Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #22 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 1

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #22 – மால்கம் எக்ஸ் – நான் படிக்கக் கற்றுக்கொண்டேன் – 1

மால்கம் எக்ஸ்

நான் எழுதிய கடிதங்கள்தான் என்னைத் தன்முனைப்பாகச் சொந்த முயற்சியில் படிக்கத் தூண்டின.

உணர்ச்சிப் பெருக்கில் நான் சொல்ல விரும்புவதை எல்லாம் அப்படியே கடிதங்களில் எழுத முடியவில்லையென்று, நாளும் என்மேல் வெறுப்புணர்வு கூடிக்கொண்டே வந்தது. குறிப்பாகத் திரு. எலிஜா முகமது அவர்களுக்கு எழுதும்போது அந்தப் போதாமை என்னை மேலும் உலுக்கியது. எங்கள் தெருவில் என் பேச்சுக்கு நல்ல மதிப்பு உண்டு. புரிதலுக்கு அரிதான விஷயங்களையும் சாமர்த்தியமாக, மனங்கொள்ளும்படிச் சொல்வதில் சமர்த்தன் என்று பெயரெடுத்திருந்தேன்‌. நான் பேசத் தொடங்கினால் எல்லோரும் என்னை உற்றுக் கவனிப்பார்கள்.

ஆனால் இப்போது எளிய ஆங்கிலத்தில் எழுத முயன்றால்கூட, செய்திகளை வெளிப்படுத்த முடியாமல் திணறினேன்; என் எழுத்து நடையில் சரளமாக உரையாட முடியாமல் தவித்தேன். ‘திருவாளர் எலிஜா, நீங்கள் என்னைப் பாராட்டும்படி நான் ஏதாவது செய்வேன்’ என்று பேச்சுவழக்கில் சொல்வதை ஒலி மாறாமல் அப்படியே எழுதுவது எப்படி என்று திக்குத் தெரியாமல் குழம்பினேன்.

என்னைத் தொலைக்காட்சியில் காணும் சிலரும், நேரில் சந்திக்கும் அநேகரும்; என் எழுத்தை வாசிக்கும் பலரும், நான் எட்டாம் வகுப்பைத் தாண்டியவன் என்று நிச்சயம் கருதுவார்கள். ஆனால் இந்த முன்முடிவான கருத்துப் பதிவுக்கு என் சிறைவாசப் படிப்புதான் காரணம்.

சார்ல்ஸ்டவுன் சிறையில் இருந்தபோது, பிம்பியின் அசாதாரண அறிவுத்திறனைக் கண்டு பொறாமை கொண்டேன். அங்கிருந்துதான் எல்லாம் தொடங்கியது. எந்தவொரு உரையாடலையும் தன் அறிவுப் புலத்திற்குள் வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் பிம்பியிடம் இருந்தது. நானும் அவரை அப்படியே பின்பற்றத் தொடங்கினேன். ஆனால் நான் கையிலெடுத்த எல்லாப் புத்தகங்களிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்கியங்கள் இருந்தன. இவையெல்லாம் உண்மையிலேயே சீன வார்த்தைகள் இல்லை என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.

அவற்றைத் தவிர்த்து மிச்சமிருந்ததை வாசித்தால், அப்புத்தகத்தின் மையக் கருத்திலிருந்து மீச்சிறு விஷயத்தை மட்டுமே உள்வாங்க முடிந்தது. எனவே அங்கிருந்து நார்ஃபோக் சிறைச்சாலை வளாகத்திற்கு வந்தேன். அதன்பிறகும் புத்தக வாசிப்பிற்குள் முழுமையாக மனம் செல்லவில்லை. படிப்பதுபோல் பாவனை செய்தேன். இவ்வாறு செய்ததில் எனக்கு ஊக்கம் இல்லாமல் போயிருந்தால், அந்தப் பாவனைகளையும் என்றைக்கோ விட்டொழித்திருப்பேன்.

புதிய வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளவும் அவற்றை மனனம் செய்யவும் அகராதி ஒன்றை எந்நேரமும் கையில் வைத்திருந்தால் உபயோகமாக இருக்குமெனத் தோன்றியது. நல்லவேளையாக என் கையெழுத்தைச் சீர் செய்யவேண்டும் என்ற பிரக்ஞையும் எனக்கு உரைத்தது. உண்மையில் என் கையெழுத்து படுமோசமாக இருந்தது. காகிதத்தில் எழுதினால் கோணலாகச் செல்லும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் செயலுருவம் கொடுக்க, நார்ஃபோக் சிறைச்சாலை வளாகத்தின் பள்ளிக்கூடத்தில் ஓர் அகராதியோடு சில சிலேட்டுகளும் பென்சில்களும் வழங்கும்படி கோரிக்கை வைத்தேன்.

இரண்டு நாட்களுக்குத் தலைகால் புரியாமல் அகராதியின் பக்கங்களை முன்பின்னாகப் புரட்டிப் பார்த்தேன். உலகில் இத்தனை வார்த்தைகள் இருக்குமென்று அதுவரை எனக்குத் தெரியாது! எந்தெந்த வார்த்தைகளைப் படிக்கவேண்டும் என்று தெரியாமல் குழப்பம் அதிகரித்தது. இறுதியில் எதாவது ஒன்றைச் செய்யவேண்டுமே என்ற ஆசையில் அகராதியில் இருந்ததை அப்படியே எழுதத் தொடங்கினேன்.

நிதானமாக, அச்சுப்பிசகாமல், அகராதியின் முதல் பக்கத்தில் இருந்தவற்றை என் கோரமான கையெழுத்தில் அப்படியே சிலேட்டில் எழுதினேன். நிறுத்தற்குறிகளைக் கூடத் தவிர்க்காமல் அப்படியே படியெடுத்தேன்‌. இவ்வாறு எழுதுவதற்கு முழுமையாக ஒருநாள் பிடித்தது. பின் அவற்றை உரத்த குரலில் எனக்கு நானே வாசித்துப் பார்த்தேன். மீண்டும் மீண்டும் என் சொந்தக் கையெழுத்தால் சிலேட்டில் படியெடுத்தவற்றை, உரக்க வாசித்துக் காதுபட கேட்டேன்.

மறுநாள் காலையில் எழுந்ததும், எழுதிய வார்த்தைகளை மீண்டும் மனத்திலிருத்திப் பெருமைப்பட்டேன். ஒரேநாளில் இத்தனை வார்த்தைகளை எழுதியது மட்டுமல்லாது, இதுவரை அறிந்திராத பல வார்த்தைகளைத் தெரிந்துகொண்டதிலும் எனக்கு ஆச்சரியம் பீறிட்டது. கொஞ்சம் சிரமமெடுத்து வாசித்ததால், அவ்வார்த்தைகளுக்கான பொருளும் எனக்கு நினைவிருந்தன. பொருள் தெரியாத வார்த்தைகளை மீண்டும் அகராதியெடுத்துப் புரட்டிப் பார்த்தேன்.

உங்களுக்கு ஒரு வேடிக்கையான விஷயம் சொல்கிறேன். அகராதியைப் புரட்டினால் அதன் முதற்பக்கத்தில் தோன்றும் ‘Aardvark’ என்ற சொல் திடீரென எனக்கு ஞாபகம் வருகிறது. அதன் உருவப்படத்தையும் அங்குப் பார்த்திருக்கிறேன். ஆர்டுவார்க் என்பது ஆஃப்ரிக்கா பகுதியில் மண்ணுக்கடியில் வாழும் நீண்ட வாலும் காதுகளும் உடைய ஒரு பிராணி. எறும்புத்தின்னிகள் எறும்பை உண்ணுவதுபோல் தன் நீண்ட நாவால் கரையான்களை உண்ணும் ஜீவராசி இது.

எனக்கு ஆர்வம் தாளவில்லை. அகராதியின் அடுத்த பக்கத்தையும் படியெடுத்தேன். அதைப் படிக்கையிலும் அதே அனுபவம் நேரிட்டது. அடுத்தடுத்த பக்கங்களைக் கடக்கும்போது, வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்களையும் இடங்களையும் நிகழ்வுகளையும் தெரிந்துகொண்டேன். அந்த அகராதி கிட்டத்தட்ட ஒரு குட்டிக் கலைக்களஞ்சியம் போன்றிருந்தது.

இறுதியில் அகராதியின் A வரிசை சொற்களை எல்லாம் படியெடுத்தப் பிறகு, B வரிசைக்குத் தாவினேன். இப்படித்தான் முழு அகராதியையும் என் சொந்தக் கையெழுத்தால் படியெடுத்தேன். சிரமங்களைத் தாண்டி எழுதிப் பழகியதால், சீராகவும் வேகமாகவும் கையெழுத்துக் கைகொடுத்தது. சிலேட்டில் படியெடுத்து எழுதியதற்கும் கடிதங்கள் எழுதியதற்கும் மத்தியில் சிறைக்குள் ஓய்வெடுக்கும் காலத்தில் குறைந்தது 10 லட்சம் வார்த்தைகளாவது எழுதியிருப்பேன்.

எனது சிந்தனைத் தொட்டியில் அதீதச் சொற்கள் சேகரமானதும், என்னால் எவ்விதச் சிரமமுமின்றிப் புத்தகங்களை வாசித்து அவை கூறும் மையக் கருத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதிகம் வாசிக்கும் ஒருவர், புதிய உலகிற்குப் பயணப்படுகிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சிறைச்சாலையை விட்டு வெளியேறிய பிறகு, பொது நூலகங்களில் இல்லாவிட்டாலும் நான் எனது படுக்கையிலாவது புத்தகங்கள் படித்துக்கொண்டுதான் இருந்தேன். மரம் பிளக்கும் ஆப்பு வைத்துப் பெயர்த்தாலும், என்னையும் புத்தகங்களையும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமானேன். நான் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கிறேன் என்ற சுயநினைவே இல்லாமல் எலிஜாவிடம் பாடம் கேட்பது, கடிதங்கள் எழுதுவது, சந்திக்க வரும் எல்லா மற்றும் ரெஜினால்ட்டிடம் உரையாடுவது, புத்தகங்கள் படிப்பது என்று எந்நேரமும் பரபரப்பாக இருந்தேன். உண்மையிலேயே என் வாழ்வில் அத்தகைய சுதந்திரத்தை அதுவரை அனுபவித்தது இல்லை.

நார்ஃபோக் சிறைச்சாலையின் நூலக அரங்கம் பள்ளிக்கூட வளாகத்தில் அமைந்திருந்தது. ஹார்வார்ட் மற்றும் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்துவரும் எண்ணற்ற பயிற்றுநர்கள் விதவிதமான பாடப் பொருண்மையில் வகுப்பெடுப்பார்கள். சிறைவாசிகளுக்கான வாராந்திர விவாதங்களும் பள்ளி வளாகத்தில் நடைபெறுவது உண்டு. அங்கு விவாதத்திற்கு ஒதுக்கும் தலைப்புகளைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ‘குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அவசியமா?’ போன்ற தலைப்புகளில் சிறைவாசிகளைப் பேசவைக்க என்னென்ன மெனக்கெட்டிருப்பார்கள் என்று ஆச்சரியப்படுகிறேன்.

சிறைச்சாலை நூலக அடுக்கில் எல்லாவிதப் பொதுத் தலைப்பிலுமான புத்தகங்கள் இருந்தன. பார்க்ஹர்ஸ்ட் விட்டுச்சென்ற ஆயிரக்கணக்கான பெருந்தொகுப்புகள் இன்னும் அட்டைப் பெட்டியில் உறங்கிக்கொண்டிருந்தன. அவற்றில் சில பழமை வாய்ந்தும், அட்டை மங்கியும், தோலினால் செய்யப்பட்ட பழம்புத்தகம் போன்றும் இருந்தன.

நான் முன்பு சொன்ன பார்க்ஹர்ஸ்ட் அவர்கள் வரலாற்றுத் துறையிலும் சமயத்திலும் ஆர்வம் கொண்டவர் போலத் தெரிகிறார். அவரிடம் பணப் பலம் இருந்ததால், பொது வாசிப்புக்கு உட்படாத பல அரிய புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கியிருக்கிறார். அத்தகைய அரிய சேகரிப்பைச் சுவீகரித்துக் கொள்ள, எந்தவொரு கல்லூரி நிர்வாகமும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

சிறைவாசிகளின் வாழ்வை மேம்படுத்தத் துடிக்கும் சிறைச்சாலை ஒன்றில், சிறைக் கைதி ஒருவன் புத்தகங்கள் மீது அளவுகடந்த ஆர்வம் கொண்டிருந்தால், சகவாசிகளும் அவனது ஆர்வத்தை இன்முகத்தோடு வரவேற்பார்கள். அங்கிருந்த நிறையப் பேர் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் நுட்பமாக விவாதிப்பதில் புகழ் பெற்றிருந்தனர். நடமாடும் கலைக்களஞ்சியம் எனச் சொல்லும் அளவுக்குத் திறனும் புகழும் பெற்ற பலரை நான் அங்குப் பார்த்தேன். எந்தவொரு பல்கலைக்கழகமும் இத்தனைப் பரந்துபட்ட இலக்கியங்களை விரிவாய் செரித்து உள்வாங்கச் சொல்லித் தரப்போவதில்லை என்று நான் இங்குப் படிக்கக் கற்றுக்கொண்டதும் தெரிந்துகொண்டேன்.

நூலகத்தில் படிப்பதைக் காட்டிலும் எனது அறையில் அதிகம் படித்தேன். சிறையிலிருந்த ஒருவர் அளவுக்கதிகமான புத்தகங்களை வாசிப்பதால், வழக்கத்தை மீறி அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை இரவல் வாங்கும் வழக்கம் இருந்தது. எனது அறையின் ஒட்டுமொத்தத் தனிமையில் அமைதியாக வாசிக்க விரும்பினேன்.

நான் தீவிர வாசிப்பில் நுழைந்தபோது, இரவு பத்து மணிக்கு விளக்கை அணைக்கும்போது கோபத்தின் விளிம்பிற்கே சென்றுவிடுவேன். ஏதாவது சுவாரஸ்யமான செய்தியின் மையப் புள்ளியில் விளக்கு அணைவதே வாடிக்கையாக இருந்தது.

நல்லவேளையாக, எனது அறைக்கு வெளியே நடைபாதை விளக்கு இருந்தது சௌகரியமாகிப் போனது. அதன் ஒளிக்கதிர் ரேகையிலிருந்து சிறிதளவு எனது அறைக்கு வெளிச்சம் வாய்த்ததால், என்னால் கண்களைச் சரிசெய்துகொண்டு படிக்க முடிந்தது. எனவே விளக்கு அணைக்கும் சத்தம் கேட்ட மறுநொடி, தரையில் இறங்கிக் கதவு வழியாக ஒளிபடரவிட்டு உட்கார்ந்துவிடுவேன்.

ஒருமணி நேர இடைவெளியில் காவலர்கள் ரோந்து வருவது வழக்கம். அவர்கள் காலடிச் சத்தம் கேட்டால், குபீரென்று படுக்கையில் குதித்து உறங்குவதுபோல் பாசாங்கு செய்வேன். காவலர் சென்ற பிறகு மீண்டும் தரையில் குதித்து வெளிச்சம் படரவிட்டு, அடுத்த ஐம்பத்து எட்டு நிமிடங்களுக்கு மீண்டும் அவர் வரும்வரை படித்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு நாளும் அதிகாலை மூன்று, நான்கு மணிவரை இந்தச் சம்பவம் அரங்கேறும். ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு மணிநேர உறக்கம் எனக்குப் போதுமானதாக இருந்தது. தெருவில் படுத்துறங்கிய காலத்தில், இதைவிடக் குறைந்தபட்சத் தூக்கங்களை நான் பார்த்திருக்கிறேன்.

வரலாற்று நெடுக கறுப்பர்களை ஒதுக்கிவைத்து, வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றுப் புத்தகங்கள் எத்தனை மடங்கு ‘வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது’ என்று திரு. எலிஜா முகமுதின் போதனைகளின் மூலம் அழுத்தந் திருத்தமாகத் தெரிந்துகொண்டேன். என்னைக் கடுமையாகப் பாதிக்கும் எதையும் அவர் சொல்லியிருக்க முடியாது. மேசானில் உள்ள பள்ளிக்கூடத்தில் வெள்ளையர்களுடன் நான் ஏழாவது படிக்கும்போது, அமெரிக்க வரலாற்றுப் பாடத்தில் கறுப்பர்கள் பற்றி ஒற்றைப் பத்தியில் மட்டுமே செய்தியிருந்ததும், அதைப் படித்துக் காட்டுகையில், ‘நீக்ரோக்களின் கால் அகலமானது. அவர்கள் தெருவில் நடந்து சென்றால், குழி விழும்’ என்று சொல்லிச் சத்தமாகச் சிரித்த ஆசிரியரையும் நான் இன்னும் மறக்கவில்லை.

அமெரிக்கவாழ் நீக்ரோக்கள் திரு. எலிஜா முகமதைப் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, அவரின் போதனைகள் எட்டுத்திக்கும் பரவுவதற்கு இதுதான் காரணம்.‌ அவர் சொல்பவை எல்லாம் உண்மையாகத் தெரிந்தன. அமெரிக்க வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடும் கறுப்பர்களின் வாழ்வே உண்மையானது என்று சொல்லும் ஒரேயொரு கறுப்பரையோ வெள்ளையரையோ கூட உங்களால் அடையாளம் காட்ட முடியாது. ‘கறுப்பர்களின்‌ கண்ணியமிக்க வரலாற்றை’ அறிந்த பிறகு, அவர்கள் பற்றித் தெரிந்துகொள்ளக் கைகால் நோகப் புத்தகங்களைத் தேடி நூலகத்தில் அலைந்திருக்கிறேன்.

அதில் முதல் தொகுப்பு என்னை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது. அந்தப் புத்தகங்களைச் சொந்தமாக வாங்கி, என் குழந்தைகள் வளர்ந்த பிற்பாடு படிக்க ஏதுவாக வீட்டில் வைத்திருக்கிறேன். அப்புத்தகத்தின் பெயர் ‘வொண்டர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ (Wonders of the World). ஐரோப்பியரல்லாத மக்கள் சார்ந்த தொல்லியல் கண்டுபிடிப்புகளும் சிலைகளும் உருவப்படங்களும் அதில் அதிகம் இருந்தன.

வில் டியூரண்ட் எழுதிய ‘ஸ்டோரி ஆஃப் சிவிலைசெஷன்’ (Story of Civilization) போன்ற புத்தகங்களைக் கண்டடைந்தேன். ஹெச்.ஜி. வெல்ஸின் ‘அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி’ (Outline of History) நூலை வாசித்தேன். டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ் எழுதிய ‘சோல்ஸ் ஆஃப் பிளேக் ஃபோக்’ (Souls of Black Folk) என்ற நூல் இந்நகரத்தை அடைவதற்கு முன்பு வாழ்ந்த கறுப்பர்களின் வாழ்வியலைப் பற்றி மேலோட்டமான பார்வையைக் கொடுத்தது. கார்டர் ஜி. வுட்சன் எழுதிய ‘நீக்ரோ ஹிஸ்டரி’ (Negro History) புத்தகம் கண்திறப்பாக இருந்தது. கறுப்பின அடிமைகள் அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்டதற்கு முன்பிருந்த கறுப்பர்களின் சாம்ராஜ்யம் பற்றியும், தொடக்கக்கால நீக்ரோ விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் அதில் அதிகம் தெரிந்து கொண்டேன்.

ஜே. எ. ரோஜர்ஸின் செக்ஸ் அண்ட் ரேஸ் (Sex and Race) நூலின் மூன்று தொகுதிகளும் கிறிஸ்துப் பிறப்பிற்கு முன்பு ஏற்பட்ட இனக்கலப்பு பற்றிப் பேசுகின்றன. நீதிக் கதைகள் சொன்ன ஈசாப்பு ஓர் கறுப்பினத்தவர் என்றும் அந்நூலில் ரோஜர்ஸ் எழுதியிருக்கிறார்‌. எகிப்தியப் பாரோக்கள், மாபெரும் காப்டிக் கிறிஸ்தவப் பேரரசுகள், உலகின் பழமையான நாகரிகம் சீன நாகரிகம் என்றால், பழமையான கறுப்பர் நாகரிகம் எத்தியோப்பிய நாகரிகம் என்று அரிதான பல விஷயங்களை அந்நூலில் பார்க்கலாம்.

வெள்ளையர்கள் எப்படித் தோன்றினார்கள் என்று திரு. எலிஜா உரையாடியதில் இருந்து, கிரிகோர் மெண்டல் எழுதிய ‘ஃபைண்டிங்ஸ் இன் ஜெனிடிக்ஸ்’ (Findings in Genetics) நூலைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். (அகராதியின் G வரிசையில் ஏற்கெனவே ஜெனிடிக்ஸின் பொருளைப் படித்திருந்தேன்). ஆஸ்திரியத் துறவி எழுதிய இப்புத்தகத்தை உண்மையாகவே வாசித்தேன்.

மீண்டும் மீண்டும் படித்ததால், ஒரு சில பகுதிகள் துலக்கம் பெற்றன. கறுப்பின மனிதரிடம் இருந்ததுதான் வெள்ளையினத்தவர் தோன்றமுடியும் என நான் புரிந்துகொண்டேன். வெள்ளையினத்தவரால் ஒருபோதும் கறுப்பரைப் பெற்றெடுக்க முடியாது. ஏனென்றால் வெள்ளை மரபணு பின்னடையும் இயல்பு உடையது. எனவே ஒருவர்தான் முதல் மனிதராக இருக்கமுடியும் என்பதை எல்லோரும் நிச்சயமாக ஒப்புக்கொள்வதால், யார் முதலாமவர் என்பதில் முடிவு தெளிவாக உள்ளது.

(தொடரும்)

_________
‘Learning to Read’ excerpt from The Autobiography of Malcolm X (1965)

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *