Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #30 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 2 #2

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #30 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 2 #2

James Thurber

தாவரவியல், பொருளியல் பாடங்களில் எனக்கு உண்டான மனக் கசப்புகளைச் சொல்லும்போதே, உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட வேதனையையும் பேசியாக வேண்டும். முன்னிரண்டைக் காட்டிலும் படுமோசமான அனுபவம் இது. இதைப்பற்றிய நினைவுகளைக்கூட யோசிக்க வேண்டாமெனத் தவிர்க்க விரும்புகிறேன். மூக்குக் கண்ணாடியுடன் உடற்பயிற்சிச் செய்யவோ, விளையாடவோ அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் எனக்கோ, கண்ணாடி இல்லாமல் பார்வை தெரியாது.

கிடைமட்டக் கம்பிகள், சுழலும் கம்பிகள், வேளாண் மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைத்தின் மீதும் சகிதமும் முட்டி மோதிக்கொண்டு நிற்பேன். எனது பார்வைக் குறைபாட்டைக்கூட ஓரளவு சகித்துக்கொண்டு, இயல்பாக நடந்துகொண்டேன் என்று வையுங்கள். ஆனால் பிறரின் பார்வைக் குறைபாட்டில் இருந்து என்னால் தப்பவே முடியவில்லை. உடற்பயிற்சிப் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்கு (பட்டம் பெறவேண்டினால் இப்பாடத்தில் தேர்ச்சிபெறுதல் அவசியம்) நீச்சல் தெரியாதவர்கள், கண்டிப்பாக நீச்சலடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் எனக்கு நீச்சல் குளத்தையோ, நீச்சலடிப்பத்தையோ, அதைக் கற்றுத்தரும் ஆசிரியரையோ சுத்தமாகப் பிடிக்காது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நான் இன்னும் நீச்சல் அடிக்க கற்றுக்கொள்ளவில்லை என்றால் யோசித்துப் பாருங்கள்! எனது அடையாள எண்ணை (978) மற்றொரு நண்பனுக்குக் கொடுத்து, நீச்சலடிக்காமலேயே அப்பரீட்சையில் சுலபமாகத் தேர்ச்சி பெற்றுவிட்டேன்.

அவனொரு சிநேகமான மனிதன். தலைமறையப் பொன்னிற ரோமங்கள் கொண்டிருந்தான். ஒருவேளை வெகு நாட்களுக்கு முன்பே, எங்களுக்குள் நட்புறவு அரும்பியிருந்தால் நுண்ணோக்கியின் கட்துண்டில் எனக்குப் பதிலாக அவன் பரிசோதித்திருப்பான். ஆனால் அது ஒருபோதும் நிறைவேறாமல்போனது.

உடற்பயிற்சி மையத்தில் நீங்கள் பதிவுசெய்த நாளிலிருந்து, உங்கள் ஆடைகளை அகற்றினால்தான் உள்ளே அனுமதிப்பார்கள். இது எனக்கு அறவே பிடிக்காத செயல். ஆடைகளை உருவியபிறகு மலைபோலக் கேள்வி கேட்டால், எங்ஙனம் பதில் வரும்? இருந்தும் எனக்கு முன்னாலிருந்த எலும்புந்தோலுமான வேளாண் மாணவனைவிட நான் சிறப்பாகவே பதில் சொன்னேன்.

ஒவ்வொரு மாணவரும் எங்கிருந்து வருகின்றனர் எனக் கேட்டுக்கொண்டார்கள். கலை, வணிகம், பொறியியல், வேளாண்மை என்று அவர்களின் துறை குறித்தும் பதிந்துகொண்டார்கள். எனக்கு முன்னிருந்த மாணவனை நோக்கி, ‘நீ எந்தக் கல்லூரியில் படிக்கிறாய்?’ என்று ஆசிரியர் கேட்டார். ‘ஒகையோ மாநிலப் பல்கலைக்கழகம்’ என்று அவன் விரைந்து பதில் சொன்னான்.

இவனும் ஒரு வேளாண் மாணவன்தான். ஆனால் முன்பு சொன்னவன் போலில்லை. வேளாண்மைத் தொழிலில் பங்கம் ஏற்பட்டால், பத்திரிகைத் துறையில் சோபிக்கலாம் என்று எண்ணம் கொண்டிருந்தான். ஆனால் இரண்டுமே வெவ்வேறு விளிம்பிலான தொழில் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லை. விவசாயம் பொய்த்துப்போனால், தச்சு வேலை பார்க்கலாம் எனும் கணக்கு இது!

இதழியல் துறைக்கு, ஹஸ்கின்ஸ் ஒத்துவருபவன்போல் எனக்குத் தோன்றவில்லை. பிறருடன் சகஜமாகப் பேசுவதற்குப் பெரிதும் அவஸ்தைப்பட்டான். போதாக்குறைக்குத் தட்டச்சு இயந்திரம் என்றால் அவனுக்கு வேப்பங்கனி! மாட்டுக் கொட்டகை, ஆட்டுத் தொழுவம் மற்றும் குதிரை‌ லாயம் அடங்கிய விலங்குப் பண்ணைகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து எழுதும்படி கல்லூரி இதழின் ஆசிரியர் அவனுக்குப் பொறுப்பு வழங்கியிருந்தார். உண்மையில் இது மிகப்பெரிய பணி. பன்முகக் கலைக் கல்லூரியைவிடப் பத்து மடங்கு பெரிய அளவிலான விலங்குப் பண்ணை அங்கு அமைந்திருந்தது.

வேளாண் மாணவன் விலங்குகள் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும்கூட, எழுத்தில் ரசம் இல்லை. மிகவும் அயர்ச்சியூட்டும் நடை. ஒவ்வொரு கட்டுரையைச் சமர்ப்பிப்பதற்கும் நீண்டநாள் இடைவெளி எடுத்துக்கொண்டான். தட்டச்சு இயந்திரத்தில் உள்ள எழுத்துக்களைத் தேடி அலைவதற்கே அவன் நாட்கள் போதுமாக இருந்தன. சில நேரங்களில் எழுத்துக்களைக் கண்டுபிடித்துத் தரும்படி அவன் நண்பர்களின் உதவியை நாடுவது உண்டு. குறிப்பாக ‘C’ மற்றும் ‘L’ எழுத்துக்களைக் கண்டடைவதற்குள் விழிபிதுங்கி நிற்பான்.

அவன் எழுத்துக்களின் சோர்வைப் பொறுக்கமாட்டாத இதழ் ஆசிரியர், ஒருநாள் நேரடியாகச் சொல்லிவிட்டார். ‘இங்கு பார் ஹஸ்கின்ஸ். குதிரை லாயம் பற்றி ஏன் உன்னால் ஒருபோதும் சுவையான செய்திகள் கொண்டுவர முடிவதில்லை? பர்தூ பல்கலைக்கழகம் தவிர்த்து வேறெங்கும் இல்லாதபடி, நமது பல்கலையில்தான் 200 குதிரைகள் வளர்த்து வருகிறோம். இருந்தபோதும் உப்புச் சப்பில்லாத கட்டுரைகள் எழுதி வருகிறாயே! உடனே, குதிரை லாயத்துக்குச் சென்று உருப்படியாக ஏதேனும் எழுதிக்கொண்டு வா’ என்று அதட்டினார்.

ஹஸ்கின்ஸ் குழம்பியபடியே குதிரை லாயத்திற்குச் சென்றான். பிறகு ஒரு மணிநேரம் கழித்து ஆசிரியரைச் சந்திக்க வந்தான். தன்னிடம் நூதனமாக ஒரு செய்தி அகப்பட்டிருப்பதாய் சொன்னான். ‘நல்லது, மக்களை வசீகரிக்கும் விதத்தில், படிக்க ஏற்றாற்போல் எழுதிக்கொண்டு வா’ என்றார்.

எழுத உட்கார்ந்தவன், சில மணிநேரங்களுக்குப் பிறகு தட்டச்சு செய்த காகிதத்துடன் மேசையை நெருங்கினான். குதிரைகளுக்குத் தொற்றிக்கொண்ட ஒரு வியாதி பற்றியான 200 வார்த்தைக் கட்டுரை அது. தொடக்கம் எளிமையாக இருந்தாலும், கவர்ச்சியூட்டும்படி இருந்தது. ‘விலங்குப் பண்ணையில் உள்ள குதிரைகளின் இரணங்களை யாரும் கவனித்தீர்களா?’ என்று அக்கட்டுரைத் தொடங்கியது.

ஒகையோ பல்கலைக்கழகம் நிவந்தங்களால் உருவான நிறுவனம் என்பதால், இரண்டு வருட இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்திலும் பழைய ஸ்பிரிங் ஃபீல்டு துப்பாக்கிகள்கொண்டு, நாங்கள் பயிற்சி மேற்கொண்டோம். ஒவ்வொரு நாள் காலையிலும் சுமார் பதினொரு மணி அளவில், முதலாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துவிடுவர். பழைய வேதியியல் வளாகத்தின் வழியே சோர்ந்த மனநிலையில் ஊர்ந்து வருவர்.

ஷைலோவில் நிகழ்ந்து வரும் போர் முறைக்கு இப்பயிற்சி நிரம்ப உதவி செய்யும் என்றால்கூட, ஐரோப்பியப் போர்களுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. சிலர் இதற்குப்பின் ஜெர்மானிய நாட்டினர் பணம் கொட்டித் தருவதாய் கருதுகின்றனர், ஆனால் அதை வாய்விட்டுச் சொல்லத் தைரியம் இல்லை. ஒருவேளை சொன்னால் ஜெர்மானிய உளவாளி எனக் கருதி சிறையில் அடைக்கும் வாய்ப்புண்டு. இதுவொரு விதமான குழப்பம் தொற்றிய காலகட்டம். மிடில்வெஸ்ட் பகுதியில் உயிர்க்கல்விச் சூழல் இறக்கத்தைச் சந்திப்பதாய், தனிப்பட்ட முறையில் நான் உணர்ந்தேன்.

எனது படையில் எதற்கும் லாயக்கற்றவனாக இருந்தேன். மற்றெல்லோரும் சிப்பாய் என்பதில் பெரிதாய் ஆரவாரம் இல்லாமல் இருந்தபோதும், நான் சற்றே பயங்கரமானவனாய் இருந்தேன். ஒருமுறை போர்ப் பயிற்சிகள் செய்துகொண்டிருந்தபோது, படைத் தளபதி லிட்டில் ஃபீல்டு அவர்கள் என்னருகில் வந்தார். ‘ஒட்டுமொத்தப் பல்கலைக்கழகத்திலும் நீர் நான் பெரும் பிரச்சனை!’ என்று சொன்னார். ஒருவேளை அவர், என் போன்ற பலரையும் சுட்டிக்காட்டிச் சொல்லியிருக்க வேண்டுமெனக் கருதுகிறேன். ஆனால் அவர் என்னை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லவும் வாய்ப்பு உண்டு.

இரண்டாமாண்டு வரை, நான் என் பயிற்சியில் மிகச் சாதாரணமான மனிதனாகவே இருந்தேன். ஒட்டுமொத்த மேற்கிலும் என்னைப்போல் அதிகநேரம் பயிற்சி செய்தவர் எவரும் கிடையாது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இராணுவப் பயிற்சித் தேர்வில் நான் தோல்வியடைந்ததை ஒட்டி, அதற்கடுத்த ஆண்டில் தீவிரமான உழைப்பைக் காட்ட வேண்டும் என உறுதிகொண்டிருந்தேன். வாங்கிய புதிதில் உள்ளூர் ரயில்வே அதிகாரிபோல் தோற்றமளித்த இராணுவப் பயிற்சி சீருடை, தற்போது மங்கலாகி இறுகிவிட்டது. பெட்டித் தூக்கும் தொழிலாளிபோல் பெர்ட் வில்லியம்ஸ் நடித்தது நினைவிருக்கிறதா, நான் அப்போது அப்படித்தான் காட்சியளித்தேன். அது என்னைச் சற்றே தளர்வடைய செய்தது. இத்தனைச் சிரமங்களுக்கு மத்தியிலும், எனது தொடர் முயற்சியால் கூட்டுப் பயிற்சியில் நன்றாகச் சோபித்தேன்.

ஒருநாள் படைத்தளபதி லிட்டில் ஃபீல்டு அவர்கள், ஒட்டுமொத்த படைவகுப்பில் இருந்து எங்கள் அணியை மட்டும் தேர்ந்தெடுத்துk குழப்பம் உண்டாக்க வந்தார். நாங்கள் அடுத்த வார்த்தையைக் கிரகிப்பதற்குள் மிக வேகமாக ‘லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட்’ எனக் கட்டளையிட்டார். மூன்றாவது நிமிடத்தில் என் அணியில் இருந்து 109 சிப்பாய்களும் வேற்றுத் திசையில் அணிவகுத்துச் செல்ல, நான் ஒருவன் மட்டும் 40 டிகிரி கோணத்தில் மாற்றுவழியில் சென்றேன். ‘நில்லுங்கள்’ என்று தளபதி உரக்கக் கத்தினார். ‘அவனொருவன்தான் சரியான பாதையில் செல்கிறான். அவனைப் பின்தொடருங்கள்’ என்றார். அன்றிலிருந்து படைத்துறைத் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

மறுநாள் தன் அலுவலகத்துக்கு வரும்படி ஜெனரல் லிட்டில் ஃபீல்டு அழைப்பு விடுத்திருந்தார். நான் உள்ளே சென்றபோது, அவர் பூச்சிகளை அடிப்பதில் மும்முரமாக இருந்தார். சில கணங்கள் நாங்கள் எதுவும் பேசிக்கோள்ளவில்லை. அமைதியாக இருந்தோம். அவர் என்னை வரச் சொன்னதையே மறந்திருக்கக் கூடும். இல்லையென்றால் ஏன் வரச்சொன்னார் என்பதை மறந்திருக்கலாம். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. பூச்சி அடிப்பதில் மும்முரமாக இருந்தவர், அங்கிருந்து பார்வையை அகற்றாமல், ‘பொத்தானைப் பூட்டு’ என்றார். அவர் என்னைத்தான் சொன்னார் எனப் புரிந்துகொண்டேன்.

ஜெனரலின் மேசை மீதிருந்த தாளில் மற்றொரு ஈ வந்து உட்கார்ந்து, தன் பின்னங்கால்களைச் சாவகாசமாகத் தேய்த்துக்கொண்டிருந்தது. அவர் இப்போது மெல்லமாகத் தயாரானார். நான் அடங்காமல் அசைந்து கொடுத்ததில் அந்தப் பூச்சி பறந்துவிட்டது. ‘நீ அதைத் பயப்படுத்திவிட்டாய்’ என்று ஜெனரல் கத்தினார். என்னை மன்னித்து விடும்படிக் கேட்டுக் கொண்டேன். ‘அதனால் ஒரு பயனும் இல்லை’ என்று அவர் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு சொன்னார்.

மேசையில் உட்கார்ந்து பூச்சி அடித்துக்கொண்டிருக்கும் நபருக்கு, இதைவிட ஆறுதலாக என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. எனவே சத்தமில்லாமல் நின்றேன். ஜன்னல் வழியாக நூலகம் செல்லும் மாணவர்களை அவர் பார்த்தார். இறுதியில், நான் போகலாம் என்று சொன்னார். நானும் வெளியேறிவிட்டேன். நான் எந்தப் படைப்பிரிவைச் சார்ந்தவன் என்று அவருக்கு நிச்சயம் நினைவிருக்க வாய்ப்பில்லை. என்னை அழைத்ததற்கான காரணத்தையும் அவர் மறந்திருக்க வேண்டும்.

ஒருவேளை, நான் இந்தப் பல்கலைக்கழகத்தின் பெருந்தொல்லை என்று அவர் முன்பு சொன்னது குறித்து வருத்தம் தெரிவிக்க அழைத்திருக்கலாம். இல்லையெனில் என் சிறந்த உழைப்புக்காக வாழ்த்துக்கள் பகிர்ந்து, மெச்சிப் புகழ அழைத்திருக்கலாம். இரண்டில் எதுவாக இருந்தாலும், இறுதி நேரத்தில் அவர் தன் முடிவை மாற்றிக்கொண்டார். உண்மையிலேயே அவர் என்னை ஏன் அழைத்தார் என்று தெரியவில்லை. பின் அதைப்பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை.

0

_________
An excerpt from ‘My Life and Hard Times’ by James Thurber (1933)

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *