படுத்தினார்கள். முதன்முதலில் மக்கள் வசிக்கும் பகுதியில் ஜெர்மானியர்களால் குண்டு வீசப்பட்டது. ஜப்பானியர்கள் அதை அப்படியே பின்பற்றத் தொடங்கினார்கள்.

நேச நாடுகளும் விதிவிலக்கில்லாமல் அப்படியே பதிலடி கொடுத்தனர். முன்னிருவரைக் காட்டிலும் ஒருபடி முன்னே சென்று வேலை செய்தனர். நேச நாடுகளிடம் தார்மீக ரீதியில் சரியான காரணம் இருந்தது. ஆனால் இப்போது எந்தக் காரணமும் இல்லாமல், அரசியல் நோக்கங்களுக்காகப் பழிவாங்கும் விரோதத்தில் அணுகுண்டைத் தடை செய்ய மறுப்பது மனிதமற்ற செயல். இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

அமெரிக்கத் தேசம் அணுகுண்டுகள் தயாரித்து அடுக்கி வைக்கக்கூடாது என்று நான் வாதாடவில்லை. அமெரிக்கா அணுகுண்டுகள் தயாரிக்கலாம். பிற தேசங்கள் அணுகுண்டு கொண்டு அமெரிக்காவை அச்சுறுத்துவதைப் பெரும்பாலும் இது கட்டுப்படுத்தும். ஆனால் தாக்குதலைத் தடுப்பதே முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும். இது ஐக்கிய நாடுகள் சபைக்கும் பொருந்தும். ஒருவேளை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஆயுதங்களும் இராணுவப் படைகளும் இருந்தால், அவற்றைத் தற்காப்புப் பணிகளுக்கே பயன்படுத்த வேண்டும்.

ஐ.நா. சபையிடம் அணுகுண்டுகள் இருந்தால்கூட, அவை யுத்தத்தைத் தடுக்கும் பொருட்டுப் பயன்பட வேண்டுமென்று நான் சொல்வேன். அமெரிக்கா செய்ததைப் போன்று தாமாகச் சென்று ஒரு தேசத்தின் மேல் விரோதத்தைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்தக் கூடாது. அணுகுண்டுகளைத் தேச விரோதத்திற்காகப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளிக்காமல் ரகசியமாகப் பதுக்கி வைப்பது, அரசியல் நோக்கத்திற்காகச் செயல்படுவதன்றி வேறல்ல.

சோவியத் ஒன்றியத்திற்குப் பயங்காட்டி, அதன்மூலம் அணுசக்தி ஆற்றல் மீதான சர்வேதசக் கட்டுப்பாட்டைத் தன் கைக்குள் கொண்டுவருவதன் பொருட்டு அமெரிக்கா இதைச் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் இந்தப் பயம் மோதலை மேலும் மோசமாக்குகிறது. போர் மூளும் சூழலை இறுக்கமாக்குகிறது. அணுசக்தி ஆற்றலின் சர்வதேசக் கட்டுப்பாட்டை எதன்பொருட்டுப் பெற வேண்டும் என அமெரிக்கா துடிக்கிறதோ, அதன் மையத்திலிருந்து வெகுவாக விலகுகிறது.

நாம் இப்போதுதான் ஒரு யுத்தத்தை முடித்தோம். அதில் நம் எதிரியின் கீழ்த்தரமான நடத்தைகளை ஏற்றுக்கொண்டு சண்டை செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். அது நம்மை எத்தனைத் தூரம் மோசமாக உணர வைத்தது என்று நமக்குத்தானே தெரியும்! ஆனால் அதில் கற்ற பாடங்களை வைத்து உயர்ந்த நெறிகளை வகுத்துக்கொள்ளாமல், அப்பாவி மக்களைப் பாதுகாக்காமல், மீண்டும் அதே கீழ்த்தரமான முறைகளைப் பின்பற்றுவோம் என்று சொன்னால் நாம் இன்னுமொரு யுத்தத்தை நோக்கி நகர்கிறோம் என்று பொருள். நமது ஒழுக்கத்தைச் சமரசம் செய்துகொண்டோம் என்று அர்த்தம்.

எதிர்வரும் யுத்தக் காலங்களில் அநேக எண்ணிக்கையிலான அணுகுண்டுகள் பயன்படுத்தப்படும் என்று மக்கள் ஒருவேளை தெரிந்துகொள்ளாமல் இருக்கலாம். இறுதி யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று குண்டுகளோடு ஒப்பிட்டு அதன் வீரியத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அத்தோடு பெருத்த சேதாரம் ஏற்படுத்த அணுகுண்டுகள்தான் மலிவான ஆயுதமென்று உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். இப்போதாவது அதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

வருங்காலத்தில் விலை மலிவான நிறையக் குண்டுகளை யுத்தத்தில் செலவு செய்வார்கள். அணுகுண்டுப் பிரயோகத்திற்குத் தடை விதிக்காதவரை, அதன் பயன்பாடு நம்மை மூச்சிரைக்க வைக்கும். தவிர்க்கமுடியாத சக்தியாய் உருபெறும். அணுகுண்டு வைத்திருப்பது ஒருபோதும் வலிமையைக் குறிக்காது, எளிதில் தாக்குதலுக்கு உட்படும் அதன் நொறுங்கு தன்மையைக் குறிக்குமென்று அமெரிக்க மக்களும் அதன் தலைவர்களும் உணர வேண்டும். சர்வதேச உறவுமுறைகளில் தெளிந்த புரிதல் ஏற்பட வேண்டுமானால் லேக் சக்சஸில் நடைபெறும் கூட்டத்தில் இதே கோணத்திலான கொள்கையை ஏற்கவேண்டும். ரஷ்யாவுடன் இதே முறையில் புரிந்துணர்வு மேற்கொள்ளவேண்டும்.

பழிவாங்கும் நோக்கத்திற்காக அமெரிக்கர்கள் அணுகுண்டுப் பிரயோகிப்பதைத் தடை விதிக்காதது மட்டுமே ரஷ்யர்கள் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்க மறுக்கும் காரணமல்ல. எவ்விதச் சர்வதேச அதிகார‌ அமைப்பு அமைவதையும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தகர்த்தெறிய முயல்வதை ரஷ்யர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். அணுசக்தி ஆற்றல் விவகாரத்தில் மட்டுமல்ல, பொதுவாகவே சர்வதேச அரசு அமைவதில் அவர்களுக்கு உடன்பாடில்லை. வரையறுக்கப்பட்ட உலகளாவிய அரசாங்கம் அமைவதை, அவர்கள் எள்ளளவும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

அமெரிக்க அணுசக்தி முன்மொழிவு பற்றித் திருவாளர் க்ருமீகோ மிகச் சரியாகச் சொன்னார். அணுசக்திக் காலத்தில், அமெரிக்காவின் முன்மொழிவு சொந்த நாட்டின் இறையாண்மைக்கே பங்கம் விளைவிப்பதாய் உள்ளது. சோவியத் ஒன்றியத்தால் இதற்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க முடியாது. அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் வெளிப்படை. அணுகுண்டுத் தடை பற்றிச் சோவியத் சொல்வதெல்லாம் வெறும் சாக்கு. சர்வதேசத் தலைமையை ஏற்க வேண்டியிருந்தால் சோவியத்தின் சமூகக் கட்டமைப்பு உடைந்துபோகும் என்பதுதான் உண்மை. அதைத் தற்காத்துக் கொள்ளவே சோவியத் தலைவர்கள் ஒப்புதலளிக்க மறுக்கின்றனர்.

சோவியத் தலைவர்கள் அந்நாட்டின் சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் பெரும் சிரத்தையோடு உழைக்கிறார்கள். சர்வதேச அதிகார மையமென்ற பெயரில் எதுவொன்று தோன்றி, அதன் இயங்குதன்மைக்குக் குந்தகம் விளைவித்தாலும் அதனை அடித்து நொறுக்குவதில் வினையே என்றிருப்பார்கள். அது அணுசக்தி விவகாரமாக இருந்தாலும் சரி.

(தொடரும்)

_________
‘Atomic War or Peace’ (1945) – Albert Einstein

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *