Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #24 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 1

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #24 – சார்ல்ஸ் லேம்ப் – திருமணமானவர்களின் நடத்தை குறித்து ஒரு தனியனின் குற்றச்சாட்டு – 1

சார்ல்ஸ் லேம்ப்

திருமணமாகாத ஒரு தனியனாக, மணம் புரிந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வேடிக்கை பார்ப்பதில் நான் அதிக நேரம் செலவிடுகிறேன். திருமணமாவதால் இன்னின்ன சுகபோகங்களை அனுபவிக்கலாம் என்று அவர்கள் சொல்வதை மீறி, ஒரு தனியனாக அவர்கள் அவஸ்தைப்படுவதைக் கண்டு அந்த இல்லாமையை நிரப்பிக்கொள்கிறேன்.

கணவன் – மனைவி சண்டைகள் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இந்தவொரு காரணத்தால்தான் சமூகத்தில் அதிகம் நெருங்கிப் பழகக் கூடாது எனும் ஒரு விசித்திரப் பழக்கத்தை நான் கைக்கொண்டேன் என்றும் சொல்ல முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில முக்கியக் காரணங்களுக்காக நான் இந்த முடிவைத் தீர்மானித்தேன். உண்மையில் என்னை அடிக்கடி உலுக்கும் சிக்கல் என்னவென்றால், திருமணமானவர்களின் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அவர்கள் பரிமாறிக் கொள்ளும், அளவுக்கு மீறிய அன்பும் அரவணைப்பும்தான்.

உண்மையில் அளவு மீறிய அன்புதான் பிரச்சனையா என்றால், அதுவுமல்ல. அது என் பக்க நியாயத்தைக் குறைத்து மதிப்பிடுகிறது. அவர்கள் பிரியமாக இருப்பதைக் கண்டு நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? ஒட்டுமொத்த உலகத்திடம் இருந்து தனித்துவந்து, இருவராகச் சேர்ந்து பிறிதொருவரின் அன்புக்குப் பாத்திரமாகி, மாறிமாறி அன்புப் பொழிவதால் வேறு யாரையும்விடத் தம்மைத்தான் அதிக நேசிக்கிறார் என்று தம் இணையருக்கு நிரூபிக்கும் செயலாகவே நான் இதைப் பார்க்கிறேன்.

எனக்கு வருத்தம் என்னவென்றால், அவர்கள் தம் ஒருதலைப்பற்றை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். துளியும் வெட்கமின்றி நம்மைப் போன்ற தனியர்களிடம் அப்பட்டமாக நடந்து கொள்கிறார்கள். நாம் அவர்களின் விருப்பத்திற்குரியவர் அல்ல என்பதைத் தொடர்ச்சியாகக் குறியீடுகளின் மூலமும், வெளிப்படையாகவும் சொல்ல முயற்சிக்கிறார்கள். இத்தகைய சூழலில் அவர்களுடன் ஒருசில பொழுது செலவிடுவதே நரகமாகிவிடும்.

சில விஷயங்கள் யாரையும் காயப்படுத்தாது என்று நாம் எதார்த்தமாய் யோசித்துவிட்டுக் கடந்து போகிறோம். ஆனால் அவை வெளிப்படையாக நிகழ்ந்து விட்டால் பெரும்பாடு. எடுத்துக்காட்டாக நான் ஒரு சம்பவம் சொல்கிறேன்.

மனங்கொள்ளும் அழகோ, கண்கவர் ஆடைகளோ அணியாத பெண்ணொருத்தியிடம் சென்று, ‘நீ என்னை மணம் புரியும் அளவுக்கு அழகோ செல்வமோ பெற்றவள் இல்லை’ என்று முகத்துக்கு நேராக ஒருவன் சொன்னால், அது மூர்க்கமாக இருக்கும். அவனைத் தண்டித்தாலும் தகும். நீ என்னை மணம் புரிய சம்மதிப்பாயா என்று கேட்பதிலும் எதிர்மறைக் கருத்தாக்கங்கள் இல்லாமல் இல்லை.‌ ஆனால் அதை அவன் சொல்லாமல் சொல்லி விட்டான்.

வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அதை அந்தப் பெண் உணர்ந்துகொண்டாள். ஆனால் இதன் பொருட்டு அவளால் சண்டையிட முடியாது.

அதேபோல், திருமணமானவர்களும் என்னால் தங்களுக்கு உவப்பில்லை என்பதை ஒவ்வொரு கணமும் குறிப்புப் பொருளிலும் வெளிப்படைப் பொருளிலும் உணர்த்தியாக வேண்டும் என்று எவ்விதக் கட்டாயமும் இல்லை. அவர்கள் அன்புக்குப் பாத்திரமானவன் நான் இல்லை என்பது எனக்கு மட்டுமே தெரிந்திருத்தல் போதுமானது. எல்லாமுறையும் நினைவூட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உங்களிடம் உள்ள பணத்தையும் அறிவையும் பகட்டாக வெளிக்காட்டுவது சங்கடமாக இருக்கலாம். ஆனால், அதில் பிறருக்கு ஏற்படும் காயங்களைக் குறைந்தபட்சமாகக் குறைக்க வழிகள் உண்டு. மக்கள் தங்கள் அறிவை வெளிக்காட்டி என்னைக் காயப்படுத்த முயன்றால், நான் அவர்களிடம் இருந்து அறிவுப்பூர்வமான விஷயங்களைக் கற்றுக்கொள்ள உபாயம் உண்டு. பணம் படைத்த செல்வந்தர்கள் தங்கள் வீடு, தோட்டம் மற்றும் கலைச்சொத்துகளைக் காட்டி என்னைத் தாழ்வாகச் சிந்திக்கும்படி செய்தால்கூட, நான் அவர்களின் உடமைகளைத் தற்காலிகமாக அனுபவிக்கும் நிலையை எண்ணிப் பார்ப்பேன். ஆனால் மக்கள் தன் மகிழ்ச்சியான திருமண உறவை வெளிக்காட்டும் போது, நான் தேற்றமுடியாத துன்பத்திற்கு ஆளாகிறேன். என்னை எவ்வழியிலும் ஆற்றுப்படுத்த முடியாத, ஈடில்லாத அவமதிப்பு என்று உணர்கிறேன்.

திருமணம் எனும் பந்தம் பெயருக்கேற்றபடி பிரத்தியேக உரிமைகள் கொண்டது. ஆனால் பிரத்தியேக உரிமைகளை அனுபவிக்கும் ஒருவன், அதன் அருமை பெருமைகளை எவரொருவருக்கும் தெரியாமல் ரகசியமாய் மறைத்து வைப்பதுதான் வழக்கம். பிறரின் கேள்விகளுக்கு ஆளாகாமல் தப்பிப்பதற்கு அதுவொன்றே வழி. ஆனால் இந்தத் திருமணம் புரிந்தவர்கள், அதன் பிரத்தியேக அனுகூலங்களைத் தனியர்களின் காதுபடவே பேசுகின்றனர்.

புதுமணத் தம்பதிகளின் முகத்திரையில் பளிச்சிடும் பிரகாசத்தை என்னால் கண்கொடுத்துப் பார்க்கமுடியாது. குறிப்பாக மணப்பெண்ணின் முகத்தில் பீறிடும் பூரணத்துவத்தைப் பார்க்க வேண்டுமே! வாழ்வின் மகிழ்ச்சிப் பாணத்தைக் கண்டடைந்த சந்தோஷம். அவளுக்கு இனி நம்மால் ஆகவேண்டியது எதுவுமில்லை. அவள் நிமித்தம் நாம் கொண்டுள்ள ஆசைகளையும் கனவுகளையும் இத்தோடு கரைத்துக் கொள்ள வேண்டும். வெளிப்படையாகச் சொல்லாவிடினும் உண்மை இதுதான்.

திருமணம் ஆகாத தனியர்களைக் காட்டிலும் தங்களுக்கு நிறையத் தெரியும் என்று நம்புவதால், உயர்வாகவும் வலிமையாகவும் அவர்கள் நடந்துகொள்கின்றனர். இந்த நம்பிக்கை கேலிக்குரியதாக இல்லாவிட்டால், நாம் மேலும் எரிச்சலடைந்திருப்போம். நம்மைக் காட்டிலும் அவர்களுக்கே அறிவு உசத்தி என்று நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அவர்கள் ஆணவத்திற்கு அத்தோடு ஒரு முடிவு வேண்டும். மணமானவர்கள் மத்தியில் ஒரு தனியன் தன் அபிப்பிராயத்தை முன்வைக்க முயன்றால், அதைப் பற்றி யாதொன்றும் அவனுக்குத் தெரியாததுபோல் தகுதியற்றவன் என்று கூறி அவனை அப்படியே ஊமையாக்கி விடுகின்றனர்.

இல்லை, நான் பொழுதுபோக்கிற்காகச் சொல்லவில்லை. திருமணமான இளம் பெண்மணி ஒருவரை எனக்கு நன்குத் தெரியும். இலண்டன் சந்தையில் சிப்பிகளை விற்பனை செய்யச் சரியான வழி எதுவென்று எங்களுக்குள் ஒரு சிறிய முரண்பாடு ஏற்பட்டது. அந்தச் சண்டையில், ‘சிப்பி விவசாயம் பற்றி உன்னைப் போன்ற முதும் தனியனுக்கு எங்கே தெரியப்போகிறது?’ என்று திடீரெனப் பரிகாசமாகச் சொல்லிவிட்டார். பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் அப்பெண்மணி தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

நான் இந்த ஜீவராசிகள் பற்றி இதுவரை பேசியதெல்லாம் குறைவு. குழந்தைகள் பிறந்த பிறகு இவர்கள் போடும் ஆட்டம் அதிரிபுதிரியாக இருக்கும். ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருள் படிந்த தெருக்களிலும் சுற்றித் திரியும் சிறிய குழந்தைகளைப் பார்க்கிறேன். ஏழை எளியோர்களால் இத்தனைக் குழந்தைகள் எங்கனம் பெற்றெடுக்க முடிகிறது என்று ஆச்சரியப்படுகிறேன். ஒருசில திருமணங்களில்தான் ஒற்றைக் குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றனர். குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் பெற்றோருக்கு அத்தனைக் கர்வம் பிடிக்க என்ன இருக்கிறதென்று இதுவரை எனக்குத் தெரியவில்லை.

குறிப்பாக எல்லாக் குழந்தைகளும் சீரிய உடல்நலத்தில், வற்றாத ஆரோக்கியத்துடன் வளர்வதில்லை. பெற்றோருக்குத் தொல்லையாகவும் துன்பம் தருபவர்களாகவும் இருக்கின்றனர். ஆண்டுக்கொரு முறை பிறக்கும் புராணகால ஃபீனிக்ஸ் பறவை போன்ற அதிசயமான அரிய பிறவியைப் பெற்றெடுக்கிறோம் என்று நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. எங்கும் எல்லாவிடத்திலும் சூழ்ந்திருக்கும் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது?

இம்மாதிரிச் சூழல்களில் தன் கணவன்மார்களுடன் இருக்கும்போது, மகளிர் வெளிப்படுத்தும் முரட்டு நம்பிக்கையைப் பற்றி நான் இன்னும் பேசவில்லை. அதையெல்லாம் அவர்களே பேசிக் கொள்ளட்டும். இயற்கையிலேயே நம்மீது விருப்பம் இல்லாதவர்களுக்கு நாம் ஏன் மசாலா, போளம், ஊதுபத்தி போன்ற நறுமணப் பொருட்களைப் பரிசாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.

பேராற்றல் வாய்ந்த ராட்சசனின் கையில் புரளும் வில் அம்புகளைப்போலான சிறிய குழந்தைகளை யோசித்துப் பாருங்கள். அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது நல்லதுதான், அதேசமயம் குழந்தைகள் இல்லாதவர்களையும் காயப்படுத்தாமல் நடந்துகொள்வது முக்கியமாகிறது. குழந்தைகள் காயமூட்டும் அம்புகள் அல்ல, மகிழ்ச்சி தரும் அம்புகளாக இருக்க வேண்டும்.

அம்புகளுக்கு இருமுனை இருப்பதுபோல திருமணமானவர்களுக்கும் உங்களைப் பற்றி இருவேறு கருத்தோட்டங்கள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். குழந்தைகள் நிரம்பிய ஒரு வீட்டிற்கு நீங்கள் செல்வதாக உத்தேசித்துக் கொள்ளுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளின் அட்டகாசங்களுக்குச் செவிமடுக்காமல் வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பீர்களேயானால், அவர்களின்‌ நட்புப் பூர்வமான உரையாடல்களுக்குப் பதில் சொல்லாமல் வேறொன்றைப் பேசுவீர்களேயானால், நீங்கள் ஓர் அன்பு பாராட்டாத கோபமுகம் கொண்ட மனிதர் என்று கட்டம் கட்டுவார்கள். குழந்தைகளை உள்ளே அனுப்புவார்கள்.

ஒருவேளை குழந்தைகளின் படுசமத்தான விளையாட்டில் ஒன்றிப்போய் அவர்களோடு இரண்டறக் கலந்துவிட்டால், அப்போதும் வேறொரு காரணம் சொல்லி குழந்தைகளை அனுப்பிவிடுவார்கள். அவர்கள் எழுப்பும் சத்தம் தாளவில்லை, இன்னாருக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது என்று ஏதேதோ சொல்வார்கள். இரண்டு சந்தர்ப்பங்களிலும் உங்களைப் பற்றிக் குறைசொல்ல ஏதோவொன்று அவர்களிடம் இருக்கிறது.

வருத்தமோ பொறாமையோ, பெற்றோருக்கு ஏற்படும் விசித்திர உணர்வை நான்‌ புரிந்துகொள்கிறேன். அவர்தம் குழந்தைகளை மகிழ்வூட்டி விளையாடுவதில் எனக்கு எவ்வித காய்தலும் இல்லை. ஆனால் எட்டு, ஒன்பது, பத்து என்று வரன்முறையே இல்லாமல் நீண்டுச் செல்லும் அவர்தம் குழந்தைகள் எல்லோரையும்‌ எவ்விதக் காரணமும் இன்றி அன்புப் பாராட்ட வேண்டும் என்பதில் ஓரளவேனும் நியாயம் வேண்டாமா? குழந்தைகள் என்றாலே அழகானவர்கள் என்ற காரணத்தால் அன்பு பாராட்ட வேண்டுமா என்ன?

‘நீ என்னை நேசிக்கிறாய் என்றால், என் வீட்டு நாயையும் நேசிக்க வேண்டும்’ என்றொரு பழமொழி இருப்பதை நான் அறிகிறேன். ஆனால் அது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படாது. குறிப்பாக அந்நாய் உங்களைத் தொல்லை செய்தாலோ, விளையாட்டாக ஒரு செல்லக் கடி கடித்தாலோ உறுதியாக நீங்கள் அந்த உடன்படிக்கையை மீறவேண்டி வரும்.

அதற்கு மாறாக உங்கள் நண்பர் பரிசளித்த ஒரு ஞாபகார்த்தப் பொருள், ஒரு கைக்கடிகாரம், மோதிரம், மரம், இருவரும் கடைசியாகச் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்ட பொன்னான இடம் போன்றவற்றை எளிதில் நேசிக்கலாம். அது நம் நண்பரின் ஞாபகத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அவ்வகையில் குழந்தைகளை நாம் வேறுமாதிரி கையாளவேண்டும். அவர்களுக்கென்று தனித்த குணாதிசயங்கள் உண்டு. நான் அவர்களை நேசிக்க வேண்டுமா, வெறுப்பு பாராட்ட வேண்டுமா என்பதெல்லாம் அவர்களின் தனித்தனிக் குணாதிசய நலன்களைப் பொறுத்தே அமையும்.

குழந்தைகள் வெறும் பரிசளிக்கும் அலங்காரப் பொருட்கள் அல்ல. பெரியவர்களைப் போலவே முக்கியத்துவம் பெறவேண்டிய தனி நபர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. குழந்தைப் பிராயம் என்பது அன்பும் அழகும் நிறைந்தோடும் பருவம் எனச் சிலர் சொல்கின்றனர். ஆனால் அந்தவொரு காரணத்தையொட்டித்தான் குழந்தைகளிடம் நான் இத்தனை நயமாக நடந்துகொள்கிறேன் எனப் புரிந்துகொள்ளுங்கள்.

அழகு பொருந்திய சின்னஞ் சிறுக் குழந்தைகளைவிட இவ்வுலகில் வேறெதுவும் இனிமையானது அல்ல என்று எனக்குத் தெரியும். அக்குழந்தைகளை ஈன்றெடுத்த நம் அன்புக்குரியவர்களைக் காட்டிலும் அவர்களே மேலானவர்கள் என்றும் அறிவேன். சில விஷயங்கள் பார்ப்பதற்கு இனிமையாக இருந்தாலும், அது அதன் தனித்தன்மைகளின் நேர்த்தியைப் பொறுத்து மேலும் மெருகாகத் தெரிவது உண்டு. எல்லா நிற டெய்சி மலர்களும் வனப்புப் பொருந்தியாக இருந்தாலும், ஊதா நிற டெய்சி மலருக்கென்று பிரத்தியேக நிறமும் மணமும் இருப்பது வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகள் மற்றும் பெண்கள் விஷயத்தில் யார் எப்படி என்று எடைபோடுவதில் நான் எப்போதும் குழம்பிப் போகிறேன்.

(தொடரும்)

_________
‘A Bachelor’s Complaint of the Behavior of Married People’ by Charles Lamb (Published in Essays of Elia – 1823 )

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *