Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #29 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 1

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #29 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 1

James Thurber

பல்கலைக்கழகத்தில் எனக்கிருந்த மற்றெல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன். ஆனால் தாவரவியல் மட்டும் தொடர் தொல்லையாக இருந்தது. தாவரவியல் மாணவர்கள் ஒரு வாரத்தில் குறிப்பிட்ட மணிநேரத்தை ஆய்வுக் கூடத்தில் செலவழிக்க வேண்டும் என்றொரு விதி உண்டு. நுண்ணோக்கியின் உதவிக்கொண்டு தாவரங்களின் நுண் அமைப்புகளைப் பார்வையிட வேண்டும். ஆனால் என் பார்வைக்கு ஒன்றுமே புலப்படாது. நுண்ணோக்கி மூலம் ஒருபோதும் நான் தாவரச் செல்களைப் பார்த்தது இல்லை. அது என் ஆசிரியரைக் கோபமூட்டும்.

வழக்கம்போல் நுண்ணோக்கி உதவியால் தாவரச் செல்களைப் பார்வையிடும் மாணவர்கள், நான் கேள்விப்பட்டதுபோலான அதன் சிக்கல் வாய்ந்த அமைப்பினைத் தெள்ளத் தெளிவாகக் காகிதத்தில் பிரதி எடுப்பார்கள். ஆய்வகத்தைச் சுற்றி வரும் ஆசிரியர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி இருக்கும். ஆனால் என்னை நெருங்க நெருங்க அவர் முகத்தில் மாற்றம் தென்படும். நான் வெறுமனே நின்று கொண்டு, ‘எனக்கு எதுவும் தெரியவில்லை’ எனச் சொல்வேன்.

மற்றெல்லோரும் அமைதியாக அவரவர் நுண்ணோக்கியில் செல் அமைப்புகளைப் பார்வையிட்டு வரைபடம் எழுதும்போது, உனக்கு மட்டும் என்ன சிக்கல் என்று பொறுமையாகத் தொடங்குவார். ‘உன்னால் நுண்ணோக்கியில் பார்க்கமுடிந்தும், முடியாததுபோல் நடிக்கிறாய்’ எனச் சொல்லி கோபத்தின் உச்சியில் சத்தகமாகக் கத்துவதைத் தன் வாடிக்கையாக வைத்திருந்தார்.

‘மலர்களின் அழகை இது பாழ்படுத்துகிறது’ என்று நான் சொல்வேன். ‘இந்தப் பாடத்திட்டத்திற்கு அழகைப் பற்றி அக்கறை கிடையாது’ என்று அவர் சொல்வார். ‘பூக்களின் இயங்குநுட்பத்தையும், அவை செயல்படும் விதத்தையும் கண்டறிவதே நம் நோக்கம்’ என்பார்.

‘சரிதான், ஆனால் என் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லையே’ என மீண்டும் சொல்வேன். மீளவொருமுறை முயற்சி செய்துபார்க்க வற்புறுத்துவார். நுண்ணோக்கியின் கட்துண்டில் கண்களைக் குறுக்கிக்கொண்டு பார்ப்பேன். மேகமூட்டம் அண்டிய பால் போன்ற ஏதோ ஒரு பண்டம் பார்வைக்குத் தட்டுப்படும். இது ஏதோ இயந்திரக் கோளாறால் தென்படும் உருவம். துல்லியமான கடிகாரத்தைப்போல் ஓயாமல் வேலை செய்யும் தாவரச் செல்களையல்லவா நான் பார்த்திருக்க வேண்டும்!

‘எனக்குப் பால்போல ஏதோவொரு உருவம் தெரிகிறது,’ என்று அவரிடம் சொல்வேன். அது நுண்ணோக்கியைச் சரிவர இயக்காததால் ஏற்படும் கோளாறு என்று சொல்லி, தனக்கேற்றபடி மாற்றி அமைத்து தாவரச் செல்களைப் பார்த்துவிட்டு நகர்வார். அதை அவருக்கேற்றபடி சீர்படுத்தியதால், எனக்கு மீண்டும் அந்தப் பால் போன்ற திரவமே காட்சிக்குத் தென்படும்.

இறுதியில் ஓராண்டுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டு, மீளவொருமுறை தாவரவியல் வகுப்பில் சேர்ந்தேன். (உயிர் அறிவியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெறாவிட்டால் பட்டம் பெறமுடியாது.) விடுமுறைக் காலத்தில் வெயிலில் காய்ந்து கறுத்த பேராசிரியர், பிரகாசமான கண்களோடு, மீண்டுமொரு முறை செல் அமைப்பை மும்முரமாக விவரிக்கும் தொனியில் ஆர்வமாக வந்தார். அன்றைக்குத்தான் பருவத்தின் முதல் ஆய்வுக்கூட வேளை. ‘சரிதான். இம்முறை செல்களைப் பார்த்து விடுவோம். இல்லையா?’ என்று உற்சாகம் ததும்பக் கேட்டார்.

‘ஆமாம் சார்,’ என்றேன். எனக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும், முன்னும் பின்னும் கூட மாணவர்கள் நுண்ணோக்கியின் உதவியால் பார்த்தவற்றை ஓவியமாக எழுதிக் கொண்டிருந்தனர். ஒன்றும் தெரியாத இயந்திரத்தோடு மல்லுக்கட்டியபடி, நான் மட்டும் மத்தியில் நின்றேன்.

‘நாம் முயற்சி செய்வோம்’ என்று பேராசிரியர் புன்முறுவலோடு சொன்னார். ‘கடவுள் சாட்சியாக, நுண்ணோக்கியின்பால் மனிதன் அறிந்த சகல ஏற்பாடுகளையும் செய்துபார்த்து, நீ காணும் வண்ணம்‌ அதன் கண்ணாடிகளைச் சீர் செய்து தருவேன். இல்லாவிட்டால் நான் இந்த ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்யவும் தயார். என் இருபத்திரண்டு வருடத் தாவரவியல் அனுபவத்தில், நான் –’ எனப் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மௌனமானர். லியோனல் பேரிமோர்போல் அவர் உடல் குலுங்கியது. பொத்துக் கொண்டுவரும் ஆத்திரத்தைச் சிரமத்துடன் கட்டுப்படுத்தினார். என்னுடன்‌ பேசியதில் அவர் பொறுமை இழந்திருக்க வேண்டும்.

ஆகவே நுண்ணோக்கியின்பால் மனிதர் அறிந்த சகல வித்தைகளையும்; மாறுதல்களையும் செய்துபார்த்தோம். இருள் கவ்விய உருவம், பரவசமான வெளிச்சம், பால் போன்ற மேகமூட்டமான திரவங்கள்தான் எனக்குத் தெரிந்தன. ஒருகணம் ஆச்சரியத்தில் உறைந்தேன். வழக்கம்போல் இல்லாமல் மீச்சிறு துகள்கள் விசித்திர முறையில் கூட்டமாகத் தெரிந்தன. நான் அவற்றை அவசர அவசரமாகப் பிரதியெடுத்தேன். பக்கத்து மேசையிலிருந்து என் ஆராவாரத்தைக் கண்ட பேராசிரியர், மகிழ்ச்சியின் பூரிப்பில் இதழ்கள் பிளவுபட, புருவங்களை உயர்த்திக்கொண்டு என்னருகில் வந்தார்.

என் காகிதத்தில் இருந்த செல் ஓவியத்தைப் பார்த்தார். ‘என்ன இது?’ என்று அடுத்து வரும் வார்த்தைகளை அடக்கிக்கொண்டுக் கேட்டார். ‘நான் இதைத்தான் பார்த்தேன்,’ என்றேன். ‘இல்லை, இல்லை . . நீ பார்க்கவே இல்லை’ என்று அலறிக்கொண்டே கூச்சலிட்டார். தலை குனிந்து நுண்ணோக்கியின் கட்துண்டில் கண்களைக் குறுக்கினார். சடாரென்று தலையை வெளியில் எடுத்தவர், ‘அது உன் கண்’ என்று கத்தினார். ‘உற்றுப்பார்க்கும் கண்ணின் பிரதிபலிப்புத் தோன்றும்படி, நீ இந்த இயந்திரத்தைத் திருத்தியிருக்கிறாய்! அதில் தெரிந்த உன் கண்ணைத்தான் வரைந்துள்ளாய்!’ என்றார்.

நான் வெறுத்தொதுக்கும் மற்றொரு பாடம், பொருளியல். எப்படியோ அரிதில் முயன்று அதில் தேர்ச்சியடைந்துவிட்டேன். தாவரவியல் வகுப்பிலிருந்து நேராகச் செல்வது இங்குதான். ஆனால் இரண்டுமே புரியாத புதிர். ஒன்றும் விளங்காது.‌ இரண்டையும் குழப்பிக்கொள்வேன்.

இயற்பியல் ஆய்வுக்கூடத்திலிருந்து, நான் பயிலும் பொருளியல் வகுப்புக்கு வரும் மற்றொரு மாணவன் இருக்கிறான். என்னைக் காட்டிலும் படுமோசம். அவன் போலன்சியக்வஸ் கால்பந்து அணியில் டிஃபன்ஸ் வீரனாக இருந்தான். அந்தக் காலத்தில் நாட்டின் மிகச் சிறந்த கால்பந்து அணி, ஒகையோ பல்கலைக்கழகத்தில்தான் இருந்தது. அதில் சிலர் போலன்சியக்வஸ் அணியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அணியில் உறுப்பினராக இருக்க வேண்டுமானால், பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறுவது அவசியம். இது ஒரு கடுமையான விதி. அவன் கழுதையைப்போல் முட்டாள் இல்லை என்றாலும், நுட்பமான புத்திசாலி என்றும் சொல்ல முடியாது. பெரும்பாலான பேராசிரியர்கள் கருணை காட்டியதன் பேரில், அவன் தப்பித்து வந்தான். எளிதில் மருளும், மெலிந்த தேகமுடைய திருவாளர் பேஸம் அவர்கள், பொருளியல் பேராசிரியராக அங்கு பணிசெய்து வந்தார். அவரைக் காட்டிலும் எளிமையான கேள்விகளோ, விடைக் குறிப்புகளோ கொடுத்து அவனுக்கு உதவியவர் வேறெவரும் இல்லை.

ஒருநாள், போக்குவரத்து மற்றும் பங்கீடு பற்றி அவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். இப்போது போலன்சியக்வஸ் வீரன் பதில் சொல்ல வேண்டிய நேரம். ‘போக்குவரத்து வழிமுறைகளில் ஒன்றைச் சொல்’ என அந்தப் பேராசிரியர் கேள்வி கேட்டார். அந்த டிஃபன்ஸ்காரனின் கண்ணில் வெளிச்சமே இல்லை.

‘ஏதேனும் ஒரு வழிமுறையை மட்டும் சொல்’ என்று பேராசிரியர் தாழ்வாகச் சொன்னார். போலன்சியக்வஸ் அவரையே உற்றுப் பார்த்தான். ‘அதாவது . . ஏதேனும் ஒரு வாகனம் அல்லது, ஒரு கடத்துப்பொருள் அல்லது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் இயந்திரம்’ என்று மேலும் துப்புக்கொடுத்தார் பேராசிரியர்.

பொறியில் சிக்கிய எலியைப்போல போலன்சியக்வஸ் வெடவெடுத்தான். ‘நீராவி இழுத்துச் செல்லும் இயந்திரம், குதிரை இழுக்கும் வண்டி அல்லது மின்சாரத்தில் இயங்கும் இயந்திரம். இதில் ஏதேனும் ஒன்றைச் சொல்’ எனக் கேட்டார். ‘தொலை தூரப் பயணத்திற்கு நம்மை எடுத்துச்‌ செல்லும் வாகனத்தைக்கூடக் குறிப்பிடலாமே’ என்றார்.

பேஸம், போலன்சியக்வஸ் உட்பட அங்கிருந்த எல்லோரும் பதற்றமடையும்படி பெரும் மௌனம் சூழ்ந்தது. திருவாளர் பேஸம் ‘சூ..-குச்சு..-குச்சு..சூ’ என்று அமைதியை உடைப்பவராய் ரயில் வண்டிபோல் மெல்லமாய் சத்தமிட்டார். அவர் முகம் சிவந்தது. ஆதரவுக்காக அருகில் யாரையோ எதிர்பார்த்தார்.

திரு. பேஸம் போலவே நாங்கள் எல்லோரும், போலன்சியக்வஸ் பொருளியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று, இல்லினாய்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் நன்கு சோபிக்க வேண்டுமென்று விரும்பினோம். இந்த ஆண்டின் மிக முக்கியமான, கடினமான இவ்வாட்டத்திற்கு இன்னும் ஏழு நாட்கள்தான் இருந்தன.

‘டூட்.. டூட்.. டூட்..’ என்ற ஆதரவு ஒலியெழுப்பு மாணவர்கள் எல்லோரும் போலன்சியக்வஸுக்குத் தெம்பூட்டினோம். வேறு ஒருவர், நீராவி ரயில் இயந்திரம்போலவே அச்சு‌ அசலாக நடித்துக்காண்பித்தார். திரு.‌ பேஸம் அவர்களும் ஒரு சிறு ஒத்திகையை முடித்திருந்தார். ‘டிங், டாங், டிங், டாங்’ என்று நம்பிக்கையோடு ஒலியெழுப்பினார். போலன்சியக்வஸ் தீர்க்கமாகச் சிந்திப்பதுபோல், கைகளைப் பிணைத்துக்கொண்டு தரையை வெறித்துப் பார்த்தான். அவன் முகம் இறுக்கமாக மாறியது.

‘இந்தாண்டு, நீ பள்ளிக்கு எப்படி வந்தாய்?’ என்று போலன்சியக்வஸை நோக்கி கேள்வி எழுப்பிய மறுகணம், ‘சூஃப்பா, சூஃப்பா, சூஃப்பா, சூஃப்பா’ என்று ஒலிக்குறிப்பால் சைகை காட்டினார் பேராசிரியர்.

அதற்கு அவன், ‘என் தந்தையார் அனுப்பினார்’ என்றான்.

‘எப்படி அனுப்பினார்?’ என மேலும் கேட்டார்.

அந்தக் கால்பந்து வீரன் சங்கடமாக உணர்ந்தான். குரலை மெலிதாக்கிக் கொண்டு, ‘எனக்குக் கிடைத்த உதவித்தொகையில் அனுப்பினார்’ என்றான்.

‘இல்லை, இல்லை’ என்ற பேஸம், ‘நீர்‌ வந்த வாகனத்தின் பெயரைச் சொல். எது உம்மை அழைத்து வந்தது?’ என்றார்.

‘ரயில்’ என்றான் போலன்சியக்வஸ்.

‘மிகச்சரியான பதில்’ என்ற பேராசிரியர், ‘இப்போது, திரு. நியூஜென்ட், உங்களால் இந்தப் பதிலைச் சொல்ல முடியுமா . . .’ என்று அடுத்த மாணவரை நோக்கி நகர்ந்தார்.

(தொடரும்)

_________
An excerpt from ‘My Life and Hard Times’ by James Thurber (1933)

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *