தம் நாட்டின் சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்றுதவற்காக, சர்வதேச அதிகார மையம் அமையவிடாமல் சோவியத் முயல்வதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. இருந்தாலும் உலகம் முழுக்க பொது விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கையில், தான் மட்டும் தனித்து வாழும் அளவுக்கு இது ஒன்றும் அத்தனை மோசகரமான திட்டமில்லையென அவர்கள் போகிற போக்கில் புரிந்து கொள்வார்கள்.
சோவியத் ஒன்றியம் தற்போது பயத்தால் வழி நடத்தப்படுகிறது. இதற்கான ஏகப் பொறுப்பையும் அமெரிக்காதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அணு ஆற்றல் மட்டுமே இதற்குக் காரணமென்று சொல்லவில்லை. பல காரணங்கள் உண்டு. பயமே உட்சபட்ச இராஜதந்திரக் கருவி என்று அறிந்தும், தனது முன்மொழிவில் ரஷ்யாவின் கொள்கைகளைக் தனக்கேற்ப அமெரிக்கா வரையறுத்துள்ளது.
அனைத்துத் தேசங்களையும் உட்படுத்திய சர்வதேச அதிகார மையம் அமைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றால், வேறு சில நாடுகள் அத்தகைய மையம் அமைய முனைந்து வேலை செய்யக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. தான் ஒருமுறை வேண்டாம் என்று கருதிவிட்டால், தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி அந்தப் பணி நிறைவேற விடாமல் ரஷ்யா அதனை எதிர்க்கும் என்று சொல்வார்கள். ஒருவேளை அது நிறைவேறிவிட்டால், அதற்கேற்ப தகவமைத்துக் கொண்டு அதனுள் இடம்பெறும் நெகிழ்வுத்தன்மையும் அதற்குண்டு.
எனவே வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமையவிருக்கும் சர்வதேசச் சபையை ரஷ்யா தடுக்காமலிருக்க அமெரிக்காவும் பிற தேசங்களும் முயல வேண்டும். அதுவே சர்வதேச அமைதிக்கு வழிவகுக்கும். ரஷ்யர்களால் தடுக்க முடியவில்லை என்றால், தாமாக வந்து பின்னர் ஒட்டிக்கொள்வார்கள் என்ற தைரியத்தில் அமெரிக்கர்கள் முன்செல்லலாம்.
சோவியத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுவரை அமெரிக்கா எந்தவொரு செயல்திட்டங்களும் முன்னெடுக்கவில்லை. தன் சொந்த நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில்தான் அமெரிக்கா கண்ணாக இருக்கிறது. இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான சண்டையில் அமெரிக்காவிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஏகத்துவ அதிகார விதிகளுக்கு மாற்றாக, நியாயமான சட்ட விதிகளை வரையறுக்கும்படி அமெரிக்க மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை நெருக்கிப் பிடித்தால், சோவியத்தின் பயம் என்னவாகும் என்று யாராலும் முன்கூட்டிச் சொல்லமுடியாது.
சட்டங்களை முறையாகப் பின்பற்ற நேர்ந்தால், ரஷ்யாவின் பாதுகாப்பைத் தாய்நாடுபோல் கண்ணும் கருத்துமாகப் பேண வேண்டும். அமெரிக்க மக்கள் இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கினால், ஜனநாயக ரீதியில் இதற்கு முழுச் சாத்தியங்கள் உண்டு. இதனால் ரஷ்யர்கள் ஓரளவு சாந்தப்படுவார்கள். ரஷ்யப் புரிதலை மாற்றியமைக்கும் ஒரு மாயச் சக்தியாக இது விளங்கக்கூடும்.
இராணுவப் படைபலங்களோடு எந்நேரமும் போருக்குத் தயாராய் இருக்கும் யோசனையில் அமெரிக்கா இத்திட்டத்தை முன்மொழிகிறது என்று நிரூபிக்கத் தற்சமயம் வரை ரஷ்யாவிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை. வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் முயற்சி என்று ரஷ்யர்கள் இதனைக் கருதுகின்றனர்.
உலகளாவியச் சட்டங்கள் மூலம் அமைதியை நிலை நாட்ட அமெரிக்கா சிரத்தையெடுப்பதாய், உலகின் கண்களுக்கு வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும். தன் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் விளங்கும் அமெரிக்கத் திட்டங்கள் பற்றி ரஷ்யா மாற்றுக் கோணத்தில் சிந்திக்க இதுவொன்றே வழி. நியாயமான தார்மீகச் சட்டங்களை சோவியத்தின் கைகளில் வழங்கி, அதற்கு அமெரிக்க ஆதரவும் வலுவாக இருந்தால் ரஷ்யா எங்ஙனம் எதிர்வினையாற்றும் என்று கணிக்க முடியும்.
ஆரம்பத்தில் எல்லோரும் சட்டங்களைப் புறக்கணிக்கவே செய்வார்கள். தான் இல்லாமலும் உலக நாடுகள் சட்டமியற்றி வேலை செய்கின்றன எனத் தெரிந்த பிறகு ரஷ்யா பாதுகாப்பாக உணரும். ரஷ்யர்கள் சாதகமாகச் சிந்திப்பார்கள். அமைதியை நிலைநாட்டவும் சமாதானத்தை ஏற்படுத்தவும் உலக அரசை நிர்மாணிப்பதற்கு, தனிப்பட்ட முறையில் நான் ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்க விரும்புகிறேன். ஆனால் அவர்கள் அதை நிராகரித்தாலும்கூட, நாம் அதை எப்பாடுபட்டாவது நிறுவ வேண்டும். இதில் ஆபத்து இருப்பதையும் நான் எச்சரிக்கிறேன்.
உருவாகவிருக்கும் புதிய ஆட்சி எவ்விதத்திலும் ரஷ்யாவிற்கு எதிரான அதிகாரக் குவிப்புப் படையாக இருந்துவிடக்கூடாது என்பதில் தெளிவு அவசியம். போருக்கு எதிரான ஒருங்கிணைந்த எதிர்ப்புச் சக்தியாகவே அது விளங்கவேண்டும். அதன் ஆட்சிப் பரப்பு பரந்துபட்டதாய், சண்டை மூளும் சூழல்களைத் தற்காக்கும் இயல்பினதாய் இருக்க வேண்டும். தனிப்பட்ட எந்தவொரு தேசத்தைக் காட்டிலும் உலக அரசின் அதிகாரக் கரங்கள் வலிமை படைத்ததாய் இருக்க வேண்டும். அதன் அமைவிடத்தை அழிக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்புடனும், ஒடுக்க முடியாத அளவுக்கு இராணுவப் பலத்துடனும் தெம்பூட்ட வேண்டும். சர்வதேசப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, மோதலுக்கு வழிவகுக்கும் ஓரவஞ்சனைகளை ஒழித்துக்கட்ட வேண்டும்.
ரஷ்யா இல்லாமல் உலகுதழுவிய அளவில் அதிகார அரசு அமையப்பெற்றால், அதன் பொதுநல நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு உறுப்பு நாடுகள் எப்படியெல்லாம் செயல்படுகின்றன, போர்ச் சூழலை எங்கனம் தவிர்க்கின்றன என்பதில்தான் அமைப்பின் வெற்றி இருக்கிறது. ரஷ்யத் தேசம் தன் அங்கத்தில் இணைய விரும்புவதை அவர்கள் எப்போதும் உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அங்கத்தில் இணைய மறுக்கும் நாடுகளுக்கு எவ்விதத் தண்டனையும் எதிர்மறை அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதில் இருசாரரும் உறுதி காக்கவேண்டும்.
ரஷ்யர்கள் உடனடியாக இசைவு தெரிவிக்கவில்லை என்றாலும், வேண்டும்போதெல்லாம் இணைந்து கொள்வதற்கான நெகிழ்வுத்தன்மை இருப்பதை அவசியம் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உலக அரசை நிர்மாணிக்கும் நபர்களுக்கு நான் ஒன்றை அறிவுறுத்துகிறேன். ரஷ்யத் தேசத்தை எப்படியேனும் அங்கத்தில் உறுப்பினராக்குவதே நம் அடிப்படை லட்சியம்.
இதுவரையிலும் நான் சொன்னவை மேலோட்டமான திட்டங்கள். ரஷ்யர்களின் மனங்கொள்ளும்படி வரையறுப்பது எளிய காரியமல்ல. ஆனால் இரண்டு விஷயங்களில் மட்டும் தெளிவு அவசியம்: புதிய அரசாங்கத்துக்கு எவ்வித ரகசிய ராணுவத் திட்டங்களும் இருக்கக்கூடாது. ஒவ்வொரு சட்டமியற்றும் கூட்டத்திலும் ரஷ்யப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். சந்தேகத்தில்தான் பெருந்தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது. எனவே அந்தரங்கச் சூழ்ச்சிகள் நடைபெறாமலிருக்க இவ்விதிகள் உதவக்கூடும்.
இராணுவ ரகசியத் திட்டங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு, இந்த வெளிப்படையான இயங்கு சூழலில் உவப்பு உண்டாகாது. ரகசியங்களை அம்பலப்படுத்தினால், போர் விரும்பும் தேசங்கள் உலகைக் கைப்பற்றத் தொடங்கலாம் எனச் சிந்திப்பார்கள். (அணுக்குண்டு ரகசியத்தை ரஷ்யர்கள் தாமாகவே விரைவில் கண்டுபிடிப்பார்கள்.) ரகசியங்கள் வெளிப்படுவதால் சிக்கல் இல்லாமல் இல்லை. கணிசமான தேசங்கள் அமைப்பில் கைகோத்தால், பயமின்றி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம். அவர்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். பிற தேசங்கள் மீது நம்பிக்கை ஏற்படுவதோடு, சந்தேகமும் பய உணர்ச்சியும் மட்டுப்படும்.
இறையாண்மை உணர்ச்சியால் தேசங்களுக்கு இடையே போர் உண்டாக்கும் சாத்தியப்பாடுகள், சமாதானத்தின் மீது அதிகரிக்கும் நம்பிக்கையால் காணாமல் போய்விடும். இவ்வேளையில் ரஷ்ய அதிகாரிகளும் அந்நாட்டு மக்களும் மேற்குலகம் பற்றி இளகிய பார்வை கொள்வர்.
உலக அரசின் உயர் மட்ட உறுப்பினர் நியமனங்களைக் கண்மூடித்தனமான ஜனநாயக முறைகளில் தேர்வு செய்யக்கூடாது. அதன் நிர்வாக மற்றும் ஆட்சிக் குழு அலுவலர்களை, உறுப்புக் குழு நாடுகள் ரகசிய வாக்குச் சீட்டு முறையில் தேர்ந்தெடுக்க வேண்டுமெனப் பலரும் விரும்புகின்றனர். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் அரசு சாராமல் மக்களின் சார்பாக இருந்ததால்தான் அமைப்பு சுமுகமாக இயங்கும்.
இதற்குமேல் ஜனநாயக முறைகளைப் பின்பற்றுவது சரியென்று நான் சொல்லமாட்டேன். வரலாற்று வெளியெங்கும் ஜனநாயகப் பண்புகள் வெற்றிபெற்ற தேசம் எதுவென்று பார்த்தால், ஜனநாயகம் பற்றிய குறைந்த புரிதல் கொண்ட நாடுகள்தான். எனவே விதிகள் கெடுபிடியானால், மேற்குலகுக்கும் சோவியத் நாடுகளுக்கும் இடையே கொள்கை வித்தியாசங்கள் அதிகரிக்கும்.
உலக நாடுகள் யுத்தம் நோக்கி நகர்வதற்குக் கொள்கை முரணே காரணம் என்று சொன்னால், அது எனக்கு ஏற்புடையதல்ல. உலக நாடுகள் எல்லாம் தங்கள் இறையாண்மையோடு கூடிய சோசலிசச் சித்தாந்தத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தித்தால், அது கிழக்கு மேற்குப் பூசலை மேலும் அதிகரிக்க செய்யும். இன்றைய பொருளாதாரக் கொள்கையில் தேசங்கள் வலுவான பிடிப்பு கொண்டிருக்கின்றன என்பது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை.
இப்போது உள்ளதுபோல் அமெரிக்காவின் பொருளாதாரம் ஒருசிலரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டுமா அல்லது அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டின்கீழ் அவ்வொன்றிரண்டு நபர்கள் செயல்பட வேண்டுமா என்பது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி. என்னவிருந்தாலும் இவ்வொற்றைக் கேள்வியால், அது ஏற்படுத்தும் உணர்ச்சிப்பூர்வத் தாக்கத்தை நியாயப்படுத்த முடியாது.
எல்லாத் தேசங்களும் ஒன்று சேர்ந்து உலகந்தழுவிய அரசாட்சியில் அங்கம் வகிப்பதை நான் காண விரும்புகிறேன். இராணுவப் படைகளை ஒன்றிணைத்து, தமக்கென உள்ளூர் காவல்படைகளை மட்டுமே வைத்துக் கொள்ளவேண்டும். ஒருங்கிணைந்த இராணுவப் படையினர் தமக்குள் பரவலாகி, பழங்கால ஆஸ்திரோ – அங்கேரியப் பேரரசின் படைகளைப் போல் செயல்பட வேண்டும்.
தங்கள் தேச எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் அல்லாமல், அயல் தேசத்திலும் அதே கடமை உணர்ச்சியுடன் செயலூக்கம்கூடிப் பணிபுரிவார்கள் என்று நம்பலாம். ஆகவே உள்நாட்டு இனவாத அரசியலுக்கு உட்படாமல் நடுநாயகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெம்பு பிறக்கிறது.
சர்வதேச அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாப்புத்துறை போன்ற குறிப்பிட்ட இலக்காவிற்குள் சுருக்கிவிடுதல் நல்லது. ஆனால் அது ஒத்துவருமா என்று எனக்குத் தெரியாது. கடந்த கால வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கையில், இந்த அமைப்பிற்குப் பொருளாதாரம் குறித்த அதிகாரத்தையும் வழங்கலாம் எனத் தோன்றுகிறது. ஏன் என்றால், நவீன உலகில் பொருளாதாரச் சிக்கல்களால் பேராபத்துகள் நிகழ்கின்றன. இரண்டு தேசங்களுக்கு இடையே போர் மூளும் அளவுக்குப் பொருளாதார முரண்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
ஆனால் இதைப் பாதுகாப்புத் துறையோடு நிறுத்திக் கொள்வதே சரியென்று சொல்வேன். ஐக்கிய நாடுகள் சபையைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த உலக அரசாங்க அமைப்பை நிறுவ வேண்டும். அவ்வகையில் உலக அமைதியை நோக்கி நாளும் நாம் முன்னேறிக் கொண்டிருப்பதை உறுதி செய்யலாம்.
ரஷ்யாவோடு தொடங்க வேண்டுமா அல்லது ரஷ்யாவைத் தவிர்த்துத் தொடங்க வேண்டுமா என்று உலக அரசாங்கம் தொடங்குவதில் இருக்கும் சிக்கலை நான் அறியாமலில்லை. இதிலுள்ள ஆபத்துக்கள் என்னவென்று அறிவேன். அமைப்பில் சேரும் எந்தவொரு நாடும் இதிலிருந்து பிரிந்து செல்வதை நான் விரும்பவில்லை. இதனால் யுத்தங்களே கூட நிகழலாம். ஆனால் அவ்வேளையில் உலக அரசாங்கம் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்புகிறேன். இத்தகு இடர்பாடுகளையெல்லாம் தாண்டி, நாம் எத்தனை ஆர்வத்தோடு இதனை எதிர்கொள்ளப்போகிறோம் என்பதுதான் கேள்வி.
ஏது நேரினும், மற்றொரு உலக யுத்தம் நிகழ்ந்தால்கூட உலக அரசாங்கம் ஏற்படத்தான் போகிறது. ஆனால் அந்த யுத்தத்தில் வெற்றி பெறுபவனே, உலக அரசாங்கத்தை நிர்மாணிப்பான். அவனது இராணுவ அராஜகத்துக்கு ஏற்ப நாம் ஆட்டுவிக்கப்படுவோம். எந்நேரமும் இராணுவ அவசரத்திற்கு உட்பட்ட இனமாக மனிதர்கள் மாறவிடுவார்கள்.
இதைப் பெரும் சிரமம் இல்லாமல், சுமூகப் பேச்சுவார்த்தையின் மூலம் எளிதில் கொண்டு வருவதற்கான உபாயங்கள் உண்டு. ஆனால் அதைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரக் காரணங் காரிய முறைகளைப் பின்பற்றினால் வேலைக்கு ஆகாது. கீழைத் தேய நாடுகளில் உள்ள கம்யூனிச அமைப்பு வலிமையாக இருக்கிறது. அதற்குக் காரணம் அதன் மதம் போன்ற தன்மை. மக்கள் மனத்தோடு உணர்ச்சிப் பூர்வ இயக்கமாக, மதங்களைப்போல் கம்யூனிச அமைப்பு வியாபித்திருக்கிறது.
மத உபசார வழிவகைகளில் உணர்ச்சிப் பெருக்குக் கூடிவருவதைப்போல், சமாதானத்தை நிலைநாட்டச் சட்டத்தைக் கையில் எடுத்து உணர்ச்சிப் பாங்கோடு இவ்வமைப்புச் செயல்படாவிடில் எளிதில் உடைந்துபோகும். மனிதக் குலத்திற்கு அறநெறிச் சாரம் போதிக்கக் கடமைப்பட்டவர்களுக்கு, இது மிகச் சரியான நேரம். தங்களது வாய்ப்பை நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தங்களது வியாக்கியான வாதங்களால் அணு யுகத்தின் உண்மைகளை விளக்கிச் சொன்னாலும், அமெரிக்க மக்கள் துளியும் புரிந்து கொள்ளமாட்டார்கள் என அணு தொழில்நுட்பத்தோடு தொடர்புடைய விஞ்ஞானிகளுக்கு உரைத்துவிட்டது. மத நிறுவனங்களிடம் உள்ள அடிப்படை உணர்ச்சிப் பாங்கை நாம் இனிச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
தேவாலயங்கள் மட்டுமன்றிப் பள்ளி, கல்லூரிகள் முதலான கல்விக்கூடங்களும், செல்வாக்கு பெற்ற இன்ன பிற ஊடகங்களும், இவ்விஷயத்தில் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆவன செய்வார்கள் என்று நம்புவோம்.
0
_________
‘Atomic War or Peace’ (1945) – Albert Einstein